7 ஆடிட்டர் அனந்துக்கே கூடக் குமரேசனின் விளக் கங்கள் ஆச்சரியத்தை அளித்தன. சிவவடிவேலு இவனைப் போய்ச் சோம்பேறி, ஊர் சுற்றி என்கிறாரே என்று அவர் மேல் கோபம் வந்தது. ஆடிட்டரே நேரடியாகப் பேச்சில் குறுக்கிட்டு, “சுற்றிச் சுற்றிச் செக்கு மாடு மாதிரி ஒரே இடத்திலே வந்து நின்னுடறியேப்பா இதிலேர்ந்து மீள என்ன வழி?” என்று குமரேசனைக் கேட்டார். குமரேசன் சிரித்தான். பின்பு பதில் சொன்னான். வழி கண்டுபிடிக்க மருந்து சொல்லறக்குத்தான் குப்தா சார் வந்திருக்காரே...” “நான் நோயைக் கண்டுபிடிச்சாச்சு; மருந்தையும் தீர்மானம் பண்ணியாச்சு. ஒரு பெரிய ஆச்சரியம் என்னோட கண்டுபிடிப்பும், உங்களோட ஆப்ஸர்வேஷனும் ஏறக்குறைய ஒத்து வருது; அதனாலே உங்க முழு யோசனையையும் கேட்டுடலாம்னு பார்க்கிறேன், மிஸ்டர் குமரேசன்! நீங்க பிஸினஸ் மேனேஜ்மெண்ட் படிக்கலேன்னாலும் நடைமுறை ஞானத்திலேயே கரெக்டாச் சொல்றீங்க. ரைட் பெர்ஸன்ஸ் ஃபார் ரைட் ஜாப். ராங் பெர்ஸனல் ஃபார் ராங் ஜாப் என்று இரண்டு தலைப்புக்களில் என்ன வருமோ அதை இதுவரை அழகாகச் சொல்லிட்டீங்க” என்று குப்தாவே குமரேசனைப் புகழ்ந்தான். குமரேசன் தயங்கித் தயங்கிப் பெரிய பீடிகையோடு ஆரம்பித்தான். “இதோ இந்த ஆடிட்டர் சார் இருக்கார்! எங்கப்பாவுக்கு ரொம்ப வேண்டியவர். நான் சொல்றதை அவரும் நீங்களும் நல்ல ஸென்ஸிலே எடுத்துக்கணும். இப்பவே சொத்தைக் கைப்பற்ற ஆசைப்படறேன்னு சீப் மோடிவ் கற்பிச்சு என் நோக்கத்தைத் தப்பாப் புரிஞ்சுக்கக் கூடாது.” “ரிஸர்வேஷன் எதுவும் வேண்டாம். நினைக்கிறதை அப்படியே சொல்லுங்க. எனக்கு அதுதான் வேணும்.” “முரண்டுக்கிறது மோசமான குணம். முரண்டோட அறியாமையும் சேர்ந்துட்டாக் கேட்கவே வேண்டாம். அது வைக்கோல் போரில் நெருப்பிப் பொறி விழுகிற மாதிரி, எங்கப்பா கிட்டே இது ரெண்டுமே கணிசமா இருக்குது. ‘கொண்டது விடாமை’ என்கிற குணம் மனுஷனுக்கு இருக்கக் கூடாது. குரங்கு முதலை மாதிரிக் கவ்விப் பிடிக்கிற விலங்குகள் கொண்டதை விடாமல் பறிக்கலாம். ஆனால் மனுஷனுக்கு அது கூடாது. விலங்குக் குணம் மனுஷன் கிட்டே இருந்தால் அது ஆபத்தா முடியும். அறிவு வளர வளரப் பழசை விடணும். புதுசை ஏத்துக்கணும். பழசை விடறதுக்கும் புதுசை ஏற்றுக் கொள்வதற்கும் எங்கப்பா துணியமாட்டார். இதுனாலேதான் இப்ப எங்க ஃபேமிலியே கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்குது. இத்தனை வசதியிருந்தும் எங்கண்ணன் டில்லியிலே வாடகை வீட்டிலே குடியிருந்து இன்னொருத்தன் கீழே கைகட்டிச் சேவகம் பண்ணிட்டிருக்கான். நான் பட்டி மன்றம் பேசிக் கைச் செலவுக்குப் பத்து நூறு சம்பாதிக்கிறேன். எங்கம்மா ஒடுங்கிப் போயாச்சு, தங்கச்சி ரத்த சோகை பிடிச்ச மாதிரி வளர்ச்சியில்லாமல் இருக்கிறாள்.” “நீங்களும் எங்களோட ஒத்துழைச்சால் எல்லாத்தையுமே ஆரோக்கியமா மாத்திக்க முடியும். மாத்தியாகணும். உங்கப்பாவே சாசுவதமாக உலகத்திலே இருக்கப் போறதில்லே. இன்னும் அஞ்சு வருஷமோ பத்து வருஷமோ இருந்தாலே பெரிய காரியம்.”
“ஆனால் அந்த அஞ்சு வருஷம் பத்து வருஷத்துக்குள்ளே எல்லாமே திவாலாகிப் போயிரும். கரும்பாயிரம் வகையறாக்கள் கூழைக் கும்பிடு போட்டே எங்கப்பாவைச் சுரண்டித் தின்னுடப் போறாங்க.”
“ஆறே மாசத்திலே ஒழுங்கு படுத்தலாம்! கவலைப்படாதீங்க குமரேசன்.” “பவர் ஆஃப் அட்டர்னி வாங்கிக்கிட்டு எங்கப்பாவை ஆறு மாசம் ஃபாரின் டூரோ க்ஷேத்திராடனமோ அனுப்பிச்சாத் தான் நீங்க நினைக்கிற சீர்திருத்தங்களை எல்லாம் பண்ண முடியும். அவரைப் பக்கத்திலே வைச்சுகிட்டு எதையுமே பண்ண முடியும்னு எனக்குத் தோணலே. ரொம்பக் கஷ்டப்படும்.” “ஏன் அப்படிச் சொல்றீங்க! உங்க ஃபாதர் எந்த வகையிலே இடைஞ்சலா இருப்பார்?” “ஓடவும் விடமாட்டார், நிற்கவும் விடமாட்டார்! கரும்பாயிரத்தை டிஸ்மிஸ் பண்ணிக் கணக்குத் தீர்த்து அனுப்பிச்சீங்கன்னா அவன் நேரே ஓடிப்போய் ‘முதலாளி நீங்க தான் என்னைக் காப்பாத்தணும்’ன்னு அப்பா கால்லே நெடுஞ்சாண் கிடையாக விழுந்துவிடுவான். அப்பாவுக்கு ஒரு விக்னஸ். காலிலே விழுந்துட்டால் மனசு இளகிடும். அவனைக் கைவிடமாட்டார், இப்படிக் கால்லே விழுந்தே காக்காய்ப் பிடிக்கிற ஆளாகத்தான் அவர் இங்கே வச்சிருக்கார். அத்தனை பேரும் கால்லே விழுந்து மறுபடியும் வேலையிலே நுழைஞ்சிடுவாங்க. அதனாலே ‘ஆபரேஷன் நியூ பார்கவி’ கவுண்ட்டவுனுக்கு முன்னே அப்பாவை அப்புறப்படுத்தியாகணும்.” வெளிநாட்டுக்குப் போகச் சொல்லிப் பாஸ்போர்ட் விசா எடுத்துக் கொடுந்து அனுப்பலாமா? அல்லது காசி ராமேஸ்வரம்னு க்ஷேத்ராடனம் அனுப்பலாமா?” “ரெண்டுமே சுலபமில்லை சார். அப்பா ஊறின கிணத்துத் தவளை. சுலபத்திலே குருபுரத்தை விட்டு வெளியேறச் சம்மதிக்க மாட்டார். வெளியிலே போனலும் உடனே மூச்சுத் திணறிப் போய்க் காற்றைச் சுவாசிக்கவே பிடிக்காமல் மறுபடி கிணற்றுக்குள்ளேயே துள்ளிக் குதித்து விடுகிற சுபாவம் அவருக்கு. அதனாலே அவருக்குச் சந்தேகம் வராதபடியும் அவரை உடனே திரும்பவிடாத படியும் கவனிக்க அம்மாவையும் கூடவே அனுப்பி வைக்கணும். உள்நாட்டிலேயே க்ஷேத்ராடனம்னு அனுப்பினால் அவர் பாதியிலேயே டக்குனு திரும்பி வந்துடற அபாயம் இருக்கு. ரிஸ்க்தான். அட்லாண்டிக் ஓஷன் வழியாகப் புறப்பட்டு பசிபிக் வழியாகச் சுற்றிக் கொண்டு உலகம் பூராவும் வலம் வருகிற ஒரு ‘ரவுண்ட் த வோர்ல்ட் ட்ரிப்’ கப்பல்லே அவரையும் அம்மாவையும் சேர்ந்து அனுப்பணும்.” இதைக் கேட்டுக் குப்தாவும் ஆடிட்டரும் வயிறு வெடிக்கச் சிரித்து ஓய்வதற்குச் சில நிமிடங்கள் ஆகின. “சிரிக்காதீக்க. நான் விளையாட்டுக்குச் சொல்லலே, சீரியஸாகவே சொல்றேன். அப்பாவுக்குப் பயமும் சந்தேகமும் அவநம்பிககையும் அதிகம். யாரையும் எதையும், நம்ப மாட்டார். அதே சமயத்தில் தான் நம்பறவங்க மோசமானவங்க ளான்னு பார்க்காமெ தொடர்ந்து நம்பிக்கொண்டே இருப்பார். மாறுதலும் வளர்ச்சியும் உடனிகழ்ச்சியான விஷயங்கள். வளர்ச்சியின்றி மாறுதலும் மாறுதலின்றி வளர்ச்சியும் கிடையாதுங்கிறதை எங்கப்பா ஒப்புக்க மாட்டார். அதுதான் பிரச்னை. அதனாலே மாறுதலை அடிப்படையாகக் கொண்ட வளர்ச்சிக்கு முதற்கட்டமாக நீங்க செய்யணுங்கிற மாறுதலுக்கு அவர் பெரிய முட்டுக்கட்டையாக இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.” “அவரை இங்கேயே வைத்துக் கொண்டு ‘ஆபரேஷன் நியு பார்கவி’ முடியாதுங்கிறீங்க?” “ஐ யம் ஹண்ட்ரெட் பர்ஸெண்ட் ஷ்யூர் எபௌட் இட்.” “அப்போ வெளிநாட்டுப் பயண யோசனைதான் சரியான காரியம்.” “ரொம்ப சரி, அந்த யோசனையை அவர்கிட்டே யார் சொல்லறதுங்கிறதுதான் இப்ப கேள்வி, பூனைக்கு யார் மணியைக் கட்டி விடறது? யார் கட்டி விட்டால் பூனை மணியைக் கட்டிக் கொள்ளும் என்பதெல்லாம் தான் பிரச்சினை.” “அந்த விஷயத்தை நாங்க பார்த்துக்கறோம். மிஸ்டர் குமரேசன். ஆறு மாசமோ, ஒரு வருஷமோ அவரை வெளிநாட்டுக்குக் கப்பலேத்தி அனுப்பிடறது எங்க பொறுப்பு.” “அது அத்தனை சுலபமில்லை மிஸ்டர் குப்தா! அப்பாவோட பிறவிக் குணங்களில் ஒன்று கஞ்சத்தனம். ‘இந்த வயசுக்கு மேலே நாங்க உலகத்தைச் சுற்றிப் பார்த்து என்ன ஆகப் போகிறது? அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். வீண் செலவு’ன்னுடுவார்.” “பின்னே என்னதான் வழி அவர் இங்கேயே கூட இருந்தால் ஒண்ணுமே மாறுதல் செய்ய முடியாதுங்கறீங்க. வெளியே புறப்பட்டுப் போகவும் சம்மதிக்க மாட்டார்ன்னு சொல்றீங்க. ஆபரேஷன் நியூ பார்கவியை எப்படி லாஞ்ச் பண்றது?” “அப்பாவே சம்மதிச்சு வெளிநாடு கிளம்ப ஒரே ஒரு வழி தான் இருக்கு, அதுக்கு மட்டும் அவர் கட்டுப்படுவார்.” “என்ன?” என்று குப்தா ஆடிட்டர் இருவருமே ஏக காலத்தில் குமரேசனை ஆவலோடு கேட்டனர். எப்படியாவது பிரச்சினை தீர்ந்தால் போதும் என்றிருந்தது அவர்களுக்கு. “இதற்காக அவருடைய ஆஸ்தான ஜோசியர் கடுக்கையூர் கண்ணபிரானை அணுகி அவர் மூலமாக இந்த வெளிநாட்டுப் பயண யோசனை அப்பாவுக்குப் போகணும். குப்தாவோ ஆடிட்டரோ நானோ அண்ணனோ இதிலே சம்பந்தப்பட்டிருக்கோம்னாக் கூட அவர் சந்தேகப்படுவார். ஸ்பாண்டேனியஸா ஜோசியரே தேடிவந்து பேசிக்கிட்டிருக்கிறாப்போல இந்த ஃபாரின் ட்ரிப்பைப் பற்றி யோசனை சொல்லணும்.” “அந்த ஜோஸியர் எப்படிப்பட்டவர்? ஒத்துவரக்கூடிய ஆளா? உங்கப்பா மாதிரி முரண்டு பிடிக்கறவரா? அது தெரியணுமே?” குப்தா கடுக்கையூர் பற்றி உடனே விசாரித்தான், “கடுக்கையூராருக்கு எங்கப்பா பத்து ரூபாய் குடுப்பாரு, நாம் நூறு ரூபாய் குடுத்தா சொன்னபடி கேட்டுட்டுப் போறாரு.” “ஆனா அவருக்குக் கூட நிஜமான காரணம் தெரியப் படாது. பின்னலே வம்பு! அதுனாலே தினுசாச் சொல்லணும். வாழ்நாள் பூராவும் இந்தக் கிராமத்திலேயே கிடந்து உழல் கிறார். கொஞ்சம் வசதியா அவரை உலகம் சுத்திப் பார்க்க ஏற்பாடு பண்ணனும்னு நினைக்கிறோம். செலவுக்குப் பயந்து மாட்டேம்பாரு. அவர் நன்மைக்காக நீங்கதான் அதை வற்புறுத்திச் சொல்லிப் பிரயாணத்துக்கு அவரைச் சம்மதிக்க வைக்கணும்னு கடுக்கையூரார்கிட்ட நம்ம அப்ரோச் இருக் கணும்,” என்றார் ஆடிட்டர். “இல்லாட்டா அநாவசியமா ஃபேமிலி மேட்டர்ஸ் வெளியிலே வதந்தியாகி நாறிப் போகும்.” “மெல்ல அந்த ஜோசியரை இங்கே வரவழையுங்க. நான் ஏதோ பார்க்கணும்னு சொன்னதாக் கூட்டிட்டு வாங்க. கொஞ்சம் தாராளமாகக் கவனிக்கிறேன். அப்புறம் அவரிடம் சிவவடிவேலு மேட்டரை ஆரம்பிப்போம்” என்றான் குப்தா. ஜோசியரை அழைத்து வருகிற பொறுப்பைக் குமரேசனிடமும் ஆடிட்டரிடமும் விட்டான் குப்தா. ஆடிட்டரும் குமரேசனும் உடனே குருபுரம் மிராசுதார் சிவவடிவேலுவின் ஆஸ்தான ஜோசியரான கடுக்கையூர்க் கண்ணபிரானைத் தேடிக்கொண்டு அவருடைய வடக்குத் தெரு ஜோதிஷ கலாநிலையத்துக்கு விரைந்தனர். |