13 குமரேசன் நினைத்தது போல் அந்தப் பயிற்சி நிறுவனத்திலிருந்து பெண்களை வேலைக்கு அழைத்துச் செல்லுவது அவ்வளவு சுலபமாயில்லை. கொச்சி ரெஸ்டாரெண்ட் அதிபர் சிபாரிசுக் கடிதம் தந்ததனுலும் குப்தா, குமரேசன் இருவருடைய பழகும் முறைகளாலும்தான் ஓரளவு மரியாதையான வரவேற்பு கிடைத்தது. கூலிக்குச் சித்தாள் பிடிப்பது போல ஆட்களை அவர்களிடமிருந்து அமர்த்த முடியாதென்று தெளிவாகப் புரிந்தது. இவர்களும் அப்படி அமர்த்த விரும்பவில்லை. குஞ்சம்மணியம்மா சொன்னாள்: “எங்ககிட்ட இங்கே டிரெயினிங் பெற்று டிப்ளமா வாங்கின சில பெண்கள் ஏர் ஹோஸ்டஸ் ஆக இருக்கிறார்கள். நீங்கள் ஒரு கோரிக்கை லெட்டர் எழுதிக் கொடுத்தால் எங்கள் ஸ்தாபனத்தின் இன்ஸ்பெக்ஷன் ஆட்கள் வந்து உடனே உங்கள் ரெஸ்ட்டாரெண்டை இன்ஸ்பெக்ட் செய்து எங்கள் பெண்களை அங்கே வேலை பார்க்க அனுப்பலாமா என்று எங்களுக்கு ஒப்பீனியன் அனுப்புவார்கள். அதன் பிறகு தான் பெண்களை அனுப்புவோம். இதெல்லாம் ஜஸ்ட் ஃபார்மாலிட்டிஸ். நீங்க தப்பா நினைக்கப்படாது. சில வாரங்களுக்கு முன்னே யாரோ கோயம்புத்தூப் பக்கத்திலேர்ந்து வந்து ரொம்பக் கொச்சையா எப்படி எங்களை அணுகறதுன்னு கூடத் தெரியாமே, ‘பொண்ணுங்க வேணும்’னு கேட்டாங்க. வந்த விதம் கேட்ட தினுசு எதுவுமே டீசண்டா இல்லே! விலாசம் கேட்டோம் மூங்கில் முறிச்சான்பாளையம்னு ஒரு அட்ரஸ் குடுத்தார். அங்கே எங்க இன்ஸ்பெக்ஷன் டீமை அனுப்பிப் பார்த்தா அவர் குடுத்த அட்ரஸ் ஒரு சாராயக் கடையாயிருந்தது.” “அடப் பாவமே! நீங்க ஜாக்கிரதையாத்தான் இருக் கணும்,” என்றான் குமரேசன். அது ஒரு சமூக சேவை நிறுவனமாக இருப்பதையும் கறாரான விதிமுறைகள் இருப்பதையும் புரிந்து கொண்டிருந்த காரணத்தால் குமரேசனும் குப்தாவும் சிணுங்காமல் பல பாரங்களைப் பூர்த்தி செய்து பல நிபந்தனைகளில் கையொப்பமிட்டு அந்த இன்ஸ்டிட்டியூட்டின் இன்ஸ்பெக்ஷன் டீம் பார்கவிக்கு வந்து போகச் செலவுத் தொகையையும் கூட முன்பணமாகக் கட்டி விட்டார்கள். இவர்கள் இருவரும் வந்த விதம் அறிமுகக் கடிதம், பழகிய தினுசு, எல்லாவற்றையும் பார்த்த பின்பே இன்ஸ்டிட்யூட்காரர்கள் நம்பிக்கை கொண்டனர். அதற்கு அப்புறம்தான் குஞ்சம்மணியம்மா இவர்களுக்கு டிப்ளமா வாங்கி வேலைக்கு வரத் தயாராயிருக்கும் பெண்களை அறிமுகப்படுத்தினாள்.
“நீங்க தனியா ஒரு செலக்ஷன் என்று சிரமப்பட வேண்டியதில்லை. பொதுவா நாங்க இங்கே படிக்க செலக்ட் பண்ற போதே ‘ஆப்டிடியூட் டெஸ்ட்’னு வச்சுடறோம். இலட்சண மாயிருக்கிற - கடிந்து பேசாத - நன்றாகப் பழகக்கூடிய பெண்களாகத்தான் எடுக்கிறோம். மலையாளம் தவிர வேற மொழிகளையும் கத்துக்கொடுக்கிறோம். ஒரு ஜாப் செக்யூரிட்டிக்காகவும் இதிலே படிக்க வர்றவங்களுக்கு ஒரு நம்பிக்கை வரணும்கிறதுக்காகவும் மினிமம் ‘எதிர்பார்க்கிற ஸ்கேல் ஆஃப் பே’ என ஒன்று நாங்களே குறிப்பிடுவது வழக்கம்.”
“நியாயம்தான். படிச்சு கேட்டரிங் டிப்ளமாவும் வாங்கினப்புறம் ஒரு டீஸண்ட் ஸாலரியை எதிர்பார்க்கறது தப்பில்லையே?” எல்லாம் சுமுகமாக முடிந்தது. அவர்கள் இருவரும் குருபுரம் திரும்பிய மறுநாளே ஸ்டடி டீம் வந்து ஓ.கே. பண்ணியது. ஏற்கெனவே குப்தாவும், குமரேசனும் பார்த்துத் தேர்ந்தெடுத்திருந்த பெண்களின் புகைப்படங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. கோட்டயம் இன்ஸ்டிட்யூட்டின் அனுமதியுடன் பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய வேண்டும் என்றான் குப்தா. “எதுக்கு? அந்த மூங்கில் முறிச்சான் பாளையத்து ஆளு ‘பொண்ணுங்க வோணும்’னு ஏதோ பிராத்தலுக்கு ஆள் சேர்க்கிற மாதிரிக் கேட்டதைப் பத்தியே அவங்க ரொம்ப வருத்தப்பட்டாங்க. நாம பாட்டுக்குப் பெண்களின் போட்டோவைப் போட்டு ஓட்டலுக்குப் பணம் சேர்க்கிற கொச்சையான முயற்சியிலே இறங்கறமோன்னு தப்பா நெனச் சுடப் போருங்க சார்,” என்று குமரேசன் ஆட்சேபணை கிளப் பினான். “இதா பாரு குமரேசன்! ப்ளெயினா - சிம்ப்பிளா ஸ்டிரெயிட் ஃபார்வர்டா மனசிலே நெனைக்கிறதைச் சொல்றது தப்பில்லே. ஆஷாடபூதித்தனம் தான் தப்பு. யேர்னிங் மோர் மணி இஸ் ஆல்ஸோ பார்ட் ஆஃப் அவர் எய்ம். யூ காண்ட் டினை தட். அதே சமயம் இந்தப் பெண்களை இங்கே பார்கவி ஏ. சி. ரூம்லே அலங்காரம் பண்ணி நிறுத்தி வைச்சு அர்ச்சனை பண்ணிக் காலைலேயும் மாலையிலேயும் உங்க பக்கத்து ஓட்டல்களிலே வழக்கமாப் பண்ற மாதிரி சூடம் சாம்பிராணி கொளுத்திக் கும்பிடறதுக்காக இங்கே நாம சம்பளம் குடுத்துக் கூப்பிடலை.” “அதுக்காக இவங்க போட்டோவைப் பேப்பர்லே போட்டு ‘இது மாதிரிப் பலான பொண்ணுங்கள்ளாம் இருக்கு! எங்க ஓட்டல்லே வந்து சாப்பிடுங்க...’ன்னு கூப்பிடறது நல்லா இருக்குமா?” “நீதான் இப்போ அந்த மூங்கில் முறிச்சான்பாளையத்து ஆள் பேசின மாதிரிப் பேசறே குமரேசன்! ஒரு கெட்டிக்கார மனுஷன் உபயோகப்படுத்தற லாங்வேஜோட தரத்தை வச்சு எதையும் டீஸன்டாப் பண்ணிட முடியும். கெட்டிக்காரத் தனம் இல்லாதவன் அதையே இன்டீஸென்டாகவும் பண்ணிட முடியும். இப்ப நான் பேப்பர்ல குடுக்கப் போற மாதிரி விளம்பரத்தை எழுதித் தர்றேன். பார்த்திட்டு அப்புறம் பேசு.” குப்தா டிராஃப்டை ஆங்கிலத்தில் எழுதிக் கொடுத்தான். “நாட் ஜஸ்ட் ஒன் நியூ பார்கவி; ஃபைவ் யங் ப்யூட்டி ஃபுல், ஸ்மார்ட் பார்கவிஸ் (ஃப்ரம் கோட்டயம் விமன்ஸ் கேட்டரிங் டெக்னலஜி இன்ஸ்டிட்யூட்) ஆர் வெயிட்டிங் அண்ட் எக்ஸ்பெக்டிங் - கஸ்டமர்ஸ் லைக் யூ அட் ஓட்டல் நியூ பார்கவி.” “இந்த வாசகங்களுக்கு மேலே அவங்க அஞ்சு பேர் படத்தையும் அதுக்கும் மேலே விளம்பரத்தோட டாப்லே ஓட்டல் நியூ பார்கவி முகப்பையும் சுபமங்களம் ஏ.சி. ரெஸ்டாரெண்ட் முகப்பையும் போட்டுடறோம்.” குமரேசன் குப்தாவின் சாமர்த்தியத்தைக் கண்டு வியந்தான். விளம்பரம் நாசூக்காகவும் கவர்ச்சியாகவும் எழுதப் பட்டிருந்தது. அதே சமயம் இன்ஸ்டிட்யூட்டின் பெயரும் வந்தது. சும்மா ஒரு வம்புக்காக அவன் குப்தாவைக் கிண்டல் செய்தான். “மிஸஸ் குப்தா வேற பக்கத்திலே இல்லே. சிம்லாவுக்குப் போயிருக்காங்க, அந்த கேட்டரிங் பொண்ணுங்க கிட்ட ரொம்பத்தான் மயங்கிப் போயிருக்கீங்கன்னு தெரியுது. நீங்க பாட்டுக்கு யங், ஸ்மார்ட் ப்யூட்டிஃபுல்னு ஒரே அடைமொழியா அவங்க மேலே தூவியிருக்கீங்களே?” “டெல்லிங் ட்ரூத்! ஐ யாம் நாட் எக்ஸாஜெரேட்டிங் எ சிங்கிள் வேர்ட்! சுஷ்மா இப்போ ஊர்ல இருந்தா அவகிட்டவே தைரியமா நான் சொல்வேன் ‘உன்னைவிட இந்தக் குட்டிகள் ஸ்மார்ட் யங், ப்யூட்டிஃபுல்’னு.” “அப்பிடியா? இதை ஒரு வார்த்தை விடாமே அண்ணிக்கு எழுதிப் போட்டேன்னா இந்தக் குளிர்லியும் சிம்லாவே பத்திக் கிட்டு எரியும் மிஸ்டர் குப்தா.” “அதெல்லாம் சும்மா கதைப்பா! சினிமா டயலாக்லே வேணா வரும். ஷீ நோஸ் மீ ஃபுல்லி வெல் அண்ட் ஐ நோ ஹெர் ஃபுல்லி வெல்; எங்களுக்குள்ளே இது மாதிரி சீப் மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்கை எந்த மூணுவது மனுஷனும் உண்டாக்கிட முடியாது” என்று உறுதியாகக் கூறினான் குப்தா. குமரேசன் குப்தா எழுதிக் கொடுத்த அந்த விளம்பரத்தைத் தமிழில் மொழி பெயர்த்தான். “இப்போது நியூ பார்கவியே ஓர் ஆழகிய இளம்பெண் போல் பொலிகிருள். அங்கே மேலும் ஐந்து அழகிய சுறுசுறுப்பான இளம் பெண்கள் (கோட்டயம் பெண்கள் - பரிமாறும் தொழில் துணுக்கக் கல்லூரியில் பயிற்சி பெற்றவர்கள்) உங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிருர்கள். முழுக்க முழுக்கப் பெண்களே பரிமாறும், முதல் ஏ. சி. ரெஸ்டாரெண்ட்! வருக! வந்து புதிய மகிழ்ச்சியும் அனுபவமும் பெறுக!” இதை வாங்கிப் படித்துவிட்டுக் குமரேசனின் அண்ணன் தண்டபாணி. “சுறுசுறுப்புக்கும் இளமைக்கும் நடுவிலே ‘லக்ஷ்மிகரமான அல்லது மங்களகரமான’ன்னு இன்னொரு வார்த்தையை நுழைத்து விடு. இட்வில் ஆட் ரெஸ்பெக்டபிலிடி” என்றான். உடனே அங்கிருந்த ஆடிட்டர் “சபாஷ் தண்டபாணி! என்ன இருந்தாலும் மேரீட் மேன், பொறுப்பா, கெளரவமா யோசனை சொல்றான் பாரு! என்ன நுணுக்கமா ஒரு வார்த்தையை நடுவிலே போடறான்! குமரேசன் ஆயிரமிருந்தாலும் விடலைப் பையன்தான்! அழகு, இளமை, சுறுசுறுப்பிலேயே மயங்கிப் போயிருக்கானே தவிர மரியாதையைப் பத்திக் கவலையே படல” என்று குமரேசனைச் சீண்டினர். குமரேசனும் அவரை லேசில் விட்டுவிடவில்லை. “இதோ பாருங்க ஆடிட்டர் சார்! சும்மா விடலை அது இதுன்னு ராங் சைடுலே ரப் பண்ணாதிங்க. அண்ணன் சொல்றதைக் சேர்த்துக்கறேன். ஆனா நான் இதை எந்த வகையிலும் சீப்பா எழுதிடலே. சீப்பாவும் கொச்சையாவும் இதை மொழி பெயர்க்கிறதுங்கிறது எப்படித் தெரியுமா? ஒரு வம்புக்காக அதையும் உங்களுக்குப் பண்ணிக் காட்டறேன் பாருங்க” என்று வேறு ஒரு காகிதத்தை எடுத்து அவசர அவசரமாக எழுத ஆரம்பித்தான் குமரேசன். ‘பருவ மங்கை பார்கவி எங்கே? எப்போது? விரைவில் எதிர்பாருங்கள். ஒன்றல்ல, இரண்டல்ல, ஒரே சமயத்தில் ஐந்து பருவப் பாவையர் பணிபுரியும் கவர்ச்சி உணவகம்! பார்க்கவும் பருகவும். மகிழவும் உடனே வருக நியூ பார்கவி. ஏ. சி. உணவகம் குருபுரம் ஹைலேண்ட்ஸ்’ என்று எழுதி நீட்டினான். “உங்கிட்ட விவாதிக்க முடியுமா குமரு? நீ பட்டிமன்ற ஆளாச்சே? இலேசிலே விடுவியா? நான் வாபஸ் வாங்கிக்கறேன்” என்று கைகளை மேலே தூக்கிவிட்டார் ஆடிட்டர். “நம்ம தெப்பம்பட்டி டூரிங் தியேட்டரில் ‘ஸீக்ரட் லவ்’னு முதல் தரமான இங்கிலீஷ் நாவல் ஒண்ணை ஃபேஸ் பண்ணி ட்வெண்டியத் செஞ்சுரி ஃபாக்ஸ்காரங்க எடுத்த படம் ஒண்ணை ஒரு ஞாயிற்றுக்கிழமை நூன் ஷோ போட்டான். படத்திலே ஒரு ஹாட் சீன் கூட இல்லே. தியேட்டர்காரன் பார்த்தான். அவனாகவே தலைப்பைக் ‘கன்னியின் காமவெறி ரகசியங்கள்’னு போட்டு ஜட்டியோட ஒரு பொண் குளிக்கிற மாதிரி வேற ஏதோ ஒரு ஸ்டில்லை ப்ளோ அப் செஞ்சு விளம்பரம் பண்ணிட்டான். என்னை அது மாதிரின்னு நெனச்சீங்களா? ஐ வாஸ் எ ஸ்டூடண்ட் ஆஃப் லிட்டரேச்சர் சார்!” “சரீப்பா! என்னை விட்டுடு, தெரியாத்தனமா உங்கிட்ட வாயைக் குடுத்திட்டேன்” என்று ஆடிட்டர் அலறியே விட்டார். குப்தாவுக்கு இதை எல்லாம் தண்டபாணி மொழி பெயர்த்துச் சொன்னபோது அவன் சிரித்து ஓய அதிக நேரம் பிடித்தது. நியூ பார்கவியின் திறப்பு விழா விளம்பரங்கள் தமிழ் ஆங்கில தினசரிகளில் எல்லாம் முழுப்பக்க அளவில் வெளியாயிற்று. குப்தா சொன்னபடி மூத்தவன் தண்டபாணியும், இளையவன் குமரேசனும் முக்கியப் பொறுப்புகளைப் பகிர்ந்து கொண்டனர். திறப்பு விழாவுக்குச் சிறப்பு விருந்தினர்களாகச் சிம்லாவில் இருந்து குப்தாவின் மைத்துனன் அஜீத்குமார், குப்தாவின் மாமனார் குருசரண் இருவரும் வந்திருந்தனர். அங்கே போயிருந்த சுஷ்மாவும் பார்கவியும் இவர்களையும் அழைத்துக் கொண்டு ஒரு வாரம் முன்னதாகவே குருபுரம் வந்து சேர்ந்து விட்டனர். குருபுரமும் சிவவடிவேலுவின் வீடும் கல்யாணக் களை கட்டின. ஓட்டல் நியூ பார்கவியின் திறப்பு விழா விளம்பரங்கள் பத்திரிகைகளில் தடபுடல் பட்ட அதே நேரத்துக்கு டீ எஸ்டேட் லொக்கேஷனில் ஒரு பிரமாதமான தமிழ்த் திரைப் படத்தை எங்கே எடுக்கலாம் என்று உரிய இடத்தையும் வசதி களையும் தேடி அலைந்து கொண்டிருந்த கோடீசுவரனான புரொட்யூசர் ஒருத்தர் குருபுரம் வந்து சுமார் இரண்டு மாத காலத்துக்கு ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் ஒரு சூப்பர் ஸ்டார் நடிகை டைரக்டர் புரொட்யூசருக்கு 4 ஏ. சி. ரூம் - மற்ற யூனிட் ஆட்களுக்கு பாத் அட்டாச்டு ரூம்ஸ் என்று முக்கால் ஓட்டலையும் அட்வான்ஸ் கொடுத்து ரிஸர்வ் பண்ணிவிட்டார். நியூ பார்கவியின் மேல் அதிர்ஷ்டக் காற்று வீசத் தொடங்கியது. தமிழ்ப்பட உலகில் வரப்பு, வயல்வெளி, கிராமம், கிராமத்துத் திரைக்கதைகளுக்கு ஒரு யோகம் அடித்தது. அப்படிப் படங்கள் ஸீன், ஸ்டூடியோ, ஸெட் வாடகை ஃப்ளோர் அரேன்ஜ்மெண்ட்ஸ் செலவுகள் இல்லாமல் யூனிட்டோட ஒரு கிராமத்துக்குப் போனாலே நிறைவேறியது. சிக்கனமாகவும் லாபகரமாகவும் புரொடக்ஷன் முடிந்தது. படங்களும் பணத்தை வாரிக் கொண்டு வந்து தயாரிப்பாளரிடம் கொட்டின. சிங்கிள் புரொடக்ஷன் யூனிட்டோடு போய்ப் படத்தையே முடித்துக் கொண்டு வருகிற வசதி இருந்தது. பாட்டு, மெட்டு, இசையமைப்பு முதல் சகலத்திலும் கிராமாந்தரத்துக்கு ஒரு திடீர் யோகம் வந்தது. டீ ஷர்ட், ஸ்ஃபாரி, ஜீன்ஸ், பெல்பாட்டம், நாகரிகங்கள் தோற்றுத் தலைப்பாகை, உருமால், வண்டி ஓட்டுவது, வயல்களில் உருளுவது, பெண்கள் தொளி கலக்குவது, நாற்று நடுவது, களை எடுப்பது, தேயிலை ஏலக்காய் பறிப்பது என்று இப்படி ஒரு புதுக் காற்று விச ஆரம்பித்தது. கல்லூரி வகுப்பறை, பஸ்கள் ஸ்டாண்டு, நகரத்து வீதிகள், கடைகள், தியேட்டர் முகப்புக்களில் காட்ட முடிந்ததை விட வயலின் சேற்றுக்கு நடுவே, களை பிடுங்க முழங்கால் வரை சேலையைத் தூக்கிக் கட்டிய கோலத்தில் கிராமக் கலாச்சாரம் என்ற பெயரில் இரவிக்கை அணியாமல் மேற்சேலை மட்டும் கட்டிய வாளிப்பில் அதிகமாக ஸெக்ஸைக் காட்ட முடிகிற உத்தியை - ரகசியத்தைத் தயாரிப்பாளர்கள் திடுதிப்பென்று புரிந்து கொண்டு படை எடுத்திருந்தார்கள். ஆனால் அதில் ஒரு பிரசினை. ஆறு, ஓடை. வயல்வெளி, மரக்கூட்டம், அருவிக்கரை, எஸ்டேட் என்று லொக்கேஷன் கலர் ஃபுல்லாக அழகாகக் கிடைத்தால் அங்கே ஆர்ட்டிஸ்ட்டுகளும், யூனிட்டும் தங்க வசதி இருப்பதில்லை. தங்க வசதி பிரமாதமாகக் கிடைத்தால் அங்கே லொக்கேஷனே கிடைப்பதில்லை. பார்கவியும் இயற்கை லொக்கேஷன் வசதிகளும் சேர்ந்தே குருபுரம் கிடைத்தவுடன் திடீரென்று குருபுரத்திற்கு ஒரு யோகம் அடித்தது, பார்கவிக்கும் சான்ஸ் அடித்தது. நியூ பார்கவியில் முதலில் நாலே நாலு ‘சூட்’ மட்டுமே ஏ.சி. செய்திருந்தார்கள். இந்தச் சினிமா யோகம் அடித்த பின் பல சூட்களை ஏ.சி. செய்யும் அவசரமும் அவசியமும் நேர்ந்தன. லாட்ஜிங் சைடில் இப்படி அதிர்ஷ்டம் என்றால் பெண்களே பரிமாறும் கவர்ச்சியால் ரெஸ்டாரெண்டில் உட்கார இடம் கிடைக்காத அளவு கூட்டம் நெரிசல் பட்டது. லாப தசை ஆரம்பமாகி விட்டது. அவசர அவசரமாக ஐந்நூறு பேர் ஒரே சமயத்தில் அமர்ந்து சாப்பிட முடிந்த இன்னொரு டைனிங் ஹாலேக் கட்டி அதிலும் பெண்களே பரிமாற ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டத்தைச் சமாளிக்க முடியவில்லை. ஓட்டல் திறந்து இரண்டே மாதங்களில் நியூ பார்கவி பிரபலமாகி விட்டாள். ஒரே சயயத்தில் பார்கவியில் தங்கள் ஸ்டார்களுக்கும் யூனிட்டுக்கும் ரிஸர்வேஷன் கேட்டுப் பல புரொட்யூஸர்கள் போட்டி போட்டார்கள். பார்கவியில் இடம் கிடைப்பதே குதிரைக் கொம்பாகி விட்டது. ஒரு வியாபார விஷயமாக வருகிற கார்டமம் எக்ஸ்போர்ட் வியாபாரிக்கோ, குருபுரம் ஆஞ்சநேயருக்குப் பிரார்த்தனை நிமித்தம் வடை மாலை சாற்ற வருகிற ஒரு வெளியூர்ப் பிரமுகருக்கோ அறை வசதி கிடைக்காமல் பார்கவியின் அறைகளைச் சினிமா யூனிட்டுகள் மாதக் கணக்கில் புக் செய்யத் தொடங்கினர்கள். லாட்ஜிங்கில் இந்த இடம் போதாது என்ற நிலைமை ஏற்பட்டு விட்டது. ஒட்டல் நியூ பார்கவியை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்ற நிலைமை அவசரமாக ஏற்பட்டது. |