8 கடற்கரையில் பொதுக் கூட்டம் கேட்டுக் கொண்டிருந்த போது தன் ஒருவனுக்கே ஆயிரம் கைகள் முளைத்து அவை அத்தனையையும் கொண்டு தீமைகளையும் பொய்களையும் எதிர்த்துச் சாட வேண்டும் என எண்ணினாற் போலவே இந்தக் கணத்திலும் எண்ணினான் முத்துராமலிங்கம். கலை, கலாச்சாரம், சாஸ்திரம், சங்கீதம், சாராயம், கதாகாலட்சேபம், அரசியல், பெண்கள் என்று பேதாபேதமின்றிச் சகலத்தையும் ‘ரேட்’டுப் போட்டு விற்கும் குரூரமான நகரங்களின் வியாபார மனப்பான்மையை அவன் வெறுத்தான். அதைப் பார்த்து அவனுக்கு அருவருப்பாகக் கூட இருந்தது. இறைவனின் பாதங்களில் அர்ச்சிக்கப்பட வேண்டிய மலர்கள் அசந்தர்ப்பம் காரணமாகச் சாக்கடையில் கவிழ்ந்தது போல் நடுவழியில் கவிழ்ந்துவிட்ட அந்தப் பெண்களைக் கருணையோடு பார்த்தான் அவன். “சின்னி! இந்தத் தங்கச்சிகளை எல்லாம் முதல்லே உள்ளாரப் போகச் சொல்லு...” “ஏம்ப்பா?... உன் செலக்சன்...” “முதல்லே உள்ளாரப் போகச் சொல்லு...” கட்டளையிடுவது போல் திட்டவட்டமாகவும், தீர்மானமாகவும் இருந்த அந்தக் குரலை மறுக்க முடியாமல் அந்தப் பெண்களை உள்ளே போகுமாறு சமிக்ஞை செய்தான் சின்னி. அவர்கள் போனதும் சின்னியின் பக்கம் திரும்பி, “இதெல்லாம் என்ன?” என்று ஆத்திரத்தோடு கேட்டான் முத்துராமலிங்கம். “அதான் அப்பவே சொன்னேனே, நம்பர் ஒன், நம்பர் டூன்னு ரெண்டு பிஸினஸ் நம்ப கைலே இருக்குதுன்னு!... நம்பர் ‘ஒன்’ கிருஷ்ணாம்பேட்டையிலே நடக்குது. இந்த நம்பர் ‘டூ’வுக்கு ஸிடிலே இது மாதிரி நாலஞ்சு பிராஞ்சுங்க இருக்குது.” “பட்டினத்தில் எல்லாத்தையுமே விற்கிறீங்கப்பா.” “ஆமா! எதெது காசு பணந்தருதோ அதை எல்லாம் இங்கே விக்கிறோம்...” அந்த நகரம் என்கிற கலாசார - மயானத்தில் - நாகரிகக் கழிவறையில் எதற்கும், எவருக்கும், எந்த வகையிலாவது ஒரு விலை நிர்ணயிக்கப் பட்டிருப்பது தெரிந்தது அவனுக்கு. சின்னி தன் மேலும் அவசர அவசரமாக ஒரு முத்திரையைக் குத்தித் தனது பெறுமானத்தையும் விலையையும் நிர்ணயித்து விட முயல்வது கூட அவனுக்குப் புரிந்தது.
பட்டினத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு விலை நிர்ணயிக்கப்படுவது போலவே ஒவ்வொரு விலைக்கும் ஒரு மனிதன் நிர்ணயிக்கப்படுகிறான். விலை நிர்ணயிக்கப்படுவதற்குத்தான் உத்யோகம், வாய்ப்பு, தகுதி என்றெல்லாம் ஏதேதோ பல வேறு பெயர்களைச் சொல்கிறார்கள்.
அந்த மாளிகையின் சுவர்கள் எல்லாமே உப்புப் பரிந்து ஈரம் கசிந்திருப்பதைக் கண்டான் முத்துராமலிங்கம். அபலைகளும், இளம் பெண்களும், அந்த இடத்தில் படும் துயரங்களைக் கண்டு அந்தச் சுவர்கள் கூட நீண்ட நாட்களாகக் கண்ணீர் வடித்திருந்தனவோ, என்னவோ? “சின்னி! இப்படிப் பிழைக்க உனக்கு வெட்கம், மானம், ரோஷம், கூச்சம் எதுவுமே இல்லையா?” “வேணாம் வாத்தியாரே! இந்த மாதிரிப் பேச்செல்லாம் இங்கே வச்சுப் பேசினா வந்து போற வாடிக்கைக்காரங்க சங்கடப்படுவாங்க... நாம வேணா மொட்டை மாடியிலே போய்ப் பேசுவோம்...” சின்னியோடு அந்தக் கட்டிடத்தின் மொட்டை மாடிக்குப் போனான் முத்துராமலிங்கம். சின்னியே பேச்சைத் தொடர்ந்தான். “வெக்கம், மானம், ரோஷம், கூச்சம் எதுவுமே இல்லையான்னுதான்னே கேட்டே...?” “ஆமாம்... ஏன்? அப்படிக் கேட்கவே கூடாதோ?” “நல்ல ரேட்டுக் கெடச்சா இதையெல்லாம் கூட வித்துடறதுதான்... இங்கத்தையப் பளக்கம்! இதையெல்லாம் வித்து நான் குடுத்திருக்கிற ‘டொனேஷன்’ல தான் இந்தத் தொகுதி எம்.எல்.ஏ. ஜெயிச்சிருக்காரு. இதையெல்லாம் வித்து நான் குடுக்கிற லஞ்சத்திலே எத்தினி ஜனம் பொழைக்குது தெரியுமா?...” “நான் என் படிப்பைச் சொல்லி மானம் மரியாதையா ஒரு வேலை தேடிப் பிழைக்கலாம்னு தான் இங்கே மெட்ராசுக்கு வந்தேன்! நீ சொல்றதை எல்லாம் கேட்டா மானம் மரியாதை உள்ளவனுக்கு இங்கே வேலை கெடைக்கறதே கஷ்டம்னு தெரியிது.” “படிச்சவன் எல்லாம் உன்னை மாதிரி மானம், மரியாதையைப் பத்திக் கவலைப்படறவனாத் தெரியிலேப்பா... படிச்சவனாயிருந்தும் உன்னை மட்டும் போனாப் போகுதுன்னு மதிக்கலாம்னு இந்தச் சின்னிக்குத் தோணுது.” “உனக்குத் தோன்றி என்ன கிடைக்கப் போகுது? எனக்கு ஒரு வேலையைக் கொடுக்கப் போற யாரோ ஒருத்தனுக்கு அது தோன்றினால் தான் நல்லது...” “உனக்கு என்ன மாதிரி வேலை வேணும்?” “என்னமோ நீ தான் எம்ப்ளாய்மெண்ட் எக்ஸ்சேஞ்ஜ் நடத்தற மாதிரியில்லே கேட்கிறே?” “இந்த லயன்லே இருக்கிறேனில்ல... அதுனாலே நாலு முக்கியமான புள்ளிங்களைத் தெரியும்... சொல்லிப் பார்க்கலாம்...” “நீ சொல்ற புள்ளிகள் எப்படிப்பட்டவங்களோ?” “டீஸண்ட் ஆளுங்க தான். பெரிய பெரிய கம்பெனி மானேஜருங்க... சினிமா ப்ரொட்யூஸருங்க... அரசியல் தலைவருங்க... பத்திரிகைக்காரங்க... எல்லாத்திலியும் நமக்கு வேண்டியவங்க இருக்காங்க! அது சரி... நீ இன்னா படிச்சிருக்கே...?” “தமிழ் இலக்கியத்திலே எம்.ஏ. படிச்சிருக்கேன். அதுக்குக் கம்பெனி வேலை - கிம்பெனி வேலையெல்லாம் தர மாட்டாங்க... தமிழை நட்டமா நிறுத்தப் போறோம்னு பதவிக்கு வர்றவங்களையும் நம்பிப் பிரயோசனமில்லே. அவங்க தமிழைத் தான் வாழ வைப்பாங்களே ஒழியத் தமிழ் படிச்சவங்களை வாழ வைக்க மாட்டாங்க...” “இன்னொருத்தனை வாழ வைக்கிறத்துக்காக எந்தப் பைத்தியக்காரனும் ஆட்சிக்கு வர்றதில்லே... தான் வாழறதுக்காகவும் வளர்றதுக்காகவும் தான் ஆட்சி, பதவி எல்லாம்னு உனக்குத் தெரியாதா?” இப்படிக் கேட்டுவிட்டுச் சின்னி உரத்த குரலில் இடி இடியென்று முரட்டுச் சிரிப்புச் சிரித்தான். அவனோடு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அந்த மொட்டை மாடியிலேயே மழைக்கு ஒதுங்கிக் கொள்வதற்காகப் போடப்பட்டிருந்த ஓர் ஓட்டடுக்குத் தாழ்வாரத்தில் படுத்துத் தூங்கி விட்டான் முத்துராமலிங்கம். சின்னி விடியற்காலையில் அவனைச் சந்திப்பதாகக் கூறிவிட்டுப் படியிறங்கிக் கீழே சென்றான். முத்துராமலிங்கத்தின் மேல் மரியாதையும் பாசமும் சுரக்கும் மன நிலையில் இருந்த சின்னி வேலை விஷயமாக அவனுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற கனிவுடன் போனான். ஒரே நிமிஷத்தில் இரவு தீர்ந்து போய் விடிந்து விட்டதைப் போல பொழுது புலர்ந்திருந்தது. சின்னி வந்து எழுப்புவதற்குள் முத்துராமலிங்கமே சுற்றிலுமிருந்த மரங்களிலே பறவைகளின் குரலொளிகள் கேட்டு எழுந்திருந்து உட்கார்ந்தான். முந்திய இரவு தனக்கு இருந்த அசதியின் காரணமாகத்தான் இரவே விரைவில் முடிந்து விட்டதாகத் தோன்றுகிறது என்று அவனுக்குப் புரிந்தது. அந்த மொட்டை மாடியின் சுற்றுப்புறத்தில் இயற்கை எழில் கொஞ்சியது. மாமரங்களும் தென்னை மரங்களுமாக ஒரே பசுமை. அந்தப் பசுமையை ஊடுருவிக் கொண்டு தென்னை ஓலைகளிடையே பரவிய கதிரொளிக் கற்றைகள் வைர ஊசிகளாய் மின்னின. சின்னி இரண்டு கைகளிலும் ஆவி பறக்கிற சூட்டோடு டீ கிளாஸ்களை எடுத்து வந்தான். அவன் டீ கிளாஸுகளுடன் படியேறி வரவும், மாடி விளிம்புச் சுவரருகே வந்து உரசிக் கொண்டிருந்த ஒரு வேப்பமரத்திலிருந்து முத்துராமலிங்கம் கொழுந்துகள் பறிக்கத் தொடங்கவும் சரியாயிருந்தது. “எனக்கு இப்ப டீ வேணாம்ப்பா! நீயே ரெண்டு கிளாஸையும் குடி!” “அப்பிடியா சங்கதி? இப்பல்லே புரியுது காரணம்! வேப்பங்கொழுந்து துன்னு துன்னு ரம்பை மாதிரிப் பொம்பளைங்க எதிரே வந்து நின்னாக் கூடச் சாமியாருங்க மாதிரி மடிசஞ்சி ஆசாமி ஆயிப் போயிட்டேப்பா... நீ.” “சாமியாராப் போறதுக்கு வேப்பங்கொழுந்து தின்னா மட்டும் போறும்னு யாருப்பா உனக்குச் சொன்னது?” “யாருப்பா சொல்லணும்? எங்க ஆயாவே சொல்லும்ப்பா... அது இப்ப இல்லே. செத்துப் பூடுச்சி. வேப்பங் கொழுந்து துண்றவன் குடும்ப வாழ்க்கை நடத்த முடியாதுங்கும்... நாட்டு வைத்தியத்தில் படா கில்லாடிப்பா அது.” “எங்க ஊர்லே பொன்னம்பலத் தேவர்னு ஒருத்தரு இதே கொழுந்தை அம்மியாலே அரைச்சு உருட்டி உருட்டித் திம்பாரு. சும்மா உடம்பு வைரம் பாஞ்ச தேக்குக் கட்டை மாதிரி மினுமினுக்கும். அவருக்கு மொத்தம் ஒம்பது குழந்தைங்க. நாலு பிள்ளைகள். அஞ்சு பெண்கள். போறுமா?” சின்னி மறுத்துப் பதில் சொல்லாமல் தேநீரை ரசித்துப் பருகலானான். முத்துராமலிங்கத்தைக் கீழே குழாயடிக்கு அழைத்துச் சென்றான். கலியாணச் சத்திரங்களில் இருப்பது போல் பின்பக்கம் ஒரு கூடத்தில் வரிசையாக நாலைந்து துருப்பிடித்த குழாய்கள், குளியலறைகள் எல்லாம் அங்கே இருந்தன. ஒரு மூலையில் முந்திய இரவு அவன் பார்த்த பெண்களில் சிலர் பல் விளக்கி முகம் கழுவிக் கொண்டிருந்தார்கள். தெலுங்கிலும், தமிழிலும், மலையாளத்திலுமாக இனிய சோகக் குரல்கள் காதில் விழுந்தன. முத்துராமலிங்கத்தைக் கண்டதும் அவர்கள் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் பொருள் பொதிந்த நோக்கில் பார்வைகளையும், முணுமுணுப்புக்களையும், புன்னகைகளையும் பரிமாறிக் கொண்டனர். ஒரு ‘கான்சென்ட்ரேஷன் கேம்ப்’ அல்லது கைதி முகாமில் வாழ்வது போன்ற அவர்கள் வாழ்க்கைக்கு நடுவே சிரிக்கவும், மகிழவும் கூட இப்படிச் சில விநாடிகள் கிடைக்க முடியும் என்பது முத்துராமலிங்கத்துக்கு வியப்பை அளித்தது. முத்துராமலிங்கம் அங்கேயே குளித்து உடை மாற்றிக் கொண்டு சின்னியோடு வெளியே புறப்பட்டான். அந்த பங்களாக் காம்பவுண்டுக்கு வெளியே வந்தவுடனே சுவரருகே பதுங்கினாற் போல ஒண்டிக் கொண்டிருந்த ஓர் இளம் பெண் கொஞ்சம் தலைவிரி கோலமாகக் கிழிந்த உடைகளும் அதனிடையே பொங்கும் அழகுகளும், கவர்ச்சியுமாக இருந்தவள், எழுந்து ஓடத் தலைப்பட்டாள். “ஐயோ! என்னை விட்டுடு... என்னை விட்டுடு... கொன்னுப்புடாதே...” அவள் சின்னியைக் கண்டே அப்படி அலறி ஓடுவதாகத் தோன்றியது முத்துராமலிங்கத்துக்கு. பளிச்சென்று செண்பகப்பூ நிறம். கருமணலாக அலையோடி நெளி நெளியாகப் படிந்து தூசியுற்று மங்கிய கூந்தல்... சோகமும் அழகின் சுகமும் ததும்பும் கண்கள். நல்ல உயரம், கனிந்த உடல்வாகு... அவளுக்குப் பைத்தியம் பிடித்தது எதனால் என்று யோசித்து முத்துராமலிங்கம் மனம் குழம்பினான். சின்னியைக் கண்டதும் அவளுடைய ஓட்டமும், அலறலும் அதிகமாவதாக அவனுக்குத் தோன்றியது. “நம்ப குட்டிதான். இங்கே இருந்தா... பைத்தியம் பிடிச்சப்புறம் இது மாதிரி ஆயிடிச்சு... ரொம்ப ஷோக்கான பொம்பிளை... பாவம்... இப்ப இப்படி அலையிறா...” “எல்லாத்துக்குமே உன்னை மாதிரி ஆளுங்க தான் காரணம்... நல்லவங்களை எல்லாம் பைத்தியமாக்கறீங்க... பச்சைக் கிளிகளைப் பிடித்து வந்து பூனைக்கு விருந்து வைக்கிற மாதிரி இப்படி இளம்பெண்களைக் கொண்டாந்து இந்த நகரம்கிற பலி பீடத்திலே பலியிடறீங்க...” “இந்த ஊர்லேயிருக்கற ரொம்பப் பெரிய மனுசங்க சிலருக்காகத்தான் என்னை மாதிரிச் சின்ன மனுசங்க இதெல்லாம் செய்ய வேண்டியிருக்கு.” “மனிதன் ஒரு சமுதாய மிருகம்னு பழமொழி சொல்லுவாங்க... இந்த மாதிரி நகரங்களிலே சமுதாயத்தையே மிருகமயமாக்கி வச்சிருக்காங்க...” சின்னிக்கு இந்த வாக்கியங்களின் சூடு உறைக்கவில்லை. புரியாததுதான் காரணமாயிருக்க வேண்டும். அபலைகள், அநாதைகள், ஏழைகள், புறக்கணிக்கப்பட்டவர்கள், வேலை கிடைக்காமல் தவிப்பவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், நியாயம் கிடைக்காமல் நசுங்கியவர்கள் அனைவருமே இந்தப் பெருநகரத்தில், “ஐயோ என்னை விட்டுவிடு!” என்று அந்தப் பைத்தியக்காரி போல் எதனிடமிருந்தோ எதற்கோ அஞ்சிப் போய் நிலைகுலைந்து நிரந்தரமாகவே ஓடிக் கொண்டிருப்பது போல் தோன்றியது முத்துராமலிங்கத்துக்கு. இந்தக் கோழைத்தனமான புறமுதுகிடும் ஓட்டத்தை - பயத்தை யாராவது ஒருவன் தடுத்து நிறுத்த வேண்டாமா என்று குமுறினான் அவன். விரித்த கூந்தலும் கிழிந்த ஜாக்கெட்டும் புடவையுமாகப் பித்துப் பிடித்தவளாய் ஓடிய அந்த ஓவிய அழகு இன்னும் அவன் கண்முன் நின்றது.
“நந்தவனத்தின் மலர்கலெல்லாம் - வெறும் நாய்கள் பறிக்க விட்டுவிட்டார்.” நவநீத கவியின் அழகிய வரிகள் அவன் நினைவுக்கு வந்தன. அவனும் சின்னியும் நடந்து கொண்டிருந்தார்கள். கார் ஒன்று அவனருகே உரசிவிடுவது போல் வந்து நின்றது. “எங்கே இந்தப் பக்கம்?” - என்று வினவியபடி அதிலிருந்து புன்சிரிப்போடு மங்கா கீழிறங்கினாள். நிசப்த சங்கீதம் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
நிறைவுரை
|