17. கெட்ட சொப்பனமும் குழப்பமும் பேரன் விஜயரங்கனின் ஆசையை மறுக்க முடியாத காரணத்தால் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தின் கோபுரத்தில் ஏறிக்கொண்டிருந்தாலும் ராணி மங்கம்மாளுக்குப் படியேறி மேலே செல்வது களைப்பாகத்தான் இருந்தது. பாதிக் கோபுரம் ஏறிக் கொண்டிருக்கும் போதே "இங்கிருந்து ஒருவரைக் கீழே தள்ளினால் உயிர் பிழைக்க முடியுமா பாட்டி?" என்று முன்போலவே சிரித்தபடி கேட்டான் பேரன். ராணி மங்கம்மாள் மூச்சு இறைக்க நின்று ஆசுவாசப் படுத்திக் கொண்டபடி அவனுக்குப் புத்திமதி சொன்னாள்: "மேலே போகப்போக எண்ணங்கள் உயர்ந்தனவாக அமைய வேண்டும் அப்பா! மேலேயிருந்து யாரைக் கீழே தள்ளி விடலாம் என்று நினைப்பதைவிடக் கீழே இருக்கிற யாரை மேலே அழைத்து உயர்த்திக் கொள்ளலாம் என்று நினைக்கப் பழகவேண்டும்." "அப்படிப் பழகலாம் பாட்டி! ஆனால் கீழேயிருக்கிற ஒருவரை மேலே வரவழைக்க் நேரமும் சிரமமும் அதிகம். மேலே இருக்கிற ஒருவரைக் கீழே தள்ளிவிட அரைநொடிகூடப் போதுமானது...." "அற்பர்களுக்குத்தான் அப்படித் தோன்றும் விஜயரங்கா! நீ அற்பனாகிவிடக் கூடாது. பெருந்தன்மையானவனாக வளர்ந்து உருவாக வேண்டும். பெருந்தன்மை உள்ளவன் கீழே இருந்து சிரமப்படுகிறவனை மேலே கொண்டு வருவதற்கு முயலுவானேயன்றி, மேலேயிருப்பவனைக் கீழே தள்ளிவிட்டு மகிழ ஒருபோதும் முயலமாட்டான்." "பாட்டி! எனக்குப் பெருந்தன்மை கிடையாது. வேண்டவும் வேண்டாம்." அவன் இதைச் சொல்லும்போது அவர்கள் கோபுரத்தின் உச்சிக்கு வந்திருந்தார்கள். மேலே நீலவானின் விதானத்தில் பிறைநிலவு தெரிந்தது. நட்சத்திரங்கள் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன. காற்று இதமாக வீசியது. மெல்ல மெல்ல இருட்டிக் கொண்டு வந்தது. குபீரென்று அவள் மேல் பாய்ந்து கீழே தள்ளிவிட முயன்றான் விஜயரங்கன். "விளையாடாதே விஜயரங்கா! விளையாட்டு வினையாகிவிடும்." "இது விளையாட்டு இல்லை பாட்டி! உங்களை இங்கு அழைத்து வந்ததே இதற்குத்தான்" என்று சொல்லியபடியே பலங்கொண்ட மட்டும் முயன்று மறுபடி அவளைக் கீழே தள்ள முயன்றான் விஜயரங்கன். அவன் முகத்திலிருந்த குரூரத்தையும் கொலை வெறியையும் பார்த்துத் திடுக்கிட்ட ராணி மங்கம்மாள் பதறிப் போனாள். அவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா அல்லது திடீரென்று ஏதேனும் பேய், பிசாசு பிடித்து ஆட்டுகிறதா என்று அவளுக்குப் பயமாகப் போய்விட்டது. அவள் பரிதாபமாகக் கேட்டாள்: "ஏண்டா இந்தக் கெட்டபுத்தி? உன்னை வளர்த்து ஆளாக்கிய பாவத்திற்கு இதுவா நீ எனக்குத் தருகிற பரிசு?" "உன்னிடமிருந்து எனக்கு விடுதலை வேண்டும் பாட்டி! உனக்கும் வயதாகிவிட்டது." "துரோகி! நிஜமாகவே என்னைக் கீழே பிடித்துத் தள்ளுகிறாயே பாவி! நான் உனக்கு என்னடா கெடுதல் செய்தேன்? வளர்த்த கடா மார்பில் பாய்வது போல் இப்படி...?" அவள் அலறிக் கத்தினாள். விஜயரங்கன் அந்த உயரமான கோபுரத்திலிருந்து அவளைக் கீழே தள்ளியே விட்டான். அவள் வீறிட்டுக் கூக்குரல் எழுப்பியபடி தலைகுப்புற விழுந்து விட்டாள். கண்ட கனவை அலர்மேலம்மாவிடம் கூடச் சொல்வதற்குத் துணிவு வரவில்லை அவளுக்கு. கட்டிலில் இருந்து புரண்டு விழுந்ததில் உடம்பு வேறு வலித்தது. தூக்கக் கிறக்கத்தில் கட்டிலிலிருந்து புரண்டு விழுகிற அளவு அவள் ஒருநாளும் அவ்வளவு அயர்ந்து உறங்கினதே இல்லை. இன்று அந்த அளவு அயர்ந்து விட்டோம் என்ற நினைப்பே கூட அவளுக்கு நாணத்தை அளித்தது. விடிவதற்கு இன்னும் சில நாழிகைகளே இருந்தன. அவளுக்கு உறக்கம் கலைந்து விட்டது. மறுபடியும் உறங்கினால் எங்கே கெட்ட கனவு தொடருமோ என்ற அச்சமும் தயக்கமும் வேறு தடுத்தன. ராணியே உறங்காமலிருந்ததால் அலர்மேலம்மாளும் அவள் காலடியில் குத்த வைத்து உட்கார்ந்து கொண்டாள். அதிகாலையில் கண்ட கனவு பலிக்குமா, இல்லையா என்பதைப் பற்றி ராணியும் அவளும் அப்போது பேசிக்கொண்டார்கள். சிறுவயதிலிருந்தே ராணி மங்கம்மாளுடன் தோழியாகவும், பணிப்பெண்ணாகவும் இருந்து வரும் அநுபவத்திலும் உரிமையிலும் கனவுகளின் இயல்பையும், அவை பலிக்கும் விதத்தையும் விளக்கிக் கொண்டிருந்தாள் அலர்மேலம்மா. தன் வாழ்க்கை அநுபவத்திலும், கேள்விஞானத்திலும் அதிகாலையில் கண்ட கனவு பலித்திருக்கும் சந்தர்ப்பங்களை ஒவ்வொன்றாக அப்போது மங்கம்மாளுக்கு விவரித்தாள் அலர்மேலம்மா. வேண்டுமென்றே ஒரு பிடிவாதத்துக்காகவும், வம்புக்காகவும் தன் வாழ்வில் அதிகாலையில் கண்ட கனவு ஒன்று கூடப் பலிக்கவில்லை என்பது போல அவளிடம் வாதாடிக் கொண்டிருந்தாள் ராணி மங்கம்மாள். அதிகாலையில் கண்ட கனவு எந்த அளவு நிச்சயமாகப் பலிக்கும் என்று உறுதியாக அறியவே இந்த எதிர்பாராத வாதத்தை அவள் மேற்கொண்டிருந்தாள். மூத்தவளும், அனுபவசாலியும், லௌகிக ஞானம் மிக்கவளும் ஆகிய அலர்மேலம்மாவிடம் தான் கண்ட கனவைப் பற்றி மட்டும் மூச்சுவிடாமல் மற்றெல்லாவற்றையும் பேசிக் கொண்டிருந்தாள் ராணி. மனத்தில் பயமும் தற்காப்பு உணர்ச்சியும் மூளவே ராணி மங்கம்மாள் அவசர அவசரமாக நீராடி உடை மாற்றிக் கொண்டு திருவாலவாயுடையார் திருக்கோயிலுக்குச் செல்ல எண்ணினாள். பணிப்பெண் அலர்மேலம்மாளும் அந்த யோசனையை வரவேற்றாள். அலர்மேலம்மாளும் அவசர அவசரமாக நீராடி உடைமாற்றி நெற்றியில் சிவப்புக் கீற்றாக ஸ்ரீ சுவர்ணக் கோடு இழுத்துக்கொண்டு ராணியோடு புறப்பட்டாள். "போகிறது தான் போகிறோம்... கூடலழகர் கோயிலுக்கும் போய்த் தரிசித்து விட்டு வந்துவிடலாம் அம்மா!" என்றாள் அலர்மேலம்மா. "வெறும் சிவன்கோயிலுக்கு மட்டும் போவானேன்? பெருமாள் கோயிலுக்கும் சேர்த்தே போய்விட்டு வந்து விடலாம் என்கிறாயா?" "அதற்கில்லையம்மா! சிவன் அழிக்கிற கடவுள், நமக்கு வருகிற தீமைகளை எல்லாம் அவர் அழிக்கட்டும். பெருமாள் காக்கிற கடவுள். நம்முடைய நன்மைகளை எல்லாம் அவர் காக்கட்டும். இரண்டு பேரையும் தரிசிப்பதுதான் நல்லதம்மா" என்று சிரித்தபடியே சொன்னாள் அலர்மேலம்மா. இருள் பிரிவதற்குள் அத்தனை வைகறையிலேயே ராணி பல்லக்கில் கோயிலுக்குப் புறப்பட்ட போது அரண்மனை வட்டாரத்தில் ஆச்சரியத்தை உண்டாக்கியது அந்த நிகழ்ச்சி. அவர்கள் கோயிலுக்குப் புறப்படும்போதுகூட, குழந்தை விஜயரங்கன் அயர்ந்து தூங்கிக் கொண்டுதான் இருந்தான். குழந்தையைக் கவனித்துக் கொள்ள வேறொரு பணிப்பெண்ணை ஏற்பாடு செய்துவிட்டு அவர்கள் புறப்பட்டிருந்தார்கள். குழந்தை விஜயரங்கனுக்கு முறைப்படி முடிசூட்டிய பின்னர் இப்படி ஒரு சொப்பனம் நேர்ந்ததே என்பதுதான் அவள் கலக்கத்துக்குக் காரணமாயிருந்தது. அவனுக்கு முடிசூடியதற்கும் இந்தக் கெட்ட சொப்பனத்திற்கும் சம்பந்தம் இருக்குமோ என்று தன் மனம் நினைப்பதை அவளால் தடுக்க முடியவில்லை. கோயில்களில் அர்ச்சனைகள், வழிபாடுகளை முடித்துக் கொண்டு அரண்மனை திரும்பிய பின்னும் நீண்ட நேரம் விடிவதற்கு முன் கண்ட சொப்பனமே மனத்தின் எல்லை நிறைய ஆக்ரமித்துக் கொண்டு அவளை அலைக்கழித்தது. அது பற்றிய எண்ணங்களே மனத்தில் கிளைத்தன. தனது அரண்மனை அலுவலர்களிடமோ, மந்திரி பிரதானிகள், இராயசம் போன்றவர்களிடமோ இந்தக் கனவைப் பற்றிப் பேசவில்லை அவள். பலரிடம் மனம்விட்டுப் பேச இயலாமலும், முடியாமலும் இருந்ததாலேயே இந்தக் கனவு அவளை உள்ளூர அதிகம் அலைக்கழித்தது; அதிகம் பாதித்தது. கனவுகள், ஜோதிடம், சகுன சாஸ்திரம் சம்பந்தமான பண்டிதர்களை வரவழைத்து அவர்களிடம் 'தன் கனவு இது' என்று நேரடியாகச் சொல்லாமல் அதிகாலையில் ஒருவர் கிணற்றில் பிடித்துத் தள்ளுவதுபோலவும் இன்னொருவர் விழுவது போலவும் கனவு கண்டால் என்ன பலன் நேரக்கூடும் என்பதை மட்டும் சூசகமாக விசாரித்தாள். அவர்கள் கூறிய விளக்கங்களும் விவரங்களும், பலன்களும் அவளை மேலும் குழப்பத்தில் தான் ஆழ்த்தின. பயமும் நிம்மதியுன்மையும், கவலையும் தான் அதிகரித்தன. தொடர்ந்து சில நாட்கள் எவ்வளவோ முயன்றும் அவள் யாரிடமும் கலகலப்பாகப் பேச முடியவில்லை. சுபாவமாக இருக்க முடியவில்லை. மனத்தில் எதைஎதை எல்லாம் தவிர்க்க முயன்றாளோ அவையே மீண்டும் மீண்டும் தலை தூக்கின. நினைக்க வேண்டாம் - நினைக்கக் கூடாது என்று ஒதுக்க முயன்றவை அனைத்தும் நினைவில் வந்தன. நினைக்க வேண்டும், நினைக்கக் கூடும் என்று முயன்றவை அனைத்தும் நினைவில் வராமலே விலகிப் போயின. சில நாட்களுக்குப் பின், ஒரு தினம் மாலை வேளையில் தற்செயலாகவே அவளும் குழந்தை விஜயரங்கனும், தாதி அலர்மேலம்மாவும் வண்டியூர்த் தெப்பக்குள மைய மண்டபத்திற்குப் படகில் செல்ல வேண்டியிருந்தது. அந்தச் சிறிது நேரப் படகுப் பயணத்தின் போதும்கூட ராணி மங்கம்மாள் ஏனோ மன நிம்மதியற்றிருந்தாள். அவளால் உடனிருந்த அலர்மேலம்மாளுடனோ மற்றவர்களுடனோ கலகலப்பாகப் பேசமுடியவில்லை. கனவில் கண்டதே நிஜமாக நடந்து கொண்டிருப்பதைப் போன்று பிரமை உணர்வில் தட்டுவதைத் தவிர்க்கவும் முடியவில்லை. நடுத் தெப்பக்குளத்தில் படகு போய்க் கொண்டிருந்தபோது கொஞ்சம் ஆட்டம் அதிகமாயிருந்த சமயத்தில், "அலர்மேலம்மா! ஜாக்கிரதை... குழந்தையைத் தள்ளிவிடப் போகிறாய்... படகில், ஓரமாக வேறு உட்கார்ந்திருக்கிறாய்" என்று ராணி மங்கம்மாள் எச்சரித்தாள். அப்போது பதிலுக்கு வேடிக்கையாகச் சொல்லுவதாய் நினைத்துக் கொண்டு, "உங்கள் பேரனை அவ்வளவு சுலபமாகத் தள்ளி மூழ்கச் செய்து விடமுடியாது அம்மா! அவன் மற்றவர்களைத் தள்ளிக் கவிழ்த்து விடாமல் இருந்தாலே பெரிய காரியம்" என்று விளையாட்டாகப் பதில் பேசினாள் அலர்மேலம்மாள். அதைக் கேட்ட மங்கம்மாளுக்குத் துணுக்கென்றது. அலர்மேலம்மாள் இயல்பான நகைச்சுவையோடு பேசியிருந்தாலும் அதில் தீய நிமித்தம் இருப்பது போல் ராணி மங்கம்மாளுக்குத் தோன்றியது. சில விநாடிகள் அப்படியே பிரமை பிடித்தது போல் பேசாமலிருந்து விட்டாள் அவள். மற்றவர்கள் ஏதோ கேட்பதற்குப் பதில்கூட அவளால் சொல்ல முடியவில்லை. மைய மண்டபக் கரைக்காக இறங்க வேண்டிய படிக்கட்டு வந்ததும் படகு நின்றது. அப்படி நின்று சிறிது நேரமான பின்னரும் கூட அவளுக்கு மற்றவர்கள் நினைவூட்டிய பின்தான் கரையை அடைந்திருப்பது கவனத்தில் பதிந்தது. படகிலிருந்து இறங்கி மைய மண்டபத் தீவில் கால் வைப்பதற்கே பதறியது ராணி மங்கம்மாளுக்கு. "குழந்தையைக் கீழேயே வைத்துக் கொண்டிருந்து சுற்றிக் காட்டு! போதும்.. மைய மண்டபக் கோபுரத்துக்கெல்லாம் கொண்டு போக வேண்டாம்" என்று மங்கம்மாள் அலர்மேலம்மாளை எச்சரித்து வைத்தாள். என்ன காரணத்தால் ராணி அன்று அவ்வளவு அதிக எச்சரிக்கை எடுத்துக் கொள்கிறாள் என்பதை அறிய முடியாமல் அலர்மேலம்மாளும், மற்றவர்களும் வியப்படைந்தார்கள். வழக்கமாக அந்தக் தெப்பக் குளத்திற்கு வரும் போதெல்லாம் மைய மண்டபக் கோபுரத்தில் உச்சி வரை ஏறி, மதுரை நகரையும் கோயில்களையும் கோபுரங்களையும் ஒரு சேரக் காண முடிந்த வாய்ப்பையும் வசதியையும் இழக்காத ராணி இம்முறை ஏன் கோபுரத்தில் கண்டிப்பாக ஏறக்கூடாது என்கிறாள் என்பது அவர்களுக்குப் புரியாத மர்மமாகவே இருந்தது. பொழுது சாய்ந்து இருட்டுகிற வரை அவர்கள் தெப்பக் குளத்தின் மைய மண்டபத்திலேயே இருந்துவிட்டுத் திரும்பியிருந்தார்கள். அந்த அழகிய நீராழி மண்டபத்திற்கு வருவதற்கும், அது அமைந்த தீவிலிருந்து சுகமான மாலைக் காற்றை அனுபவிப்பதற்கும் எப்போதுமே அதிக ஆர்வம் காட்டும் ராணி ஏன் இம்முறை நிம்மதியற்றுப் போய் அங்கு நேரத்தைக் கழித்தாள் என்பதையும் யாராலும் விளங்கிக் கொள்ள முடியவில்லை. எல்லாரும் அரண்மனைக்குத் திரும்பிய பின்னரும் கூட அந்த நிலையே நீடித்தது. திடீரென்று ராணியின் மனத்தில் என்ன நேர்ந்து விட்டது என்பது யாருக்குமே புரியாத புதிராக இருந்தது. தெப்பக்குளத்திலிருந்து திரும்பிய பின் இராப்போஜனத்திற்காக அவள் செல்வதற்கு முன் முற்றிலும் எதிர்பாராத விதமாக இராயசமும் பிற பிரதானிகளும் அவசர அவசரமாக ராணி மங்கம்மாளைச் சந்திக்க வந்தனர். காரியம் ஏதோ மிகமிக அவசரமானதாகவும் முக்கியமானதாகவும் இருக்க வேண்டுமென்று தோன்றியது அவளுக்கு. சில நாட்களுக்கு முன் ஒரிரவு வைகறை வேளையில் கண்ட கெட்ட சொப்பனத்தின் விளைவாக ஏதேனும் கெடுதல் புதிதாக வந்திருக்குமோ என்ற தயக்கத்துடனேயே அவள் அவர்களை எதிர்கொண்டாள். இராயசத்தைக் கேட்டாள்: "விளக்கு வைக்கிற நேரத்துக்குத் தேடி வந்திருக்கிறீர்கள்! காரியம் மிக மிக அவசரமானதாகவும், முக்கியமானதாகவும் இருக்க வேண்டுமென்று தோன்றுகிறது." "உங்கள் அநுமானம் ஒரு சிறிதும் தவறில்லை மகாராணி!" "காரியம் என்னவென்று இன்னும் நீங்கள் வாய்விட்டுச் சொல்லவில்லையே?" "சொல்லத்தானே வந்திருக்கிறோம் மகாராணீ! நாடு பிடிக்கும் பேராசையால் மைசூர் மன்னன் சிக்க தேவராயன் மோசம் செய்து விட்டான்." "என்ன நடந்து விட்டது?" வந்தவர்கள் பதில் சொல்வதற்கு ஓரிரு கணங்கள் தயங்கினாற் போலப் பட்டது. அதற்குள் ராணி மங்கம்மாளின் மனத்தில் இருந்த குழப்பம் அதிகமாகி வளர்ந்தது. ராணி மங்கம்மாள் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
முடிவுரை
|