7 பிளேடால் கீறி விட்டு ஓட முயன்ற ஆளை நொடியில் தானே தாவிப் பிடித்துவிட்ட முத்துராமலிங்கம், சூட்கேசை கிருஷ்ணாம்பேட்டை ஆளிடம் கொடுத்துவிட்டு முஷ்டியை மடக்கி ஓங்கி ஒரு குத்து விட்டான். பிளேடால் கீறுவது, கத்திரிக்கோல் போடுவது போன்ற ஒளிவு மறைவான வஞ்சக வேலையில்லாத - நேரடியான அந்த அசல் நாட்டுப்புறத்துத் தாக்குதலைத் தாங்க முடியாமல், ‘ஐயோ’ என்று அலறிச் சுருண்டு விழுந்தான் எதிரி. கிருஷ்ணாம்பேட்டையிலிருந்து உடன் வந்திருந்த ஆட்களும் முத்துராமலிங்கத்தோடு சேர்ந்து கொள்ளவே சண்டை வலுத்தது. தற்செயலாக அதே பகுதியில் முத்துராமலிங்கத்தோடு தேனியிலிருந்தே லாரியில் உடன் வந்திருந்தவர்கள் சிலரும் அமர்ந்திருக்கவே, அவர்களும் எழுந்து வந்து சேர்ந்து கொண்டார்கள். வேறு சில பொது மனிதர்கள் சண்டையை விலக்கி விட வந்தார்கள். “தோழர்களே! அமைதி, அமைதி! கட்டுப்பாடு காத்துக் கண்ணியத்தைப் போற்றி கடமை வழி நிற்க வேண்டுகிறேன்” - என்று மேடையிலிருந்தே ஒலி பெருக்கி மூலம் கண்மணி அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தபடி இருந்தாள். யாருக்கும் யாருக்குமிடையே கலகமென்று அவள் அறிந்திருக்க நியாயமில்லை. கும்பல் கூடி முத்துராமலிங்கத்தைச் சூழ்ந்து கொண்டு விட்டதால், மேடையிலிருந்து கண்மணி அவனைப் பார்க்க முடியவில்லை. இரண்டொருவர் ஓடோடிப் போய் கடற்கரை உள் சாலையில் வெற்றி விழாவுக்காக வந்து நிறுத்தப்பட்டிருந்த பஸ் ஒன்றிலிருந்து முதலுதவிப் பெட்டியை எடுத்து வந்து முத்துராமலிங்கத்தின் கையில் மருந்து தடவி பிளாஸ்திரி ஒட்டினார்கள். “அவன் தான் பேட்டை ரவுடி! எந்தக் கூட்டத்திலே யார் வம்புக்கும், சண்டைக்கும் கிடைப்பான்னே தேடிக்கிட்டு அலையறவன். நீ படிச்ச பிள்ளையாத் தெரியறே... நீயுமா பதிலுக்கு அவனைப் போய் அடிக்கணும்? நாய் கடிச்சா பதிலுக்கா நாம கடிக்கிறது...?” “சும்மா வலுச்சண்டைக்குப் போறது காட்டு மிராண்டித்தனம்! அதே சமயத்தில் வந்த சண்டையை விடறதும் கோழைத்தனம்... நாய் நம்மைக் காரணமில்லாமல் கடிக்க வராது. ஆனால் சில மனுஷங்க அப்படியில்லை. அதினாலே பதிலுக்குக் கடிச்சாத்தான் அவங்களுக்குப் புத்தி வரும்.” முத்துராமலிங்கத்தின் குரலில் இருந்த உறுதியைக் கண்டு பலர் வாய் அடைத்தது. இத்தகைய சிக்கலான சமயங்களில் தயங்கித் தயங்கி வருகிறாற்போல அவன் வார்த்தைகள் இல்லை. தீர்மானமாகவும், உறுதியாகவும் இருந்தன. ஒரு முதியவர் அவனுக்கு அறிவுரை கூறலானார். “நீ கூட அப்படிப் பேசியிருக்கக் கூடாதுப்பா! சிலதை நினைக்கலாம். பேசப்பிடாது. வேறு சிலதைப் பேசலாம். நினைக்கப் பிடாது.” “ஒரு விஷயத்தை பகிரங்கமா ஒருத்தன் அளவு கடந்து பாராட்டலாம்னா - அதே விஷயத்தை இன்னொருத்தன் விமர்சிப்பான் - அப்படி விமரிசிச்சா அதைப் பொறுத்துக்கணும்கிற பொது நாகரிகம் இருக்கணும்.”
- இப்படிப் பேச்சு வளர்ந்ததே ஒழிய அவன் கூறியது என்ன என்பதை யாருமே மறுபடி விசாரிக்கவில்லை.
“நம்ப ஆளு மேலே ஒருத்தன் கையை வைச்சிட்டுத் தப்பறதாவது? கொலைகாரன் பேட்டை சின்னியின்னா எதிர்த்து வர்றவன் மரியாதையா ஒதுங்கிடணும்” என்றான் உடனிருந்த சாராயம். முத்துராமலிங்கம் வழி தவறிப் போய்த் தற்செயலாகக் கிருஷ்ணாம்பேட்டைச் சுடுகாட்டில் சந்தித்தவர்கள் மிகச் சில விநாடிகளிலேயே அவனைத் தன் மனிதனாக ஏற்றுக் கொண்டு விட்டார்கள். ஆனால் அவனுடைய தந்தைக்கு வேண்டியவரான விலாசம் தேடிப் போய் அவன் சந்தித்த போலீஸ் உயர் அதிகாரி அப்படி அவனை ஏற்கவோ, முகமலர்ச்சியோடு வரவேற்கவோ தயாராயில்லை. புறக்கணித்து விட்டார். இந்த முரண்பாடு அப்போது அவன் மனத்தில் தோன்றியது. படித்தவர்கள், பெரிய பதவியிலுள்ளவர்களின் அநாகரிகமும், அநாகரிகமானவர்கள் என்று ஒதுக்கப்படுகிறவர்களின் படிப்பும் பண்பும் இடம் மாறியிருப்பதை அவன் உணர்ந்தான். படிப்பு, பணம், பதவி இவை மூன்றும் சிலரைப் பொறுத்தவரை மனிதாபிமானமற்ற வறட்டுத் தனத்தையும், கோழைத்தனத்தையும் தான் அவர்களிடம் வளர்த்திருக்கின்றனவோ என்றே அவனுக்குத் தோன்றியது. முத்துராமலிங்கம் தன்னோடு கிருஷ்ணாம்பேட்டைச் சுடுகாட்டிலிருந்து வந்திருந்த குழுவுக்கு விடைகொடுத்து அனுப்பி விட்டு அப்படியே ஊரிலிருந்து வந்திருந்த லாரிக்குப் போகத்தான் விரும்பினான். ஆனால் உடனிருந்த சாராயம் அவனை எச்சரித்தான். “நீ இங்கே தனியா இருக்கப்பிடாதுப்பா! உங்கிட்டே குத்து வாங்கிக்கிட்டுப் போனானே அரை பிளேடு, அவன் போய்த் தன்னோட கூட்டாளிங்களை இஸ்துக்கினு மறுபடி உன்னைத் தேடிக்கிட்டு இங்கே வம்புக்கு வருவான்...” “வந்தா வரட்டுமே! செம்மையாகக் குடுத்து அனுப்பி வைக்கிறேன்...” “அவனுக சும்மா வரமாட்டாங்கப்பா... சைக்கிள் செயின் இரும்புக் குழாய், கொம்பு, கடப்பாறைன்னு ஆப்ட்டதைத் தூக்கிக்கிட்டு கும்பலா ஆள் சேர்த்துகிட்டு ஒதைக்க வருவாங்க...” “உடம்பிலே வலு இல்லாதவங்கதான் ஆயுதங்களை நம்பணும். எனக்கு உடம்பிலே வலு இருக்கு, ஒத்தைக்கு ஒத்தை வந்தா எப்படிப்பட்ட கொம்பனையும் புரட்டி முதுகுக்கு மண் காட்டி அனுப்புவேன்.” பிசிறு தட்டாத - சிறிதும் வழவழப்பு இல்லாத - நம்பிக்கை நிறைந்த அந்தத் தெற்கத்திச் சீமை உறுதியைக் கண்டு அடிதடிகளிலேயே பழகி வளர்ந்த சாராயத்துக்கே வியப்பாய் இருந்தது. தந்திரமாக வயிற்றிலடிக்கிறவர்கள், வஞ்சகமாகத் தாக்குகிறவர்கள், ஏய்த்துப் பிழைப்பதாலேயே தங்களைத் திறமைசாலிகளாகக் காட்டிக் கொள்கிறவர்கள் பிறருடைய பேதமையை ஏணியாகப் பயன்படுத்தித் தங்களை மேதைகளாக உயர்த்திக் கொள்கிறவர்கள் என்று இப்படி ரகங்களையே பட்டினத்தில் பார்த்துப் பார்த்து மரத்துப் போயிருந்த சாராயம் சின்னிக்கு அசல் மானம், அசல் மரியாதை, அசல் ரோஷம், அசல் வலிமையோடு கூடிய ஒரு தெற்கத்திச் சீமைக்காரனை எதிரே சந்தித்த போது ஒரு உயர்ந்த மனிதனைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கிறோம் என்கிற பெருமை உணர்ச்சி தான் ஏற்பட்டது. “அண்ணே, எப்படியோ நாம சந்திச்சு ஒருத்தருக்கொருத்தர் பழகிப்பிட்டோம். இப்ப தயவு பண்ணி நீதான் சொல்கிறபடி கேக்கணும். வெள்ளை சொள்லையாகச் சட்டைபோட்ட படிச்ச ஆளுங்கள்ளே உன்னை மாதிரி ஒரு தீரனை நான் இதுங்காட்டியும் கண்டுக்கிட்டதே இல்லே. இன்னிக்கு ராத்திரி நீ நம்ப விருந்தாளியா இருக்கணும்.” “விருந்தாளியா இருக்கிற அளவு நான் அத்தனை பெரிய மனுஷன் இல்லை.” “எனக்கு நீ தான் பெரிய மனுஷன் அப்பா! உன்னைப் போல் நான் யோக்கியன் இல்லே. எதை எதையோ பேஜார் புடிச்சதையெல்லாம் பண்ணி எப்படி எப்படியோ பிழைக்கிறவன். அதுனாலேயே எனக்கு உன்னைக் கண்டால் பயமாகவும், மரியாதையாகவும் இருக்குதுப்பா!” சாராயச் சின்னியின் இந்த நெகிழ்ச்சியையும், மரியாதையையும் முத்துராமலிங்கம் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. பாசத்தோடு அவன் தோளில் தட்டிக் கொடுத்தபடி “சின்னி நான் பெரிய மனுஷன் இல்லே. ஆனா யோக்கியன். வேலை தேடிப் பட்டினத்துக்கு வந்திருக்கிற ஒரு கிராமாந்தரத்து மத்தியதர விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். ரயில்லியோ, பஸ்ஸிலியோ வரப் பண வசதி பத்தாம லாரி ஏறி இங்கே வந்திருக்கிறவன்; என்னை நீ மதிச்சுக் கூப்பிடறே. அதுக்காக நான் வரேன்.” “ரொம்ப சந்தோசம்ண்ணே!” “உங்க ஊர்லே ‘அண்ணே’ன்னு கூப்பிடறது கூட எனக்குப் பிடிக்கலே. இங்கே அந்த வார்த்தைக்கு ‘டெப்ரஸியேஷன் வேல்யூ’தான் மீதமிருக்கு. தேய்மானம், இல்லாமே எந்த நல்ல வார்த்தையும் இங்கே தப்பிப் பிழைக்காது போலிருக்கு.” “அட! நீயொண்ணு... ஆளுங்களோட ஒழுங்கு நாணயம்லாமே கொஞ்சம் கொஞ்சமாத் தேஞ்சி போற ஊர்ல வார்த்தைங்க மட்டும் தப்பிப் பிழைச்சுருமா, என்ன? அதெல்லாம் போகட்டும்... இப்ப நீ நம்பகூட வா... சொல்றேன்... சாப்பிட்டு முடிச்சதும் கொஞ்ச நேரம் குஷியாப் போதைக் கழிக்கலாம்.” முத்துராமலிங்கத்தால் அவனைத் தட்டிக் கழிக்க முடியவில்லை. தன்னோடிருந்த மற்றவர்கள் எல்லாரையும் அனுப்பிவிட்டு முத்துராமலிங்கத்தை மட்டும் அழைத்துக் கொண்டு பைகிராப்ட்ஸ் சாலையிலிருந்த ஒரு மதுரை முனியாண்டி விலாஸுக்குள் நுழைந்தான் சின்னி. “உங்க ஊர்க்காரங்க கடையாவே பார்த்து இட்டாந்திருக்கேன்! உனக்குப் பிடிக்குமில்லே...?” முத்துராமலிங்கம் புன்முறுவல் பூத்தான். “தண்ணி போடற பழக்கம் உண்டா?” “இன்னிக்கு வரை இல்லே.” “சரி! வாணாம்... அந்தப் பேச்சை வுட்டுடு.” “அது சரி சின்னீ! உங்க ஊரு என்னன்னே சொல்லலியே?” “மரக்காணம்... பாண்டிச்சேரிக்குப் போற வழியிலே கீது...” முத்துராமலிங்கத்தால் அவனை முழுமையாக வெறுக்கவும் முடியவில்லை, விரும்பவும் முடியவில்லை. ‘இவனைப் போல் நல்லானாக இருக்க முடியாத காரணத்தால் சூழ்நிலையால் கெட்டுப் போனவர்களையாவது மன்னிக்கலாம். நல்லவர்களாக இருப்பது போல் உலகுக்குப் பாசாங்கு காட்டிக் கொண்டே கெட்டவர்களாக இருப்பவர்களை மன்னிக்கவே முடியாதென்று தோன்றியது. சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே பலர் வந்து வணங்குவதும், விசாரிப்பதும், குழைவதுமாகச் சின்னிக்கு அங்கே ஏகப்பட்ட மரியாதை உபசரனைகள் எல்லாம் நடந்தன. “வந்தாக் கிடைக்குமா?... வரட்டுமா?” என்று ஒரு சில்க் ஜிப்பா ஆசாமி ஜவ்வாது வாசனையை வாரி இறைத்தபடி வந்து அருகே நின்று சின்னியைக் குழைவாக விசாரித்தார். சின்னி சிரித்தபடி பதில் கூறினான்: “நம்பர் ‘ஒன்’லே புதுச்சரக்கு எதுவும் வரலே! நம்பர் டூவிலே புதுச்சரக்கு நெறையவே வந்திருக்கு சார்...” “அப்ப நாளைக்கு வரேம்பா.” அவர் போனதும், “இதுமாதிரி இந்த வட்டாரத்திலே, நமக்கு எத்தினியோ கஷ்டமருங்க...” என்று கண்களைச் சிமிட்டிச் சிரித்தபடியே சின்னி முத்துராமலிங்கத்திடம் கூறினான். “கஷ்டமர் இல்லே ‘கஸ்டர்மர்’னு சொல்லணும், சின்னி!” “அந்த எளவைச் சொல்றதுக்குக் கஷ்டமாயிருக்குப்பா! அதான் ‘கஷ்டமர்’னே வச்சுப்புட்டேன்.” “இப்போ வந்து கேட்டுட்டுப் போறாரே, இவரு யாரு?...” “இந்தப் பேட்டையிலே வெள்ளிக்கடை வச்சிருக்காரு? பெரிய புள்ளி.” இப்படிப் பெரிய புள்ளிகளின் அந்தரங்க ஆசைகளையும், சபலங்களையும், தாபங்களையும் தீர்க்கும் முயற்சியிலேயே பல அப்பாவிகள் பட்டினத்தில் சிறிய புள்ளிகளாக இருக்க நேரிடுகிறது என்று புரிந்தது அவனுக்கு. பல கீழ் மட்டத்து மனிதர்கள் மேல்மட்டத்து அயோக்கியர்களின் தேவையையும் அவசியத்தையும் உத்தேசித்தே கீழ்மட்டத்து வேலைகளில் ஈடுபட வேண்டியிருக்கிறது. தனிப்பட்ட முறையில் பார்க்கப் போனால் இந்தக் கீழ்மட்டத்து மனிதர்கள் ‘கர்மயோகி’களைப் போலக் கெட்டவர்களாக இயங்கி வந்தார்கள். அவர்கள் மேல் படிந்திருக்கும் துருவையும், களிம்பையும் நீக்கிப் பார்த்தால் உள்ளூரத் தங்கமாக இருந்தார்கள். தாங்கள் கெட்ட காரியங்களைத்தான் செய்து கொண்டிருக்கிறோம் என்பதைக் கூட உணராத அளவு நல்லவர்களாகத் தோன்றினார்கள். சாப்பாடு முடிந்ததும் முத்துராமலிங்கத்துக்கு ஸ்பெஷல் மசாலா பீடா வாங்கிக் கொடுத்தான் சின்னி. “அப்புறம், லாரியிலே வந்தேன்னு சொன்னேயில்லே... உன்னைச் சுகமாத் தூங்கப் பண்றேன்... வா” என்று சைக்கிள் ரிக்ஷாவில் அவனை அருகே உட்கார்த்தி அழைத்துச் சென்றான் சின்னி. எங்கோ இருளடைந்த சந்து பொந்துகளைக் கடந்து ரிக்ஷா சென்றது. சில தெருமுனைகளில் ஒரே ஒரு விளக்கு மட்டும் இருந்தது. பல இடங்களில் மின் விளக்குக் கம்பங்கள் இருந்தன. விளக்கு எரியவில்லை. கடைசியில் வாயிற்புறம் தடித்தமுரட்டு ஆள் காவல் நின்று கொண்டிருந்த, இரண்டு மூன்று நாய்கள் ஒரே சமயத்தில் குரைத்த முன் பகுதியும், தோட்டமும் இருளடைந்திருந்த ஒரு மாடி வீட்டின் முன் போய் ரிக்ஷா நின்றது. முதலில் சின்னி இறங்கியதும் கேட்டில் நின்ற ஆள் மரியாதையோடு அவனுக்குச் சலாம் வைத்தான். நாய் ஒன்று ஓடி வந்து சின்னியிடம் வாலைக் குழைத்தது. சின்னி அதைத் தடவிக் கொடுத்தான். “வாப்பா உள்ளாரப் போகலாம்” - முத்துராமலிங்கத்தை உள்ளே அழைத்துச் சென்றான் சின்னி. அங்கிருந்த ஆட்கள் எல்லாருமே சின்னிக்கு அபார மரியாதை செலுத்தினார்கள். வீடுதான் மனிதர்கள் அதிகம் பழகாத பாழடைந்த மாளிகை போல் இருந்தது. கூடத்தில் போய் உட்கார்ந்ததும் அங்கிருந்த வயதான ஆயா ஒருத்தியைக் கூப்பிட்டு, “வரச் சொல்லும்மா...” என்று சத்தம் போட்டுச் சொன்னான் சின்னி. நன்றாக அலங்கரித்த நிலையிலும் அலங்கோலமான நிலையிலும் அழகான் உடற்கட்டோடும் அதைக் காண்பிக்கும் முயற்சியோடும் கும்பலாக ஏழெட்டு இளம் பெண்கள் முத்துராமலிங்கத்துக்கு முன் வந்து நின்று சிரித்தார்கள். சிரிப்பு இயல்பாக இல்லை. யாருக்கோ பயந்து வரவழைத்துக் கொண்ட சிரிப்பு மாதிரி இருந்தது. “இவளுகள்ளே யாரை ஒனக்குப் பிடிக்குதுன்னு பாரு...?” முத்துராமலிங்கம் சின்னியை நோக்கிச் சிரித்தான் பின்பு அந்தக் கட்டழகுக் கூட்டத்தின் அணிவகுப்பையும் அவர்களையும் இமையாமல் பார்த்தான். நிசப்த சங்கீதம் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
நிறைவுரை
|