16 ஊர் திரும்புகிற நாள் நெருங்க நெருங்கச் சிவவடி வேலுவுக்குக் கவலைகள் அதிகமாகி விட்டனவோ என்னவோ டோக்கியோவிலிருந்து எழுதிய கடிதத்தில் ஊரில் கோடெள னில் இருக்கிற ஏலக்காயைப் பற்றி அதிகமாகப் புலம்பி யிருந்தார். பார்கவி பற்றியும் அதிகமாகப் புலம்பியிருந்தார். ‘பார்கவிக்குச் சூதுவாது தெரியாது. ஆனால் என் மேலே பிரியம் அதிகம். பசங்களைப் போல என்னை எதிர்த்துப் பேசற துணிச்சல் அவளுக்கு இல்லை. பவர் பத்திரம் கொடுத்துட்டு வந்திருக்கிறதைப் பயன்படுத்தி அவளை யாராவது ஏமாத்தி எதுக்காவது கையெழுத்து வாங்கிடப் போறாங்க. அதனாலே அந்த விஷயம் ரகசியமாவே இருக்கட்டும். ‘அத்தியாவசியமான செலவு மட்டும் நடக்கட்டும்! எதுக்காகவும் எஃப்.டி. எதையும் மெச்சூர் தேதிக்கு முன்னால் எடுக்க வேண்டாம். குப்தாவே சொன்னாலும் மாறுதல் எதையும் அவசரப்பட்டுப் பண்ணிட வேண்டாம். ஒரு தடவைக்கு நூறு தடவை யோசனை பண்ணாமே எதையும் பண்றது சரியா வராது. ‘கோடெளன் ஏலக்காயை விலைவாசி நேரம் பார்த்து மார்க்கெட்டில் விடவேண்டும். இல்லாவிட்டால் எஸ்டேட். மெயின்டெனன்சுக்குக் கூடக் கட்டுபடி ஆகாது. ஞாபகம் வச்சுக்குங்க. ‘தினசரி ராத்திரி வீட்டுக் கதவைப் பத்திரமாகத் தாழ் போட்டுக் கொள்ளச் சொல்லவும், அந்தத் தறுதலை குமரேசன் ஊரெல்லாம் சுத்திட்டு ராத்திரி ஒரு மணி ரெண்டு மணிக்கு வீடு திரும்புவான். அவனுக்கு மறதி அதிகம். பார்கவி சிறிசு. இப்போ ஹாஸ்டல் விட்டுப் பரீட்சை முடிஞ்சு லீவுக்கு வந்திருப்பாள். வேலையாட்களிடம் சொல்லியாவது கதவைப் பத்திரமாகத் தாழ் போடச் சொல்லும்படி ஆச்சியும் சொல்லு கிறாள். ஆச்சியும் நானும் செளக்கியம் என்று அனைவரிடமும் கூறவும். கரும்பாயிரத்துக்கு அன்பு. ஸ்ரீமான் குப்தாவை நான் விசாரித்ததாகத் தெரிவிக்கவும்.’ என்று ஆடிட்டருக்கு எழுதியிருந்தார் சிவவடிவேலு. ஆடிட்டர் இந்தக் கடிதம் வந்ததும் குமரேசனிடம் கொடுத்து “உன் மேலேதாம்பா அவருக்குக் கொள்ளைப் பிரியம். உனக்கு ஞாபகமறதி அதிகம்கறது அவருக்கு டோக்கியோவிலே வச்சுத்தான் நினைவு வந்திருக்கு. சதாகாலமும் உன் நினைவு தான் போ” என்றார் ஆடிட்டர். கிண்டலாகத்தான் சொன்னார். “என்னை அத்தனை சுலபத்திலே மறந்துட முடியுமா? ஆடிட்டர் சார்! இந்த மிராசுதார் குடும்பத்திலே இவர் மாதிரி ஒரு தந்தைக்குத் தப்பித் தவறிப் பிறந்து விட்ட அறிவு ஜீவி நான் ஒருவன் தானே சார்? இந்த வட்டாரத்திலேயே தமிழ் இலக்கியக கூட்டம் நடத்தற எவனை வேணாக் கேளுங்க! ‘குமரேசன்’னாத் தமிழ்த் தெரிஞ்ச எவனும் உடனே துள்ளிக் குதிச்சாகணும். முந்தா நாள்கூட ஒருத்தன் ‘மகிழ்ச்சி தருவது காதலா - பெற்றோர் ஏற்பாடு செய்யும் திருமணமா?’ங்கிற பட்டிமன்றத்திலே பேச அழைக்க வந்தான். நேரமில்லே. பிஸினஸ்ல இறங்கியாச்சுப்பான்னு திருப்பி அனுப்பிச்சேன்,” என்று சவடால் பேசிவிட்டுக் கடிதத்தைப் படித்த குமரேசன், “ஒரு மண்ணுமில்லை வழக்கமான பொலம்பல்தான். அன்பைக் கரும்பாயிரத்துக்குத்தான் அனுப்பியிருக்காரு,” என்று அலுத்துக் கொண்டே கடிதத்தை அவரிடம் திருப்பி நீட்டினான்.
“ஆமாம், அதென்னமோ அறிவு ஜீவின்னியே? என்னப்பா அர்த்தம்?”
“இண்டலெக்சுவல்ங்கிறதுக்குத் தமிழ் சார்.” “நீ இண்டெலக்சுவலா...?” “சந்தேகமென்ன? எங்கப்பா மட்டும்தான் அதை ஒத்துக்க மாட்டாரு.” “எனக்கும் கூட டவுட்ஸ் இருக்கு...” “சந்தேகமும், அவநம்பிக்கையும் மனிதனின் முதல் எதிரிகள். வளர்ச்சியின் வழித்தடைகள், அதை நீங்க புரிச்சுக்கணும் சார்!” “பொதுவிலே சொல்றியா? அல்லது உன்னை அறிவு ஜீவியா இல்லையான்னு நான் சந்தேகப்படறதாலே மட்டும் சொல்றியா?” “எல்லாத்துக்கும் சேர்த்துத்தான் சொல்றேன். எங்கப்பா கூடப் பழகின ஆடிட்டர்தான்னு நீங்க அடிக்கடி நிரூபிச்சிடிறீங்க...” “சரிப்பா. எல்னை விட்டுடு. ஒப்புக் கொண்டு விடுகிறேன். நீ அறிவு ஜீவிதான்.” “இந்த ஆபரேஷன் நியூ பார்கவியே ஐயாவோட பிரைன் சைல்டுதான். பெண்களையே சர்வீஸுக்கு அமர்த்தற ‘சுபமங்களம்’ ஐடியாவும் நான் கொடுத்ததுதான் சார்! இன்னிக்கு இங்கே இத்தினி சினிமாக்காரன் வந்து தங்கற மாதிரி அவங்களோட பேசி லொகேஷன் சொல்லி மலைமேலே எங்கே அருவி இருக்கு எங்கே சூயிஸைட் சீன் எடுக்கிற மாதிரிப் பள்ளத்தாக்கு இருக்கு, எங்கே டூயட் பாடற மாதிரி லேக் தோட்டம் மரக்கூட்டம்ல்லாம் இருக்குன்னு விவரமாத் தகவல் குடுத்து அவங்களை வசப்படுத்தி இருக்கேனாக்கும். இன்னிக்கு மெட்ராஸ்ல எந்தப் புரொட்யூஸரை வேணாக் கேளுங்க... கண்ணை மூடிக்கிட்டுச் சொல்வான்: ‘நேரே குருபுரம் போங்க, நியூ பார்கவியிலே குமரேசன்னு இருக்காரு, அங்கே அவர் தான் ஆல் இன் ஆல். லொக்கேஷன் சொல்றதிலே அவர் நடமாடும் பல்கலைக் கழகம்பாங்க’” உற்சாகம் மேலிட்டுச் சுய அறிமுகப் பிரசங்கத்தில் இறங்கிவிட்ட குமரேசனை நிறுத்துவதற்காக, “ஹேண்ட்ஸ் ஆஃப்! நான் தோல்வியை ஒத்துக்கிறேன், விட்டுடு. நீதான் அறிவு ஜீவி. நீதான் மொபைல் யூனிவர்சிடி! நீதான் சகலமும்,” என்றார் அனந்த். “என்ன சார்? நான் கஷ்டப்பட்டுத் தமிழாக்கம் செய்யற வார்த்தைகளை எல்லாம் நீங்க மறுபடி ஆங்கிலமாக்கிடறீங்க?” “சில சமயத்திலே உன் தமிழாக்கம் எனக்குப் பிடிபட லேப்பா...” “இங்கே போர்டு ஹைஸ்கூல்லே மறைக்காடர்ன்னு ஒரு தமிழாசிரியர் இருக்கார். தஞ்சாவூரு சைடு, கோடிக்கரை சொந்த ஊரு. அவர் எல்லாத்தையும் தமிழ்ப்படுத்திச் சொல் றேன்னு குருபுரம் லோகல் ஃபண்டு ஆஸ்பத்திரி டாக்டரை அவர் பாணியிலேயே மாத்தி ‘இடாக்குடர்’-ங்கிறாரு. தமிழ்லே ‘டா’ முதல்லே வராதாம். ‘இடாக்குடர்னா’ அர்த்தமே அனர்த்தமாயிடுது. ‘காலிவயிறுன்னு’ அர்த்தம். அதாவது ஒன்றும் இடாத குடல்ன்னு ஆகும்! அதுமாதிரி எல்லாம் நான் தமிழை வம்பு பண்ணறதில்லே ஆடிட்டர் சார்!” “உன்னலே எந்த அளவு முடியுமோ அந்த அளவு வம்பு பண்றேன்னு ஒத்துக்கறியா?” “குறும்புக்காரப் பேர்வழி சார் நீங்க.” “இல்லே! அந்த மறைக்காடர் உன்னை விட அதிகமாக வம்பு பண்றார்னா ஒரு வேளை உன்னைக் காட்டிலும் பெரிய அறிவு ஜீவின்னு தோணுது.” “ஐயையோ கொல்றீங்களே, சார்.” “அறிவு ஜீவிகளை மத்தவங்கக் கொல்றது வழக்கம்.” இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது குப்தாவும் ஆர்க்கிடெக்ட்டும் அந்தப் பக்கமாக வந்து சேர்ந் தார்கள். இவர்கள் அரட்டைக்கு முற்றுப்புள்ளி விழுந்தது. “இன்னிக்கு அஜீத் வரான். மதுரை ஏர்போர்ட்டுக்குக் கார் அனுப்பிடுங்க. மத்தியானம் மூணு மணிக்கு போர்டு மீட்டிங். நீங்களும் கூட இருக்கீங்க. பார்ட்னர்ஷிப் டீட் தயாராயிடணும். இன்னிக்கும் நாளைக்கும்தான் அஜீத் குருபுரத்திலே தங்க முடியும்” என்றான் குப்தா. எல்லாம் தயாராயிருப்பதாக ஆடிட்டர் கூறினார். இவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் போதே ஏ.சி. சுபமங்களம் ரெஸ்டாரெண்ட்டில் பரிமாறும் தேவசேனா என்ற பெண் வந்து குமரேசனின் அருகில் நெருங்கி, “சார், உங்க பிரேக்ஃபாஸ்ட் ரெடி! இட்டிலி சூடா இருக்கு. இப்பவே வந்து சாப்பிட்டுடுங்க” என்றாள். குமரேசன் உடனே அவளைப் பின் தொடர்ந்து ஏ.சி. ரெஸ்டாரெண்டில் நுழைந்தான். ஆடிட்டர், குப்தா இருவரும் அர்த்த நிறைவுடன் தங்களுக்குள் ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகை பூத்தனர். குப்தா சொன்னான். “குமரேசன் இஸ் ஆல்வேஸ் கெட்டிங் ஸ்பெஷல் அட்டென்ஷன் ஃப்ரம் தேவசேனா.” “நானும் கவனிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன். அந்தப் பொண்ணு இவனையும் இவன் அந்தப் பொண்ணையும் ஒருத் தரை யொருத்தர் விசேஷமாகக் கவனிச்சுக்கிறாங்க.” “எவ்வரிதிங் ஸ்டார்ட்டட் அட் சுப மங்களம். ஆம் ஐ கரெக்ட் மிஸ்டர் அனந்த்?” “சுப மங்களத்திலே ஸ்டார்ட் ஆகிற விஷயம்லாம் சுப மங்களத்திலே போய்த்தான் முடியும் போல் இருக்கு மிஸ்டர் குப்தா!” “ஓல்ட் மேன் திரும்பறத்துக்குள்ள நல்லதை எல்லாம் முடிச்சுடணும்! இல்லாட்டா அன்ப்ரடிக்டபிளாப் போயிடும்.” “நாம் முடிக்கணும்கிறதே இல்லே மிஸ்டர் குப்தா! அதது தானாகவே முடிஞ்சுடும் போல இருக்கு. இன்னிக்குப் போர்டு மீட்டிங் முடிஞ்சதுமே ‘நியூ பார்கவி அனெக்ஸ்’ உறுதியாயிடுது. அஜீத் பார்கவியோட பார்ட்னர் ஆயிடறான். தேவசேனா குமரேசனை ப்ரேக் ஃபாஸ்ட்டுக்குக் கூப்பிடற அளவு முன்னேறியாச்சு, லஞ்சுக்கும். டின்னருக்கும் அப்புறம் ஒரு டம்ளர் காய்ச்சிய பாலோடு... தூங்கறதுக்கும் அவள் அவனைக் கூப்பிட அதிக நாள் ஆகாது.” “ஸ்டாப் இந்த இடத்திலேயே சென்ஸார் பண்ணிடுங்க. அதுக்கப்புறம் உள்ளது எல்லாம் அவங்க சொந்த விஷயம்.” இதைக் கேட்டு ஆடிட்டர் சிரித்தார். “இதிலே ஒரு வேடிக்கை மிஸ்டர் குப்தா. குமரேசன்கிறது முருகக் கடவுளுடைய பெயர். புராணங்களிலேயே முருகக் கடவுளின் ஒரு மனைவிக்குத் தேவசேனான்னுதான் பெயர்.” “இன்னொருத்திக்கு பெயர்?” “வள்ளிம்பாங்க.” “குமரேசன் தேவசேனாவோட மட்டும் நிப்பானா? அல்லது ஒரு வள்ளியையும் தேடிப்பானா?” “இந்தத் தேவசேனா கெட்டிக்காரி! எந்த வள்ளியையும் குமரேசன்கிட்ட நெருங்க விடமாட்டாள். தவிர ‘இதிகாசத் தலைவர்களில் சிறந்தவர் அர்ச்சுனனா, இராமனாங்கிற பட்டி மன்றங்களில் எப்பவும் இராமன் கட்சியையே பேசியிருக்கிறான் குமரேசன்.” “அது ஜெயிக்கிற கட்சிங்கறதால் அதைப் பேசியிருப் பான், குமரேசனுக்கு எப்போதும் தோற்கிற கட்சியைப் பிடிக் காது மிஸ்டர் அனந்த்!” “எதுக்கும் டு பீ ஆன் த ஸேஃப் ஸைட். இந்தத் தேவசேனாவோட ஃபேமிலி பேக்ரவுண்ட் முதலிய டீடயில்ஸ் விசாரிச்சு வைக்கணும். இல்லாட்டி சிவவடிவேலு கூப்பாடு போடுவாரு.” “காதல் டீடயில்ஸ் பார்க்காது. லவ் ஹாஸ் நோ அய்ஸ்.” “பட் சிவவடிவேலு ஹாஸ் அய்ஸ்.” “அவர் வர்றப்ப ஆசீர்வாதம் பண்ணறதைத் தவிர வேற வேலையே மிச்சம் இருக்கப்படாது மிஸ்டர் அனந்த், எந்த டெஸிஷனையும் அவருக்காக காக்க வைக்காதீங்க, எல்லாமே கெட்டுப் போகும். அட்சதையைக் கையிலே கொடுத்து, ‘குழந்தைகளை ஆசீர்வாதம் பண்ணுங்க’ன்னு அஜீத்-பார்கவி, குமரேசன்-தேவசேனா ரெண்டு ஜோடிங்களையும் விழுந்து கும்பிட வச்சிறணும்.” “குமரேசன் சுய மரியாதைக்காரன். அவரைக் கால்லே விழுந்து கும்பிட மாட்டான்.” “அதெல்லாம் அந்தத் தேவசேனையை விட்டுச் சொல்ல வச்சுடலாம். அவள் சொன்னால் தானா விழுந்து கும்பிடறான்.” ஆடிட்டர் சிரித்தார், குமரேசன் ஏ.சி. ரெஸ்டாரெண்டி லிருந்து ஏப்பத்தோடு வெளியே வந்தான். “இது என்னப்பா? அந்தப் பொண்ணு நாங்கள்ளாம் இருக்கறப்ப உன்னை மட்டும் கூட்டிட்டுப் போய் டிபன் குடுக்குது. என்னப்பா இதிலே ரகசியம்?” “ரகசியம் ஒண்ணுமில்லே! பரம ரசிகன் யாருன்னு அதுக்குத் தெரியும். அதான் என்னை மட்டும் வந்து கூப் பிட்டுச்சு.” “ஓகோ! இது ரசனை விஷயமா?” என்று சிரித்தார் ஆடிட்டர். |