60
மனத்தின் எல்லா நோய்களுக்கும் அன்புதான் மருந்து. அதே அன்பு பொய்யாயிருந்து விட்டாலோ அதை விடப் பெரிய நோய் வேறெதுவும் இல்லை. தந்தியைப் பற்றிக் கூறியதும் உடனே கல்லூரிக்கு லீவு எழுதிக் கொடுத்துவிட்டு மறுக்காமல் மதுரைக்குப் புறப்பட்டிருந்தாலும் பிரயாணத்தின் போது சத்தியமூர்த்தி சிறிதும் உற்சாகமின்றி ஏதோ ஆழ்ந்த மனப்போராட்டங்களாலே தாக்கப்பட்டவனைப் போல் தளர்ந்து உடன் வருவதைக் குமரப்பன் உணர்ந்து கொண்டான். எனவே நண்பனோடு அதிகம் பேச்சுக் கொடுக்காமலும் அவனுடைய மனப்போரட்டத்துக்குக் காரணத்தை அவனிடமே தூண்டித் தூண்டிக் கேட்காமலும் பஸ்ஸுக்கு வெளியே ஓடும் காட்சிகளில் தன்னுடைய கவனத்தைச் செலுத்தலானான் குமரப்பன். சரியாக அதே நேரத்திலே லேக் அவின்யூவில் சத்தியமூர்த்தியின் அறையைத் தேடி மோகினியின் கடிதத்தோடு வந்த மகேசுவரி தங்கரத்தினத்துக்கு, "அவரு ஊருக்குப் போயிருக்காரு! ஏதோ அவசரமாகத் தந்தி வந்தது. ஒரு வாரம் காலேஜுக்கு லீவு போட்டு விட்டுக் கிளம்பிட்டாரு" என்று கீழேயிருந்த ரொட்டிக் கடை வேலைக்காரன் பதில் கூறினான். ஏமாற்றத்தோடு திரும்பிய மகேசுவரி கடிதத்தைத் திருப்பிக் கொடுத்து, 'அவர் ஊரில் இல்லை' என்ற விவரத்தையும் தெரிவித்தாள். 'சத்தியமூர்த்தி ஊரில் இல்லை' என்ற விவரத்தைப் பாரதியிடமிருந்து கேள்விப்பட்ட போது, "நீ ஏன் வீணாக மனம் கலங்குகிறாய் பெண்ணே! என் பாக்கியம் அவ்வளவுதான். இந்த உலகத்தில் என்னைப் போல் துரதிர்ஷ்டசாலி வேறு யாரும் கிடையாது" என்று அழுகைக்கிடையே பாரதியைப் பார்த்துக் கூறினாள் மோகினி. "கவலைப்படாமல் இருங்கள் அக்கா! சந்தேகங்களும் தடைகளும் குறுக்கிடாத காதல் தேவர்களின் இதிகாசங்களில் கூட இல்லை. உங்களுடைய புண்ணியம் வீண் போகாது. சத்தியமூர்த்தி சார் எவ்வளவோ நல்லவர். முன் கோபமும், பொறாமையும் அவரிடம் என்றுமே இருந்ததில்லை. இன்று ஏதோ சந்தர்ப்பக் கோளாறுகளால் இப்படி ஆகிவிட்டது! நீங்கள் ஜமீந்தாருக்குக் காப்பி கொடுத்துக் கொண்டிருந்ததையும், உங்களை அவரிடமிருந்து பிரிக்க வேண்டுமென்றே இந்தப் பாவிகள் தந்திரமாகத் தயார் செய்து மாட்டிய படத்தையும் பார்த்துத் திடசித்தமுள்ளவராகிய சத்தியமூர்த்தியே மனம் வேறுபட்டு ஆத்திரம் கொண்டுவிட்டார். எல்லாம் விஷக்கடி வேளை" என்று வருந்திய பாரதி மோகினியைச் சமாதானப்படுத்தி அமைதியடையச் செய்ய மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. "நீங்கள் நிம்மதியாக இருக்கணும் அக்கா! சத்தியமூர்த்தி சார் மதுரைக்குத்தான் போயிருக்கிறார் என்று தெரிகிறது. உங்களுடைய இந்தக் கடிதத்தைப் படித்தால் எப்படியும் அவருடைய மனம் இளகும். அவருடைய மதுரை வீட்டு விலாசம் எனக்குத் தெரியும். உங்கள் கடிதத்தை நாளைப் பகலில் மதுரைக்குத் தபாலில் அனுப்பி வைக்கிறேன். கடிதம் அவருக்குக் கிடைத்து அதை அவர் படித்த பின்பு மறுபடி இங்கு திரும்பி வரும் போது உங்களைத் தவறாகப் புரிந்து கொண்டதற்காக மனம் வருந்தியபடி வருவார். எல்லாம் சரியாகி நல்லபடி முடியும். வீணாக மனம் கலங்காதீர்கள்" என்று மோகினிக்கு ஆறுதல் கூறிவிட்டு அவள் சத்தியமூர்த்திக்கு எழுதிய கடிதத்தை மறுநாள் பகலில் அவருடைய மதுரை முகவரி எழுதிய உறையிலிட்டு ஒட்டி ரிஜிஸ்தர் தபாலில் அனுப்பிவிடச் சொல்லி மகேசுவரி தங்கரத்தினத்திடம் கொடுத்தனுப்பினாள். டிரைவர் முத்தையாவிடம் கொடுத்தனுப்பலாமென்றால், அவன் கண்ணாயிரத்தையும் கணக்குப்பிள்ளைக் கிழவரையும் அழைத்துக் கொண்டு காரில் நேரே மஞ்சள்பட்டி போய் அங்கு ஏதோ காரியங்களை முடித்துக் கொண்டு அப்புறம் மதுரை போய் விட்டுத் திரும்புவதற்காக மறுநாள் காலையில் புறப்படுவதாகச் சொல்லியிருந்தான். 'சத்தியமூர்த்தியின் தந்தையாகிய அந்தக் கணக்குப்பிள்ளைக் கிழவரிடமே உறையிலிட்டு ஒட்டிய இந்தக் கடிதத்தைக் கொடுத்து மதுரையில் அவருடைய மகனிடம் சேர்க்கச் சொன்னால் என்ன?' ஒரு கணம் பாரதிக்கு யோசனை தோன்றியது. அடுத்த கணமே, அந்த யோசனை பைத்தியக்காரத்தனமாகவும், நம்பிக்கையற்றதாகவும் படவே, அவள் அதைச் செய்வதில்லை என்ற முடிவுடன் தன் தோழி மகேசுவரி மூலம் தபாலுக்குக் கொடுத்தனுப்பினாள். 'கணக்குப்பிள்ளைக் கிழவர் தம் மகனை என்ன காரணத்தினாலோ வெறுக்கிறார். தவிரவும் அவர் நேரே மதுரைக்குப் போகாமல் காரில் முதலில் மஞ்சள்பட்டி போய் அங்கு ஒருநாளோ இரு நாட்களோ தங்கிக் காரியங்களைப் பார்த்துவிட்டு அப்புறம் கண்ணாயிரத்தோடு அங்கிருந்து புறப்பட்டு மதுரைப் போகப் போகிறார். கண்ணாயிரமும் உடன் போகிற போது கணக்குப்பிள்ளைக் கிழவரை நம்பி இதைக் கொடுத்தனுப்புவது பைத்தியக்காரத்தனம்! பணத்துக்காகச் சேரத் தகாதவர்களோடு சேர்ந்து சொந்த மகனையே வெறுக்கிறவரை எப்படி நம்புவது?' என்று சிந்தித்த பின்பு கடிதத்தைச் சத்தியமூர்த்தியின் பேருக்கே பதிவுத் தபாலில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்திருந்தாள் பாரதி.
பஸ்ஸில் பிரயாணம் செய்யும் போதும் அதன் பின்பு மல்லிகைப் பந்தல் ரோடு இரயில் நிலையத்தில் இறங்கி மாறி புகைவண்டியில் பிரயாணம் செய்யும் போதும் சத்தியமூர்த்தி பிரயாணம் செய்வது கூட ஞாபகமில்லாது ஆழ்ந்த சிந்தனைகளில் மூழ்கியிருந்தான். 'பிறர் மனமிரங்கிக் கண் கலங்குமாறு செய்யும் ஆற்றல் எல்லாப் பெண்களுக்குமே இருக்கிறது. மோகினியைப் போல அழகும், கவர்ச்சியும், திறனும் உள்ள பெண்களுக்கு இந்த ஆற்றல் சிறிது அதிகமாகவே இருக்கலாம். இவ்வளவு நாள் இவளை ஒரு பொருளாக மதித்து மனத்தில் இடமளித்துக் கவலைப்பட்டு நான் உருகுமாறு செய்த ஆற்றல் என்னை இதுவரை ஏமாற்றியிருக்கிறதென்றே சொல்லலாம். இவள் என் மேல் உயிரையே வைத்து வாழ்கிறாள் என்று நான் எண்ணியிருந்தது எத்தனை பெரிய பேதைமை? ஜமீந்தாருக்கும் இவளுக்கும் திருமணம் நடந்திராவிட்டால் இப்படி மணக்கோலத்தில் புகைப்படம் எடுத்து மாட்டுவதற்கு வேறு சந்தர்ப்பம் ஏது? ஊர் உலகத்தில் தன்னைப் பற்றிக் கேவலமாகப் பேசிக் கொள்வார்களே என்று பயந்து இந்த ஜமீந்தார் இவளை ஆசைக் கிழத்தியாக விரும்பிக் காதும் காதும் வைத்தாற் போல் இரகசியமாக மணந்து கொண்டிருக்கிறாற் போல் இருக்கிறது. இதை என்னிடம் மூடி மறைத்து ஏமாற்றிக் கொண்டு, 'பட்டுப் புடவைக் கடையில், ஜமீந்தாரையும் என்னையும் சேர்த்துப் பார்த்ததனால் என்னைத் தப்பாகப் புரிந்து கொள்ளாதீர்கள்' என்று எனக்குக் கடிதம் எழுதிக் கொடுத்தனுப்புகிறாளே இந்தப் பழிகாரி! என் கையில் இந்த மோதிரத்தை அணிவித்து விட்டு, 'மேளதாளமில்லாமல் சந்தனம் வெற்றிலை பாக்கு இல்லாமல் புஷ்ப மரத்தடியில் வீற்றிருக்கும் தெய்வத்துக்குச் சமர்ப்பணமாகும் பூவைப் போல் தானாகவே உங்களிடம் சேர்ந்தவள்' என்று இவள் என்னிடம் உருகிய உருக்கமெல்லாம் எவ்வளவு பெரிய துரோக நாடகம்? 'இந்த வீட்டில் நீங்கள் வாசிப்பதற்குரிய பரிசுத்தமான வாத்தியம் ஒன்று காத்துக் கிடக்கிறது என்று கண் கலங்கிட இவள் முன்பு என்னிடம் கூறியிருந்த வாக்கியத்தையும் அதன் உறுதியையும் காற்றில் பறக்க விட்டுவிட்டாளே?' என்றெல்லாம் வெறுப்போடு எண்ணியபோது அவள் தன்னைக் கைப்பற்றி அணிவித்த அந்த நீலக்கல் மோதிரத்தை உடனே கைவிரலிலிருந்து கழற்றித் தலையைச் சுற்றித் தூர எறிந்து விட வேண்டும் போல் அருவருப்பாயிருந்தது அவனுக்கு. அருகிலிருந்த நண்பன் குமரப்பனும் இரயிலில் பிரயாணம் செய்து கொண்டிருக்கும் சக பிரயாணிகளும் காணும்படி அந்த மோதிரத்தைக் கழற்றி எறியக் கூடாது என்பதற்காக அந்தக் கம்பார்ட்மெண்டின் ஒரு கோடியிலிருந்த குளியலறைக்குச் சென்றான் அவன். குளியலறைக் கதவை உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டு அந்த மோதிரத்தை விரலிலிருந்து கழற்ற முயன்ற போது அது விரலோடு விரலாக இறுகிப் போயிருந்ததனால் கழற்ற வரவில்லை. ஓடும் இரயிலில் குளியலறைக்குள் அங்கும் இங்குமாகத் தள்ளாடியதும் மோதிர விரலில் இரத்தம் குழம்பிக் கன்றிச் சிவந்ததும் தவிர அவனுடைய அந்த முயற்சிக்கு வேறு பயன் விளையவில்லை. 'சனியன்! கழற்றி எறியவும் வரவில்லை' என்று வெறுப்போடு முணுமுணுத்தவாறே குளியலறையிலிருந்து திரும்பி மறுபடியும் தன் இடத்தில் போய் உட்கார்ந்தான் அவன். 'இந்த உலகத்தில் ஒரே நோய் தான் உண்டு! ஒரே மருந்துதான் உண்டு. அன்பு இன்மைதான் பெரிய நோய். அன்பு தான் மருந்து. துன்பம், சோர்வு, பயம் எல்லாம் அன்பில் அழிந்து விடும். அதே அன்பு உண்மையாயில்லாமல் பொய்யாகவோ, வஞ்சகமாகவோ இருந்துவிட்டால் அது தான் மிகப் பெரிய நோய்! அந்த நோய் அதற்கு ஆளானவனுடைய மனத்தையே பாலைவனமாக்கி விடும். 'குலத்தளவே ஆகுமாம் குணம்' என்று ஔவையார் பாடியிருப்பது எத்தனை பொருத்தமாகிவிட்டது? பிடிவாதமாக அன்பு செய்யவோ சிறப்பாக ஒருவனிடம் மட்டும் மனத்தைக் கொடுத்துக் காதல் புரியவோ இவர்களுக்குத் தனிமனம் கிடையாது என்பதனால் அல்லவோ கம்பர் இவர்களையெல்லாம், நிதி வழி நேயம் நீட்டும் பொது மனப் பெண்டீர் என்று பாடி வைத்தார்?' என்பதாக எண்ணங்கள் மோகினியின் மேல் விளைந்திருக்கும் வரம்பிலா வெறுப்புக் காரணமாகவே அவன் மனத்தில் தோன்றிக் கொண்டிருந்தன. பல நாட்களுக்கு முன் முதன் முதலாக மதுரை வைகைப் பாலத்தருகே இரயிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொள்வதற்கிருந்த நிலையில் வானவில்லைப் போல் நிறங்களின் அழகிய பக்குவமெல்லாம் இணைந்த அற்புதமாய்ச் சரீரமெங்கும் பாதாதிகேச பரியந்தமும் சந்தனமும், மருக்கொழுந்தும் மலர்ந்தாற் போல் மணக்க, தின்பதற்கு மட்டுமல்லாது தின்னப்படுவதற்கென்று அமைந்தாற் போன்ற பற்களோடு மோகினி தனக்கு அறிமுகமான சம்பவமும் அதற்குப் பின்பு அவளோடு பழக நேர்ந்த சம்பவங்களும் ஒவ்வொன்றாக நினைவு வந்து இந்த விநாடியில் அவனது மன எல்லையெல்லாம் நிறைந்திருந்த வெறுப்பையும், விரோதத்தையும், மேலும் மேலும் வளர்த்தன. அவளைச் சுற்றியிருக்கும் எல்லா நரகங்களுக்கிடையேயும் அவளே மிகப் பெரிய நரகமாகி விட்டதாக அவனுக்குத் தோன்றியது. மனிதனுடைய அழுக்குக் கைகள் தொட்டுப் பறிப்பதற்கு முன்பு, மண்ணில் தாங்களாகவே உதிர்ந்து தங்கள் தூய்மையைக் காப்பாற்றிக் கொண்டு விடும் பவழ மல்லிகைப் பூவைப் போல தூயவளென்று முன்பு அவளை நினைத்திருந்தான். இன்றோ படத்தில் மணக்கோலத்தோடு ஜமீந்தாருடன் சிரித்துக் கொண்டு நின்ற நிலையிலும், நேரில் அவருக்கு உபசாரம் செய்து கொண்டிருந்த நிலையிலும் பிரத்தியட்சமாக அவளைப் பார்த்துவிட்ட பிறகு, அவன் நினைப்பில் அவளே ஓர் பெரிய அழுக்காகத் தோன்றினாள். 'ஷி வாக்ஸ் இன் பியூட்டி' என்ற கவிதையை முன்பு கல்லூரி வகுப்பறையில் மாணவர்களுக்குக் கற்பித்த போது, அதில் வருகிற 'ஹௌ பியூர்?' (எவ்வளவு பரிசுத்தம்?) 'ஹௌ டியர்?' (எவ்வளவு கனிவு?) என்ற வரிகளைத் தான் மோகினியின் ஞாபகத்தோடு மனம் நெகிழ்ந்து விளக்கிச் சொல்லியதையும் அந்த நிகழ்ச்சியில் வகுப்பிலுள்ள மாணவ மாணவிகளெல்லாம் மயங்கியதும் இன்று அவனுக்கே வெறும் பொய்யாகத் தோன்றுகின்றன; இன்னும் நன்றாகச் சொல்லப் போனால் அவளும் அவளோடு தொடர்புடைய எல்லாமுமே வஞ்சகமாய்ப் பொய்யாய்த் தோன்றுகின்றன.
'சந்திக்கிறோம், அறிகிறோம், அன்பு செய்கிறோம், பின்பு பிரிகிறோம். மிகப் பல மனித இதயங்களின் சோகக் கதை இதுதான்' என்ற பொருளில் 'டு மீட், டு நோ, டு லவ் அண்ட் தென் டு பார்ட், இஸ் தி ஸேட் டேல் ஆஃப் மெனி எ ஹ்யூமன் ஹார்ட்' என்பதாகக் கால்ரிட்ஜ் ஒரு கவிதை பாடியிருக்கிறான். அந்தக் கவிதைதான் இன்று இந்த விநாடியில் சத்தியமூர்த்திக்கு நினைவு வந்தது. மோகினியின் நினைவுகள் என்னும் தூய நறுமண மலர்களால் தொடுக்கப்பட்டிருந்த அவனுடைய ஞாபகமாலை இப்போது சிதைந்து அறுந்து போய் விட்டது. அந்த நளின நறுமண மாலை மணம் பரப்பிக் கொண்டிருந்த இடத்தில் இப்போது வெறுப்பும், ஏமாற்றமும், அவநம்பிக்கையும், அருவருப்பும் வந்து குடிகொண்டிருந்தன. 'உலகம் நிரந்தரமாகப் பழித்துக் கொண்டிருக்கிற ஒரு பகுதியைச் சேர்ந்த அழகிய பெண்களிடையே இருந்துதான் வஸந்தசேனை, மாதவி, மணிமேகலை - கடைசியாக மோகினி எல்லாரும் தோன்றியிருக்கிறார்கள்' என்று தானே ஒரு நாள் மோகினியிடம் அவளைப் புகழ்ந்து கூறியதை நினைத்து அதற்காக இப்போது வருந்தி வெட்கமுற்றது அவன் மனம். மதுரை இரயில் நிலையத்தில் போய் இறங்கிய போதும் கூட மனம் குழம்பிய நிலையில்தான் இருந்தான் அவன். "ஏன் இப்படி இருக்கிறாய்? தலைவலியா? உடல் நலமில்லையா?" என்று குமரப்பன் விசாரித்த போது கூட சத்தியமூர்த்தி ஏதோ பதில் சொல்லி மழுப்பி விட்டான். இரயில் நிலையத்துக்குக் கலெக்டருடைய மூத்த மகன் வந்திருந்தார். அப்போது இரவு ஒன்பதே கால் மணி ஆகியிருந்தது. அந்த இரயிலிலேயே அவர்கள் இருவரும் வருவார்கள் என்று எதிர்பார்த்து அப்பா வீட்டில் காத்திருப்பதாகவும் இருவரையும் நேரே தங்கள் வீட்டுக்கே அழைத்து வருமாறு தன்னை ரயில் நிலையத்துக்கு அவரே அனுப்பியதாகவும், கலெக்டருடைய புதல்வர் கூறினார். சத்தியமூர்த்தியும், குமரப்பனும் கலெக்டரின் மகனோடு அவரைச் சந்திக்கப் புறப்ப்ட்டார்கள். அவர்கள் இரயிலிலிருந்து வந்த பின் எல்லாருமாகச் சேர்ந்து சாப்பிடலாம் என்று காத்திருந்த கலெக்டர், சத்தியமூர்த்தியும் குமரப்பனும் எவ்வளவோ மறுத்தும் கேட்காமல் அங்கேயே அவர்களையும் சாப்பிடச் செய்து விட்டார். டெல்லியிலிருந்து இண்டர்வ்யூவுக்குத் தேதி குறிப்பிட்டு வந்திருப்பதாகச் சத்தியமூர்த்தியிடம் மகிழ்ச்சியோடு தெரிவித்தார் அவர். "இண்டர்வ்யூவில் வெற்றி கிடைத்து நீ தேர்வு பெறுவதைப் பற்றி எனக்குச் சந்தேகமே இல்லை! அதற்கான ஏற்பாடுகளைக் கூட நான் செய்துவிட்டேன் சத்தியம். நீ நாளை மாலை இங்கிருந்து சென்னை புறப்பட்டு நாளன்றைக்குக் காலையில் சென்னையிலிருந்து கிராண்ட் டிரங் எக்ஸ்பிரஸ் மூலம் டெல்லிக்குச் செல்ல வேண்டும். டெல்லியில் எல்லாம் சரியாக முடிந்துவிட்டால் அடுத்த மாத மத்தியில் பம்பாயிலிருந்து புறப்படும் லுப்தான்ஸா என்ற ஜெர்மானிய ஜெட் விமானத்தில் உன் பிரயாணம் இருக்கும். அதற்கும் அதிக நாள் இல்லை. எல்லாமே துரிதமாகச் செய்ய வேண்டும். அவர்கள் செலவில் அழைத்துப் போகிறார்கள் என்றாலும் உன் கைச்செலவுக்கும் கொஞ்சம் பணம் கொண்டு போவது நல்லது. அதற்கு நமது ரிசர்வ் பாங்கியிலுள்ள எக்ஸ்சேஞ்சு கண்ட்ரோலுக்கு இப்போதே மனு செய்து வைக்க வேண்டும். 'எஜுகேஷனல் டூர்' என்பதால் அதிக சிரமமில்லாமல் 'பெர்மிட்' கிடைத்துவிடும் என்று நினைக்கிறேன்" என்று தொடங்கி கலெக்டர் அப்போதே பிரயாணம் அருகில் வந்துவிட்டது போல் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தார். டெல்லியிலிருந்து அவனுக்கு வந்திருந்த 'இண்டர்வ்யூ கார்டை'யும் பிற விவரங்களையும் அவன் கையில் கொடுத்துக் கலெக்டர் அவர்களிருவருக்கும் விடையளிக்கும் போது இரவு பதினோரு மணிக்கு மேல் ஆகிவிட்டது. அந்த நேரத்திலும் விழித்தெழுந்து கலெக்டரின் மகன் அவர்களைக் காரில் பேச்சியம்மன் படித்துறைத் தெரு வரையில் கொண்டு வந்து விட்டுச் சென்றார். சத்தியமூர்த்தியும், குமரப்பனும் வீட்டுக் கதவைத் தட்டிவிட்டுக் காத்துக் கொண்டு நின்றார்கள். அம்மா வந்து கதவைத் திறந்த போது அவளுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. "என்னடா, சத்தியம்! இந்த நேரத்துக்கு எந்த இரயிலில் வந்தாய்? அப்பா கூட ஏதோ ஜமீந்தார் காரியமாக அங்கே தான் மல்லிகைப் பந்தலுக்கு வந்திருக்கிறார்? உன்னை வந்து பார்த்தாரோ இல்லையோ? ஏது இப்படித் திடீரென்று புறப்பட்டு வந்தாய்?" என்று கேட்டவளுக்கு உள்ளே போய் எல்லாவற்றையும் விவரமாகச் சொன்னான் சத்தியமூர்த்தி. குமரப்பனும் அன்றிரவு அங்கேயே தங்கினான். வெளிநாட்டுப் பயணத்தைப் பற்றிக் கூறிய பின், "அப்பாவுக்கும் எனக்கும் தகராறு. 'வீட்டு வாசற்படி ஏறாதே. முகத்திலே விழிக்காதே' என்று கத்திவிட்டுப் போயிருக்கிறார். நான் ஜமீந்தாரிடத்திலே மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று அப்பா முரண்டு பிடித்தார். நான் முடியாதென்று மறுத்தது பொறுக்காமல் அவருக்கு ஆத்திரம் வந்தது. அதற்கப்புறம் அவரும் என்னைப் பார்க்க வரவில்லை" என்று அவன் கூறிய போது அம்மா பெருமூச்சு விட்டாள். "என்னமோ போ! நீ இப்படியே வீட்டோட வாசலோட ஒட்டுதல் இல்லாத பிள்ளையாகப் போய்க்கிட்டிருந்தா விடிஞ்சாப் போலத்தான். ஏதுடா, பெரியவங்களையோ தன் மனிசாளின்னு ரெண்டு பேரையோ கலந்து பேசிக்காம இதெல்லாம் ஏற்பாடு செய்யறோமேன்னு நீ கொஞ்சமாவது கவலைப்படறியோ? தேசம் விட்டுத் தேசம் போயி ரெண்டு மூணு வருசம் இருக்கப் போறே! அதைப் பற்றிப் பெத்த தகப்பனிட்ட ஒரு வார்த்தை கேட்கலை. நீ செய்யறது உனக்கே நல்லாயிருந்தா சரி" என்று அலுத்துக் கொண்டாள் அவன் அம்மா. "உன்னைப் பார்க்காமல் சொல்லாமல் போக மனசு இல்லே அம்மா! தங்கைகள் ஆண்டாள், கல்யாணி இவர்கள் மேலே வைச்சிருக்கிற பிரியமும் ஒரு காரணம். இன்று இங்கே அப்பா இருந்திருந்தால் என்னை வீட்டு வாசற்படி ஏற விட்டிருக்க மாட்டார். என்னை விட இப்போது ஜமீந்தாரும், குடி கெடுக்கிற கண்ணாயிரமும் தான் ரொம்ப வேண்டியவர்களாகி விட்டார்கள் அவருக்கு. 'தன் மனிசாள்' என்று நீ சொல்கிறாய்! 'தன் மனிசாள்' என்ன நல்லது செய்யறாங்க? இதோ இந்தக் கலெக்டர் எப்போ எனக்கு வாத்தியாராயிருந்தாரு. நான் கேட்டுச் செய்யாமல் அவராகவே இவ்வளவும் எனக்கு செய்கிறார். இந்த மாதிரிப் பெருந்தன்மையைத் தன் மனிசாளிடத்திலே கூட எதிர்பார்க்க முடியறதில்லை" என்று சத்தியமூர்த்தி பதில் சொல்லிய போது குமரப்பனும் அதை ஆமோதிப்பது போல் அந்த அம்மாளிடம் இரண்டு நிமிஷம் ஏதோ தன்மையாகப் பேசிக் கொண்டிருந்தான்! "படுத்துக் கொள்ளுங்கள்! காலையில் பேசிக் கொள்ளலாமே" என்று இரண்டு பேருக்கும் படுக்கை தலையணைகளைக் கொண்டு வந்து கொடுத்து விட்டுப் போனாள் அம்மா. படுக்கையை விரித்துப் படுத்தவுடனே குமரப்பன் நன்றாகத் தூங்கிப் போய்விட்டான். சத்தியமூர்த்திக்குத் தூக்கம் வரவில்லை. மோகினி தனக்குத் துரோகம் செய்து விட்டு ஜமீந்தாரை இரகசியமாக மணந்து கொண்டு அவருக்கு உபசாரம் செய்கிறாள் என்பதை நம்பவும் முடியாமல் மறந்துவிடவும் முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது அவன் மனம். அவளோடு தொடர்புடைய எண்ணங்கள் ஒவ்வொன்றாக நினைவு வந்து அவனுடைய நிம்மதியையும் தூக்கத்தையும் பாழாக்கிக் கொண்டிருந்தன. இதே வீட்டு வாசலில் தன்னைத் தேடி வந்து இரயிலில் தான் தவறவிட்ட பேனாவைக் கொடுத்துவிட்டு, "என்னை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் வருகிறேன்" என்று சித்திரம் போல் அடக்கமாய் நின்று மோகினி தெருவிலிருந்தவாறே சிரித்தபடி தன்னைக் கைகூப்பிச் சென்றதும், அவளுடைய கைபட்டு மணந்த அந்தப் பேனாவை நெஞ்சின் மேலேயும் அவளைப் பற்றிய அனுதாபத்தை நெஞ்சின் உள்ளேயும் பதித்துக் கொண்டு அன்று தான் அவளுக்காக மனம் உருகியதையும் இப்போது நினைத்தான் சத்தியமூர்த்தி. அதன் பின்பு மீனாட்சி கோவில் பிரகாரத்தில், "உயிரைக் கொடுத்த தெய்வத்தைத் தரிசிக்க வந்தேன். அப்படி வந்த இடத்தில் உயிரைக் காப்பாற்றிய தெய்வத்தின் தரிசனம் கிடைத்திருக்கிறது" என்று சொல்லிவிட்டுக் கீழே குனிந்து அவள் தன் பாதங்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டதையும், "ஆதரவற்றதெல்லாம் ஏழைதான்! அந்த விதத்தில் உண்மையும் ஏழையாயிருப்பதில் தவறில்லை" என்று சிரித்தபடி தனக்கு மறுமொழி கூறியதையும், சித்திரா பௌர்ணமியன்று அவளுடைய நாட்டியத்தைப் பார்த்துத் தன் மனம் உருகியதையும், கடைக்கண்ணால் நோக்கிப் புன்னகை கிறங்கும் இதழ்களைத் திறந்து, "இந்த வீட்டில் நீங்கள் எடுத்து வாசிப்பதற்காகவே உங்கள் காலடியில் காத்துக் கிடக்கும் வாத்தியம் இதோ இருக்கிறது" என்று அவள் தன் நெஞ்சைத் தொட்டுக் காண்பித்ததையும், "அந்த அதிகாலை நேரத்தில் இரயிலில் மேளம் கொட்டாமல் நாதஸ்வரம் வாசிக்காமல் பாணிக்கிரணம் செய்து கொண்டது போல் கையைப் பிடித்து இழுத்தீர்களே" என்று அவள் தன்னிடம் உணர்வு மல்கக் கூறியதையும், கற்பையும் கன்னிமையையும் காத்துக் கொள்வதற்காகவே உயிர் நீத்த தன் பெரிய பாட்டி மதுரவல்லியோடு அவள் தன்னை ஒப்பிட்டுப் பேசியதையும், முருகன் படத்துக்கு அவள் சூட்டிய மாலை அதற்கு நேர் கீழே அமர்ந்திருந்த அவன் கழுத்தில் நழுவி விழுந்த போது அதைக் கழற்ற முற்பட்ட அவனுடைய தோள்களைப் பூச்செண்டு போன்ற தன் இரு வளைக்கரங்களாலும் பற்றிக் கொண்டு, "கழற்றாதீர்கள்! மாலையை எங்கே சூட்டவேண்டுமென்று நினைத்தேனோ அங்கேயே அது விழுந்துவிட்டது" என்பது போல் ஏதோ கூறிச் சிரித்ததையும் அவளுடைய வீட்டுக் கண்ணாடியில் தானும் அவளும் சேர்ந்து தெரிந்த கோலத்தை மணக்கோலமாக வருணித்து அவளே நாணியதையும் "என்னுடைய அன்பு, மழையைப் போல் எப்போதாவது பெய்து மறைவதில்லை. கதிரவனைப் போல் நித்தியமாக உதிப்பது" என்று அவளே உறுதி கூறியதையும் "உங்கள் ஞாபகத்தில் தங்கி வாழ்வதை விட எனக்கு வேறு பாக்கியமேது" என்று அவள் மனம் நெகிழ்ந்து கூறியதையும், அவளுடைய படங்களோடு குமரப்பன் தனக்குக் கடிதம் எழுதியிருந்ததையும், அவள் தனக்கு எழுதியிருந்த கடிதமொன்றைத் தன் பெட்டியிலிருந்து குமரப்பன் தெரியாமல் எடுத்துப் படித்துவிட்டுத் தன்னைப் பாக்கியசாலியாக வருணித்ததையும், கார் விபத்தில் தாய் இறந்து அவள் ஆஸ்பத்திரியில் கிடந்த போது நண்பனோடு மதுரைக்குப் போய்ப் பார்த்த வேளையில், "நான் மானசீகமாக உங்களுக்கு வாழ்க்கைப்பட்டு விட்டேன். சாகும் போது உங்கள் மனைவியாகவே சாவேன்" என்று அவள் தன்னிடம் அழுது கண்ணீர் சிந்தியதையும், வசந்தசேனை சாருதத்தன் கதையைத் தான் அவளுக்குக் கூறியதையும், பொன்னுசாமிப் பிள்ளைத் தெருப் பாட்டு வாத்தியாரிடம் அவளைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொண்டு தான் பெருமைப்பட்டதையும், கோச்சடை ஜமீன் மாளிகையில் அடைபட்டுக் கிடந்த போது அவள் தன்னிடம் அழுது வேண்டிய வேண்டுகோளையும், "உங்களோடு வாழ்ந்ததாகப் பாவித்தபடியே இறப்பது கூட என் சௌபாக்கியம்" என அப்போது அவள் கூறிக் கதறியதையும், அலங்கரித்த தேர் போல் அவள் தன் எதிரே நடந்த நாட்களையும், சிரித்த சிரிப்புக்களையும், அழுத அழுகைகளையும் எல்லாவற்றையும் நினைத்து - 'அப்படிப்பட்டவள் இன்று ஒழுக்கக்கேடும் குணக்கேடும் உள்ள இந்த ஜமீந்தாரை மணந்து அவருக்கு ஓடியாடி உபசாரம் செய்யத் துணிந்தது எப்படி? என்னால் இதை நம்பவே முடியவில்லை' என்று நினைத்து நினைத்து அந்த நினைப்புக்கு ஒரு முடிவும் தெளிவும் கிடைக்காமல் சத்தியமூர்த்தி மனம் கொதித்தான். 'பெண்ணிற் பெருந்தக்க யாவுள' என்று கற்புள்ள பெண்களைப் புகழ்ந்த அதே வள்ளுவர், 'இனம் போன்று இனமல்லார் கேண்மை மகளிர் மனம் போல வேறுபடும்' என்றும் வேறொரு இடத்தில் உறுதியாகக் கூறியிருக்கிறார். வேறுபடுவதில் பெண் மனம் அவ்வளவு பலமற்றதா? செய்த சத்தியங்களையும் சொல்லிய காதல் மொழிகளையும் அறவே மறந்து போய் இந்த ஜமீந்தார் காலடியில் விழுந்து பணிவிடை புரிய இவள் எப்படித் தன்னைத் தயாராக்கிக் கொண்டாள்? இவள் எக்கேடு கெட்டால் என்ன? நான் ஏன் இவளுக்காக இவ்வளவு தவிக்க வேண்டும்? இவ்வளவு நினைக்க வேண்டும்? என் மனம் இந்தத் தவிப்பையும் கொதிப்பையும் இன்னும் ஏன் விடமாட்டேனென்கிறது?' என்று தன்னையே கடிந்து கொண்டு வலிந்து தூங்க முயன்றான் அவன். விடிகாலை மூன்று மணிக்கு மேல் அயர்ச்சி தாங்காமல் தூக்கம் மெல்ல வந்தது. அதிலும் ஒரு சொப்பனம். 'சந்தேகம் உங்கள் கண்களை மறைக்கிறது! நான் துர்பாக்கியசாலி. என்னைக் கெட்டவளாக நினைக்காதீர்கள்' என்று மோகினி தன்னிடம் வந்து கதறுவது போல் கனவு கண்டான் அவன். காலையில் விடிந்ததும் பத்துப் பத்தரை மணிக்கு மறுபடியும் கலெக்டரைப் பார்க்கப் போனார்கள் அவர்கள். பாஸ்போர்ட், ரிஸர்வ் பேங்க் விண்ணப்பம் பற்றி அவர் சில யோசனைகளைக் கூறினார். சென்னையிலும் டில்லியிலும் சிலரைப் பார்க்குமாறு சத்தியமூர்த்திக்கு அறிமுகக் கடிதங்கள் கொடுத்தார். அவருடைய வீட்டிலிருந்து நேரே மீனாட்சியம்மன் கோவிலுக்குப் போனார்கள் நண்பர்கள். அம்மன் கோவிலில் திருச்சுற்றை வலம் வரும்போது அந்தப் பழிகாரியின் நினைவு வந்து சத்தியமூர்த்தியின் மனத்தைக் கலக்கியது. அன்று மாலை ஆறரை மணியளவில் அவன் சென்னைக்கு இரயிலேற வேண்டும். அதே இரயிலில் குமரப்பனும் அவனோடு கூட வந்து மல்லிகைப் பந்தல் ரோடு நிலையத்தில் இறங்கி அங்கிருந்து பஸ்ஸில் போய் விடுவதாக ஏற்பாடு செய்திருந்தார்கள். "டெல்லியில் இண்டர்வ்யூ முடிந்ததும் மதுரை வந்து என்னைப் பார்த்துவிட்டு அப்புறம் மல்லிகைப் பந்தலுக்குப் போய் உன்னுடைய ராஜிநாமாவைக் கொடுக்கலாம். நான் எல்லா விவரமும் சொல்கிறேன்" என்று கூறியிருந்தார் கலெக்டர். சந்தர்ப்பங்களும், அநுபவங்களும் மாறி வாய்ப்புகள் அணுகும் போது மனித வாழ்க்கை மிக வேகமாக ஓடி விடுவது போல் அவசரப்படுகிறது. எல்லாம் விரைந்து நடைபெறுவது போல் ஒரு பிரமை உண்டாகிறது. இப்போது சத்தியமூர்த்திக்கும் அந்தப் பிரமை உண்டாகியது. பொன் விலங்கு : ஆசிரியர் முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
|