10 அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தபடியே முத்துக்குமரன் கூறலானான்: "என்ன காரணமோ தெரியவில்லை, ஒரு பெரிய சக்கரவர்த்திக்கு நடுங்குகிற மாதிரி நீங்களெல்லாம் கோபாலுக்கு நடுங்குகிறீர்கள் -" "சமூகத்தின் மேற்படிகளில் பணம் படைத்தவர்களும் புகழ் படைத்தவர்களும் தான் சக்கரவர்த்திகளாக இன்னும் அமர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் மறந்து விட்டீர்கள் போலிருக்கிறது!" "எந்தச் சக்கரவர்த்திகளுக்கும் எங்கேயும் நடுங்கிப் பழக்கமில்லை எனக்கு. ஏனென்றால் நானே என்னை ஒரு சக்கரவர்த்தியாக நினைத்துக் கொண்டிருப்பவன்." "அதனால்தானோ என்னவோ இப்போதெல்லாம் நான் உங்களை நினைத்தும் நடுங்க வேண்டியிருக்கிறது." "கோபாலைக் கண்டு நடுங்கும் நடுக்கத்திற்கும் இந்த நடுக்கதிற்கும் ஏதாவது வித்தியாசம் உண்டானால்தான் நான் பெருமைப்படலாம்..." -இப்படிக் கூறியவுடன் அவள் அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள், புன்னகை பூத்தாள். "நீங்கள் ரொம்பப் பொல்லாதவர்..." "ஆனாலும் என்னைவிட பொல்லாதவர்களுக்குத்தான் நீ பயப்படுவாய் என்று தெரிகிறது." "அன்புக்குப் கட்டுப்பட்டுப் பயப்படுவதற்கும் ஆட்சிக்குக் கட்டுப்பட்டு பயப்படுவதற்கும் வித்தியாசமிருக்கிறது." அவள் பேச்சு உண்மைப் பிரியத்துடனும் மனப்பூர்வமாகவும் ஒலிப்பதை அவன் புரிந்து கொள்ள முடிந்தது. மறுநாள் காலையிலிருந்து ஒத்திகைகள் வேகமாகவும் தீவிரமாகவும் நடைபெறத் தொடங்கின. மந்திரி கொடுத்திருந்த தேதியில் அவருடைய தலைமையிலேயே நாடகத்தை அரங்கேற்றிவிட வேண்டும் என்பதில் கோபால் அதிக அக்கறை காட்டினான். குறிப்பிட்டிருந்த நாட்களுக்கு முன்பாகவே ஒத்திகைகளை முடித்து நாடகத்தைத் தயாராக்கிவிட ஏற்பாடுகள் நடந்தன. பாடல்களை எல்லாம் பின்னணிப் பாடகர் - பாடகிகளைக் கொண்டு ப்ரீ ரிக்கார்ட் செய்து விட்டான் கோபால். சினிமாத்துறையிலிருந்த மியூஸிக் டைரக்டர் ஒருவர் தான் பாடல்களுக்கு இசையமைத்துக் கவர்ச்சியான ட்யூன்கள் போட்டிருந்தார். நாடகம் - மொத்தம் எவ்வளவு நேரம் வரும் என்பதைத் திட்டமாக அறிந்து கொள்ளுவதற்கும்; ஒரு ஃபைனல் ஸ்டேஜ் ரிஹர்சலுக்கும் பக்கா அரங்கத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரஸ் ப்ரிவ்யூவையும் அன்றே வைத்துக் கொள்ளலாமென்று கோபால் முடிவு செய்திருந்தான். நாடக அரங்கேற்றத்தன்றும், அதைத் தொடர்ந்து பல காட்சிகளுக்கும் - ஹவுஸ்ஃபுல் ஆவதற்கேற்றபடி அத்தனை சிறப்பாக எல்லோரும் பத்திரிக்கைகளில் புகழ்ந்து எழுதி விடுவதற்கான சூழ்நிலையையும் கோபாலே உருவாக்கி இருந்தான். அதோடு இந்த நாடகத்தை அரங்கேற்றுவதில் வேறு ஒரு திட்டமும் கோபாலின் மனத்தில் இருந்தது. மலாயாவிலுள்ள பினாங்கிலிருந்து அப்துல்லா என்கிற பணக்கார இரசிகர் ஒருவர் சென்னைக்கு வந்திருந்தார். மலாயாவிலிருக்கும் பிரபல வியாபாரிகளில் ஒருவரான அப்துல்லா இந்திய நாடகக் குழுவினரின் கலை நிகழ்ச்சிகளை - மலாயாவில் ‘காண்ட்ராக்ட்’ எடுத்து ஊர் ஊராக ஏற்பாடு செய்யும் பொறுப்பை நடத்துவதில் சாமர்த்தியசாலி. கோபால் நாடக மன்றத்தின் முதல் நாடகமான ‘கழைக்கூத்தியின் காதலை’ மந்திரி தலைமை வகித்து அரங்கேற்றும் முதல் தினமே பினாங்கு அப்துல்லாவும் அதைப் பார்ப்பதாக இருந்தது. பார்த்தபின் கோபாலையும், நாடகக் குழுவினரையும் மலாயா, சிங்கப்பூரில் - நாடகங்கள் நடத்த ஒரு மாதச் சுற்றுப்பயணத்திற்கு ‘காண்ட்ராக்ட்’ பேசி அப்துல்லா அழைப்பாரென்று எதிர்ப்பார்க்கப்பட்டது. அப்துல்லா உடனே ஆர்வத்தோடு விரும்பி முன் வந்து - ‘கழைக்கூத்தியின் காதலை’ - ஒரு மாத காலம் மலாயாவில் நடத்துவதற்கு உடன்பட வேண்டுமென்று கோபாலைக் கேட்கத் தூண்டுகிற அளவிற்கு முதல் நாள் நாடகமே அமைய வேண்டுமென்று விரும்பினார்கள் குழுவினர். அந்த நாடகத்திற்காக நாடகம் வெற்றி பெறாமல் - வேறு பல காரணங்களுக்காக நாடகம் வெற்றி பெற வேண்டுமென்று கோபால் முனைந்திருப்பதை முத்துக்குமரன் அவ்வளவாக விரும்பவில்லை. அரங்கேற்றத்திற்கு முந்திய தினம் ‘ஜில் ஜில்’ முத்துக்குமரனைப் பேட்டி காண வேறு வந்து விட்டான். அந்தப் பேட்டி அப்போது வெளிவருவது பொருத்தமாயிருக்கும் என்று கோபால் வேறு சிபாரிசுக்கு வந்தான். ஆனால் ‘ஜில் ஜில்’ கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் முத்துக்குமரன் இடக்காகவே பதில் கூறினான். எவ்வளவோ முயன்றும் ‘ஜில் ஜில்’ முத்துக்குமரனிடமிருந்து மரியாதையை எதிர்பார்க்க முடியவில்லை. முத்துக்குமரன் ‘ஜில் ஜில்’லை மிகவும் அலட்சியமாகவும் அநாயாசமாகவுமே எதிர் கொண்டான். "நான் எத்தினியோ பெரிய பெரிய ஆளுங்களை எல்லாம் பேட்டி கண்டிருக்கேன். தியாகராஜ பாகவதரு, பி. யு. சின்னப்பா - டி. ஆர். ராஜகுமாரி - எல்லாரையுமே எனக்கு நல்லாத் தெரியும்..." "நான் அத்தனை பெரியவன் இல்லே." "எங்க ‘ஜில் ஜில்’லிலே ஒரு பேட்டி வந்திட்டா அப்புறம் தானே பெரிய ஆளாயிடறீங்க." "அப்ப பெரிய ஆளுங்களைத் தயார் பண்ற காரியத்தை ரொம்ப நாளாக செஞ்சுகிட்டிருக்கீங்கன்னு சொல்லுங்க..." "நம்ம ‘ஜில் ஜில்’ பத்திரிக்கைக்கே அப்படி ஒரு ராசி உண்டுங்க." "அப்படியா? இருக்காதா பின்னே?" "சரி! எதையோ பேசிக்கிட்டிருக்கோமே? நம்ம பேட்டியைக் கவனிக்கலாமா இப்ப?" "பேஷாக் கவனிக்கலாமே! என்ன வேணும்? சொல்லுங்க?" "உங்க கலையுலக வாழ்க்கையை எப்பத் தொடங்கினீங்க?" "கலையுலகம்னா என்னான்னு முதல்லே சொல்லுங்க. அப்புறம் நான் பதில் சொல்லுகிறேன். எனக்குத் தெரிஞ்சது ஒரே உலகம்தான். பசி, தாகம், வறுமை, நிறைவு, ஏக்கம் எல்லாம் அந்த உலகத்திலேதான் இருக்கும் - நீங்க வேறே ஏதோ உலகத்தைப் பத்திச் சொல்லுறீங்க..." "என்னங்க இப்படிச் சொல்றீங்க? கலை உலகத்திலே தானே நீங்க, நான் கோபால் சார் எல்லாருமே இருக்கோம்". "அதெப்படி? நீங்களும், நானும் சேர்ந்து ஒரே உலகத்திலே இருக்க முடியுமானா அப்படி ஒரு உலகம் நிச்சயமா இருக்கவே முடியாது?" "என்ன சார் இது? ரெண்டு பேரும் இப்படியே பேசிக்கிட்டிருந்தோம்னாக் கடைசி வரை பேட்டி ஒரு வரி கூட எழுதிக்க முடியாது." "வருத்தப்படாதீங்க. உங்களுக்குத் தேவையானதைச் சொல்லிடறேன். என்ன வேணும்னு கேளுங்க இப்போ?" "அதுதான் அப்பவே கேட்டுப்புட்டேனே? நீங்கதான் இன்னும் பதிலே சொல்லலை. இல்லாட்டி இன்னொன்னு செய்யலாம் நீங்க பதில் சொல்ற மாதிரியும் - நான் கேள்வி கேக்கற மாதிரியும் நானே ஒரு பேட்டிக் கட்டுரை எழுதிக்கிட்டு வர்றேன். அதிலே...நீங்க ஒரு கையெழுத்துப் போட்டுக் குடுத்திடுங்க...போதும்." "படிச்சுப் பாத்திட்டா இல்லே படிக்காமலேயா?" "ஏன்? படிச்சிட்டே வேணாக் கையெழுத்துப் போடுங்களேன்..." முத்துக்குமரனுக்கு இதைக் கேட்டு அடக்கமுடியாமல் கோபம் வந்தது. ஆனால் ஜில் ஜில்லை ஓர் ஆளாகப் பொருட்படுத்தி அவன்மேல் கோபப்படவேண்டுமென்று நினைக்கிற நினைப்பைக்கூட அலட்சியப்படுத்த வேண்டுமென்று அவனுக்குத் தோன்றியது. கொஞ்ச நேரம் ஜில் ஜில்லின் வாயைக் கிளறி வம்பு செய்ய வேண்டுமென்று அவனுக்கும் ஆசையாகவே இருந்தது. முதல் கேள்விக்குப் பதிலாகப் பிறந்த தேதி, குடும்பப் பெருமை, மதுரையில் பாய்ஸ் கம்பெனியில் வேலை பார்த்தது - ஆகிய விவரங்களைக் கூறிவிட்டு அடுத்த கேள்வியை ஜில் ஜில்லிடமிருந்து எதிர்பார்த்தான் முத்துக்குமரன். இரண்டாவது கேள்வியைத் தொடங்குவதற்குள்ளேயே ரொம்பவும் சோர்ந்து விட்டவனைப்போல ஜில் ஜில் பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை உருவிக் கொண்டு முத்துக்குமரனிடமும் ஒன்றை நீட்டினான். முத்துக்குமரன் மறுத்து விட்டான். "வேண்டாம், தேங்க்ஸ்....ரொம்ப நாளைக்கு முன்னாடிப் பழக்கம் உண்டு. இப்பக் கொஞ்ச நாளா விட்டுட்டேன்." "அடேடே? கலையுலகுக்கு வேண்டிய தகுதி ஒண்ணு கூட உங்ககிட்டே இல்லையே." "இப்படிச் சொன்னீங்களே மிஸ்டர் ஜில் ஜில்! இதுக்கென்னா அர்த்தம்?" "பொடி, புகையிலை, வெத்திலை பாக்கு, சிகரெட், மது, மாது ஒண்ணுமே இல்லாமே ஒருத்தரு எப்படிக் கலைஞராயிருக்க முடியும்?" "இருந்தா ஒத்துக்க மாட்டீங்களோ?" "சே! சே! அப்படிச் சொல்லிவிட முடியுங்களா?"- என்று சொல்லியபடியே சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டான் ஜில் ஜில். அவனுடைய கொக்கி போன்ற உருவம் புகையை இழுத்து உள்ளேயும் வெளியேயுமாக விடுவதை முத்துக்குமரன் வேடிக்கை பார்த்தான். அதற்குள் ஜில் ஜில் தன்னுடைய இரண்டாவது கேள்வியைத் தொடங்கிவிட்டான். "நீங்கள் எழுதிய அல்லது நடித்த முதல் நாடகம் எது?" "ஏதோ ஒரு நாடகத்தை நான் எழுதியிருக்கணும் அல்லது நடிச்சிருக்கணும்கிறது மட்டும் நிச்சயம் ஞாபக மிருக்கு. ஆனா அது என்னன்னு மட்டும் ஞாபகம் இல்லே." "சார்! சார் இப்படிப் பதில் சொன்னா எப்படி சார்? எல்லாப் பதிலுமே ஒரு மாதிரியாகத் தெரியுதுங்களே! படிக்கிறவங்களுக்கு நல்லாயிருக்க வேண்டாமா?" "நிச்சயமா இந்த மாதிரிப் பதில்கள் புதுமையாகத் தான் இருக்க முடியும் மிஸ்டர் ஜில் ஜில்! ஏன்னா இதுவரைக்கும் எல்லாப் பேட்டிகளிலேயும் வாசகருங்க ஒரே தினுசான பதிலைப் படிச்சுப் படிச்சி அலுத்துப் போயிருப்பாங்க (சிறிது தணிந்த குரலில்) பதிலு - கேள்வி எல்லாமே இதுவரை நீரு எழுதினதுதானே?" "வாஸ்தவம்தாங்க..." சிறிது நேரம் ஏதோ எழுதிக் கொண்டபின் ஜில் ஜில் தன்னுடைய அடுத்த கேள்வியைக் கேட்டான். "உங்களுக்கு ரொம்ப ரொம்பப் பிடித்தமான வசனகர்த்தா யாரு?" "நான் தான்..." "அப்படிச் சொல்லிட்டா எப்படி? கொஞ்சம் பணிவா இருந்தா நல்லது..." "எனக்கே என்னைப் பிடிக்கலேன்னா? அப்புறம் வேறே யாருக்குப் பிடிக்கப் போகுது?" "சரி, போகட்டும்! இப்ப அடுத்த கேள்வியைக் கேட்கிறேன். கலை உலகில் உங்கள் இலட்சியம் என்ன என்பதைக்கூற முன் வருவீர்களா?" "இலட்சியம் என்ற வார்த்தை ரொம்பப் பெரிசு! அதை நீங்க சுலபமாகவும், துணிச்சலாகவும் உபயோகப் படுத்துகிறதைப் பார்த்து எனக்குப் பயமாயிருக்கு மிஸ்டர் ஜில் ஜில்! இந்த வார்த்தையை உச்சரிப்பதற்கு யோக்கியதை உள்ளவர்கள்கூட இன்றைக்கு இந்தக் கலையுலகில் இருப்பார்களா என்பது சந்தேகமே..." -இப்படி முத்துக்குமரனும் ஜில் ஜில்லும் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டுக் கொண்டே மாதவி அந்தப் பக்கமாக வந்து நின்றாள். "அம்மா வரப்பவே தென்றல் வீசுதே" - என்று ஜில் ஜில் பல்லை இளித்தான். முகத்தில் புண்திறந்து மூடியது போன்ற அவனுடைய மாமிசப் புன்னகை முத்துக்குமரனுக்கு அருவருப்பை அளித்தது. "சரி, இப்ப அடுத்த கேள்விக்கு வர்ரேன். நீங்க ஏன் இன்னும் கலியாணம் செய்துக்கலை?" "ஓர் ஆண் பிள்ளையைப் பார்த்துக் கேட்கப்படுகிற இப்படிப்பட்ட கேள்வியினால் உங்கள் வாசகர்களை நீங்கள் எந்த விதத்திலும் கவரமுடியாது, மிஸ்டர் ஜில் ஜில்." "பரவாயில்லை! நீங்க சொல்லுங்க." "சொல்லத்தான் வேணுமா?" "சும்மா சொல்லுங்க சார்!" "இவளைப் போல (மாதவியைச் சுட்டிக் காட்டி) ஒரு தென்றல் வீசினால் கட்டிக்கிடலாம்னு பார்க்கிறேன்"- "அப்படியே எழுதிக்கிடட்டுமா சார்?" "அப்படியே என்றால் எப்படி?" "மாதவியைப் போல் மங்கை நல்லாள் கிடைத்தால் மணப்பேன் - வசனகர்த்தா முத்துக்குமரனின் சபதம்னு எழுதிக்கிறேன்." "இது ஆசைதான்! ஆசை வேறே, சபதம் வேறே, சபதம்னு இதைச் சொல்றது தப்பு." "பத்திரிகை நடைமுறையிலே நாங்க அப்படித்தான் சொல்லுவோம்..." "உங்க பத்திரிகை நடைமுறையைக் கொண்டுபோய் உடைப்பிலே போடுங்க..." "கோபிச்சுக்காதிங்க சார்..." "சே! சே! இதெல்லாம் ஒரு கோபமா? நான் நிசமாகவே கோபிச்சுக்கிட்டா நீரு கிடுகிடுத்துப் போயிடுவீரு..." "பெரிய மனசு பண்ணிக் கோபமில்லாமே அடுத்த கேள்விக்குப் பதில் சொல்லுங்க. உங்க எதிர்காலத்திட்டம் என்ன?" "அது என் எதிர்காலத்துக்குத்தான் தெரியும், எனக்குத் தெரியாது..." "ரொம்ப ஹாஷ்யமாப் பேசறீங்க சார்!" "ஹாஷ்யமில்லே...ஹாஸ்யம்..." "ஹாஷ்யம்னுதான் சொன்னேன்..." முத்துக்குமரன் மாதவியின் பக்கமாகத் திரும்பிப் புன்னகை புரிந்தான். ஜில்ஜில் குனிந்து ஏதோ எழுதத் தொடங்கினான். "ஒரு நிமிஷம் இப்படி உள்ளே வாங்களேன்" என்று அவனை அவுட்ஹவுஸ் வராந்தாவிலிருந்து உள்பக்கமாகக் கூப்பிட்டாள் மாதவி. அவன் அவளைப் பின் தொடர்ந்தான். "அது ஏன் அந்த ஆளுகிட்டப் போயி அப்படிச் சொன்னீங்க?" "எப்படிச் சொன்னேன்?" "இவளைப்போல ஒரு தென்றல் வீசினால் கலியாணங் கட்டிப்பேன்...னு சொன்னீங்களே?" "ஏன் இவளையே கட்டிப்பேன்னு உறுதியா அடிச்சிச் சொல்லியிருக்கணும்கிறியா? அப்படிச் சொல்லாதது என் தப்புத்தான் மாதவி." "நான் அதைச் சொல்லலே -" "பின்னே எதைச் சொல்றே?" "மாதவியைப் போல் மங்கை நல்லாள் கிடைத்தால் மணப்பேன் - வசனகர்த்தா முத்துக்குமரனின் சபதம்னு எழுதிக்கிட்டிருக்காரே அந்த ஆளு? இதைக் கோபால் சார் பார்த்தா என்ன நெனைப்பாரு?" "ஓகோ! நீ கோபால் சாருக்கு நடுங்க ஆரம்பிச்சாச்சா. உருப்பட்டாப்லதான் போ..." "நடுங்கலே, சும்மா ஒரு ‘இது’க்குச் சொன்னாலே இப்படிக் குத்திக் காட்டறீங்களே?" "புலிகளுக்கு நடுங்கும் மான்களை எனக்குப் பிடிப்பதில்லை..." "அப்படியானால் நான் நடுங்கற அந்தப் புலி இங்கே தான் இருக்காக்கும்..." என்று அவனுடைய நெஞ்சைத் தொட்டுக் காண்பித்து விட்டுச் சிரித்தாள் மாதவி. முத்துக்குமரனும் பதிலுக்குச் சிரித்தான். ஆனாலும் அவன் மனத்தின் அந்தரங்கத்தில் அவள் நடிகன் கோபாலுக்காகப் பயந்து சாகிறாள் என்பது புரிந்துதான் இருந்தது. அவளுடைய பேதமையை அளவுக்கு மீறிச் சோதித்துப் பயமுறுத்த அஞ்சியே இவன் அப்போது சிரித்துவிட்டுச் சும்மா இருந்தான் என்று சொல்ல வேண்டும். அவளோ அவனுடைய கம்பீரத்துக்கு முன் தன்னுடைய பயம் என்ற சிறுமையை வைப்பதற்கு அஞ்சித் தயங்கி நின்று விட்டாள். ஜில்ஜில் மேலும் சில உப்புச்சப்பில்லாத கேள்விகளைக் கேட்டுப் பதில்களையும் வாங்கிக் கட்டிக்கொண்டு போய்விட்டான். அன்றிரவு ஸ்டேஜ் ரிஹர்சல் நாரத கான சபா கீத்துக் கொட்டகையில் நடந்தது. ரிஹர்சல் அபார வெற்றிதான். முடியும்போது இரவு பதினோரு மணி. எட்டு மணிக்குத் தொடங்கிப் பதினோரு மணிக்குக் கச்சிதமாக நாடகம் முடிந்தது. மூன்று மணி நேரமே இருக்கலாமா, இரண்டரை மணி நேரமாகக் குறைத்துவிடலாமா என்று முத்துக்குமரன், மாதவி, வேறு சில நண்பர்கள் ஆகியவர்களோடு கலந்து பேசினான் கோபால். "சினிமாவை மூணு மூணரை மணிநேரம் உட்கார்ந்து பார்க்கிறவங்க - சுவை குன்றாத நல்ல நாடகத்தை மூன்று மணி நேரம் நல்லாப் பார்க்கலாம். எந்தக் காட்சியையும் குறைக்கப்படாது. நாடகம் இப்படியே இருக்கட்டும். ஏதாவது கைவச்சா இப்ப இதிலே இருக்கிற உருக்கமும் கட்டுக்கோப்பும் கெட்டுப்போயிடும்" - என்று முத்துக்குமரன் அடித்துச் சொல்லி விடவே கோபால் பேசாமல் இருக்க வேண்டியதாயிற்று. மறுநாள் மாலையில் மந்திரி தலைமையில் நாடக அரங்கேற்றம். ஆகையினால் அன்றிரவு எல்லாருமே நன்கு உறங்கி ஓய்வு கொள்ள வேண்டியிருந்தது. அடுத்த நாள் மாலை ஐந்து மணிக்கே எல்லாரும் அண்ணாமலை மன்றத்தில் இருக்க வேண்டும். ஆறு மணிக்கு நாடக ஆரம்பம். கடைசிக் காட்சிக்கு முன்பாக மந்திரி தலைமை வகித்து நாடகத்தைப் பாராட்டிப் பேசுவதாக ஏற்பாடு. எல்லா நிகழ்ச்சிகளும் சேர்ந்து நாடகம் முடிய இரவு பத்து மணி ஆகிவிடும் என்று தெரிந்தது. நாடகத்தைக் காணப் பிரமுகர்களும், வேறு நாடகக் குழுவினரும், பினாங்கு அப்துல்லாவும் சிறப்பாக அழைக்கப்பட்டிருந்தார்கள். அதனால் ஸ்டேஜ் ரிஹர்சல் முடிந்த இரவிலோ அடுத்த நாள் காலையிலோ ஒருவருக்கும் நாடகத்தின் நேர அளவைக் குறைப்பது பற்றியோ, வேறு திருத்தங்கள் செய்வது பற்றியோ - யோசிக்கவோ நேரம் இல்லை. ஸ்டேஜ் ரிஹர்ஸலைப் பார்த்தவர்களில் ஜில்ஜில் மட்டும் போகும் போது எல்லாரிடமும், "நாடகத்தில் ஹாஷ்யம் குறைவு...கொஞ்சம் கூட இருந்தால் நல்லது" - என்றான். "ஹாஸ்யம் போதுமானது இருக்கு? ஹாஷ்யம்தான் இல்லே. பேசாமல் போயிட்டு வாரும்" - என்று முத்துக் குமரன் பதில் கூறி ஜில்ஜில்லின் வாயை அடைத்தான். மறுநாள் மாலை அண்ணாமலை மன்றத்தில் ஹவுஸ்புல். பெருங்கூட்டம் டிக்கட் பெற முடியாமலே திரும்பியது. நாடகம் சரியாக ஆறு மணிக்குத் தொடங்கியது. மந்திரியும், பினாங்கு வியாபாரி அப்துல்லாவும் ஐந்தே முக்கால் மணிக்கே வந்து விட்டார்கள். ஒவ்வொரு காட்சியிலும் வசனத்துக்கும், நடிப்புக்கும், பாடலுக்கும் மாறி மாறி கரகோஷம் எழுந்தது. நாடக இடைவேளையின் போதே பினாங்கு வியாபாரி அப்துல்லா கிரீன் ரூமுக்கு வந்து, கோபாலிடம் "ஜனவரி மாதம் தமிழர் திருநாள் பொங்கல் முதல் ஒரு மாதம் மலாயாவுக்கு வந்து இதே நாடகத்தை ஊரூராப் போடுங்க. ரெண்டு லட்ச ரூபாய் காண்ட்ராக்ட். பிரயாணச் செலவு, தங்க ஏற்பாடு எல்லாம் எங்கள் பொறுப்பு. இதுக்கு அவசியம் நீங்க ஒப்புக் கொள்ளணும்" - என்று வேண்டுகோள் விட்டார். கோபாலுக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. தன் நோக்கம் நிறைவேறி விட்டது என்ற பெருமிதமும் வந்தது. இடைவேளைக்குப் பிறகு நாடகம் திருப்புமுனைச் சம்பவங்களால் மெருகேறிப் பிரகாசித்தது. மாதவியின் நடனமும், நடிப்பும், பாடலும் கைதட்டலால் தியேட்டரையே அதிரச் செய்தன. கடைசிக் காட்சிக்கு முந்திய காட்சியில் மந்திரியும், அப்துல்லாவும் மேடையேறினர். மந்திரிக்கு முன் மைக் வைக்கப்பட்டது. மாலை போடப்பட்டது. அவர், பேசினார்: "தமிழர்களின் பொற்காலத்தை இந்த நாடகம் நிரூபிப்பது போல் இதுவரை வேறெந்த நாடகமும் நிரூபிக்கவில்லை. இனியும் இப்படி ஒரு நாடகம் வரப்போவதில்லை. இது வீரமும் காதலும் நிறைந்த தமிழ்க் காவியம். இதைப் படைத்தவரைப் பாராட்டுகிறேன். நடித்தவர்களைக் கொண்டாடுகிறேன். பார்த்தவர்கள் பாக்கியசாலிகள். இனிமேல் பார்க்கப் போகிறவர்களும் பாக்கியசாலிகள்" - என்று மந்திரி புகழ்மாலை சூட்டினார். உடனே முத்துக்குமரன் தப்பாக நினைக்கக் கூடாதே என்று உள்ளூறப் பயந்த கோபால் கீழே முன் வரிசையில் நேர் எதிரே அமர்ந்திருந்த அவனை மேடைக்கு அழைத்துப் பினாங்கு அப்துல்லாவிடம் ஒரு மாலையைக் கொடுத்து அதை முத்துக்குமரனுக்கு அணிவிக்கும் படி வேண்டினான். முத்துக்குமரனும் மேடைக்கு வந்து அப்துல்லா அணிவித்த மாலையை பலத்த கரகோஷத்தினிடையே ஏற்றான். அதோடு அடுத்த காட்சிக்குப் போயிருந்தால் வம்பில்லாமல் முடிந்திருக்கும். "நீ இரண்டு வார்த்தை பேசேன் வாத்தியாரே" - என்று முத்துக்குமரனுக்கு முன்னால் மைக்கை நகர்த்தினான் கோபால். முத்துக்குமரனோ அப்போது நிகரற்ற அகங்காரத்தில் திளைத்திருந்தான். அவன் பேச்சு அதை முழுமையாகப் பிரதிபலித்து விட்டது. "இப்போது இந்த மாலையை எனக்குக் சூட்டினார்கள். எப்போதுமே மாலை சூட்டுவதை வெறுப்பவன் நான். ஏனென்றால் ஒரு மாலையை ஏற்பதற்காக அதை அணிவிப்பவருக்கு முன் நான் ஒரு விநாடி தலைகுனிய நேரிடுகிறது. என்னைத் தலைகுனிய வைத்து எனக்கு அளிக்கும் எந்த மரியாதையையும் நான் விரும்புவதில்லை. நான் தலை நிமிர்ந்து நிற்கவே ஆசைப்படுகிறேன். ஒரு மாலையை என் கழுத்தில் சூட்டுவதின் மூலம் சாதாரணமானவர்கள் கூட ஒரு விநாடி என்னைத் தங்களுக்கு முன் தலைகுனிய வைத்துவிட முடிகிறதே என்பதை நினைக்கும்போது வருத்தம்."- பேச்சு முடிந்து விட்டது. பினாங்கு அப்துல்லாவுக்கு முகம் சிறுத்துப் போய்விட்டது. கோபால் பதறிப் போனான். முத்துக்குமரன் எதைப் பற்றியும் கவலைப்படாமல் சிங்கநடை நடந்து தன் இருக்கைக்காக கீழே இறங்கிப் போய்க் கொண்டிருந்தான். |