10 சிவவடிவேலு. ஆச்சியும் தாணுமாகப் பயணம் புறப்பட வேண்டும் என்று வந்தபோது ஆடிட்டருக்கு உடனே அந்த ஜோதிட கலாரத்தினம் கடுக்கையூர் கண்ணபிரானைச் சந்தித்து கனகாபிஷேகம் செய்துவிட வேண்டும் போலிருந்தது. கோல்டு கண்ட்ரோல் ஆக்ட் - தங்க விலை ஏற்றம் எல்லாம் தடுத்திரா விட்டால் அதைச் செய்தே இருப்பார். “தனியாப் போகப்படாதாம்! தம்பதி சமேதராப் போகணும்னு ஜோசியர் சொல்றாரு.” “பலே! ஹனி மூன் மூன் - அதாவது ஸெகண்ட் ‘ஹனி மூன்’ மாதிரிப் போயிட்டு வாங்க....” “எனக்கு மனசே இல்லே! ஆனா எதையுமே வற்புறுத்தாத ஜோசியர் இதை வற்புறுத்தறாரு. இங்கே என்ன டான்ன திருப்பதி மொட்டை மாதிரி எல்லாமே பாதியிலே நிக்கிது. இந்தப் பிஸினஸ் வையத்தியரை வேறு வரவழைச் சிட்டோம். ஆனா ஜோசியர் நான் திரும்பி வரப்போ எல்லாமே அமோகமா இருக்கும்கிறாரு.” “ஒண்ணும் கவலைப் படாதீங்க; இந்தக் குப்தாவை நான் பார்த்துக்கிறேன். நீங்க திரும்பி வரப்போ ஓட்டல் பார்கவி புதுச இருக்கும். அபார லாபத்திலே நடக்கும்.” “அதுதான் எப்டீன்னு புரியலே. எள் புள்ளைங்க ரெண்டுமே தறுதலை, ஆச்சி என்கூட வந்துடுது. நீங்களும் பார்கவியுமாய்ப் பார்த்து எதினாச்சும் பண்ணினாத்தான் உண்டு.” “ஓட்டல், மத்ததுலே ஏதாவது சேஞ்சேஸ் பண்ணணும்னு உங்க கையெழுத்தைத் தேடி அலையணும், அதுனால் பார்கவி பேருக்குப் ‘பவர் ஆஃப் அட்டர்னி’ குடுத்துட்டுப் போயிடுங்க! நாங்க அவசியமானதைப் பண்ணிக்கிறோம்.” “பார்கவிக்குக் குடுக்கலாமா? அல்லது கரும்பாயிரம் பயல் விசுவாசமானவன், மானேஜர்ங்கிற முறையிலே அவனுக்கு டெம்பரவரியாப் பவர் குடுத்து எழுதித் தந்திட்டுப் போகட்டுமா?” “அதெல்லாம் வேண்டாங்க! ஆயிரமிருந்தாலும், உங்க பொண்ணு பேரிலேயே எழுதிக் குடுத்திட்டுப் போறதுதான் நல்லது. அப்படியே செய்யுங்க.” “எனக்கு ஒண்ணும் தெரியாது. நீங்களே அதெல்லாம் எப்படி எப்படிப் பண்ணனுமோ அப்படிப் பண்ணிடுங்க. புறப்படறது உறுதியானதும் கையெழுத்துப் போட்டுக் குடுத்துடறேன்.” ஆடிட்டர் அனந்துக்குத் தன் செவிகளையே நம்ப முடியவில்லை. எதற்கும் ஆயிரம் யோசனைகள் பண்ணி இரண்டாயிரம் முறைகள் தயங்கக் கூடிய சிவவடிவேலுவா இப்படிச் சொல்கிறார் என்பதை நம்பவே முடியாமல் இருந்தது. ஜோசியர், என்ன சொக்குப் பொடி போட்டு மயக்கி அவரைச் சம்மதிக்க வைத்தார் என்று மர்மமாயிருந்தது. ஒரு பைசா செலவுக்கு முன் இருநூறு முறைகள் யோசித்துத் தயங்கும் கஞ்ச மகாப் பிரபுவை எப்படி இந்த மாதிரித் துணிய வைத்தார் என்பது பெரிய ஆச்சரியமாயிருந்தது, அவரால் நம்பவே முடியவில்லை.
பத்து வருஷங்களாகத் தான் திரும்பத் திரும்ப வற்புறுத்தியும் வெளியே கிளம்ப மறுத்த ஒரு நாள்பட்ட பழைய கிணற்றுத் தவளையை இவர் எப்படிச் சரிப்படுத்தி வெளியே கிளப்பினார் என்று வியந்தார் ஆடிட்டர். ஜோசியரின் சாதுரியத்தைக் கொண்டாடினார்.
இதைக் குப்தாவிடம் தெரிவித்தபோது அவன் உடனே ரூம்பாயைக் கூப்பிட்டு, எக்லேர் சாக்லேட் வாங்கிவரச் செய்து ஆடிட்டர், தன் மனைவி சுஷ்மா, உடனிருந்த பார்கவி, குமரேசன் எல்லோருக்குமே வழங்கினான். “ஆபரேஷன் நியூ பார்கவிக்கு முக்கியமான இடைஞ்சல் கிளியராகிவிட்டது. நாம் முதலில் நினைத்ததுபோல் சிவவடிவேலு கப்பலில் போகமாட்டார் போலிருக்கிறது. அதனால் ஒரு வருஷமோ பத்து மாசமோ அவகாசம் கிடைக்காது. அங்கங்கே அதிக நாட்கள் தங்கச் செய்து அவரது பிரயாண ஷெட்யூலைத் தயாரித்தால்கூட அட்லாண்டிக் ரூட்டில் கிளம்பி மறுபடி ஹவாய், ஹோனலுலு, ஜப்பான், ஹாங்காங். பாங்காக், ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, மலேஷியா, சிங்கப்பூர் வழியாகப் பசிபிக் ரூட்டில் திரும்ப ஆறு மாதத்துக்குள்தான் ஆகும்! அதுக்கு மேலே இழுக்க முடியாது.” “ஆறு மாதம் போதும்! அதுக்குள்ளே இந்த உலகத்தையே மாத்திப்பிடலாம்,” என்றான் குப்தா. “உலகத்தை மாத்திடறது சுலபம்! ஆன எங்கப்பா பண்ணியிருக்கிற குழப்பங்களை மாத்தறது உலகத்தை மாத் தறதைவிடக் கஷ்டம்,” என்றான் குமரேசன். அவனால் இன்னும் முழுசாக நம்ப முடியவில்லை. “அட நீ சும்மா இருப்பா! ஒரே பெஸிமிஸ்டா இருக்கியே? உங்கப்பாவே மாறிக்கிட்டிருக்காரு. அவரே மாறுகிறப்போ அவர் பண்ணியிருக்கிற ஏற்பாடுகளை மாத்தறதா கஷ்டம்? நம்ம முயற்சியிலே, மலையையே புரட்டியாச்சு. அதாவது உங்கப்பாவையே ஆச்சியோடு ஃபாரின் ட்ரிப் போகத் துணியற அளவு மாத்திப் பிட்டோம். இனிமே மத்ததை மாத்தறது சுலபம்தான்.” “ஆச்சியோட போறாரா? மழைதான் கொட்டப் போவுது. எச்சிக் கையாலே காக்காய் ஓட்ட மாட்டாரு. நூறு ரூபாய் முழு நோட்டா இருந்தா அதை மாத்தினால் எங்கே செலவழிஞ்சு போகுமோன்னு மாத்தமாட்டாரு. பத்து ரூபாய், ஐந்து ரூபாய் - அவ்வளவு ஏன் முழு ஒரு ரூபாய் நோட்டைக் கூட மாத்தினாச் செலவழிஞ்சிடுமேன்னு பயந்தே மாத்தமாட்டாரு. ஒரு ரூபாய்க்குக் கீழே சில்லறையா இருக்கிறதைத் தான் துணிஞ்சு செலவழிப்பாரு. அவரு மதுரைக்குப் போனால்தான் கான்சாமேட்டுத் தெருக் கையேந்தி பவனுக்குப் போற இரகசியமே இதுதான்! அந்த ஒரு தண்ணீர்ப் பந்தல்லேதான் ரெண்டு இட்லி ஒரு வடை ஒரு சுக்குக் காபி - மொத்த பில் தொண்ணுாற்றைந்து காசு வரும்! அப்படிப்பட்டி மனுஷன் இப்போ தானும் ஆச்சியுமா ஃபாரின் டிரிப் போகப் போறார்னால் பெரிய விஷயம். ஆஃப் சீஸன் கன்செஷன் ஏர் டிக்கெட்லே போனால் கூட ரெண்டு டிக்கெட் எழுபதினாயிரம் வரை ஆகும். அப்புறம் செலவுக்கு ஃபாரின் எக்சேஞ்ச் வேற லட்ச ரூபாய்க்கு மேலே ஆயிரும். ஒரு ரூபாயை மாத்தி அதைச் சில்லறையாக்கி விடத் தயங்கற அப்பா இப்போ ஒரு லட்சத்தை மாத்தப் பேறார்! என்னமோ புரட்சிதான் பண்றீங்க ஆடிட்டர் சார்!” “கிரெடிட் கோஸ் டு கடுக்கையூர்! எல்லாம் அவர் பண்ணின மாயம்தான் அப்பா!” என்றார் ஆடிட்டர். குமரேசன் ஆடிட்டரிடமும் பிஸினஸ் டாக்டரிடமும் மகிழ்ச்சியோடு கை குலுக்கினான். இப்ப அக்டோபர் மாசம் சார்! உலக வரலாற்றிலே எது எதையோ அக்டோபர் புரட்சி, நவம்பர் புரட்சின்னெல்லாம் சொல்றாங்க. உண்மையிலே இதுதான் சார் குருபுரத்தைப் பொறுத்தவரை அக்டோபர்ப் புரட்சி. அடுத்த மாசம் அதாவது நவம்பர் ஒண்ணாந் தேதி எங்கப்பா ஃபாரின் புறப்படறாரே அதுதான் நவம்பர்ப் புரட்சி!” “குமரேசன், சரியான புரட்சிப் பேர்வழிதான்! எப்பவும் புரட்சியிலேயே இருக்கான் பாருங்க,” என்று சொல்லிச் சிரித்தார் ஆடிட்டர். “ஆகா என்று எழுந்தது பார் யுகப் புரட்சி! மாகாளி பார்கவியில் கடைக்கண் வைத்தாள்,” என்று பட்டி மன்றங் களில் பேசுவது போல் பாரதியார் பாட்டைக் கொஞ்சம் மாற்றிப் பாடிக் காட்டினான் குமரேசன். “குமரேசா! உன் டில்லி அண்ணனுக்கு உடனே நான் சொன்னதாக ஒரு கடிதம் எழுது. அவனைப் பதினைந்து நாள் லிவு போட்டுவிட்டு மனைவியோடு இங்கே புறப்பட்டு வரச் சொல்லு.” “அவசரப்பட்டு அண்ணனை வரவழைத்தால் ஆபத்து சார்! அண்ணனைப் பார்த்ததுமே அப்பாவுக்கு எரிச்சல் கிளம்பி ஃபாரின் டிரிப்பையே கான்சல் பண்ணிடப் போறார்.” “நெவர்: எக்காரணத்தினாலும் இந்த டிரிப் கான்ஸல் ஆகாது. ஜோசியர் ஸ்ட்ராங்கா என்னமோ பண்ணியிருக்கார்.” “ஒரு புரட்சி ஜோசியராலே நிகழ்ந்திருக்கிறது என்றால் அது முதல் தடவையாக இப்போதுதான் உலக வரலாற்றிலேயே இந்தக் குருபுரத்திலே நடந்திருக்கிறது சார்!” “அட, நீ என்னப்பா இன்னமும் பட்டிமன்றத்திலேயும் கருத்தரங்கத்திலேயும் பேசற மாதிரியே உலக வரலாறு, புரட்சி அது இதுன்னு என்னென்னமோ பேசிட்டிருக்கே? உங்கண்ணனை வரவழைச்சு உருப்படியாச் சொத்துக்களைக் காப்பாத்தியாகணும். இல்லாட்டி சரக்கு மாஸ்டரும், கரும்பாயிரமுமே உங்களை சைபராக்கிப்பிடுவாங்க...” “அதெல்லாம் நடக்காது சார்! கசக்கிப் பிழிகிற வேகத்திலே கரும்பாயிரத்தைத் துரும்பாயிரமாப் பீஸ் பீஸ் ஆக்கிப் போட்டுருவேன்.” “கடைசி நிமிஷத்திலே பணம் அதிகம் செலவாகும் அது இதுன்னு சாக்குப் போக்குச் சொல்லி நிறுத்திடப் போறாரு! நீங்களே டிராவல் அரேன்ஜ்மெண்ட்ஸைப் பண்ணுங்க. நீங்களே டிராவல் ஏஜென்ட் மூலமா பாஸ்போர்ட் ஏற்பாடும் கவனிச்சுக்குங்க” என்று குப்தா மீண்டும் ஆடிட்டரை எச்சரித்தான். ஆடிட்டர் மறுநாள் சிவவடிவேலு, திருமதி சிவவடிவேலுவிடம் உரிய பாரங்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டு பாஸ்போர்ட் விசா வகையறாவுக்காக ஒரு டஜன் போட்டோக்களையும் பிரிண்ட் போட்டு எடுத்துக் கொண்டு சென்னை புறப்பட்டார். சிவவடிவேலு புறப்படுகிற தினத்தன்று எல்லா முக்கிய தினசரிகளிலும், ‘உலக நாடுகளில் ஓட்டல் தொழிலின் நுணுக்கங்களை அறிந்துவர ஓட்டல் பார்கவி அதிபர் துணைவியுடன் பயணம்’ என்று சிவவடிவேலு தம்பதியர் படத்துடன் விளம்பரம் வரவேண்டும் என்று ஆடிட்டர் தயாரித்து எடுத்துக் கொண்டார். அந்த விளம்பர டிராஃப்ட்டைப் படித்துப் புன்னகை புரிந்த குமரேசன், “உலக நாடுகளிலே அங்கங்கே உருப்படியா நடக்கிற ஓட்டல்களைக் கெடுக்காமல் எங்கப்பா திரும்பி வந்தாலே புண்ணியம் சார்” என்றான். “ரொம்பத்தான் கிண்டல் பண்ணாதே! விளம்பரம்னு கொடுக்கறப்ப வேற எப்படிப்பா குடுக்கிறது?” என்று ஆடிட்டர் அவனைக் கடித்து கொண்டார். எதற்கும் சென்னை புறப்படு முன்னால் இவ்வளவு தூரம் காரியத்தை இசைவாக்கிக் கொடுத்த ஜோசியரை நேரில் பார்த்துவிட்டு வந்துவிடலாமே என்று மேலும் ஒரு முழுப் பச்சை நோட்டுடன் ஜோசியரைப் பார்க்கக் கிளம்பினார் ஆடிட்டர் அனந்த். “என்னய்யா மந்திரம் போட்டீர்? மனுஷன் பொட்டிப் பாம்பாய் அடங்கிப் போய்த் தானே பரம சாதுவா எங்கிட்டத் தேடி வந்து, ‘நீங்க பல தடவை சொன்ன யோசனையை இப்ப நான் ஏத்துக்கிறேன். நானும் ஆச்சியும் ஃபாரின் ட்ரிப் போறோம். அரேன்ஜ் பண்ணிடுங்க’ன்னு கூலாச் சொல்லிட்டாரே? எப்பிடி ஐயா இது முடிஞ்சுது?” என்று ஜோசியரைப் பார்த்ததுமே ஆவல் தாங்காமல் கேட்டார் ஆடிட்டர். “அது பரம ரகசியம் வேண்டாம். விட்டுடுங்க!” என்று நழுவினார் ஜோசியர். ஆடிட்டரின் ஆவலை இது அதிக மாக்கியது. |