17 அன்று அஜித் வந்து சேர்ந்தான். பார்கவிதான் அவனை விமான நிலையம் சென்று காரில் அழைத்து வந்தான். தானும் கூட வருவதாகத் தண்டபாணி சொன்னபோது, “அஜீத் பார்கவியோட பார்ட்னர்ஷிப்புக்காகத் தானே வர்றான்! அவள் போனாலே போதும் அண்ணே. அவதானே கூப்பிடப்போறது முறை,” என்று குமரேசன் கண்களைச் சிமிட்டித் தண்டபாணியைத் தடுத்தான். பார்கவி பார்வையாலேயே குமரேசனுக்கு நன்றி கூறினாள். புது ஏற்பாட்டின்படி தண்டபாணி, குமரேசன், சிவவடிவேலு உட்பட எல்லாரும் நியூபார்கவியில் டைரக் டர்ஸ், இப்பொழுது அனெக்ஸுக்கான போர்டு மீட்டிங்கில் அஜீத் ஒரு டைரக்டராகிறான். பார்கவி மானேஜிங் டைரக்டர். இதில் சிவவடிவேலு தகராறு செய்தால் அவர் திரும்பி வந்ததும் அவரைச் சேர்மென் ஆஃப் டைரக்டர்ஸ் போர்டு ஆகப் பண்ணி விடலாம் என்று முடிவு பண்ணி இருந்தார்கள். ஏனென்றால் ‘நியூ பார்கவி-ஓட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட்’டில் அதிக அதிகாரங்கள் உள்ள பதவி மானேஜிங் டைரக்டர் பதவிதான். அது பார்கவியிடம் இருந்தது. சேர்மன் மீட்டிங்குக்குத் தலைமை தாங்கலாம். நீட்டற இடத்திலே கையெழுத்துப் போடலாம். அது சும்மா ஜனாதிபதி பதவி மாதிரி இருந்தது. பிரதம மந்திரி மாதிரி எம்.டி. போஸ்ட்தான் இருந்தது. குப்தா, ஆடிட்டர், மூத்தவன் தண்டபாணி எல்லாரு மாகச் சேர்ந்து இந்த செட்அப்பை ஏற்பாடு பண்ணியிருந் தார்கள். இதில் சிவவடிவேலுவின் எஸ்டேட்டுகளும் வேறு தாவர ஜங்கமச் சொத்துக்களும் சேர்க்கப்பட இருக்கிற மாதிரிச் சிவவடிவேலு புறப்படும் முன்பே சாதுரியமாக எழுதி வாங்கிப் பார்க்கவியின் பெயருக்குப் பவர் பெற்றிருந்தார், ஆடிட்டர். மரண பயம் என்று கிளப்பி விட்டிருந்ததால் கொஞ்சம் மிரண்டு போயிருந்த சிவவடிவேலு கேட்ட இடத்தில் கேட்ட பத்திரங்களில் எல்லாம் போகிறபோது கையெழுத்துப் போட்டுவிட்டுப் போயிருந்தார். ஆடிட்டர் அதில் எதையும் துஷ்பிரயோகம் பண்ணிப் பயன் பெறவில்லை. எல்லாவற்றையும் சிவவடிவேலுவின் குடும்ப நலனுக்காகவே பயன்படுத்தியிருந்தார். குப்தாவும் யோசனைகள் கூறி இருந்தான். அன்று மாலை போர்டு ஆஃப் டைரக்டர்ஸ் மீட்டிங் நினைத்தபடி நடந்தது. அஜீத் டைரக்டர் ஆனான். ‘நியூ பார்கவி அனெக்ஸ்’ ப்ளு பிரிண்ட் அப்ரூவ் ஆயிற்று. இவற்றைக் கொண்டாடுவதற்காக ஒரு விருந்தும் இருந்தது. அந்த விருந்தில் பார்கவி டைரக்டர் குழுவைத் தவிர, குடும்பத்துக்கு வேண்டிய பிரமுகர்களும், சில தொழிலதிபர்களும், வேண்டிய வியாபாரிகளும் கூட அழைக்கப்பட்டிருந்தனர். பெண்கள்தான் பரிமாறினார்கள். “தேவசேனா! எல்லாரையுமே கவனிச்சுப் பரிமாறு! குமரேசனை மட்டுமே கவனிக்காதே,” என்று அவளை வம்புக்கு இழுத்தார் ஆடிட்டர். எல்லார் முன்னிலையிலுமே அவர் அப்படிப் போட்டு உடைத்ததுமே அவள் திணறிப் போனாள். கையும் காலும் பதறின அவளுக்கு. அந்த அழகிய இளம் பெண்ணின் மிரட்சியிலும், பதற்றத்திலும் கூட ஒர் அழகு தெரிந்தது. “என்னப்பாது! உங்கப்பா வந்து பார்த்தால் என்னைத் திட்டப் போறாரு. உன்னோட சாய்ஸ் கேரளா. பார்கவியோட சாய்ஸ் ஹிமாசலப் பிரதேசம். மொழி, இனம், பிரதேசம் எல்லாத்தையும் மறந்து எங்கெங்கியோ மனசைப் போக விட்டுட்டீங்க... பெரியவங்க ‘மனம் போன போக்கில் போக வேண்டாம்’னு உங்களுக்குத்தான் சொன்னங்க...” என்று அவன் காதருகே ஆடிட்டிர் முணுமுணுத்தார். குமரேசன் சிரித்தான். “அதுலே பாருங்க ஆடிட்டர் சார்! மகாகவி பாரதியாருக்குத் துரோகம் பண்ணப்படாதுன்னு பார்க்கிறோம். அவர் சொன்னதெல்லாம் பலிச்சுப் போச்சு! ‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்’னு சுதந்திரம் வர்றதுக்கு முன்னடியே பாடினாரு. சுதந்திரம் வந்திடிச்சு. ‘இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே, இயந்திரத் தொழில்கள் செய்திடுவிரே’ன்னு பாடினாரு. இயந்திரத் தொழில்கள் பெருகிடிச்சு. ஒரே ஒரு விஷயத்திலே மட்டும் அவர் சொன்னது இன்னும் அதிகமாப் பலிக்காமே இருக்கு!” “எதுலே குமரேசன்?” “ஒருமைப்பாட்டிலேதான். ‘சிந்து நதியின் மிசை நிலவினிலே சேர நன்னட்டு இளம் பெண்களுடனே சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைப்போம்னாரு.’ இதிலே பாதியையாவது நான் பூர்த்தி செய்து அவருக்கு விசுவாசமா நடந்துக்கணும்னு பார்க்கிறேன் ஆடிட்டர் சார்.” “எந்தப் பாதியை அப்பா?” “அதாவது சேர நன்னாட்டு இளம் பெண்களுடன் விளையாடுவோம்கிற நடுப்பாதியை.” “அப்ப சிந்து நதியின் மிசைங்கிற முதல் பாதிப் பகுதி?” “அதைப் பார்கவி பார்த்துக்கிறா. கங்கை நதிப் புறத்துக் கோதுமை பண்டம், காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்கிற பின் பாதியையும் சேர்த்து அவளும் அஜித்தும் பூர்த்தி செய்யறாங்க...”
“சபாஷ்டா பாண்டியா! போட்டியே ஒரு போடு! அப்ப பாரதியாருக்குக் கெட்ட பெயர் வரப்படாதுங்கிற நல்லெண் ணத்திலே தான் நீங்க அண்ணனும் தங்கையுமா இப்படி இனம், மொழி, பிரதேசம் கடிந்து காதலிக்கிறீங்களாக்கும்.”
“அதுமட்டுமில்லை! இன, மத, மொழி, பிரதேச வெறிகளைத் தணிக்கவும் ஒருமைப்பாடு பரவவும் இந்தக் குருபுரம் ஃபேமிலியிலிருந்து ஒரு ஸ்மால் நேஷனல் காண்ட்ரிபியூஷன். எ ஹம்பிள் பிகினிங்...” “பரவாயில்லேப்பா! பேச்சாளனாயிருக்கிறதாலே உனக்கு ஒரு வசதி! சின்ன விஷயங்களைக் கூட நேஷனல் லெவலுக்கு என்லார்ஜ் பண்ணிப் பேசக் கத்துக்கிட்டே?” “சும்மா பேசறது மட்டுமில்லை சார்! ஆதாரத்தோட நிரூபிப்பேன் சார். இப்போ பார்கவி தீவிரமா இந்தி படிக்குது. அஜீத் ‘முப்பது நாளில் தமிழ் கற்கும் முறைகள்’ங்கிற இங்கிலீஷ் புத்தகத்தை நேத்துத்தான் ஏர்போர்ட்லே வாங்கி யிருக்கான். ஒரு தமிழ் வாத்தியார் - வித் இந்தி ஒர்க்கிங் நாலட்ஜ் அல்லது இங்கிலீஷ் ஒர்க்கிங் நாலஜ்ட் தேடிகிட்டே இருக்கான். சல்லடை போட்டுக் சலிச்சாலும் அந்த ரேர் காம்பினேஷன்ல ஆள் அகப்படவே மாட்டேன்றான். இங்கே தமிழ் மட்டுமே தெரிஞ்ச தமிழறிஞர்கள்தான் ஆப்படறாங்க. அதனலே தமிழ் தெரியாதவனுக்கு தமிழ் கற்பிக்கிற மாதிரி ஆள் அகப்படறதே கஷ்டமாயிருக்கு. தமிழை வேற ஏரியாவிலே பரப்பணும்னாலும் அதுக்குத் தமிழோட இன்னொரு பாஷையாவது கூடத் தெரிய வேண்டியிருக்கு, இங்கே அப்படி இல்லே சார், நான் மலையாளம் படிக்கிறேன். தேவசேனா தமிழ் கத்துக்குது. இப்படி எங்களாலே முடிஞ்ச மட்டும் பாரதியாருக்கு நல்ல பேர் தேடிக் குடுத்திட்டிருக்கோம்! அவர் மானத்தைக் காப்பாத்திக் கொண்டு வருகிறோம்.” “எமகாதகன்டா நீ! ஏதோ பாரதியார் உன்னைத் தேடி வந்து, ‘அப்பனே! தேவசேனையைக் காதலிச்சு என் வாக்கை மெய்ப்பிப்பாயாக’ன்னு வரம் கேட்ட மாதிரியில்லே அடிச்சு விடறே” “அவரு வந்து கேட்பாரா என்ன? இதெல்லாம் நாமாப் புரிஞ்சுக்கிட்டுப் பண்ண வேண்டியது தான் ஆடிட்டர் சார்!” இப்படி அவன் அதை வெகு சகஜமாகவும் சவடாலாகவும் சொல்லிய விதத்தை ஆடிட்டர் சுவாரஸ்யமாக ரசித்துக் கேட்டார். பயல் கெட்டிக்காரன்தான் என்று உள்ளூர வியந்தார். மனசுக்குள் பாராட்டினார் கொண்டாடினார். “தோணிகள் ஓட்டுவது, சுந்தரத் தெலுங்கில் பாடுவது எல்லாம் என்ன ஆறது குமரேசன்?” “அதெல்லாம் அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சுச் செய்யலாம்னு இருக்கோம்.” “ஆக ஒருமைப்பாட்டு நோக்கம் விணாயிடப்படாதுங்கிற பரந்த எண்ணத்திலேதான் நீங்கள்ளாம் இந்த மாதிரிக் காதலிக்கிறீங்களாக்கும்?” “ஆமாம் சார்! பாரதியார் வாக்கை நிறைவேத்தறது என்னை மாதிரி நல்ல தமிழனுக்கு உயிர் இலட்சியமா இருக் கணுமில்லையா?” “அடே நல்ல தமிழா! ‘காற்றிலேறி அவ்விண்ணையும் சாடுவோம் காதற் பெண்கள் கடைக் கண் பணியிலே’ன்னு கூடப் பாரதியார் பாடியிருக்காரே!” “எனக்குத் தேவசேனாவோ அஜீத்துக்குப் பார்கவியோ அப்படிக் கட்டளையிட்டால் நாங்கள் செய்யத் தயாராயிருக்கிறோம். ஆனால் எங்கள் காதலிகளுக்கு எங்களைப் பற்றி நன்றாகப் புரியுமாதலால் அப்படி எல்லாம் ரிஸ்க் எடுத்துக் கொண்டு சிரமப்படமாட்டார்கள்.” “உன் மலையாளப் படிப்பு எந்த அளவு வந்திருக்கு? கிளாஸ்லே உன்னோட நிலைமை என்ன? ரேங்க் ஏதாவது வருமா?” “வொர்க்கிங் நாலட்ஜ் வந்திருக்கு!” “காதல்லே வொர்க்கிங் நாலட்ஜாவது ஒண்ணாவது? என்னப்பா நீ இப்படி எல்லாம் அசிங்கமாப் பேசிக்கிட்டிருக்கே?” “அப்படிச் சொன்னீங்கன்னாக் காதலுக்குப் பாஷையே வேணாம். ‘சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை’ங்கிறாரு பாரதியார்.” “அடடே! நீ சொல்றதைப் பார்த்தாப் பாரதியார் உனக்கு வசதியாகவே எல்லாம் சொல்லிட்டுப் போயிருக் கிறார்னு தெரியுது.” குமரேசன் ஆடிட்டரை நோக்கி ‘ஆம்’ என்பது போல் தலையை அசைத்தான். |