6 குமரேசனைக் குருபுரம் முத்தமிழ் மன்ற மேடையில் பட்டிமன்றப் பேச்சின் நடுவே போய்ப் பிடித்தார் ஆடிட்டர் அனந்த். மனித வாழ்க்கைக்கு முக்கியம் பொருளா அருளா என்ற பட்டிமன்றத்தை அரை மணி நேரம் உட்கார்ந்து பொறுமையோடு கேட்பது பொருள்தான் முக்கியம் என்பதைப் புரிந்து கொண்டு விட்ட ஒரு சார்ட்டர்ட் அக்கவுண்டெண்டுக் குச் சிரமமாகத்தான் இருந்தது. அருள்தான் முக்கியம் என்று பேசிய முதல் பேச்சாளனை எதிர்த்துப் பொருள் தான் முக்கியம் என்று வற்புறுத்திய பின் குமரேசனைச் சந்தித்து அழைத்தார் ஆடிட்டர். அவன் தயங்கினான். “எதுக்கு இவ்வளவு அவசரம்? பொதுவாகப் பட்டி மன்றங்களில் தீர்ப்பு வழங்குவதற்கு முன் நான் கிளம்பிப் போகிற வழக்கமில்லையே?” “அட ரொம்ப அவசர விஷயம் அப்பா! தீர்ப்பை நாளைக்குக் கேட்டுத் தெரிஞ்சுக்கலாம் இப்போ என் கூடப் புறப்படு! சொல்றேன்.” தட்டிச் சொல்ல முடியாமற் போகவே முத்தமிழ் மன்றச் செயலாளரிடம் போய் விடை பெற்றுத் தனக்குச் சேர வேண்டிய தொகையைப் பெற்றுக் கொண்டு வந்து சேர்ந் தான் குமரேசன். “அந்த டில்லி பிஸினஸ் டாக்டர் உன்னைப் பார்க்கணும்னாருப்பா!” என்று காரைச் செலுத்திக் கொண்டே அருகில் அமர்ந்திருந்த குமரேசனிடம் தெரிவித்தார் ஆடிட்டர். “இதுக்கா கூப்பிட்டீங்க? எங்கப்பா காலம் வரை அவர் சொத்திலோ வியாபாரங்கள், தொழில்களிலோ எங்கண்ணனோ, நானோ தலையிட மாட்டோம்னு நீங்களே அந்த ஆளுக்குச் சொல்லியிருக்கலாமே, சார்?” “எதுக்குன்னு தெரியலே. ஆனால் அவர் உன்னைப் பார்த்தே ஆகணும்கிறார்.” “எதுக்கு வீண் வேலை? எங்கப்பா காலம்வரை கொக்குக்கு ஒண்ணே மதின்னு பழைய மிட்டா மிராசு மனப்பான்மையிலேயே எதையாச்சும் சும்மா பண்ணிட்டிருப்பார். நீங்க ஒருத்தருதான் வேலை மெனக்கெட்டு அவரைக் கட்டி மாரடிக்கிறீங்க! அவரை நம்பி இந்த மனுஷனை வேற டில்லியிருந்து வரவழைச்சிருக்கீங்க! இந்த ஆளு சொல்ற எதையும் அவர் கேட்கப் போவதில்லை. ஹோட்டல் பழைய குருடி கதவைத் திறடின்னு நஷ்டத்திலே தான் நடக்கப் போவுது.” “இப்ப என்கிட்டே சொல்ற இதையே அந்த டில்லி ஆசாமிகிட்டேயும் சொல்லேன். உண்மை நிலை என்னென்னாவது அந்த ஆளுக்குப் புரியட்டும்!” “இதை நான் வந்துதான் அவர்கிட்டே சொல்லணுமா என்ன? நீங்களே இதுக்குள்ளே சொல்லியிருக்கணுமே?” “என்ன இருத்தாலும் நான் மூணாவது மனுஷன்தானே அப்பா!” “நீங்களாவது மூணாவது மனுஷனாவது? நீங்கதானே எங்கப்பாவுக்கு ஃபிரெண்டு, ஃபிலாசபர், கைடு எல்லாம்?”
“உங்கப்பா செய்கிற தப்புக்கெல்லாம் நான்தான் காரணம்னு குத்திக் காட்டறியா?”
“நான் அப்படிச் சொல்லவில்லை, இவர்தான் என்னோட நண்பர், நல்லாசிரியர், வழிகாட்டி என்று எல்லோரிடமும் உங்களைக் கையைக் காண்பிச்சிட்டுப் பண்ற தப்பை எல்லாம் எங்கப்பா அவராகவே பண்றாருங்கிறேன்.” இதைக் கேட்டு ஆடிட்டர் சிரித்துக் கொண்டார். இவனுக்கு இருக்கிற வாய்ச் சவடாலுக்குச் சிவவடிவேலு மட்டும் சுதந்திரம் கொடுத்து உரிமையுடன் ஹோட்டல் நிர்வாகத்தைக் கவனிக்க விட்டால் பிரமாதமாயிருக்கும் என்று தோன்றியது. பிஸினஸ் டாக்டர் குப்தாவுக்கும் குமரேசனுக்கும் அறிமுகம் செய்துவிட்டு ஆடிட்டர் ஒதுங்கி அமர்ந்து கொண் டார். குப்தா ஜோவியலாகப் பேச்சைத் தொடங்கினான். குமரேசனும் குஷியாக உரையாடினான். ‘கேட்டரிங்’ டிப்ளமா வாங்கின டிஸண்டான ஆட்களை வேலைக்குப் போட்டால் ஹோட்டலைப் பிரமாதமாக நடித்த முடியும் என்று குப்தா சொன்னதும் குமரேசன் வேறு ஒரு ஐடியாவை கொடுத்தான். “நீங்க சொல்றதை விடப் பிரமாதமான ஐடியா என்கிட்டே இருக்கு, மிஸ்டர் குப்தா! இங்கிருந்து மலை வழியா காட் செக்ஷன் ரோட்டிலே போனால் நூத்திப் பன்னிரண்டு மைல்லே கேரளா பார்டர் வந்துடும். சமீபத்திலேதான் அந்த ரோட்டை ஹைவேஸ்காரங்க புதுசாப் போட்டிருக்காங்க, கோட்டயத்திலே போய் முடியுது அந்த ரோடு, கோட்டயத்திலே எனக்குத் தெரிஞ்ச 15 முதல் 30 வயது வரையிலான அழகிய இளம் பெண்களுக்கு மட்டும் கேட்டரிங் பயிற்சி கொடுத்து அனுப்பும் ஒரு பிரைவேட் இன்ஸ்டிடியூட் இருக்கு. அப்படிப் பெண்களே சர்வ் பண்ற மாதிரி ரெஸ்டாரெண்ட் ஒண்ணு கொச்சீன்லே பிரமாதமாக நடக்குது. உள்ளே உட்கார இடம் கிடைக்கலே! இங்கே எங்க ஃபாதர் கிட்டே சொன்னால் அடிக்க வருவார்.” “மார்வலஸ் ஐடியா!” என்று துள்ளிக் குதிக்காத குறையாக உற்சாக மேலிட்டுக் கூவினான் குப்தா. “எங்கே அதைப் பத்தி இன்னும் கொஞ்சம் விவரமாகச் சொல்லுங்க” என்று குமரேசனை மேலும் உற்சாகப்படுத்தித் தூண்டினான் குப்தா. “கவர்ச்சிக்காக இதை நான் சொல்றேன்னு நினைக்காதீங்க. பரிமாறல், டேபிள் டெகரேஷன், இதமாகப் பேசுவது இதிலெல்லாம் பெண்கள் மென்மையாக நடந்துக்கறாங்க. ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாகத் தொழில்கள் செய்ய வேண்டும் என்ற பெண் விடுதலைக் கவிஞரின் இலட்சியத்தையே இங்கு நான் எதிரொலிக்கிறேன். பெண்கள் அதுவும் அழகிய இளம் பெண்கள் வறுமையால் சிரமப்படும் மாநிலம் கேரளா. இந்த ஏற்பாடு பயனளிக்கும். சிலருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும். ஆண்கள் வேறு கடின வேலைக்குத் தங்கள் நேரத்தைச் செலவிடலாம்.” “நம்ம நியூ பார்கவியில் முதல்லே அறிமுகப்படுத்த வேண்டிய திட்டம் இது ஆடிட்டிர் சார், மறந்து விடாமல் இப்பவே குறிச்சு வச்சுக்குங்க” என்று ஆடிட்டரை நோக்கி வியந்து கூவினான் குப்தா. உடனே குமரேசனிடம் அக்கறையாக, “மிஸ்டர் குமரேசன்! கேட்டரிங் வகையில் அழகிய இளம் பெண்களுக்குப் பயிற்சி கொடுத்துத் தயாரிக்கும் அந்த இன்ஸ்டிட்யூட்டின் முகவரியையும் கொச்சினில் ஏதோ ஹோட்டல் அப்படிப் பெண்களே பரிமாறுகிற விதத்தில் வெற்றிகரமாக நடப்பதாய்க் கூறினீர்களே அந்த ஹோட்டலின் முகவரியையும் தயவு பண்ணி எனக்குக் குறித்துத் தர வேண்டும்” என்றும் கேட்டான் குப்தா. “விலாசம் தருவது இருக்கட்டும். ‘நியூ பார்கவி’ என்று என்னமோ சொன்னிங்களே? என்னது அது? எங்கப்பா எதைத் தொடங்கினாலும் அது நிச்சயமா நியூவா இருக்க முடியாது. அவர் தொடங்கறப்பவே அது ஓல்டாயிடும். அத்தனை கைவிசேஷம் அவருக்கு. அவர் கையாலே தொடங்கினப்புறம் பார்கவி எப்படி ‘நியூவா’ இருக்க முடியும்?” “பார்கவி நியூவாகப் போகிறாள் மிஸ்டர் குமரேசன். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை.” “சும்மா கனவு காண்கிறீர்கள்! எங்கப்பா இருக்கிற வரை அது நடக்காது. எங்கப்பா செல்லமா வளர்க்கிற ‘பார்கவிகள்’ இருவர். இருவருமே உற்சாகமாக இல்லை. ஒன்று இந்த ஓட்டல் மற்றொன்று என் தங்கை பார்கவி, அவரது செல்லப் பெண்.” “இல்லை மிஸ்டர் குமரேசன். நீங்கள், உங்கள் சகோதரர் தண்டபாணி எல்லோருடைய ஒத்துழைப்பையும் கொண்டு நானும் ஆடிட்டரும் சேர்ந்து இரண்டு பார்கவிகளையுமே ஆரோக்கியமாக்கப் போகிறோம்.” “மிஸ்டர் குப்தா இங்கே எங்கப்பா வேலைக்கு வச்சிருக்கிற ஆட்களைப் பார்த்த பிறகுமா உங்களுக்கு இந்த நம்பிக்கை? களத்து மேடுகளிலும் வயல் வரப்புகளிலும் எங்கப்பாவோடு காரியஸ்தனாய்ச் சுற்றிக் கொண்டிருந்த கறும்பாயிரம் அந்த நாளிலேயே விவசாயக் கூலிகளுக்குத் தர வேண்டிய அஞ்சு பத்துலே கமிஷன் அடிக்கிறவன். அப்பாவைக் கண்டால் மட்டும் எழுந்து நின்னு கைகட்டி வாய் பொத்தி, ‘முதலாளி சொல்றபடி செய்யறேனுங்க’ என்று குழைகிறவன். அவனை நம்பி போர்டிங்கை விட்டிருக்கிறார். வெளி வேஷமான பணிவும் பயபக்தியும் இருந்தாலே அவன் யோக்கியன் என்று கணித்து விடுகிறவர் எங்கப்பா. இவர் கிட்டே கல்யாணம் கார்த்திக்குத் தவசிப்பிள்ளையாயிருந்த இசக்கிமுத்துவைச் சரக்கு மாஸ்டராகவும் ஒரு ரிடையர்டு சப்ரிஜிஸ்திரார் ஆபீஸ் கிளார்க்கை ஸ்டோர் கீப்பராகவும் - அவங்க குறைஞ்ச சம்பளத்துக்கு ஒப்புக்கிட்டாங்கன்னு - நியமிச்சிருக்கார். உண்ணி மாதிரியும் அட்டை மாதிரியும் பார்கவியின் லாபத்தை இவங்க உறிஞ்சிட்டிருக்காங்க. சர்வர், ரூம் பாய்ஸ்னு இவரோட பழைய நிலங்கரைகளில் காத்திட்டிருந்தவனையும் களை எடுத்திட்டிருந்தவனையும் காவல் காத்துக்கிட்டு இருந்த வனையும் குறைஞ்ச சம்பளத்துக்குப் போட்டிருக்கார். நவீன மானேஜ்மெண்ட் கான்ஸெப்ட்டே இவருக்குப் புரியாது. புரிய வைக்கவும் முடியாது. பார்கவிங்கிற இந்த நோயாளியை உங்ககிட்டே காண்பிக்க ஒப்புக்கிட்டதே எங்கப்பாவைப் பொறுத்தவரை பெரிய புரட்சிதான்!” “நீங்க சொல்றது எதையும் நான் மறுக்கலே மிஸ்டர் குமரேசன்! இது உங்க குடும்பச் சொத்து. உங்கப்பா உங்க காலத்துக்குப் பின் நாளைக்கு உங்களுக்கும் உங்க உடன் பிறந்தவர்களுக்கும் வர வேண்டியது. இன்னிக்கு இதிலே இவ்வளவு ஊழல் இருக்குன்னு நான் வந்து கண்டுபிடிக்கிற துக்கு முன்னுடியே தெரிஞ்சிட்டிருக்கிற நீங்க சும்மா இப்படி ஒதுங்கி இருக்கலாமா?” “சும்மா இருக்காமே வேற என்னதான் செய்யணும்கிறீங்க? எங்கப்பாவுக்கு அவரை விமர்சிக்கிறதோ எதிர்த்துப் பேசி விவாதிக்கிறதோ அறவே பிடிக்காது. நானும் எங்கண்ணனும் எதிர்த்துப் பேசிப் பேசிச் சோம்பேறி, உருப்படாதவன்னு அவர்கிட்டே வசவு வாங்கினதுதான் மிச்சம். எதிர்த்துப் பேசாமல் அப்பாவைப் புகழ்ந்து செல்லப் பெண் ஆகிவிட்டாள் தங்கை. அவரை முகஸ்துதி பண்ணிக் கை கட்டி வாய் பொத்தி நின்னவனெல்லாம் ஊழியன்கிற பேரைப் பெற்றுச் சுரண்டிக் கொட்டிக்கிறான்கள்.” “அப்போ இதை எல்லாம் சரிப்படுத்த என்னதான் வழி?” “வழி இருக்கு! ஆனால் அது நடைமுறையிலே சாத்தியமா இல்லையான்னுதான் எனக்குப் புரியலே. இன்னிக்கு நான் ஒரு வார்த்தை ஃபோன் பண்ணிக் கிரீன் ஸிக்னல் கொடுத்தா எங்கண்ணன் டில்லியிலேர்ந்து இங்கே வரத் தயாராக இருக்கான். ஆனால் இவருக்கும் அவனுக்கும் ஒத்துக்காது.” “உங்க யோசனைகளைத் தாராளமாக எங்கிட்டே சொல்லுங்க, குமரேசன்! இத்தனை தூரம் வேலை மெனக்கெட்டுப் புறப்பட்டு வந்து தங்கி நான் நோயாளியைக் காப்பாற்றாமல் திரும்பிப் போனால் எப்படி?” “இப்ப இருக்கிற ஸெட் - லைஃப்பைக் கம்ப்ளீட்டா மாத்தணும்! முழுக்க முழுக்கப் புது ரத்தத்தைப் புகுத்தணும். மூணு மாசச் சம்பளத்தைக் கையிலே கொடுத்தாவது பார்கவி யிலே இப்போ வேலை பார்க்கிற அத்தனை பேரையும் வெளியிலே அனுப்பணும். இதிலே தயவு தாட்சண்யமே கூடாது! ஒருத்தனை மீதம் வைத்துக் கொண்டால் கூட ஒரு குடம் பாலில் துளி விஷம் மாதிரி ஆகிப் போயிடும். இவங்க எல்லோருமே சம்பளத்துக்குச் சம்பளமும் வாங்கிக்கிட்டுக் கிளம்பமும் பண்றவங்க. ஹோட்டல் தொழிலுக்குப் பரிச்சயமான டீஸண்ட் ஆட்களை நல்ல சம்பளத்திலே நியமிக்கணும். ஆனால் இந்த மறுபரிசீலனை, விமரிசனங்கள் மாறுதல்களுக்கு எங்கப்பா ஒருக்காலும் சம்மதிக்க மாட்டார் மிஸ்டர் குப்தா.” |