இரண்டாம் பாகம் 2. கொற்கையில் குழப்பம் சிவந்த வாயும், வெள்ளிய நகையும், பிறழும் கண்களும், சுருண்ட கூந்தலும், துவண்ட நடையுமாக முத்துச் சலாபத்து அருகிலிருந்த கடல் துறையில் இளம் பெண்கள் நீராடிக் கொண்டிருந்தனர். வேறு சில சிறுமிகள் கடற்கரை ஈரமணலில் வீடுகட்டி விளையாடினர். அவர்களுடைய மணல் வீட்டைக் கடல் அலை அழித்தது. அதைக் கண்ட நினைவு மலராப் பருவத்தையுடைய அந்தச் சிறுமிகளுக்குக் கடலின் மேல் சினம் மூண்டது. "ஏ, கடலே! இரு, இரு! என் அம்மாவிடம் சொல்லிக் கண்டிக்கச் சொல்கிறேன்" என்று கடலைப் பயமுறுத்தி விட்டு ஆத்திரமும் அழுகையுமாக வெறுப்போடு தன் கழுத்திலிருந்த முத்து மாலையை அறுத்துச் சிதறி அடம் பிடித்தாள் ஒரு சிறுமி. கடற்கரையோரத்துப் புன்னை மரத்திலிருந்து உதிர்ந்த அரும்புகளுக்கும் இப்படிச் சிதறப்பட்ட முத்துக்களுக்கும் வேறுபாடு தெரியாமல் அந்தப் பக்கம் நடந்து வருவோர் திகைத்தனர். கொற்கைக் கடலில் இளம் பெண்கள் நீராடி மகிழ்வதே ஒரு தனி அழகு. இளம்பெண் ஒருத்தி தன் தோழியின் தோள் மேல் வாரி இறைப்பதற்காக இரண்டு உள்ளங் கைகளிலும் நீரை அள்ளினாள். அதில் அவள் கண்கள் தெரிந்தன. 'ஐயோ மீன்!' என்று தண்ணீரை விட்டுக் கரையேறிப் பயந்து போய் மணலில் உட்கார்ந்து விட்டாள் அந்தப் பெண்.
"தொக்குத் துறைபடியும் தொண்டை அம் செவ்வாய் மகளிர் தோள்மேற் பெய்வான் கைக்கொண்ட நீருள் கருங்கண் பிறழ்வ கயலென் றெண்ணி மெய்க் கென்றும் பெய்கல்லார் மீண்டு கரைக்கே சொரிந்து மீள்வார் காணார் எக்கர் மணங்கிளைக்கும் ஏழை மகளிர்க்கே எறிநீர்க் கொற்கை." என்று இப்படியெல்லாம் முத்து விளையும் கொற்கைத் துறையைப் பற்றி முத்து முத்தான தமிழ்ப் பாடல்களைப் பழம் புலவர்கள் பாடியிருந்தார்கள். பல்லாயிரங் காலத்துப் பயிர் அந்தப் பெருமை. மானமும், வீரமும், புகழும், மாண்பும், பாண்டிய மரபுக்குக் கொடுத்த பெருமை அது! பாண்டிய நாட்டு மண்ணைத்தான் தங்கள் மறத்தினாற் காத்தனர் பாண்டியர். ஆனால் முத்து விளையும் கொற்கைக் கடலை அறத்தினாற் காத்தார்கள்.
"மறப்போர்ப் பாண்டியர் அறத்திற் காக்கும் கொற்கையம் பெருந்துறைமுத்து." என்று எவ்வளவு நன்றாகச் சங்கநூற் கவிஞர் அந்தப் பெருந்தன்மையைப் பாராட்டியிருக்கிறார்! இப்போதுள்ள சூழ்நிலையில் இந்தப் பாராட்டெல்லாம் வெறும் பழம் பெருமையாகி விட்டனவே. அறத்தினால் காத்த கொற்கையை மறத்தினாற் காக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. பகைமையும் பூசலும் வளரும் போது உலகத்தில் எந்தப் பொருளையுமே அறத்தினால் காக்க முடிவதில்லை. தங்க நகையை இரும்புப் பெட்டியில் வைத்துப் பூட்டுவது போல் மெய்யைக் கூட பொய்யால் தான் பாதுகாக்க வேண்டியிருக்கிறது. வலிமையுள்ளவனுக்கு ஆசைகள் வளரும் போது வலிமை அற்றவன் தன் பொருள்களை அறத்தினால் எப்படிக் காக்க முடியும்?
முடியாதுதான்! முடியவும் இல்லை. முத்துக்குளி விழாவுக்கு மறுநாள் கொற்கையில் நடந்த குழப்பங்கள் இந்த உண்மையை விளக்கிவிட்டன. கரவந்தபுரத்து அரசனும், அரசியும், பரிவாரங்களும் விழாவன்றைக்கு மாலையிலேயே பொருநைப் புனலாட்டு விழாவுக்காகத் திரும்பிச் சென்று விட்டனர். முத்துச் சலாபத்தில் நடைபெற வேண்டிய வாணிபத்தை மேற்பார்வை செய்வதற்குக் கரவந்தபுரத்து அரசாங்கப் பிரதிநிதிகளாகக் 'காவிதி'ப் பட்டம் பெற்ற அதிகாரி ஒருவரும், 'ஏனாதி'ப் பட்டம் பெற்ற கருமத்தலைவர் ஒருவரும், 'எட்டி'ப் பட்டம் பெற்ற வணிகர் ஒருவரும் கொற்கையில் தங்கியிருந்தார்கள். பாண்டிய மன்னர்கள் இளவரசர்களாக இருக்கும் காலத்தில் வந்து தங்கியிருப்பதற்காகப் பழங்காலத்தில் கட்டப்பட்ட அரசு மாளிகை ஒன்று கொற்கையில் உண்டு. அது கடல் துறையிலிருந்து சிறிது தொலைவு தள்ளி இருந்தது.
முத்துச் சலாபத்தை மேற்பார்வையிடக் கொற்கையில் இருந்த அரசாங்கப் பிரதிநிதிகள் மூவரும் அந்த அரச மாளிகையில் தான் தங்கியிருந்தனர். காலையில் விழாவுக்காக வந்து கூடியிருந்த கூட்டம் இப்போது இல்லை. அரசன் புனலாட்டு விழாவுக்காகப் பொதிய மலைச் சாரலுக்குத் திரும்பியதும் கூட்டமும் கலைந்திருந்தது. ஆனாலும் அதனாற் கொற்கைத் துறையின் கலகலப்புக் குறைந்து விடவில்லை. ஈழம், கடாரம், புட்பகம், சாவகம், சீனம், யவனம் முதலிய பலநாட்டு வாணிகர்களும், கப்பல்களும் நிறைந்திருக்கும் போது கொற்கைத் துறையின் ஆரவாரத்துக்கு எப்படிக் குறைவு வரும்? பேரரசன் மறைந்த பின், குறும்பு செய்யத் தலையெடுக்கும் சிறு பகைவர்களைப் போல் கதிரவன் ஒளியிழந்த வானில் விண்மீன்கள் மினுக்கின. சுற்றுப்புறம் இருண்டது. மணற்பரப்பில் தெரிந்த வெண்மையான கூடாரங்களின் தீபங்கள் ஒளிபரப்பத் தொடங்கும் நேரம். கப்பல்களைக் கரையோரமாக இழுத்து நங்கூரம் பாய்ச்சுவோர் அலுப்புத் தெரியாமல் இருப்பதற்காக ஒருவகைப் பாட்டுப் பாடுவார்கள். துறைமுகப் பகுதியில் அந்தப் பாட்டொலி எப்போதும் ஒலித்த வண்ணம் இருக்கும். அது கூட அடங்கிவிட்டது. துறைப் பக்கமாகச் சிறு கோபுரம் போல் உயர்ந்திருந்த கலங்கரை உச்சியில் தீ கொழுந்து விட்டுக் காற்றில் எரிந்து கொண்டிருந்தது. வரிசையாக நின்ற பாய்மரக் கப்பல்களில் காற்று உரசும் போது ஒருவகை அழுத்தமான ஓசை உண்டாயிற்று. மற்றபடித் துறையின் ஆரவாரத்தை இரவின் அமைதி குறைத்து விட்டிருந்தது! ஆனால் வணிகர்களின் கூடாரங்கள் இருந்த பகுதிகளில் இதற்கு நேர்மாறாகப் பாட்டும், கூத்துமாய் ஆரவாரம் அதிகரித்திருந்தது. நீண்ட தொலைவு பயணம் செய்து வியாபாரத்துக்காக வந்து தங்கியுள்ள இடத்திலும் தங்கள் இன்பப் பொழுதுபோக்குகளை, அவர்கள் விட்டுக் கொடுக்கத் தயாராயில்லை. அவர்களுடைய கூடாரங்களிலெல்லாம் விளக்கொளி இரவைப் பகலாக்கியது. பூக்களின் நறுமணமும் அகிற்புகையின் வாசனையும், யாழிசையும், நாட்டியக் கணிகையரின் பாதச் சிலம்பொலியும், மனத்தை முறுக்கேற்றித் துள்ள வைக்கும் பாடல்களும் காற்று வழியாகக் கலந்து வந்து கொண்டிருந்தது. எங்கும் எதற்காகவும் தங்கள் சுகபோகங்களைக் குறைத்துக் கொள்ளாத அளவுக்கு வளமும் வசதியுமுள்ள துறையில் பணிபுரிவோர் வசிக்கும் மற்றோர் பகுதி இருளில் மூழ்கியிருந்தது. இவை தவிர முத்துக்குளி விழாவைக் காணவந்து, மறுநாள் காலை ஊருக்குத் திரும்பிக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் அன்றிரவு அங்கேயே தங்கிவிட்ட மக்களும் இருந்தனர். அவர்களும் கூடாரங்கள் அமைத்தே தங்கியிருந்தனர். அந்த மாதிரிச் சாதாரண மனிதர்கள் தங்கியிருந்த கூடாரங்கள் ஒன்றிலிருந்து நமக்கு முன்பே பழக்கமானவர்களின் பேச்சுக் கேட்கிறது. ஒன்று, அடங்கிய ஆண் குரல்; மற்றொன்று துடுக்குத்தனம் நிறைந்த பெண் குரல். 'யார் இவர்கள்?' என்று அருகில் நெருங்கிப் பார்த்ததும் வியப்படைகிறோம். அந்த ஆடம்பரமற்ற எளிமையான சிறிய கூடாரத்தின் உட்புறம் அகல் விளக்கின் மங்கலான வெளிச்சத்தில் நமக்கு முன்பே பழக்கமான முன்சிறை அறக்கோட்டத்து மணியக்காரன் அண்டராதித்த வைணவனையும், அவன் மனைவி கோதையையும் காண்கின்றோம். அந்த வேடிக்கைத் தம்பதிகள் வழக்கம் போல் உலகத்தையே மறந்து நகைச்சுவை உரையாடலில் மூழ்கியிருக்கின்றனர். "உன்னுடைய ஆவல் நிறைவேறிவிட்டதா? முத்துக்குளி விழாப் பார்க்க வேண்டுமென்று மூன்று ஆண்டுகளாக உயிரை வாங்கிக் கொண்டிருந்தாய். கொண்டு வந்து காண்பித்தாகி விட்டது; இனி நான் நிம்மதியாயிருக்கலாம்." "அதுதான் இல்லை; நாளைக் காலையில் நாம் இங்கிருந்து புறப்படுவதற்கு முன்னால் நீங்கள் எனக்கு ஒரு முத்து மாலையை வாங்கித் தர வேண்டும். இவ்வளவு பிரமாதமான முத்துக்களெல்லாம் விளைகின்ற கொற்கைக்கு வந்து விட்டு வெறுங் கையோடு போவது நன்றாயிருக்காது!" கோதை இதைக் கூறிவிட்டு மெதுவாக நகைத்தாள். "அதெல்லாம் மூச்சு விடக்கூடாது. பொழுது விடிந்ததும் ஊருக்குக் கிளம்பி விட வேண்டும். இரண்டு பேருமே இங்கு வந்துவிட்டோம். அறக்கோட்டத்தில் ஆள் இல்லை. நாட்டு நிலைமையும் பலவிதமாகக் கலவரமுற்றிருக்கிறது." "முத்து மாலை வாங்கிக் கொள்ளாமல் ஓர் அடி கூட இங்கிருந்து நான் நகர மாட்டேன். முத்து விளையும் கொற்கைக்கு வந்து விட்டு முத்து வாங்காமற் போனால் மிகவும் பாவமாம்?" "அடடே! அப்படிக்கூட ஒரு சாஸ்திரம் இருக்கிறதா? எனக்கு இதுவரையில் தெரியாதே?" கோதை அண்டராதித்தனுக்கு முகத்தைக் கோணிக் கொண்டு அழகு காட்டிவிட்டுச் சிரித்தாள். "பெண்ணே! நீ சிரிக்கிறாய், அழகு காட்டுகிறாய்; முத்து மாலை வாங்கிக் கொடு, வைரமாலை வாங்கிக் கொடு என்று பிடிவாதம் செய்கிறாய்; நான் ஓர் ஏழை மணியக்காரன் என்பதை நீ மறந்து விட்டாய் போலிருக்கிறது." "ஆகா! இந்தப் பசப்பு வார்த்தைகளுக்கு ஒன்றும் குறைவில்லை. உங்கள் உடன் பிறந்த தம்பி இந்த நாட்டு மகாமண்டலேசுவரருக்கு வலது கை போன்றவர். அவர் மனம் வைத்தால் எதை எதையோ செய்ய முடிகிறது. உங்களை இந்த அறக்கோட்டத்து மணியக்காரர் பதவியிலிருந்து வேறு பதவிக்கு உயர்த்த மட்டும் அவருக்கு மனம் வரவில்லை." "அவன் என்ன செய்வான்? அவனுக்கு எத்தனையோ அரசாங்கக் கவலைகள். அவனுக்கு இருக்கிற நேரத்தில் அவன் மகாமண்டலேசுவரருக்கு நல்ல பிள்ளையானால் போதும்." "விநாடிக்கு ஒரு தரம் தம்பியின் பெயரைச் சொல்லிப் பெருமை அடித்துக் கொள்வதில் ஒன்றும் குறைவில்லை." "இதற்காக அதை நான் விட்டு விட முடியுமோ, கோதை?" அவள் கையைப் பற்றிக் கெஞ்சும் பாவனையில் சமாதானத்துக்குக் கொண்டு வர முயன்றான் அண்டராதித்த வைணவன். அதே சமயம் முத்துச் சலாபம் இருந்தப் பகுதியிலிருந்து பெருங் கூப்பாடு எழுந்தது. கோதையும், வைணவனும், பதற்றமடைந்து என்னவென்று அறிந்து கொள்ளும் ஆவலுடன் கூடாரத்துக்கு வெளியே வந்து பார்த்தார்கள். சலாபத்தைச் சுற்றிலும் இருந்த கூடாரங்கள் தீப்பற்றிப் பெரிதாக எரிந்து கொண்டிருந்தன. மணற்பரப்பில் குதிரைகள் பாய்ந்து வரும் ஓசையும், வாளோடு வாள் மோதும் ஒலிகளும், ஓலங்களும், கடல் அலைகளின் ஓசையும் உடன் சேர்ந்து கொண்டதனால் ஒன்றும் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியவில்லை. யார் யாரோ திடுதிடுவென்று இருளில் ஓடினார்கள், போனார்கள், வந்தார்கள். "ஏதோ பெரிய கலவரம் நடக்கிறாற் போலிருக்கிறது" என்றான் வைணவன். "கூடாரத்துக்குள் வாருங்கள், விளக்கை அணைத்து விட்டுப் படுத்துக் கொள்ளலாம்" என்றாள் கோதை. அவர்கள் கூடாரத்துக்குள் திரும்ப இருந்த போது அந்தப் பக்கமாக யாரோ ஓர் ஆள் தீப்பந்தத்தோடு விழுந்தடித்துக் கொண்டு ஓடி வருவது தெரிந்தது. பின்னால் கூட்டமாகச் சிலர் அப்படி ஓடி வந்த ஆளைத் துரத்திக் கொண்டு வந்தார்கள். ஓடி வந்தவன் எப்படியாவது தப்பினால் போதுமென்ற எண்ணத்துடன் தலைதெறிக்க ஓடி வந்து கொண்டிருந்தான். அவன் கோதையும், வைணவனும் நின்று கொண்டிருந்த பக்கமாக வந்த போது அவ்விருவரும் அவனுடைய முகத்தைத் தீவட்டி வெளிச்சத்தில் ஒரு கணம் நன்றாகப் பார்க்க முடிந்தது. "ஐயோ! இந்தப் பாதகனா?" என்ற வார்த்தைகள் கோதையின் வாயிலிருந்து மெதுவாக ஒலித்தன. வைணவனுக்கும் அவன் இன்னாரென்று புரிந்து விட்டது. உடல் ஒரு விநாடி மெதுவாக நடுங்கியது. புல்லரித்து ஓய்ந்தது. "கோதை! உள்ளே வந்துவிடு. துரத்திக் கொண்டு வருகிறவர்கள் நம்மைப் பிடித்துக் கொண்டு எதையாவது விசாரித்துத் தொந்தரவு செய்யப் போகிறார்கள்" என்று அவள் கையைப் பற்றி பரபரவென்று இழுத்துக் கொண்டு கூடாரத்துக்குள் போய்விட்டான். உள்ளே எரிந்து கொண்டிருந்த விளக்கையும் அணைத்து விட்டான். ஓடிவந்தவன் வேறு யாரும் இல்லை. முன்பொரு நாள் முன்சிறை அறக்கோட்டத்தில் நடு இரவில் வந்து தங்க இடம் கேட்டு வம்பு செய்த மூன்று முரட்டு ஆட்களில் ஒருவன் தான் அவன். என்ன நடந்தது? அவனை ஏன் துரத்திக் கொண்டு வருகிறார்கள்? சலாபத்துக்கு அருகில் கூடாரங்கள் ஏன் தீப்பற்றி எரிகின்றன? - இவற்றையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆசையும், தெரிந்து கொள்ள முடியாத சூழ்நிலையுமாகக் குழம்பிக் கலவரமுற்ற மனநிலையோடு விடிகிற வரை அந்தக் கூடாரத்து இருளிலேயே அடைபட்டுக் கிடந்தனர் அவர்கள் இருவரும். இரவின் நீண்ட யாமங்கள் எப்படித்தான் ஒவ்வொன்றாக விரைவில் கழிந்தனவோ? பொழுது விடிந்த போது போர் நடந்து முடிந்த களம் போல் எல்லா ஒலிகளையும் விழுங்கித் தனதாக்கிக் கொள்ளும் ஒரு நீண்ட மௌனம் அந்தப் பிரதேசத்தில் சூழ்ந்திருந்தது. அண்டராதித்தனும் கோதையும் எழுந்திருந்து ஊருக்குப் புறப்படத் தயாரானார்கள். புறப்படுவதற்கு முன் முத்துச் சலாபமும், துறையின் பிரதான வீதிகளும், சிப்பிகளைக் குவித்து வீரர்கள் காத்து நிற்கும் சிப்பிக் கிடங்குகளும் இருந்த பகுதியில் போய்ப் பார்த்தனர். அந்தப் பகுதியில் கூடாரங்கள் எரிந்து சின்னாபின்னமாகிக் கிடந்தன. ஆள் நடமாட்டம் இல்லாமல் களையின்றி ஒளியின்றி இருந்தது அப்பகுதி. கடைகளெல்லாம் மூடி அடைக்கப் பெற்றிருந்தன. கிடங்குகளில் பத்திரமாகக் குவிக்கப்பட்டிருந்த சிப்பிகள் மணற்பரப்பில் தாறுமாறாகச் சிதறிக் கிடந்தன. சில குவியல்களைக் காணவே இல்லை. நெடுந்தொலைவிலிருந்து வந்திருந்த வியாபாரிகள் பயத்துடனும், பதற்றத்துடனும் அவசர அவசரமாகக் கப்பலேறிக் கொண்டிருந்தார்கள். முதல் நாள் இரவில் பாட்டும் கூத்துமாக அவர்கள் கூடாரங்கள் இருந்த இடத்தில் இப்போது வெறும் மணற்பரப்புத்தான் இருந்தது. கரவந்தபுரத்து வீரர்கள் சிலரும் முத்துக்குளிப்பைத் தொடர்ந்து மேற்பார்வை செய்து நிர்வகிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த அரசாங்கப் பிரதிநிதிகள் மூவரும் சலாபத்துக்கருகே அழிவு நடந்த இடங்களையும் சிப்பிக் கிடங்குகளையும் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் முகங்களில் கவலை தேங்கியிருந்தது. அங்கே யாரிடமாவது இரவு நிகழ்ந்த குழப்பத்தைப் பற்றி விசாரிக்க வேண்டுமென்று கோதைக்கும் அண்டராதித்தனுக்கும் ஆசை துறுதுறுத்தது. "பார்த்தீர்களா? இதைக் காணும் போது அந்த முரடனும் அவனைச் சேர்ந்தவர்களும் செய்த வேலைதானென்றும் தோன்றுகிறது" என்றாள் கோதை. "பேசாமல் இரு! நமக்கு எதற்கு இந்த வம்பெல்லாம்? நிலைமை சரியில்லை, ஊருக்குப் போய்ச் சேருவோம்" என்று அவள் வாயை அடக்கி அழைத்துக் கொண்டு புறப்பட்டான் அண்டராதித்தன். சுகமாக முன்சிறைக்குப் போய்ச் சேருவதற்குள் இடைவழியில் கலவரங்கள், பூசல்களில் மாட்டிக் கொள்ளாமல் போய்ச் சேரவேண்டுமே என்று நினைத்துப் பயப்படுகிற அளவுக்கு குழம்பியிருந்தன, புறப்படும் போது அவர்கள் மனங்கள். மறப்போர் பாண்டியர் அறத்தினால் காத்து வந்த கொற்கைப் பெருந்துறையில் மறம் நிகழ்ந்து விட்டது. அலைகள் சங்குகளை ஒதுக்கிக் கரை சேர்த்து விளையாடும் துறையில் அநியாயம் நடந்து விட்டது. கடல் ஓலமிடுதல் தவிர மனிதர் ஓலமிட்டறியாத கொற்கையில் மனிதர் ஓலமிடும் கலவரமும் நடந்து விட்டது. |