19 கோட்டயம் இன்ஸ்டிட்யூட்டில் விசாரித்துத் தேவ சேனாவின் பெற்றோர் விலாசத்தை வாங்கி அவர்கள் ஊரான இரிஞ்சால குடாவுக்குப் போனபோது தான் ஆடிட்டரும் தண்டபாணியும் வேறொரு புது உண்மையைத் தெரிந்து கொள்ள முடிந்தது. இ.ஆர்.எம்.தேவசேனா என்ற அவளுடைய முழுப் பெயர் இரிஞ்சால குடா ராபின்ஸன் மேரி தேவசேனா, என்பது என அறிந்ததும் இதை ஏன் குமரேசன் தங்களிடம் முன்பே சொல்லவில்லை என வியந்தார்கள் அவர்கள். அவர்களுக்கு இந்தப் புது விஷயம் சிறிது அதிர்ச்சியைக் கொடுத்தது. தேவசேனாவின் பெற்றோர் பரமஏழைகள். தந்தை ராபின்சன் ஒரு மரம் அறுக்கிற ஸா மில்லில் வேலை பார்த்தார். தாயும் அதிலேயே கூலி வேலை செய்தாள். மொத்தம் ஆறு பெண்கள் அவர்களுக்கு. தேவசேனாவின் சம்பளம் இவர்களுக்குப் பெரிய உதவியாயிருந்திருக்கும் எனத் தோன்றியது. ஆனால் இந்தக் கல்யாணத்தில் அவர்களுக்கு ஒன்றும் ஆட்சேபணை இருக்கவில்லை. “அவள் எங்கேயாவது சுகமா ஜீவிச்சால் எனிக்கு அது மதி” என்றார் ராபின்சன். “நீங்க இண்டு கஸ்டம்ஸ்படி மேரேஜ் பண்ணிக்கிறதிலே கூட ஆட்சேபணை இல்லே, ஆனா. அதுக்கப்புறமாவது மேரேஜை ரிஜிஸ்டர் பண்ணிடணும். அது எங்களுக்கும் ஸேஃப்ட்டி” என்றார். கல்யாணத்துக்கு மூன்று நான்கு பேர் வருவதாக ஒப்புக் கொண்டார்கள். “வந்து போகச் செலவுக்கு இருக்கட்டும்” என்று ஆடிட்டர் ஐந்நூறு ரூபாய் ரொக்கமாக எடுத்துக் கொடுத்த போது உபசாரத்துக்காகக் கூட யாரும் வேண்டாம் என்று மறுக்கவில்லை. இவர்கள் ஊர் திரும்பியதும் குமரேசனைத் தனியாகக் கூப்பிட்டு விவரம் சொன்னதும் அதில் அவன் எந்த அதிர்ச்சியும் அடையவில்லை. “ஆமாம்! அது கிறிஸ்டியன் கேர்ள்தான். இதுலே நான் எந்த வேற்றுமையையும் உணரலே. அதனாலே உங்ககிட்ட சொல்லவும் விருப்பலே” என்றான். “அவ ஃபாதர் அதாவது உன்னோட வுட் பீ ஃபாதர் இன்லா மிஸ்டர் ராபின்ஸன் ஒரு ஸா மில்லிலே மரம் அறுக்கிற தொழிலாளி.” “இப்படி ஒரு தொழிலாளியின் மகளை மணக்கிறதுக்காகப் பெருமைப் படறேன். என் தங்கை ஒரு பெரிய முதலாளி மகனை மணக்கிறாள். நான் ஒரு பரம ஏழைத் தொழிலாளியின் மகளை மணக்கிறேன். இரண்டு கல்யாணமும் ஒரே மேடையிலே நடக்குது.”
“சும்மா எங்களுக்கு தெரிஞ்ச தகவல்களை உனக்கு மறைக்காமே எல்லாம் சொல்லணும்கிறதுக்காக இதைச் சொல்றோம். தப்பா நெனைச்சுக்காதே. வி ஆல் அக்ரி வித் யூ” என்றார் ஆடிட்டர்.
கல்யாணப் பத்திரிகைகள் அச்சாயின. மண விழா முழுவதையும் தன் பொறுப்பில் வீடியோ எடுக்க இவர்களுக்கு வேண்டிய ஒரு புரொட்யூசர் முன் வந்தார். இரட்டை நாதஸ் வரம், மாலையில் நாட்டியக் கச்சேரி எல்லாம் ஏற்பாடு ஆயிற்று. குமரேசன் விரும்பியபடி இரவில் ஒரு பட்டிமண்டபம் வேறு ஏற்பாடு ஆகியிருந்தது. “அப்பாவை வரவேற்க ஏர்போர்ப் போக வேண்டிய நேரத்தில் நான் தேவசேனாவுக்கும் அஜீத் பார்கவிக்கும் தாலி கட்டிக்கிட்டிருப்போம். அதனாலே நாங்க அவரை வரவேற்க முடியாது. குப்தா சார் உங்ககூட ஆடிட்டர் வருவார். மறக்காமல் அந்த சீல்டு கவரை எடுத்திட்டுப் போங்க. எனக்கு ஒரு ஐயாயிரம் ரூபாய் வரும்படி இருக்கும்” என்றான் குமரேசன். “சும்மா ரீல் விடாதே! அது உனக்குத்தான்னு என்ன உறுதி? வரும்படி எனக்குக்கூட இருக்கலாம். உனக்கு நஷ்ட மாகவும் இருக்கலாம். குருட்டாம் போக்கிலே கெஸ் பண்ணி இதைத்தான் பேசுவார்னு ரெண்டு வார்த்தையை நீயா எழுதிக் கொடுத்துட்டாப்லே ஆச்சா?” என்று ஆடிட்டர் குறுக்கிட்டுச் சீறினார். “பார்க்கலாமே?” என்று அமுத்தலாகப் பதில் சொன்னான் குமரேசன். “இந்தியாவில் அவர் லாண்ட் ஆகிற தினத்தன்று பேப்பர்களில் வருகிற மாதிரி விளம்பரம் கொடுக்கணுமே? குமரேசா தமிழில் அழகா ஒரு டிராஃப்ட் எழுது.” “என்னன்னு எழுதறது. ஆடிட்டர் சார்? விவரம் சொல்லுங்க.” “15-4 அன்று இரவு 12 மணிக்கு அவர் மெட்ராஸ்ல்லே இறங்கறார். கஸ்டம்ஸ் ஃபார்மாலிட்டிஸ் முடிஞ்சி அவர் வெளியேற இரவு 2 மணி ஆகும். காலையிலே அஞ்சு மணிக்கு மதுரை ஃப்ளைட்டிற்கு போர்டிங் பாஸ் கொடுப்பாங்க. 6 மணிக்கு டேக் ஆஃப். ஏழு முப்பத்தைஞ்சுக்கு மதுரை லேண்டிங். ஆறே காலுக்கு நம்ம முகூர்த்த நேரம்.” “இதெல்லாமா விளம்பரத்திலே வரணும்?” “இந்தக் கிண்டல்தானே வேண்டாம்கிறது? 16-4. அன்று காலைப் பேப்பரில் விளம்பரம் வரணும். அது மாதிரி எழுது.” ‘வெளிநாடுகளில் வெற்றி வாகை சூடிப் பயணம் முடித்து வரும் உயர்திரு சிவவடிவேலு அவர்களையும் லேடி சிவவடிவேலு அவர்களையும் வரவேற்கிறோம்.
இப்படிக்கு, மகள் பார்கவி மகன் தண்டபாணி, குமரேசன் மற்றும் ஊழியர்கள்’ -என்று எழுதி, “சரியா இருக்கான்னு பாருங்க” என்று ஆடிட்டரிடம் நீட்டினான் குமரேசன். “அப்ரப்ட்டா பார்கவின்னு போடாதே! அருமை மகள் குமாரி பார்கவி அல்லது செல்வி பார்கவின்னு போடு.” “தப்பு விளம்பரம் மத்தவங்க கண்ணிலே படற சமயத்திலே சட்டப்படி அவள் திருமதி பார்கவி அல்லது பார்கவி அஜித்குமார் ஆயிடறாள்.” “அப்போ எல்லோர் பேரையும் போட்டுடுப்பா.” “ஓகோ! உங்க பேரை இன்னும் நான் போடலியே? எத்தனை பெரிய மடையன் நான்! கொடுங்க திருத்திக் கொடுத்துடறேன்” என்று அந்தத் தாளை வாங்கி மறுபடி புதிதாய் எழுதலானான். இப்போது இப்படிக்கு என்பதன் கீழே பெயர்கள் கூடி யிருந்தன. ‘திரு. சந்திரஜித் குப்தா - திருமதி சுஷ்மா குப்தா, குருசரண் வர்மா, ஆடிட்டர் அனந்த், மகள் பார்கவி, ஆஜித் குமார், குமரேசன் - தேவசேனா குமரேசன், தண்டபாணி, திருமதி தண்டபாணி, கடுக்கையூர் ஜோதிடர் கண்ணபிரான் மற்றும் விசுவாச ஊழியர்கள்” என்று போட்டு அவரிடம் கொடுத்தான். குமரேசன் விளம்பரத்தை எழுதிப் பேப்பர்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்தான். கல்யாணத்துக்கு ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். வீடும், ஓட்டலும் களை கட்டின. சில சூப்பர் ஸ்டார் நடிகர்களும், நடிகைகளும் குருபுரமே வந்துவிட்டதால் பார்கவியில் திருவிழாக் கூட்டம் கூடிவிட்டது. திருமணத்துக்கு முந்திய நாள் குருபுரமே தேர்த் திருவிழாவுக்குத் தயாரானது போல் தயாராயிருந்தது. எங்கே பார்த்தாலும் சீரியல் செட் ஒளி விளக்குகள். ஊர் முழுவதும் பார்கவி - குமரேசன் அவர்களுடைய திருமணம் பற்றிய பேச்சு. மறுநாள் காலை முகூர்த்த வேளையில் எல்லோருமே மதுரை விமான நிலையம் போக முடியாது என்பதால் சிவவடிவேலு தம்பதிகளை வரவேற்க ஆடிட்டரும் குப்தாவும் மட்டும் போக இருந்தனர். |