8. ஒரு துயர நிகழ்ச்சி அட்டவணை வெள்ளத்திலும், புயலிலும் சிக்கிக் கொண்டு மீளும் வழி தெரியாமல் இறந்து போன அந்தப் பெண்ணின் முகத்தை உற்றுப் பார்த்துக் குமாரபாண்டியன் பெயர் சொல்லி அலறியதைக் கண்டதும் சக்கசேனாபதிக்கும் புத்தபிட்சுவுக்கும் அடக்க முடியாத வியப்பு ஏற்பட்டது. முகத்தைப் பார்த்து இனங்கண்டு கொண்டதும் அவன் வாயிலிருந்து அலறலாக ஒலித்தது அந்த ஒரே ஒரு வார்த்தைதான். அதன் பின் அவன் வாயிலிருந்து வார்த்தையே பிறக்கவில்லை. விழிகள் விரிய முகத்தில் மலைப்பும், பீதியும் தெரிய, வாய் பேசும் ஆற்றல் இழந்து விட்டது போல் அப்படியே அசையாமல் நின்றான் அவன். "இந்தப் பெண்ணை உங்களுக்குத் தெரியுமா? இவள் யார்?" என்று ஒரே சமயத்தில் சக்கசேனாபதியும் பிட்சுவும் அவனை நோக்கிக் கேட்டார்கள். சிறிது நேரம் அவர்கள் கேள்வியையே காதில் போட்டுக் கொள்ளாதவன் போல் மலைத்தது மலைத்தபடியே நின்ற இராசசிம்மன் பின்பு மெல்ல தலை நிமிர்ந்தான். "சக்கசேனாபதி! இது என்ன பரிதாபம்! தென்பாண்டி நாட்டிலிருந்து கடல் கடந்து வந்து இறங்கி இந்தப் பெண் தனியாக எப்படி இங்கே வந்தாள்? இவளுடைய விதி இங்கே வந்து முடிய வேண்டுமென்று தான் இருந்ததா?" என்று பரிதாபம் மிக்க குரலில் அவரை நோக்கிக் கூறினான். "இந்தப் பெண் யாரென்றே நீங்கள் இன்னும் எனக்குச் சொல்லவில்லையே?" என்று கேட்டார் அவர். "சந்தேகமேயில்லை! இவள் தென்பாண்டி நாட்டுத் தளபதி வல்லாளதேவனின் தங்கை! பகவதி என்று பெயர்! இவள் எப்படி எதற்காக யாருடைய உதவியால் இங்கே வந்தாள் என்பதல்லவா எனக்குப் புதிராக இருக்கிறது. எப்படியானாலும் இந்த அவலக் காட்சி என் நெஞ்சை உருக்குகிறது. இந்த வயதில் இந்தப் பெண்ணுக்கு இப்படி ஏற்பட்டிருக்க வேண்டாம்" என்று நா தழுதழுக்கக் கூறிவிட்டுக் கண்களில் திரண்ட நீரைத் துடைத்துக் கொண்டான் குமாரபாண்டியன். "இளவரசே! நீங்கள் பிழையாக அனுமானம் செய்கிறீர்கள். இவள் அந்தப் பெண்ணாக இருப்பாளென்று என்னால் நம்பமுடியவில்லை. அவளாவது, தென்பாண்டி நாட்டிலிருந்து இங்கே ஓடி வருகிறதாவது. தளபதியின் தங்கை மாதிரியே முக அமைப்பும், தோற்றமுமுள்ள யாரோ ஒரு பெண்ணாக இருப்பாள் இவள்" என்றார் சக்கசேனாபதி. "எனக்கும் அப்படிச் சந்தேகமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் இந்த ஆண்மை மதர்ப்பும் பெண்மை நளினமும் கலந்த அழகு முகம் அந்தப் பெண்ணுடையது போலவே இருக்கிறதே!" என்று இராசசிம்மன் கூறிய போது, 'சாவும், நோவும் கூடத் தனக்கு வேண்டியவர்களுக்கு வந்தால் தான் மனிதனுக்கு அனுதாபப்பட முடிகிறது. வேண்டாத, முன் பின் தெரியாதவருக்காக அனுதாபத்தைக் கூட அநாவசிய செலவு செய்ய மனிதன் தயாராயில்லை' என்று மனத்துக்குள் எண்ணிச் சிரித்துக் கொண்டார் பிட்சு.
"நான் சொல்வதை நம்புங்கள். இது நிச்சயமாகத் தளபதியின் தங்கையாக இருக்க முடியாது. தோற்றத்திலுள்ள ஒற்றுமையே உங்கள் கண்களை ஏமாற்றுகிறது. கவலையை விடுங்கள்" என்று சக்கசேனாபதி உறுதியாகக் கூறினார்.
"நீங்கள் சொல்கிற மாதிரி இருந்தால் நல்லதுதான். ஆனால் நமக்காக அப்படி இருக்குமா? இந்தப் பாவிப் பெண் நேற்றிரவு அடிகள் சொன்னதைக் கேட்டு அவரோடு வந்திருக்கக் கூடாதோ? இப்படி உயிர் விடவா அடிகள் மேல் சந்தேகப்பட்டு மழையிலும் புயலிலும் திண்டாடினாள்? ஐயோ! விதியின் கொடுமையே!" என்று புத்த பிட்சுவிடம் பிரலாபித்தான் இராசசிம்மன். "துயரம் பொதுவானது, யாராயிருந்தாலும் மனம் வருந்திக் கலங்க வேண்டிய இளமைச் சாவு இது. ஆனாலும் நம் கையில் என்ன இருக்கிறது? நாம் துன்பங்களைக் காணவும், நுகரவும், உண்டாக்கவுமே பிறந்தவர்கள். வெறும் மனிதர்கள்" என்று உணர்ச்சி கொந்தளிக்கும் சொற்களால் இராசசிம்மனுக்கு ஆறுதல் கூறினார் பிட்சு. "நாம் என்ன செய்யலாம்? நேற்றிரவு அவ்வளவு மழையிலும் காற்றிலும் இந்தப் பெண்ணின் ஓலம் கேட்டதும் நம் உயிர்களைக் கூடப் பொருட்படுத்திப் பயப்படாமல் எழுந்து உதவ ஓடி வந்தோம். தண்ணீர் உடைப்பு நம்மைத் தடுத்து விட்டதே. புத்திசாலிப் பெண்ணாயிருந்தால் பிட்சு கூப்பிட்ட போதே இக்கரைக்கு வந்திருக்க வேண்டும். பாவம், விதி முடிகிற சமயத்தில் அறிவு கூட நல்லது கெட்டதைப் பகுத்துணராமல் பிறழ்ந்து விடுகிறதே! இல்லையானால் கள்ளங்கபடமறியாத இந்த அடிகளைப் பற்றி ஐயமுற்றுப் பயந்திருப்பாளா இவள்?" என்று சக்கசேனாபதியும் சோகத்தோடு சொன்னார். ஆறுதல்களையும் மீறி இறந்து கிடக்கும் அந்தப் பெண்ணுடல் பகவதியினுடையதுதான் என்று குமாரபாண்டியனின் மனம் உறுதியாக எண்ணியது. ஆனால் அதைத் திடப்படுத்திக் கொள்ள இன்னும் சரியான சான்று இருந்தால் சந்தேகம் தீர்ந்து விடும். 'தளபதி வல்லாளதேவனின் தங்கையை நன்றாகப் பார்த்துப் பழக்கப்பட்டு அடையாளம் சொல்லக் கூடிய ஒருவர் இருந்தால் அவள் தானா என்பதை இப்போதே உறுதிப் படுத்திக் கொண்டு விடலாம். ஆனால் அவன் ஒருவனைத் தவிர அவளை அடையாளம் தெரிந்தவர்கள் யார் இருக்கிறார்கள் அங்கே?' இராசசிம்மன் மனத்தின் உணர்ச்சிப் பரப்பெல்லாம் சோகம் கவ்விட, மேலே என்ன நினைப்பதென்று தோன்றாமல் மயங்கி நின்றான். "சக்கசேனாபதி! எனக்குத் தெரிந்த பெண்களுக்குள்ளே வல்லாளதேவனின் தங்கைக்கு ஒரு தனிக் குணம் உண்டு. பெண்ணின் அழகும், ஆணின் நெஞ்சு உரமும் கொண்டவள் பகவதி. ஒரு பெரிய வீரனின் தங்கை என்று சொல்வதற்கு ஏற்ற எல்லா இலட்சணங்களும் பகவதியிடம் உண்டு" என்று கண்களில் நீர் மல்க அவன் கூறினான். "நீங்கள் மனத்தைத் தேற்றிக் கொள்ளுங்கள். இறந்து கிடப்பது அந்தப் பெண்ணாக இருக்க முடியாதென்றே எனக்குத் தோன்றுகிறது. நாம் இந்த விவரத்தைத் தமனன் தோட்டத்தில் விசாரித்து உறுதி செய்து கொள்ளலாம். இவள் பகவதியாயிருக்கும் பட்சத்தில் தமனன் தோட்டத் துறையில் வந்து இறங்கினால் தான் இந்தப் பாதையாகப் புறப்பட்டிருக்க முடியும். இந்தப் பெண்ணை அடையாளம் சொல்லி, 'இவள் எப்போது, யாருடன் எந்தக் கப்பலில் வந்து இறங்கினாள்' என்று கப்பல் துறை ஊழியர்களிடம் விசாரிப்போம். அந்த விசாரிப்புக்குக் கூட அவசியமில்லை. ஏனென்றால் இவள் பகவதியாயிருந்து கப்பலில் தென்பாண்டி நாட்டிலிருந்து வந்திருந்தால் தமனன் தோட்டத் துறையிலேயே கப்பலை விட்டுக் கீழிறங்க முடியாமல் நம் வீரர்கள் சிறைப்பிடித்து நிறுத்தியிருப்பார்கள். நான் தான் கப்பலைத் தடுத்து நிறுத்தும்படி கண்டிப்பான கட்டளையிட்டு வந்திருக்கிறேனே. நேற்றைக்கு முன் தினம் இரவு தமனன் தோட்டத்திலிருந்து எனக்கு வந்த தகவலிலிருந்து ஒரே ஒரு கப்பல் தான் பிடிபட்டிருப்பதாகத் தெரிகிறது. அந்தக் கப்பலில் வந்திருந்தால் இந்தப் பெண்ணை இறங்கி வர விட்டிருக்க மாட்டார்களே!" என்று சக்கசேனாபதி விளக்கமாகச் சொன்ன போது, அவர் சொல்கிற படியே இருக்கலாமென்று இராசசிம்மனுக்கும் தோன்றியது. 'ஒரே மாதிரி முக அமைப்பும், தோற்றமும் உள்ள பெண்கள் வேறு இடங்களில் இருக்க முடியும். இறந்து கிடக்கும் பெண் பகவதியைப் போன்ற தோற்றமுடைய வேறொருத்தியாகவும் இருக்கலாம்' என்று நினைத்து மன அமைதி அடைய முயன்றான். மனத்தின் வேதனையும், குழப்பமும், பிடிவாதமாகத் தணிவதற்கு மறுத்தன. சலனமில்லாத முகபாவத்தோடு நின்று கொண்டிருந்தவர் புத்த பிட்சு ஒருவர் தான். 'நன்றாகப் பழுத்த பழங்களெல்லாம் உதிராமல் இருக்கும் போது காற்றின் கொடுமையால் பிஞ்சுகளும், காய்களும் மரத்திலிருந்து உதிர்ந்து விடுவது போல் தோல் சுருங்கி நரை திரை மூப்பு கண்டவர்களுக்கெல்லாம் வராத சாவு இளைஞர்களுக்கு வந்து விடுகிறது. அவரவர்களுக்கென்று அளந்து வகுத்த நாட்களுக்கு மேல் யாரும் வாழப் போவதில்லை' என்று உலக நியாயங்களை எண்ணிப் பார்த்துக் கலக்கத்தைத் தவிர்த்தவர் அவர் ஒருவர் தாம். "இந்தச் சோக முடிவை எண்ணிக் கலங்கி இப்படியே நின்று கொண்டிருந்தால் செயலும், பயனும் நிறைந்த நம் நேரம் கடந்து போய்விடும். நாம் தமனன் தோட்டம் போக வேண்டுமே!" என்று தங்கள் காரியத்தை நினைவுபடுத்தினார் சக்கசேனாபதி. குமாரபாண்டியன் குனிந்த தலை நிமிராமல் நீண்ட பெருமூச்சு விட்டான். "இனியும் இப்படியே செயலிழந்து கவலைப்பட்டு நிற்பதில் பயனில்லை. வாருங்கள்! யாராயிருந்தாலும் இறந்து கிடக்கும் இந்தப் பெண் கொழுந்து நம்முடைய பரிதாபத்துக்கும் இரக்கத்துக்கும் உரியவள். செய்ய வேண்டியதைச் செய்து விட்டு நம் வழிகளில் நாம் நடப்போம்" என்று சொல்லிவிட்டுத் தண்ணீர் ஓடி அரித்திருந்த ஒரு பள்ளத்தில் அந்தப் பெண்ணின் உடலை எடுத்து இட்டார் புத்தபிட்சு. சக்கசேனாபதியும் அவருமாக இரு பக்கங்களிலும் உட்கார்ந்து கைகளால் மண்ணைத் தள்ளிக் குழியை மூட ஆரம்பித்தார்கள். மண்ணோடு அவர்கள் கண்ணீரும் குழியில் சிந்தியது. புதரில் மலர்ந்திருந்த காட்டுப் பூக்கள் சிலவற்றைக் கை நிறையப் பறித்துக் கொண்டு வந்து அந்தக் குழிக்குள் சொரிந்து விட்டு முகத்தை மூடிக் கொண்டு விசும்பினான் இராசசிம்மன். "தம்பீ! உணர்ச்சியை அடக்கு. நீ முகத்தை மூடிக் கொண்டு அழுவதைப் பார்த்தால் இவள் நீ நினைக்கிற பெண்ணென்றே உன் மனம் நம்பிவிட்டதாகத் தெரிகின்றது. மண்ணைச் சொரிந்தாலும், மலரைச் சொரிந்தாலும் வேறுபாடு தெரியாத நிலையை இந்தப் பெண் அடைந்து விட்டாள். உன் அனுதாபத்துக்குரிய உயிர் இப்போது இந்த உடம்பில் இல்லை. இது எலும்புச் சட்டம் வேய்ந்து நரம்பு நூலிட்டுத் தைத்த தோல் பை. இந்தக் கரிய கூந்தலும், நீல நெடுங் கண்களும், கோலப் புருவமும், காலக்கனலெரியில் அழியும் மாயங்கள். இந்தப் பெரியவர் அடிக்கடி உன்னை 'இளவரசே' என்று கூப்பிடுவதிலிருந்து நீ ஓர் அரசகுமாரனென்று தெரிகிறது. ஆளுங்குடியிற் பிறந்தவனுக்கு இறுகிய மனம் வேண்டுமென்று அரசியல் நூல்கள் சொல்லும். நீயோ துன்பங்களைக் கண்டபோதெல்லாம் இப்படி நெகிழ்ந்து விடுவாய் போலிருக்கிறது. உன் மனத்தில் நான் சொல்லும் உரைகளைப் பதித்துக் கொள்ளப்பா" என்று குழியில் மண்ணைத் தள்ளிக் கொண்டே கூறினார் புத்த பிட்சு. அப்போது,
"நீல நிறத்தனவாய் நெய்யணிந்து போதவிழ்ந்து கோலங் குயின்ற குழல்வாழி நெஞ்சே! கோலங் குயின்ற குழலும் கொழுஞ்சிகையும் காலக் கனலெரியில் வேம்வாழி நெஞ்சே காலக் கனலெரியில் வேவன கண்டாலும் சால மயங்குவ தென் வாழி நெஞ்சே..." என்று அவர் 'கையறு நிலையாக' (ஒருவர் மரணத்துக்கு வருந்திப் பாடும் பாட்டு) பாடிய பாட்டு தன் நெஞ்சுக்கென்றே பாடியது போல் தோன்றியது இராசசிம்மனுக்கு. குழியை மண் மூடிக் கொண்டது. உடம்பு மறைந்தது. எங்கோ சிறிது தூரம் நடந்து போய் ஒரு சிறு அரசங் கன்றை வேரோடு பிடுங்கி வந்து அந்த இடத்தில் ஊன்றினார் புத்த பிட்சு. பக்கத்தில் தேங்கியிருந்த தண்ணீரையும் வாரி இறைத்தார். பின்பு தலை நிமிர்ந்து மற்ற இருவரையும் பார்த்துச் சொன்னார்: "நாம் போகலாம். ஓர் உயிரின் கதையை மண்ணுக்குள் பத்திரப் படுத்தி விட்டோம். இதற்கு முன்னும் இப்படி எத்தனையோ உயிர்களின் கதைகளை மண் ஒளித்து வைத்துக் கொண்டிருக்கிறது. இன்னும் எத்தனையோ? மண்ணுக்கு ஒன்றும் புதிதில்லை." மூன்று பேரும் மௌனமாகத் திரும்பி நடந்தார்கள். இரவு தங்கியிருந்த கட்டடத்தின் வாயிற்படிக்குப் பக்கத்தில் போன போது முதல் நாளிரவு உறக்கம் வராமல் அந்தப் படியில் உட்கார்ந்து வாழ்க்கையின் முழுமையைப் பற்றித் தான் பைத்தியக்காரத்தனமாகச் சிந்தித்த சிந்தனைகள் இராசசிம்மனுக்கு நினைவுக்கு வந்தன. 'முழுமையாம் முழுமை! எங்கே இருக்கிறது அது?' "உங்கள் இருவருக்கும் குதிரைகள் இருக்கின்றன. நான் நடந்து போக வேண்டியவன். எனக்கு விடை கொடுங்கள்" என்று அந்த இடத்துக்கு வந்ததும் புத்தபிட்சு விடை பெற்றுக் கொண்டார். பிரிந்து போகும் போது மீண்டும் அவர் இராசசிம்மன் முகத்தைப் பார்த்து, "தம்பீ! கவலையை விடு. நீ அரசகுமாரன்; ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொல்லும் போரில் கூடக் கலங்காமலிருக்க வேண்டியது உனக்கு அறம். இந்த ஓர் உயிருக்காகவே இப்படி மயங்கிச் சோர்கிறாயே? போ! உன் காரியத்தைப் பார்க்கக் கிளம்பு!" என்றார். சிறிது நேரத்தில் மழையாலும், காற்றாலும் சிதைந்த காட்டு வழியில் அவர்கள் குதிரைப் பயணம் தொடங்கியது. 'காலக் கனலெரியில் வேம் வாழி நெஞ்சே' என்ற புத்த பிட்சுவின் சொற்கள் மனத்தாளத்திலிருந்து நீங்காமல் ஒலிக் கூத்தாட சிந்தனை கவியும் மனத்தோடே சென்றான் குமாரபாண்டியன். நடுவழியில் நிகழ்ந்த அந்தத் துயர நிகழ்ச்சி பொலன்னறுவையிலிருந்து புறப்படும் போதிருந்த உற்சாகத்தை இருந்த இடம் தெரியாமல் அழித்து விட்டது. புத்த பிட்சுவின் வார்த்தைகள், வாழ்க்கையின் முழுமையைப் பற்றி அவன் முதல் நாள் நினைத்த அதே நினைவுகளை வேறொரு விதத்தில் அவனுக்குத் திருப்பிக் கூறுவன போல் ஒலித்தன. அந்த வார்த்தைகளை நினைத்துக் கொண்டே பயணத்தைத் தொடர்ந்தான் அவன். இந்தச் சோக நிகழ்ச்சியை உண்டாக்குவதற்கென்றே நேற்று மழையும், காற்றும் வந்தனவா? இந்தச் சோகத்தை எதிர்பார்த்தே நேற்றிரவு அவன் மனத்தில் வாழ்வின் முழுமையைப் பற்றிய அந்தத் தோற்றங்கள் உண்டாயினவா? ஒன்றும் புரியவில்லை. அப்போது அவன் மனநிலை எப்படி இருக்கும் என்பதை உணர்ந்தவர் போல் சக்கசேனாபதியும் பேசாமல் உடன் வந்து கொண்டிருந்தார். அவர்களிருவரும் தமனன் தோட்டத்துக் கப்பல் துறையை அடைவதற்குச் சிறிது தொலைவு இருக்கும் போதே ஈழ நாட்டுக் கப்பற்படை வீரர்கள் சிலர் எதிரே வந்து அவர்களைச் சந்தித்து விட்டனர். அவர்களைச் சந்தித்த உடனே ஆவலோடு, "நீங்கள் தடுத்து நிறுத்தியிருக்கும் கப்பலில் வந்திருப்பவர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்? இந்த ஒரு கப்பலைத் தவிர வேறு ஏதாவது கப்பல் வந்ததா? இந்தச் சில நாட்களில் யாராவது ஓர் இளம் பெண் கப்பலில் வந்து இறங்கித் தனியாக இந்தக் காட்டு வழியில் புறப்பட்டதை நீங்கள் பார்த்தீர்களா?" என்று எத்தனை சந்தேகங்கள் தன் மனத்தில் இருந்தனவோ அத்தனைக்கும் சேர்த்துக் கேள்விகளைக் கேட்டார் சக்கசேனாபதி. "இந்தச் சில நாட்களுக்குள் இங்கு வந்ததே இப்போது பிடிபட்டுள்ள ஒரே கப்பல்தான். கப்பல் விழிஞத்திலிருந்து வருகிறதென்று அறிந்தோம். அதில் ஒரு முன்குடுமிக்கார மனிதரும், ஓர் இளம் பெண்ணும், இன்னொரு இளைஞனும் ஆக மூன்று பேர்கள் வந்தார்கள். ஆனால் கப்பலில் பிடிபட்ட தினத்தன்று மாலை அந்த இளைஞன் மட்டும் காணாமல் போய்விட்டான்" என்று கடற்படை வீரர்கள் பிடிபட்ட கப்பலின் நிலைமையை விவரித்து மறுமொழி கூறினர். |