29 தன்னுடைய வாழ்வின் முதிராப் பருவத்து இளமையில் தான் எப்போதோ கொண்டிருந்த ஒரு சார்பை வைத்து தன்னை நிரந்தரமாக இப்படித்தான் இருக்க வேண்டும், இருக்க முடியும் என்று முடிவு செய்துவிட்ட அந்த இளைஞனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது சுதர்சனனுக்கு. மாறுதலைப் பற்றியே அவனுக்குப் புரியாது போல இருந்தது. வளர்ச்சியும் - மாறுதலும் எவனுடைய வாழ்வில் தென் பட்டாலும் அதை ஒப்புக் கொள்ளவோ புரிந்து கொள்ளவோ முடியாதவனாகத் தோன்றினான் ஆறை அண்ணா தாசன். “இனவுணர்ச்சிங்கிறதை நீங்க எப்பிடிப் புரிஞ்சுக்கிட்டி ருக்கிங்கன்னு எனக்குத் தெரியாது தம்பீ! இப்பல்லாம் ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி அந்த வார்த்தையைப் புரிஞ்சுக்கிறாங்க! வேறே சிலபேருங்க ‘நம்ம இயக்கத்தைச் சேர்ந்த அத்தினிபேரும் அதை ஒரேவிதமாகத்தான் புரிஞ்சுக்க முடியும்’-னு நம்பறாங்க. திருக்குறளில் ஒரு குறள், பொருட்பால்லே, ‘அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால்’னு தொடங்குது. அதிலே ‘தங்கணத்தார்’னு ஒரு வார்த்தை வருது. அதுக்குத் ‘தன் இனம்’னு பொருள் கொண்டால் என்ன அர்த்தமோ அந்த அர்த்தம்தான் சரியான இனவுணர்ச்சிக்கு இலக்கணம்னு சொல்லுவேன் நான்.” இதைக் கேட்டு ஆறை அண்ணாதாசன் சந்தேகக் கண்களோடு சுதர்சனனை ஏறிட்டுப் பார்த்தான். தன் அநுமானத்திற்கு மேம்பட்டும் தன் கணிப்பிற்கு விலகியும் உள்ள மனிதர்களைப் பற்றி அவ்வப்போது இப்படிச் சந்தேகப்படுவதுதான் அவன் வழக்கம். மூன்று பேரும் மூன்று வேறு துருவங்களாக இருக்கும் நிலையில் ஒரே அறையில் சேர்ந்து வசிப்பது எப்படி என்று மலைத்தான் ஆறை அண்ணாதாசன். அதே சமயத்தில் சுதர்சனன் வேறு விதமாக நினைத்தான். மாறுபாடும் வேறுபாடும் உள்ளவர்களுக்கு நடுவே கலகலப்பாக உயிரோட்டத்தோடு வாழ முடியுமென்று சுதர்சனனுக்குத் தோன்றியது. அந்த மெடிகல் ரெப்ரஸண்டிடிவ்வின் படுக்கைக்கு மேல் சிறிதாக முருகர், விநாயகர், லட்சுமி, சரஸ்வதி படங்கள் மாட்டப்பட்டிருந்தன. அவற்றில் சூட்டப்பட்டிருந்த பூச்சரங்கள் வாடிச் சருகாகி இருந்தன. படங்களில் குங்குமமும் சந்தனமும் குழம்பிய பொட்டுக்கள் இடப்பட்டு ஊதுபத்தி சொருகிச் சொருகிக் கருகிய கரிக்கோடுகளும், புகை மங்கலும் படிந்திருந்தன. ஆறை அண்ணாதாசனின் படுக்கைக்கு மேலே அவன் யாருக்குத் தாசனோ அவர் படமும், அதேபோல் தலைவர்கள் வேறு சிலருடைய படமும் மாட்டப்பட்டு அவற்றிலும் சூட்டப்பட்டிருந்த பூச்சரங்கள் வாடியிருந்தன.
“என்ன? பார்க்கிறீர்கள்? உங்கள் கட்டிலுக்கு மேலே நீங்கள் விரும்பும் படத்தை மாட்டிக் கொள்ளலாம். அதற்கு இடம் இருக்கிறது.”
“அவசியமில்லை. தீப்பெட்டிப் படம் சேர்க்கும் குழந்தை வயசிலேருந்து மாறி வளர்ந்து நான் வெகு தூரம் நடந்து வந்து முதிர்ந்து விட்டேன். இனிமேல் நான் படங்கள் வாங்கிச் சுவரில் மாட்டி மாலை போட்டு மகிழறதுங்கிறது முடியாத காரியம்.” “அப்படியானால் நான் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறேன் என்கிறீர்களா? இதற்கு என்னதான் பொருள்?” “நான் யாரையும் எதுவும் சொல்லலே! என்னிடம் மாட்டுவதற்குப் படங்கள் எதுவும் இல்லைன்னுதான் சொன்னேன்.” ஆறை அண்ணாதாசன் மறுபடியும் சுதர்சனனைச் சந்தேகக் கண்களோடு தான் பார்த்தான். சுதர்சனனுக்கோ உள்ளூறச் சிரிப்பாயிருந்தது. பரம ஆஸ்தீகன் செய்யக்கூடிய அதே பூஜை புனஸ்காரம் வழிபாடுகளை வேறு விதமான முறையில் வேறுவிதமான படங்களுக்குச் செய்து வழிபட்டுக் கொண்டே தன்னை ஆஸ்திகனிலிருந்து வேறுபட்டவனாக நினைத்துக் கொள்ளும் இரண்டுங்கெட்டான் நாஸ்திகர்களை நினைத்தால் அவனுக்கு வேடிக்கையாயிருந்தது. முழுமையான ஆஸ்திகர்களுமில்லாமல் முழுமையான நாஸ்திகர்களும் இல்லாமல் தேசம் முழுவதுமே அரைகுறைகளாகவோ, இரண்டுங்கெட்டான்களாகவோ எல்லா வகையிலும், நிரம்பியிருப்பதாகவே நினைக்கத் தோன்றியது. அவன் செய்வது தப்பு என்று உரத்தக் குரலில் கூப்பாடு போட்டு விமர்சித்துக் கொண்டே தான் செய்யும் தப்புக்களைப் பற்றிய பிரக்ஞையே இல்லாமல் தப்புச் செய்து கொண்டிருக்கிறவர்கள்தான் தேசத்தில் அதிகமோ என்று கவலையாயிருந்தது அவனுக்கு. “காபி, சிற்றுண்டி அறைக்கு வாங்கிக் கொண்டு வந்து தர வேண்டுமானால் பையன்களுக்கு கமிஷன் அதாவது கழிவுத் தொகை கொடுக்க வேண்டும்” என்று வேறு ஒரு விவரத்தைத் தொடங்கினான் ஆறை அண்ணாதாசன். “சொல்லித்தான் தெரியணுமா இது? மெட்ராஸ் ஊரே மொத்தத்திலே ஒரு கமிஷன் மண்டி மாதிரின்னுதான் நான் புரிஞ்சுக்கிட்டிருக்கேன். கமிஷன் தராமே இங்கே யாருக்கும் எதுவும் நடக்காதுன்னு, எனக்கு நல்லாத் தெரியும் தம்பீ! பொதுவா எனக்கு ‘ரூம் செர்விஸே’ தேவைப்படாது. நானே கீழே இறங்கிப் போயி எல்லாம் பார்த்துக்குவேன். தன் கையே தனக்கு உதவிங்கிறதிலே எனக்கு ரொம்ப நம்பிக்கை உண்டு. “நீங்கள் பையன்களுக்குச் சில்லறை கொடுக்காவிட்டால் அவசர ஆத்திர நேரங்களில் கூட உங்களுக்கு உதவ முன் வரமாட்டார்கள். ஏனென்று கேட்காமல் கைவிட்டு விடுவார்கள்.” “பரவாயில்லை தம்பீ! நான் சமாளித்துக் கொள்வேன். எனக்கு எடுபிடி ஆள் யாரும் அவசியமில்லை.” “தெருக்கோடியில் முனியாண்டி உணவு விடுதி உள்ளது. -இப்பால் உடுப்பி உணவகமும் உண்டு. கடற்கரை செல்லும் வழியில் முரளி உணவகமும் இருக்கிறது. திருவல்லிக்கேணியில் உணவகங்களுக்கு ஒன்றும் குறை வில்லை...” “இங்கே எனக்கு எல்லா இடமும் நல்லாத் தெரியும். நானே பக்கத்திலே பெல்ஸ் ரோடிலேதான் இதுவரை இருந்தேன். ஊருக்குப் புதுசு இல்லே! என்னைப்பத்தி நீங்க அதிகம் கவலைப்பட வேண்டாம். திருவல்லிக்கேணி எனக்குப் பழகின எடம்தான்.” “அவ்வாறாயின் நன்று! நீங்களே யாவும் நன்கு அறி. வீர்கள்.” இப்படிப் புத்தகம் வாய் திறந்து பேசுவது போல் தொடர்ந்து உயிரோட்டமில்லாமல் அவனால் எவ்வாறு முனை முறியாமல் பேச முடிகிறதென்று சுதர்சனனுக்கு ஆச்சரியமாயிருந்தது. பிரிண்டிங் மிஷின் அச்சடிப்பதை மறந்து தானே திடீரென்று தன்மேல் சார்த்தப்பட்டிருப்பதை எல்லாம் அப்படியே வாய் திறந்து கக்கிவிட்டுப் பேசினால், எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அவன் பேச்சு. சிறிது நேரத்தில் ஆறை அண்ணாதாசன் அவனைத் தேடிவந்த யாரோ ஒர் இளைஞனுடன் புறப்பட்டு வெளியே போய் விட்டான். எதிர் அறையிலிருந்து பாகவதர் மாதிரித் தலையலங்காரத்துடன் ஒருவர் வந்து எட்டிப் பார்த்தார். “யாரு? என்ன வேணும்?” “ஒண்ணுமில்லே! நீங்க இந்த ரூமுக்குப் புதுசா வந்திருக்கீங்க போல்ருக்கு. என் பேர் மதன்குமார். தொழில் நாடகக்கலை. நாடகம், ஸ்டேஜ் டைரக்ஷன் இதிலே எல்லாம்தான் போது போகுது. சினிமா டைரக்டர் ஆகலாம்கிற ஆசையிலே மெட்ராஸ் வந்து பதினேழு வருஷம் ஆகுது. இன்னும் அந்த ஆசை ஈடேறலே... நாடகத்திலே தான் காலந்தள்ள வேண்டியிருக்கு...” “குடும்பம்...?” “நான் பேச்சலர்... குடும்பம்னு எதுவுமில்லே. அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, தங்கை எல்லாம் நாமக்கல்லே இருக்காங்க... அதான் சொந்த ஊர். நிலையான வருமானமில்லாத இந்தத் தொழிலை நம்பி நான் ஒருத்தி கழுத்திலே தாலி கட்ட முடியும்னு தோணலை. சாட்சாத் சரஸ்வதி கழுத்திலே கட்டிவிட்ட தாலிக்கே இத்தனை சிரமப்பட வேண்டியிருக்கே?” “யாரு? சரஸ்வதியா?...நீங்களா?” இதைக் கேட்டு மதன் குமாரே சிரித்துவிட்டான். “சாருக்கு என்ன பிஸினஸோ?” “இப்போதைக்கு வேற வேலை தேடறதுதான் பிஸினஸ், முன்னாடி இருந்தது. தமிழ் வாத்தியார் வேலை. அப்புறம் இங்கேதான் ஒரு டூட்டோரியல் காலேஜிலே தமிழ் சொல்லிக் குடுத்துக்கிட்டிருந்தேன். அதை நடத்திக்கிட்டிருக்கிறவருக்கும் எனக்கும் ஒத்து வரலே. வெளியேறிட்டேன்.” “அப்டீன்னா நம்ப மதன் ஆர்ட்ஸ் அகாடெமிக்கு ஒரு நல்ல ஹிஸ்டாரிகல் டிராமா எழுதுங்களேன். உடனே அரங்கேற்றி ஜமாய்ச்சுடலாம்...” “உங்க ஊரு நாமக்கல்ங்கிறீங்க...பேரைப் பார்த்தா யாரோ யூ.பி. - பஞ்சாப்காரன் பேரு மாதிரியில்லே இருக்கு...” “அதனாலே என்ன? இந்தக் கலை உலகம் இருக்கே இதுக்குக் ‘குமார்’னு முடியிற மாதிரிப் பேரு ரொம்ப ராசின்னு சொல்லுவாங்க. “அப்படிப் பேர் வச்சுக்கிட்டும் கூட உங்களுக்கு ஒண்ணுமே ராசியா ஆகலேன்னு தோணுதே?” “நானே இந்தப் பேரை வச்சுக்கிட்டு இப்போ மூணு மாசம்தானே ஆகுது?” “அதுக்கு முன்னாடி?” “‘கூற்றுவன்’னு வச்சுகிட்டிருந்தேன். ஒரு பத்திரிகைக்காரன் என் நாடகத்துக்கு விமர்சனம் எழுதறப்ப, டைரக்டர் பேர் கூற்றுவன் என்று இருப்பதாலோ என்னவோ நாடகத்திலே எல்லாமே கூண்டோடு மாண்டுபோய் விட்டது. துணிந்து நாடகமே செத்துப் போய்விட்டது என்று தான் கூறவேண்டும். கொல்வதுதானே கூற்றுவனின் தொழில்’னு எழுதிட்டான். அதுக்குப் பின்னாடி தான் ‘மதன் குமார்’னு மாத்தி வெச்சுக் கிட்டேன்.” சுதர்சனன் சிரித்து ஓயச் சில விநாடிகள் பிடித்தன. மதன் குமாரும் சேர்ந்து சிரித்தான். அந்த அழகு லாட்ஜ் முழுவதுமே ஒரு சிறிய உலகமாக இருக்கும் போலிருந்தது. விதம் விதமான மனிதர்கள், விதம் விதமான வாழ்க்கை லட்சியங்கள், விதம் விதமான போக்குகள், எல்லாம் அதற்குள்ளேயே இருந்தன. சினிமா டைரக்டராகும் - லட்சியத்தில் பாதி வழிவரை ஓடி வந்து மேலே ஓட வழியின்றி நாடக டைரக்டராகவே இருக்கும் மதன் குமார், படங்களை மாட்டி சிரத்தையாக பூஜை செய்யும் மெடிகல் ரெப்ரஸெண்டிடிவ், தனித் தமிழிலேயே பேசிச் சிரமப்படும் ஆறை அண்ணாதாசன், இன்னும் பல என்.ஜி.ஒக்கள், கம்பெனி கிளார்க்குகள், ஆசிரியர்கள் எல்லாரும் அந்த லாட்ஜின் அறைகள் என்ற சின்னஞ்சிறு கூண்டுகளில் இருப்பதாகப் பட்டது. புறாக் கூண்டிலாவது ஒரு கூண்டுக்குள் ஒரே ஒரு புறா இருக்கிற சுதந்திரமும், சுகமும், எப்போதாவது கிடைத்து விடலாம். ஆனால் இந்தத் திருவல்லிக்கேணி லாட்ஜுகள் என்ற சிமெண்டுப் புறாக் கூண்டிகளில் ஒரே அறையில் எத்தனை பேர் அடைந்து கிடக்க வேண்டியிருக்கிறது? கலியாணமாகிக் குடும்பம் மனைவி என்று வந்தால்தான் இந்தப் புறாக் கூண்டிலிருந்து விடுதலையாகிக் கொஞ்சம் பெரிய புறாக் கூண்டுக்குப் போகமுடியும். ஒண்டுக் குடித்தன வாசமும் ஒரு புறாக்கூண்டு தானே? வெகு சிலர் இந்த முதற் புறாக் கூண்டிலேயே வாழ்க்கையை முடித்துக் கொண்டு விடுகிற அளவு இங்கேயே விரக்தியடைந்து விடுவதும் தேங்கி விடுவதும் உண்டென்று நிதரிசனமாகத் தெரிந்தது. எதிலும் நிலைக்கமுடியாமல் யாரோடும் ஒட்டிக் கொள்ள முடியாமல் தானே விரக்தியடைந்து விட்டோமோ என்று கூட அவனுக்கு ஒரு கணம் தோன்றியது. எதிர்நீச்சல் போடுகிறவனுக்கு வாழ்க்கை ஒரு போதும் அலுப்பதில்லை. ஆற்றோடு போகிறவனுக்குத் தான் சொந்தக் கை கால்களை அசைக்கவும் அவசியமில்லாமல் நீர்ப் போக்கின் சக்தியே இழுத்துச் சென்று விடுகிறது. எதிர்நீச்சல்காரன் அப்படி இல்லை. ஒவ்வொரு விநாடியும் எதிர்த்து ஊடறுத்துக் கவனமாக முன்னேற வேண்டிய அவசியம் அவனுக்கு உண்டு. ஒரு சில வேளைகளில் யார் எதிர்நீச்சலிடுகிறானோ அவனுக்கே தான் செய்வது சரியானதுதானா என்று தோன்றலாம். ஆனால் அடுத்த கணமே அந்த அலுப்பு மறைந்துவிடும். பள்ளிக்கூட வேலையை விட்டு விட்டுச் சென்னைக்குப் புறப்பட்டு வந்தது, ரகுவின் தனிப் பயிற்சிக் கல்லூரியில் வேலைக்கு அண்டியது, அதிலும் ஒட்டாமல் வெளியேறியது எல்லாம் எதிர்நீச்சலாகவே தோன்றின. “என்ன சார்? பேசிக்கிட்டிருக்கறப்பவே கபால்னு நீங்களா உங்களுக்குள்ளாரவே சிந்தனையிலே மூழ்கிட்டீங்க...” மதன்குமார் கேட்டான். “ஒண்ணுமில்லே! நாடகம் எழுதணும்னீங்களே! அதைப் பத்தித்தான் யோசிச்சேன். உங்களுக்கு நாடகம் எழுதறதுக்கு என்னையும் விடப் பொருத்தமான ஆள் இங்கேயே இருக்காருங்கறதை நீங்க மறந்துட்டாப்பல இருக்கே?...” “யாரு அது? எனக்கொண்னும் புரியலியே நீங்க சொல்றது?” “இங்கே என் ரூம்லியே ஆறை அண்ணாதாசன்னு ஒரு யூனிவர்ஸிடி ரிஸர்ச் ஸ்டூடண்ட் இருக்காரு. அவரு சாதாரணமாப் பேசறப்பவே ஹிஸ்டாரிகல் டிராமாவிலே ஒரு கேரக்டர் டயலாக் பேசற மாதிரியே பேசறாரு. அவரு சாதாரணமாப் பேசறதெல்லாம். ஆயிரம் ரெண்டாயிரம் வருஷத்துக்கு முந்தின மனுசன் பேசற டயலாக் மாதிரி யிருக்குன்னாப் பார்த்துக்குங்களேன். அத்தினி சுத்தம். சும்மா தமிழ் கொஞ்சுது போங்க...” “ஐயையோ வேண்டாம் சார்! அது மாதிரி நாடகத்தைப் பார்க்கறத்துக்கு இந்தக் காலத்து ஜனம் ஒண்ணு கூட வராது. பயந்து ஓடிப்பூடும். டிக்கட் வாங்கிக்கிட்டு வந்து நாடகம் பார்க்கவும் ரெண்டாயிரம் மூவாயிரம் வருசத்துக்கு முந்தின ஜனங்களைத்தான் தேடிப் போய்க் கூட்டியாறனும்.” சுதர்சனனுக்கு இதைக் கேட்டுச் சிரிப்பு அடக்க முடியாமல் பொங்கிக் கொண்டு வந்து விட்டது. பொய்ம் முகங்கள் : நூல் முகம்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
|