3 ஆறடி உயரத்துக்கு வாட்ட சாட்டமாய்க் கம்பீரமாகத் தோற்றமளித்த குப்தாவைப் பார்த்ததும் சிவவடிவேலுவுக்கு ஒருவகைத் தாழ்வு மனப்பான்மையே உண்டாகி விட்டது. அவன் மனைவி பச்சைக் கிளி போல் அழகாயிருந்தாள். பஞ்சாபிப் பெண்கள் போல குர்த்தா - சூரிதார் அணிந்திருந்தாள். இருவருமே சிரிக்கச் சிரிக்கப் பேசினார்கள். கலகலப்பாகப் பழகினார்கள். புதியவர்கள், அன்னியர்கள் - வேற்று மொழி வேற்றுப் பிரதேசக்காரர்கள் என்ற சங்கோசங்களையும் தற்செயலாகக் கடப்பதுபோல் இயல்பாகத் தவிர்த்து விட்டுப் பழகினார்கள். ஆடிட்டரும், அவர் மகளும் அத்தனை வேகமாக இல்லாவிட்டாலும் சிறிது நேரத்திலேயே அந்த மெல்லிய உணர்ச்சிக் கோடுகளைத் தாண்டிவிட்டுச் சுபாவமாகக் குப்தாவுடனும் திருமதி குப்தாவுடனும் பழகத் தொடங்கி விட்டார்கள். கிணற்றுத் தவளையாகவே இருந்து விட்ட சிவவடிவேலு தான் திணறினர். சிரமப்பட்டார். ஒட்டாமல் கஷ்டப்பட்டார். ஒதுங்கி ஒதுங்கி நின்றார். ஒரு பட்டிக்காட்டான் யானையைப் பார்த்தது போல அந்தப் புதியவர்களை மருள மருளப் பார்த்தார். மதுரையிலி ருந்து குருபுரத்திற்குப் புறப்படுமுன் எங்காவது அவர்களுக்குக் காப்பி சிற்றுண்டி அருந்த ஏற்பாடு செய்ய வேண்டுமென்றார் ஆடிட்டர். “அதுக்கென்ன? நம்ம கான்சா மேட்டுத் தெரு ராயர் தண்ணீர்ப் பந்தலிலே பிரமாதமா இட்லி, வெண்பொங்கல் ஆமவடை எல்லாம் கிடைக்கும்” என்றார் சிவவடிவேலு. இதைக் கேட்டு ஆடிட்டருக்குச் சிரிப்பு வந்தது. ராயர் தண்ணீர்ப் பந்தல் என்பது நவீன ஓட்டல் நாகரிகம் பரவு வதற்கு முன் காலத்து மதுரையில் ஏற்பட்டிருந்த ஒரு பத்துக் கடை. அங்கே உட்கார டேபிள் நாற்காலி கிடையாது. நின்றபடியே இலையைக் கையில் ஏந்தி ராயரிடம் வாங்கிச் சாப்பிட்டு விட்டுப் பணம் கொடுத்துவிட்டு வரவேண்டும். எல்லாமே ராயர்தான். குப்தாவுக்குத் தாம் கடிதம் எழுதி வரவழைத்திருந்ததால் அவனுடைய செளகரியங்களைக் கவனிக்கும் பொறுப்புத் தமக்கு இருப்பதாக ஆடிட்டர் எண்ணினார். சிவவடிவேலு ஹில்டன் ஓபராய்க்குச் சமமாக வர்ணித்த அந்த ராயர் தண்ணீர்ப் பந்தலுக்கு அவரது மகன் குமரேசன் போன்றவர்கள் சூட்டியிருந்த செல்லப் பெயர் ‘கையேந்தி பவன்’ என்பது. குருபுரம் மிராசுதார் சிவவடிவேலுவின் ‘நோய்கள்’ என்னென்ன என்று ஆடிட்டர் அனந்துக்கே நன்றாகத் தெரியும் என்றாலும் தம்மைப் போல் பல ஆண்டுகளாக அவரோடு நெருங்கிப் பழகுகிற ஒருவரால் அவரை மாற்ற முடியாது என்பதால்தான் பிஸினஸ் டாக்டர் என்ற பெரிய பெயரெடுத்த ஆள் ஒருவரை டில்லியிலிருந்து வரவழைத்திருந்தார். நில உச்சவரம்பிலிருந்து சொத்துக்களையும் பணத்தையும் காப்பாற் றிக் கொள்ள அவசர அவசரமாக ஓட்டல் ‘பார்கவி’யை நவீனமாகக் கட்டி விட்டார். ஆனால், அதில் நவீனமான ஏற்பாடுகள் அறவே இல்லை. நாட்டுப்புறத் தன்மையே, அதிகமாக இருந்தது அங்கே.
ஜமீன் குருபுரம் செங்கழுநீர் விநாயகர் கோயில் தெருவில் இருக்கும் ‘ஆதிகாலத்து அசல் சைவாள் போஜன சாலை’ என்ற அழுக்கடைந்த போர்டுடன் கூடிய - காலையில் வெந்நீர்ப் பழையதும், வடுமாங்காய் ஊறுகாயும், மாலையில் இடியாப்பமும் தேங்காய்ப் பாலும் கிடைக்கிற ஒன்றாக ஓட்டல் பார்கவி இருக்க முடியாது. கூடாது என்பது ஆடிட்டரின் திடமான கருத்து. சிவவடிவேலுவின் பிள்ளைகளும் ஆடிட்டரைப் போலவே நினைத்தார்கள். ஆனால் சிவவடிவேலு மட்டும் பழையபடியே இருந்தார். ‘பார்கவி’யில் பயங்கர நஷ்டம் வந்தது. தாம் படு சிக்கனமாக எல்லாக் காரியங்களையும் பார்த்துப் பார்த்துச் செய்தும் எப்படி நஷ்டம் வருகிறது என்று அவருக்குப் புரியவில்லை.
நஷ்டத்தின் காரணம் புரியாமல் குழம்பினார் சிவ வடிவேலு. அங்கேயே சாப்பாடும் தங்க இடமும் கொடுத்து மாதம் பத்துப் பதினைந்து ரூபாய் ரொக்கச் சம்பளத்தில் தான் பரிமாறுகிறவர்கள், மேஜை துடைக்கிறவர்கள் அமர்த்தியிருந்தார். மலையடிவாரத்து ஊராகையினால் விறகும், கரியும் படு மலிவாகக் கிடைத்தன. அதனால் ‘காஸ்’ அடுப்புச் செலவே இல்லை. தங்குகிறவர்களைத் தவிர ரெஸ்டாரெண்ட்டில் வந்து சாப்பிடுகிறவர்களுக்குப் பில் கூடக் கிடையாது. ரெண்டு ரூபாய் இருபது காசு, என்று ஏலம் போடுகிற குரலில் பரிமாறுகிற பையன்களே சொல்லி விடுவார்கள். ஸ்டேஷனரி அச்சிடுதல் செலவுகளே குறைவு. ஓட்டல் பார்கவியின் ஒவ்வொரு சின்ன விஷயத்திலும் அவரே முன்னின்று கவனித்ததால் ரொம்பச் சிக்கனமாகவே எல்லாம் நடந்தது. தம்மிடம் வேலை பார்த்த பழைய விவசாயிகள் வசிக்கும் பட்டி தொட்டிகளிலிருந்து அதிகம் படிப்பு வராமல் வீட்டோடு தங்கிப் போன பையன்களை மூன்று வேளைச் சாப்பாடு, கையில் ரொக்கம் என்று பேசி மிக மிகக் குறைந்த சம்பளத்துக்கு ரூம் பாய்ஸ் ஆகவும், சர்வர்களாகவும் நியமித்திருக்கும் தைரியத்தில் மாதா மாதம் சுளையாக லாபம் எதிர்பார்த்தார் அவர். ஆனால் லாபம் வராததோடு நஷ்டம் வந்தது. அங்கே நகர்ப்புறங்களில் த்ரீ ஸ்டார், ஃபைவ் ஸ்டார் என்று ஒட்டல்களுக்கு ஸ்டார் வேல்யூ அளித்து நடத்துகிறவர்கள் பணத்தை வாரி இறைக்கும் ஓட்டல்கள் கூட லாபத்தை அள்ளித் தருகையில் தாம் சிக்கனமாகவே நடத்தும் ஓட்டல் ஏன் லாபம் தரவில்லை என்பது அவருக்குப் புரியாத புதிராகவே இருந்தது. குழம்பினார். இராப்பகல் தூக்கமின்றித் தவித்தார். அவரோடு முதலிலேயே கருத்து வேறுபாடு கொண்டு ஒதுங்கி விட்டதால் மகன்கள் இதில் அவருக்கு உதவ முன் வரவில்லை. மகள் படிக்கிற வயதில் இதையெல்லாம் பற்றிக் கவலைப்பட முடியாது. செல்லப் பெண்ணாய் அப்பாவிடம் நல்ல பேர் வாங்கினாள். ஆடிட்டர் அனந்துதான் சிவவடிவேலுவின் ஃப்ரெண்டு ஃபிலாஸபர், கைடு ஆக மீதியிருந்தார். ஆனால் அவர் சொல்வதை அப்படியே கண்ணை மூடிக்கொண்டு ஏற்கவும் சிவவடிவேலு தயாராயில்லை. ஆடிட்டர் கூறுவதையே சிவவடிவேலு கேட்டு நடக்கத் தயாராயிருப்பார் என்று தெரிந்திருந்தால் டில்லியிலிருந்து ‘வியாபார வைத்தியர்’ அல்லது தொழில் நலிவுச் சிகிச்சை நிபுணரான குப்தாவையும் அவன் மனைவியையும் இத்தனை அரும்பாடுபட்டு வரவழைத்து இருக்க வேண்டியதில்லை. நிறையப் பணச்செலவு வைத்து பாஷையும் பழக்க வழக்கமும் புரியாத வெளி ஆள் ஒருவனை வரவழைத்துத் தான் சிவவடிவேலுவுக்குச் சிகிச்சையளித்தாக வேண்டும் போலிருந்தது. நாட்டு வைத்தியமும், கை மருந்துகளும் அவரைக் குணப்படுத்தப் போதாதென்று ஆடிட்டர் விமானத் தில் ‘மருந்தை’ வரவழைத்திருந்தார். டில்லியிலிருந்து வரவழைத்திருந்தார். பாண்டியனில் முதலில் ஃப்ரூட் ஜூஸ், அப்புறம் ஆரஞ்சு மர்மலேட், கார்ன் ப்ளேக் மில்க், பிரட் டோஸ்ட், ஸ்கிராம்பிள்டு எக், காப்பி என்று குப்தாவும், மிஸஸ் குப்தாவும் ஆர்டர் செய்தார்கள். ஆடிட்டரும் அதே அயிட்டங்களைச் சொன்னார். பார்கவி மசால் தோசையும் காப்பியும் என்றாள். சிவவடிவேலு வெறும் காப்பி மட்டும் போதும் என்று தம்மைச் சிக்கனமாக நிறுத்திக் கொண்டார். பில்லைப் பற்றிய பயம் அவருக்கு. மொத்தமாக பில் சர்வீஸ் சார்ஜ் உட்பட 167 ரூபாய் எழுபது காசு வந்தது. ஐந்து ரூபாய் டிப்ஸ் கொடுத்தார் ஆடிட்டர். பில்லை ஆடிட்டர்தான் கொடுத்திருந்தார் என்றாலும் பின்னால் மொத்தச் செலவுக் கணக்கையும் சிவவடிவேலுதான் ஏற்க வேண்டியிருக்கும். “என்ன மிஸ்டர் அனந்த்? மிஸ்டர் சிவவடிவேலு ஏன் வெறும் காப்பியோடு நிறுத்திக் கொண்டார்? அவருக்குப் பசி இல்லையா?” என்று குப்தா ஆங்கிலத்தில் ஆடிட்டரைக் கேட்க, ஆடிட்டர் ஒரு கணம் தயங்கி யோசித்து, “ஹி இஸ் ஆல்வேஸ் எ புவர் ஈட்டர்...” என்று சமாளித்தார். வேறு என்ன சொல்வது? ஆனால் அதே சமயத்தில் மிஸஸ் குப்தா தணிந்த குரலில் பார்கவியைச் செல்லமாகக் கடிந்து கொண்டாள். நீ எக், ஃபிஷ் எல்லாம் சாப்பிடணும் அம்மா! இருபது வயசுக்கு மேல் என்கிறாய்! ஆரோக்கியமான வளர்ச்சியே இல்லையே. எலும்பும் தோலுமாகச் சோனிப் பெண்ணாய்க் காட்சியளிக்கிறாயே? இதே பதினெட்டு இருபது வயசில் வடக்கே ஒரு பஞ்சாபிப் பெண் பளபளவென்று அரபிக் குதிரை மரதிரி வாளிப்பாய் மின்னிக் கொண்டிருப்பாள். நாலைந்து வாலிபப் பையன்கள் அவள் பின்னால் பைத்தியமாய்ச் சுற்றிக் கொண்டிருப்பான்கள். நீ என்னடா என்றால்... நோயாளிப் பெண் மாதிரி இருக்கிருயே?” என்று கூறிக் கண்களைச் சிமிட்டினாள். மேலும் கிண்டலில் இறங்கினாள். “உங்கப்பா பார்கவின்னு பேர் வச்ச நீயும் ஆரோக்கியமாயில்லே, உன்னைப் போலவே பார்கவின்னு பேர் வைக்கப்பட்ட ஓட்டலும் ஆரோக்கியமா இல்லை. ரெண்டையுமே சரிப்படுத்தியாகணும்.” பார்கவியின் முகம் சிவந்து அவள் வெட்கப்பட்டாள். இந்தக் குப்தாவும் இவன் மனைவியும் எப்படி பார்த்த மறு வினாடி சொந்த மனிதர்களிடம் பழகுகிற மாதிரி அன்னியர்களிடம் பழகி ஒட்டிக் கொண்டு உறவாட முடிகிறது என்ற வியப்பிலிருந்து சிவவடிவேலுவால் இன்னும் மீளவே முடியவில்லை. அவர்கள் பாண்டியனில் சிற்றுண்டி காப்பியை முடித்துக் கொண்டு காரில் குருபுரம் புறப்பட்டார்கள். பிரயாணத்தின் போதே அந்த ஊர் சுற்றுப்புறம் விவசாய நிலைமை பற்றி எல்லாம் ஆடிட்டர் குப்தாவுக்கு விவரித்துக் கொண்டு வந்தார். சிவவடிவேலு எப்போது எந்த நிர்ப்பந்தம் காரணமாக நிலங்களை விற்று ஓட்டலில் முதலீடு செய்ய நேர்ந்தது என்பதையும் விவரமாகக் கூறினார். “எங்கு பார்த்தாலும் பச்சப்பசேல் என்றிருக்கிறது. இயற்கை அழகும் ஓசை ஒலிகளற்ற, நாய்ஸ் பொல்யூஷன் இல்லாத அமைதியும் எனக்கு மிகவும் பிடித்தமானவை. இந்த மாதிரிச் சூழ்நிலையில் மலையடிவாரத்தில் ஓர் ஓட்டல் இருந்தால் அது ஸ்விட்ஜர்லாந்தில் தங்கின மாதிரிச் சுகமளிக்கக் கூடிய விஷயம். ‘ஹாலிடே ரிஸார்ட்’ என்று இப்படி இடங்கள் ஐரோப்பாவில் பிரமாதப்படுகின்றன. ஹனிமூன் வருகிற இளம் தம்பதிகள் வரலாம். ‘வீக் எண்ட்’ டை என்ஜாய் பண்ண வருகிறவர்கள் இந்த இடத்தைத் தேர்ந்தெடுக்கலாம், சினிமா வில் கிராமாந்தர - ரூரல் அவுட்டோருக்காக - லொகேஷன் தேடி வருகிறவர்கள் இங்கே வரலாம். எவ்வளவோ வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. அப்படி இருந்தும் உங்கள் கிளையண்ட் சிவவடிவேலு இங்கு ஒரு நவீன ஓட்டலை நஷ்டத்தில் நடத்துவது வேடிக்கைத்தான். நீங்கன் மட்டும் ஒத்துழைத்தால் எல்லாம் ஸ்டெரைட் பண்ணிவிடுவேன்” என்று உறுதியாகச் சொன்னான் குப்தா. அவன் ஆங்கிலத்தில் கூறிய இந்த விவரங்களை அருகே இருந்த சிவவடிவேலுவுக்குத் தமிழில் சவிஸ்தாரமாக மொழி பெயர்த்துச் சொன்னார் ஆடிட்டர். உடனே சரிப்படுத்தக் குப்தா ஏதாவது மந்திரவாதியா என்ன என்று ஆச்சரியப் பட்டார் சிவவடிவேலு. |