8 மாணவர்கள் போராட்டம் இப்படி அப்படி என்று ஒரு வழிக்கு வராமல் இழுபடவே ‘பார்கவி’யின் கல்லூரி மேலும் பதினைந்து நாளைக்குத் திறக்கப்பட மாட்டாது போலிருந்தது. பார்கவி அது பற்றிக் கவலைப்படவில்லை. மிஸஸ் குப்தாவைக் காரில் மலைக்கு அழைத்துச் செல்வது, ஆஞ்சநேயர் தரிசனம், ஏலக்காய் எஸ்டேட்டைச் சுற்றிக் காண்பிப்பது, அருவிக்கு நீராட அழைத்துச் செல்வது, குருபுரத்தைச் சுற்றியுள்ள இயற்கை அழகுமிக்க இடங்களுக்குப் பிக்னிக் கூட்டிப் போவது என்று பார்கவியின் நாட்கள் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் கழிந்தன. ஒரு நாள் திருமதி குப்தா தான் யாரிடமோ கேள்விப்பட்டிருக்கிற ஒரு விஷயத்தைப் பார்கவியிடம் நாசூக்காகச் சிரித்தபடி வினவினாள். “நீ மலை மேலிருக்கிற ஆஞ்சநேயர் கோவிலுக்கு அடிக்கடி போவதுண்டா பார்கவி?” “ஆமாம் அக்கா. ஏன் கேட்கிறீங்க?” “கன்னிப் பெண்கள் ஆஞ்சநேயர் கோவிலுக்கு - அதாவது பஜ்ரங்பலி மந்திருக்குப் போய் அடிக்கடி சுற்றினால் சீக்கிரம் கல்யாணம் ஆகும்னு இங்கே தெற்கே ஒரு நம்பிக்கை உண்டுங்கிறாங்களே...?” பார்கவியின் முகம் குங்குமமாய்ச் சிவந்தது. “என்னடி, நான் கேட்கிறேன். நீ பாட்டுக்குப் பதிலே சொல்லாமல் இருக்கிறாய்?” “நீங்க என்னைக் கேலி பண்றீங்க அக்கா.” “கேலி ஒண்ணும் இல்லேடி! சும்மா ஒரு அகடெமிக் இண்ட்ரெஸ்டிலேதான் கேட்டேன்.” “ஆமாம். அப்படி ஒரு நம்பிக்கை உண்டு. ஆனா நான் அந்தக் கோவிலுக்கு அடிக்கடி போகிறதுக்குக் காரணம் அது இல்லே அக்கா. இந்த மலை ஆஞ்சநேயர்தான் எங்களுக்குக் குலதெய்வம்.” “பஜ்ரங்பலியே ஒரு கட்டைப் பிரம்மசாரி! ஒரு கட்டைப் பிரம்மசாரியைப் போய் ஆண் பிள்ளைக்காக ஏங்கும் கன்னிப் பெண்கள் சுத்தறதிலேயும் வேண்டிக்கிறதிலேயும் என்ன அர்த்தம் இருக்க முடியும்? வேடிக்கையான பிரர்த்தனையாகத் தான் இருக்கிறது.” “பின்னென்ன? கல்யாணமாகாமே ஏங்கறவங்க கட்டை பிரம்மச்சாரியைச் சுற்றாமல் கிழவனையா சுத்திகிட்டிருப்பாங்க?” “அடி கள்ளி! கேட்டயேடி ஒரு கேள்வி செஞ்சுரி அடிச்ச மாதிரி! ஒண்ணுந் தெரியாதவள் மாதிரி இருந்துக்கிட்டு.... என்னென்ன பேசறேடி நீ?” இப்படித் திருமதி குப்தா வகையாகப் பார்கவியை மடக்கியபோது அவள் தலை குனிந்தாள்.
“அதுக்கில்லே அக்கா. கல்யாணமாகாத கன்னிப் பெண்களின் ஏக்கம் கல்யாணமாகி இந்தப் பக்கம் ஒண்ணும் அந்தப் பக்கம் ஒண்ணுமா ரெண்டு ரெண்டா வள்ளி - தேவானை, ருக்மிணி - சத்தியபாமான்னு நிறுத்தி வச்சுக்கிட்டு ஜாலியா இருக்கிற முருகன், கிருஷ்ணனுக்கு எல்லாம் தெரிய நியாயமில்லே, கல்யாணமே ஆகாத அனுமாருக்குத்தான் அது அனுபவரீதியாகத் தெரிஞ்சுருக்கும்னு நினைச்சோ என்னவோ, கன்னிப் பெண்கள் அனுமார் கோவிலைச் சுத்தறது அனுமார் படத்திலே வால் பக்கமாய்க் குங்குமப் பொட்டு வைக்கறதுன்னெல்லாம் பழக்கமா இருக்கு.”
“நான் கேட்டது அகடெமிக் க்வஸ்சன்! நீ சொல்றது அனுபவபூர்வமான பதில்டி பார்கவி,” என்று கண்களைச் சிமிட்டினாள் மிஸஸ் குப்தா. இயற்கையிலேயே படு அழகான மிஸஸ் குப்தா கண்களைச் சிமிட்டும்போது மேலும் அழகா யிருந்தாள். அவளோடு பழக ஆரம்பித்த பின் பார்கவி எவ்வளவோ மாறியிருந்தாள். வெறும் மரப்பாச்சி மாதிரி, இருந்த அவளை உயிர்த் துடிப்புள்ளவளாக மாற்றியிருந்தாள் திருமதி குப்தா. அவளிடம் அப்படியே வசியப்பட்டுப் போயிருந்தாள் பார்கவி. “பார்கவி! உனக்கும் எனக்கும் நிறைய ஒத்துமை இருக்குடி! உங்கப்பாவும் ஓட்டல் வச்சிருக்கார். எங்கப்பாவும் ஓட்டல் வச்சிருக்கார். எங்கே தெரியுமா? சிம்லாவிலே, எங்க வீட்டுக்காரருக்குச் சொந்த ஊர் லக்னோ. இவரை நான் கல்யாணம் பண்ணிக் கொண்டதே ஒரு சுவாரஸ்யமான கதை. இப்போ உங்கப்பாவோட ஓட்டல் இருக்கிற மாதிரி எங்கப்பா வோட சிம்லா ஓட்டல் நஷ்டத்திலே முழுகிப் போயிருந்தது. எங்கப்பாவுக்கு மெயின் பிஸினஸ் ஆப்பிள் வியாபாரம். சிம்லாவிலேயும் சுற்றுப்புறத்திலேயும் மனாலியிலேயுமா நாலைந்து பெரிய ஆப்பிள் அர்ச்சார்ட்ஸ் சொந்தமா இருக்கு. ஆப்பிள்ல நிறையச் சம்பாதிச்சு, சிம்லாவிலே ஒரு பழைய ஓட்டலை விலைக்கு வாங்கினார். அவரோட போறாத காலம் ஓட்டல் நடத்தத் தெரியாம ரொம்ப நஷ்டப்பட்டார். அப்பத்தான் இவர் அமெரிக்காவிலே எம்.பி.ஏ. முடிச்சிட்டு வந்து லக்னோவில இந்த மாதிரி நவீன பிராக்டீஸ் எடுபடாதுன்னு டெல்லியிலே கன்னாட் பிளேஸில் ஒரு மாடி அறையை வாடகைக்குப் பிடிச்சு ‘பிஸினஸ் டாக்டர்’னு போர்டு மாட்டியிருந்தார். ‘பிஸினஸ் டாக்டர்’னா என்னன்னே புரியாமே ரொம்பப் பேர் தலைவலின்னும் வயித்து வலின்னும் இவரைத் தேடி வந்து அறு அறுன்னு அறுத்துக்கிட்டிருந்த சமயத்திலே எங்கப்பாவுக்கு யாரோ விவரம் சொல்லி இவரைக் கூப்பிட்டால் ஓட்டலை லாபத்துக்குக் கொண்டு வந்துடுவார்னாங்க. என் தம்பி அஜீத்தை டெல்லிக்கு அனுப்பி இவரை உடனே கையோட சிம்லாவுக்கு அழைத்து வரச் செய்தோம். அப்போ பிப்ரவரி மாசம். மார்ச், ஏப்ரல். மே, ஜூன், ஜூலை சிம்லாவிலே கோடை சீசன். அந்த சீசன் டயத்துக்கு முன்னாடியே ஓட்டலை ஒழுங்கு பண்ணிக்கணும்னுதான் இவரை பிப்ரவரியிலே அங்கே வரவழைச்சோம். இவரைச் சந்திச்சதிலேருந்து எனக்கும் இவருக்கும் ரொம்பப் பிடிச்சுப் போச்சு.” “லவ்வா அக்கா?” “அப்படித்தான்னு வச்சுக்கயேன்.” “உம்... சுவாரஸ்யமா இருக்கு. மேலே தொடர்ந்து சொல்லுங்க அக்கா!” “அப்புறம் அந்த சீஸன் முழுக்க சிம்லாவிலேயே எங்க வீட்டு மாடியிலேயே தங்கினார். இவர் கூறிய யோசனைகளின்படி அப்பாவும், என் தம்பி அஜீத்தும் ஓட்டலை நடத்தினதில் அந்த சீஸன் முடிவிலேயே லாபம் தெரிஞ்சுது. இவர் டில்லி புறப்படத் தயாரானார்.” “அப்புறம்...?” “கேளுடீ! சுவாரஸ்யமான திருப்பம் இப்பத்தான் வரப் போறது. அப்பாவுக்கும் என் தம்பிக்கும் இவரை ரொம்பப் பிடிச்சுப் போச்சு. ரெண்டு சாதிக்காய்ப் பெட்டி நிறைய ‘ஏ’ கிரேடு கோல்டன் டெலிஷியஸ் ஆப்பிளை எடுத்து வச்சுத் தொகை போடாத கையெழுத்துப் போட்டு ஒரு ‘செக்’ லீஃபை நீட்டி ‘நீங்க விரும்புற தொகையைப் போட்டுக்கலாம்’னாங்க. இவர் புன்புறுவல் பூத்தார். ‘நான் இதிலே எதைப் பூர்த்தி பண்ணினாலும் குடுப்பிங்களா’ன்னு எங்கப்பாவைப் பார்த்துக் கேட்டார். ‘நிச்சயமாகக் குடுப்பேன்’ என்றார் எங்கப்பா. உடனே இவர் பேனாவைத் திறந்து செக்கிலே காலியாயிருந்த இடத்திலே, ‘சுஷ்மாவை எனக்குக் கல்யாணம் செய்து கொடுக்கவும்’ என்று சிரித்துக் கொண்டே என் பெயரை எழுதி எங்கப்பாவிடம் நீட்டினார்.” இந்த இடத்தில் பார்கவி தமிழ் சினிமா ரசிகைபோல் உற்சாக மேலிட்டுக் கரகோஷம் செய்தாள். சில நிமிஷங் களுக்கு நிற்காமல் தொடர்ந்தது அவள் கைதட்டல். “அவசரப்படாதே! கேள்... எங்கப்பா உடனே அதுக்குச் சம்மதிக்கலே. ‘இரண்டு நாள் தங்குங்கள்! என் முடிவைச் சொல்கிறேன்’ என்று அமுத்தலாக இவருக்குப் பதில் சொல்லி விடவே எனக்குக் கவலையாய்ப் போயிற்று. தம்பி அஜீத்தை லக்னோவுக்கு அனுப்பி இவருடைய பூர்வோத்தரங்களை விசாரித்த அப்பா இவரே பெரிய கோடீசுவரன் வீட்டுப் பிள்ளை என்று தெரிந்ததும் பயந்துவிட்டார். “மிஸ்டர் குப்தா நான் பரம ஏழை! உங்க பெற்றோர் என்னோட மகளை நீங்கக் கட்டிக்கச் சம்மதிப்பாங்களா?” என்று இவரை எங்கப்பா கேட்டார். “என் பெற்றோர் நான் சொல்றதைக் கேட்பாங்க. எனக்குப் பிடித்த பெண்ணை நான் மணந்து கொள்வதை அவர்கள் விரும்புவார்கள்” என்றார் இவர். அப்புறம் அடுத்த வாரமே எங்க கல்யாணம் நடந்ததடி பார்கவி!” “ஏதோ இந்தி சினிமா பார்கிற மாதிரி இருக்கே அக்கா” என்று சுஷ்மா குப்தாவைக் கிண்டல் செய்தாள் பார்கவி. உடனே கேட்டாள். “உங்கப்பாவோட சிம்லா ஓட்டல் இப்போ எப்படி இருக்கு அக்கா?” “இப்போ அது அப்பா நிர்வாகத்திலே இல்லேடி! அவர் ஆப்பிள் தோட்டங்களோடு நின்றுவிட்டார். என் தம்பி அஜீத் ஓட்டலைப் பிரமாதமா நடத்தறான். இன்னிக்குத் தேதியிலே சிம்லாவிலே முதல்தரமான ஓட்டல் அதுதான்.” “அப்போ உங்க கணவர் சிகிச்சையிலே எங்க ஓட்டலும் பிழைச்சுடும்னு சொல்லுங்க அக்கா!” “ஒரே ஒரு வித்தியாசம்! எங்கப்பா என் தம்பிக்குச் சின்ன வயசாச்சேன்னு தயங்காமே பிஸினஸ் டாக்டர் கூறியபடி ஓட்டல் நிர்வாகத்தை அவனிடம் ஒப்படைத்து விட்டு ஒதுங்கிக் கொண்டார். என் தம்பி அஜீத்தும் கடினமா உழைச்சு லாபம் பார்த்து இன்னிக்கு நைநிடால்லே இன்னொரு ஓட்டலையும் கட்டிக்கொண்டிருக்கிறான். நைநிடால் ஓட்டலைத் திறந்து லாபம் காட்டுகிற வரை அவனுடைய திருமணத்தைக் கூட ஒத்திப் போட்டிருக்கிறான் என்றால் பார்த்துக்கொள்! உங்கப்பாவும் தன் பிள்ளைகளுக்குச் சுதந்திரம் அளித்து ஓட்டலை வளர்க்கச் சொல்லணும்னு என் கணவர் அபிப்பிராயப்படுகிறார் பார்கவி.” “எங்கப்பாவா...?” என்று இழுத்து வாக்கியத்தை முடிக்காமல் நிறுத்தினாள் பார்கவி. “என்னடி மழுப்பறே? உங்கப்பா செய்ய மாட்டாரா? ஓட்டல் தொழில், சினிமாத் தொழில் இதெல்லாம் இளமையும், சுறுசுறுப்பும் உற்சாகமும் மேலும் மேலும் ஒன்றை அழகுப் படுத்திப் பயனடைய வேண்டும் என்கிற முனைப்பும் உள்ளவர்கள் மட்டுமே செய்ய முடிந்தவை. ஸினிக்காகவும் வறட்சியாகவும் கஞ்சத்தனமாகவும் இருக்கிறவர்கள் ஓடியாடி உற்சாகமாக உழைக்க இயலாத முதியவர்கள் ஆகியோருக்கு இந்தத் தொழிலை வளப்படுத்த வாய்ப்புக் குறைவு.” “நீங்க சொல்றதை நான் மறுக்கலே அக்கா! எங்க குடும்ப நிலைமை வேற. மூத்த அண்ணன் அப்பாவோட போக்குப் பிடிக்காம சண்டை போட்டுகிட்டுப் போயிடிச்சி. சின்ன அண்ணனுக்கும் அப்பாவுக்கும் ஒத்து வரலே! ஆடிட்டர் சொன்னார்னு இந்த ரெண்டுங் கெட்டான் ஊர்ல இருக்கிற முதலோடு கடனே ஒடனை வாங்கிப் போட்டு என் பேர்ல இந்த ஓட்டலை அப்பா கட்டிப்பிட்டாரு. இது சரியா நடக்கலே.” “இந்த ஊருக்கு என்னடி குறை? சிம்லா விட இது பெரிய ஊருடி! அங்கேயாவது சீஸன் மாசங்களிலேதான் ஓட்டலுக்கு மவுஸ். இங்கே பன்னிரெண்டு மாசமும் ஜனப் புழக்கம் இருக்கு. நடத்தற விதமா நடத்தினா எல்லாம் சரியா ஆகும். உங்கப்பாதான் மனசு வைக்கணும்” என்றாள் சுஷ்மா குப்தா. அப்பாவின் செல்லப் பெண்ணான பார்கவியே இப்போது தன் தந்தையின் அணுகுமுறைகளை மனசுக்குள் விமரிசிக்க முற்பட்டாள். |