2. சின்ன முத்தம்மாளுக்குப் பெரிய முத்துமாலை படை வீரர்களின் குதிரைகள் கண்பார்வைக்கு மறைகிற வரை அந்தத் திசையிலேயே பார்த்துக் கொண்டிருந்தான் ரங்ககிருஷ்ண முத்துவீரப்பன். படை வீரர்களின் தோற்றம் கண் பார்வையில் தொலைதூரத்துப் புள்ளியாக மங்கி மறைந்த பின் தன் தாய் ராணி மங்கம்மாளின் பக்கம் திரும்பினான். "இது குனியக் குனியக் குட்டுவது போல் இல்லையா அம்மா? எவ்வளவு தான் பொறுத்துக் கொள்வது?" "மகனே! அரசியலில் பொறுமை என்பதன் அர்த்தமே வேறு. நமது எதிரிக்கு நாம் அடக்கமாக இருப்பதுபோல் தோன்றச் செய்துவிட்டு அவனை எதிர்க்க இரகசியமாக நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்வதற்குத் தான் பொறுமை என்று பெயர்." "நாம் இப்படி நினைக்கிறோம். ஆனால் நம் எதிரிகளோ தூங்கினவன் தொடையில் திரித்தமட்டும் கயிறு மிச்சம் என்று நினைக்கிறார்கள்." "நாம் தூங்கினால்தானே அவர்கள் கயிறு திரிக்க முடியும்?" தாயின் இந்தக் கேள்வியில் இருந்த குரல் அழுத்தம் மகனுக்குத் தெளிவாகப் புரிந்தது. அவள் நினைவோ உணர்வோ தூங்கவில்லை என்பதை அந்தக் குரல் புரியவைத்தது. தன்னை விட அதிக ஆத்திரம் அடைந்திருந்தும் தாய் அதை வெளிப்படுத்திக் கொள்ளாமல் உள்ளூறத் திட்டமிடுகிறாள் என்பதும் விளங்கிற்று. அங்கே தமுக்கம் ராஜமாளிகையின் மேல் மாடத்திலிருந்து கம்பீரமாகத் தெரிந்த மதுரை மாநகரின் முழுமையான தோற்றமும், வையை நதியும் நகரின் இடையே இருந்தாலும் நகரை விட நாங்கள் உயர்ந்தவை என்பதுபோல் மேலெழுந்த கோபுரங்களும் அவனுள்ளே இருந்த பெருமிதத்தை வளர்த்தன. அவன் தோள்களைப் பூரிக்கச் செய்தன. பகல் உணவுக்குப் பின் சிறிது களைப்பாறிவிட்டுத் தாயும், மகனும் திரிசிரபுரத்துக்குப் புறப்பட்டார்கள். அந்தப் பல்லக்குப் பயணம் மிகவும் பரபரப்பான மனநிலையோடு துரிதமாக மேற்கொள்ளப்பட்ட ஒன்றாக இருந்தது. வழி நெடுகிலும் இரைபட்டுக் கிடந்த வசந்த கால வளங்களைப் பார்க்கும் பொறுமையோ மனநிலையோ அப்போது அவர்களுக்கு இல்லை. மனதில் வேறு காரியமும் அதைப் பற்றிய கவலையும் இருந்தன. ஆற்றில் அழகர் இறங்குவதைத் தரிசனம் செய்து விட்டுத் திரும்புவோரும், தொடர்ந்து நடைபெறவிருந்த திருவிழாவைக் காண மதுரை மாநகருக்குச் செல்லுவோருமாகச் சாலையெங்கும் கலகலப்பாக இருந்தது. மதுரையின் திருவிழா வனப்பு சாலைகளிலும், சோலைகளிலும் தர்ம சத்திரங்களிலும் வழிப் பயணிகளிடமும் தேசாந்தரிகளிடமும் கூடத் தெரிந்தது. பால் பொழிவது போன்ற அந்த முழுநிலா இரவில் பிரயாணம் செய்யும் சுகத்தைக் கூட அவர்கள் அப்போது உணரவில்லை. சூரியாஸ்தமனமோ சந்திரோதயமோ கூட அவர்கள் மனத்தைக் கவரவில்லை. அந்தப் பல்லக்கில் அமர்ந்திருப்பவர்களின் மனநிலையைப் பிரதிபலிப்பதுபோல் அதைத் தூக்கிச் சென்றவர்கள் வாயு வேகத்தில் விரைந்து கொண்டிருந்தனர். ரங்ககிருஷ்ணன் பல்லக்கினுள் எதிரே அமர்ந்திருந்த தன் தாயைக் கேட்டான். "அம்மைய நாயக்கனூரிலிருந்தும் திண்டுக்கல்லிலிருந்தும் பாதுஷாவின் செருப்பு ஊர்வலத்தைப் பற்றிச் சொல்லிவிட்டுப் போக வந்தவர்களிடம் எனக்கு உடல் நலமில்லை என்றும் அதனால் நான் உடனே திரிசிரபுரம் திரும்புவதாகவும் சொல்லி அனுப்பினீர்களே, அதன் பொருள் என்ன அம்மா?" "பாதுஷாவின் செருப்பையும், அதைவிட அடிமைகளான ஏவலாட்களையும் மதுரையிலேயே நாம் ஏன் காத்திருந்து எதிர்கொண்டு சந்திக்கவில்லை என்பதற்கு ஏதாவது ஒரு காரணத்தைச் சாக்குப்போக்காகச் சொல்ல வேண்டுமே அதனால் தான்..." "மதுரையிலேயே அவர்களை எதிர்கொண்டு 'மாட்டேன்' என்று நேருக்கு நேர் மறுத்துவிட்டிருக்கலாமே அம்மா?" "அது ராஜதந்திரமில்லை மகனே! போருக்கும் விரோதத்துக்கும் முன்னால் முதலில் நாம் நமது எதிரியைப் போதுமான அளவு குழப்பவும் இழுத்தடிக்கவும் வேண்டும். நாம் என்ன செய்யப்போகிறோம் என்பது நம் எதிரிக்கு முன்கூட்டியே தெரிந்துவிடக்கூடாது. நமது எதிரி அதிகபட்சமான தவறுகளையும் குழப்பங்களையும் புரிந்து தடுமாறுகிற எல்லைவரை நாமே அவனைத் துணிந்து அனுமதிக்கவேண்டும். யாரைத் தேடி வந்திருக்கிறார்களோ அவனுக்கே உடல் நலமில்லை என்றால் அவர்களது வேகம் தானே மட்டுப்படும்? எதிரியின் அந்த வேகக் குறைவு நாம் வேகம் பெறப் பயன்படும்." தாயின் மறுமொழியில் இருந்த சாமர்த்தியமும், சாதுர்யமும் ரங்ககிருஷ்ணனை வியப்பிலாழ்த்தின. கிழக்கு வெளுத்துப் பின் மெல்ல மெல்லச் சிவக்கத் தொடங்கியது. அடிவான வெளுப்பில் அப்படியே ஒரு சித்திரத்தை எழுதிப் பதித்தது போல் மலைக்கோட்டையும் திரிசிரபுர நகரமும் தெரியத் தொடங்கின. புள்ளினங்களின் குரல்களும் அதிகாலையின் குளிர்ந்த காற்றும் பல்லக்கில் அமர்ந்திருந்தவர்களின் தளர்ச்சியைப் போக்கின. காவிரிக்கரை பிரதேசம் நெருங்க நெருங்கப் பல்லக்குத் தூக்கிகளின் உற்சாகம் அதிகமாகியது. பல்லக்குக்கு முன்னும் பின்னும் தீப்பந்தங்களோடு வெளிச்சத்துக்காக ஓடிக்கொண்டிருந்தவர்கள் தீவட்டிகளை அணைத்தார்கள். பல்லக்குத் தூக்கிகள் களைப்புத் தெரியாமலிருப்பதற்காகவும் உறங்கி விடாமல் இருப்பதற்காகவும் ஒரு சீரான குரலில் பாடிக்கொண்டிருந்த வழிநடைப் பாடல்கள் நகரம் நெருங்குவதையறிந்து ஒலி மங்கிப் படிப்படியாக நின்றன. உறையூரையும் கடந்தாயிற்று. பல்லக்கினுள் ராணி மங்கம்மாள் திருவரங்கமும் மலைக்கோட்டையும் இருந்த திசைகளை நோக்கிக் கைகூப்பினாள். ரங்ககிருஷ்ண முத்துவீரப்பனும் அந்தத் திசைகளை நோக்கித் தொழுதான். மங்கம்மாள் கூறினாள்: "மதுரையில் மீனாட்சி சுந்தரேசரும், கள்ளழகப் பெருமாளும் நம்மைக் காப்பாற்றி விட்டார்கள். இங்கே ரங்கநாதரும் மலைக்கோட்டைப் பெருமானும் காக்க வேண்டும்." "பாதுஷாவின் ஆட்கள் மதுரையோடு திரும்பிப் போய் விடமாட்டார்கள். இங்கேயும் வந்து தொல்லை கொடுப்பார்கள் என்றே தோன்றுகிறது அம்மா!" "மகனே! உத்தமமான வீரர்கள் நியாயமான முறையில் தன் எதிரியை மதித்து அவனை வெல்லவேண்டும் என்று மட்டுமே நினைப்பார்கள். மத்திமமான வீரர்கள் எதிரியை அழித்து அவன் உடைமைகள் பொருள்கள் பெண்டு பிள்ளைகளைச் சூறையாட வேண்டும் என்று நினைப்பார்கள். மிகவும் மூன்றாந்தரமானவர்கள் எதிரியை வெல்வதோடு அவனையும் அவனைச் சேர்ந்தவர்களையும் அவமானப்படுத்த வேண்டும் என்றும் நினைப்பார்கள். டில்லி பாதுஷ ஔரங்கசீப்பின் ஆட்கள் மூன்றாவது வகையைச் சேர்ந்தவர்கள் என்று தோன்றுகிறது." "இருக்கட்டும் அம்மா! மூன்றாந்தரமான அவர்களுக்கு நாம் முதல் தரமான பாடத்தைக் கற்பித்து அனுப்பலாம்." திரிசிரபுரம் கோட்டையில் புகுந்த பல்லக்கு அரண்மணை முகப்பில் இறக்கப்பட்டது. உயரமும் அதற்கேற்ற உடலழகும் நிறைந்த பேரழகி ஒருத்தி இளவரசன் ரங்ககிருஷ்ண முத்துவீரப்பனுக்கு ஆரத்தி சுற்றிக் கொட்டி வரவேற்றாள். ராணி மங்கம்மாள் ஆரத்திக்குக் காத்து நிற்கவில்லை. ராணியை அழைத்துக் கொண்டு பணிப்பெண்கள் அந்தப்புரத்துக்குள் சென்றுவிட்டார்கள். அழகாகக் கோலமிட்டு இருந்த தரையில் ஆரத்தி சுற்றிக் கொட்டிய பெண்ணிடம் ரங்ககிருஷ்ணன் புன்முறுவலுடன் வினவினான். "நீ வரைந்த கோலத்தை உன் ஆரத்தி நீரால் நீயே அழித்து விட்டாயே முத்தம்மா!" "சில திருக்கோலங்களைக் காண வந்தால் இப்படிச் சொந்தக் கோலங்கள் அழிவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது இளவரசே!" "மதுரை மாநகரத்தில் இருந்த சில நாட்களில் உன்னை ஒரு கணம் கூட மறக்க முடியவில்லை முத்தம்மா!" "அப்படியானால் பல கணங்கள் மறந்திருந்தீர்கள் போலிருக்கிறது". "அழகான பெண்கள் குதர்க்கமான பேச்சுக்களைப் பேசக் கூடாது." "இன்னும் கொஞ்ச நேரம் உங்களைப் பேச அனுமதித்தால் குதர்க்கமாகப் பேசுகிறவர்கள் அழகாக இருக்கக்கூடாது என்று கூடச் சொல்வீர்கள் போலிருக்கிறதே!" "சொல்லலாம் தான்! ஆனால் அந்தத் தத்துவம் உனக்கு மட்டும் பொருந்தவில்லையே என்றுதான் தயங்க வேண்டியிருக்கிறது" என்று கூறியபடியே அவளருகில் நெருங்கினான் ரங்ககிருஷ்ணன். அங்கங்கே நின்ற பணிப்பெண்கள் மலர் கொய்யப் போகிறவர்கள் போல் விலகி நந்தவனத்திற்குள் புகுந்தனர். "சற்று எட்டியே நிற்கலாம், திடீரென்று மகாராணியாரே வந்தாலும் வந்துவிடுவார்." "அந்தக் கவலை உனக்கு வேண்டாம் முத்தம்மா. அம்மா நீராடித் திருவரங்கத்திற்கும் மலைக்கோட்டைக்கும் முதலில் தரிசனத்திற்குச் சென்று விட்டுத்தான் வேறு பக்கம் திரும்பவே அவகாசமிருக்கும்." "மாமன்னர் சொக்கநாத நாயக்கருக்கும் ராணி மங்கம்மாளுக்கும் புதல்வராகத் தோன்றிய தாங்கள் படையெடுக்கத் தேசங்களும், எதிரிகளும் இல்லாமற் போயிற்றா என்ன? இப்படித் திடீர் திடீரென்று என்னைப் போல அபலைப் பெண்களின் மேல் படையெடுப்பது ஏனோ?" "மன்மதன் காரணமாக இருந்து நடக்கிற ஆக்கிரமிப்புகள் எதிரிகளோடு நடப்பதில்லை பெண்ணே! பரஸ்பரம் இருவருமே ஜெயிக்கிற போருக்கு எதிரி ஏது? நண்பன் ஏது?" "மதுரை மாநகரிலிருந்து உங்கள் பிரியத்துக்குரியவளுக்கு என்ன வாங்கி வந்தீர்களாம்?" - அவள் குரலில் பிணங்குவது போன்ற சிணுக்கம் ஒலித்தது. ரங்ககிருஷ்ணன் அவளது சின்ன இடையைத் தன் கரங்களால் வளைத்துத் தழுவினான். பின் தனது இடுப்பிலிருந்து பட்டுத் துணியாலான சுருக்குப்பை ஒன்றை எடுத்துப் பிரித்துப் பளீரென்று மின்னும் அழகிய பெரிய முத்துமாலை ஒன்றை அவள் கழுத்தில் அணிவித்தான். "சின்ன முத்தம்மாவுக்குப் பெரிய முத்துமாலை." "இந்த முத்துமாலையை விட்டால் மதுரை மாநகரத்தில் வாங்கிவர வேறென்ன கிடைக்கப்போகிறது உங்களுக்கு?" "நீ வாய்விட்டுக் கலீர் கலீரென்று சிரிக்கும் போதெல்லாம் உன் பல் முத்துக்களைப் பார்த்து இந்தப் புகழ்பெற்ற கொற்கை முத்துக்கள் அவமானப்பட்டுப் புழுங்கட்டுமே என்றுதான் இவற்றை வாங்கி வந்தேன்." "ஆகா! பிரமாதம்! பிரமாதம்! நீங்கள் இந்த இளவரசுப் பொறுப்பை விட்டுவிட்டு, கவி எழுதவே போகலாம்." "பாடுவதற்குரிய பொருளாக அல்லது பாத்திரமாக உன்னைப் போல் வசீகரமான பேரழகி ஒருத்தி கிடைப்பதாயிருந்தால் அதற்கும் நான் சித்தமாயிருக்கிறேன் முத்தம்மா!" "அப்படியானால் ஓர் அழகான பெண் அகப்பட்டால் இருக்கிற பொறுப்புகளை எல்லாம் கைகழுவத் துணிவீர்கள் என்று சொல்லுங்கள்!" "எல்லா அழகான பெண்களுக்காகவும் அல்ல. இந்தச் சின்ன முத்தம்மாள் என்கிற ஒரே ஓர் அழகிக்காக மட்டும் தான் அதைச் செய்யமுடியும்." அவள் நாணித் தலைகுனிந்தாள். மணமுள்ள பூவுக்கு நிறம் போல அழகிய அவளுக்கு அந்த நாணம் மேலும் அழகூட்டியது. உயரத்திலும் வனப்பு வாய்ந்த கட்டழகுத் தோற்றத்திலும் முத்தம்மாள் ரங்ககிருஷ்ணனுக்கு இணையாக இருந்தாள். அந்த அரண்மனையிலேயே நம்பிக்கைக்குரியவளாக வளர்ந்த முத்தம்மாளும் ரங்ககிருஷ்ணனும் ஒருவருக்கொருவர் மிக நெருக்கமாகவும், பிரியமாகவும் நேசிப்பது ராணிமங்கம்மாளுக்குத் தெரிந்த விஷயம் தான். ஆனால் எல்லோருக்கும் ஒரு சிறிய சந்தேகமும் இருந்தது. நாயக்க வம்சத்தில் பலர் வைத்துக் கொண்டிருந்தது போல் அந்தப்புரத்து உரிமை மகளிரில் ஒருத்தியாக முத்தம்மாளை ஏற்றுக் கொள்வார்களா? அல்லது ரங்ககிருஷ்ணனின் பட்டத்தரசியாகவே ஏற்பார்களா என்பது சந்தேகத்துக்கிடமானதாயிருந்தது. ராணி மங்கம்மாள் குடிப்பிறப்பு அந்தஸ்து என்றெல்லாம் பார்த்து எங்கே முத்தம்மாளை வெளிப்படையாகப் பட்டத்து மகிஷியாய் ஏற்காமல் அந்தப்புரத்து மகளிர் எனற அழகு மந்தைக்குள் தள்ளிவிடுவார்களோ என்னும் பயத்துக்குக் காரணமில்லாமலில்லை. ராணி மங்கம்மாளை மணப்பதற்கு முன் அவள் கணவர் சொக்கநாத நாயக்கர் தஞ்சை நாயக்க அரசபரம்பரையைச் சேர்ந்த விஜயராகவ நாயக்கரின் வம்சத்தில் பெண்ணெடுக்க முயன்று முடியாமற் போயிற்று. காரணம், தஞ்சை நாயக்க வம்சம் விஜயநகர அரச வம்சத்துக்கு இணையான அந்தஸ்து உடையது என்றும், மதுரை நாயக்க வம்சம் அத்தகைய அந்தஸ்து உடையதில்லை என்றும் சொல்லப்பட்டது. அதிலிருந்தே தஞ்சை நாயக்க வம்சத்துக்கும் மதுரை நாயக்க வம்சத்துக்கும் விரோதம் நீடித்தது. விஜயநகர மாமன்னராய் இருந்த அச்சுதராயரின் தங்கை கணவரான செல்லப்ப நாயக்கர் தஞ்சையில் ஆண்ட நாயக்க வம்சத்தின் முதல்வர். ஆனால் சொக்கநாத நாயக்கரோ பேரரசின் ஊழியராக நியமனம் பெற்று மதுரைக்கு வந்த விசுவநாத நாயக்கரின் வழித்தோன்றல்களில் ஒருவர். நேரடியான அரசவம்சமில்லை. இந்த அந்தஸ்துப் பிரச்சனை சொக்கநாத நாயக்கரையே உறுத்தியது; இதே அந்தஸ்தை மனதில் கொண்டு ரங்ககிருஷ்ணனுக்கு எந்த அந்தஸ்துமில்லாமல் சிறு வயதிலிருந்தே அரண்மனையில் வளர்ந்துவரும் முத்தம்மாளை மணமுடிக்கத் தயங்குவார்களோ என்ற சந்தேகம் சகலருக்கும் இருந்தது. தாங்கள் உயர்ந்த ராஜவம்சம் என்று மற்றவர்களுக்கு நிரூபித்துக் காட்டுவதற்காகவே ராஜபரம்பரையில் மங்கம்மாள் தன் மருமகளைத் தேடக்கூடும் என்ற எண்ணம் அரண்மனை வட்டாரத்தில் பரவலாக நிலவியது. ஆனால் ரங்ககிருஷ்ணனோ தன் ஆருயிர்க் காதலி பேரழகி முத்தம்மாளுக்கு வாக்குக் கொடுத்திருந்தான். "மணந்தால் உன்னை மட்டுமே மணப்பேன். உடலாலும் உள்ளத்தாலும் உன் ஒருத்திக்கு மட்டுமே நாயகனாக இருப்பேன்." இப்படி அவன் வாக்களித்தபோது முத்தம்மாள் அவனிடம் ஞாபகமாக ஒன்றைக் கேட்டிருந்தாள். "உங்கள் அரசவம்சத்தில் ஒவ்வோர் இளவரசரும் குறைந்தது இருநூறு பெண்களுக்காவது வாக்களித்திருக்கிறார்கள். இருநூறு பேரையும் அந்தப்புரத்தில் ஆசை நாயகிகளாக வைத்துக்கொண்டு அந்த வாக்கைக் காப்பாற்றி விட்டு அப்புறம் ஒரு பட்டத்து அரசியையும் மாலையிட்டு மணந்திருக்கிறார்கள். நீங்களும் அப்படி ஒரு வாக்குறுதியைத்தானே எனக்கு அளிக்கிறீர்கள்? அப்படி வாக்குறுதிக்கும் நீர்மேலெழுதிய எழுத்துக்கும் என்ன வித்தியாசம்?" "இல்லை முத்தம்மா! எங்கள் வம்சத்திற்கே இது விஷயத்தில் நான் முன்னுதாரணமாக இருப்பேன். எனக்குப் பட்டத்தரசி, ஆசை நாயகி எல்லாமுமாக நீ ஒருத்திதான் இருப்பாய்" என்று அப்போது அவன் அவளுக்கு உறுதி கூறி வாக்களித்திருந்தான். ஆனால் மகாராணியும் அமைச்சர்கள் பிரதானிகள் ஆகியோரும் மூத்தவர்களும் பட்டத்தரசி விஷயமாக முடிவு செய்யும்போது அரசியல் காரியங்களைக் கொண்டு முடிவு செய்வார்களோ அல்லது ரங்ககிருஷ்ணனின் சொந்த இலட்சியத்துக்காக முடிவு செய்வார்களோ என்ற கலக்கமும் ஐயமும் முத்தம்மாளுக்கே உள்ளூற இருந்தன. "ஓர் அரச வம்சத்துக்கு இளவரசரின் திருமணம் என்பது அவனுடைய சொந்த ஆசையைப் பொறுத்தது மட்டுமில்லை. அவனது ஆசை மிகவும் சிறிய குறைந்த முக்கியத்துவமுள்ளதாகி அதைவிடப் பெரிய முக்கியத்துவமுள்ள ராஜதந்திர பிரச்சனைகளுக்காகவும் அது எதிர்பாராத விதமாக நடந்துவிடலாம். உலகில் பல அரச குடும்பங்களில் அப்படித்தான் நடந்திருக்கிறது" என்றெல்லாம் முத்தம்மாளே ரங்ககிருஷ்ணனிடம் விளையாட்டாகவும் வினையாகவும் வாதிட்டிருக்கிறாள். இன்றும் கூட மதுரையிலிருந்து திரும்பியிருந்த இளவரசரிடம் அதேபோலச் சொல்லிப் பிணங்கினாள் அவள். "அரசகுமாரர்கள் காதல் வேட்கை மிகுதியால் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு அளிக்கும் மோதிரங்கள் முத்து மாலைகள் எல்லாம் வரலாற்றில் துயரங்களின் சாட்சியாக நிரூபணமாகி இருக்கின்றனவே ஒழியச் சத்தியங்களின் சாட்சியமாகவோ சாத்தியங்களின் சாட்சியமாகவோ நிரூபணமானதாக ஒரு சின்ன உதாரணம் கூட இல்லையே இளவரசே?" "நீ அதிகம் தான் சந்தேகப்படுகிறாய் முத்தம்மா!" "சாம்ராஜ்யாதிபதிகள் விஷயத்தில் சந்தோஷப்படுவதை விட அதிகம் சந்தேகப்பட வேண்டிய அவசியம் தான் இருக்கிறது இளவரசே! சகுந்தலை ஏமாந்தாள். காளிதாஸனுக்குக் காவியம் கிடைத்தது. என்னைப்போல் ஓர் அப்பாவி ஏமாந்தால் வரலாறுகூட அதை மறந்துவிடும். அல்லது மறைத்துவிடும்." "உனக்கு எதற்குக் காவியம் முத்தம்மா! நீயே ஒரு நடமாடும் காவியமாக இருக்கிறாயே?" "எல்லா அரசகுமாரர்களுக்கும் எது தெரிகிறதோ தெரியவில்லையோ, வஞ்சகமில்லாமல் புகழத் தெரிகிறது. புகழ் என்பது செலவில்லாதது. சுலபமானது...! காற்றோடு போய்விடக் கூடியது." "உன் விஷயத்தில் அது இயற்கையானது. பொருத்தமானது. உன்னைப் புகழும் போது வார்த்தைகள் ஏழ்மை அடைந்து விடுகின்றன. பொருள் வறுமைப்பட்டுப் போகிறது." "போதும் உங்கள் புகழ்! என் தோழிகள் நந்தவனத்திலிருந்து திரும்புவதற்குள் நானும் அங்கு போக வேண்டும். இல்லையானால் அவர்களே இங்கு என்னைத் தேடிக்கொண்டு வந்து விடுவார்கள். நான் போய் வருகிறேன்" என்று ரங்ககிருஷ்ணனிடமிருந்து விடுபட்டு நந்தவனத்துப் பக்கமாக நழுவினாள் முத்தம்மாள். பொற்சிலை போன்ற அவள் நடந்து செல்லும் அழகை இரசித்தபடி நின்றான் ரங்ககிருஷ்ணன். எதிர்பாராத விதமாக அன்று அவனையும் திருவரங்கம் கோவிலுக்கு வரவேண்டும் என்று தாய் மங்கம்மாள் திடீரென்று வேண்டவே அவனும் நீராடித் தாயுடன் தரிசனத்துக்குப் புறப்பட வேண்டியதாயிற்று. பல்லக்கில் போகும் போது தாய் அவனிடம் மீண்டும் டில்லி பாதுஷா விஷயத்தை அவளாகவே தொடங்கினாள். "ஔரங்கசீப்பின் ஆட்கள் இங்கு வர இன்னும் இரண்டு மூன்று நாட்கள் ஆகலாம். அதற்குள் இங்கே சில முக்கிய மாறுதல்கள் நடந்தாக வேண்டும். இப்போது இந்த அரண்மனையிலுள்ள இரண்டுங்கெட்ட நிலை நீடிக்கக்கூடாது. நான் இதுவரை உனக்குப் பட்டம் சூட்டவில்லை. முழுமையாக நானேயும் ஆளவில்லை. கணவனை இழந்த நிலையில் ஏதோ சமாளிக்கிறேன். எதிரிகள் வந்து நம் கதவைத் தட்டும் போது எவ்வளவுதான் கெட்டிக்காரியாக இருந்தாலும் ஒரு பெண் என்ற முறையில் சிலவற்றை நான் எதிர்கொள்வதில் பல பண்பாட்டுச் சிக்கல்கள் உண்டாகும் மகனே! அந்நிய அரசன் அந்நிய மதத்தைச் சேர்ந்தவன். ஒரு செருப்பை அனுப்பிக் 'கும்பிடு' என்கிறான். என்னைப்போல் ஓர் அரச குடும்பத்துப்பெண் அதை ஆதரிக்கவும் முடியாது. எதிர்த்து அவமதித்தாலும் ஒரு பெண் அவமதித்த விட்டாளே என்ற உணர்வில் எதிரியின் ஆத்திரம் பலமடங்கு அதிகமாகும். எதிர்க்கவும் வேண்டும். நாம் எதிர்த்தது நியாயமென்றும் ஆண்மையென்றும் எதிரிக்கு உறைக்கும்படி எதிர்க்கவும் வேண்டும். என்ன செய்வதென்று முடிவைப் பள்ளிகொண்ட பெருமாளிடமே கேட்கப் போகிறேன் மகனே!" "எப்படி அம்மா?" "பூக்கட்டி வைத்துப் பார்த்தால் அரங்கன் முடிவைச் சொல்லுவான் அப்பா!" அவர்கள் பேசிக்கொண்டிருந்த போதே பல்லக்கு சந்தனமும் சண்பகமும் பச்சைக் கர்ப்பூர வாசனையும் மணந்து கொண்டிருந்த திருவரங்கமுடையானின் சந்நிதி முகப்பில் போய் இறங்கியது. ராணி மங்கம்மாள் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
முடிவுரை
|