இரண்டாம் பாகம் 31. ஏனாதி மோதிரம் மகாமண்டலேசுவரர் மேல் நம்பிக்கையில்லையென்று தென்பாண்டி நாட்டுக் கூற்றத் தலைவர்களின் சார்பில் தாம் கொண்டு வந்த ஒப்புரவு மொழி மாறா ஓலையை மகாராணியார் ஒப்புக் கொள்ளவில்லை என்றதுமே பொன்மனைக் கூற்றத்துக் கழற்கால் மாறனாருக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அதனால் தான் அவர், 'இனிமேல் மகாராணியாருக்கும் நாட்டுக்கும் எங்கள் ஒத்துழைப்புக் கிடைக்காது' என்று கோபமாகக் கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினார். ஆனால் அந்தச் சமயத்தில் யாரும் எதிர்பாராதவிதமாக மகாமண்டலேசுவரரே திடீரென்று அங்கே வந்து விட்டதால் அப்படியே அயர்ந்து போய் நின்று விட்டார் கழற்கால் மாறனார். மகுடியோசையில் மயங்கிக் கடிக்கும் நினைவை மறந்து படத்தை ஆட்டிக் கொண்டிருக்கும் நாகப் பாம்பைப் போல் எந்த மகாமண்டலேசுவரரை அடியோடு கீழே குழிபறித்துத் தள்ளிவிட நினைத்தாரோ, அவரையே எதிரே பார்த்து விட்டதும் ஒன்றும் தோன்றாமல் அடங்கி நின்றார் அவர். எதிரே நிற்பவர்களை அப்படி ஆக்கிவிடுவதற்கு மகாமண்டலேசுவரர் என்ற மனிதரின் நெஞ்சிலும், நினைவுகளிலும், கண்களிலும், பார்வையிலும், அவ்வளவேன், ஒவ்வொரு அசைவிலும் தன்னைப் பிறர் அசைக்க முடியாததான பிறரை அசைக்க முடிந்த ஒரு வலிமை இருந்தது. பகைவர்களை அடக்கிவிடவும், நண்பர்களை ஆக்கிக் கொள்ளவும் முடிந்த இந்தப் பெரும் பேராற்றலைத் தவம் செய்து அடைந்த சித்தியைப் போல் வைத்திருந்தார் அவர்.
"ஒன்னார் தெறலும் உவந்தாரை ஆக்கலும் எண்ணின் தவத்தால் வரும்." என்று துறவியின் ஆற்றலாகச் சொல்லப்பட்ட அதைத் துறவியாக வாழாமலே இடையாற்று மங்கலம் நம்பி பெற்றிருந்தார். "பொன்மனைக் கூற்றத்துத் தென்னவன் தமிழவேள் பாண்டிய மூவேந்த வேளாராகிய கழற்கால் மாறனார் அவர்கள் இன்று அரண்மனைக்கு வரப்போகிறாரென்று எனக்குத் தெரியவே தெரியாதே" என்று அவருடைய எல்லாப் பட்டப் பெயர்களையும் சேர்த்து நீட்டிச் சொல்லி அவரிடமே கேட்டார் மகாமண்டலேசுவரர். அந்தக் கேள்வியில் இயல்பான பேச்சின் தொனி கொஞ்சமாகவும், குத்தல் அதிகமாகவும் இருப்பது போல் பட்டது. கழற்கால் மாறனார் அதைக் கேட்டு மிரண்டு போய் நின்றார். அந்த மிரட்சி மகாராணியாருக்கு வேடிக்கையாக இருந்தது. எதிரே கம்பீரமாக நின்று சிரித்துக் கொண்டிருக்கும் மகாமண்டலேசுவரரிடம் என்ன பேசுவதென்று தெரியாமல் தவறான காரியத்தை மறைவாகச் செய்து கொண்டிருக்கும் போது வயதானவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சிறு குழந்தை மருண்டு விழிப்பதைப் போல் விழித்துக் கொண்டு நின்றார் கழற்கால் மாறனார்.
"ஓ! இதென்ன கையில்?... என் மேல் நம்பிக்கையேயில்லை என்று மகாராணியிடம் கொடுப்பதற்காகக் கூடி எழுதிக் கொண்டு வந்த ஒப்புதல் மொழி மாறா ஓலையா?" என்று கேட்டுக் கொண்டே உரிமையோடு மிகவும் சுவாதீனமாக வானவன்மாதேவியின் கையிலிருந்து அந்த ஓலையை வாங்கினார் மகாமண்டலேசுவரர். 'அதை அவர் வாங்கிப் படிக்க நேர்ந்தால் அவருடைய மனம் புண்படும்' என்பதனால் அவரிடம் கொடுக்கக் கூடாதென்று நினைத்திருந்த மகாராணி மகாமண்டலேசுவரர் கேட்ட போது மறுக்க முடியாமல் கொடுத்துவிட்டார்.
தன்மேல் நம்பிக்கையில்லை என்று கூற்றத்தலைவர்கள் கூடி நிறைவேற்றியிருந்த அந்த ஒப்புரவு மொழி மாறா ஓலையைப் படித்து முடிந்ததும் புன்னகை செய்து கொண்டே தலைநிமிர்ந்தார் மகாமண்டலேசுவரர். ஒரே விதமான வார்த்தைக்குப் பல பொருள்கள் கிடைக்கும் சிலேடைப் பாட்டைப் போல் அவருடைய அந்த ஒரு புன்னகைக்குப் பல பொருள்கள் உண்டு. புன்னகை தவழும் முகத்துடனேயே பேசினார் அவர். "ஐயா, கழற்கால் மாறனாரே! இப்படி, இங்கே என் முகத்தைக் கொஞ்சம் நிமிர்ந்து பார்த்து நான் சொல்வதைக் கேளுங்கள். இதோ இந்த இடத்துக்குள் நான் நுழையுமுன் என் கால்களில் அணிந்திருந்த பாதக் குறடுகளை (மரச் செருப்புகள்) எப்படிக் கழற்றி எறிந்துவிட்டுச் சுலபமாக காலை வீசிக் கொண்டு நடந்து வந்திருக்கிறேனோ, அவ்வளவு இலேசாகப் பதவியையும் என்னால் கழற்றி எறிந்து விட முடியும்." "எறிந்து விட முடியுமானால் நீங்கள் இதற்குள் கழற்றி எறிந்திருக்க வேண்டுமே? ஏன் அப்படிச் செய்யவில்லை?" துணிவை வரவழைத்துக் கொண்டு எதிர்த்துக் கேட்டு விட்டார் கழற்கால் மாறனார். "நல்ல கேள்வி கேட்டீர்கள், கழற்கால் மாறனாரே! உங்களைப் போல், 'தமிழவேள் பாண்டிய மூவேந்த வேளார்' பட்டம் பெற்ற ஒருவரால் தான் இந்தக் கேள்வி என்னிடம் கேட்க முடியும்! அதற்காகப் பாராட்டுகிறேன். தங்களுடைய கால்களின் அளவுக்குப் பொருந்துமோ பொருந்தாதோ! மற்றவர்களுடைய பாதக் குறடுகளைத் திருடிக் கொண்டு போக ஆசைப்படுகிறவர்கள் நிறைய இருக்கிறார்கள். அதே மாதிரி, மற்றவர்களுடைய பதவிகளைத் தங்கள் தகுதிக்குப் பொருந்தாவிட்டாலும் அடையத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள் பலர். ஆனால் நான் என்ன செய்வது? என்னுடைய காலுக்கு அளவான பாதக் குறடுகளை நான் தானே அணிந்து கொள்ள முடியும்! நீங்கள் ஆசைப்படுகிறீர்கள் என்பதற்காக என் பாதக்குறடுகளை உங்களிடம் நான் எப்படிக் கொடுக்கலாம்?" மகாமண்டலேசுவரர், கழற்கால் மாறனாரைச் செருப்புத் திருடுகிறவனோடு ஒப்பிட்டு மறைமுகமாகக் குத்திக் காட்டிப் பேசிய போது வானவன் மாதேவிக்குச் சிரிப்பு வந்துவிட்டது. வாய்விட்டுச் சிரித்துப் பழக்கமில்லாத அவர் அப்போது அடக்க முடியாமல் சிரித்து விட்டார். "தானாகக் கனியாவிட்டால் தடி கொண்டு அடித்துக் கனிய வைப்போம். எங்களுடைய ஒப்புரவு மொழி மாறா ஓலை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இனி நாங்கள் சும்மா இருக்க மாட்டோம்." கழற்கால் மாறனார் ஆத்திரத்தோடு இரைந்தார். "உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். சரியான எதிரிகள் பக்கத்தில் இல்லாத காரணத்தால் சிறிது காலமாக என் சிந்தனைக் கூர்மை மழுங்கிப் போயிருக்கிறது. நீங்களெல்லாம் கிளம்பினால் அதைக் கூர்மையாக்கிக் கொள்ள எனக்கு வசதியாக இருக்கும்." "அறிவின் திமிர் உங்களை இப்படி என்னை அலட்சியமாக எண்ணிக் கொண்டு பேசச் செய்கிறது!" "ஆசையின் திமிர் உங்களை இப்படி ஒப்புரவு மொழி மாறா ஓலையோடு ஓடி வரச் செய்கிறது!" கன்னத்தில் அறைவது போல் உடனே பதில் கூறினார் மகாமண்டலேசுவரர். "உங்கள் ஆட்சியின் மேல் எனக்குள்ள வெறுப்பைக் காட்டுவதற்காக மகாமன்னர் பராந்தக பாண்டியர் காலத்தில் எனக்கு அளிக்கப்பட்ட 'தென்னவன் தமிழவேள் பாண்டிய மூவேந்த வேளான்' என்ற பட்டத்தையும் அதற்கு அறிகுறியாக என் விரலில் அணிவிக்கப்பட்ட ஏனாதி மோதிரத்தையும் இப்போதே கழற்றி எறியப் போகிறேன் நான்." கொதிப்போடு கத்தினார் கழற்கால் மாறனார். "தாராளமாகக் கழற்றி எறியுங்கள். அவைகளை நீங்கள் கழற்றி எறிந்து விட்டால், உங்களைச் சார்ந்திருந்த காரணத்தால் அந்தப் பட்டத்துக்கும் மோதிரத்துக்கும் ஏற்பட்டிருந்த களங்கமாவது நீங்கும். ஒரு காலத்தில் தென்பாண்டி நாட்டிலேயே சிறந்த வீரர்களுக்கு அளிக்கப்பட்ட ஏனாதி மோதிரம் என்ற மரியாதைப் பரிசு இப்போது உங்களைப் போல் ஒரு பதவி ஆசை பிடித்த கிழட்டு மனிதரின் கைவிரலில் கிடப்பதை யாருமே விரும்பமாட்டார்கள்" என்று மகாமண்டலேசுவரர் சொல்லி முடிப்பதற்குள் அவருடைய காலடியில் 'ணங்'கென்று சொல்லி அந்த அந்த மோதிரம் கழற்றி வீசி எறியப்பட்டு வந்து விழுந்தது. கழற்றி வீசி எறிந்தவர் கழற்கால் மாறனார். மகாமண்டலேசுவரர் கீழே குனிந்து அந்த மோதிரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு நிமிர்ந்த போது கழற்கால் மாறனார் கோபத்தோடு வேகமாக அந்த இடத்திலிருந்து வெளியேறிப் போய்க் கொண்டிருந்தார். "பாவம்! முதிர்ந்த வயதில் முதிராத மனத்தோடு பதவி ஆசைக்கு ஆளாகி என்னென்னவோ பேசுகிறார்" என மகாமண்டலேசுவரரை நோக்கிக் கூறினார் மகாராணி. "ஆமாம்! வீடு போ போ என்கிறது. காடு வா வா என்கிறது. இந்த வயதில் இப்படிக் கேட்பார் பேச்சைக் கேட்டுக் கொண்டு கெட்டலைய வேண்டாம் இவர்! மகாராணி! இந்த ஓலையும் இந்த மோதிரமும் என்னிடமே இருக்கட்டும். நான் உங்களை அப்புறம் வந்து பார்க்கிறேன்" என்று கூறிவிட்டு அவர் அங்கிருந்து புறப்பட்ட போது, "நீங்கள் இந்தச் சிறுபான்மையாளர்களின் செயலை மனத்தில் வைத்துக் கொண்டு புண்படக்கூடாது" என்று உபசாரமாகச் சொன்னார் மகாராணி. "அந்தக் கவலை தங்களுக்கு வேண்டாம், மகாராணி!" என்று சுருக்கமாகப் பதில் சொல்லிவிட்டு நடந்தார் மகாமண்டலேசுவரர். அவர் போகும் போது வெளி வாசலில் ஒரு புறமாக நின்று கொண்டிருந்த புவன மோகினியை அருகில் கூப்பிட்டு, "தொடர்ந்து இது மாதிரியே இங்கு யார் வருகிறார்கள், போகிறார்கள் என்பதை நீதான் அவ்வப்போது எனக்கு வந்து சொல்ல வேண்டும்! கவனமாக நடந்து கொள்" என்று சொல்லிவிட்டுப் போனார். பயபக்தியோடு அப்படியே செய்வதாக ஒப்புக் கொண்டாள் அவள். நாளுக்கு நாள் மகாமண்டலேசுவரரின் எண்ணங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறி வந்த சமயம் அது. கொற்கையிலும், கரவந்தபுரத்துப் பகுதிகளிலும் கலவரமும், குழப்பமும் ஓய்ந்து அமைதி நிலவியது. முத்துக்குளிப்பு ஒழுங்காக நடைபெற்றது. அவர் செய்த இரகசிய ஏற்பாட்டின்படி குழல்வாய்மொழியும் சேந்தனும் கடல் கடந்து போய் இளவரசன் இராசசிம்மனையும் அரசுரிமைப் பொருள்களையும் மீட்டுக் கொண்டு வந்து விடுவார்கள். அவர் மெய்க்காவற் படையிலிருந்து தேர்ந்தெடுத்து அனுப்பிய ஐம்பது ஒற்றர்களும் வடக்கே கொடும்பாளூர்ப் பகுதியில் சென்று பயனுள்ள வேலைகளை மறைந்திருந்து செய்து கொண்டிருந்தார்கள். வடதிசைப் படையெடுப்புப் பயமுறுத்தல் தற்காலிகமாக நின்று போயிருந்தது. அந்த நிலையில்தான் கழற்கால் மாறனாரின் ஒப்புறவு மொழி மாறா ஓலை வந்து அவரைச் சிறிது அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதற்கு மறுநாள், கொடும்பாளூரில் உளவறிய முயன்ற போது அன்று ஒருநாள் அழகாகப் பொய் சொல்லி அவரை மகிழ்வித்த வீரன் அகப்பட்டுக் கொண்டு கழுவேறி இறந்த செய்தி அவருக்கு வந்தது. சீவல்லப மாறனை விட்டுக் கோட்டாற்றிலிருந்த அந்த வீரனின் மனைவியையும், மகனையும் வரவழைத்து ஆறுதல் கூறினார் அவர். கழற்கால் மாறனார் திருப்பிக் கொடுத்த ஏனாதி மோதிரத்தை இறந்த வீரனுக்கு செலுத்தும் மரியாதைப் பரிசாக அவன் மகனுக்கு அளித்தார் மகாமண்டலேசுவரர். அன்று மாலை இடையாற்று மங்கலம் நிலவறையிலிருந்து இரவோடு இரவாக யாரோ ஆயுதங்களைக் கடத்திக் கொண்டு போய்விட்டார்கள் என்று அம்பலவன் வேளான் வந்து புதிதாக ஒரு செய்தியைச் சொன்ன போது அவர் பலவாறு சந்தேகப்பட்டார். |