1. பட்டமளிப்பு விழா பல்கலைக் கழகத்திலிருந்து வந்த பட்டமளிப்பு விழா அழைப்பிதழைப் படித்து முடித்த போது சுகுணாவுக்குப் பழைய நினைவுகளை வரிசையாய் நினைக்கத் தோன்றியது. நேற்றுத் தான் பரீட்சை முடிந்தது போலிருக்கிறது! நாட்கள் தாம் எவ்வளவு வேகமாக ஓடியிருக்கின்றன. பரீட்சை மண்டபத்தின் ஆழ்ந்த அமைதிக்கு நடுவே படபட வென்று அடித்துக் கொள்ளும் மனநிலையோடு விடைகளையும், எதிர்காலத்தையும் சேர்த்து நினைத்துத் தவித்த நாட்கள் இப்போதுதான் கழிந்து போயின போல் தோன்றுகின்றன. குறுக்கும் நெடுக்கும் நடைபோட்டுக் கொண்டே மாணவர்களைக் கண்காணித்து புரொபஸர்களின் கூரிய விழிப்பார்வையும், விடையெழுதிய தாள்கள் புரட்டப்படுகிற ஒலியும், விடைகளை உரிய நேரத்துக்குள் எழுதித் திருப்பிக் கொடுக்க வேண்டுமே என்று பரபரப்புக் காட்டும் முகங்களும் இன்னும் பசுமை மாறாமல் கண்ணுக்குள் நிறைந்திருக்கின்றன. மனத்துக்குள் நினைவிருக்கின்றன. படித்துக் கொண்டிருந்த போது பரீட்சையைப் பற்றிய கவலை, பரீட்சை எழுதிய போது ரிஸல்ட்டைப் பற்றிய கவலை, ரிஸல்ட் வந்த போது வாழ்க்கையைப் பற்றிய கவலை. இப்போது மீதமிருப்பது இந்த மூன்றாவது கவலை மட்டும்தான். முடிவாக நினைவுகளும் நினைவுகள் பிறந்த மனமும், ‘நான் ஒரு வேலை தேடிக் கொள்ள வேண்டும்’ - என்ற ஒற்றைக் கவலையில் வந்து மேலே வளராமல் நின்றன. சுகுணாவுக்குப் பெருமூச்சு வந்தது. தன்னுடைய தாய் தனக்காகப் படும் துன்பங்கள் நினைவில் உறுத்தின. ‘அம்மா இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் இப்படி அப்பளமும், வடாமும் விற்று என்னையும், தன்னையும் காப்பாற்றிக் கொள்ள முடியும்?’ ‘சுகுணா! அவர் என்னை இப்படிச் சீரழிய விட்டு அல்பாயுசாகப் போனதற்கு நீ மட்டும் பெண்ணாகப் பிறந்திருக்காமல் பிள்ளையாகப் பிறந்திருந்தால் எனக்கு எத்தனை ஆறுதலாயிருக்கும் தெரியுமா? சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளையல்லவா?’ என்று அம்மா அடிக்கடி சொல்லிக் குறைப்பட்டுக் கொள்ளும் வார்த்தைகளை நினைத்துக் கொண்டாள் அவள். அம்மா இப்படிச் சொல்லும் ஒவ்வொரு முறையும் சுகுணாவுக்கு என்னவோ போலிருக்கும். ஓரிரு வேளைகளில் இது அவளுள்ளத்தில் சுருக்கென்று தைத்ததுமுண்டு. “இப்படி உன்னிடம் வார்த்தை கேட்பதற்கு நான் ஒரு பெண்ணாகப் பிறந்தேனே என்று எனக்கும் வருத்தமாகத்தானம்மா இருக்கிறது” என்று சில சமயங்களில் விளையாட்டாகச் சிரித்துக் கொண்டே அம்மாவுக்குப் பதிலும் சொல்லியிருக்கிறாள் அவள். அப்போதெல்லாம்,
“அதற்கில்லையடி பெண்ணே! ஒரு வார்த்தைக்குச் சொன்னேன். பெண் பிறந்ததோ கவலை பிறந்ததோ என்று பழைய வசனம் சொல்வார்கள்” - என்று அவளைச் சமாளித்துத் தழுவிக் கொள்வாள் அம்மா. சிற்சில வேளைகளில் விளையாட்டுப் போல அம்மாவை எதிர்த்துச் சொல்லி விடுவாளே தவிரச் சுகுணாவின் மனத்தில் அம்மாதான் தெய்வம். தன் அம்மா இல்லாவிட்டால் அவளுக்கு ஒன்றுமே இல்லை. இந்தத் தள்ளாத வயதில் வீடு வீடாக ஏறி இறங்கி ஏழ்மையும், இழப்பமும் பாராமல் அப்பளம், வடாம் விற்றுப் பெண்ணைக் கல்லூரிப் படிப்பு வரை படிக்க வைத்த தாயைத் தெய்வமென்று நினைக்காமல் வேறு எப்படி நினைப்பது? அவள் பிள்ளையாகப் பிறந்திருந்தால் அம்மா என்னென்ன செய்து மகிழ்ந்திருப்பாளோ அவ்வளவு சீரையும் பெண்ணாகப் பிறந்திருந்தும் கொண்டாடிப் பார்த்துவிட்டாள். அம்மாவுக்கு நிறைந்த மனம், குறைந்த வசதிகள், ஒற்றைக்கொரு குழந்தையாகப் பிறந்திருந்த சுகுணாவுக்கு என்னென்னவோ அலங்காரமெல்லாம் புனைந்து பார்க்க வேண்டுமென்று அம்மாவுக்கு ஆசைகள் உண்டு. கையில் ஓட்டமில்லை. அப்பளம் வடாம் விற்பதிலும், முறுக்கு சீடை செய்து கொடுப்பதிலும் குபேர சம்பத்தா குவிந்து விடும்? வயிற்றைக் கட்டி, வாயைக் கட்டிப் பெண்ணைப் படிக்க வைத்ததே பெரிய காரியம். அப்பா இறந்து போன போது சுகுணாவையும், கவலைகளையும், தவிர வேறு எந்த சௌகரியத்தையும் அம்மாவுக்கு வைத்து விட்டுப் போகவில்லை. தேசத் தொண்டு, சமூகச் சேவை என்று ஊர் ஊராக மேடை மேடையாக அலைந்து நிலத்தையும் கையிலிருந்த பணத்தையும் கட்சி, கூட்டம், மாநாடுகளுக்காகச் செலவழித்து விட்டு மிக இளமையிலேயே இறந்து போனவர் சுகுணாவின் தந்தை. கேவலம் பாராமல் உழைப்பில் இழப்பம் நினைக்காமல் எதையும் துணிந்து செய்யும் தன்னம்பிக்கை அம்மாவுக்கு இருந்தது. அந்த நம்பிக்கை மட்டும் இல்லாமல் போயிருந்தால் இரட்டைப் பிச்சைக்காரிகளாய் எங்காவது கோவில் வாசலில் நின்று கொண்டு வயிறு வளர்க்க நேர்ந்திருக்கும். கழுத்து அமங்கலமாப் போன பின்னும் மனம் மங்கலமாக இருந்தது அம்மாவுக்கு. அம்மாவின் அந்த நல்ல மனத்தினால் தான் இவ்வளவும் நடந்தது; நடக்கிறது; இன்னும் நடக்கும்.
சுகுணா எஸ்.எஸ்.எல்.சி. படிக்கிறபோதே அவளுடைய படிப்பை நிறுத்தி விட முயன்றாள் அம்மா. அப்போதே சுகுணாவுக்கு நல்ல வளர்ச்சி. தங்கக் குத்துவிளக்கு மாதிரி வளர்ந்து நிற்கிற பெண்ணை மேலும் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிக் கொண்டிருப்பது நன்றாயிருக்குமா என்று தயங்கினாள் அம்மா. ஆனால் சுகுணா பள்ளிக்கூடத்தை விடுவதற்குச் சம்மதிக்கவே இல்லை. கல்யாணம் என்று வந்தால் பெண் படித்திருக்கிறாள் என்கிற ஒரே ஒரு தகுதியாவது இருக்கட்டுமே என்ற அந்தரங்க நினைப்பினால் தான் தயக்கத்தோடு தயக்கமாகப் பெண்ணை பி.ஏ. வரை படிக்க வைத்துவிட்டாள் அம்மா. இல்லாவிட்டால் முன்பே நின்று போயிருக்க வேண்டிய படிப்பு அது. ஒரு வழியாகப் படித்தாயிற்று. முதல் வகுப்பில் தேறிய பட்டமும் கிடைக்கப் போகிறது. நாளைக்குப் பட்டமளிப்பு விழா. இனிமேலாவது அம்மாவுக்கு விடிவு பிறக்க வேண்டும். ஏதாவது ஒரு வேலையைத் தேடி பிடித்துக் கொண்டு அப்பளக் குழவிகளின் பிடியிலிருந்து அம்மாவின் கைகளுக்கு விடுதலையளிக்க வேண்டும். சுகுணாவின் மனத்தில் இந்த முடிவு உறுதியாக ஏற்பட்டிருந்தது. வேலைக்குப் போகவிடுவதற்கு அம்மா தயங்கினாலும் விவரத்தை எடுத்துச் சொல்லிச் சம்மதிக்கச் செய்து விடலாமென நம்பிக் கொண்டிருந்தாள் அவள். ‘இனிமேல் அம்மாவை ஒரு வேலையும் செய்யவிடாமல் உட்கார வைத்துச் சாப்பாடு போடவேண்டும். வேலை கிடைத்தாலும் பத்து மணிக்குள் சமையல் வேலைகளை நானே முடித்து அம்மாவுக்குப் போட்டுவிட்டுப் புறப்பட்டுப் போக வேண்டும்’ - என்று நினைத்துக் கொண்டாள் சுகுணா. ‘நீ பிள்ளையாகப் பிறந்திருந்தால் எனக்கு எவ்வளவோ ஆறுதலாயிருக்கும்’ - என்று இனி நினைக்கவும் முடியாதபடி அம்மாவை உட்கார்த்தி வைத்து உபசரிக்க வேண்டும் என்று நினைத்துப் பார்க்கிற போதே சுகுணாவுக்குப் பெருமையாயிருந்தது. ரிஸல்ட் வந்தவுடனே பத்திரிகைகளில் பார்த்து இரண்டு மூன்று வேலைகளுக்கு விண்ணப்பமும் அனுப்பி வைத்திருந்தாள் அவள். வீட்டில் அம்மாவும் பெண்ணும் ஓய்வாகப் பேசிக் கொள்வதற்கு வாய்க்கிற நேரமே இரவு ஒன்பது மணிக்கு மேலேதான்.அதுவரை அம்மாவுக்கு ஏதாவது வேலைகள் இருக்கும். முடிந்த வேளைகளில் சுகுணாவும் அம்மாவுக்கு உதவியாக அப்பளமிட உட்கார்ந்து விடுவாள். “நீ உன் வேலையைப் பாரேன். இதற்கெல்லாம் வராதே” - என்று அம்மா பெண்ணைச் செல்லமாகக் கடிந்து கொள்வாள். சுகுணா அந்த வேலைகளை எல்லாம் செய்ய வருவது அம்மாவுக்குப் பிடிக்காது. சுவர்ண விக்கிரகம் போல் இருக்கிற தன் பெண்ணை அழுக்குப்படாமல் வளர்த்து அழகு பார்ப்பதில் அம்மாவுக்கு கொள்ளை ஆசை. சுகுணாவைப் போல் அழகும் படிப்பும் உள்ள பெண்ணுக்குத் தாயாக இருப்பதே பெருமைக்குரியதொரு பதவியாக அந்த அம்மாளுக்குத் தோன்றியது. மறுநாள் சுகுணா மிகவும் உற்சாகமாயிருந்தாள். பட்டமளிப்பு விழாப் பிரசங்கம் கருத்துச் செறிவோடு அற்புதமாயிருந்தது. இலக்கியத்தில் டாக்டர் பட்டம் பெற்ற பேரறிஞர் ஒருவர் விழாப் பிரசங்கத்தை நடத்தினார். அவர் சமூக சீர்திருத்தத் துறையிலும் நிறையப் பணிபுரிந்தவர். “இரயில்வே நிலையத்தில் காசை உள்ளே போட்டதும் பிளாட்பாரம் டிக்கெட்டை வெளியே தள்ளுகிற எந்திரம் போல உங்களில் பலர் இந்தப் பட்டப்படிப்பை நினைக்கலாம். ஆனால், நான் அப்படி நினைக்கவில்லை. மெய்யான படிப்பு உங்களுக்குள்ளே இருக்கும் அகக்கண்களை நன்றாகத் திறக்க வேண்டும். நீங்கள் பல பேருடைய அகக்கண்களை திறந்து உதவுவதற்கும் பயன்படவேண்டும்” - என்பது போல் விழாவில் சொற்பொழிவாளர் கூறிய பல கருத்துக்கள் சுகுணாவின் மனத்தைக் கவர்ந்தன. அவளுக்கு அப்படி ஓர் இலட்சியப் பித்து உண்டு. தான் செய்யப் போகிற வேலை பல பேருடைய அகக்கண்களைத் திறக்கும் பணியாக இருக்க வேண்டுமென்று வன்மையால் எல்லோருடைய மனத்தையும் மிக உயரத்துக்கு வளரச் செய்து விட்டார். குமாஸ்தா வேலையையும், செய்துகொண்டு குழுமியிருந்த மாணவர்களிடையே தம் பேச்சின் மூலம் ஒரு புரட்சியையே உண்டாக்கி விட்டுவிட்டார் அவர். சுகுணாவும் அவளுடைய தோழிகள் சிலரும் விழா முடிந்ததும் பட்டமளிப்பு விழாக் கோலமாகிய கருப்பு அங்கி, குல்லாயைக் களையாமல் அப்படியே போய்ப் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். சுகுணா வீடு திரும்பியதும் அம்மா அவளை உள்ளே நுழைய விடாமல் வாசலில் நிறுத்தித் திருஷ்டி சுற்றிக் கழித்தாள். பெண் மேல் கண்ணேறு பட்டு விடக் கூடாதே என்று அம்மாவுக்குக் கவலை. சாப்பாடுக்குப் பின் ஓய்வாக உட்கார்ந்து அம்மாவும் பெண்ணுமாகப் பேசிக் கொண்டிருந்த போது, “மேலே என்ன செய்வதாக உத்தேசம்?” - என்று யாரோ மூன்றாம் வீட்டுப் பெண்ணை மூன்றாம் வீட்டு அம்மாள் விசாரிப்பது போல் தன் பெண்ணையே விசாரித்தாள் சுகுணாவின் அம்மா. “நான் அமைதியும் அழகும் நிறைந்த ஏதாவதொரு கிராமத்துக்குப் போய்க் கிராம சேவகியாகப் பணிபுரியப் போகிறேன் அம்மா! பட்டினமும், பரபரப்பான ஆபீஸ் வேலைகளும் என் மனத்துக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. என்னுடைய படிப்பினால் சிலருடைய அகக்கண்களையாவது நான் திறந்து விட வேண்டுமென்று எனக்கு ஆசையாயிருக்கிறது” - என்று பெண்ணிடமிருந்து பதில் வந்த போது அம்மாவுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. சுகுணாவின் அப்பா இப்படித்தான் அடிக்கடி விளங்காதபடி ஏதாவது பேசுவார். “என்னடி அசடு மாதிரி உளறுகிறாய்? இத்தனை பெரிய பட்டினத்தில் இல்லாத வேலை கிராமத்திலா இருக்கப் போகிறது? உனக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா, என்ன?” “இப்படிப்பட்ட பைத்தியம் இந்தத் தேசத்துப் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறுகிறவர்களில் நூற்றுக்குப் பத்துப் பேர் வீதம் பிடித்திருந்தாலும் நமது தேசம் என்னைக்கோ பொன் விளையும் பூமியாயிருக்கும் அம்மா!” - என்று சுகுணா சொற்பொழிவு போல் பதில் கூறிய போது அம்மா திகைத்தாள். பெண்ணின் முகத்தைக் கூர்ந்து பார்த்தாள். அவளுக்குப் பயமாய் இருந்தது. |