50
ஒவ்வொரு பெண்ணின் அநுதாபமும் வேறெதையும் செய்ய முடியாத வரை வெறும் அழுகையில் போய்த்தான் நிறைய முடியும். டிரைவர் முத்தையா கூறிய செய்தியைக் கேட்டுப் பாரதி அப்படியே அதிர்ந்து போனாள். ஜமீந்தார் மாமாவை அவ்வளவு கெட்டவராக அவள் இதுவரை கற்பனை செய்தும் பார்த்ததில்லை. குளிக்காமல், சாப்பிடாமல் நாட்கணக்கில் சீட்டாட்டத்தில் உட்காருவார். குதிரைப் பந்தய சீஸனில் எந்தெந்த ஊரில் எல்லாம் பந்தயம் நடக்கிறதோ அங்கெல்லாம் போவார். கொஞ்சம் குடிப்பழக்கமும் உண்டு. ஆனால் நியாயத்தையும் நேர்மையையுமே உறிஞ்சிக் குடித்து விடுகிற அளவுக்கு அவர் மிகப் பெரிய குடிகாரர் என்பதை இன்று டிரைவர் முத்தையா தெரிவித்த இந்தப் புதிய செய்தியால் அவள் திட்டமாகப் புரிந்து உணர்ந்து கொண்டு விட்டாள். முந்திய தினம் இரவில் இதே காரில் டிரைவர் முத்தையாவையும் உடன் வைத்துக் கொண்டு கல்லூரி முதல்வரும் மஞ்சள்பட்டி ஜமீந்தாரும் காரில் போகும் போதே ஹாஸ்டல் கூரை ஷெட்டில் நெருப்பு வைத்துவிட ஏற்பாடு செய்துவிட்டு அந்தப் பழியைச் சத்தியமூர்த்தியின் தலையில் சுமத்திக் கல்லூரியிலிருந்து அவனை வெளியேற்றிவிடுவது என்று சதித்திட்டம் வகுத்துப் பேசிக் கொண்டு போனார்களாம். அந்தச் சதிப் பேச்சைத் தன் இரண்டு காதுகளாலும் கேட்டுக் கொண்டே காரைச் செலுத்திச் சென்றதாகப் பயந்து கொண்டே இப்போது அவளிடம் தெரிவித்து விட்டான் டிரைவர் முத்தையா. "சத்தியமூர்த்தியை டிஸ்மிஸ் செய்து இந்தக் கல்லூரியிலிருந்து வெளியே அனுப்புவதற்குச் சரியான காரணம் வேண்டும் என்பதற்காகக் காலேஜ் பிரின்ஸிபலும் நிர்வாகியும் ஹாஸ்டலிலிருந்த பழைய கூரை ஷெட்டுக்குத் தாங்களே நெருப்பு மூட்டி விட்டு அவர் மேல் பழியைச் சுமத்தியிருப்பதாகத் தான் மாணவர்கள் எல்லாரும் பேசிக் கொள்கிறார்கள்" என்று சிறிது நேரத்துக்கு முன் மகேசுவரி தங்கரத்தினம் கூறியபோது 'அப்படியுமா செய்வார்கள்?' என்று அதை நம்பத் தயங்கிய பாரதி இப்போது நம்பியே ஆக வேண்டியிருந்தது. டிரைவர் முத்தையா பொய் சொல்ல மாட்டான். நீண்ட காலமாகப் பூபதியின் குடும்பத்தில் ஒருவனாகக் கலந்து பழகிவிட்ட நம்பிக்கை வாய்ந்த தொழிலாளி அவன். அவனுடைய வார்த்தைகளையும் மகேசுவரி தங்கரத்தினம் கூறியவற்றையும் இணைத்துச் சிந்தித்து அப்படியே நம்பினாள் அவள். சத்தியமூர்த்தி அவளிடமிருந்து விலகியிருந்த காலத்திலும் அவளுடைய இதயத்தின் அந்தரங்கம் அவனைத் தன்னிடமிருந்து விலக்கி விடவில்லை. 'என்னுடைய கண் பார்வைக்கு எட்டிய மட்டும் ஆகாயத்தில் ஒரே ஒரு பிரகாசமான நட்சத்திரம் தான் தெரிகிறது. அந்த நட்சத்திரத்தையும் நீ மறைக்க முயலாதே மேகமே! அப்படியே நீ மறைத்தாலும் மறுபடி அந்த ஒளிமயமான என் இலட்சிய நட்சத்திரம் தெரிகிற வரை நான் அதைப் பார்க்கத் தவித்துக் கொண்டேயிருப்பேன் என்பதை நீ மறந்துவிடாதே' என்று பொருள்பட நவநீதக் கவியின் உருக்கமான பாடல் ஒன்று உண்டு. சத்தியமூர்த்தி தன்னை விட்டு விலகிச் செல்ல முயன்ற காலத்திலும் இந்தப் பாட்டை நினைவு கூர்ந்து பாரதி நெகிழ்ந்து உள்ளுருகித் தவித்திருக்கிறாள். வெளிப்படையாக எலலப் பெண்களையும் போல் ஆற்றாமை, கோபம், போலி விரோதம் எல்லாவற்றையும் அவன் மேல் கொண்டு விட்டாற் போல அவளும் அவனிடம் நடித்திருக்கலாம். ஆனால் அவளுடைய அந்தரங்கம் மௌனமாக அவனுக்காகத் தவித்திருக்கிறது. அவளுடைய அந்தரங்கத்தில் அவன் ஒரு தவப்பயனாக நிறைந்திருந்திருக்கிறான். யாருடைய அழகான பாதங்கள் அவள் இதயத்தில் நிறைந்திருந்தனவோ அவருடைய அதே பாதங்கள் இன்று மல்லிகைப் பந்தலின் தெருக்களில் வருந்த வருந்த நடந்து வந்து போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்த காட்சியை அவளும் தன் கண்களாலேயே காண நேர்ந்துவிட்டது. அவளுக்குத் தெரிய வந்த நிகழ்ச்சிகளை யெல்லாம் ஒன்று சேர்த்து நினைத்த போது அவள் மனம் எரிமலையாகக் குமுறியது.
டிரைவர் முத்தையாவைப் போன்ற நாணயமான மனிதனே தன்னிடம் எடுத்த எடுப்பில் நடந்த உண்மையை அப்படியே சொல்லத் தயங்கிப் பட்டும் படாமலும் வேறு விதமாகச் சொல்லியதை நினைத்த போது கெட்டவர்களைத் தவிர அவர்களுக்குப் பயப்படுகிறவர்களும் இருந்தாக வேண்டிய அவசியத்தைக் கடைப்பிடிக்கிற உலக நியதியை அவள் புரிந்து கொள்ள முடிந்தது. போலீஸ் நிலையத்தின் அருகே சத்தியமூர்த்தி அழைத்துக் கொண்டு போகப்படுவதைப் பார்த்து தான் காரை நிறுத்தச் சொல்லிவிட்டு பரபரப்பாக கீழே இறங்கி கண்ட போது "இவரு ஏதோ பையன்களைத் தூண்டி விட்டுக் காலேஜ் ஹாஸ்டலுக்கு நெருப்பு வச்சிட்டாராம். அதனாலே... ஜமீந்தார்... போலீஸிலே சொல்லி ஆளை உள்ளார வைக்கிறதுக்கு ஏற்பாடு பண்ணியிருக்காரு" என்று மட்டும் சொல்லித் தனக்கு ஒன்றும் தெரியாதது போல் இருந்து விட்ட அதே டிரைவர் முத்தையா தான் அப்புறம் மனம் பொறுக்காமல் தனக்குத் தெரிந்த உண்மையைச் சொல்ல இப்போ இப்படி முன் வந்திருக்கிறான் என்பதையும் அவள் சிந்திக்கத் தவறவில்லை. அவளோடு உடன் வந்திருந்த மகேசுவரி தங்கரத்தினம் - சத்தியமூர்த்திக்கு அநீதி இழைக்கப்பட்டதன் காரணமாக மாணவ, மாணவிகளின் மனங்கள் குமுறிக் கொண்டிருப்பதைப் பற்றியும் கூறினாள். வேலை நிறுத்தத்தினால் அநியாயமாகக் கல்லூரிப் பாடங்களும் வகுப்புக்களும் வீணாவதைப் பற்றி வருத்தப்பட்டுக் கொண்டாள்.
"காரில் என்னை அங்கு அழைத்துக் கொண்டு வரும் போது நீயும் தான் பார்த்தாயே? மாணவர்கள் நூற்றுக்கணக்காகப் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் வருத்தம் தோய்ந்த முகங்களோடு வந்து கூடி நிற்கிற பரிதாபத்தை என்னவென்று சொல்வது? இத்தனை பேருடைய பிரியத்தையும் அநுதாபத்தையும் சம்பாதிக்க முடிந்த ஓர் ஆசிரியர் எப்படிக் கெட்டவராக இருக்க முடியும்டீ பாரதி?" "அவர் கெட்டவராயிருக்க வேண்டுமென்று கூட நாமாக ஏன் நினைக்க வேண்டும். அவருக்கு வேண்டாதவர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து அவரைக் கெட்டவராக நிரூபித்து விட முயல்கிறார்கள் என்று மட்டும் இதனால் புரிந்து கொள். வேண்டியவர்களுடைய குற்றங்களை மறைத்துவிட்டு ஒரேயடியாக மேடையில் புகழ்வதும் - வேண்டாதவர்களுடைய குணங்களை மறைத்துவிட்டு ஒரேயடியாகத் தூற்றுவதும் அரசியலில் தான் உண்டு. மெல்ல மெல்லச் சமூக வாழ்விலும் அந்தச் சந்தர்ப்ப நியாயம் வந்து சூழ்ந்து கொண்டு விடும் போலிருக்கிறது." இதைக் கூறிவிட்டுப் பாரதி மேலே ஒன்றும் பேசத் தோன்றாமல் பெருமூச்சு விட்டாள். அவளுக்கு ஆறுதலாக மகேசுவரி தங்கரத்தினம் இன்னும் சிறிது நேரம் அங்கே உடனிருந்து பேசிக் கொண்டிருந்து விட்டுக் கல்லூரி விடுதிக்குத் திரும்பிச் சென்றாள். அவளும் போன பின் பாரதிக்கு அங்கு இருப்புக் கொள்ளவே பிடிக்கவில்லை. ஜமீந்தாரும் - அவருடன் கண்ணாயிரம் என்ற கொடியவனும் அந்த வீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டு என்னென்னவோ சூழ்ச்சிகளைப் புரிவதாகத் தோன்றியது அவளுக்கு. மகேசுவரி தங்கரத்தினத்தைக் காரில் கல்லூரி விடுதிக்குக் கொண்டு போய் விட்டுத் திரும்பிய டிரைவர் வீட்டு ஹாலில் தனியாக உட்கார்ந்து கண் கலங்கி அழுது கொண்டிருந்த அவளிடம் ஆறுதலாக ஒரு செய்தி சொன்னான். "பாரதி அம்மா! உங்களுக்கு ஒரு நல்ல சேதி. அவரை யாரோ சிநேகிதங்க ஜாமீன் கொடுத்துப் போலீஸ் ஸ்டேஷன்லேருந்து வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போயிட்டாங்க... பிரியம்னா படிக்கிற பையன்களுக்கு இப்படியும் ஒரு பிரியம் இருக்குமான்னு எனக்கு ஆச்சரியமாயிருக்குது அம்மா! அவரு போலீஸ் ஸ்டேஷன் வாசற்படியிலேயிருந்து கீழே இறங்கினாரோ இல்லையோ, அப்படியே அலை அலையாய்ப் பையன்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு ஊர்வலம் போலக் கூடப் போறாங்க... அவர் பேரைச் சொல்லி 'வாழ்க' என்கிற குரல்களும், 'நீதி வேண்டும்' என்கிற குரல்களுமாக வானத்தையே பிளந்திடும் போலிருக்கு. ஜமீந்தார் ஐயா பேரிலேயும் பிரின்ஸிபல் ஐயா பேரிலேயும் பையன்களுக்கு ஒரே வெறுப்பா மூண்டிருக்கு" என்று டிரைவர் முத்தையா திரும்பி வந்து ஏதோ இரகசியத்தைச் சொல்வது போல் அவளிடம் சொல்லியபோது, அப்போது அதைச் சொன்னால்தான் அவளுக்கு ஆறுதலாயிருக்கும் என்று அவன் தனக்குத் தானே புரிந்து கொண்டிருப்பது போல் தெரிந்தது. தளர்ந்து நலிந்த குரலில் பாரதி முத்தையாவைக் கேட்கலானாள்: "முத்தையா! காரில் இருந்தபடியே அவரைப் பார்த்தாயா? அல்லது நீ பக்கத்தில் போய் அவரைப் பார்த்தாயா?" "பக்கத்தில் நெருங்க முடியுமா அம்மா? எவ்வளவு பெரிய கூட்டம்?" "அதற்கில்லை. இப்படியெல்லாம் பொய்யாகப் பழி சுமத்தி அவரை மனம் தளரச் செய்திருக்கிறார்கள் பாவிகள். அதனால் மிகவும் வாடிச் சோர்ந்து போயிருக்கிறாரோ என்று தெரிந்து கொள்வதற்காகத்தான் உன்னைக் கேட்டேன்..." "அவருக்கு என்னம்மா சோர்வு? நியாயம் அவர் பக்கத்திலே இருக்குது. ராஜாவாக நடந்து போகிறாரு..." டிரைவர் முத்தையா இயல்பாக இப்படிக் கூறினானா அல்லது தன் மனத்தைப் புரிந்து கொண்டு, இப்படிக் கூறினால் தான் தனக்குத் திருப்தியாயிருக்குமென்று கூறினானா என்பதைப் பாரதியால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. பத்தரை மணிக்கு ஜமீந்தாரும், கண்ணாயிரமும் உணவு மேஜைக்கு வந்தார்கள். அவர்களைப் பார்க்கப் பிடிக்காமல் - அவர்களோடு பேசவும் - சேர்ந்து சாப்பிட உட்காரவும் கூடப் பிடிக்காமல் பாரதி தோட்டத்துப் பக்கம் எழுந்து போயிருந்தாள். ஆனால் ஜமீந்தாரோ அவளைத் தேடிக் கொண்டு தோட்டத்துக்கே வந்து விட்டார். அவருடைய முகத்தைப் பார்க்க வெறுப்பாகவும் அருவருப்பாகவும் இருந்தது அவளுக்கு. வெளிப்படையாக எதையும் சொல்லவும் முடியாமல் யார் மேலும் அநுதாபத்தைக் காண்பித்துக் கொள்ளவும் முடியாமல் இரண்டுங் கெட்டான் நிலையில் தவித்தாள் அவள். ஜமீந்தாரோ அவள் மேல் அன்பையும் பாசத்தையும் அள்ளிப் பொழிவதாகப் பொய்யாய் நடித்துக் குழைந்தார். "வர வர நீ சரியாகச் சாப்பிடுகிறதில்லேன்னு சமையக்காரங்க ஒரேயடியாப் புகார் செய்யிறாங்க. இப்படி இளைச்சா உடம்பு என்னத்துக்கு ஆகும்? 'டாண்'ணு பத்தரை மணியடிச்சா சாப்பாட்டு மேஜைக்கு வந்துடணும். நீ காலேஜ் போகத் தொடங்கினப்புறம் ஒன்பதரை மணிக்குச் சாப்பாட்டை வைச்சுக்கலாம்..." ஜமீந்தாருடைய இந்தப் பரிவான விசாரணைக்குப் பதில் ஒன்றுமே சொல்லாமல் உதட்டை அழுத்திக் கடித்துக் கொண்டே அவருக்குப் பின்னால் வெறுப்போடு நடந்த பாரதி சிறிது நேரம் கழித்து, "காலேஜிலே ஏதோ ஸ்டிரைக்காமே? ஊரெல்லாம் ஒரே புரளியாயிருக்கிறதே...?" என்று தைரியமாக அவருடைய மனத்தின் உள்ளெண்ணத்தை அறியும் நோக்குடன் பேச்சை ஆரம்பித்தாள். இந்தப் பேச்சை அவள் ஆரம்பித்த போது இருவரும் உணவு மேஜைக்கு எதிரே போய்ச் சாப்பிட உட்கார்ந்திருந்தார்கள். கண்ணாயிரமும் பேந்தப் பேந்த விழித்துக் கொண்டு வந்து சாப்பிட உட்கார்ந்திருந்தார். அவள் இப்படிக் கேட்டதும் - அந்தப் பேச்சை மேலே வளர்க்க விரும்பாமல் அப்படியே அசுவாரஸ்யமாக விட்டுவிட்டாற் போன்ற ஒருவகை மௌனம் ஜமீந்தார் பக்கம் நிலவியது. சமையற்காரர் பரிமாறத் தொடங்கியிருந்தார். சாப்பாட்டைத் தொடங்குமுன் திடீரென்று அப்போதுதான் நினைத்துக் கொண்டவர் போல், "கண்ணாயிரம் மதுரைக்கு ஒரு 'அர்ஜெண்ட்' கால் புக் பண்ணு. கணக்குப் பிள்ளை பேரைச் சொல்லி நம்ம பங்களா நம்பருக்குக் கூப்பிடு..." என்றார் ஜமீந்தார். கண்ணாயிரம் உடனே எழுந்து போய் அதே 'டைனிங் ஹாலில்' ஒரு மூலையிலிருந்த டெலிபோனில் மதுரைக்கு 'டிரங்கால்' புக் பண்ணி விட்டு வந்தார். அப்போது பாரதி தன்னைக் கேட்ட கேள்வியை மறந்தாற் போல விட்டுவிட்டு "தலையிலே இடி விழுந்த மாதிரிப் பெரிய துக்கம் நடந்து போச்சு. அப்பா போனதைத்தான் சொல்றேம்மா! உன் மனசுக்கும் இனிமே ஒரு ஆறுதல் வேணும்! இன்னிக்கோ நாளைக்கோ நம்ம கணக்குப் பிள்ளை மோகினியை மதுரையிலேருந்து காரிலே இங்கே அளச்சிட்டு வந்திடுவாரு. நீ அவகிட்ட பரத நாட்டியம் கத்துக்க. உன் மனசுக்கும் ஒரு மாறுதல் வேணுமில்லே? அந்தப் பொண்ணுக்கு வீணை கூட நல்லாத் தெரியும். நீ அதையும் அவகிட்டவே படிச்சிக்கலாம்?" என்று சம்பந்தமில்லாமல் வேறு ஏதோ பேசத் தொடங்கினார் ஜமீந்தார். பாரதிக்கு இதைக் கேட்டு உள்ளூரக் கோபம் வந்தாலும் அதை அடக்கிக் கொண்டு அவள் மௌனமாயிருந்தாள். சாப்பாடு முடிவதற்குள்ளே 'டிரங்கால்' கிடைத்து ஜமீந்தார் பேசி முடித்து விட்டார். மறுநாள் மாலை மோகினியும் கணக்குப் பிள்ளையும் காரில் வருவார்கள் என்றும் பேசிவிட்டு வந்து தெரிவித்தார். "ஒரு வாரம் வரை மோகினி இந்தப் பங்களாவிலேயே உன்னோடு தங்கியிருக்கட்டும்! அப்புறம் பக்கத்து அவென்யூவிலுள்ள மஞ்சள்பட்டி ஜமீன் அரண்மனையிலே அவள் நிரந்தரமாகத் தங்க ஏற்பாடு செய்துக்கலாம். நான் கூட இனிமே அங்கேயே நம்ம அரண்மனையிலே குடியேறிவிட நினைத்திருக்கிறேன்" என்றார். சாப்பிட்டு முடித்த பின் ஹாலில் மூவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென்று எதிர்பாராத விதமாகப் பிரின்ஸிபல் வந்து சேர்ந்தார். அவர் முகம் பேயறை பட்டாற் போல் வெளிறிப் போய் இருந்தது. கண்ணாயிரமும் ஜமீந்தாரும் பிரின்ஸிபலை அழைத்துக் கொண்டு முன் பக்கத்து அறைக்குப் போனார்கள். பாரதிக்கு அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று அறிய ஆசையாயிருந்தது. ஆனால் அதை அவள் அறிந்து கொள்ள முடியாமல் அவர்கள் முன் பக்கத்து அறையையும் கடந்து வெளியே தோட்டத்து மரத்தடியில் போய்ப் பேசிக் கொண்டு நின்றார்கள். பதினைந்து நிமிடங்களுக்குப் பின் ஜமீந்தார் மட்டும் உள்ளே திரும்பி வந்தார். கண்ணாயிரமும், பிரின்ஸிபலும் காரில் அவசரமாக எங்கோ வெளியே கிளம்பிச் சென்றார்கள். ஏதோ சதித் திட்டத்துக்கு ஆலோசனை செய்கிறவர் போல் ஜமீந்தார் ஹாலில் குறுக்கும் நெடுக்குமாக உலாவிக் கொண்டிருந்த போது, "காலேஜில் ஸ்டிரைக் ஆரம்பித்து ஒரு வாரத்துக்கு மேல் ஆகும் போலிருக்கிறதே?" என்று இரண்டாவது தடவையாக அவரிடம் அந்தப் பேச்சைத் தொடங்கிப் பார்த்தாள் பாரதி. "அதைப் பற்றி உனக்கென்ன வந்ததும்மா! அதெல்லாம் நிர்வாக விஷயம். நீ ஒண்ணும் தலையிடாதே..." என்று அவள் அதைப் பற்றிப் பொதுவாகத் தன்னிடம் விசாரிப்பதையே விரும்பாதவர் போல் பேச்சை வெட்டினார் ஜமீந்தார். அப்பொழுது அவருடைய கண்கள் சிவந்து கொடிய பார்வையோடு இருந்தன. முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கிறார் போல கடுங்கோபம் துள்ளிக் கொண்டிருந்தது. "காலேஜ் ஆரம்பித்த நாளிலிருந்து இதுவரை ஒரு ஸ்டிரைக் கூட வந்ததில்லை. அப்பா நயமாகவும், பயமாகவும் எல்லாவற்றையும் சமாளித்து விடுவார்... இப்பத்தான் எல்லாப் போதாத காலமும் ஆரம்பமாயிருக்கு. வீணாகக் காலேஜுக்கும் கெட்ட பேர்..." என்று அவள் மேலும் எதையோ சாதாரணமாகப் பேசத் தொடங்கிய போது "வாயை மூடு! உனக்கு வேறே வேலை இல்லே? நீ முதல்லே உள்ளாரப் போ... சொல்றேன். ஸ்டிரைக்... மண்ணாங்கட்டி எல்லா யழவும் தான் வரும்... அதைக் கவனிச்சுக்கத் தான் நானும் பிரின்ஸிபாலும் இருக்கோமே? உனக்கென்னா வந்திருச்சுங்கறேன்?" என்று சொல்லிச் சீறத் தொடங்கிவிட்டார் ஜமீந்தார். யாரையோ உடனே கொலை செய்து விடவேண்டும் போன்ற அவ்வளவு கோபம் அப்போது அவருடைய முகத்தில் மிகவும் குரூரமாகத் துடித்துக் கொண்டிருந்தது. பாரதி மேலும் ஒன்றும் பேசாமல் உள்ளே போய்விட்டாள். ஒவ்வொரு பெண்ணின் அநுதாபமும் வேறெதையும் செய்ய முடியாதவரை வெறும் அழுகையில் போய்த்தான் நிறைய முடியும். அதையேதான் அப்போது அவளும் செய்தாள். பொன் விலங்கு : ஆசிரியர் முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
|