11 “பரவாயில்லை! நான் வேறு யாரிட்டவும் சொல்ல மாட்டேன். எனக்குத் தெரியாத எந்த ரகசியமும் மிஸ்டர் சிவவடிவேலு குடும்பத்திலே கிடையாது. நான் வேறு யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று சத்தியம் கூடப் பண்ணத் தயாராயிருக்கேன்,” என்று கூறியபடியே சட்டைப் பையிலிருந்து நூறு ரூபாய் நோட்டை உருவினார் ஆடிட்டர். “உங்க வேண்டுகோளுக்காகச் சில நல்லதை எதிர்பார்த்து ஒரு பொய் சொல்லியிருக்கேன். வேற யாரிடமும் சொல்றதில்லேன்னு சத்தியம் பண்ணித்தான் சிவவடிவேலுவே இதைத் தெரிஞ்சுக்கிட்டிருக்கார்.” “நானும் அதே மாதிரித் தெரிஞ்சுக்கறேன்.” “நீங்க தெரிஞ்சுக்கிறது தப்பில்லே. சொல்லப்போனா நீங்க விரும்புறதாலேதான் நானே இதைப் பண்ணியிருக்கேன்” என்று இழுத்தபடியே போய் வாயிற் கதவைத் தாழிட்டுவிட்டு வந்தார் ஜோசியர். பின்பு குரலை மெல்லத் தணித்து ரகசியம் பேசுவதற்கேற்ற லோ கியரில் போட்டு. “நவம்பர் முதல் தேதியிலிருந்து ஒரு ஆறு மாச காலம் நீங்க உங்க பார்யா ளோட கடல் கடந்து தூர தேசத்திலே பிரயாணம் பண்றது நல்லது. ஏன்னா அந்தக் கால கட்டத்திலே சொந்த க்ஷேத்திரம் - சொந்த தேசம் எங்கே நீங்க இருந்தாலும் ‘அபிமிருத்யு பயம்’ உங்களுக்கு நிச்சயமா இருக்கு! தூர தேசம் போய்ப் பரிகாரமா அங்கே பிரயாணம் பண்ணினாத் தான் தப்பிக்கலாம். நிச்சயமா இதை நீங்க கேட்டே ஆகணும். தொண்ணுறு வயசு வரை தீர்க்காயுசா இருக்கப் போறீங்க ஆனா இந்த அபமிருத்யு கண்டத்தை மட்டும் நீங்க தாண்டிட்டாக் கவலை இல்லேன்னேன். சிவவடிவேலு ஆடிப் போய் விட்டார். நல்லாப் பார்த்துச் சொல்லுங்கன்னு வற்புறுத்தினார். ‘நல்லாப் பார்த்துத்தான் சொல்றேன். உங்க உப்பைத் தின்னு வளர்ந்திருக்கிறேன். நீங்க தீர்க்காயுசா இருந்தால் தான் நான் க்ஷேமமா இருக்க முடியும்’னு என் கண்ணைத் துடைத்துக் கொண்டேன். சிவவடிவேலு மறுபேச்சுப் பேசாமல் ஒப்புக் கொண்டுவிட்டார்” என்றார் ஜோசியர். சந்தேகத்தைத் தெளிவு செய்துகொள்ளும் பொருட்டு “அபமிருத்யு பயம்னா என்ன ஜோசியரே?” என்பதாகக் கேட்டார் ஆடிட்டர். “அதாவது துர்மரண பயம்! சிவவடிவேலு புரிந்து கொண்டு விட்டார். அவருக்கு ஜோஸ்யத்திலே அபார நம்பிக்கை. நில உச்சவரம்பு காரணமாகப் பூமியை வித்து ஓட்டல் கட்டலாம்னு நீங்க யோசனை சொல்லி விட்டாலும் அப்பவே எங்கிட்ட வந்துதான் ‘சரிப்படுமா’ன்னு பிரசினம் கேட்டார். ‘முதல்லே சிரமப் பட்டாலும் பின்னலே போகப் போக இந்த ஓட்டல் தங்கச் சுரங்கமாப் பணத்தை அள்ளித் தரும்’னு பச்சைக் கொடி நான்தான் காமிச்சேன் அப்போ.” “சரி, அதுக்கும் சேர்த்து வச்சுக்கும்” என்று மேலும் ஒரு நூறு ரூபாயை எடுத்துக் கொடுத்தார் ஆடிட்டர்.
“நீங்க க்ஷேமமா இருக்கணும்.”
“இனிமேல்தான் உம்ம ஆசீர்வாதம் பலிக்கணும். இது வரைக் கஷ்டம்தான்” என்று சிரித்தார் ஆடிட்டர். “தயவு செய்து இந்த விஷயம் நமக்குள்ளே இருக்கட்டும். ‘அபமிருத்யு பயம்’னு சொல்றதுக்கு எனக்கே பிடிக்கலை. என்னமோ போல இருந்தது. மனுஷன் கருமி கஞ்சன், இது மாதிரிச் சொல்லிப் பயமுறுத்தினாலொழியக் கிளம்ப மாட்டார்னு பட்டது. சொல்லிட்டேன். எதுக்குமே பயப்படாத சிவவடிவேலு, மரணம்னு சொன்னதும் அப்படியே வெலவெலத்துப் போயி உடனே பிரயாணத்துக்குச் சம்மதிச்சுட்டார். உங்க வேண்டுகோளைத் தட்ட முடியாமல் இந்தப் பாபத்தைப் பண்ணும்படி ஆயிட்டது மிஸ்டர் அனந்த்.” “இதிலே ஒரு பாபமும் இல்லை. ஜோசியரே! நெருப்புன்னு சொன்னாலே வாய் வெந்தா போயிடப் போறது? சிவவடிவேலு தீர்க்காயுசா இருப்பார். அவரோட வாரிசுகளும் தீர்க்காயுசா இருக்க நாம் பாடுபடறோம். அவ்வளவுதான்.” ஜோசியருக்கு ரகசியத்தைப் பாதுகாப்பதாக மீண்டும் வாக்களித்த பின் அவரிடம் விடை பெற்றார் அனந்ந். அதன் பின் ஏற்பாடுகள் ஜெட் வேகத்தில் நடந்தன. பார்கவி பேருக்குப் பவர் பத்திரம் முதல் தேவையான கையெழுத்துக்கள் பெறப்பட்டன. வேஷ்டி முழுக்கைச் சட்டை தவிர வேறு உடுப்புக்களே அணிந்து பழக்கப்படாத சிவவடிவேலுவுக்கு ஒரு சூட் கோட் தைக்க அளவு எடுக்கப்பட்டது. ஆறுமாத காலம் பயணம் என்பதால் இரண்டு ஸெட் சூட்டும் கோட்டும் தைத்துக் கொள்ளச் சொல்லிக் குப்தா யோசனை சொன்னான். தையல் கூலி உள்பட முதல் தரமான உல்லனில் இரண்டு செட் சூட் கோட் தைக்க மூவாயிரம் முதல் மூவாயிரத்து ஐந்நூறு வரை செலவாகும் என்றவுடன் சிவவடிவேலு மறுபடி தொட்டாற் சுருங்கி ஆகிப் பின்வாங்கினார். “ஒரு நாள் கூத்துக்குத் தலை சிரைத்த கதையாயில்ல இருக்குடி! ஆறு மாச நாடகத்துக்காக மூவாயிரம் நாலாயிர ரூபாய்க்குக் குழாய் தைக்கணுமா? ஒரு புண்ணாக்கும் வேணாம்; நான் ரெண்டு கம்பளிப் போர்வையை எடுத்துகிட்டுப் போயிட்டு வர்றேன்” என்றார் அவர். இதைக்கேட்டு ஆடிட்டருக்கு அழுவதா சிரிப்பதா என்று ஆகிவிட்டது. “உங்க ஸ்டேட்டஸ்க்கு அப்படி எல்லாம் பண்ணக் கூடாது. கம்பளியும் வேஷ்டியுமாப் போனிங்கன்னாத் தேயிலைத் தோட்டத்துக் கங்காணி மாதிரி இருக்கும். அதெல்லாம் கூடாது. நீட்டா கோட்டும் சூட்டும் போட்டு டை கட்டி விட்டு நான் மேக்அப் பண்ணி அனுப்பறேன். அசல் குருபுரம் சமஸ்தானத்துக் குட்டி சமஸ்தானாதிபதி மாதிரி நீங்க போய் இறங்கணும்! அந்தக் குளிர்லே வேஷ்டி சட்டை எல்லாம் தாங்காது. உங்க வயசையும் யோசனை பண்ணிப் பாருங்க” என்று குப்தா அவரைக் கெஞ்சினான். ஆடிட்ரும் வற்புறுத்தினார். “சரி! தைச்சுத் தொலைக்கலாம்” என்று வேண்டா வெறுப்பாகத்தான் டைலருக்கு அளவு கொடுத்தார் சிவவடிவேலு. இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் அவரை மன்றாடி ஜாக்கி போட்டுத் தூக்கி நிறுத்தித் தயார்ப்படுத்த வேண்டியிருந்தது. “இந்தாங்க ஆடிட்டர் சார்! கார்டமம் எக்ஸ்போர்ட் மார்க்கெட் விலை டல்லாயிருக்கிறாப்புலத் தெரியுது. பார்கவி பாட்டுக்கு அவசரப்பட்டுடப் போவுது. பிரைஸ் தூக்கலா இருக்கிறப்ப கோடெளன்லே இருக்கிற ஏலக்காயை வெளியில விடுங்க. கவனம்’’ என்று ஆடிட்டரை எச்சரித்தார். கடைசி நிமிஷம் வரை இப்படித் தொணதொணப்பு நீடித்தது. “பிஸினஸ் லைத்தியரு என்ன சீர்த்திருத்தம் வேணும்னாப் பண்ணட்டும். கரும்பாயிரத்தைக் கலந்து பேசிப் பண்ணுங்க. ரொம்ப நன்றி விசுவாசமுள்ளவன். அவன் எனக்குத் துரோகம் நினைக்க மாட்டான். அவன் இல்லாமே ஓட்டல் பார்கவி இல்லே,” என்றார். அவர்களுக்குப் பகீரென்றது. வலது காதில் வில்வப் பூ, கழுத்தில் ருத்ராட்சம், முகத்தில் ஒரு சந்தனக் கீற்று, அதன் மேல் விபூதி, அதற்கும் மேல் ரெட்டைக் குங்குமப் பொட்டு, பருத்த சரீரம் - இத்யாதி லட்சணங்களுடன் கரும்பாயிரத்தை நினைத்தபோதே ஒரு நவீன ஓட்டல் மானேஜராகத் தெரியவில்லை. குப்தாவுக்கு ஒரே எரிச்சல். கிராமக் கணக்குப் பிள்ளையின் தோற்றம் அல்லது மிராசுதார் வீட்டுக் காரியஸ்தரின் அமைப்புள்ள ஒரு ருத்ராட்சப் பூனையை எப்படி ஒரு மாடர்ன் ஓட்டலில் நிர்வாகியாக அனுமதிப்பது? சிவவடிவேலு கிளம்புகிற வரை அவர்கள் மூச்சு விடவில்லை. எல்லாரும் சிவவடிவேலு தம்பதிகளை மதுரை விமான நிலையத்திலேயே வழியனுப்பி வைத்தார்கள். ஆடிட்டர் அனந்த் மட்டும் பம்பாய் வரை போய்விட்டு வந்தார். சிவவடிவேலு தம்பதிகள் புறப்பட்டுச் சென்ற மறுதினம் டில்லியிலிருந்து அவருடைய மூத்த மகன் தண்டபாணியும் அவன் மனைவியும் குருபுரம் வந்து சேர்ந்தார்கள். அதற்கு மறுநாள் பார்க்கவியின் மெயின் கேட் இழுத்துப் பூட்டப்பட்டுப் பார்கவியின் கையெழுத்துடன் குளோஸர் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. முதல் நாள் இரவு எல்லாருக்கும் சட்டிப்படி கணக்குத் தீர்க்கப்பட்டது, கரும்பாயிரமும், சரக்கு மாஸ்டரும் மட்டும் கொஞ்சம் முரண்டினார்கள். குப்தாவும், குமரேசனும் அவர்களை அழைத்து, “நீங்கள் ரெண்டு பேரும் இங்கே செய்திருக்கிற கையாடல்கள், ஊழல்கள் பற்றி ஆதாரபூர்வமா நிரூபிக்க முடியும். மரியாதையா ஒதுங்கிக்குங்க! இல்லாட்டி கோர்ட்டிலே சந்திக்க வேண்டியிருக்கும்” என்று மிரட்டிய பின்பே இருவரும் வழிக்கு வந்தனர். ஆபரேஷன் ‘நியூ பார்கவி’ ஸ்மூத் ஆகத் தொடங்கியது. எல்லா விவரங்களையும் விவரித்து மூத்தவன் தண்டபாணியைக் கன்வின்ஸ் செய்ததும் அவன் மேலும் ஆறு மாத லீவுக்கு அப்ளை பண்ணினான். இவர்களோடு தங்கி ஒத்துழைக்க இணங்கினான். குப்தா பம்பாயிலிருந்தும் டில்லியிலிருந்தும் இண்டீரியர் டெகரேஷனுக்குச் சிலரை வரவழைத்தான். இதற்கிடையே சிம்லாவிலிருந்து குப்தாவின் மாமனாருக்கு உடல்நலமில்லை என்று தந்தி வரவே மிஸஸ் குப்தா அங்கு விரைய வேண்டி நேர்ந்தது. “ஐயையோ அக்கா! நீங்க இல்லாமே இங்கே எனக்குப் போரடிக்கும். நானும் உங்க கூட சிம்லாவுக்கு வரட்டுமா?” என்று முரண்டு பிடிக்கும் சிறுகுழந்தைபோல் சுஷ்மாவைக் கெஞ்சினாள் பார்கவி. “எனக்கு ரெட்டைச் சந்தோஷம் பார்கவி! நீ உங்க அண்ணன்கள் கிட்டே ஒரு வார்த்தை கேட்டுக்கோ. அப்புறம் ரெண்டு பேருக்குமா பிளேன் டிக்கெட் எடுத்துடலாம். சண்டிகர் வரை பிளேன்லே போயிட்டோம்னா, அங்கே வந்து கூட்டிக் கொண்டு போக அஜீத் கார் அனுப்பியிருப்பான். அவனுக்கு டெலக்ஸ் அனுப்பிடலாம். ஆப்பிள் தோட்டம் பழங்களாய்க் குலுங்கும் சீசன் இது. அதெல்லாம் சுத்திப் பார்க்கலாம் இப்போ...” என்றாள் சுஷ்மா. குப்தாவிடம் சொல்லிப் பார்கவியின் சகோதரர்களிடம் அவளை அழைத்துப் போக அனுமதி பெறுமாறு சுஷ்மாவே ஏற்பாடு செய்தாள். பார்கவியும் இரண்டு அண்ணன்களிடமும் கேட்டாள். அவர்கள் சம்மதித்தார்கள். “இதுவரை அப்பா உன்னை அடைச்சு வைச்சுப் பாழாக்கிட்டாரு. அங்கே இங்கே போயி நாலு மனுஷாளோடப் பழகினால் தான் உலகம் புரியும்,” என்று சொல்லவே செய் தான் குமரேசன். “போயிட்டு வாம்மா! நீ மிஸஸ் குப்தாவோட போறது உங்க சொந்த அக்காவோடு போகிற மாதிரி. நீ திரும்பி வர்றப்ப இந்தப் பார்கவியும் புதுசா இருக்கும். நீயும் புதுசா ஃபிரஷ்ஷா சிம்லா ஆப்பிள் மாதிரி வரணும்” என்றார் ஆடிட்டர். ஓட்டல் பார்கவி சம்பந்தமாகச் சில செக் லீஃப்கள், ரிகார்டுகளில் கையெழுத்து வாங்கிக் கொண்டார். மறுநாள் சுஷ்மாவும் பார்கவியும் சிம்லா புறப்பட்டனர். பிஸினஸ் டாக்டர் குப்தாவும், ஆடிட்டரும், சிவவடிவேலு மகன்களும் ஓட்டல் பார்கவியை - ஓட்டல் நியூ பார்கவியாக மாற்றும் முயற்சியில் இறங்கியிருந்த சமயத்தில் வெளியேறிய கரும்பாயிரம் வகையறாக்கள் பல வதந்திகளைக் கிளப்பி விட்டனர். சேற்றை வாரி இறைத்தனர். சிவவடிவேலுவை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு ஆடிட்டர், குப்தா இருவரும் எதோ குழப்பம் பண்ணுவதாகவும், ஓட்டலை விற்கப் போவதாகவும், அசைவ ஓட்டலாக மாற்றப் போவதாகவும் பல்வேறு வதந்திகளைப் பரப்பினார்கள். குருபுரம் போன்ற ஓர் இரண்டுங் கெட்டான் ஊரில் வதந்திகள் தானகவே வளரும். அதைப் பொருட்படுத்தாமல் பார்கவி மாறுதல் பெற்றுக் கொண்டிருந்தாள். ஆபரேஷன் நியூ பார்கவிக்குப் பதினாறு லட்சம் மேற்கொண்டு முதலீடு தேவைப் பட்டது. பாங்கு ஓ.டி. லிமிட் ஏற்கனவே தாண்டியிருந்தது. கடனும் இருந்தது. சிவவடிவேலுவின் இருப்பில் அவர் வெளிநாடு போகும் செலவுக்கு எடுத்தது போக மூன்று லட்சமே இருந்தது. |