20 அதிகாலையில் முகூர்த்தம் முடிந்த சூட்டோடு ஆடிட்டரும் குப்தாவும் சிவவடிவேலு தம்பதிகளை வரவேற்கக் குருபுரத்திலிருந்து மதுரை விமான நிலையம் புறப்பட்டனர். மதறாஸ் டு மதுரை ஃப்ளைட் டேக் ஆஃப் டயமே இரண்டு மணி தாமதம் என்று காலை நாலு மணிக்கே அவர்களுக்குச் சென்னையிலிருந்து டிராவல் ஏஜென்ஸிஸ்காரர்கள் டெலிபோன் மூலம் சொல்லிவிட்டிருந்தனர். அதனால் குருபுரத்திலிருந்தே முகூர்த்தம் முடிந்து கேசரி, இட்டிலி, வடை சாப்பிட்டுவிட்டுப் புறப்பட முடிந்தது. இவர்கள் மதுரை போன பின்பும் நேரம் இருந்தது. ஆடிட்டரும் குப்தாவும் அம்மன் சந்நிதிப் பூக்கடைக்குச் சென்று, இரண்டு பெரிய ரோஜாப்பூ மாலைகள் வாங்கிக் கொண்டார்கள். தங்கள் போதாத காலம் ஒருவேளை சிவவடிவேலு பிளேனிலேயே பேப்பர் கீப்பர் பார்த்திருந்து, “இதெல்லாம் யாரு? பார்கவி அஜீத்னு போட்டிருக்கீரே, அவளுக்கு எப்போ கல்யாணம் ஆச்சு? இந்த பயல் குமரேசன் பேரோட தேவசேனான்னு ஒட்ட வச்சிருக்கிரே அது யாரு? குருசரண் யாரு”ன்னு கேட்டால் நிதானமாக எப்படி எப்படித் தொடங்கி இருவருமாக அவருக்குச் சொல்லிக் ‘கன்வின்ஸ்’ செய்வது என்று பலமுறை ரிஹர்ஸல் பார்த்துக் கொண்டார்கள், அவர்கள். நெஞ்சு படக் படக் என்று அடித்துக் கொண்டது. ஒரு வில்லனை எதிர்கொள்ளும் கதாநாயகராகத் தவித்தனர். மதுரை விமான நிலையத்தில் கூட்டமே இல்லை. ஃப்ளைட் லேட் என்பதால் அதற்காகக் காத்திருந்த பயணிகள் கூடக் கான்ஸல் செய்துவிட்டுப் போயிருந்தனர். பதினோரு மணிக்கு வந்து திரும்பவும் புறப்பட்டு மெல்ல மெட்ராஸ் போகிற விமானத்தைவிட அதிகாலை வைகையில் போய் இரண்டு மணிக்குள் சென்னையை அடைந்து விடலாம் எனப் பயணிகள் எண்ணியிருக்கக் கூடும். சென்னையிலிருந்து அதிகாலையில் மதுரை வந்து மறுபடி திரும்பச் சென்னை போகிற அந்த விமானம் அன்று சென்னையிலிருந்தே தாமதமாகப் புறப்பட்டிருந்ததால் எல்லாமே தாறுமாறாகக் குளறுபடி ஆகி இருந்தது. சென்னையிலிருந்து வருகிற விமானம் சில விநாடிகளில் தரை இறங்கும் என்பதை விமான நிலைய ஒலிபெருக்கியில் அறிவித்தார்கள். தாம் வந்து இறங்குகிற விமானத்தையே தாமதமாக்கக் கூடிய ஆற்றல் சிவவடிவேலுவுக்கு இருந்தாற் போலத் தோன்றியது. “இவரைக் கொண்டு போய் நிறுத்திப் புதுமணத் தம்பதிகளை வாழ்த்தச் சொல்லி அத்தனை விருந்தாளிகள் முன்னாடியும் ஏதாவது ஸீன் கிரியேட் பண்ணிட்டார்னா ரசாபாசமாப் போயிடுமே மிஸ்டர் அனந்த்!”
“ஆள் மாறியிருந்தார்னு அப்படி எல்லாம் செய்துவிட மாட்டாருங்கிற நம்பிக்கை இருக்கு.”
“மாறலேன்னு வச்சுப்போம். அப்போ என்ன பண்ணறது?” “அதுக்கும் ஒரு எமெர்ஜென்ஸி வழி வச்சிருக்கேன். சிவவடிவேலுவுக்கு மூக்குக் கண்ணாடி இல்லாட்டி சட்னு ஆள்களை அடையாளம் தெரியாது. கல்யாண மேடையிலே அழைச்சுட்டுப் போய் நிறுத்தி அட்சதையைக் கையிலே கொடுக்கிறதுக்கு முந்தியே கண்ணாடியைக் காணாமல் ஒளிச்சு வச்சிடலாம்.” “அதனாலே கொஞ்ச நேரம்தானே சமாளிக்க முடியும்? அப்புறம் என்ன பண்ணுவது?” “சபை நடுவிலே மனுஷன் கத்தி இரையாமல் பண்ணிட்டா அப்புறம் வீட்டுக்குள்ளே நடக்கிற கூப்பாட்டைப் பத்திக் கவலை இல்லே. அட்சதை போட்டு முடிச்சதுமே அவருக்குப் பிராயணக் களைப்பாலே உடல் நலம் இல்லேன்னு உதவிக்கு ஒரு மனுஷனைப் போட்டு வீட்டிலே தள்ளி அடைச்சு வச்சிடலாம்.” “மிஸஸ் சிவவடிவேலுவை என்ன பண்ணுவீங்க? அவங்க ரிவோல்ட் பண்ண மாட்டாங்களா?” “இதெல்லாம் பிடிக்காட்டியும் சபை நடுவிலே ரசாபாசம் பண்ண மாட்டாங்க. இங்கிதமாக நடந்துப்பாங்க. அந்தம்மாளைப் பத்திக் கவலை இல்லே.” “கொஞ்சம் கஷ்டமான வேலைதான்.” “ஒரு கஷ்டமும் இல்லை. அவருக்கு எதுவும் தெரியாது. பேப்பர் பார்க்க மாட்டார். உங்களுக்குச் சிரமமாயிருக்குமே. இருந்தாலும் போற வழியிலே ஆசீர்வாதம் பண்ணிட்டுப் போயிடலாம்னு கொண்டு போய் என்னன்னு சொல்லாமே அட்சதையைக் கொடுத்துக் காரியத்தை முடிச்சிடலாம்.” விமானம் கீழிறங்கி ஓடுபாதையில் விரைந்து வரும் ஓசை கேட்டது. குப்தாவும், ஆடிட்டரும் மாலைகளோடு எழுந்தார்கள். ரகசியம் பரம ரகசியம் என்பதால் டிரைவர் கூடக் கிடையாது. அனந்தே காரை ஓட்டி வந்திருந்தார். ‘ஆப்பரேஷன் நியு பார்கவி’யை விடக் கஷ்டமான ஒரு வேலையில் அவர்கள் இப்போது இறங்கியிருந்தார்கள். நிலைய அதிகாரியிடம் அனுமதி பெற்று விமானம் நின்ற இடத்திற்கே கூடப் போக முடிந்தது. சிவவடிவேலு தம்பதி இறங்குவதற்கு முன் வேறு யார் யாரோ இறங்கினர்கள். கடைசியாகச் சிவவடிவேலுவும் ஆச்சியும் மெதுவாக இறங்கினார்கள். சூட், கோட், கழுத்திலே டை கட்டிய தோற்றத்தில் விமானத்தின் லேடரில் அவர் ஒவ்வொரு ஸ்டெப்பாக வைத்து இறங்கியபோது நடைதான் அந்த சூட் கோட், டைக்கு ஒவ்வாத நாட்டுப்புறத்து நடையாக இருந்தது. ஆச்சி நீல நிறக் காஞ்சீபுரம் பட்டுப் புடவையை அணிந்து எப்போதும் போல் தோன்றினாள். சிவவடிவேலுவை நோக்கி ஆடிட்டரும், குப்தாவும் படு உற்சாகமாகக் கையை ஆட்டோ ஆட்டென்று ஆட்டினார்கள். அவர் பார்வை எங்கோ பார்க்கத் தோன்றியது. பராக்காக நோக்கியது. திருவிழாவில் காணாமல் போன குழந்தை பெற்றோரைத் தேடி விழிகளைச் சுழல விட்டுப் பதறுகிற மாதிரி யாரையோ அவர் கண்கள் தேடின. கடைசிப் படியில் இறங்கி ரன்வேயில் தரை மீது காலை வைத்த பின்பு தான் சிவவடிவேலு இவர்கள் இருவரும் மாலையோடு நிற்பதைப் பார்த்தார். ஆச்சி மேலேயே இவர்களையும் இவர்கள் கை அசைப்பதையும் பார்த்துப் பதிலுக்குக் கையசைத்து விட்டாள். சிவவடிவேலு கீழே இறங்கிய பின்பும் அவர் கண்கள் வேறு யாரையோ தேடி வட்டமிட்டன. குப்தா, அனந்த் இருவரும் மாலைகளோடு தம்மை நெருங்குவதைப் பார்த்த பின்பும் அவர் கண்கள் வேறு யாரையோ தேடிக் கொண்டிருந்தன. “மிஸ்டர் சிவவடிவேலு மிஸஸ் சிவவடிவேலு வெல்கம் டு குருபுரம்” குப்தாவும், அனந்துவும் அவர் கழுத்தில் மாலையைப் போட்டு அதை அப்படியே ஆச்சி கழுத்தில் மாற்றும்படி அவரையே வேண்டியபோது கூட எதுவும் பதிலுக்கு விசாரிக்காமல் இயந்திர கதியில் தம் கழுத்தில் விழுந்த இரு மாலைகளையுமே ஆச்சி கழுத்துக்கு மாற்றிவிட்டுப் பார்வையை அவர்களுக்கு அப்பால் விரைய விட்டபடி: “கரும்பாயிரம் வரலியா?” என்றார் சிவவடிவேலு. அவரோ குப்தாவோ இதற்குப் பதிலே சொல்லாமல், “ஹெள வாஸ் யுவர் டிரிப்? டிட்யூ ஹாவ் எ நைஸ் டிரிப்? உங்கள் பிரயாணம் எல்லாம் செளக்கியமா?” என்று தமிழிலும், ஆங்கிலத்திலுமாக விசாரணையைத் தொடங்கினார்கள். அவரோ மறுபடியும், “கரும்பாயிரம் எங்கே? அவன் வரலியா? அவனைக் காணலியே?” என்று கிளிப்பிள்ளை மாதிரி ஒரே வாக்கியத்தை அரற்றிக் கொண்டிருந்தார். குப்தாவின் சட்டைப் பையிலிருந்த சீல்டு கவரை வாங்கி உடைத்துப் பிரித்துப் படித்தார் ஆடிட்டர் அனந்த். கவருக்குள்ளே இருந்த துண்டுத் தாளில் ‘கரும்பாயிரம் வரலியா?’ என்று குமரேசனின் கையெழுத்தில் எழுதியிருந்தது. “என்ன? பந்தயம் என்ன ஆச்சு?” குப்தா ஆவலோடு விசாரித்தான். “குமரேசன் வாஸ் கரெக்ட். ஐ லாஸ்ட் இட்,” என்று சோகமாக ஆடிட்டரிடமிருந்து பதில் வந்தது. “சரி ஒரு தோல்வி போதும்! இப்போ அடுத்த தோல்வி வராமல் உஷாராகுங்க ஆசீர்வாத விஷயமா ஏற்பாடு பண்ணுங்க” என்று ஆங்கிலத்தில் சொன்னான் குப்தா. “இதோ ஒரு நிமிஷத்திலே முடிக்கிறேன். நீங்க கொஞ்சம் ஓல்ட் மேனை எங்கேஜ் பண்ணிக்குங்க,” என்று கூறியபடியே ஆச்சியை ஜாடை காண்பித்துத் தனியே அழைத்துச் சென்றார் ஆடிட்டர். ஆச்சியிடம் சுருக்கமாக விஷயத்தைச் சொல்லி “மகாலட்சுமி மாதிரி இருக்கீங்க, மங்களகரமான விஷயம். நீங்கதான் ஒத்துழைக்கணும்,” என்றார் அனந்த். ஆச்சியை அவர் தாராளமாகப் புகழவே செய்தார். “ஒண்ணும் கவலைப்படாதீங்க, ஆடிட்டர். இந்த மனுஷன் கொஞ்சம் கூட மாறவில்லை. குருபுரத்திலேயிருந்து ரெண்டு மூணு மணி நேரத்துக்கு மதுரை போயிட்டுத் திரும்பினால் கூடத் திரும்பி வந்ததும் தான் இல்லாதபோது இங்கே என்ன நடந்ததுன்னு கரும்பாயிரத்தைக் கூப்பிட்டுக் கேட்கிற பழக்கம். அவனை உளவறிய ஆளாகப் பயன்படுத்திக்கிற பழக்கமெல்லாம் ஆதி நாளிலிருந்தே இந்த மனுஷன் கிட்டே உண்டு, கோள் சொல்லிக் கோள் சொல்லிப் பெத்த பிள்ளைகளுக்கும் அப்பனுக்கும் ஆகாமல் பண்ணினதே அந்தக் கரும்பாயிரம் தடியன் தான், இப்பவும் அதுக்குத்தான் அந்தக் கடன்காரன் வந்திருக்கானான்னு அரிப்பெடுத்துப் போய்த் தேடறது கிழம்.” “கரும்பாயிரத்தை நாங்க வேலையை விட்டே போகச் சொல்லியாச்சு! அவன் குருபுரத்திலேயே இப்போ இல்லே ஆச்சி, மலை மேலே எங்கேயோ கேண்டீன் நடத்தறானாம்.” “நல்ல காரியம் பண்ணினீர். இனிமே இந்தக் குடும்பம் க்ஷேமமாக இருக்கும். அப்பனுக்கும் மகனுக்கும் நடுவிலே வத்திவச்சுக் குச்சி முறிச்சுப் போட்டுக் கோள் சொல்லிப் பிழைக்கிற கிராதகன் அந்தக் கரும்பாயிரம்.” “சரி! இப்போ சபை நடுவிலே ஆசீர்வாதம் பண்ணனுமே ஆச்சி.” “சமாளிச்சிடலாம். இவருக்கு வெள்ளெழுத்துப் படிக்க, ஆள் யாருன்னு பார்க்கத் தனித் தனியே இரண்டு மூக்குக் கண்ணாடி. மெட்ராஸ்லே சிங்கப்பூர் பிளேன்லேயிருந்து இறங்கினதும் படிக்கிற கண்ணாடியை உள்ளே வாங்கி வச்சுப் பூட்டிட்டதாலே மதுரை வர்றப்போ இத்த மனுஷன் பேப்பர் எதுவும் படிக்கலே. நான்தான் படிச்சேன். ஆனால் இவர் கிட்டே ஒண்ணும் சொல்லலே. இப்போ ஆள் பார்க்கிற கண்ணாடியையும் நைஸாகப் பறிமுதல் பண்ணிட்டாப் போச்சு! ரொம்ப வேண்டிய கல்யாணம் ஏர்போர்ட்லே இருந்து போறப்பவே ரெண்டு அட்சதையைப் போட்டு வாழ்த்திட்டுப் போயிடலாம்’னு நீங்களே சொல்ற மாதிரிச் சொல்லுங்க. மத்ததை நான் பார்த்துக்கறேன்” என்றாள் ஆச்சி. ஆடிட்டர், ஆச்சி இருவரும் குப்தாவும் சிவவடிவேலுவும் நின்ற இடத்துக்குப் போனபோதும் கூட, “கரும்பாயிரம் வரலியா?” என்கிற அதே கேள்வியைத்தான் குப்தாவிடம் பதினைந்தாவது தடவையாகக் கேட்டுக் கொண்டிருந்தார் கிழவர். அங்கே இவர்கள் போய்ச் சேர்ந்ததும் மறுபடி ஆடிட்டரிடம் கேட்டார். ஆடிட்டர் வேறு ஏதோ பேசி மழுப்பினர்; “இந்தாங்க... முகத்திலே ஒரேயடியா எண்ணெய் வடியுது. என் கிட்டே கண்ணாடியைக் கழட்டிக் கொடுத்திட்டு வாஷ் பண்ணித் தொடைச்சிட்டு வந்திடுங்க. வீட்டுக்குப் போறதுக்கு முன்னாடி இங்கேயிருந்து போறப்பவே ரொம்ப வேண்டிய கல்யாணம் ஒண்ணுக்குப் போய் ஆசீர்வாதம் பண்ணிட்டுப் போகணும்கிறாங்க” என்று கூறி ஆச்சி அவரது கண்ணாடியைப் பறிமுதல் செய்தாள். அனந்த் கையைப் பிடித்துத் தடுக்கி விழாமல் அவரை விமான நிலைய வாஷ் பேஸினுக்கு அழைத்துச் சென்றார். இந்த மனுஷன் ஆறு மாசத்துக்கு அப்புறம் சொந்த ஊரிலே வந்து இறங்கினால் மகள், மகன்கள், சுற்றத்தார் வேண்டியவர்கள் எதிரே வந்து மாலையோடு நிற்பவர்களைப் பற்றிக்கூட க்ஷேமலாபம் விசாரிக்காமல் கரும்பாயிரம் வரலியா என்றே பிதற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்து ஆடிட்டருக்கே ‘சே’ என்றாகி விட்டது. கார் குருபுரம் போகிறபோது, “நெள எ டேஸ் பார்கவி இஸ் யேர்னிங் மோர் ப்ராஃபிட். வீ ஹாவ் கிளியர்டு ஓல்டு லோன்ஸ்,” என்று குப்தா சொல்லிக் கொண்டு வந்ததை எல்லாம் காரை ஓட்டியபடியே ஆடிட்டர் மொழிபெயர்த்துத் தமிழில் சொல்லியும் சிவவடிவேலு, “கரும்பாயிரம் வரலியா?” என்பதிலேயே இருந்தார். மிகவும் தேர்ந்த பிஸினஸ் டாக்டரான சந்திரஜித் குப்தா எம்.பி.ஏ, சி.எ., எஃப்.ஆர்.சி.எஸ். இப்போது தொழி லுக்குச் சிகிச்சை முடிந்து நாடப்பட்ட முதிய நோயாளியான தொழிலதிபருக்குச் சிகிச்சை தேவைப்படுகிறது என்ற நிலை மையை உணர்ந்தார். திட்டமிட்டபடி ஆசீர்வாத நாடகத்தை நிமிடத்தில் முடித்து, “பிரயாண அலுப்பு! சிவவடிவேலு இஸ் நாட் டூயிங் வெல். இன்னும் நாலைந்து நாள் கம்ப்ளீட் ரெஸ்ட்லே இருக்கணும்,” என்று எல்லாரிடமும் சொல்லி அவரையும் ஆச்சியையும் வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு அவரைக் கவனிக்கிற பொறுப்பை ஆச்சியிடம் விட்டு விட்டுத் திரும்பினார், ஆடிட்டர். ஆப்பரேஷன் நியு பார்கவி! திட்டத்தின் கிளைமாக்ஸ் சீனை வெற்றிகரமாக முடித்துவிட்டு நிம்மதியாக ஆளுக்கு ஒரு ஸ்ட்ராங் காப்பியை அருந்தினார்கள் குப்தாவும் ஆடிட்டரும். அன்று மாலையில் கல்யாண ரிசப்ஷனின் போது, “என் சிகிச்சை முடிந்து விட்டது! போத் த பார்கவிஸ் ஆர் இன் வெரிகுட் கண்டிஷன். கீப்பிங் ஸ்வுண்ட் ஹெல்த் அண்ட் யேர்னிங் மோர் ப்ராஃபிட்! நாளை நானும் சுஷ்மாவும் ஊர் திரும்புகிறோம்,” என்று சொல்லிக் கொண்டிருந்த குப்தாவை இடைமறித்து, “பார்கவி லாபம் தருகிறாள். ஆனால் பார்கவி யோட ஆடிட்டர் ரூபாய் ஐயாயிரம் நஷ்டமடைகிறார்,” என்று குமரேசனுக்குப் பந்தய வகையில் தரவேண்டிய ஐயாயிரத் துக்கு எடுத்திருந்த கிஃப்ட் செக்கைக் குப்தாவிடம் காட்டினார் அனந்த். “நோ நோ! இந்தக் கஞ்சத்தனத்தை நான் அனுமதிக்க மாட்டேன். நீங்க குமரேசனுக்குத் தரவேண்டிய பந்தயப் பணம் தனி. மேரேஜ் கிஃப்ட் தனி. நோ டூ இன் ஒன் பிஸினஸ்,” என்று குப்தா ஆடிட்டரைக் கண்டித்தான். குப்தா கூறியதைக் கேட்டுத் தண்டபாணி சிரித்தான். “மிஸ்டர் குப்தா இந்தக் கஞ்சத்தனம் ஒரு இன்ஃபெக்ஷன். சிவவடிவேலுவிடமிருந்து தொற்றிக் கொண்டு விட்டது. இருப்பத்தைஞ்சு முப்பது வருஷமா அவரிட்டம் பழகறேன் இல்லியா?” என்று ஜோக் அடித்தார் ஆடிட்டர். “பை த பை, சிவவடிவேலு எப்படி இருக்கிறார்? எனி இம்ப்ரூவ்மெண்ட்” என்று ஆடிட்டரைக் கேட்டான் குப்தா. உதட்டைப் பிதுக்கிவிட்டு ஆடிட்டர் சொன்னார். “இப்போ மணி ஏழு! ஆறே காலுக்குக் கூட ஆச்சியிடமிருந்து இங்கே ஃபோன் வந்தது! ஆறு பத்துக்கு நூத்தி எட்டாவது தடவையாகக் கூட, ‘கரும்பாயிரம் வரலியா? நான் அவனைப் பார்த்தாகணுமே?’ன்னு தான் கேட்டாராம்.” “தேறாது! ஹோப்லெஸ் கேஸ்! இனி இதுக்கு ஒரே ட்ரீட்மெண்ட்தான் இருக்கு. ‘தசாபுக்தி சரியாகலே. அர்த்தாஷ்டமச்சனி அது இதுன்னுசொல்லி இன்னும் கொஞ்ச நாள் வீட்டை விட்டு வெளியே விடாமலும் வெளியிலேயிருந்து கரும்பாயிரம் மாதிரி யாரையும் உள்ளே விட்டுடாமேயும் அவரைக் கவனிச்சுக்க வேண்டியதுதான்.” “அந்தப் பொறுப்பை ஆச்சியே கவனிச்சிக்கிறேன்னு வாக்களிச்சிருக்காங்க.” என்றார் ஆடிட்டர். அப்போது தற் செயலாக ரிசப்ஷன் டிரெஸ்ஸோடு தடபுடலாக மாப்பிள்ளைக் கோலத்தில் தேவசேனா சகிதம் அங்கே வந்த குமரேசன், “என்ன? பந்தயத்திலே தோத்தீங்களா? நான், அப்பவே சொன்னேன், கேட்டீரா?” என்று ஆடிட்டரை வம்புக்கு இழுத்தான். உடனே தணிந்த குரலில் ஆடிட்டர், “தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமியை ஜெயிக்க முடியுமா அப்பா?” என்ற படியே கிஃப்ட் செக்கை எடுத்து நீட்டினார். “கலலைப்படாதீரும்! உம்ம டாட்டர் மேரேஜின்போது இதை வட்டியோட திரும்பித் தந்துடறேன்,” என்றான் பழைய பட்டிமன்ற வெற்றிவீரன் குமரேசன். (முற்றும்) |