4 குருபுரத்திற்குள் நுழைந்ததும் கார் நேரே சிவவடிவேலுவின் பங்களாவிற்குள் போயிற்று. ஆடிட்டர் அனந்த், “இங்கேதான் நீங்கள் இருவரும் தங்கப் போகிறீர்கள். இது மிஸ்டர் சிவவடிவேலுவின் பங்களா... அவருடைய மகள் பார்கவி உங்கள் தேவைகளைக் கவனித்துக் கொள்வாள்” என்று குப்தாவிடம் சொன்னார். குப்தா அதை ஏற்கவில்லை. உடனே மறுத்து விட்டான். “நோ... நோ... நான் இங்கே தங்கறதிலே அர்த்தமே இல்லை. ஆன் த ஸ்பாட் ஸ்டடி பண்ணனும்னா நான் ஓட்டில் பார்கவியிலேயே தங்கியாகணும்” என்றான் அவன். ஓட்டல் பார்கவியில் அவனுக்கு வேண்டிய செளகரியங்களும் உபசரணையும் கிடைக்குமா என்று யோசித்துத் தயங்கினார் ஆடிட்டர். பார்கவியில் அங்கே மானேஜர் முதல் மேஜை துடைக்கிறவன் வரை யாருக்கும் ஆங்கிலமோ இந்தியோ சுட்டுப் போட்டாலும் ஒரு வார்த்தை கூட வராது. இதற்கிடையே திருமதி சிவவடிவேலு, “வாங்க ஐயா! வாங்கம்மா” என்று எதிர்கொண்டு இருவரையும் வர வேற்றாள். “மிஸ்டர் குப்தா ஷி இஸ் மிஸஸ் சிவவடிவேலு. இவள் உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் நல்வரவு கூறுகிறாள்,” என்று குப்தாவிடம் கூறினார் ஆடிட்டர். சந்திரஜித் குப்தாவும் திருமதி குப்தாவும், ‘நமஸ்தேஜீ’ என்று அந்தம்மாளைக் கைகூப்பி வணங்கினர். உடன் வந்த பார்கவி மாடியில் அவர்களுக்கான விருந்தினர் அறையைத் தயார்ப் படுத்துவதற்குப் போயிருந்தாள். ஆடிட்டருக்குத் தர்மசங்கடமாயிருந்தது. திருமதி சிவவடிவேலுவுடன் அவர்களை விட்டு விட்டுப் போகலாமென்றால் மூவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் உட்கார்ந்திருக்க வேண்டும். சிவவடிவேலுவிடம் விட்டுச் செல்வதென்றாலும் அதே கதிதான். தானோ, பார்கவியோ குப்தா தம்பதிகளுடன் கட்டாயமாக உடன் இருந்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தை இப்போது ஆடிட்டர் உணர்ந்தார். பார்கவியைக் கூப்பிட்டு அவள், அவளுடைய அம்மா, குப்தா தம்பதிகள் நால்வரையும் வீட்டு முன் ஹாலில் உட்கார வைத்துவிட்டு சிவவடிவேலுவை அழைத்துக் கொண்டு பங்களா முகப்பில் இருந்த தோட்டத்துக்கு ஆடிட்டர் வந்தார்.
“அவன் இங்கே தங்க மாட்டானாம். பார்கவியிலே தங்கினால்தான் அதன் பிரச்சினைகளை ஸ்டடி பண்ண முடியுமாம்.”
“அடி ஆத்தாடி! அங்கே சரிப்பட்டு வராதே. இங்கே தங்கிக்கிட்டுப் போய்க் கவனிக்கட்டுமே?” “இல்லே! அவன் அப்படிச் செய்ய ஒத்துக்க மாட்டான்னு தோணுது. அங்கேயே மாடியில் நல்ல டபிள் பெட் ரூம் பார்த்து ஒண்ணு குடுத்துடுங்க.” சிவவடிவேலு கையைப் பிசைந்தார். அவர் முகத்தில் பதற்றம் தெரிந்தது. வியர்த்தது. “அப்ப ஒண்ணு செய்யலாம். இவங்க இங்கயே கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருக்கட்டும். அதுக்குள்ள நாம ரெண்டு பேரும் போயி ஒரு ரூமை ஒழுங்கு பண்ணிட்டு வந்திருவோம்" என்றார் சிவவடிவேலு. அவர் பதறுவதிலிருந்து பார்கவியில் குப்தா தங்குவதற்கு ஏற்ற தரத்தில் ரூம்கள் எதுவும் இராது என்று புரிந்தது. திறப்பு விழாவுக்குப் பின் ஆடிட்டர் இரண்டு வஷருங்களாக அந்தப் பக்கம் எட்டிப் பார்க்கவே இல்லை. சிவவடிவேலு கொடுத்த கணக்கு வழக்கு விவரங்கள் சிட்டைகள், டேபுக், லெட்ஜர்களிலிருந்து பேலன்ஷீட் போட்டுக் கொடுத்ததோடு சரி. ஆனால் இப்போது போய்ப் பார்த்தால் உண்மை நிலை பரிதாபமாயிருந்தது. வாஷ்பேசின் உடைந்து போய்ச் சில ரூம்கள், கண்ணாடி உடைந்து சில ரூம்கள். லெட்ரீன் பீங்கான் உடைந்து சில ரூம்கள். ஜன்னல் கொக்கி உடைந்து சில ரூம்கள் என்று தாறுமாறாகி இருந்தன. வெளியூர் ஆட்கள் அதிகம் வராததாலும் அக்கம் பக்கத்துக் கிராமத்து ஆட்கள் தங்கியதாலும் அறைகளை நாற அடித்திருந்தார்கள். சுவரெல்லாம் ஒரே குங்குமக் கறை. மூலைகளில் தாம்பூலம் போட்டுத் துப்பிய வெற்றிலைச் சாற்றுக் கறை, ஒட்டடையும் நூலாம்படையும் காடு மண்டியிருந்தன. அறைக்குள் புகை படிந்திருந்தன. இருந்தும் எப்படியோ சிரமப்பட்டு மலைத் தொடரைக் காண்கிற மாதிரி வியூ இருந்த ஒரு காற்றோட்டமான அறையைச் சுத்தம் செய்து ஒழுங்கு படுத்திக் குப்தாத் தம்பதியினருக்குத் தயார்ப்படுத்தினர்கள். மிராசுதார் சிவவடிவேலுவுக்குச் சொந்தமாக இருந்த ஓர் ஐம்பது ஏக்கர் தென்னந் தோப்பில் நடுவாக அந்த ஓட்டல் கட்டப்பட்டிருந்தது. ஊரிலிருந்து கொஞ்சம் ஒதுக்குப்புறமாக இருந்தது. இயற்கையழகு கொஞ்சும் இடமாக இருந்ததால் ஓர் ஓட்டலுக்கு ஐடியலான லட்சணங்கள் கொண்டிருந்தும் சரியாக மெயிண்டெயின் பண்ணாமல் கெட்டிருந்தது, சீரழிந்து போயிருந்தது. இப்படி இங்கே குப்தா தம்பதிகளுக்கு அறையைச் சுத்தம் செய்து தயாராக்க வேண்டியிருந்ததால் அவர்கள் நீராடி உடை மாற்றிப் பகலுணவை முடிக்கச் சிவவடிவேலுவின் பங்களாவிலேயே தற்காலிகமாகத் தங்க ஏற்பாடு செய்யப்பட்டது. குப்தா தயக்கத்துக்கும் ஆட்சேபணைக்கும் பின்பே தற்காலிகமாக அதற்கு இணங்கினான். “மிஸ்டர் குப்தா! இன்று பிற்பகலில் நீங்கள் விரும்பு கிறபடி ஓட்டல் பார்கவியிலேயே தங்கிக் கொள்ளலாம். வீடு தேடி வந்தவர்களை ஒருவேளை சாப்பிடச் சொல்லாமல் அனுப்ப முடியாது என்று திருமதி சிவவடிவேலு பிடிவாதம் பிடிக்கிறாள். அந்தம்மாளுடைய வேண்டுகோளுக்காகவாவது நீங்கள் இன்று பிற்பகல் வரை இங்கே வீட்டில் தங்கியாக வேண்டியது அவசியம்” என்று மன்றாடி ஆடிட்டர் குப்தாவைச் சம்மதிக்க வைக்க வேண்டியதாயிற்று. “மரணப்படுக்கையில் சாகக் கிடக்கிற ஒரு நோயாளிக்கு வைத்தியம் செய்ய வருகிற டாக்டர் நடுவழியில் தங்கவோ ஓய்வு எடுக்கவோ, உபசரணைகளை ஏற்கவோ முடியாது. நோயாளியை எவ்வளவு விரைந்து காப்பாற்ற முடியுமோ அவ்வளவு விரைந்து காப்பாற்றுவதே அவரது முதல் வேலையாக இருக்க வேண்டும். எனக்கும் அது பொருந்தும். எனது நோயாளியை நான் முதலில் அட்டெண்ட் செய்து தீரவேண்டும். மற்றதெல்லாம் அப்புறம்தான்” என்று கறாராக வாதித்தான் குப்தா. ஆடிட்டிருக்கும் அவன் சொல்வது நியாய மென்றே பட்டது. ஆனால் குப்தா வைத்தியம் செய்ய வேண்டிய நோயாளி ஓட்டல் பார்கவியா, அல்லது மிஸ்டர் சிவவடிவேலுவா என்பதைத்தான் ஆடிட்டரால் தீர்மானமாகத் தெரிந்து கொள்ள முடியாமல் இருந்தது. ஓட்டல் பார்கவி என்ற தாவர ஜங்கம சொத்துக்கு மருந்து கொடுத்து வைத்தியம் செய்ய முடியாது. சிவவடிவேலுவோ மருந்து சாப்பிட மறுத்து அடம் பிடிக்கும் முரட்டுக் குழந்தை போன்றவர். என்ன செய்வது? குப்தா எவ்வளவுக்கெவ்வளவு ஓட்டில் பார்கவியின் ஆரோக்கியக் குறைவைப் பற்றிக் கவலைப்பட்டானோ, அவ்வளவுக்கவ்வளவு திருமதி குப்தா குமாரி பார்கவியின் ஆரோக்கியத்தைப் பற்றிக் கவலைப்பட்டாள். அவளுக்குச் சிவவடிவேலுவின் மகள் பார்கவியை மிகவும் பிடித்து விட்டது. “இந்த வயசிலே நீ இப்படி நோயாளித் தோற்றத்தோடு முடங்கிக் கிடக்கக் கூடாதடி பெண்ணே! புள்ளிமான் போல் உற்சாகமாகத் துள்ளித் திரிய வேண்டும். பாலோடு காட்லிவர் ஆயில் கலந்து சாப்பிடு. சிக்கன் எஸென்ஸ் அல்லது சூப் எடுத்துக் கொள். எக்ஸர்ஸைஸ் பண்ணு ஸ்லிம்மா இருக்கணும். அதோட அழகா லட்சணமாவும் இருக்கணும். நாலு பேரோட கலகலப்பா சிரிச்சுப் பேசப் பழகணும். தலைக்கு ‘எக்’ ஷாம்பு யூஸ் பண்ணு. இன்ன சோப்பு ஃபேர் காம்ப்ளெக்ஷன் தரும்,” என்றெல்லாம் சொந்தப் பெண்ணுக்குச் சொல்வது போல் சொல்லிக் கொண்டிருந்தாள் திருமதி குப்தா. பார்கவிக்கு அவளையும் அவளுக்கு பார்கவியையும் ரொம்பவும் பிடித்துப் போயிற்று. குப்தாவும், திருமதி குப்தாவும் ஒட்டலுக்குப் போய்த் தங்கிய பின்பும் பார்கவி பெரும் நேரத்தைத் திருமதி குப்தாவுடனேயே செலவழித்தாள். இரவில் தூங்கும் நேரத் துக்கு மட்டும்தான் வீட்டுக்கு வந்தாள் அவள். பார்கவி மலைமேலிருந்த ஆஞ்சநேயர் கோவிலுக்குத் திருமதி குப்தாவை ஒருநாள் அழைத்துச் செல்ல விரும்பினாள். ஆஞ்சநேயர் டெம்பிள், அனுமார் டெம்பிள் என்று சொல்லிப் பார்த்தும் அது என்ன கோவில் என்று குப்தாவின் மனைவிக்குப் புரியவே இல்லை. அப்புறம் இந்தியில் அதை எப்படிச் சொல்வதென்று ஆடிட்டர் மாமாவைக் கேட்டாள். “இந்தியிலே ‘பஜ்ரங்பலின்’னா ஆஞ்சநேயர். பஜ்ரங்பலி மந்திர்னு சொல்லு, புரியும்” என்றார் ஆடிட்டர். குப்தா கருமமே கண்ணாக, வந்த வேலையில் மூழ்கி விட்டான். குப்தாவோடு கூட ஆடிட்டர் இருந்தார். தேவையான போது சிவவடிவேலுவையும் உடன் வைத்துக் கொண்டார்கள். மற்ற வேளைகளில் அவரைத் தவிர்த்தார்கள். வந்த முதல் ஐந்து நாள் ஆப்ஸர்வேஷனுக்காகச் செலவழித்தான் குப்தா. நல்ல கூட்ட நேரத்தில் ரெஸ்டாரெண்டில் போய் உட்கார்ந்து கவனித்தான். பரிமாறும் பையன்களில் சிலர் வேட்டியை மடித்துக் கட்டியிருந்தனர். வேறு சிலர் இடுப்பில் கைலியும் பனியனுமாகப் பரிமாறினர். தலையைச் சொறிந்தனர். மூக்கு நோண்டினர். உண்ணும் பிளேட்டுகளில் பண்டங்களை ‘ணங்’கென்று ஓசையெழ வைத்தனர். கொண்டு வந்து வைக்கிற வேகத்தில் தண்ணீர், காப்பி எல்லாம் கஸ்டமருடைய வேட்டி சட்டையில் தெறித்து விடும் போலிருந்தது சில சமயங்களில். விலை அதிகமான இரண்டு ஸ்வீட், ஒரு மசாலா தோசை காப்பி ஐஸ்க்ரீம் இத்தனையும் சாப்பிட்ட ஒரு கஸ்டமரின் பில் ஒன்றரை ரூபாய் என்று அவருக்குப் பரிமாறிய சர்வர் குரல் கொடுத்தான். போகிற போக்கில் அந்தக் கஸ்டமர் டிப்ஸ் போல் சர்வரிடம் ஒரு முழு ஒரு ரூபாய்த் தாளைக் கொடுத்து விட்டுப் போவதைக் குப்தா கவனித்தான். விலை விவரங்களை விசாரித்து அந்தக் கஸ்டமர் சாப்பிட்டதற்கு உண்மையில் என்ன பில் ஆகுமென்று பார்த்தால் கிட்டத்தட்ட ஆறு ரூபாய்க்கு மேல் ஆயிற்று. சர்வருக்கு ஒரு ரூபாய் லஞ்சம் கொடுத்ததால் மொத்தம் ரெண்டரை ருபாயில் அந்தக் கஸ்டமர் சகலத்தையும் முடித்துக் கொள்ள முடிந்தது. ஓட்டல் பார்கவி ஸ்டோர் கீப்பர் - சரக்கு மாஸ்டரிடம் சாமான்கள் கொடுக்கும் போது ஒருநாள் கவனித்துக் குறித்துக் கொண்டான் குப்தா. பாதாம் கீருக்காக ஓர் எடையளவு பாதாம் பருப்புத் தரப்பட்டது. பகலில் தன் அறையிலிருந்து குப்தாவே ஒரு பாதாம் கீர் வரவழைத்துச் சாப்பிட்ட போது நிலக்கடலைப் பருப்பை அரைத்துக் கேஸரிப் பவுடரால் நிறமூட்டப்பட்டுக் குளிரப் பண்ணிய கீராக இருந்தது அது. ஸ்டோர் கீப்பரும் உடந்தை என்று புரிந்தது. அங்கே சரக்கு மாஸ்டருக்கு என்ன சம்பளம் என்று விசாரித்ததில் மிகவும் குறைவாக இருந்தது. ஆடிட்டருடன் குப்தா மெல்ல மெல்லத் துப்பறிந்ததில் எந்த மளிகைக் கடை ‘பார்கவி’க்கு மளிகைச் சாமான்கள் சப்ளை செய்ததோ அதே கடைக்குப் பாதாம் பருப்பு திரும்பிப் போவது தெரிந்தது. சரக்கு மாஸ்டருக்கு நிலக்கடலைப் பருப்பையும் அந்தக் கடையே வழங்கி வந்தது. மளிகைக் கடைக்காரர் தனியே ஒரு தொகை ரகசியச் சம்பளமாகச் சரக்கு மாஸ்டருக்கும் ஸ்டோர் கீப்பருக்கும் கொடுத்து வந்ததையும் கண்டு பிடித்தார்கள். துப்புத் துலங்கியது. பார்கவி லாட்ஜில் செக்ஷனை நிர்வகித்து வந்த கரும்பாயிரம் என்ற ஆள், தங்க வருகிற ஆட்களிடம் எல்லாம் கடுகடுப்பாகப் பேசினான். ரிஜிஸ்தர் - பில் - ரசீது இல்லாமலே அக்கம்பக்கத்துக் கிராமங்களிலிருந்து குருபுரத்துக்கு செகண்ட் ஷோ சினிமா பார்க்க வந்து இரவே ஊர் திரும்ப முடியாமல் அதிகாலை முதல் பஸ்ஸுக்கு ஊர் திரும்புகிற பலரிடம் ஐந்து, பத்து என்று ரொக்கம் வாங்கிக் கொண்டு அறைகளில தங்க விட்டான். அவனுடைய சம்பளமும் மிக மிகக் குறைவு என்பதைக் குப்தா கவனித்தான். ஆப்ஸர்வேஷன் முடிகிறவரை இதையெல்லாம் பரம ரகசியமாக வைத்துக் கொள்ளும்படி குப்தா ஆடிட்டரிடம் கேட்டுக் கொண்டிருந்தான். சிவவடிவேலுக்குக் கூட அவர்கள் எதையும் சொல்லவில்லை. |