18 ‘ஏப்ரல் முதல் வாரம் திரும்புவார்’ - என்று சிவவடி வேலு தம்பதிகள் பற்றி மறுபடி டெலக்ஸ் கிடைத்தது. குப்தாவும், ஆடிட்டரும் சித்திரை பிறந்து ஏப்ரல் பதினாறில் ஒரு முகூர்த்தம் பார்த்து அஜீத்-பார்கவி, குமரேசன்-தேவசேனா திருமணத்திற்கு ரகசியமாக ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். ஏப்ரல் முதல் வாரமே சிவவடிவேலு தம்பதி திரும்பினால் கல்யாண ஏற்பாடுகளில் ஏதாவது குழப்பமாகலாம் என்று பயம் இருந்தது. “எங்கப்பா இங்கே ஏப்ரல் பிறந்ததுமே வந்துடாமே சிங்கப்பூரிலியோ, கோலாலம்பூரிலேயோ பத்துநாள் டூர் புரோக்ராமை நீட்டச் சொல்லுங்க. மாதவி டூர்காரன்தான் உங்க நெருங்கின தோஸ்த் ஆச்சே? இப்படி அப்பா, அம்மாவை மட்டும் லாஸ்ட் போர்டிங் பாயிண்டிலே அதிக நாள் நீட்டிக்கிறதுனாலே அடிஷனல் செலவு ஆளுக்கூடப் பரவாயில்லே. இங்கே வந்தார்னா ஏதாச்சும் நம்மை ஏப்ரல் ஃபூல் பண்ணிடுவாரு... ஜாக்கிரதை. எல்லா ஏற்பாடுமே எகிறிப் போயிரும்,” என்று குமரேசன் ஆடிட்டரை எச்சரித்தான். சம்பந்தப்பட்ட மற்றவர்களுக்கும் அது சரியான யோசனையாகவே பட்டது. செலவுகூட ஆகுமென்று தெரிந்தால் சிவவடிவேலு உயிரையே விட்டுவிடுவார். பந்துநாள் நீட்டித் தங்க வைக்க என்ன செய்வதென்று யோசனை செய்தார்கள். அதற்கும் குமரேசனே ஒரு வழி கூறினான்: “என்ன யோசிக்கிறீங்க? கிரகங்கள், தசா புத்திகள் லாம் பின்னே எதுக்காக இருக்குங்கிறேன்! கடுக்கையூர்க் கண்ணபிரான் ஜோசியர் தலையிலே பழியைப் போடுங்க. அவரைக் கூப்பிட்டுத் தசா புத்தி சரியாகாததாலே ஏப்ரல் பதினைந்தாம் தேதி இரவு சிங்கப்பூர்லே ஃப்ளைட் பிடிச்சுப் பதினாறாந் தேதி காலையில் இங்கே வர்ற மாதிரிப் புறப்படச் சொல்லி அவர் கையெழுத்தோடவே ஒரு கேபிள் அல்லது டெலக்ஸ் குடுக்க ஏற்பாடு பண்ணுங்க.” “கடுக்கையூர் என்ன சொல்லுவாரோ...” “நூறு ரூபாய் தட்சிணை வையுங்க. தசா புத்தி கிரகம் சனி, குரு, ராகு, கேது எல்லாமே அப்பாலே நாம சொல்றபடியே கேக்க வச்சிடுவாரு.” உடனே கடுக்கையூராரை வரவழைத்து அவர் சொல்வதாக அதே பாணியில் கேபிள் கொடுத்தார்கள். அப்படியே அரேன்ஞ் செய்வதாக மறுநாள் பதிலும் கிடைத்து விட்டது. எல்லாரும் நிம்மதியாக மூச்சு விட்டார்கள். ஆடிட்டர் குமரேசனிடம் சொன்னார்: “நீ உங்கப்பாவைப் பத்தி அதிகமா ஒர்ரி பண்ணிக்கிறே குமரேசா! நான் பந்தயம் வேணும்னாப் போடறேன். அவர் பழைய கஞ்சத்தனம், கன்ஸர்வேடிஸம், குறுகிய மனப்பான்மை எல்லாத்தையும் விட்டுவிட்டுப் புது மனுஷனா மனசு விசாலமடைஞ்சுதான் திரும்பி வரப்போறாரு.”
“எப்படி அத்தனை உறுதியாகச் சொல்றீங்க! ஏதாச்சும், அடையாளம் இருக்கா?”
“அடையாளம்லாம் ஒண்ணுமில்லே! பிரயாணமும் புது இடமும் புது மனிதர்களும் எப்படிப்பட்ட ஆளையும் மாத்திப்பிடும்ங்கற உலக நியதியை வச்சு அனுமானம் பண்ணித்தான் சொல்றேன்.” “எங்கப்பா விஷயத்திலே உங்க அனுமானம் சரியா ஒத்து வராது! ‘நீருட்கிடப்பினும் கல்லிற்கு மெல்லென்றல் சால அரிதாகும்’னு ஒரு பழைய தமிழ்ப்பாட்டு இருக்கு சார்! அதுக்கு அர்த்தம் ‘கருங்கல் எத்தனை யுகமாகத் தண்ணீருக்குள் ஊறினாலும் அதனால் சிறிதும் கரைந்து போய் விடாது’ என்பது. எங்கப்பா மனசும் அந்தக் கருங்கல் மாதிரிதான்.” “அவர் உன்னைச் சோம்பேறி, தறுதலைன்னெல்லாம் திட்டிப்பிட்டாருங்கிறதுனாலே நீ அவர் மேலேயும் கரும்பாயிரத்தும் மேலேயும் ரொம்ப பிரெஜிடிஸ் ஆகியிருக்கே. அதுதான் உன்னோட கோபத்துக்குக் காரணம் குமரேசன்!” “கோபமாவது ஒண்ணாவது? எனக்கு அவர் மேலே இருக்கிறதெல்லாம் வெறும் பரிதாபம்தான் சார். கோபப்படறது வேறே. தேறாத கேஸ்னு பரிதாபப்படறது வேறே.” “அதெல்லாம் உனக்கு இருக்கிற வீண் பிரமை குமரேசன்! ரொம்பப் பெருந்தன்மையா உங்களை எல்லாம் ஆசீர்வாதம் பண்ணிட்டுப் பிஸினஸை எல்லாம் உங்கிட்டவும், தண்டபாணி கிட்டவும் ஒப்படைச்சிட்டு ஹாயாக ரிட்டயாட் ஆகிடப் போறாரு அவரு.” “ஒதுங்கறது வேற, ஒதுக்கப்படறது வேற. துறக்கிறது வேற, துறக்க வைக்கப்படறது வேற. கிளவரான ஏற்பாடு மூலம் நாமே அவரை ஒதுக்கியாச்சு. இனிமே ஒதுங்கறது முடியாத காரியம். இப்பப் பந்தயம் நமக்குள்ளே அது இல்லே! எங்கப்பா மனமாற்றத்தோடு வருகிறாரா இல்லையா என்பதுதான்! அதுக்கு என்ன பதில் சொல்றீங்க? கரெக்ட்டா ஒரு வாக்கியத்திலே சொல்லுங்க.” “கண்டிப்பாக மனமாற்றத்தோடு வருகிறார்னு சொல்கிறேன்.” “நான் இல்லேங்கிறேன். பந்தயம் என்ன சொல்லுங்க?” “ஆயிரம் ரூபாய் வெச்சுக்கலாம்.” “சீ! பிச்சைக் காசு! குருபுரம் சார்ட்டர்ட் அகௌண்ட் அஸோஸியேஷன் தலைவர், ஓட்டல் நியூ பார்கவியின் ஃபைனான்ஷியல் அட்வைஸர் உயர் திரு அனந்தசாமி சொல்ற தொகையா இது? கேவலம் சார்! ஐயாயிரம்னாவது சொல் லுங்க... உங்க மானம் கப்பலேறாது.” “சரி, தொலை. ஐயாயிரம்னே வச்சுப்போம்.” “அப்போ பந்தயத் தொகை ஐயாயிரம்னு ஃபிக்ஸ் ஆயிடிச்சி! ஆனா ஒரு மனுஷன் மாறிட்டானா இல்லியான்னு கண்டு பிடிக்கறது கொஞ்சம் ஸ்லோ பிராசஸ். நீங்களே ஐயாயிரத்தை எங்கிட்டப் பறிக்கிறதுக்காக எங்கப்பாவைத் தன்னைக் கட்சி மாறின மாதிரி நடிக்கச் சொல்லி என்னை ‘சீட்’ பண்ணிட முடியும். அதனலே அவர் பிளேன்லே இருந்து கீழே இறங்கினதும் இன்னவாக்கியம் தான் வாயிலே வரும். அந்த வாக்கியமே அவர் மாறலங்கிறதுக்கு அத்தாட்சின்னு ஒரு வாக்கியத்தை இப்பவே எழுதி நான் உங்ககிட்டே காமிக் கிறேன். அதை நீங்க ஒத்துக்கிட்டா அந்த செண்டென்ஸை அப்படியே எழுதி உங்க முன்னாடியே கவர்லே போட்டு ஒட்டி சீல் வச்சு ரெண்டு பேருக்கும் பொதுவா அதைக் குப்தாகிட்ட டெபாஸிட் பண்ணிடுவோம். எங்கப்பாவை ஏர் போர்ட்லே ரெஸிவ் பண்றப்போ, நான் எழுதிக் குடுத்த செண்டென்ஸைத் தான் அவர் முதல்லே சொல்றாரான்னு அவர் வந்து இறங்கினப்புறம் குப்தா சீல் வச்ச கவரைப் பிரிச்சுப் பார்த்து உறுதி செய்து கொள்ளலாம். அவர் பேசற முதல் வாக்கியமும் சீல்டு கவர்லே உங்களுக்குக் காண்பிச்சப்புறம் நான் ஒட்டிச் சீல் வைச்சுக் குடுக்கிற வாக்கியமும் ஒண்ணாயிருந்தால் அன்னிக்கி - அதாவது ஏப்ரல் 16 ந் தேதி மாலைக்குள் நீங்க எனக்கு ஐயாயிரம் ரூபாய் குடுத்திடணும். அந்த மாதிரி இல்லாமே அவர் வேற வாக்கியத்தைப் பேசிட்டார்னா நான் உங்களுக்கு அதே நேரத்திற்குள் ஐயாயிரம் ரூபாய் குடுத்துடுவேன்.” “எல்லாம் சரி! ரொம்பக் காம்ப்ளிகேடட் ஆகச் சொல்றியேப்பா? அதென்ன கணக்கு? ஒரு வாக்கியம்கிற நிபந்தனை எதுக்கு? மாறியிருக்கிறாரா இல்லையான்னு உங்கப்பாவைக் கவனிச்சு முடிவு பண்ணினாப் போறாதா?” “அது ரொம்பச் சிக்கல்! அந்த ஒரு வாக்கியத்தை நீங்க சம்மதிச்சா இப்பவே எழுதிக் காண்பிக்க நான் தயார்...” “எங்கே எழுதிக் காட்டு! பார்க்கலாம்.” குமரேசன் தன் சட்டைப் பையிலிருந்து ஒரு துண்டுத் தாளை எடுத்து அவசரமாக இரண்டே இரண்டு சொற்களை எழுதி ஒரு கேள்விக் குறியையும் முடிவில் போட்டு அவரிடம் காட்டினான். அதைப் படித்துவிட்டு, “இதுக்கு என்ன அர்த்தம்? இந்த ரெண்டு வார்த்தையைத்தான் அவர் முதல்லே கேட்பார்னு சொல்றியா?” “ஆமாம்! இப்படிக் கேட்டார்னா நீங்க எனக்குப் பந்தயத் தொகை தரணும். இப்படிக் கேட்காவிட்டாலும் - வேறு எப்படிக் கேட்டாலும் நான் உங்களுக்குப் பந்தயத் தொகையைத் தரணும். தந்து விடுவேன்.” “அப்படியானா எனக்குத்தான் சான்ஸ் அதிகம். சம்மதிக்கிறேன்” என்றார் ஆடிட்டர். திட்டமிட்டபடியே அந்தத் துண்டுத் தாளை ஒரு கவரில் போட்டு நாலு முனையிலும் நடுவிலும் அரக்கு சீல் வைத்து விவரம் சொல்லி இருவருமாகக் குப்தாவிடம் போய்க் கொடுத்தார்கள். குப்தா கேட்டான், “இதிலே நான் உங்க ரெண்டு பேருக்கும் ரெஃபரியா? விரக்தியிலே இரண்டு பேருமாச் சேர்ந்து ரெஃபரியை உதைக்க மாட்டீங்களே?” “அதெல்லாம் உங்களுக்கு எந்த அபாயமும் வராது. பிளேன்ல இருந்து இறங்கினதும் எங்கப்பா பேசற வாக்கியமும் இந்த சீல்டு கவருக்குள்ள எழுதி வச்சிருக்குற வாக்கியமும் ஒண்ணா இருந்தா நான் ஜெயிக்கிறேன். இல்லாட்டி மிஸ்டர் அனந்த் ஜெயிக்கிறார்,” என்றான் குமரேசன். “சரி! உங்க இரண்டு பேரிட்டவும் பணப் புழக்கம் அதிகமா இருக்குன்னு நினைக்கிறேன். அதான் பந்தயம் கிந்தயம்ன்னு ஐயாயிரம் ரூபாயை வாரி விடறீங்க!” “ஐயாயிரம் ரூபாய் மட்டும் முக்கியமில்லை! இதிலே தெரியற முடிவு யார் நிஜமான அறிவுஜீவிங்கிறதைத் தீர்மானம் பண்ணிடும்,” என்று குமரேசன் சொன்னவுடன், “இந்தாப்பா குமரு. எனக்கு ரூபாய் கிடைச்சாலே போதும். இந்த அறிவு ஜீவி, அது இது எல்லாம் நீயே வச்சுக்க...” என மறுத்தார் ஆடிட்டர். “கவலையே படாதீங்க! பணம், அறிவு ஜீவிப் பட்டம் ரெண்டுமே எனக்குத்தான்,” என்று தீர்மானமாகப் பதில் வந்தது குமரேசனிடமிருந்து. “அப்படி என்னதான் இதுக்குள்ளே எழுதி சீல் வச்சிருக்கீங்க? நான் பிரிச்சுப் பார்க்கலாமா?” “இப்பப் பிரிக்கப்படாது மிஸ்டர் குப்தா! எங்கப்பா வந்து இறங்கி முதல் வாக்கியத்தைப் பேசினதும் பிரிக்கலாம்.” “படு மர்மமாக இருக்கிறதே?” “மர்மம்தான்! கவரைப் பத்திரமாக வச்சிக்குங்க. சீல் உடைஞ்சிருந்தா ஒத்துக்க மாட்டோம்.” “பயமுறுத்தாதீங்க. பத்திரமா இருக்கும். குப்தா இருவருக்கும் உறுதி கூறி அனுப்பினான். அவனிடம் கவரை அளித்துவிட்டுத் திரும்பும்போது மறுபடியும் ஆடிட்டர் குமரேசனைப் பிடித்துக் கொண்டார். “அது எப்படி அப்பா அத்தனை கரெக்டா இப்படித்தான் எங்கப்பா கேட்பார்னு என்னமோ கம்ப்யூட்டர்லே புரோக்ராம் பண்ணிவச்சு ஆன்ஸர் வரவழைச்ச மாதிரி உன்னாலே எழுதிக் குடுக்க முடியுது?” “ஆடிட்டர் சார்! அதுதான் பட்டிமன்ற மூளை! எதிரி என்ன பேசுவார்னு தீர்மானிச்சு முன்கூட்டியே அதைச் சமாளிக்க நம்மைத் தயார் பண்ணிக்கிற சாமர்த்தியம் பட்டி மன்றங்கள் எனக்குக் கற்றுத் தந்த செல்வம்.” “சும்மாப் புருடா விடாதே அப்பனே! இதிலே என்னமோ இருக்கு. இல்லாட்டி நீ இத்தினி துணிச்சலாப் பந்தயம் போடமாட்டே?” “நீங்க மெல்ல இப்போ பேக் அடிக்கிற மாதிரித் தெரியுதே ஆடிட்டர் சார்! விஷயம் முடிஞ்சுது. இனிமேல் பந்தயம் பந்தயம்தான். இப்போ வேறே விஷயம் எதினாச்சும் பேசுங்க. இது போதும்” என்றான் குமரேசன். ஆடிட்டருக்குத் தைரியமாகவும் இருந்தது; பயமாகவும் இருந்தது. |