2 பிஸினஸ் டாக்டர் சந்திரஜித் குப்தாவுக்குச் சிவவடி வேலுவின் ஆடிட்டர் கடிதம் எழுதினார். மூன்றே நாட்களில் குப்தாவிடமிருந்து பதில் வந்துவிட்டது. சாதகமான பதில் தான். தான் அப்போது பம்பாயில் ஒரு ஸிக் இன்டஸ்ட்ரி அதாவது நொடித்து நோய்வாய்ப்பட்ட தொழிலைச் சரி செய்ய ஆப்ஸர்வேஷனுக்காகப் போய்க் கொண்டிருப்பதாகவும் இந்த மாதம் முழுவதும் அது சம்பந்தமாகச் செலவு செய்ய வேண்டியிருக்கும் என்றும் அடுத்த மாதம் முதல் வாரத்தில் தான் குருபுரம் வர முடியும் என்றும் குப்தா பதில் எழுதியிருந்தான். தன்னோடு தன் மனைவியும் வரக்கூடும் என்று அவன் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தான். விமானப் பயண டிக்கெட்டுக்கு ஏற்பாடு செய்யவும் கேட்டுக் கொண்டிருந்தான். “விமானத்திலேயா? ரொம்பச் செலவு ஆகுங்களே?” என்று இழுத்தார் சிவவடிவேலு. சிவவடிவேலுவின் வெகுளித்தனத்தை ஆடிட்டர் வியந்தார். “வேற வழியே இல்லை. முழுக்க இரயில் பிரயாணமே பண்ணினால் பிரயாணத்திலேயே எட்டு ஒன்பது நாள் ஆகி விடும். குப்தா ரொம்ப பிஸி மேன். இன்னிக்குக் காலையிலே கல்கத்தா, மத்தியானம் அஹமதாபாத், மறுநாள் பம்பாய், அடுத்த நாள் டில்லின்னு அலையறவன். அவனோட வேலை அப்படி, நாம நேரே போய் அழைச்சிட்டு வரணும்” என்று ஆடிட்டர் வற்புறுத்தினார். “நாம எதுக்குப் போகணுங்க? மதுரையிலேர்ந்து அந்த ஆளையே ஒரு டாக்ஸி பிடிச்சுக் குருபுரம் வரச் சொல்லிறலாம். அல்லது என் டாட்டர் பார்கவி மதுரையிலே ஹாஸ்டல்லே தங்கிக் காலேஜ்லே படிக்குது. அது போய் அவங்களை ஏர் போர்ட்டிலே சந்திச்சு ஒரு டாக்ஸி பேசி இங்கே அனுப்பிடலாமே? இங்கேயிருந்து நாம போற ஒரு டிரிப் பெட்ரோலும், டயர் தேய்மானமுமாவது மிச்சம் ஆகுமே? இப்போ இருக்கிற நஷ்டத்திலே அதையாவது மிச்சப் படுத்தலாமே?” ஆடிட்டருக்கு அழுவதா சிரிப்பதா என்று புரியவில்லை. கல்ச்சர், மேனர்ஸ் இவற்றையெல்லாம் பற்றிச் சிவவடி வேலுவுக்கு எப்படிப் புரிய வைப்பதென்று தெரியாமல் ஆடிட்டர் அனந்த் திணறினர். “நீங்க அப்படிச் செய்வது நல்லா இருக்காதுங்க. நம்ம வேலையா டில்லியிலிருந்து வருகிற ஒரு விருந்தினரை நாமே போய் அழைச்சிட்டு வர்றதுதான் முறை.” “அப்படி நீங்க நினைக்கிறதா இருந்தால் சரி. நான் என்ன சொல்றதுக்கு இருக்கு?” என்று வேண்டா வெறுப்பாக இணங்கினர் சிவவடிவேலு.
ஆனால் குப்தாவும் அவன் மனைவியும் மதுரை வருவதற்கு நான்கு நாட்கள் முன்னதாகவே அவர் மகள் சூட்கேஸும் கையுமாகக் குருபுரத்துக்கு வந்து சேர்ந்தாள். ஏதோ போராட்டம் காரணமாகக் கல்லூரியையும் ஹாஸ்டலையும் இரண்டு வாரங்களுக்கு இழுத்து முடிவிட்டார்களாம்!
“இப்போ அதுவும் நல்லதுதான். மிஸஸ் குப்தாவுக்கு உதவியாக இவளை இருக்கச் சொல்லிடலாம்” என்றார் ஆடிட்டர். துணைக்கும் உபசரணைக்கும் ஓர் ஆள் தேவைப்படுகிற அளவு இருந்தால், மிஸஸ் குப்தா இன்னும் என்னென்ன செலவு வைக்கப் போகிறாளோ என்று செலவைப் பற்றி எண்ணிக் கவலைப்படத் தொடங்கினர் சிவவடிவேலு, நடுவில் கல்லூரி மூடப்பட்டு மகள் ஊர் வந்ததில் அவருக்கு ஏகப்பட்ட வருத்தம். ‘போராட்டம் கீராட்டம் என்று அடிக்கடி படிப்புப் பாழாகிறதே?’ என்று கவலைப் பட்டார் அவர். குருபுரம் மிராசுதார் சிவவடிவேலு அதிகப் படிப்பறிவு இல்லாத ஒரு நாட்டுப்புறப் பணக்காரர். தழும்பேறிய கன்ஸர்வேடிவ் மனப்பான்மையும் கஞ்சத்தனமும் உள்ளவர். எதையும் துணிந்து செய்யாதவர். தயங்கித் தயங்கி அடி எடுத்து வைப்பவர். பத்துக் காசு செலவழிப்பதற்கு ஐம்பது ரூபாய் பெறுமானமுள்ள கவலையைப் படுகிறவர். தந்தையின் முதலீட்டில் அவரோட கூட இருந்து தொழில் நடத்தாமல் மூத்த மகன் தண்டபாணி, தனியே உத்தியோகத்துக்குப் புறப்பட்டுப் போனது இதனால்தான் என்பது ஆடிட்டருக்கே நன்றாகத் தெரியும். இப்படி ஒரு குடும்பத்தில் பிறந்தும், இரண்டாவது பிள்ளை குமரேசன், ‘முதலாளித்துவத்தின் முதுகெலும்பை முறித்து’ - என்று பட்டி மன்றங்களில் முழங்கிக் கொண்டிருந் தான். பெண் ‘பார்கவி’ மட்டும் சாதுவாய் அப்பாவுக்கு அடங்கிய குழந்தையாகக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந் தாள். சிவவடிவேலுவுக்குப் பார்கவி செல்லப் பெண். அதனால் தான் தாம் கட்டிய ஓட்டலுக்குப் ‘பார்கவி' என்றே பெயர் சூட்டியிருந்தார். “குடும்ப நிர்வாகம், சொத்து, எஸ்டேட் நிர்வாகம் இவைகளைப் பையன்களிடம் பிரித்து விட்டு விட்டு நிம்மதியாக மனைவியோடு காசி, இராமேஸ்வரம் என்று க்ஷேத்ராடனம் சென்று வாருங்கள்! உங்கள் மனசு நிம்மதியா யிருக்கும்,” என்று ஆடிட்டர் அனந்த் பல முறை இதமாக எடுத்துச் சொல்லியும் சிவவடிவேலு அதைக் காது கொடுத்துக் கேட்டதே இல்லை. எல்லாவற்றையும் தாமே கட்டிக் கொண்டு அழுதார். சுமைகளைத் தாங்கினார். “இந்நாளில் உங்களுடைய அணுகுமுறைகள் கிழடுதட்டிப் போனவை. ‘ஆண்டே!’ என்று விவசாயக் கூலி வாசற்படிக்குக் கீழே பத்தடி விலகி நின்று கை கூப்பிய காலத்துப் பண்ணையார் மனப்பான்மையோடு இன்று தொழிலை ஆள முடியாது. நிறைய விட்டுக் கொடுத்துப் பழகும் தோழமை இன்று வேண்டும்,” என்று சொற்பொழிவுகளில் பேசுவது போலவே அவரிடமும் இளைய மகன் குமரேசன் ஒருநாள் உணர்ச்சி வசப்பட்டுப் பேசியிருந்தான். “உன்னை மகனாகப் பெத்த குற்றத்துக்காக நீ இந்த வீட்டிலே இருக்கிறதைச் சகிச்சுக்கறேன். ஆனால் நீ என்னை மாத்தமுடியாது” என்று சிவவடிவேலு கறாராக அவனுக்குப் பதில் சொல்லியிருந்தார். இப்படி மூத்த மகன், இளைய மகன் இருவருமே இரண்டு வேறு கோணங்களில் நவீனமான சிந்தனைகள் உள்ளவர்களாக இருந்தும் அவர்களை நம்பி எதையும் கொடுக்காத காரணத்தாலேயே அவர்களுடைய சிந்தனை துருப்பிடித்துப் போகும்படி செய்துவிட்டார் சிவவடிவேலு. மூத்தவன் விழித்துக் கொண்டான். அந்த வீட்டிலேயே இருந்து சீரழியாமல் தனக்குப் பிடித்த ஓர் அழகிய படித்த ஏழைப் பெண்ணைத் தேடிக் கல்யாணம் பண்ணிக் கொண்டு டில்லியில் போய் உத்தியோகம் பார்த்தான். அவனது திருமணம் கூட அவரது விருப்பத்துக்கு மாறாகத்தான் நடந்தது. சின்னவன் தூங்குவதற்கு மட்டும் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தான். மகள் பார்கவிக்கும் அவருக்கும் சண்டையோ வாக்குவாதமோ ஏற்படாததற்குக் காரணம் அவள் அப்பாவை எதிர்த்துப் பேசுவதில்லை. கடைக்குட்டியானதால் அவளிடம் அவருக்குப் பிரியமும் அதிகம், பாசமும் நிறைய இருந்தது. குடும்ப ஆடிட்டர் அனந்த் அந்தக் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமாக வேண்டியவர், என்றாலும் சிவவடிவேலுவைப் பற்றி அவருக்கும் உள்ளூர விமரிசனங்கள் உண்டு. பட்டும் படாமலும்தான் இருப்பார். ஆனால் ஒட்டல் பார்கவி விஷயத்தில் அவரால் அப்படி இருந்துவிட மூடியவில்லை. காரணம், அது அவர் கூறிய யோசனைப்படி கட்டப்பட்டது. ஆடிட்டர் அனந்த், சிவவடிவேலு, அவர் மகள் மூவரும் மதுரை விமான நிலையத்தின் அரைவல் லவுன்ஜில் குப்தாவையும் திருமதி குப்தாவையும் வரவேற்கக் காத்திருந்தார்கள். விமானம் தரையிறங்க இன்னும் அரைமணி நேரம் இருந்தது. ஆடிட்டர் வற்புறுத்தியதால் வாங்கப்பட்ட இரண்டு மல்லிகை மாலைகள் தயாராயிருந்தன. “மாலை எல்லாம் எதுக்கு? நாம நஷ்டத்திலே சிரமப்பட்டுகிட்டிருக்கோம்னு வர்றவனுக்குப் புரியட்டுமே? மாலை கீலைன்னு தடபுடலாப் பண்ணிட்டம்னு செழிப்பா இருக்கோம்னு நினைச்சுடப் போறாங்க” என்றார் சிவவடிவேலு. ஆடிட்டர் இதைக் கேட்டுச் சிரித்தார். சிவவடிவேலுவின் தழும்பேறிப்போன கட்டுப்பெட்டித்தனத்தைப் போக்கவே முடியாது போலிருந்தது. “கஷ்ட நஷ்டங்கள் வேறே. கர்டஸி வேறே. நாம நஷ்டப் படறோம்கிறதுக்காக இருபத்து நாலு மணி நேரமும் அழுது கிட்டே இருக்கணும்னு அவசியம் இல்லே. நாமும் சந்தோஷ மாயிருக்கணும், அடுத்தவங்களையும் சத்தோஷப்படுத்தணும்” என்றார் ஆடிட்டர். இப்படி ஒவ்வொன்றிலும் சிவவடிவேலுவை ஒழுங்குபடுத்தித் தயாராக்க வேண்டியிருந்தது. |