முதல் பாகம் - அடையாளம் 15. கரந்தெழுத்து இரத்தினமாலை தன் கைகளுக்குச் செம்பஞ்சுக்குழம்பு தீட்டிக் கொள்வதற்கும் தான் வந்திருக்கும் காரியத்திற்கும் என்ன தொடர்பு என்று இளையநம்பிக்குப் புரியவில்லை. ஆனால் இரத்தின மாலையோ உடனே அழகன் பெருமாளின் வேண்டுகோளுக்கு இணங்கிக் குறளனிடம் தன் கைகளை நீட்டி அலங்கரித்துக் கொள்ள முன்வந்தாள். “ஆகா! நான் காத்திருக்கிறேன்” - என்று கூறியபடி குறளனுக்கு அருகே சென்று ஓர் அழகிய மயில் தோகை விரிப்பது போல் மண்டியிட்டு அமர்ந்து வெண் தந்த நிறத்து உள்ளங்கைகளை அவன் முன் மலர்த்தினாள் அவள். எழுத்தாணி போல் யானைத் தந்தத்தில் செய்த ஒரு கருவியால் குறளன் முதலில் அவல் வலது கையில் செம்பஞ்சுக் குழம்பு* (* மருதாணி இடுவது போல் ஓர் அலங்காரம்) தீட்டத் தொடங்கினான். ஓவியம் தீட்டுவது போல குறளன் கை விரைந்து இயங்கியது. அதைக் கண்டு ஆண்மைச் செருக்கும் மான உணர்வும் நிறைந்த இளையநம்பியின் கண்கள் சினத்தினாற் சிவந்தன. ‘இருக்கட்டும்! இந்த அழகன்பெருமாள் என்னை என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறான்? மயக்கும் சக்திவாய்ந்த அழகிய பெண்களைத் தேடிச் சுகம் அடையவா நான் இங்கே கோ நகருக்கு வந்தேன்? என்னை அழைத்து வந்து இங்கே இவளருகில் நிறுத்திக் கொண்டு ‘பெண்ணே! உன் கைகளுக்குச் செம்பஞ்சுக் குழம்பு தீட்டி அலங்கரித்துக் கொள்’ - என்று ஓர் இளம் கணிகையை வேண்டும் இவன் என்னைப் பற்றி எவ்வளவு கீழாக எண்ணியிருக்க வேண்டும்!’ - என்று குமுறியது இளைய நம்பியின் உள்ளம். ஓர் ஆண் மகனின் முன்னே இன்னோர் ஆண் மகனையும் அருகில் வைத்துக் கொண்டு, மூன்றாவதாக மற்றோர் ஆண் மகனிடம் செம்பஞ்சுக் குழம்பு தீட்டக் கைகளை நீட்டும் நாணமற்ற அவளை வெறுக்க வேண்டும் போலிருந்தது அவனுக்கு. ‘அவளாவது கணிகை! இந்த அழகன் பெருமாளுக்கு அறிவு எங்கே போயிற்று? என்னைப் போல் நற்குடிப் பிறப்பு உள்ள ஓர் இளைஞனுக்கு முன் இப்படி நடந்து கொள்ளும் அளவுக்கு இவன் அறிவிலியாயிருப்பான் என்று நான் நம்ப முடியவில்லையே?’ என்று இளையநம்பி எண்ணி எண்ணி வேதனையும், கோபமும் கொண்டான். அந்தச் சினத்தை அடுத்த விநாடியே அவன் அழகன் பெருமாளை விளித்த குரலில் கேட்க முடிந்தது; “அழகன் பெருமாள்! இப்படி வா! உன்னோடு தனியாக சிறிது நேரம் பேசவேண்டும்” - என்று அவனைக் கூப்பிட்டுக் கொண்டே சந்தனம் அறைக்கும் பகுதியை நோக்கி நடந்தான் இளையநம்பி. அவனுடைய குரலில் இருந்த கோபத்துக்குக் காரணம் புரியாதவனாக அழகன் பெருமாளும் பின் தொடர்ந்தான். இளையநம்பியின் முகத்திலும் குரலிலும் எள்ளும் கொள்ளும் வெடிப்பது எதற்காக என்பது அவனுக்கு விளங்கவில்லை. இருவரும் சந்தனம் அறைக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்ததும் சுற்றும் முற்றும் பார்த்து அந்த இடத்தின் தனிமையை உறுதிப்படுத்திக் கொண்ட பின் இளையநம்பி அழகன் பெருமாளை நோக்கிக் கடுமையான குரலில் கேட்டான்:
“இங்கே நான் கோநகருக்கு எதற்காக வந்திருக்கிறேன் என்பது உனக்குத் தெரியும் அல்லவா?”
“நன்றாகத் தெரியும்.” “கொற்கைத் துறையில் குதிரைக் கப்பலை என்றைக்கு எதிர்பார்க்கலாம் என்று தெரிந்து சொல்லச் சொன்னால் என்னையும் இங்கு அழைத்து வந்து, என் முன்பே ஒரு கணிகையை அலங்கரித்து அவள் கைகளுக்கு செம்பஞ்சுக் குழம்பு தீட்டச் சொல்கிறாய் நீ...?” “ஆமாம்! மறுக்கவில்லை.” “என்ன நோக்கத்தில் இவற்றை எல்லாம் நீ செய்கிறாய் என்று எனக்குத் தெரியவேண்டும். அழகுள்ள பெண்களையே நான் இன்று தான் வாழ்வில் முதன் முதலாகப் பார்க்கிறேன் என்று எண்ணிக் கொள்ளாதே நீ...” “நான் அப்படி எண்ணியதாக உங்களுக்கு யார் சொன்னார்கள்?” “பின் யாருக்காக அலங்கரிக்கிறாய் இவளை?” “உங்களுக்குத்தான்...” அழகன்பெருமாள் தன் வார்த்தைகளை முடிப்பதற்குள் இளையநம்பியின் உறுதியான கைகள் அவன் கழுத்திற் பாய்ந்து பிடியை இறுக்கின. அந்தப் பிடி தாங்க முடியாமல் அழகன் பெருமாளுக்கு மூச்சுத் திணறியது. கண் விழிகள் பிதுங்கின. “இது என்ன? நீங்கள் இவ்வளவிற்கு உணர்ச்சி வசப்படுகிறவராக இருப்பீர்கள் என்று நான் நினைக்கவில்லையே? எதற்காக இந்த வீண் ஆத்திரம்? நான் சொல்லியவற்றை எல்லாமே நீங்கள் தவறான பொருளில் எடுத்துக் கொள்கிறீர்கள்.” “திருக்கானப்பேர்ப் பாண்டியகுல விழுப்பரையர் மரபில் தவறான பொருள்களை விளையாட்டுக்காகவும் நாடுவதில்லை.” “ஆனால் விளையாட்டு எது, வினை எது என்று மட்டும் புரியாது போலிருக்கிறது.” “பரத்தைகளை நாடி அலையும் பலவீனமான ஆடவர்கள் அந்த மரபில் இன்று வரை இல்லை. அது அவர்களுக்குப் புரியவும் புரியாது.” “நீங்கள் பலவீனமானவர் என்று யார் சொன்னார்கள்? உங்கள் காரியத்துக்காகத்தான் அவள் அலங்கரிக்கப்படுகிறாள் என்று தானே சொன்னேன்.” “இதன் அர்த்தம்?” “மீண்டும் அங்கே கூடத்துக்கு என்னோடு வந்தால் தெளிவாக விளக்குகிறேன்.” இளையநம்பி தயங்கித் தயங்கி நடந்து அழகன் பெருமாளைப் பின் தொடர்ந்தான். கூடத்துக்கு வந்ததும் தன் வெண்ணிற உள்ளங்கையின் பளிங்கு நிறத்தை எடுத்துக் காட்டுவது போன்ற சிவப்புக் கோடுகளில் அழகிய சிறிய ஓவிய அலங்காரங்கள் அந்தக் கைகளில் தீட்டப்பட்டிருந்ததை அழகன்பெருமாளிடம் காண்பித்தாள் இரத்தினமாலை. அப்போது அழகன் பெருமாள்- “இந்தக் கைகளை இப்போது நீங்களும் பார்க்க வேண்டும்” - என்று இளையநம்பியிடம் கூறினான். இதைக் கேட்டு இளையநம்பி சினத்தோடு அழகன் பெருமாளை ஏறிட்டுப் பார்த்த போது, இங்கே மறுபுறம் அவள் கண்கள் அவனை அன்போடு இறைஞ்சின. இறைஞ்சும் கண் பார்வையோடு தன் கைகளை அவன் முன்பு காண்பித்து அவனைக் கேட்டாள் இரத்தினமாலை: “இந்தக் கைகளை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா?” “அது என் வேலையல்ல.” “கூடலுக்கு வந்தவர்கள் இவ்வளவு புரியாதவர்களாக இருக்கலாகாது.” “என்ன? அந்த வாக்கியத்தை இன்னொரு முறை சொல்லேன், பார்க்கலாம்.” “கூடலுக்கு...” “போதும் நிறுத்து! இவ்வளவு வெளிப்படையாக...? மதுரை மாநகரத்துக் கணிகைகள் இவ்வளவு நாணமற்றவர்களாக இருப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.” “இந்த நகரத்துக்குக் ‘கூடல்’ என்ற பெயர் வெளிப்படையானது! அதில் இரகசியம் எதுவும் இருப்பதாக இதுவரை எனக்குத் தெரியாது. நல்ல அர்த்தத்தில் கூறுகிற சொற்களைக் கூட இந்த இடத்தின் பாவத்தால் தவறாக அர்த்தப்படுத்திக் கொண்டு நீங்கள் கோபப்பட்டால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்? புலவர்கள், அறிவாளிகள் ஒன்று கூடும் இடம் ஆகையால் இந்த நகருக்குக் ‘கூடல்’ என்பதாகப் பெயர் சூட்டினார்கள். ‘கூடல்’ என்று சொல்வதில் நாணப்பட என்ன இருக்கிறது?” - என்று அவள் மறுமொழி கூறியபோது ஆத்திரத்திலும் பதற்றத்திலும் அவளது ஒரு சொல்லைத் தான் தவறாகப் புரிந்து கொண்டதற்காக வெட்கி நின்றான் இளையநம்பி. அழகன் பெருமாள் மாறனை ஒரு சிறிய உபவனக் காப்பாளன் தானே என்று தான் நினைத்திருந்த மதிப்பீட்டை மீறி அவன் இலக்கிய இலக்கணங்களையும் தர்க்க நியாயங்களையும் பேசக் கேட்ட போது எவ்வளவு வியப்பை இளையநம்பி அடைந்தானோ, அவ்வளவு வியப்பை இப்போது இந்த விநாடியில் மதுரைமா நகரத்தின் இந்தக் கணிகை இரத்தின மாலையின் முன்பும் அடைந்தான் அவன். ஒரு கணிகையிடம் பேசும் அலட்சிய மனப்பான்மையோடு தன்னிடம் பேசிய அவனிடம் ஒரு பெரிய புலவரிடம் பேசும் மதிப்புடனும் மொழி நுணுக்கத்துடனும் அவள் பேசியிருப்பது புரிந்ததும் தன்னுடைய பதற்றத்துக்காக அவன் நாணினான். ஆயினும் செம்பஞ்சுக்குழம்பு தீட்டி அலங்கரித்த கைகளைத் தன் முன் ஏன் அவள் காண்பிக்கிறாள் என்பது இன்னும் இளைய நம்பிக்கு விளங்கவில்லை. அந்த நிலையில் அழகன்பெருமாளோ விலகி நின்று சிரித்துக் கொண்டிருந்தான். நளினத் தாமரைப் பூக்களைப் போன்ற அவளுடைய அழகிய உள்ளங்கைகளில் கோடுகளாகவும், ஓவியங்களாகவும் மிக அழகிய முறையில் தீட்டியிருந்தான் குறளன். அந்தக் கைகளின் அழகுக்கு மேலும் அழகு சேர்ப்பவையாயிருந்தன அவை. அவள் ஏன் தன் முன்பு கைகளை விரித்துக் காட்டுகிறாள் என்று புரியாத நிலையில் எதிரே குறும்புத் தோன்றச் சிரித்துக் கொண்டு நின்ற அழகன் பெருமாள் மாறனின் மேல் மீண்டும் திரும்பியது இளையநம்பியின் சினம். சந்தனம் அறைக்கும் பகுதிக்குத் தனியே அழைத்துச் சென்று கேட்ட போது, ‘மீண்டும் அங்கே கூடத்துக்கு வந்தால் தெளிவாக விளக்குகிறேன்’ - என்று மறுமொழி கூறித் தன்னைக் கூடத்துக்குக் கூப்பிட்டுக் கொண்டு வந்து ஒன்றுமே சொல்லாமல் அழகன்பெருமாள் சிரித்துக் கொண்டு நின்றதைக் கண்டு தான் அவனுள் கோபம் மூண்டிருந்தது. இந்த மதுரைமா நகரின் புகழ்பெற்ற கணிகை இரத்தினமாலை, உபவனக்காப்பாளன் அழகன்பெருமாள் எல்லாருமே பெரியவர் மதுராபதி வித்தகரின் ஆணைக்குக் கட்டுப்பட்டவர்கள் என்பதனால் இவர்கள் மேல் அளவற்று ஆத்திரப்படவோ, சினம் கொள்ளவோ முடியாமலும் இருந்தது. சிறிது நேரத்திற்கு முன் சந்தனம் அறைக்கும் பகுதியில் சற்றே நிதானம் தவறி அழகன்பெருமாளின் கழுத்தில் கைகளைப் பதித்து அவனைத் துன்புறுத்தியது போல் மறுமுறையும் சினத்திற்கு ஆளாகி விடலாகாது என்பதில் அவன் கவனமாக இருந்தான் இப்போது, ‘செம்பஞ்சுக்குழம்பு தீட்டிச் சிங்காரித்து இவளை யாருக்காக அலங்கரிக்கிறாய் இப்போது?’ - என்று தான் அழகன்பெருமாலைக் கேட்ட கேள்விக்கு இன்னும் தெளிவான விடை கிடைக்கவில்லை என்பதை உணர்ந்த போது இளையநம்பி பொறுமையின்றித் தவித்தான். எதிரே கை விரித்து நிற்பவளின் அபிநயம் போன்ற கோலமும், அவளது நறுமணங்களும், அந்த மாளிகையின் சிங்காரமயமான அலங்காரச் சூழ்நிலையும், வேறு பகுதிகளிலிருந்து மங்கலாக ஒலித்துக் கொண்டு இருந்த நாதகீத வாத்தியங்களின் இனிமையும் அவனைப் பொறுமை இழக்க விடாமல் தடுக்கவும் செய்தன. அந்த நிலையில் மீண்டும் அழகன் பெருமாளே முன் வந்து அவனை வினாவினான். “நன்றாகப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள் ஐயா! இந்தக் கைகளில் இருப்பதை இன்னும் கூட நீங்கள் புரிந்து கொள்ள முடியவில்லையா?” “நான் தான் ‘அது என் வேலையல்ல’ - என்று அப்பொழுதே சொன்னேனே? பெண்களின் கைகளை அழகு பார்த்துச் சொல்லும் காரியத்துக்காக நான் இங்கே வரவில்லை...” “சிறிது பொறுமையோடு கூர்ந்து பார்த்தால் இந்தக் கைகளில் அதைவிடப் பெரிய காரியம் இருப்பதும் புலப்படும்.” மீண்டும் மீண்டும் அழகன் பெருமாள் இப்படிக் கூறவே இளையநம்பிக்கு அவன் என்ன சொல்கிறான் என்பது அந்தக் கணம் வரை புதிராகவே இருந்தது. அழகன் பெருமாளே மேலும் தொடர்ந்தான்:- “நீங்கள் எந்தக் காரியத்திற்காக வந்திருக்கிறீர்களோ அந்தக் காரியமே உங்களுக்குப் புரியவில்லை என்பது விந்தைதான்.” “இப்போது நீ என்ன சொல்கிறாய் என்பதே எனக்கு விளங்கவில்லை அழகன் பெருமாள்?” அழகன் பெருமாள் இளையநம்பியின் காதருகே வந்து ஏதோ மெல்லிய குரலிற் சொல்லிவிட்டு, “இப்போதாவது புரிகிறதா பாருங்கள்?” - என்றான். உடனே இளையநம்பி செம்பஞ்சுக் குழம்பு தீட்டப்பட்ட அந்தக் கைகளை உற்றுப் பார்த்து அவற்றில் சித்திர வேலைப்பாடுகள் போன்ற மேற்போக்கான கோடுகளைத் தவிர்த்து நுணுக்கமாக நோக்கி ஆராய்ந்த போது அவன் விழிகள் வியப்பினால் மலர்ந்தன. அங்கே மிக அந்தரங்கமான கரந்தெழுத்துக்களில் (ஒரு குழுவினர் தங்களுக்குள் மட்டும் பயன்படுத்தும் இரகசிய எழுத்துக்கள் - ஆதாரம்: சீவக சிந்தாமணி 1767) அவன் தெரிந்து கொள்ள வேண்டியவற்றை வினாவும் வினாக்கள் இருந்தன. தன் கையில் பிறர் எவரும் புரிந்து கொள்ள முடியாத அந்த இரகசிய எழுத்துக்களான வினாக்களோடு அதற்கு மறுமொழி தெரிந்து வர அவள் அரண்மனைக்குப் புறப்பட்டுப் போகிறாள் என்பதும் புரிந்தது. அப்படி புரிந்த சுவட்டோடு இளைய நம்பியின் மனத்தில் இன்னும் ஒரு பெரிய சந்தேகமும் எழுந்தது. |