இரண்டாம் பாகம் - சிறைக்கோட்டம் 17. பொன் கூண்டிலிருந்து? இசையும் கூத்தும், இன்பமும் நிறைந்த இரத்தின மாலையின் மாளிகையில் ஒரு குறைவுமில்லை என்றாலும் தான் சிறைப்பட்டிருப்பது போல் உணரத் தொடங்கினான் , இளையநம்பி. அவன் தனிமையை உணர்ந்து விடாதபடி எவ்வளவோ பேணிப் பிரியப்பட்டு நெருங்கிப் பாதுகாத்து வந்தாள் இரத்தினமாலை. ஓர் இணையற்ற வாலிபப் பருவத்து வீரனை அன்பினாலும், உபசரணைகளாலும் மட்டுமே தடுத்து வைப்பது என்பது எவ்வளவு அரிய காரியம் என்பதை அவள் உணர முடிந்தது. சில வேளைகளில் தன்னோடு பேசிக் கொண்டிருக்கும்போதே அவனது சிந்தனை வேறெங்கோ போய் விடுவதை அவள் கண்டிருந்தாள். சில இரவுகளில் மஞ்சத்தில் அவன் உறக்கமின்றிப் புரள்வதையும் பெருமூச்சு விடுவதையும், எழுந்து அமர்ந்து கன்னத்தில் கையூன்றிய வண்ணம் கவலையோடு சிந்திப்பதையும்கூட அவள் காண நேர்ந்திருந்தது. அப்படி அவன் மஞ்சத்தின் மேல் விழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்த ஓர் இரவில், அவள் மிகமிகக் கனிவான குரலில், “உங்களைப் பார்த்தால் எனக்கே பரிதாபமாக இருக்கிறது. சமயா சமயங்களில் நீங்கள் முள்ளின் மேல் இருப்பதைப் போல் பொறுமையற்றுத் தோன்றுகிறீர்கள். எங்களிடையே இருப்பதில் உங்களுக்கு ஏதேனும் உபசார குறைவு இருந்தால் அதைத் தயங்காமல் சொல்லலாம்” என்று அவனிடமே கேட்டாள். அவன் ஒருவித ஏக்கத்தோடு மறுமொழி கூறினான்: “இரத்தினமாலை! இங்கே எனக்கு ஒருகுறையும் இல்லை என்பதே மிகப் பெரிய குறைதான். ஒரு குறையோ, தடையோ எதிர்ப்படாத வாழ்வில் ஆண் மகன் தன்னை ஓர் ஆண்மகன் என்றே நிரூபித்துக் கொள்ளமுடியாமல் போகிறது. இந்தச் சுகவாசம் என்ற பொன் கூண்டிலிருந்து நான் விடுபட்டாலொழிய என் மனம் ஆறுதலடையாது. என் வேதனையின் முழு அர்த்தத்தை நீயும் புரிந்து கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன். வீரர்களை வெறும் அன்பினால் மட்டும் புரிந்து கொள்ளமுடியாது போலிருக்கிறது.” “நீங்கள் ஒரு பக்கத்து வாதத்தை மட்டுமே சொல்கிறீர்கள். வீரர்களை வெறும் அன்பினால் புரிந்துகொள்ள முடியாது என்பது உண்மையா? அல்லது உணர்வு மயமாக நெகிழ்ந்த அன்பை வீரர்களால் புரிந்துகொள்ளமுடியாது என்பது உண்மையா?” “நமக்குரிய தேசத்தைக் காப்பாற்ற வேண்டும் என்கிற பெரிய அன்பு மேலெழும்போது, நமக்குரிய மனிதர்களைப் பற்றிய சிறிய அன்பு அதில் கரைந்து போய்விடுகிறது என்பதை நீ புரிந்துகொள்ள வேண்டும்.” “என்னை மறப்பதற்கும் நிராகரிப்பதற்கும் நீங்கள் கூறுகிற தத்துவமோ இது?” “மனிதர்களை மறப்பதற்கும் நிராகரிப்பதற்கும் தத்துவங்கள் பிறப்பதில்லை. தத்துவங்களுக்கு மறப்பதையும் நிராகரிப்பதையும் விட உயர்ந்த நோக்கங்கள் உண்டு.” “ஆனால் மனிதர்களுக்கு மட்டும் சமயா சமயங்களில் அப்படி உயர்ந்த நோக்கங்கள் இருப்பதாகத் தோன்ற வில்லை.”
இதைக் கேட்டு அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்து மெல்லச் சிரித்தான் இளையநம்பி. ஒரு கவலை நிறைந்த சூழ்நிலையில் தன் உரையாடலால் அவனை மனம் நெகிழ்ந்து சிரிக்கச் செய்தது, இரத்தினமாலைக்குத் திருப்தியைக் கொடுத்தது.
“உன்னைப்போல் வசீகரமும், மயக்கும் சக்தியும் உள்ள பெண்கள்தான் வீரர்களின் முதல் எதிரிகள். எவ்வளவு பெரிய வீரனின் அன்பையும் ஒரு குறுகிய எல்லைக்குள் கொண்டு வந்து அடக்கிவிடுகிறீர்கள் நீங்கள்!” இப்போது அவள் அவன் முகத்தை ஒரக் கண்களால் நோக்கி மெல்ல நகைத்தாள். “உன்னுடைய தடையையும் பாதுகாப்பையும் மீறி நான் இந்த மாளிகை எல்லையைக் கடந்து நகர வீதிகளைக் காணப்புறப்பட்டால் நீ என்ன செய்வாய்? எனக்கு இங்கிருந்து வெளியே புறப்பட்டுச் செல்லவேண்டும் போல ஆசையாயிருக்கிறது.” “உங்கள் ஆசைகள் உங்களைவிடப் பெரிய சக்தியால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன. நீங்கள் நினைத்தபடிஎல்லாம் ஆசைப்பட்டுவிட முடியாது. ஆசைப்பட்டபடியெல்லாம் நினைத்துவிடவும் முடியாது.” “இதற்கு ஓர் இடம் மட்டும் விதிவிலக்கு!” “எதைச் சொல்லுகிறீர்கள் நீங்கள்?” “எதைச் சொல்லுகிறீர்கள் என்று இப்போது இதைக் கேட்கும் பெண்ணழகி மட்டும் இங்கு விதிவிலக்காகி விட்டாள் என்றேன்.” “உண்மையான அன்பு என்பது ஒரு விதிவிலக்கில்லை. என் அன்பை நீங்கள் விதிவிலக்காகக் கூறுவது எனக்கே பிடிக்கவில்லை. என் அன்பை நீங்கள் அப்படி அலட்சியமாக நினைக்கலாம். ஆனால் நான் அப்படி நினைக்கமுடியாது.” “என் மேல் உண்மையான அன்பு இருக்குமானால் நீ எனக்கு ஒர் உதவி செய்யவேண்டும்.” “என்ன உதவி? செய்ய முடிந்த உதவியாயிருந்தால் நிச்சயம் செய்யலாம்.” “செய்யமுடியாத உதவியாயிருந்தாலும் செய்வது தான் உண்மை அன்பு.” “செய்யமுடியாததற்கும் செய்யக் கூடாததற்கும் வேறுபாடு உண்டு.” “அன்பு என்ற அடிப்படையில் பார்க்கும்போது எதிலும் எதற்கும் வேறுபாடு கிடையாது என்பது நான் சொல்லித்தான் உனக்குத் தெரியவேண்டும் என்பதில்லை. மனிதர்களுக்கும் அவர்களுடைய கருத்துக்களுக்கும் நடுவே உள்ள வேறுபாடுகளையும், இடைவெளிகளையும் குறைப்பதுதான் அன்பு. பொது அன்பின் இலக்கணமே இதுதான் என்றால் பிரியத்தின் விளைநிலமாகிய பெண்களின் அன்பு இன்னும் சிறப்பாயிருக்க வேண்டும்...” “காரியத்தைச் சாதித்துக் கொள்வதற்கு ஏற்ற இனிய வார்த்தைகளை ஒவ்வொன்றாகத் தேர்ந்தெடுத்துப் பேசுகிறீர்கள் நீங்கள்!” “ஆனாலும் என் காரியம் இன்னும் சாதிக்கப்பட்டு முடியவில்லை.” அவள் இதற்கு மறுமொழி கூறவில்லை. நளினமும் அழகும் நிறைந்த புன்னகை ஒன்று அவள் இதழ்களில் தோன்றி மறைந்தது. நடு இரவு கழிந்து , பனியும் மென்காற்றும், பூக்களின் மலருங்காலத்துப் புதுமணமும் ஒன்று சேர்ந்து புறப்படும் பின்னிரவு வந்துகொண்டிருந்தது. இன்னும் அவர்கள் இரு வருமே மஞ்சங்களில் அமர்ந்து பேசிக் கொண்டுதான் இருந்தனர். இருவருக்கும் உறக்கம் அறவே கலைந்து போய் விட்டது. ஒரே ஒருநாள் நகர வீதிகளில் போய்த் தன் விருப்பப்படி சுற்றிப் பார்க்க ஆசை தெரிவித்தான் இளையநம்பி. அவளோ அவனை அப்படி விருப்பம்போல் வெளியே அனுப்புவதற்கு இசையவில்லை. சிரித்தும், பேசியும் அவனை வசியப்படுத்தி மயக்கி அவனுடைய வெளியேறும் விருப்பத்தை மெல்ல மறக்கச் செய்ய முயன்றாள். இளம் வைகறையின் சீதக் காற்று பூக்களின் நறுமணங்களோடு சாளரத்தின் வழியே உட்புகுந்தது. பணிப் பெண் ஒருத்தி புறத்தே வந்து நின்று குரல் கொடுத்தாள். முதலில் இரத்தினமாலைதான் எழுந்து சென்று பணிப் பெண்ணை எதிர் கொண்டாள். பின் தொடர்ந்து இளையநம்பியும் சென்றான். வந்த பணிப் பெண்ணின் முகத்தில் பதற்றமும் கலவரமும் தெரிந்தன. வார்த்தைகளால் எதுவும் கூறாமல் நிலவறை முனை உள்ள சந்தனம் அறைக்கும் பகுதியைச் சுட்டிக் காட்டினாள் பணிப்பெண். உடனே இளைய நம்பியும் இரத்தினமாலையும் அங்கே விரைந்தனர். நிலவறை வழிக்குக் காவலாக இருக்கட்டும் என்று இரு பணிப் பெண்களை ஒவ்வோர் இரவிலும் சந்தனம் அறைக்கும் பகுதியிலேயே படுத்துக்கொள்ளப் பணித்திருந்தாள் இரத்தினமாலை. அவர்களில் ஒருத்தி தான் இப்போது எழுந்து வந்திருந்தாள். மற்றொருத்தி சந்தனம் அறைக்கும் பகுதியின் முன்புறம் தூக்கக் கிறக்கத்தோடு தளர்ந்துபோய் நின்று கொண்டிருந்தாள். இரவாயிருந்தபடியினாலும், நிசப்தத்தினாலும் சிறிய ஒலி கூடப் பெரியதாகக் கேட்டது. வழக்கமாக அந்த நேரத்திற்கு நிலவறை வழியே யார் வந்தாலும் சிறிது தொலைவில் வரும்பொழுதே படியேறி மேற்புறம் அடைப்புக் கல்லைத் திறப்பதற்கு முன்பே ஓசை கேட்கும். இப்போதும் அப்படியே யாரோ நடந்து வருகிற காலடி ஓசை கேட்டது. இளைய நம்பியும், இரத்தினமாலையும் அடைப்புக் கல்லின் அருகே நின்று கீழே யாரோ படியேறி வரும் ஓசையைக் கேட்டனர். கூர்ந்து செவிமடுத்ததில் கீழே ஒருவர் நடந்து படியேறி வரும் ஓசைதான் கேட்டது. என்றாலும் இரத்தினமாலை மிகவும் முன் எச்சரிக்கையோடு, “வருவது யார் என்று உறுதியாகத் தெரியாத நிலையில் நீங்கள் இங்கே எதிர்ப்பட்டு நிற்பது நல்லதில்லை. தயை கூர்ந்து நீங்கள் மறைந்திருக்க வேண்டும். இது நான் உங்களுக்கு இடும் ஆணையில்லை. அன்புக் கட்டளை” என்று இளையநம்பியிடம் கூறினாள். அவள் கூறியதை அவன் ஏற்றுக் கொண்டான். “அன்புக் கட்டளை என்பது பொன் கூண்டில் சிறை வைக்கிறேன் என்பது போன்றதுதான். இடுகின்ற சிறையைப் பொன் கூண்டில் வைத்து இட்டால் என்ன? இரும்புக் கதவுகளின் இடையே வைத்து இட்டால் என்ன? எல்லாம் ஒன்று தான்” என்று சிரித்துக்கொண்டே கூறிவிட்டு மறைந்து நிற்பதற்காக வெளியேறிச் சென்றான் இளையநம்பி. நிலவறைப் பாதை வழியே வந்துகொண்டிருப்பது தன் மனிதர்களில் ஒருவரா அல்லது வேற்றவரா என்பதை வந்து கொண்டிருப்பவரின் முகம் தெரிந்தால் அன்றிப் புரிந்து கொள்ளமுடியாது என்பதனால் இளைய நம்பியை மறைந்திருக்குமாறு வேண்டினாள் அவள். காலடியோசை மேல் நோக்கி நெருங்க நெருங்க அவள் நெஞ்சு வேகமாக அடித்துக் கொண்டது. இதோ மேல் அடைப்புக்கல் நகர்த்தப்படும் ஓசையும் கேட்கிறது. அவள் மனத்துடிப்புப் பெருகி வளர்கிறது. இருளிலிருந்து கோணிய முகத்தில் பெரியதாகச் சிரிக்கும் வாயுடன் அந்துவனின் தலை தெரிந்த பின்புதான் அவள் கவலை நீங்கி நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். “திருக்கானப் பேர் நம்பியை எங்கே காணோம்? இன்னும் உறக்கம் நீங்கித் திருப்பள்ளி எழுச்சி ஆகவில்லையா? நம்மவர்களிடம் இருக்கிற மிகப் பெரிய குறைபாடு இதுதான். விழித்துக் கொள்ள வேண்டிய சமயத்தில் உறங்கிப் போய் விடுவதும், உறங்க வேண்டிய சமயத்தில் அவசியமில்லாமல் விழித்துக் கொண்டிருப்பதுமே வழக்கமாகி விட்டது. அதனால்தான் நம்முடைய பல காரியங்கள் கெட்டுப் போய் விடுகின்றன” - என்று பொதுவாகக் குற்றம் கூறிக் கொண்டே வந்தான் இருந்த வளமுடையார் கோயில் யானைப்பாகன் அந்துவன். குரலைக் கேட்டு மறைந்து வெளியேறி நின்றிருந்த இளைய நம்பியும் உள்ளே வந்து சேர்ந்தான். உள்ளே வந்ததுமே, இளைய நம்பி அந்துவனைக் கேட்டான்; “என்ன அந்துவன்? இருந்த வளமுடைய பெரு மாளுக்கு இன்று காலை பொழுது புலர்ந்ததும் உன்னுடைய முகத்தில் விழிக்கும் வாய்ப்புக் கிடைக்க விடாமல் இங்கே வந்து விட்டாய்?” “என்ன செய்வது ஐயா? இருந்த வளமுடைய பெருமாளை விட அதிகமான அபாயத்திலிருக்கும் உங்களைப் போன்ற ஒருவருக்கு அந்த நல்ல வாய்ப்பைத் தர வேண்டியிருந்தது. அதனால்தான் இங்கே புறப்பட்டு வந்தேன். கோவிலிலிருந்து திருமஞ்சன நீர் எடுத்துவர வைகைக்குப் புறப்படும் போது நான் இன்று உங்களைத் தேடி இங்கே வருகிற திட்டம் எதுவும் இல்லை. திருமருத முன் துறைக்கு வந்த பின்பே உங்களை இன்றே இப்போதே உடனே சந்தித்தாக வேண்டியிருந்த காரியம் ஏற்பட்டு விட்டது.” “அது என்ன அத்தனை அவசரமான காரியம்?” “இதோ, இதைப் பார்த்தால் புரியும்! பெரியவரிட மிருந்து இந்தஓலை இன்று அதிகாலையில் திருமருத முன்துறையில் எனக்குக் கிடைத்தது” என்று அதை எடுத்து நீட்டினான் அந்துவன். இப்படி இந்த ஓலையை அந்துவன் நீட்டிய போது இளையநம்பியையும் முந்திக் கொண்டு விரைந்து அவன் கையிலிருந்து அந்த ஓலையைப் பறிப்பதுபோல் வாங்கினாள் இரத்தினமாலை. விரைவோடு விளக்கருகே கொண்டு போய், சித்திரக் கரந்தெழுத்துக்களில் எழுதப்பட்டிருந்த அந்த ஓலையைப் படிக்கவும் செய்தாள் அவள். தான் படித்தபின் இரண்டாம் முறையாக இளையநம்பியும் கேட்கும்படி வாய் விட்டுப் படித்தாள் அவள். அந்த ஓலையைப் படித்து முடித்ததும் ஒரிரு விநாடிகள் அவர்களிடையே மெளனம் நிலவியது. அந்துவன்தான் முதலில் அந்த மெளனத்தைக் கலைத்தான். “பெரியவர் விரைந்து அறிவித்திருக்கும் இந்தப் புதிய ‘நல்லடையாளம்’ நம்மவர்கள் எல்லாருக்கும் உடனே அறிவிக்கப்பட வேண்டும். பழைய நல்லடையாளம் எப்படியோ எங்கோ எப்போதோ எதிரிகளுக்குத் தெரிந்து விட்டது போலிருக்கிறது! அதனால்தான் பெரியவர் விரைந்து இதை அறிவித்திருக்கிறார். அதோடு திருக்கானப் பேர் நம்பி மிகமிகப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதையும் இதில் எழுதியிருப்பதைப் பார்த்தீர்கள் அல்லவா?” இந்த வினாவுக்கு இரத்தினமாலை மறுமொழி கூறினாள்; “பார்த்தேன்! இந்தப் பொன் கூண்டிலிருந்து இவர் தப்ப ஆசைப்படும் வேளை பார்த்து அதன் கதவுகளை இன்னும் இறுக்கி மூடச் சொல்லி இந்த ஆணை கிடைத்திருக்கிறது.” இளையநம்பி எதுவும் பேசவில்லை. மெளனமாக அந்துவன் முகத்தையும், இரத்தினமாலையின் முகத்தையும் பார்த்தபடி நின்று கொண்டிருந்தான். “புறாக்களின் மூலமும், பறவைகளின் மூலமும் கொற்கை முதலிய தென்பாண்டி நாட்டு ஊர்களில் உள்ள நம்மவர்களுக்கு இச்செய்தியை உடன் அனுப்ப வேண்டும். சிறுசிறு ஓலை நறுக்கில் இரகசிய எழுத்துக்கள் மூலம் எழுதி, பழகிய புறாக்களின் கால்களிலும் பழகிய பறவைகளின் கால்களிலும் கட்டி அனுப்ப வேண்டும். இப்போது நான் விரைந்து திரும்ப வேண்டும். இல்லையானால் என்னோடு வந்து திருமருத முன் துறையிலே காத்திருக்கும் மற்ற யானைப் பாகர்களும், ஊழியர்களும் என்மேல் ஐயப்படுவார்கள். மேல் பாண்டி நாட்டுக்கும் கீழ் பாண்டி நாட்டுக்கும்புதிய நல்லடையாளத்தை நான் அனுப்பிவிடுவேன். வட பாண்டிநாட்டுக்குத் திருமோகூர்க்கொல்லன் மூலமாகப் பரவி விடும் என்று பெரியவரே எழுதியிருக்கிறார். தென்பாண்டி நாட்டுக்குச் செய்தி அனுப்பும் பொறுப்பை இந்த மாளிகை ஏற்றுக் கொண்டால் நல்லது” என்றான் அந்துவன். “இந்த மாளிகையில் ஏழு புறாக்கள் இருந்தன. அதில் ஒரு புறா சென்ற திங்களில் எங்கோ சென்று திரும்பும் போது பருந்துக்கு இரையாகிவிட்டது. ஆறு புறாக்கள் இருக்கின்றன. ஆறு இடங்களுக்குக் கரந்தெழுத்தில் ஓலைத் துண்டுகளை அனுப்பமுடியும்” என்று இரத்தினமாலையும் அதற்கு இணங்கிய பின், அவளிடமும் இளைய நம்பியிடமும் சொல்லி விடைபெற்றுக் கொண்டு, விரைவாகத் திரும்பி நிலவறையில் இறங்கிச் சென்றான் அந்துவன். |