57
பார்க்கப் போனால் இன்னொருவருடைய துயரத்தை மறுபுறமாகக் கொள்ளாத அசல் மகிழ்ச்சியே இந்த உலகத்தில் இருக்க முடியாது போலும். தனக்குள்ளே பொங்கிக் கொண்டிருக்கிற துயரத்தையும் ஏமாற்றத்தையும் மோகினி தெரிந்து கொண்டு விட முடியாமல் மிகவும் சாமர்த்தியமாக நடித்துவிட்டாள் பாரதி. இன்னொருவருக்கு முன்னால் எதையும் நடித்து ஏமாற்றி விட முடிகிறது. ஆனால் அதே காரியத்தைத் தன்னுடைய மனச்சாட்சிக்கு முன்னால் தானே நடிக்கவும் முடிவதில்லை; ஏமாற்றவும் முடிவதில்லை. சில வேதனை நிறைந்த வேளைகளில் தன்னை ஏமாற்றிக் கொள்ளவும் முடிந்தால் கூட நன்றாயிருக்கும் போல் தோன்றியது பாரதிக்கு. தன்னுடைய மகிழ்ச்சியின் மறுபுறமே பாரதியின் மௌனத்துக்கும் கலக்கத்துக்கும் காரணம் என்பதை மோகினியாலும் அப்போது புரிந்து கொள்ள முடியவில்லை. பார்க்கப் போனால் இன்னொருவருடைய துயரத்தை மறுபுறமாகக் கொள்ளாத அசல் மகிழ்ச்சியே இந்த உலகத்தில் இருக்க முடியாது போலும். கல்லூரி நிர்வாகியும் முதல்வரும் சத்தியமூர்த்திக்கு எதிராகச் செய்த சூழ்ச்சிகளும், கெடுதல்களும் தோற்று, நியாயமும் வெற்றியும் அவர் பக்கமே கிடைத்துவிட்ட முதல் தினத்தைக் கொண்டாடி மகிழும் எண்ணத்துடன் தான் பாரதி அன்றிலிருந்து கல்லூரி வகுப்புகளுக்குப் போகத் தொடங்குவதென்று தீர்மானித்திருந்தாள். அந்தத் தீர்மானத்தில் என்னவோ இப்போது கூட மாறுதல் இல்லை. ஆனால் அந்தத் தீர்மானத்துக்குக் காரணமாயிருந்த உற்சாகம் மட்டும் தளர்ந்து நலிந்து குன்றிப் போயிருந்தது. தான் கொடுத்தனுப்பிய கடிதத்தை அவள் கொண்டு போகிறாள் என்ற மகிழ்ச்சிப் பெருக்கோடு மோகினி வந்து முன்புறம் வழியனுப்புகிற பாவனையில் உடன் நிற்க, மனத்தின் துயரத்தை மறைத்துக் காட்டும் பொய்ச் சிரிப்போடு காரில் ஏறி அமர்ந்தாள் பாரதி. 'தந்தையைப் பறிகொடுத்துத் துயரம் ஆறி ஒரு வழியாகச் சின்னம்மா இன்றிலிருந்து காலேஜுக்குப் போக ஆரம்பிச்சிருக்காங்க' என்ற உற்சாகத்தோடு காரை ஸ்டார்ட் செய்த முத்தையா, கார் காம்பவுண்டைக் கடந்து சிறிது தொலைவு சென்றதும் பின் ஸீட்டிலிருந்து மெல்ல விசும்பி அழுகிற ஒலியைக் கேட்டுத் திகைத்தான். "என்னம்மா இது? அசட்டுப் பொண்ணு போல... எதுக்காவ இப்படி அழுவுரே? அப்பா நெனப்பு வந்திரிச்சுப் போலேருக்கு... நீ ஒண்ணும் சின்னஞ் சிறிசோ பச்சைப் பசலையோ இல்ல. எத்தினி அழுதாலும் அந்தப் புண்ணியப் பெறவி - மகராசன் இனிமே வரப்போறாரா? விவரந் தெரிஞ்ச பொண்ணு நீயாத்தான் உன் மனசைத் தேற்றிக்கணும். இன்னிக்கு மனசு சரியா இல்லேன்னா காலேஜுக்குப் போகாட்டிப் போவுது... நாளைக்குப் போயிக்கலாம்மா! என்ன சொல்றே? வண்டியை வீட்டுக்குத் திருப்பட்டுமா?" என்று 'அவளுடைய துயரத்துக்குத் தந்தையின் ஞாபகம் தான் காரணமோ?' எனத் தானாகவே தனக்குள் கற்பித்துக் கொண்டு ஆறுதல் கூறத் தொடங்கியிருந்தார் டிரைவர் முத்தையா. "இல்லே முத்தையா! காலேஜுக்கு அப்புறம் போகலாம். முதலில் லேக் அவின்யூவுக்கு போ" என்று கண்ணீரைத் துடைத்துக் கொண்டே அவனுக்கு மறுமொழி கூறினாள் பாரதி. அப்போது அவள் கையிலிருந்த கல்லூரிப் பாடப் புத்தகங்களுக்கிடையே மோகினி சத்தியமூர்த்தியிடம் அளிப்பதற்காகக் கொடுத்தனுப்பியிருந்த கடித உறை இருந்தது. அவள் மேல் தனக்கிருக்கும் அதிக நம்பிக்கையை நினைவூட்டுவதற்காகவோ அல்லது உறைக்குள் இருக்கிற கடிதத்தில் எந்த இரகசியமும் இல்லை என்று கருதியதாலோ உறையை ஒட்டாமலே திறந்து வைத்திருந்தாள் மோகினி. செய்த சத்தியத்தையும் ஒப்புக் கொண்டு வாக்குக் கொடுத்து விட்டதையும் காப்பாற்றுவதற்காகப் பாரதி அந்தக் கடிதத்தைச் சத்தியமூர்த்தியிடம் கொண்டு போய்ச் சேர்த்தேயாக வேண்டும். தான் நியாயமாக நடந்து கொள்ள வேண்டுமானால் அதைச் சத்தியமூர்த்தியிடம் கொடுப்பதற்கு முன் தானும் ஒருமுறை படித்துவிட வேண்டுமென்று இந்த விநாடியில் தன் மனத்தின் அடி மூலையில் எழுகிற திருட்டு ஆசையைத் தான் விட்டு விடுவதே நல்லதென்று அவளுக்குத் தோன்றியது. ஆனால் மிகப் பல சமயங்களில் மனிதர்களால் நினைப்பளவிலும் சொல்லளவிலும் தான் நியாயத்துக்கும் சத்தியத்துக்கும் அதிக பட்சமாக மரியாதை செய்ய முடிகிறது. 'நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்' என்று நினைக்க முடிந்த வரை பெரும்பாலான மனிதர்கள் நல்லவர்கள் தான். இந்த நினைப்பின் எல்லைவரை எல்லாருக்கும் வெற்றிதான். ஆனால் இந்த நினைப்பளவைக் கடந்து 'செயலளவு' என்ற இடம் வரும்போதுதான் சத்தியசோதனை மெய்யாகவே ஆரம்பமாகிறது. கல்வித் திறனும், நெஞ்சுரமும் உள்ள மனமுதிர்ச்சியாளர்கள் பலரே இந்தச் சோதனையில் தோற்றுவிடும்போது பாரதியைப் போல் ஓர் அபலைப் பெண் மட்டும் எப்படி வென்றுவிட முடியும்? நீண்ட நேரத் தயக்கத்துக்குப் பின் அந்தக் கடிதத்தைத் தானும் படித்து விட வேண்டுமென்ற ஆவல்தான் அவள் மனத்தில் வென்றது.
நடுங்கும் கைகளால் மோகினியின் அந்தக் கடிதத்தை உறையிலிருந்து எடுத்துப் படிக்கத் தொடங்கினாள் அவள். கார் அதிக வேகமில்லாமல் 'லேக் அவின்யூவை' நோக்கி மெல்லப் போய்க் கொண்டிருந்தது. அந்தக் கடிதத்தைப் படித்து முடித்து விட்டு மீண்டும் உறைக்குள் வைத்த போது 'தான் தவறு செய்து விட்டோம்' என்ற உணர்வு அவளுள் எழுந்தது. படிக்கத் தொடங்குவதற்கு முன்பும் அதே உணர்வுதான் இருந்தது. படித்த போது மட்டும் ஆவல் பெருகி அவளுடைய கண்களுக்கு முன் நியாயத்தைச் சிறியதாக மறைத்து விட்டது. தவறு செய்வதன் இலக்கணமே அப்படித்தான். செய்யத் தொடங்கும் முன்பிருந்த விழிப்பும் எச்சரிக்கையும் அநேகமாகப் பயன்படுவதில்லை. செய்து முடித்த பிறகு வருகிற விழிப்பினாலும் எச்சரிக்கையினாலுமோ எந்த விதத்தினாலும் பயனே இல்லை. மோகினி சத்தியமூர்த்திக்கு மிக உருக்கமாகவும் அந்தரங்கமாகவும் காதல் கனியக் கனிய எழுதியிருந்த அந்தக் கடிதத்தைப் பாரதி படித்திருக்கக் கூடாதுதான்! ஆனால், 'தான் அதைப் படித்திருக்கக் கூடாது' என்ற உணர்ச்சியே அதைப் படித்த பின்பு தான் அவளுக்கு ஏற்பட்டது. படித்ததன் விளைவோ - அவளுக்கு முன்னைக் காட்டிலும் அதிகமாக அழுகை குமுறிக் கொண்டு வந்தது. திடீரென்று இருந்தாற் போலிருந்து தான் யாரும் விரும்பக் கூடாத குரூபியாகி விட்டாற் போலவும், தன்னிடமிருந்த சிறிய அழகும் இப்போது மோகினி ஒருத்தியிடமே போய்ச் சேர்ந்து அந்தப் பேரழகோடு சங்கமமாகி விட்டாற் போலவும் மோகினி எல்லாரும் விரும்பத்தக்க ஒரே பேரழகியாக ஒளிர்வதாகவும் ஒரு பிரமை கொண்டாள் பாரதி. மோகினிக்கும் - சத்தியமூர்த்திக்கும் இடையே தவிர்க்க முடியாத பிணைப்பும், அன்பும் இருப்பதாக இந்தக் கடிதம் பாரதிக்குச் சொல்லிவிட்டது. அதே சமயத்தில் இன்னொரு விஷயத்தைப் பற்றித் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியாமல் மனம் குழம்பினாள் பாரதி.
இந்த நாட்டியக்காரி மோகினியைத் தான் ஏற்கெனவே மணந்து கொண்டு விட்டது போன்ற ஒரு நெருக்கமான உரிமையைப் பெற்றிருப்பதாகவும், இனி அந்த உரிமையை அதிகார பூர்வமாக அடைவதற்காக அவளைப் பதிவுத் திருமணமே செய்து கொண்டு விடக் கருதியிருப்பதாகவும், ஜமீந்தார் மாமா தன் தந்தை பூபதி உயிரோடிருந்த போது அவரிடம் மதுரையில் வைத்துப் பேசிக் கொண்டிருந்ததை நினைத்து, மனம் குழம்பினாள் பாரதி. ஜமீந்தாரும் தன் தந்தையும் முன்பு இதைப் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டதிலிருந்து மோகினியை ஜமீந்தாரோடு தொடர்பு படுத்தியே நினைக்கத் தொடங்கியிருந்தாள் பாரதி. மோகினி மல்லிகைப் பந்தலுக்கு வந்துவிட்ட பின்னே பாரதியின் இந்த நினைப்பு படிப்படியாக மாறியது. மல்லிகைப் பந்தலில் வந்து தங்கிய சில தினங்களுக்குள்ளேயே மோகினி ஜமீந்தாரையும் கண்ணாயிரத்தையும் அடியோடு வெறுப்பதையும் பாரதி புதிதாகப் புரிந்து கொண்டிருந்தாள். அந்த நாட்டியக் கலையரசியின் இதயம் எங்கே ஆட்பட்டிருக்கிறதென்பது இன்று இந்த விநாடியில் பாரதிக்குத் தெரிந்து விட்டது. ஆனால் மோகினியின் லாபம் தன்னுடைய நஷ்டமாயிருப்பதை உணர்ந்து வேதனைப்பட்டுத் தவிக்காமல் இப்போது அவளால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. காரில் அவள் கண் கலங்கி அழுவதைப் பார்த்து - இறந்து போன தந்தையின் நினைவாக அழுகிறாள் என்று டிரைவர் முத்தையா எண்ணிக் கொண்டான். பாரதியோ 'லேக் அவென்யூ' வருவதற்குள் அழுகையோடு அழுகையாக ஆவலையும் அடக்கிக் கொள்ள முடியாமல் அந்தக் கடிதத்தை இரண்டு மூன்று முறை அவசர அவசரமாக எடுத்துப் படித்துவிட்டாள். ஒவ்வொரு முறை படித்து முடித்த போதும் அவளுக்குத் தவிர்க்க முடியாத அழுகை குமுறிக் கொண்டு வந்தது. கடிதமோ மனப்பாடமே ஆகிவிட்டது. மல்லிகைப் பந்தல் பட்டுப்புடவைக் கடையில் என்னை ஜமீந்தாரோடு சேர்த்துப் பார்த்ததைத் தவறாக எண்ணிக் கொள்ளக் கூடாது. மறுக்க முடியாத காரணத்தால் மறுக்க முடியாத சூழ்நிலையில் அவரோடும் கண்ணாயிரத்தோடும் நான் கடைக்குப் புறப்படும்படி ஆகிவிட்டதென்று மோகினி கடிதத்தில் எழுதியிருந்தாள். இதைப் படித்த பின்பே பட்டுப் புடவைக் கடையிலிருந்து திரும்பும் போது மோகினி கண்கலங்கிய நிலையில் வருத்தத்தோடு வீட்டுக்குத் திரும்பியதன் காரணம் பாரதிக்குப் புரிந்தது. மேலும், அந்தக் கடிதத்தில் சத்தியமூர்த்திக்குக் கல்லூரியில் வந்த இடையூறுகள் தீர்ந்து நியாயம் கிடைத்ததைப் பாராட்டியும் அவருடைய தந்தை யாரென்று பாரதியின் மூலம் தான் புரிந்து கொள்ள நேர்ந்ததைப் பற்றியும் எழுதியிருந்தாள் மோகினி. இவற்றைத் தவிர முதன் முதலாக இரயிலிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொள்ள முயன்ற போது சத்தியமூர்த்தி தன்னைக் காப்பாற்றியதிலிருந்து சங்கீத விநாயகர் கோவில் தெருவில் தன் வீட்டுக்கு வந்து தன் இதயத்தை ஆண்டது வரை எல்லாம் கூறி, 'நான் வாழ்ந்து உங்களை நினைக்க வேண்டும்; அல்லது நீங்கள் வாழ்ந்து நினைக்க ஒரு ஞாபகமாகி நானே போய்விட வேண்டும்' என்று கடிதத்தை முடித்திருந்தாள் மோகினி. இவற்றையெல்லாம் கண்ணீருக்கிடையில் பாரதி படித்து முடித்த போது 'அவள் பாக்கியசாலி' என்று மோகினியின் மேல் பெருமையாகவும் இருந்தது; அதே சமயத்தில் அவள் பெற்றிருக்கும் பாக்கியம் எதுவோ அதுவே தான் இழந்து கொண்டிருக்கிற பாக்கியம் என்று அவள் மேல் பொறாமையாகவும் இருந்தது. காரை 'லேக் அவின்யூ'விலுள்ள ராயல் பேக்கரி ரொட்டிக்கடை வாசலில் நிறுத்தச் சொல்லிவிட்டுக் கீழிறங்கிய போது, பூமியில் மிதித்து நடப்பதற்கே சக்தியில்லாதவள் போல் சோர்ந்து போயிருந்தாள் பாரதி. மாடிப்படி ஏறிப் போய்ச் சத்தியமூர்த்தியை நேருக்கு நேர் சந்தித்துத் தானே தன் கையினால் அந்தக் கடிதத்தை அவரிடம் கொடுத்தாக வேண்டும் என்று நினைத்த போது அவளுடைய கால்கள் அந்தச் செயலைச் செய்வதற்காக முன் நோக்கி நடக்கத் துணியாமல் தயங்கின. மனம் மலைத்தது. நினைவுகள் கூசின. மோகினியிடம் சொல்லி ஒப்புக் கொண்டு விட்ட வார்த்தைகள் ஒன்றைக் காப்பாற்றிவிட வேண்டுமென்ற பிடிவாதத்தை விட முடியாமல் தன்னுடைய ஆசையைத் தானே பலியிடுவது போன்ற அந்தக் காரியத்தைச் செய்வதற்காக நடைப்பிணமாய் மாடிப்படி ஏறினாள் பாரதி. 'படிகளிலேயே சுருண்டு விழுந்து விடுவோமா' என்று பயப்படுமளவுக்கு அப்போது அவளுடைய கால்கள் ஒன்றோடொன்று பின்னின. அவளுடைய உடல் மேலே படியேறிக் கொண்டிருந்த அதே வேளையில் மனமும் உணர்ச்சிகளும் கீழே அதல பாதாளத்துக்குச் சரிந்து தலை குப்புறக் கவிழ்ந்து வீழ்ந்து கொண்டிருந்தன. அரிய முயற்சி செய்து அவள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியதாயிற்று. முகத்தில் அழுத சுவடு தெரியாமல் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, துடைத்தெடுக்க முடியாத அழுகையின் சாயலோடும் கையில் கடித உறையோடும் அவள் சத்தியமூர்த்தியின் அறைக்குள் நுழைந்த போது, நல்லவேளையாக அறையில் அவன் மட்டுமே தனியாக இருந்தான். மேனியில் வெள்ளை வெளேரென்று மின்னலாய் வழியும் ஜிப்பாவும் வேஷ்டியும் அணிந்து பொன் மின்னலொன்று வெறும் மின்னலையுடுத்தி வீற்றிருந்தாற் போல் கல்லூரிக்குப் புறப்படத் தயாராகிவிட்ட கோலத்தில் ஏதோ வகுப்பு நடத்துவதற்கான பாடக் குறிப்புக்களைப் பார்த்தபடி வீற்றிருந்தான் சத்தியமூர்த்தி. மெல்லத் தயங்கித் தயங்கி அறைக்குள் நுழைந்த பாரதி, அவன் தன்னை நிமிர்ந்து பார்த்ததும் என்ன செய்கிறோம் என்ற உணர்வே இன்றி ஆனால் ஏதோ செய்தாக வேண்டும் என்ற உணர்வுடன் மிகவும் தொலைவில் விலக்கி வைத்து வணங்கி மரியாதை செய்ய வேண்டிய பெரிய மனிதர் ஒருவரை எதிரே பார்த்து விட்டாற் போல் பயபக்தியோடு கைகூப்பினாள். திடீரென்று அவளை அங்கே எதிர்பாராமல் சந்தித்த பரபரப்பைச் சிறிதும் காண்பித்துக் கொள்ளாமல் "என்ன?... சௌக்கியமாயிருக்கிறீர்களா?" என்று நிதானமாகச் சிரித்தபடி சுகம் விசாரித்தான் சத்தியமூர்த்தி. அந்தச் சிரிப்பும் அந்த முகமும் அந்தக் கண்களும், மின்னலாய் எதிரே வீற்றிருக்கும் அந்தக் கம்பீரத் திரு உருவமும், தரையில் பூத்த செந்தாமரைகளாய் இலங்கும் அந்தக் கால்களும் இப்போது 'தான் ஆசைப்படக் கூடாதவனவாகி விட்டன' என்று நிராசையின் காரணமாகவே முன்னிலும் அதிக அழகோடும், அதிகச் சோபையோடும் தோன்றி அவளை மயக்கின. அந்த மயக்கத்தினால் தன் கண்கள் கலங்குவதையும் அடக்கிக் கொள்ள முடியாமல்... "இதை மோகினி அக்கா உங்களிடம் கொடுக்கச் சொன்னாங்க" என்று சொல்லுருவம் நலிந்து உடைபட்ட வார்த்தைகளால் கூறிவிட்டுக் கையிலிருந்த அந்தக் கடித உறையை அவன் கையில் நேரடியாகக் கொடுக்கவும் துணியாமல் அவனருகே இருந்த மேஜையின் மேல் விளிம்பில் பட்டும் படாமலும் வைப்பது போல் தயங்கியபடி வைத்தாள் பாரதி. 'மோகினி அக்கா' என்ற பெயரைக் கேட்டதும் சத்தியமூர்த்தியின் முகத்தில் சிரிப்பு மறைந்து இன்னதென்று கண்டுபிடிக்க முடியாத ஓர் உணர்வு தெரிவதை எதிரே நின்ற பாரதி கவனித்தாள். அவள் சிறிது நேரம் நிராசையோடு அவனையே பார்த்துக் கொண்டு நின்றாள். ஆசைப்பட முடியாத எல்லையில் தான் அதிக ஆசை பெருகுகிறது என்பது அந்தக் கணத்தில் அவளைப் பொறுத்தவரை மெய்யாயிருந்தது. அவன் பார்வை நேர் எதிரே தன் மேல் இருந்திருந்தால் அவளுக்கு அவனை ஏறிட்டுப் பார்க்கும் துணிவே வ்ந்திருக்காது. அவன் குனிந்து கடிதத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற காரணத்தால் அவள் நன்றாக அவனைப் பார்க்க முடிந்தது. அவள் உணர்ச்சி வசப்பட்டாள். அழுகை குமுறிக் கொண்டு வந்தது. விசும்பல் ஒலியைக் கேட்டுத் தலைநிமிர்ந்த சத்தியமூர்த்தி, "நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?" என்று அவள் அழுவதன் காரணத்தைத் தானும் புரிந்து கொண்டே புரியாதது போல் கேட்ட போது பாரதி வேகமாகக் கீழே திரும்பிப் படியிறங்கினாள். "அடேடே... இதென்ன தர்ம சங்கடம்...?" என்று சொல்லிக் கொண்டே எழுந்திருந்த சத்தியமூர்த்தி அழுது கொண்டே விரைந்துவிட்ட அவளைப் பின் தொடரவும் முடியவில்லை. மேலேயிருந்து பலகணி வழியே கீழ்ப்புறம் சாலையைப் பார்த்த போது அவள் ஏறிக் கொண்ட பின் கார் புறப்படுவது மட்டும் தெரிந்தது. அந்தக் கடிதத்தைப் பாரதியிடம் அப்பாவித்தனமாகக் கொடுத்தனுப்பிய பேதை மோகினியின் மேல் தான் அவனுக்கு அப்போது கோபம் கோபமாக வந்தது. சிறிது நேரத்துக்குப் பின் கல்லூரிக்குப் புறப்பட்டான் அவன். அன்று கல்லூரியில் மாணவர்கள் மிகவும் உற்சாகமாக இருந்தார்கள். முதல் முதலாக அவன் நுழைந்த வகுப்பில் மாணவர்கள் அவனை மாலை சூட்டி வரவேற்றார்கள். மூன்றாவது பாடவேளையில் பாரதியின் வகுப்புக்குச் சென்ற போது தான் அவளும் அன்று கல்லூரிக்கு வந்திருப்பதை அவன் தெரிந்து கொள்ள நேர்ந்தது. தற்செயலாக அன்று நடத்த வேண்டிய பாடக் கட்டுரையாக வந்து வாய்த்தது, 'குறுந்தொகையில் இலக்கிய நயம்' என்ற தலைப்பில் இருந்தது. கட்டுரையின் நடுவே சத்தியமூர்த்தி மல்லிகைப் பந்தல் கல்லூரிக்கு இண்டர்வியூவுக்கு வந்திருந்த போது பூபதியிடம் விளக்கிக் கூறிய 'யாயும் ஞாயும் யாராகியரோ?' என்ற குறுந்தொகைப் பாடலும் இருந்தது. சத்தியமூர்த்தி அந்தப் பாடலின் பொருளையும் நயங்களையும் இன்றும் மாணவர்களுக்கு விளக்கத் தொடங்கினான். வகுப்பில் அதைக் கேட்கக் கேட்கப் பாரதியின் முகம் அழுவது போல் சிவந்து கண்கள் கலங்குவதைச் சத்தியமூர்த்தியும் கவனித்தான். வகுப்பின் நடுவே அவள் குமுறி அழுதுவிட்டால் நன்றாக இருக்காதென்று கருதிய சத்தியமூர்த்தியே மிகவும் சாதுரியமாக ஒரு காரியம் செய்தான். "மிஸ் பாரதீ! உங்கள் தந்தையை இழந்த பின் முதல் முதலாக இன்றுதான் கல்லூரிக்கு வந்திருக்கிறீர்கள். ஆனாலும் உங்கள் மனம் இன்னும் முழுமையாக ஆறுதல் அடையவில்லை என்று தெரிகிறது. தயவு செய்து இன்றும் வீட்டிற்குப் போய் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்! உங்களைப் பார்த்தால் மிகவும் வருந்தத்தக்க நிலையில் இருக்கிறீர்கள்..." என்று சொல்லி அவளுக்கு வகுப்பிலிருந்து வெளியே செல்லத் தானாகவே அனுமதி கொடுத்துவிட்டான். அவளும் தலை குனிந்தபடியே எழுந்து மௌனமாக வெளியே சென்று விட்டாள். அவள் எதற்காக மனம் உடைந்து போயிருக்கிறாள் என்று சத்தியமூர்த்திக்குத் தெளிவாகப் புரிந்திருந்தும் அந்தப் பேதைக்கு முன்னால் அவனே ஒன்றும் தெரியாதது போல் அப்போது நடிக்கத்தான் வேண்டியிருந்தது. அவள் வெளியேறிச் சென்ற பின்பு வகுப்பு அமைதியாக நடைபெற்று முடிந்தது. வெளியேறிச் சென்ற பாரதியோ கார் நிற்கும் இடத்துக்குப் போய் நேரே வீட்டுக்கு விடச் சொல்லி புறப்பட்டு விட்டாள். மாலையில் திரும்பவும் அவள் கல்லூரிக்கு வரவேயில்லை. சாயங்காலம் கல்லூரி விட்டதும் தான் பாரதி திரும்பி வருவாள் என்று நினைத்து 'அவள் திரும்ப வரும் வேளை இந்த விநாடியே உடனே வரக்கூடாதா' என்னும் தவிப்போடு வீட்டில் காத்திருந்த மோகினி நண்பகலிலேயே அவள் திரும்பி வருவதையும் அவளுடைய கண்கள் அழுது அழுது சிவந்திருப்பதையும் பார்த்துத் திகைத்துப் போனாள். போர்டிகோவில் காரிலிருந்து இறங்கி உள்ளே நடந்து வந்த பாரதி தன் கையில் அடுக்கிக் கொண்டிருந்த புத்தகங்களில் இரண்டொன்று வருகிற வழியில் வரிசையாக நழுவிக் கீழே தரையில் விழுவதைப் பார்த்து மோகினிக்கு ஒன்றுமே புரியவில்லை. கையிலிருந்து நழுவி விழுகிற புத்தகங்களைப் போல அவளுடைய மனதிலிருந்து நழுவிக் கொண்டிருக்கிற உணர்வுகளை மோகினியால் புரிந்து காரணம் என்னவென்பதை ஒருவேளை அவளால் உணர்ந்து கொண்டிருக்க முடியுமோ என்னவோ? "ஏன் நீ காலேஜுக்குப் போகவில்லையா? பாதியிலேயே வந்து விட்டாயா?... உடம்புக்கென்ன? பார்ப்பதற்கு என்னவோ போலிருக்கிறாயே?" என்று விசாரித்த மோகினிக்குப் பதில் சொல்ல முடியாமல் அவளருகே வந்து தயங்கி நின்றாள் பாரதி. இரண்டாம் முறையாகவும் இதே கேள்விகளை மோகினி பாரதியிடம் கேட்ட போது, "அவரை அறையிலேயே போய்ப் பார்த்து அந்தக் கடிதத்தைக் கொடுத்தாச்சு அக்கா!... எனக்கு ஒரே தலைவலியா இருக்கு... ஜுரமும் இலேசாக வந்திருக்கிறாற் போலத் தோன்றுகிறது..." என்று அவள் தன்னைக் கேட்காத கேள்விக்கும் கேட்ட கேள்விக்கும் சேர்த்தே மறுமொழி கூறினாள் பாரதி. "கடிதத்தைப் பற்றி இப்போ என்ன வந்ததம்மா? நீ இன்றைக்குக் காலேஜுக்குப் போகாமலிருந்தாலும் பரவாயில்லையோ?... போய் இப்படி உடம்புக்கு இழுத்துவிட்டுக் கொண்டு வந்திருக்கிறாயே..." என்று ஆறுதலாகக் கூறியபடி பாரதியைத் தழுவினாற் போல் கைத்தாங்கலாக அழைத்துச் சென்று படுக்கையில் படுக்க வைத்தாள் மோகினி. "உடம்புக்குச் சரியில்லை என்றால் பச்சைக் குழந்தை மாதிரி இப்படியா அழுவாய் பெண்ணே?" என்று மோகினி சிரித்துக் கொண்டே வினவிய போது, பாரதி பதிலுக்குச் சிரிக்க முயன்று முடியாமல் ஏதோ நடித்தாள். மாலை வரை பாரதியிடம் ஒன்றும் பேச்சுக் கொடுக்காமல் அவளை நிம்மதியாய்த் தூங்குமப்டி கூறித் தனியே விட்டு விட்டுப் போயிருந்த மோகினி மாலையில் திரும்பி வந்து அவள் படுத்திருந்த அறையில் பார்த்த போது அவள் தூங்கவே இல்லை என்று தெரிந்தது. "அசடு! எதற்காக அழுகிறாய் இப்படி? காலேஜுக்குப் போன உடனே உனக்கு அப்பாவின் நினைவு வந்துவிட்டதா? பாவம்.." என்று கேட்டுக் கொண்டே டெம்பரேச்சர் பார்த்த மோகினி பாரதிக்கு நிஜமாகவே ஜுரம் வந்திருப்பதைப் புரிந்து கொண்டு பரபரப்படைந்து பதறினாள். பொன் விலங்கு : ஆசிரியர் முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
|