24. பிரிட்டோ பாதிரியார் கொலையும் பின் விளைவுகளும் கிழவன் சேதுபதியைப் போலவே அரசுரிமை வாரிசுகளில் ஒருவராக இருந்த தடியத்தேவர் என்பவரை ஜான்டி பிரிட்டோ பாதிரியார் முயன்று கிறிஸ்தவராக மதம் மாற்றி விட்டார். போர்ச்சுகலுக்குப் போய்விட்டுத் திரும்பி வந்தவுடன் அவர் செய்த மதமாற்றங்களில் இது மிகவும் பெரியதாகவும், சர்ச்சையைக் கிளப்பக் கூடியதாகவும் அமைந்தது. இம்முறை பிரிட்டோ பாதிரியாரும் தாம் இதற்கு முன்பு செய்தது போல் தயக்கமோ பயமோ இல்லாமல் தமது உயிரையே இழந்தாலும் பரவாயில்லை என்கிற அளவு துணிச்சலுடன் மதமாற்ற முயற்சிகளில் தீவிரமாக இறங்கினார். இராமநாதபுரத்து மறவர் சீமையைச் சேர்ந்த இந்துக்களின் எதிர்ப்பைக்கூட அவர் பொருட்படுத்தவில்லை. கிழவன் சேதுபதிக்குப் பிறகு அல்லது அவர் உயிருடன் இருக்கும்போதே ஆட்சி தடியத்தேவருக்குக் கிடைக்கும்படிச் செய்யப்படும் என்ற ஆசை வார்த்தைகளும் கிழவன் சேதுபதி மேலிருந்த வெறுப்புமே தடியத் தேவர் கிறிஸ்தவத்தை விரும்பி ஏற்கச் செய்திருந்தன. இராமநாதபுரம் மன்னர்களுக்குப் பல மனைவியர் இருந்ததினால் அரசுரிமை வாரிசுகள் என்று சிலரே தகுதி பெற்றனர். அந்தச் சிலரில் கிழவன் சேதுபதி பட்டம் ஏற்றிருக்காவிட்டால் தடியத்தேவர் தான் பட்ட மேற்றிருப்பார் என்கிற அளவிற்கு நெருக்கமாக இருந்தும் அவரது வாய்ப்புத் தவறிப் போயிருந்தது. தடியத்தேவர் விரக்தியோடிருந்தார். அத்தகையவரைத் தேடிப் பிடித்துக் கிறிஸ்தவராக்கிய ஜான்டி பிரிட்டோவின் செயல்கள் கிழவன் சேதுபதிக்குப் பலத்த சந்தேகங்களை உண்டாக்கின. ஆட்சியை அபகரிப்பதற்கான சதியோ என்றுகூட இதனைப் பற்றிக் கிழவன் சேதுபதி நினைத்தார். இந்தச் சந்தேகத்துக்குக் காரணம் இல்லாது போகவில்லை. கிழவன் சேதுபதி மறவர் சீமையின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்காவிட்டால் தடியத்தேவர் தான் அதை ஏற்றிருப்பார் என்கிற அளவு நெருக்கமான வாரிசாக இருந்தார் அவர். தடியத்தேவரை மதம் மாற்றியது கிழவன் சேதுபதியைச் சீறி எழ்ச் செய்தது. இதற்கு மற்றொரு காரணமும் இருந்தது. தடியத்தேவர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறும்முன் தமக்கிருந்த ஐந்து மனைவிமார்களில் நான்கு பேரை விலக்கிவிட்டு ஒரே ஒருத்தியை மட்டும் மனைவியாக ஏற்க வேண்டியதாயிற்று. மற்ற நால்வரையும் தள்ளி வைப்பது தவிர்க்க முடியாது போயிற்று. அப்படி அவர் நீக்கி வைத்த நான்கு மனைவிமார்களில் ஒருத்தி கிழவன் சேதுபதியின் சகோதரி மகளாக இருந்தாள். மணவாழ்வில் சுகங்களை அதிகம் அடையாத இளம் பெண்ணாக இருந்த அவள் தன் கணவன் தடியத்தேவரிடம் போய்த் 'தன்னைத் தொடர்ந்து மனைவியாக ஏற்றுக்கொள்ளும்படி' கெஞ்சிப் பார்த்தாள். தடியத்தேவர் பிடிவாதமாக அதற்கு மறுத்துவிட்டார். கணவன் மறுத்தவுடன் நேரே தன்னுடைய தாய் மாமனான கிழவன் சேதுபதியிடம் போய் நடந்த விவரங்களைத் தெரிவித்தாள் அந்தப் பெண். கூடப் பிறந்தவளின் மகள் தன்னிடம் வந்து கதறியழுது கண்ணீர் சிந்தியதைக் கண்டு மனம் கொதித்தார் சேதுபதி. தடியத்தேவர் மேல் எழுந்த ஆத்திரம் அவர் மாறிய மதத்தின் மேலும் அவரை அப்படி மாற்றியவர்கள் மேலும் பாய்ந்தது. தடியத் தேவரின் மத மாற்றத்தைப் பெரிய அரசியல் சதியாகக் கருதினார் சேதுபதி. தடியத் தேவரைக் கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றியதன் மூலம் நமது அரசையும், ஆட்சியையும் கவிழ்ப்பதற்கு ஏற்பாடு நடப்பதாக சேதுபதியும் அவருடை நெருங்கிய நண்பர்களும் நினைத்தார்கள். பெருவாரியான மறவர் சீமை வீரர்களும் அப்படியே எண்ணினார்கள். அதன் விளைவாக மறவர் சீமையில் பெரும் புயல் எழ்ந்தது. சேதுபதியின் கட்டளைப்படி மறவர் நாடு முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்கள் இடித்துத் தள்ளப்பட்டன. பாதிரியார்கள் பலத்த கொடுமைக்கு ஆளாயினர். "என் சகோதரி மகளை வாழாவெட்டியாக்கி என் ஆட்சியையும் அழிப்பதற்கு ஏற்பாடு நடக்கிறது! இதை நான் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது" என்று குமுறி எழுந்த சேதுபதி பிரிட்டோ பாதிரியாரையும் ஏனைய பாதிரிமார்களையும் சிறைச்சாலையில் பிடித்து அடைக்கும்படி உத்தரவிட்டார். வெளியூரில் சிறைப்படிக்கப்பட்ட பிரிட்டோ பாதிரியார் இராமநாதபுரம் கொண்டு வரப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பிரிட்டோ பாதிரியார் சிறைவைக்கப்பட்ட சமயம் தடியத்தேவரும் இராமநாதபுரத்தில் தான் இருந்தார். பாதிரியாரை எதுவும் செய்தால் தடியத்தேவர் கலவரம் விளைவிக்கக்கூடும் என்று தயங்கினார் கிழவன் சேதுபதி. தடியத்தேவர் இராமநாதபுரத்திலேயே தொடர்ந்து தங்கியிருந்தது பிரிட்டோ பாதிரியார் விஷயத்தில் ஒரு முடிவெடுக்க முடியாமல் சேதுபதியைத் தயங்க வைத்தது. இராமநாதபுரத்தில் வெடித்த இந்தக் கிறிஸ்தவ எதிர்ப்பு உணர்ச்சி மெல்ல மெல்ல தஞ்சைக்கும் பரவியது. தஞ்சை மன்னன் உடையார் பாளையம் குறுநில மன்னனுக்கும், திரிசிரபுரத்திலிருந்த ராணி மங்கம்மாளுக்கும் அவரவர்கள் நாட்டிலிருந்த கிறிஸ்தவர்களை உடனே வெளியேற்றுமாறு தன் கைப்பட எழுதியனுப்பினான். வேறு காரணங்களுக்காகத் தஞ்சை நாட்டுடன் ராஜதந்திர நட்பு வைத்துக் கொண்டிருந்தாலும் அந்நாட்டு மன்னனின் கிறிஸ்தவ எதிர்ப்புச் சம்பந்தமான யோசனையை ராணி மங்கம்மாள் ஏற்கவில்லை. சேதுபதியைப் போலவோ, தஞ்சை மன்னனைப் போலவோ நடந்து கொள்ளாமல் நேர்மாறாகத் தன் ஆட்சி எல்லைக்குட்பட்ட நிலப்பரப்பில் கிறிஸ்தவர்கள் எப்போதும் போல் அமைதியாகவும், நலமாகவும் வாழுமாறு பார்த்துக் கொண்டாள் அவள். எல்லா மக்களிடமும் காட்டிய அன்பையும் ஆதரவையும், பரிவையும், கிறிஸ்தவர்கள் மேலும் காட்டினாள். அவர்கள் பாதுகாப்பாக வாழுமாறு பார்த்துக் கொண்டாள். "கிறிஸ்தவர்களை நாட்டை விட்டு வெளியேற்றாவிட்டால் இந்து சமயத்துக்கும், இந்துக் கோயிலுக்கும், இந்துக்களால் ஆளப்படும் அரசாட்சிக்கும் உடனடியாக ஆபத்து ஏற்படும்" என்று தஞ்சை மன்னன் ராணி மங்கம்மாளுக்கு மிகவும் வற்புறுத்தி எழுதியிருந்தான். "இறைச்சி உண்பவர்கள் எல்லாரும் அருகில் வாழ்ந்தாலே அரிசிச் சாதம் உண்பவர்கள் அனைவருக்கும் உடனடியாக ஆபத்து என்பது போலிருக்கிறது உங்கள் கூற்று. அதை நான் ஏற்பதில்லை. காய்கறி, அரிசிச் சோறு உண்பவர்களையும், இறைச்சி, மீன் உண்பவர்களையும் எப்படி ஒரே ஆட்சியின் கீழ் சம உரிமைகளோடு மக்களாக வாழ விடுகிறோமோ அப்படித்தான் இந்தப் பிரச்சனையையும் நான் பார்க்கிறேன். ஓர் ஆட்சியின் கீழ் வாழும் மக்களில் யார் எந்த எந்த மதநெறியை ஏற்றுக்கொண்டு அநுசரித்து வாழ விரும்பினாலும் அதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. அதுதான் தர்மம். இதை அரசாட்சி வற்புறுத்தித் திணிக்க முடியாது என்று நினைக்கிறேன்" என்று தஞ்சை மன்னனுக்கு மிக விளக்கமாக மறுமொழி அனுப்பியிருந்தாள் ராணி மங்கம்மாள். சேதுபதி கிறிஸ்தவர்களை எவ்வளவுக்கு எவ்வளவு வெறுத்தாரோ அவ்வளவுக்கு அவ்வளவு ராணி மங்கம்மாள் அவர்கள் மேல் அன்பும் ஆதரவும் காட்டினாள். பங்காளித் தடியத்தேவருக்குத் தெரியாமலே பாம்பாற்றங்கரையில் இருந்த ஓரியூருக்குப் பிரிட்டோ பாதிரியாரை அனுப்பி அங்கு அவரைக் காவலில் வைக்க ஏற்பாடு செய்தார் கிழவன் சேதுபதி. ஓரியூர் சேதுபதியின் ஆட்சிக்கு அடங்கிய சிறு தலைக்கட்டி ஒருவரால் நிர்வாகம் செய்யப்பட்டு வந்தது. சேதுபதிக்கு மிகவும் வேண்டியவர் அந்த ஓரியூர்த் தலைக்கட்டுத் தேவர். அந்தத் தேவருக்கு எழுதியனுப்பிய அந்தரங்கக் கடிதத்தில் பாதிரியாரைக் கண்டம் துண்டமாக வெட்டிக் கொன்று விடுமாறு உத்தரவு இட்டிருந்தார் கிழவன் சேதுபதி. ஓரியூர்த் தலைக்கட்டு பாதிரியாரைக் கொல்லத் தயங்கினார். ஆனால் அவருடைய பிரதானியாயிருந்த முருகப்பப் பிள்ளை என்பவர் துணிந்து சேதுபதியின் கட்டளைப்படி பாதிரியாரை உடனே கொன்றுவிட வேண்டும் என்றும் இல்லாவிட்டால் சேதுபதியின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்றும் தேவரை வற்புறுத்தி நிர்ப்பந்தப்படுத்தினார். கிழவன் சேதுபதியின் கடுங்கோபத்துக்கு ஆளாகிச் சிரமப்படுவதைவிடப் பாதிரியாரைக் கொன்று விடுவது நல்லது என்ற முடிவுக்கு வந்தார் ஓரியூர்த் தலைக்கட்டுத் தேவர். இம்முடிவின் விளைவாக ஜான்டி பிரிட்டோ பாதிரியார் கொல்லப்பட்டார். அவர்களுடைய உடல் சின்னாபின்னப்படுத்தப் பெற்றுக் கழுகுகளுக்கு உணவாக இடப்பட்டது. நீண்ட நாள்களுக்கு இந்தக் கொலை இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. மறவர் சீமையில் எழுந்த புயலும் ஓயவில்லை. தொடர்ந்து கிறிஸ்தவ சமய அன்பர்களும், மதகுருமார்களும் தொல்லைக்கு ஆளானார்கள். பெர்னார்டு பாதிரியார் என்ற மற்றொரு குரு முப்பத்திரண்டு பற்களும் நொறுங்கி உதிருமாறு தாக்கப்பட்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பெர்னார்டு பாதிரியாரின் சீடர்கள் பிரக்ஞை மங்கித் தரையில் விழுகிற வரை சவுக்கடி பெற்றார்கள். இவற்றை எல்லாம் கேள்விப்பட்டு ராணி மங்கம்மாள் மனம் வருந்தினாள். மறவர் நாட்டிலும், தஞ்சையிலும் கிறிஸ்தவர்களும், கிறிஸ்தவ மத குருக்களும் கொடுமைப்படுத்தப்பட்டது போல் தன் ஆட்சியில் எதுவும் நடைபெற்றுவிடாமல் பொது நோக்கோடு கவனித்துக் கொண்டாள் அவள். தன் சொந்தமதமாகிய இந்து மதத்தின் மேலுள்ள பற்றை விட்டு விடாமல் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் பேருதவிகளைச் செய்து மிகவும் பரிவுடன் நடந்து கொண்டாள் அவள். கிழவன் சேதுபதி பிடிவாதத்தாலும், கோபத்தாலும் தொடர்ந்து சிறைவாசத்தை அநுபவித்துச் சாவை எதிர்பார்த்துக் கொண்டிருந்த மெல்லோ பாதிரியார் உயிர் பிழைத்துச் சிறையிலிருந்து விடுதலை பெறவும் மங்கம்மாள் உதவி செய்தாள். இப்போதும் இதற்கு முன்பும் இப்படிப் பல உதவிகளைச் செய்து, புகழ்பெறுவது அவளது இயல்பாக இருந்து வந்திருக்கிறது. இதற்கு முன்பு ஒருமுறை மதுரையில் புச்சட் என்னும் பாதிரியாருக்கும் அவருக்குக் கீழே பணிபுரிந்த உபதேசியார்களுக்கும் ஏற்பட்ட சர்ச்சையைத் தளவாய் நரசப்பய்யா உயிரோடிருந்த காலத்தில் அவர் மூலம் சுமூகமாகத் தீர்த்து வைத்து நல்ல பெயரெடுத்திருந்தாள். பள்ளி வாசலுக்கும், தர்க்காக்களுக்கும், கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் நிறைய மானியங்களும், நிலங்களும் அளித்துப் பெயர் பெற்றிருந்தாள். அதே சமயத்தில் இந்துக் கோயில்களுக்கும் எண்ணற்ற அறங்களைச் செய்திருந்தாள். மங்கம்மாள் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களுக்கு நன்மை செய்வதைப் போலவே இந்துக்களில் ஒரு பிரிவினராகிய சௌராஷ்டிரர்களுக்கு நியாயமான உரிமைகளை வழங்கினாள். சௌராஷ்டிரர்கள் முப்புரி நூலணிந்து அந்தணர் நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கலாமா? என்பது பற்றி எழுந்த சர்ச்சைக்குத் தக்க அறிஞர்கள் மூலம் தீர்வு கண்டு நியாயம் வழங்கினாள் ராணி மங்கம்மாள். அது அவள் புகழை உயர்த்தி வளர்த்தது. இது சம்பந்தமான சர்ச்சை எழுந்ததுமே தன் பிரதானிகளையும், காரியஸ்தர்களையும், வித்வான்களையும், ஆசாரியர்களும் மேதைகளும் நிறைந்த திருவரங்கத்திற்கு அனுப்பி அவர்களைக் கலந்தாலோசித்து அறிவுரை பெற்று வரச் செய்தாள் ராணி. திருவரங்கத்து மகான்கள் கூறிய யோசனைப்படியே சௌராஷ்டிரர்களுக்குச் சாதகமாக இராயசம் கோடீஸ்வரய்யா மூலம் உத்தரவு பிறப்பித்திருந்தாள். சௌராஷ்டிரர்கள் மனம் மகிழ்ந்து ராணி மங்கம்மாளை வாழ்த்தினர். நன்றி செலுத்தினர். இவ்வளவு நன்மைகளுக்கும் நடுவே மங்கம்மாளுக்குக் கவலையளித்த செய்தி ஒன்றிருந்தது. பேரன் விஜயரங்கனின் நிலையில் எந்த வளர்ச்சியும் இல்லை. வெறும் வயதுதான் வளர்ந்ததேயன்றி அறிவு வளர்ச்சியில் அவன் பின்தங்கி இருந்தான். இளைஞனான பின்னரும்கூட அவன் அப்படியே இருந்ததைப் பற்றி அவள் கவலைப்பட்டு உருகினாள். சில சமயங்களில் அவளையே எதிர்த்துப் பேசவும் அவன் தயங்கவில்லை. முரட்டுத்தனமாகப் பழகினான். அவன் சிறு குழந்தையாயிருந்தபோது வண்டியூர்த் தெப்பக் குளத்தின் மைய மண்டபக் கோப்புரத்திலிருந்து தன்னைக் கீழே பிடித்துத் தலைக்குப்புறத் தள்ளுவதுபோல தான் கண்டிருந்த கெட்ட சொப்பனம் இப்போது அடிக்கடி அவளுக்கு நினைவு வந்தது. இராயசம் பொறுப்பைக் கோடீசுவரய்யாவிடம் ஒப்படைத்து விட்டுத் தளவாய் ஆகியிருந்த அச்சையாவும் ராணி மங்கம்மாளும் அரசியல் விஷயமாகத் தனியே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது ஒரு சமயம் விஜயரங்கன் அந்தப் பக்கமாக வந்தான். அநுமதியின்றித் திடும் பிரவேசமாக அவன் அப்படி மந்திராலோசனை மண்டபத்துக்குள் நுழைந்ததே அவர்கள் இருவருக்கும் பிடிக்கவில்லை. குதிரை குப்புறக்கீழே தள்ளியதுமன்றிக் குழியையும் பறித்ததாம் என்பதுபோல அவன் அவர்களை கேட்ட கேள்வி எரிச்சலும் அருவருப்பும் உண்டாக்கக் கூடியதாயிருந்தது. ராணி மங்கம்மாள் தன் அருமைப் பேரன் இப்படி இந்தச் சிறிய வயதில் அப்படி ஒரு விஷத்தைத் தன்முன் கக்கமுடியும் என்று எதிர்பார்த்திராத காரணத்தால் அதிர்ச்சியடைந்தாள். அச்சையா அவன் கூற்றைக் கேட்டுக் கூச்சமும் அருவருப்பும் அடைந்தார். ராணி மங்கம்மாள் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
முடிவுரை
|