மூன்றாம் பாகம் 3. கனகமாலையின் புன்னகை இந்தக் கதையில் திடீரென்று எழிலோவியமாக வந்து தோன்றிக் குமாரபாண்டியனையும், நமது நேயர்களையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கும் 'கனகமாலை' என்னும் பேரழகியைப் பற்றி இங்கே சிறிது விவரித்துச் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. வரலாற்றுப் பெருமை வாய்ந்த பழைய ஈழநாடு மூன்று பெரும் பிரிவுகளாக இலங்கியது. தென் கிழக்குப் பகுதி 'உரோகண ரதம்' என்றும், நடுப்பகுதி 'மாயா ரதம்' என்றும், வடபகுதி 'இராச ரதம்' என்றும் பெயர் பெற்றிருந்தன. வடக்குப் பகுதியாகிய இராச ரத நாட்டில் தான் அனுராதபுரம், பொலன்னறுவை முதலிய கோநகரங்கள், கலைவளம் நிறைந்த ஊர்கள் எல்லாம் இருந்தன. தென்கீழ்ப்பகுதியாகிய உரோகண ரதத்திலிருந்து சிற்றரசன் ஒருவனின் புதல்வியைக் காசிப மன்னர் தம் இளமையில் காதலித்து மணம் புரிந்து கொண்டிருந்தார். அவளிடம் அவருக்குப் பிறந்த பெண் தான் கனகமாலை. காசிப மன்னரின் உள்ளத்தில் அந்தப் பெண்ணின் மேல் தனிப்பட்ட பாசமும் உரிமையும் உண்டு. அவருடைய செல்லப் பெண் கனகமாலை. கனகமாலைக்குப் பத்து வயது நடந்து கொண்டிருந்த போதுதான் முதன்முறையாகக் குமாரபாண்டியன் இலங்கைக்கு வந்திருந்தான். அப்போது காசிப மன்னருடைய வேண்டுகோளின்படி சிறிது காலம் கனகமாலைக்குத் தமிழ் கற்பித்தான் அவன். கனகமாலைக்கு நினைவு மலராத பேதமைப் பருவம் அது. இரண்டாவது முறையும், அதன் பின்பும் அவன் ஈழ நாட்டுக்கு வந்த போது கனகமாலையைச் சந்திக்க முடியவில்லை. அப்போதெல்லாம் தன் தாயோடு கனகமாலை உரோகண தேசத்துக்குச் சென்று தங்கியிருந்ததால் குமாரபாண்டியன் அவளைக் காண முடியாமற் போயிற்று. மீண்டும் இப்போது பருவச் செழுமை கனிந்த கன்னியாக அவளைத் தன் முன் கண்ட போது அவனுக்கு அளவிலடங்காத வியப்பு ஏற்பட்டது. அவன் ஏறக்குறைய மனத்துக்குள்ளேயே மறந்து போய்விட்ட அழகிய உண்மை ஒன்று 'நான் வளமாக வளர்ந்து எழில் கனிந்து நிற்கிறேன்' என்று முன் வந்து நினைவூட்டுவது போலிருந்தது கனகமாலையை மீண்டும் சந்தித்தது. சிரிப்பும், விளையாட்டும், கேலியும், கும்மாளமுமாகப் பொலன்னறுவையின் அரண்மனையில் அந்தச் சிறுமிக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்த பழைய நாட்களை நினைத்துப் பார்த்தான் அவன். அந்த நினைப்பு ஆறுதலாக, இனிமையாக, நிறைவுடையதாக அவன் மனத்தில் விளங்கியது. வெள்ளணி விழா முடிந்த மறுநாள் மாலையில்தான் இராசசிம்மனும், காசிப மன்னரும் தனியே சந்தித்து விரிவாகப் பேசுவதற்கு நேரம் வாய்த்தது. தென்பாண்டி நாட்டு நிலையை அவருக்கு விளக்கிச் சொன்னான் இராசசிம்மன். வடக்கேயிருந்து பகையரசர்கள் பாண்டி நாட்டின் மேல் படையெடுக்க நேரம் பார்த்துக் கொண்டிருப்பதையும் அவரிடம் குறிப்பிட்டான் அவன். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு அவர் கூறலானார்: "இராசசிம்மா இதுவரையில் நீ கூறியவற்றையெல்லாம் கேட்டேன். தென் பாண்டி நாட்டின் உண்மையான நிலை இப்போது எனக்குப் புரிகிறது. இம்மாதிரி பகைவர் படையெடுப்பு ஏற்படும் நிலை வந்து முடிவு எப்படி எப்படி ஆகுமோ என்று பயந்துதான் தென்பாண்டி நாட்டு அரசுரிமைப் பொருள்களையும் உங்களுடன் இங்கேயே எடுத்துக் கொண்டு வந்து விடும்படி சக்கசேனாபதியிடம் நான் கூறியனுப்பினேன். வெற்றியோ, தோல்வியோ விளைவு எப்படி இருந்தாலும், நாம் நம்முடைய பொருள்களைத் தற்காப்பாக வைத்துக் கொண்டு விட வேண்டும்." காசிப மன்னர் இப்படிக் கூறிக் கொண்டு வந்த போது குமாரபாண்டியன் குறுக்கிட்டுச் சொன்னான்: "என் உயிரினும் மேலான மதிப்புக்குரிய பொருளை நான் இன்னும் பாதுகாக்கவே இல்லை, காசிப மன்னரே! இந்தப் பொற் சிம்மாசனத்தையும், வீர வாளையும், சுந்தர முடியையும் பாதுகாப்பாக இங்கே கொண்டு வந்து விட்டதற்காக நான் பெருமைப் பட்டுக் கொள்வது பெரிதன்று; என் அன்னையைக் காப்பாற்ற வேண்டும், நான் பிறந்த குடியின் மானத்தையும் மதிப்பையும் காப்பாற்ற வேண்டும். அவைகளைக் காப்பாற்றிப் பாதுகாக்காத வரையில் நான் பெருமைப்படுவதற்கே தகுதியற்றவன்."
"உன் மனக்குறை எனக்குப் புரிகிறது, இராசசிம்மா! இப்போது சொல்கிற வார்த்தைதான். நீ என்னை உறுதியாக நம்பலாம். தென்பாண்டி நாட்டுக்கோ, உன் அன்னைக்கோ ஒரு சிறு துன்பம் பகையரசர்களால் ஏற்படுகிறதென்று தெரிந்தாலும் உனக்கு உதவியாகச் சக்கசேனாபதியின் தலைமையில் ஈழ மண்டலப் பெரும்படை முழுவதையும் கடல் கடந்து அனுப்பி வைப்பதற்கு நான் எந்த விநாடியும் சித்தமாக இருக்கிறேன். அதற்காக நீ கவலைப்படாதே!" என்று உறுதியான அழுத்தம் ஒலிக்கும் குரலில் காசிப மன்னர் மறுமொழி கூறிய போது குமாரபாண்டியனுக்கு நம்பிக்கை ஏற்பட்டது.
அதன் பின் இடையாற்று மங்கலம் நம்பி, தளபதி வல்லாளதேவன் என்று தென்பாண்டி நாட்டு அரசியலில் தொடர்புடைய முக்கியமானவர்களையெல்லாம் பற்றிக் காசிப மன்னர் அவனிடம் விசாரித்தார். பேசிக் கொண்டிருக்கும் போது அவன் கையிலிருந்த வலம்புரிச் சங்கை அவரும் பார்த்தார். சிரித்துக் கொண்டே அதைப் பற்றி ஆவலுடன் விசாரித்தார். அதைக் கையில் வாங்கிப் பார்த்து வியந்தார். வருகிற வழியில் ஒரு தீவில் விலைக்கு வாங்கியது என்பதற்கு மேல் அதிகமாக அவரிடம் ஒன்றும் சொல்லிக் கொள்ளவில்லை அவன். அவரும் அதற்குமேல் அதைப் பற்றித் தூண்டிக் கேட்கவில்லை. அவர்கள் இருவரும் இவ்வாறு பேசிக் கொண்டிருந்த போது ஓட்டமும், நடையுமாகத் துள்ளிக் கொண்டு கனகமாலை அங்கு வந்தாள். தந்தை மட்டும்தான் அந்த இடத்தில் இருப்பாரென்ற எண்ணத்தில் சுதந்திரமாகத் துள்ளிக் குதித்து வந்த கனகமாலை, குமாரபாண்டியனும் அங்கிருந்ததைப் பார்த்தவுடன் வெட்கமடைந்தாள். "கனகமாலை! குமாரபாண்டியர் உனக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்ததெல்லாம் நினைவு வைத்துக் கொண்டிருக்கிறாயா! எல்லோருக்கும் சாதாரணமாக ஆசிரியர்கள் தாம் கற்பிப்பதற்குக் கிடைப்பார்கள். உனக்கோ தமிழ் மொழி சுரக்கும் பாண்டி நாட்டு இளவரசே ஆசிரியராகக் கிடைத்தார். இவரை விட்டுவிடாதே, இன்னும் என்னென்ன கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டுமோ, அவ்வளவையும் இவர் இங்கிருக்கும் போதே கேட்டுத் தெரிந்து கொண்டு விடு" என்றார். "இந்தச் சில ஆண்டுகளுக்குள் நானே அடையாளம் கண்டுபிடிக்க முடியாதபடி வளர்ந்து விட்டாளே, என் மாணவி! அந்த நாட்களில் நான் ஒன்றைச் சொல்லிக் கொடுப்பதற்கு முன் ஒன்பது கேள்விகளைக் கேட்டுத் திணறச் செய்த உங்கள் பெண் இப்போது என் முகத்தைப் பார்த்துப் பேசுவதற்கே வெட்கப்படுகிறாள்." "இவரிடம் பேசுவதற்கு வெட்கமென்ன அம்மா? இவர் நம் வீட்டு மனிதர் மாதிரி. அந்த நாளில் தமிழ்ச் சுவடியும் கையுமாக நான் கூப்பிட்டாலும் என்னவென்று கேட்காமல் சதாகாலமும் இவரையே சுற்றிக் கொண்டிருப்பாய் நீ. இப்போது திடீரென்று என்ன வந்துவிட்டது உனக்கு? நீ கூடக் கலகலப்பாக இவரிடம் பழகாவிட்டால் இவருக்கு வந்த இடத்தில் எப்படித்தான் பொழுது போகும்?" "சுத்தப் பொய், அப்பா! இவர் சொல்வதை நீங்கள் நம்பவே நம்பாதீர்கள். நான் ஒன்றும் இவரோடு பேச மாட்டேனென்று சொல்லவில்லை. பௌத்த விஹாரத்துக்கு வழிபாடு செய்யப் போய்க் கொண்டிருந்த போது இவரும் சேனாபதி தாத்தாவும் குதிரையில் வந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். அப்போதே நடுத்தெருவில் நின்று கொண்டு இவரோடு எப்படி அப்பா பேச முடியும்? இவரானால் அங்கேயே தெருவில் நின்று கொண்டு என்னைக் கேள்வி கேட்டுத் துளைத்தெடுத்து விட்டார்" என்று பொய்க் கோபத்தின் சாயல் திகழும் முகத்தோடு படபடப்பாக மறுமொழி கூறினாள். "ஆ! இப்போதுதான் உன்னைக் கனகமாலை என்று ஒப்புக் கொள்ள முடிகிறது. துடுக்குத்தனமான பேச்சும் சுறுசுறுப்பும் உள்ள பெண் திடீரென்று ஊமையாக நின்றால் யாருக்குத்தான் கோபம் வராது?" என்று அவளைப் பார்த்துக் கூறிவிட்டுச் சிரித்தான் இராசசிம்மன். கனகமாலைக்கு அவனுடைய முகத்தை நேருக்கு நேர் பார்ப்பதற்குக் கூச்சமாக இருந்தது. ஆனாலும் பார்க்க வேண்டுமென்று ஆசையாகவும் இருந்தது. இராசசிம்மனுக்குக் கனகமாலையிடம் ஏற்பட்ட கவர்ச்சியைக் காதல் என்று சொல்வதற்கில்லை. அது ஒருவகைக் கவிதைக் கவர்ச்சி. இராசசிம்மனுக்குச் சுவையான பாடல் கிடைத்தால் ஏற்படுகிற நிறைவு போல், கனகமாலையின் நளினப் புன்னகையில் அவன் காவியச் சுவையைக் கண்டான். தத்துவசேன அடிகளோடு உரையாடும் போதும், சக்கசேனாபதியோடு பேசும் போதும், காசிப மன்னரோடு பழகும் போதும் மரியாதையும், கௌரவமும் அவனைப் பொறுப்புள்ளவன் என்று நினைவூட்டிக் கொண்டே இருந்தன. ஆனால், கனகமாலையின் புன்னகை என்னும் கவிதையைச் சுவைக்க நேரும் போதெல்லாம் அவன் சிறு குழந்தையாகி, அந்தக் காவிய அழகில் மயங்கித் தன் பொறுப்புக்களையும் கவலைகளையும் மறந்து விடுகிறான். அந்த மறதி மயக்கம் அப்போதைய சூழ்நிலையில் அவனுக்குத் தேவையாக இருந்தது. அனுராதபுரத்துக்கு வந்த புதிதில் இரண்டொரு நாட்கள் தான் அவனும், கனகமாலையும் ஒருவரையொருவர் காணாமலும், பேசாமலும் நாணம் திரையிட்டிருந்தது. பின்பு அந்தப் பெண்ணாகவே வலுவில் கலகலப்போடு பழகத் தொடங்கி விட்டாள். பழையபடி தமிழ்ச் சுவடிகளும் கையுமாக அவனைச் சுற்றி வரத் தொடங்கினாள். அந்தக் கனவுக் கன்னிகையோடு மகிந்தலைக் குன்றின் உச்சி வரையில் ஏறிச் சுற்றினான். அனுராதபுரத்து ஏரிகளில் படகில் ஏறிக் கொண்டு மிதந்தான். சிம்மகிரிக்குகை ஓவியங்களைப் போய்ப் பார்த்தான். "நீங்கள் ஏன் எப்போதும் இந்தச் சங்கைக் கையில் வைத்துக் கொண்டே சுற்றுகிறீர்கள்?" என்று ஒரு நாள் கனகமாலையும் அவனைக் கேட்டு விட்டாள். "கனகமாலை! இந்தச் சங்கில் நான் என்றென்றும் மறக்க முடியாத ஒரு இனிய நினைவு மறைந்திருக்கிறது. இது என் கையில் இல்லாவிட்டால் மனம் ஏழையாகி, நினைவுகள் சூனியமாகி விட்டது போல் ஒரு பெருங் குறைபாட்டை உணர்கிறேன் நான்" என்றான் உருக்கமாக. வெள்ளணி விழா முடிந்த சில நாட்களில் அவர்கள் எல்லோரும் பொலன்னறுவைக்குப் பயணமானார்கள். அங்கே குமாரபாண்டியனின் நாட்கள் கனமாலைக்குத் தமிழ் கற்பிப்பதிலும், அவளுடைய அமுதத்தன்மை நிறைந்த காவியச் சிரிப்பில் தன் கவலைகளை மறந்து விடுவதிலும் கழிந்து கொண்டிருந்தன. வனங்களிலும், மலைகளிலும் அந்தக் கவிதைப் பெண்ணோடு சுற்றினான் அவன். அப்படிச் சுற்றுவது அவனுக்குப் பெருமையாக இருந்தது. ஒரு நாள் மாலை கனகமாலையும், அவனும் ஒரு பௌத்த விஹாரத்துக்குப் போய் வழிபாடு செய்து விட்டு இருட்டுகிற நேரத்துக்கு அரண்மனைக்குத் திரும்பி வந்தார்கள். அப்படி வந்த சிறிது நேரத்துக்கெல்லாம் சக்கசேனாபதி அவசரமாக ஓடி வந்து, "இளவரசே! நான் அன்று 'தமனன் தோட்டத்து'க் கப்பல் துறை ஊழியர்களிடம் எச்சரித்துவிட்டு வந்தது நல்லதாகப் போயிற்று. நேற்றுத் தமிழ் நாட்டைச் சேர்ந்த கப்பல் ஒன்றை அங்கே தடுத்து நிறுத்தியிருக்கிறார்களாம். அதில் சந்தேகப்படத்தக்க ஆட்களும் இருக்கிறார்களாம். தகவல் வந்திருக்கிறது" என்று இராசசிம்மனிடம் கூறினார். |