12 வேலைகளைத் தொடங்கி இருந்தாலும் பணப்பிரசின இப்போது தயங்க வைத்தது. “என்ன ஆடிட்டர் சார், வேற ஏதாவது ரிஸோர்சஸ் உண்டா?” என்றான் குப்தா. “கோடெளன்ல ஏலக்காய் இருக்கு. மார்க்கெட் நிலவரம் சரியில்லே. விலை ஏறினால் அஞ்சு அஞ்சரை லட்சத்துக்குப் போகும். பணம் ரியலைஸ் ஆக நாள் பிடிக்கும்.” “என்னோட பெர்ஸனல் சேவிங்க்ஸ் வகையில் ஒன்றரை லட்சம் இருக்கு” என்றான் மூத்தவன் தண்டபாணி. குப்தா அலுத்துக் கொண்டான். “இதெல்லாம் போதாது. எடுத்த காரியம் வேகமா முடியணும். உங்கப்பா திரும்பறதுக்குள்ள மாறுதல் பண்ணி ஓட்டல் திறந்து நடந்தாகணும்.” “பிரைவேட் லோன் ட்ரை பண்ணலாமா? உள்ளூர்லியே பார்ப்போம்,” என்றான் குமரேசன். “அது கிடைக்காதுப்பா! பில்டிங் மேலே ஏற்கெனவே கடன் இருக்கு. உங்கப்பாவும் ஊர்ல இல்லே. இந்த ஊர் பணக்காரங்க எல்லாமே பயந்தாங் கொள்ளிகள், தரமாட் டாங்க,” என்று ஆடிட்டர் அதையும் மறுத்துவிட்டார். “வெயிட் எ மினிட் எனக்கு ஒரு ஐடியாத் தோணுது. முயற்சி பண்ணிப் பார்க்கலாம். அநேகமாகப் பலிக்கும்... எதுக்கும் லெட் அஸ் டேக் எ சான்ஸ்,” என்று சிம்லாவில் தன் மைத்துனன் அஜீத்துக்கு ஒரு டெலக்ஸ் அடித்தான் குப்தா. குப்தாவின் அதிர்ஷ்டம் அவன் மனைவியும் அப்போது சிம்லாவில் இருந்ததால் அஜீத் அவளைக் கேட்டானே என்னவோ அன்று இரவே மறு டெலக்ஸில் இவன் கேட்ட பதினைந்து லட்சத்தை அரேஞ்ச் பண்ண முடியும் என்று பதில் வந்துவிட்டது. “நீங்க வெறும் பிஸினஸ் டாக்டர் மட்டுமில்லை மிஸ்டர் குப்தா. உண்மையிலேயே பரோபகாரி!” என்று ஆடிட்டரும் சிவவடிவேலுவின் பிள்ளைகளும் அவனைப் புகழ்ந்து நன்றி சொன்னார்கள். அவன் மிகவும் அடக்கமாக அவர்களுக்குப் பதில் கூறினான். “பொதுவாக நான் இந்த அளவு உரிமை எடுத்துக் கொண்டு என்னை ஈடுபடுத்திக் கொள்கிற வழக்கம் இல்லை. நோயைக் கண்டுபிடித்து ப்ரிஸ்கிரிப்ஷன் எழுதிக் கொடுத்துவிட்டு விலகிக் கொள்வேன். ஆனால் இதுவரை நான் சிகிச்சை செய்த சிக் இண்டஸ்ட்ரியிலேயே இது புதுமாதிரி யானது. இதிலே யூனிட்டை விட யூனிட்டின் உரிமையாளர் தான் நோயாளியாயிருந்தார். அதனாலே எனக்கு இது ஒரு சேலஞ்ச் ஆயிடிச்சு. ஆகவே அதிகமா இண்ட்ரெஸ்ட் எடுத்துக் கிட்டேன். நானும் என் மனைவியும் இந்தக் குடும்பத்து மேலே கொஞ்சம் அதிகப் பாசம் வச்சுட்டோம். லாபம் வர ஆரம்பிச்சதும் என் மைத்துனனோட இந்த லோனை ஒரு நியாயமான வட்டியோடத் திருப்பித் தந்துடுவீங்கன்னு நம்பறேன்.”
“ஒரு லோன் டாகுமெண்ட் வேணா ரிஜிஸ்தர் பண்ணிப்போம்.”
“வேண்டாம்! ஓரல் எக்ரிமெண்ட் போதும். நான் உங்களை நம்பறேன். ஜெண்டில்மேன் எக்ரிமெண்ட்டை நம்பற மாதிரி நான் பத்திரத்தைக் கூட நம்பறதில்லே...” குப்தா ரொம்பப் பெரிய மனிதனாக அவர்களுக்குத் தோற்றமளித்தான். பிராப்ளத்தைக் கண்டுபிடித்து, சிகிச்சை முறையையும் மருந்துகளையும் கூறிவிட்டுத் தன் ஃபீஸுக்காகக் கையை நீட்டும் பிஸினஸ் டாக்டராக மட்டும் அவன் இல்லை. அவனுக்கு மனிதாபிமானம் இருப்பது தெரிந்தது. புதிய திட்டத்தை நிறைவேற்ற ஒரு கால எல்லையை அதிகபட்ச லிமிட் என்று அறுபது நாள் போட்டுக் கொடுத்தான் குப்தா. அவ்வளவு நாட்கள் தான் குருபுரத்திலேயே இருக்க முடியாது என்றும் தனக்கு வேறு நோய்வாய்ப்பட்ட தொழில்களிலிருந்தும் அவசர அழைப்பு இருக்கிறது என்றும் இரண்டு மூன்று முறை பம்பாய், அஹமதாபாத், கான்பூர் என்று நடுநடுவே போய்விட்டு வந்தான் குப்தா. மைத்துனரிடமிருந்து பணத்தை வரவழைத்துக் கொடுத்து மாறுதல்கள் வளர்ச்சிக்கான ப்ளு பிரிண்ட்டையும் கையில் தந்து டைம் ஷெட்யூலையும் அளித்து ஆடிட்டர், சிவவடிவேலுவின் மகன்களை வேலையில் ஈடுபடுத்தினான் குப்தா. இதன் நடுவே திடீரென்று ஒரு நாள் சென்னையிலுள்ள மாதவி டூர்ஸ் அண்ட் டிராவல்ஸிலிருந்து ஆடிட்டர் அனந்துக்கு ஒரு ஃபோன் வந்தது. சிவவடிவேலு தம்பதிகள் செளக்கியமாக இருப்பதாகத் தகவல் சொல்லிவிட்டு “யாரோ கரும்பாயிரம்னு ஒரு ஆள் உங்க ஊரிலே இருந்து வந்து ஒரு லெட்டரைக் கொடுத்து, இது ரொம்ப முக்கியம். இதை உடனே முதலாளிக்கு அனுப்புங்கன்னு வற்புறுத்தறாரு என்ன செய்யறது? இதை அனுப்பலாம் என்றால் நியூயார்க் அல்லது லண்டனில் எங்களுக்கு ஒரு காண்டாக்ட் அட்ரஸ் இருக்கு. அங்கே அனுப்பி மிஸ்டர் சிவவடிவேலுவிடம் கொடுக்கச் சொல்ல முடியும்! என்ன சொல்றீங்களோ அப்படியே செய்யலாம்,” என்றார்கள். “அதெல்லாம் அவருக்கு அனுப்பவேண்டாம். என்னைத் தவிர யார் எது சொன்னலும் நீங்கள் கேட்க வேண்டுமென்ப தில்லை” என்று ஆடிட்டர் மாதவி டூர்ஸ் ஆட்களுக்குக் கண்டிப்பாகப் பதில் சொல்லிவிட்டார். பதவி பறிக்கப்பட்ட கரும்பாயிரத்தின் சூழ்ச்சி அவர்களுக்குப் புரிந்தது. கடிதத்தை வாங்கி வைத்துக்கொண்டு சிவவடிவேலுவுக்கு அனுப்புவதாகச் சொல்லி விடும்படியும் அப்புறம் அதை ரகசியமாகத் தனக்கு அனுப்பி விடும்படியும் டிராவல் ஏஜன்ஸிக்குத் தகவல் சொல்லிச் சமாளித்தார் அனந்த். ஆடிட்டர் மூலம் நிறையப் பிரயாண ஏற்பாடுகள் நடப்பதால் மாதவி டிராவல்ஸ் அவருக்குக் கட்டுப்பட்ட ஒரு நிறுவனமாக இருந்தது. அதனால்தான் கரும்பாயிரம் கடிதத்தோடு போய் அணுகியபோது கூட அதை அப்படியே சிவவடிவேலுவுக்கு அனுப்பி விடாமல் ஆடிட்டரைக் கலந்து பேசினார்கள். இரண்டு மூன்று நாள் கழித்துப் பாரிஸிலிருந்து சிவ வடிவேலுவின் கையெழுத்தோடு பிக்சர் போஸ்ட் கார்டுகள் ஆடிட்டர், குப்தா, பார்கவி ஆகியவர்கள் பெயருக்கு வந்தன. ஆடிட்டருடைய கார்டிலேயே ஒரு வரி ‘கரும்பாயிரத்துக்கு அன்பைச் சொல்லவும்’ என்று இருந்தது. காசிக்குப் போயும் கர்மம் தீரவில்லை என்பதுபோல் பாரிசில் போயும் அவர் கரும்பாயிரத்தை மறக்கவில்லை என்று தோன்றியது. சிவவடி வேலு சூட்டுக் கோட்டோடு ஆச்சியோடும் மற்றச் சுற்றுலாப் பயணிகளுடனும் எப்படியெப்படி வளைய வருவார் என்று கற்பனையில் மூழ்கினார் ஆடிட்டர். ஓர் ஆடிட்டோரியம், முழுக்க முழுக்கப் பெண்களே செர்வ் பண்ணும் ‘சுபமங்களம்’ என்கிற ஏ.சி. ரெஸ்டாரெண்ட். மெருகேறிய புது அறைகள், அதில் நான்கு ஏ.சி. சூட், தனி, வாசலுடன் ஒரு ஐஸ்கிரீம் பார்லர். எல்லாம் டெகரேஷன் முடிந்து தயாராகிவிட்டன. குப்தா இம்முறை குமரேசனையும் தண்டபாணியையும் முன்னெச்சரிக்கை செய்தார்; “தண்டபாணி பர்ச்சேஸ். ஸ்டோர் ரூம். கேஷ் இன்ஃப்ளோ இது மூணுக்கும் நீங்க பொறுப்பு. லாட்ஜிங் முழுக்கவும் அவுட்டோர் கேட்டரிங்கும் குமரேசன் பொறுப்பில இருக்கும்,” என்றார். அந்த வாரம் குப்தாவும் குமரேசனும் காரில் கோட்டயம் புறப்பட்டார்கள். கேட்டரிங் பயிற்சி பெறும் பெண்களில் சிலரைப் பார்கவிக்குத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. முதலில் நேரே கொச்சிக்குப் போய்த் தங்கி, அதே இன்ஸ்டிடியூட்டில் தயாரான பெண்களே பரிமாறும் ஓட்டலைப் பார்வையிட்டார்கள். குமரேசன் சொன்னது போல் அங்கே கூட்டம் பொங்கி வழிந்தது. அதே சமயம் கெளரவமாகவும் இருந்தது. அந்த ஓட்டல் உரிமையாளரைக் குப்தாவும் குமரேசனும் சந்தித்து, “இப்படி முழு அளவில் பெண்களே பரிமாறுபவர்களாக - இருப்பதில் பிரசினை உண்டா? அவரது அனுபவம் எப்படி?” என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு விசாரித்தார்கள். அவரது பதில் ஆச்சரியப்படி வைத்தது. “எங்களைப் பொறுத்தவரை ஒரு பிரசினையும் இல்லை. சொல்லப் போனா எங்கள் கேரள கலாசாரப்படி முண்டும் சோளியும் அணிந்து, தாவணி கூட இல்லாமல் தான் இவங்க பரிமாறுகிறாங்க. எங்க கஸ்டமர்ஸ் டீஸன்டா நடந்துக்கிறாங்க. கேரளத்துக்கு வெளியிலே இருந்து வர்ற அந்நியப் பிரதேசத்துக் கஸ்டமர்ஸ்தான் கொஞ்சம் இண்டீஸண்டா வெறிச்சுப் பார்க்கிறாங்க! எங்க ஓட்டல் மேனேஜ்மெண்ட்டைப் பொறுத்த வரை இவங்களுக்குத் தனி வீடு எடுத்துக் கொடுத்துத் தங்க வச்சிருக்கோம். எங்க சொந்தத் தங்கைகள் மாதிரி கவனிச்சிக்கிறோம்.” “இதை மத்தவங்க தப்பா நெனைக்கிறாங்களா, பேசறாங்களா?” “அப்படி நினைக்கிறதுக்கும் பேசறதுக்கும் இதிலே என்ன தப்பு இருக்கு? விமானங்களிலே ஏர் ஹோஸ்டஸ் பெண்கள் அழகாக டிரஸ் பண்ணிக்கிட்டுச் சிரிச்சுப் பேசிப் பிரயாணிங்களுக்குச் சிற்றுண்டி, உணவு பரிமாறலியா? அது மாதிரிதானே? ஐரோப்பாவிலே எத்தனை ரெஸ்டாரெண்ட்ஸ்லே பெண்களே பரிமாறுகிறார்கள்? இதிலே என்ன தப்பு? தப்புன்னு நினைக்கிற, மனப்பான்மைதான் தப்பு.” குப்தாவுக்கும் குமரேசனுக்கும் அவருடைய பதில் சுபாவமாகவும் திருப்தியாகவும் இருந்தது. பல விஷயங்களில் எந்தக் கோளாறும் இல்லை. அதைப் பார்க்கிறவர்களின் பார்வையில்தான் கோளாறு, உருவாகிறது என்று தோன்றி யது. இத்தகைய பெண்களில் சிலர் சில ஆண்டுகள் இப்படி வேலை பார்த்தபின் திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தப் போய்விடுவதாகவும் அந்த ரெஸ்டாரெண்டின் அதிபரே கூறினார். சிலர் விஷயத்தில் கஸ்டமர்களில் இருந்தே கெளரவமான கணவர்கள் கிடைத்துக் காதல் கல்யாணம் ஆகியிருப்பதாகவும் அவர் கூறினார். கல்யாணமான பின்னும் வேலையில் தொடர்கிற சில பெண்களையும் அவரே கூப்பிட்டு அறிமுகப்படுத்தினார். குருபுரம் போன்ற ஓர் ஊரில் இதை ஒரு சீப் டெக்னிக் என்றும் வியாபார உத்தி என்றும் யாராவது புரளி கிளப்பி விட்டு விடக்கூடாதே என்று அவர்கள் யோசிக்க வேண்டியிருந்தது. “துணிந்து செய்யுங்கள்! உங்கள் ஊரில் இது இன்னும் வெற்றியளிக்கும். பேசுகிறவர்கள் பேசிப் பேசி ஓய்ந்து போவார்கள். ஆனால் நீங்கள் நாணயமாக நடந்து, கொண்டால் எதுவும் கேடு வராது” என்றார் கொச்சியில் அந்த ரெஸ்டாரெண்ட்டை நடத்தியவர். பெண்களே செர்வ் செய்யும் ‘சுபமங்களம்’ ஏ.சி. ரெஸ்டாரெண்டுக்கு ஏற்பாடு செய்யும் உறுதியுடன் அந்தக் கொச்சி ஓட்டல் அதிபரிடம் ஒரு சிபாரிசுக் கடிதமும் வாங்கிக் கொண்டு கோட்டயம் புறப்பட்டார்கள் அவர்கள்! கோட்டயத்தில் இந்த இன்ஸ்டிடியூட்டின் முதல்வர் குஞ்சம்மணியம்மா அவர்களே மிகவும் மரியாதையாக வரவேற்றார். அன்பாகப் பேசினார். இவர்கள் நடத்தப் போகும் ரெஸ்டாரெண்டின் தரம், ஊர், இவர்களால் தரமுடிந்த சம்பள விகிதம் எல்லாம் தெரிந்தால் கேட்டரிங் டிப்ளமா வாங்கித் தயாராக இருக்கும் பெண்களை அழைப்பதாகவும் “அவர்களில் உங்களுக்குப் பிடித்தவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்” என்றும் கூறினார். |