இரண்டாம் பாகம் 22. கொற்றவைக் கூத்து அதோ அவர்களே வந்துவிட்டார்கள் என்று அரசூருடையான் வாயில் பக்கமாகத் தன் கையைச் சுட்டிக் காட்டிய போது மற்ற நான்கு பேருடைய எட்டுக் கண்களும் தணிக்க இயலாத ஆர்வத் துடிப்போடு விரைந்து நோக்கின. நான்கு முகங்களின் எட்டு விழிகள் ஒருமித்துப் பாய்ந்த அந்தத் திசையிலிருந்து வந்து கொண்டிருந்தவர்கள் சோர்ந்து தளர்ந்து தென்பட்டனர். பார்த்தவர்களது உற்சாகமும், ஆவலும் பார்க்கப்பட்டவர்களிடம் காணோம். அவர்களுடைய முகத்தில் களை இல்லை, கண்களில் ஒளி இல்லை, பார்வையில் மிடுக்கு இல்லை, நடையில் உற்சாகமில்லை. பயந்து நடுங்கிக் கொண்டே வருவது போல் தோன்றியது, அவர்கள் வந்த விதம். வந்தவர்கள் வேறு யாரும் இல்லை. முன்பு நாகைப்பட்டினத்திலிருந்து அனுப்பப்பட்ட ஆறு ஒற்றர்களில் தெற்கே குமாரபாண்டியனைக் கொல்வதற்காக ஈழத்துக்குச் சென்ற மூன்று பேர்தான் வந்து கொண்டிருந்தார்கள். மெல்லத் தயங்கி வந்து நின்ற அவர்கள் அங்கே வீற்றிருந்த வடதிசையரசர்களுக்கு வணக்கம் செலுத்தி விட்டுத் தலை குனிந்தனர். தென் திசைப் படையெடுப்பைப் பற்றிய முக்கிய ஆலோசனையில் இருந்த அந்த ஐவரின் முகத்தையும் நேருக்கு நேர் பார்ப்பதற்குத் தெம்பில்லாதவர்கள் போல் நடந்து கொண்டனர் வந்தவர்கள். "எப்பொழுது வந்தீர்கள்?" என்று சோழன் அவர்களை நோக்கிக் கேட்டான். "நாகைப்பட்டனத்தில் வந்து இறங்கியதும் நேரே இங்குதான் புறப்பட்டு வருகிறோம். நாங்கள் வந்தால் அங்கிருந்து உடனே கொடும்பாளூருக்கு வரச் சொல்லிக் கட்டளை என்று துறைமுகத்தில் காத்திருந்தவர்கள் கூறினார்கள். அதன்படி வந்து விட்டோம்" என்று அந்த மூவரில் ஒருவன் பதில் கூறினான். சோழன் முகத்தில் கடுமை படர்ந்தது. குரலில் கண்டிப்பு ஏறியது. "நீங்கள் வந்த வரலாற்றை விவரிக்கச் சொல்லி இப்போது உங்களைக் கேட்கவில்லை. எந்தக் காரியத்தைச் செய்வதற்காகக் கடல் கடந்து போய் இத்தனை நாட்கள் சுற்றினீர்களோ அந்தக் காரியம் என்ன ஆயிற்று? அதை முதலில் சொல்லுங்கள். உங்களுடைய குனிந்த தலைகளும் பயந்த பார்வையும் நல்ல விடை கிடைக்குமென்று எனக்குச் சிறிதும் நம்பிக்கையூட்டவில்லையே?" சோழனுடைய கேள்விக்கு அந்த மூன்று பேருமே பதில் கூறவில்லை. தங்களுக்குள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு சொல்லத் தயங்கி நின்றனர். "என்னடா! ஒருவருக்கொருவர் பார்த்துத் திருட்டு விழி விழித்துக் கொண்டு நிற்கிறீர்கள்! எனக்குத் தெரியுமே! நீங்கள் போன காரியத்தைக் கோட்டை விட்டு விட்டுத்தான் வந்திருக்கிறீர்கள். உங்கள் நெற்றியில் தோல்விக் களை பதிந்து போய்க் கிடப்பதைப் பார்த்தாலே தெரிகிறதே?" என்று தன் முரட்டுக் குரலை உரத்த ஒலியில் எழுப்பி, அவர்களை விரட்டினான் கொடும்பாளூரான். அவர்கள் தலைகள் இன்னும் தாழ்ந்தன.
"என்ன நெஞ்சழுத்தம் இந்தப் பயல்களுக்கு! நான் கேட்கிறேன். பதில் சொல்லாமல் தலையைக் குனிந்து கொண்டு ஊமை நாடகம் நடத்துகிறார்களே!" என்று முன்னிலும் உரத்த குரலில் கூப்பாடு போட்டுக் கொண்டு புலி பாய்ந்து வருவது போல் அவர்கள் அருகே பாய்ந்து வந்தான் கொடும்பாளூர் மன்னன். கடுங்குளிரில் உதறல் எடுத்து நடுங்கும் மணிப் புறாவைப் போல் அந்த மூன்று பேருடைய உடல்களும் பயத்தால் நடுங்கின.
"குமாரபாண்டியனைத் தேடிக் கண்டு பிடித்துக் கொன்றீர்களா இல்லையா? வாயில் கொழுக்கட்டையா அடைத்திருக்கிறது? பதில் சொல்லேன்." இவ்வாறு ஆத்திரத்தோடு கத்திக் கொண்டே முன்னால் பாய்ந்து வந்த கொடும்பாளூரான், அந்த மூவரில் ஒருவனுடைய கன்னத்தில் பளீரென்று ஓங்கி அறைந்தான். அவனுடைய ஆத்திரத்தின் வேகத்துக்கு அளவு கூறியது அந்த அறை. வெடவெடவென்று நடுங்கிக் கீழே விழுந்து விடும்போல் ஆடியது அறை வாங்கியவனின் உடல். பேசுவதற்காக அவன் உதடுகள் துடித்தன. ஆனால் பயத்தினால் பேச்சு வரவில்லை. "இப்படிக் கேட்டால் உன்னிடமிருந்து பதில் கிடைக்காது. இரு, அப்பனே! கேட்கிற விதமாகக் கேட்கிறேன். 'உண்டு' இல்லை என்று பதில் வந்தால் உங்கள் தலைகள் உங்களுக்கு உண்டு. 'இல்லை' என்று பதில் வந்தால் உங்கள் தலைகள் உங்களுக்கு இல்லை" என்று மறுபடியும் கையை மடக்கி ஓங்கிக் கொண்டு அறைவதற்கு வந்தான் கொடும்பாளூரான். அந்த அறை தன்மேல் விழுவதற்குள் பேசத் துடித்துக் கொண்டும் பேச முடியாமலும் நின்ற அவன் பேசிவிட்டான். "ஈழ நாட்டை அடையுமுன்பே சற்றும் எதிர்பாராத விதமாகச் 'செம்பவழத்தீவு' என்ற தீவில் குமாரபாண்டியனைக் கண்டுபிடித்து விட்டோம். ஆனால் எங்கள் வாளுக்கு இறையாகிச் சாவதற்கு முன் மாயமாக மறைந்து எப்படியோ தப்பி விட்டான் அவன். பின்பு அந்தத் தீவு முழுவதும் விடாமல் தேடிப் பார்த்தும் எங்களால் அவனைக் கண்டு பிடித்துக் கொல்வதற்கு முடியவில்லை." குரலில் இருந்த நடுக்கத்தின் காரணமாக ஒவ்வொரு வார்த்தையையும் முழுமையான வார்த்தையாக முழுமையான ஒலியோடு அவனால் கூற முடியவில்லை. வார்த்தைகள் ஒவ்வோர் எழுத்தின் ஒலிப்பிலும் தயங்கித் தேங்கி நடுங்கின. பசியோடு தன் கோரப் பெருவாயைத் திறந்து நிற்கும் வேங்கைப் புலியின் காலடியில் நிற்கும் சிறிய மான் குட்டிகளைப் போல் அரண்டு போய் நின்று கொண்டிருந்தனர் அந்த மூன்று பேரும். எதிர்பார்த்த பதிலில் கிடைத்த ஏமாற்றம் கொடும்பாளூர் மன்னனைக் கோபத்தின் உருவமாக மாற்றியது. அவனுடைய விழி வட்டங்களில் அனல் கனன்றது. சிங்க முகத்தில் சிவப்புப் பரவியது. நினைப்பிலும் முழங்காலைத் தொடும் நீண்ட கைகளிலும் வெறி வந்து குடி புகுந்தது. முகிலுறை கிழித்து வெளிப்பாயும் மின்னல் ஒளிக்கோடு போல் அவன் தன் உறையிலிருந்து வாளை வெளியே உருவினான். பின்புறமிருந்து அரசூருடையானது கேலிச் சிரிப்பின் ஒலி கிளர்ந்து எழுந்தது. "இனிமேல் சந்தேகத்துக்கு இடமே இல்லை. கொடும்பாளூருடையாரின் திட்டம் முழுக்கத் தோற்றுவிட்டது. இப்போது அவருக்கு உண்டாகும் தோல்விக்கு அடையாளம் தான் இது." அரசூருடையானின் இந்தச் சொற்கள் கொடும்பாளூர் மன்னனின் கொதிப்பை மிகைப்படுத்தின. அவன் வலக்கையில் துடித்த வாளின் நுனியிலிருந்து சிதறிய ஒளிக்கொழுந்துகள் பயந்து நின்று கொண்டிருந்த அந்த மூன்று பேருடைய கண்களையும் கூசச் செய்தன. அந்த ஒளியும் அதை உண்டாக்கும் வாளின் நுனியும் இன்னும் சில கணங்களில் தங்கள் நெஞ்சுக் குழியை நறுக்கிக் குருதிப் பெருக்கில் குளித்தெழுந்துவிடப் போகிறதே என்று அவர்களுடைய தேகத்தின் ஒவ்வோர் அணுவும் புல்லரித்து நடுங்கிக் கொண்டிருந்தன. தங்கள் மூவரின் உயிருக்கும் மொத்தமாக உருப்பெற்ற காலன் அந்த வாள் வடிவில் மின்னிக் கொண்டிருப்பதை அவர்கள் புரிந்து கொண்டு விட்டார்கள். இன்னும் ஒரு நொடியில் அற்றுப் போக இருக்கும் உயிருக்கும் தங்களுக்கும் நடுவேயிருந்த பந்தத்தைக்கூட ஏறக்குறைய அவர்கள் மறக்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்தச் சமயத்தில் கொடும்பாளூரானின் கோபத்தைச் சோழ மன்னன் தணிக்க முன் வந்தான். "ஐயா! கொடும்பாளூர் மன்னரே! கோபத்தை இடம் தவறி, இலக்குத் தவறி, தகுதி தவறி, அநாவசியமாக இவர்களிடம் செலவழித்து என்ன பயன்? எவர்களுடைய தலைகளை வாங்க வேண்டுமோ அவர்களுடைய தலைகள் கிடைக்காவிட்டால் அதைச் செய்வதற்குச் சென்ற இவர்களுடைய தலைகளை வாங்கி என்ன பெருமைப்பட்டுவிட முடியும்? புலி வேட்டையாடப் போனவன் குழிமுயலை அடித்துக் கொண்டு திரும்புகிற மாதிரி, பெரியது கிடைக்காததனால் சிறியதை எண்ணிச் சிறியதைச் செய்யும் அற்ப மகிழ்ச்சி பண்புக்குப் பலவீனம். வாளையும், கோபத்தையும் ஒன்றாகச் சேர்த்து உறையில் போடுங்கள். இப்போது நமக்குத் தேவையான பொருள் நிதானம். இந்தத் தடியர்கள் ஒன்றும் செய்யாமல் திரும்பி வந்திருப்பதைப் பார்த்ததும் எனக்கும் சினம் தான் உண்டாயிற்று. ஆனால் என்ன நன்மையைச் சினத்தால் அடையப் போகிறோம்? நெருப்பைத் தண்ணீர் அவித்து அணைக்கிற மாதிரி நெருப்பு தண்ணீரை விரைவாக அவித்து அணைக்க முடியாது. கோபம், குமுறல், பொறாமை போன்ற எதிர்மறையான குணங்கள், அன்பு, அறம், பொறுமை போல் காரியத்தை விரைவாகச் சாதித்துக் கொள்ளப் பயன்படா. இந்த மாதிரி அறிவுரைக் கருத்துகளெல்லாம் நம்மைப் போன்று சூழ்ச்சியும், போரும், மண்ணாசையும் விரும்புகிறவர்களுக்குப் பயன்படாதென்றாலும், இப்போதைக்குப் பயன்படுத்துவோம். நாம் கூறியதைச் செய்யாததற்காக இந்த மூன்று பேரையும் கொடும்பாளூர் அரண்மனையின் இந்த இரகசியமான இடத்தில் கொன்று அந்தக் கொலையை மறைத்து விடுவதும் நமக்கு எளிதுதான். ஆனாலும் வேண்டாம். கோபத்தையும், ஆத்திரத்தையும் பெரிய சாதனைகளுக்காக மீதப்படுத்திச் சேமித்து வைத்துக் கொள்வோம்." சோழனுடைய பேச்சு முடிவு பெற்று நின்ற போது கொடும்பாளூரானுடைய வாள் உறைக்குள் சென்று அடங்கிக் கொண்டது. வளர்த்துப் பால் வார்க்கும் நன்றிக்காகப் பாம்பாட்டியின் பெட்டிக்குள் அடங்கும் பாம்பு போல் சீறிக் கொண்டு வெளிவந்த சினமும் செயற்கையாக அடங்கி மனத்தில் போய்ப் புகுந்து கொண்டது. அதைப் பார்த்து அரசூருடையான் ஓசைப்படாமல் மெல்லச் சிரித்துக் கொண்டான். பரதூருடையானும், கண்டன் அமுதனும் அந்தக் கூட்டத்துக்குப் புதியவர்களாகையினால் அதற்குரிய அடக்கத்தோடு அமைதியாக இருந்தார்கள். கொடும்பாளூரானுடைய ஆத்திரத்துக்கு ஆளாகாமல் அந்த மட்டில் தங்கள் தலைகள் தப்பினவே என்று நிறைவுடன் அந்த இடத்திலிருந்து மெதுவாக நழுவி நகர முற்பட்டனர் அம் மூன்று ஆட்களும். "நில்லுங்கள்! எங்கே போகிறீர்கள் இவ்வளவு அவசரமாக?" சோழமன்னன் குரல் அவர்கள் நடையைத் தடைப்படுத்தி நிறுத்தியது. அடுத்த விநாடி கொடும்பாளூர் மன்னனைக் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு தனியே ஒரு மூலைக்குச் சென்றான் சோழ மன்னன். அந்த மூலையில் சித்திர வேலைப்பாடுகளோடு கூடிய பெரிய கிளிக்கூண்டு ஒன்று கைக்கெட்டுகிற உயரத்தில் தொங்கியது. கூண்டின் கதவு திறந்திருந்தது. கூண்டில் வசிக்கும் பல நிறக் கிளிகளும், கிளிக் குஞ்சுகளும், அதன் இருபுறமும் இருந்த மரச் சட்டங்களில் சுதந்திரமாக உட்கார்ந்திருந்தன. திறந்து விட்டதும் வெளியேறி, அடைகிற நேரத்துக்குத் தாமாகவே கூண்டுக்குள் வந்து சேர்ந்துவிடும்படி பழக்கப்படுத்தப்பட்ட கிளிகள் அவை. அந்தக் கிளிக்கூண்டின் அடியில் வந்து நின்று கொண்டதும், "சொன்ன காரியத்தைச் செய்து கொண்டு வரத் திறமையில்லாத அந்த அறிவிலிகளை அழித்து ஒழித்து விடுவதற்காக என் கைகள் துடித்தன. அந்தத் துடிப்பை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் அத்தனை பேருக்கும் நடுவில் என்னைத் தடுத்து அவமானப் படுத்தி விட்டீர்கள்?" என்று ஏக்கமும், ஏமாற்றமும் மேலிட்ட குரலில் சோழனை நிமிர்ந்து பார்த்துச் சொன்னான் கொடும்பாளூரான். சோழன் அதைக் கேட்டு மெல்ல நகைத்தான். "கொடும்பாளூர் மன்னரே! வேகமாகக் கையை ஓங்க வேண்டும். ஆனால் இலேசாக அறைய வேண்டும். கல்லை எறிவதற்கு முன்னுள்ள வேகம் எறியும் போது மெதுவாகிவிடுவது நல்லது.
"கடிதோச்சி மெல்ல எறிக நெடிது ஆக்கம் நீங்காமை வேண்டு பவர்." என்ற பொய்யில் புலவர் பொருளுரை நம்மைப் போன்ற அரசர்களை மனத்தில் வைத்துக் கொண்டு கூறப்பட்டது அல்லவா? இதோ கொஞ்சம் என் பக்கமாகத் திரும்பிப் பார்த்துவிட்டு, நான் என்ன செய்கிறேனென்று கவனியுங்கள்." சோழனின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் சிறிது வெறுப்பு நிழலாடும் பார்வையோடு திரும்பி நோக்கினான் கொடும்பாளூர் மன்னன். மரச் சட்டத்திலிருந்து ஒவ்வொன்றாக மூன்று கிளிக் குஞ்சுகளை எடுத்துக் கூண்டுக்குள் விட்டுக் கதவை அடைத்த பின், குறிப்பாக எதையோ சொல்லும் பொருள் செறிந்த நோக்கினால் சோழ மண்ணன் கொடும்பாளூரானின் முகத்தைப் பார்த்தான். அந்தப் பார்வையை விளங்கிக் கொள்ளாமல், "உங்களுடைய இந்தச் செயலுக்கு என்ன அர்த்தமென்று எனக்கு விளங்கவில்லையே?" என்று கேட்டான் கொடும்பாளூரான். "கொடும்பாளூர் மண்ணுக்கே குறிப்பறியும் உணர்ச்சி அதிகம் என்பார்கள். ஆனால் அந்த மண்ணை ஆளும் அரசராகிய உங்களுக்கே என் குறிப்புப் புரியவில்லையே?" சோழன் குத்திக் காட்டிப் பேசியது வேதனையைக் கொடுத்தாலும், அந்தக் குறிப்புச் செய்கையின் பொருள் புரியக் கொடும்பாளூர் மன்னனுக்குச் சிறிது நேரமாயிற்று. அது புரிந்ததும் தான் அவன் முகத்தில் மலர்ச்சி வந்தது. "புரிந்து விட்டது. அப்படியே செய்து விடுகிறேன்" என்று கிளிக் கூண்டையும் அடைப்பட்ட மூன்று குஞ்சுகளையும் பார்த்து விஷமத்தனமாகச் சிரித்துக் கொண்டே வெளியேறினான் கொடும்பாளூர் மன்னன். அடுத்த கால் நாழிகைக்குள் கொடும்பாளூர்க் கோட்டையின் ஒளி நுழைய முடியாத பாதாள இருட்டறைகளின் இரகசிய அறை ஒன்றில் அந்த மூன்று ஒற்றர்களையும் கொண்டு போய் அடைத்து விட்டுத்தான் திரும்பி வந்தான் அவன். நீண்ட நேரமாகச் சூழ்ச்சிகளிலும், அரசியல் சிந்தனைகளிலுமே ஆழ்ந்து போயிருந்ததன் காரணமாக, வடதிசையரசரின் கூட்டணியைச் சேர்ந்த அந்த ஐவருக்கும் களைப்பு ஏற்பட்டிருந்தது. ஒரு மாறுதல் - மனமகிழ்ச்சிக்குரிய ஒரு பொழுது போக்கு - அப்போது அவர்களுக்குத் தேவைப்பட்டது. தங்களையும் தங்கள் அரசியல் கவலைகளையும் மறந்து ஏதாவதொரு கலையின் சுவை அநுபவத்தில் மிதக்க வேண்டும் போலிருந்தது அவர்களுக்கு. "கொடும்பாளூர் மன்னரே! வெளியூர்களிலிருந்து வந்திருக்கும் நாங்கள் நால்வரும் இங்கேயிருக்கிறவரை உம்முடைய விருந்தாளிகள். உற்சாகமும் மன எழுச்சியும் வெற்றியில் நம்பிக்கையும் ஊட்டத்தக்க ஒரு பொழுது போக்கு இப்போது எங்களுக்குத் தேவை. அதற்கு ஏதாவது ஏற்பாடு செய்யுங்கள்" என்று சோழன் வேண்டிக் கொண்டான். "அப்படியானால் 'தேவராட்டியின்' கொற்றவைக் கூத்துக்கு ஏற்பாடு செய்கிறேன். நீங்கள் எல்லோரும் கண்டு களிக்க வேண்டிய கலை அது. இந்தச் சோர்ந்த சூழ்நிலையில் அதைக் கண்டு புதிய எழுச்சியும் பெற முடியும்" என்றான் கொடும்பாளூரான். "அது யார் தேவராட்டி?" "அவள் இந்தக் கொடும்பாளூர் அரண்மனையில் தனிச் சிறப்பு வாய்ந்த ஓர் ஆடல் மகள். தன்னை மறந்து ஆடிக் கொண்டிருக்கும் போதே அவளுக்குத் தெய்வ ஆவேசத்தால் அருள் வந்து விடும். அந்தச் சமயத்தில் அவள் வாயிலிருந்து எதைப் பற்றியும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். தேவி சந்நதத்தில் வாய் சோர்ந்து நமக்கு வேண்டிய உண்மைகள் அவளிடமிருந்து வரும். கையில் திரிசூலம் ஏந்திச் சுழற்றிக் கொண்டே அவள் கொற்றவைக் கூத்தாடும்போது, அவளே காளியாக மாறிக் காட்சியளிப்பாள் நம் கண்களுக்கு." "இது என்ன நம்ப முடியாத வேடிக்கையாக அல்லவா இருக்கிறது!" "வேடிக்கையில்லை. அந்த ஆடல் மகள் இன்னும் தூய்மையான கன்னியாகவே வாழ்கிறாள். தேவதைக்கு உள்ள மதிப்பு அவளுக்கு இந்த அரண்மனையில் உண்டு" என்று கொடும்பாளூர் மன்னன் பயபக்தியோடு மறுமொழி கூறினான். "அதற்கே ஏற்பாடு செய்யுங்கள். அந்தக் கொற்றவைக் கூத்தைக் காணும் பாக்கியத்தை நாங்களும் பெறுகிறோம்." சோழ மன்னனின் விருப்பப்படி கொடும்பாளூர் மன்னன் கூத்தரங்கத்தை வகுத்து அவர்களையெல்லாம் அழைத்துக் கொண்டு போய் உட்கார்த்தினான். கொற்றவைக் கூத்துக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரங்கம் கோவில் போலத் தூய்மையாகப் புனிதப் பொருள்கள் நிறைந்திருந்தது. தீபச் சுடர்கள் பூத்திருந்தன. தூபக் கலசங்கள் கொடி படரச் செய்தன. எல்லோரும் பயபக்தியோடு அரங்கில் வீற்றிருந்தனர். மத்தளம் கொட்ட வரிசங்கம் ஊத, அரங்கின் எழினி (திரைச்சீலை) மெல்ல விலகியது. ஆ! அதென்ன தோற்றம்? புவனகோடியைப் போக்குவரவென்னும் கவன ஊஞ்சலிட்டு ஆட்டும் கௌரியே அங்கு நிற்கிறாளா? தேவராட்டி மும்முகச் சூலம் ஏந்திய கோலத்தோடு அரங்கில் வந்து நின்றாள். |