பதினொன்றாவது அத்தியாயம் இராவணசாமியோடு ஃபோனில் பேசும்போது தம்முடைய அறிவுக்கும் பதவிக்கும் ஏற்ற கம்பீரமான குரலில் அதை அழுத்தமாகப் பேசாமல் ஏன் கெஞ்சுவது போலவும், கொஞ்சுவது போலவும் துணை வேந்தர் அப்படிக் குழைகிறார் என்பது அருகிலிருந்த பூதலிங்கத்துக்கு வியப்பாயிருந்தது. இராவணசாமியிடம் பேசி ஃபோனை வைத்ததும் தாமே தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ளும் ஆவலுடன், "வாட் எபௌட் எலக்ஷன் ரிஸல்ட்ஸ்?" என்று பூதலிங்கத்தை விசாரித்தார் தாயுமானவனார். பூதலிங்கம் இதற்கு உடனே மறுமொழி கூறிவிடவில்லை. சில விநாடிகள் தயங்கினார். அப்புறம் சொன்னார்: "முடிவைப் பற்றி இப்போது என்ன வந்தது? அதைத் தான் கொஞ்சம் தாமதமாக அறிவிக்கலாம் என்று நீங்களே சொன்னீர்களே...?" "சொன்னேன். இப்போது முடிவுகளைப் பற்றியும் தான் கவலைப்பட வேண்டியிருக்கிறது. வென்றவர்களின் வெற்றிக் களிப்போ, தோற்றவர்களின் தோல்வி ஏமாற்றமோ காம்பவுண்டில் நிறுத்தப்பட்டிருக்கும் எம்.எல்.ஏ.யின் லாரிகளுக்கு ஆபத்தாக முடிந்துவிடக் கூடாதே என்று பயமாயிருக்கிறது. இதைக் கேட்டுப் பேராசிரியர் பூதலிங்கம் உள்ளூறச் சிரித்துக் கொண்டார். பல்கலைக் கழகத்தின் பல்லாயிரக்கணக்கான மாணவர்களை நினைத்து அவர்களுடைய அமைதிக்கும், நலனுக்கும் கவலைப்பட்டு பயப்படாமல் துணைவேந்தர் யாரோ ஒரு தனி மனிதருக்கும் அவருடைய உடைமைக்குமாகப் பயப்படுவது அருவருக்கத் தக்கதாக இருந்தது. நன்றாகவும் ஆழமாகவும் கற்ற கல்வியினால் பயங்கள் விலகி நியாய உணர்வும் தார்மீகக் கோபமும் பெருக வேண்டும். ஆனால் இன்று பல கல்விமான்கள் தான் அளவுக்கு மீறி அஞ்சுகிறவர்களாகவும், நியாய உணர்வு அற்றவர்களாகவும், தார்மீகக் கோபம் சிறிது கூட இல்லாதவர்களாகவும் போய்விட்டார்கள் என்பதை நினைத்தபோது பூதலிங்கம் நெட்டுயிர்த்தார். தம்மைப் போல் ஒன்றிரண்டு பேர் விதிவிலக்காக இருப்பது கூட மற்றவர்களுக்கு ஒரு விநோதமாகவே தோன்றும் என்பது அவருக்கே புரிந்துதான் இருந்தது. மாணவர்கள் பக்கம் நியாயம் இருப்பதை மறுபடியும் தயக்கமின்றித் துணை வேந்தரிடம் கூறினார் அவர். "இதில் எம்.எல்.ஏ.யை நினைத்து நாம் பயப்பட ஒன்றுமில்லை சார்! கலகம் புரிந்து பல்கலைக் கழகத்தில் அமைதி குலையும்படி செய்து தேர்தலை நடக்கவிடாமல் பண்ணவேண்டும் என்றோ என்னவோ, லாரிகளையும் அடியாட்களையும் ஆயுதங்களையும் அவரே இங்கு அனுப்பியிருப்பார் போலிருக்கிறது. அவருடைய போதாத காலம் பையன்கள் லாரிகளைக் கையும் களவுமாகப் பிடித்து விட்டார்கள். லாரிகள் திரும்பக் கிடைக்க வேண்டுமானால் அவர் கொஞ்சம் பணிந்து போக வேண்டியதாகத்தான் இருக்கும். வேறு வழியே இல்லை..." "நோ... நோ... அப்படி ஒரேயடியாகச் சொல்லிவிடாதீர்கள். நீங்கள் எப்போதுமே ஸ்டூடண்ட்ஸ் பக்கத்தில்தான் பேசுவீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் இந்தக் காலத்துப் பையன்களும் 'எமோஷனலாக' இருக்கிறார்கள். எதற்கும் உடனே 'எக்ஸைட்' ஆகிவிடுகிறார்கள்..." "இந்தத் தலைமுறையில் நீங்கள் அதைத் தவிர்க்க முடியாது, சார்! சுற்றிலும் ஒழுங்கீனம், ஊழல், பணம், பதவி ஆசை மிகுந்த முதியவர்களைக் கொண்ட ஒரு சமூகத்தில் இளந் தலைமுறை கிளர்ச்சி மனப்பான்மையையும், எழுச்சியையும் கொண்டதாக இருக்கும், இருக்க வேண்டும்." இதற்கு பதில் எதுவும் சொல்ல முடியாமல் கொஞ்சம் கோபத்துடனேயே பூதலிங்கத்தை வெட்டி விடுவது போல் முறைத்துப் பார்த்தார் துணைவேந்தர். வாக்குவாதத்திலும் கோபத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் பற்றி மீண்டும் கேட்க மறந்துவிட்டார் அவர். அதற்குள் இராவணசாமியே அங்கு வந்து சேர்ந்து விடவே துணைவேந்தரும், பூதலிங்கமும் தங்கள் வாக்குவாதத்தைத் தொடர முடியவில்லை. இராவணசாமியோடு கோட்டம் குருசாமியும் வந்திருந்தார். துணைவேந்தர் இருக்கையிலிருந்து எழுந்து நின்று எதிர்கொண்டு சென்று அவர்களை வரவேற்றார். அவர் அப்படிச் செய்தது பூதலிங்கத்துக்கு மிகவும் வேதனையாயிருந்தது. லாரியை ஓட்டிக் கொண்டு போக வந்த டிரைவர்கள் என்ற பேரில் குண்டோதரர்கள் போல் மூன்று தடித்த ஆட்களும் துணைவேந்தர் அலுவலக முகப்பில் வந்து நின்று கொண்டிருந்தார்கள். துணைவேந்தரின் மேஜைக்கு முன் எதிரே போடப்பட்டிருந்த பார்வையாளர்களுக்கான நாற்காலிகளில் ஒன்றில் பூதலிங்கம் அமர்ந்திருக்கவே இராவணசாமி, குருசாமி இருவரும் பக்கத்துக்கு ஒருவராகப் பேராசிரியரின் இருபுறமும் அமர்ந்து கொண்டார்கள். உள்ளே நுழையும் போதே துணைவேந்தருக்குப் பெரிய கும்பிடாகப் போட்டுவிட்ட அவர்கள் நாற்காலிகளில் உட்கார்ந்த பின்பு அப்போதுதான் பூதலிங்கம் அங்கிருப்பதையே கவனித்தவர்கள் போல், வேண்டாவெறுப்பாக, "வணக்கம்" என்றார்கள். நேர்மையும், துணிவும், ஒழுக்கமும் உள்ளவர்கள் எதிர்ப்பட்டால், அவை அறவே இல்லாதவர்களுக்கு ஏற்படும் ஒருவிதத் தாழ்வு மனப்பான்மை, இருபுறமும் துணிந்து அமர்ந்துவிட்டாலும் அவர்கள் கூச்சத்தோடுதான் இருந்தார்கள். அவருடைய பார்வை நேர் எதிரே இருந்த துணைவேந்தரின் முகத்தில் இலயித்திருந்தது. "என்னை தப்பாகப் புரிஞ்சுக்காதீங்க, மிஸ்டர் இராவணசாமி! இந்தக் காலத்துப் பையன்களே ரொம்ப உணர்ச்சிவசப்படறாங்க. 'சுருக்'குனு கோபமும் வருது... ஏதோ இதமாக ரெண்டு வார்த்தை சொல்லி லாரிகளைத் திருப்பிக் கொண்டு போவதுதான் உங்களுக்கு நல்லது..." என்று பேச்சைத் தொடங்கினார் துணைவேந்தர். இராவணசாமியோ, கோட்டம் குருசாமியோ இதற்குப் பதிலே சொல்லாமல் இருந்தனர். துணைவேந்தரின் பேச்சிலிருந்த குழைவான தொனி பூதலிங்கத்துக்குப் பிடிக்கவில்லை. 'நீங்கள் உங்களுடைய லாரிகளின் மூலம் மாணவர்களைத் தாக்க முயன்றது தவறு! அதனால்தான் இவ்வளவும் ஆயிற்று' என்பது போல் எதிரே இருப்பவர்களை எச்சரிக்கும் துணிவு சிறிது கூட இல்லாமல் ஏதோ தாமோ, தம் மாணவர்களோ செய்துவிட்ட ஒரு குற்றத்துக்காக இரங்குவது போன்ற தொனியில் துணை வேந்தர் பேசியது பூதலிங்கத்துக்கு ஆச்சரியமாக இருந்தது. "நாங்கள் வேற்றான் வீட்டு விவேகத்தையும் மதிப்பவர்கள். தோற்றோர் பக்கத்து துணிவையும் வியப்பவர்கள். எங்களை நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாதுங்க..." என்று திடீரென்று சம்பந்தமோ, அர்த்தமோ இன்றிப் பூதலிங்கத்தின் பக்கம் திரும்பிக் குழைவாக ஆரம்பித்தார் இராவணசாமி. இந்த வஞ்சப் புகழ்ச்சியின் பொருளென்ன என்பது முதலில் பூதலிங்கத்துக்குப் புரியவில்லை. போகப் போகப் புரிந்தது. தாம் மைதானத்துக்கு வந்து மாணவர்களிடம் மன்னிப்புக் கேட்காமல், பூதலிங்கத்தையும் அவரோடு டிரைவர்களையும் அனுப்பியே லாரிகளைத் திருப்பிக் கொண்டு போக விரும்பினார் இராவணசாமி. "பாவம்! ரொம்பச் சிரமப்படுகிறார் 'ஹெல்ப்' பண்ணுங்களேன் மிஸ்டர் பூதலிங்கம்!" என்று தாயுமானவனார் அதற்கு ஒத்துப் பாடினார். பூதலிங்கத்துக்குக் கோபம் வந்துவிட்டது. அவர் தமக்கு இருபுறமும் அமர்ந்திருந்தவர்களிடம் எதுவும் பேசாமல், துணை வேந்தரைப் பார்த்து மட்டுமே பதில் சொன்னார்: "நீங்கள் கூப்பிட்டனுப்பியதற்காகத்தான் நான் வந்தேன் சார்! இதில் 'ஹெல்ப்' என்ற பேச்சுக்கே இடமில்லை. மாணவர்கள் சொல்லியதை உங்களிடம் வந்து சொல்லிவிட்டேன். நீங்கள் ஏதாவது சொன்னால் அதை மாணவர்களிடம் போய்ச் சொல்லுகிறேன். அவ்வளவுதான் நான் செய்யலாம். ஆனால் மாணவர்களிடம் அவர்கள் கோரிக்கையை விட்டுக் கொடுக்கச் சொல்லிச் சிபாரிசு செய்ய மட்டும் நான் ஆளில்லை." "கொஞ்சம் தயவு பண்ணுங்க சார்" என்று மறுபடியும் இராவணசாமி பேசத் தொடங்கியதும், "இதோ பாருங்கள், மிஸ்டர் இராவணசாமி! தயவுசெய்து நீங்கள் எதைச் சொல்ல வேண்டுமானாலும் வி.சி.யிடம் சொல்லுங்கள். வி.சி.யின் கீழே தான் நாங்கள் எல்லாரும் வேலை பார்க்கிறோம். எங்களிடம் ஏதாவது சொல்ல வேண்டுமானால் அவர் சொல்வது தான் முறையாக இருக்கும்" என்று முகத்தில் அடித்தாற் போல் பதில் சொன்னார் பூதலிங்கம் இதைக் கேட்டு இராவணசாமிக்கு மூஞ்சியில் உணர்வு செத்துப் போயிற்று. பூதலிங்கத்தையும் கண்டிக்க முடியாமல் இராவணசாமியையும் கடிந்து கொள்ளத் துப்பில்லாமல் துணை வேந்தர் திணறினார். பூதலிங்கம் சிறிதும் விட்டுக் கொடுக்கவில்லை. இராவணசாமியும், குருசாமியும் பலித்த மட்டும் இலாபம் என்பது போல் பேரம் பேசினார்கள். நீண்ட நேரச் சர்ச்சைக்குப் பின்னால் துணை வேந்தர், பூதலிங்கம் இருவரும் இராவணசாமியையும், குருசாமியையும் உடன் அழைத்துக் கொண்டு பல்கலைக் கழக விடுதி மைதானத்துக்குச் சென்றார்கள். இராவணசாமி மாணவர்களிடம் வருத்தப்பட்டு மன்னிப்புக் கேட்க இசைந்திருந்தார். சிலர் மானத்தைக் காத்துக் கொள்வதற்காகப் பொருளை இழப்பார்கள். வேறு சிலர் பொருளைக் காத்துக் கொள்வதற்காக மானத்தையே இழந்து விடவும் தயாராயிருப்பார்கள். இராவணசாமி எப்போதுமே இரண்டாவது வகை. அவரிடம் முரட்டுப் பிடிவாதம் உண்டு. ஆனால் மானம் கிடையாது. பிடிவாதமும் மானமும் ஒன்றில்லை. மானம் விட்டுக் கொடுக்க முடியாதது. ஆனால் பிடிவாதம் அதை விடப் பெரிய பிடிவாதத்தின் முன் விட்டுக் கொடுக்கப்படுவது. இராவணசாமியின் பிடிவாதமும் இறுதியில் அப்படித்தான் ஆயிற்று. விடுதி மைதானம் வரை கூட வந்த துணை வேந்தர், இராவணசாமி மாணவர்களிடம் மன்னிப்புக் கேட்கும் காட்சியைக் காணத் தாம் அருகே இருக்க வேண்டாம் என்று நினைத்தோ என்னவோ அங்கே பக்கத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு 'புது பிளாக்' கட்டிட வேலையை மேற்பார்க்கப் போவது போல் நடுவே மெல்ல நழுவிவிட்டார். பேராசிரியர் பூதலிங்கத்தின் மேல் இருந்த மதிப்பின் காரணமாக மாணவர்கள் இராவணசாமியையும், அவரோடு வந்தவர்களையும் பொறுத்துக் கொண்டனர். அப்படியிருந்தும் கூட எம்.எல்.ஏ.யை அவமானப்படுத்தும் குரல்களும், டௌன், டௌன் ஒலிகளும், 'ரௌடியிசம் ஒழிக', 'குண்டாயிசத்துக்கு முடிவு கட்டுவோம்' என்ற வாசகங்களும் எழுவதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இராவணசாமி ஓரளவு பயந்தே போனார். ஆனால் பேராசிரியர் கைகளை உயர்த்தி அமைதியாயிருக்குமாறு கோரியதும் கூப்பாடுகள் நின்றன. அமைதி நிலவியது. பாண்டியனையும் மோகன்தாஸையும் கூப்பிட்டு நிறுத்தி இராவணசாமியை மன்னிப்புக் கேட்கச் சொன்னதும் அவர் மன்னிப்புக் கேட்டு விட்டார். உடனே அவரையும் வைத்துக் கொண்டே பாண்டியன் உரத்த குரலில் கூடியிருந்த மாணவர்களுக்கு அவர் மன்னிப்பு கேட்டுவிட்ட விவரத்தை அறிவித்தான். மாணவர்கள் லாரிகளை விட்டு விலகிக் கொண்டதும் இராவணசாமியின் டிரைவர்கள் லாரிகளை எடுத்துக் கொண்டு போனார்கள். வழி மறித்து அமர்ந்திருந்த மாணவிகள் எழுந்து வழியை விட்டுவிட்டுப் பாண்டியன் முதலியவர்கள் நின்றிருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தனர். லாரிகள் வெளியேறிய சிறிது நேரத்துக்கெல்லாம் காரில் புறப்பட்ட இராவணசாமியும், குருசாமியும் போகும் போது ஒரு வாய்வார்த்தை மரியாதையாகக் கூடப் பூதலிங்கத்திடம் சொல்லிக் கொண்டு போகவில்லை. அவர்கள் அப்படி நடந்து கொண்டதிலிருந்து அவர்களுடைய மனத்துக்குள் எப்படி ஆத்திரம் முற்றிக் கனன்று கொண்டிருக்கும் என்பதைப் பூதலிங்கமும் மாணவர்களும் புரிந்து கொள்ள முடிந்தது. தீவிரவாதிகளான மாணவர்கள் சிலருக்கு இராவணசாமியின் மன்னிப்பை ஏற்றுக் கொண்டு லாரிகளைத் திருப்பி அனுப்பியதே பிடிக்கவில்லை. 'வீ ஷுட் நாட் காம்ப்ரமைஸ் லைக் திஸ் வித் ரௌடி எலிமெண்ட்ஸ்' என்று பாண்டியனிடம் வந்து இரைந்தான் ஒரு மாணவ நண்பன். "என்ன சார்? 'போலிங்' ரெண்டு மணிக்கே முடிந்தும் இன்னும் ரிஸல்ட் என்னன்னே சொல்லலியே நீங்க?" என்று பேராசிரியர் பூதலிங்கத்திடம் கேட்டாள் கண்ணுக்கினியாள். அவள் கையில் பெரிய சாக்லேட் டின் ஒன்று தயாராயிருந்தது. அவளோடு கூட இன்னும் சில மாணவிகளும் உடன் நின்று கொண்டிருந்தனர். "எல்லோரும் இப்படியே லைப்ரரி பில்டிங முகப்புக்கு வாருங்களேன்! இன்னும் பத்து நிமிஷத்துக்குள் தேர்தல் முடிவுகளைத் தெரிவித்து விடுகிறோம்" என்று சொல்லி விட்டு மாணவர்கள் குழாத்திலிருந்து வழி விலக்கிக் கொண்டு நூல் நிலையத்துக்கு விரைந்தார் பூதலிங்கம். அடுத்த சில கணங்களில் நூல் நிலைய முகப்பில் மாணவ மாணவிகளின் கூட்டம் சேர்ந்துவிட்டது. சிலர் கையில் மாலைகள், சிலர் கையில் புதிய கதர், கைத்தறித்துண்டுகள், மலர்க் கொத்துக்கள் என்று வெற்றியை வரவேற்கும் மகிழ்ச்சியைக் கொண்டாடி அளிப்பதற்கான பொருள்கள் தென்பட்டன. என்ன காரணத்தாலோ தாம் பக்கத்தில் வந்து சும்மா நின்று கொண்டு உதவிப் பேராசிரியரிடம் கொடுத்து முடிவுகளைப் படிக்கச் செய்தார் பூதலிங்கம். மாணவர் பேரவைத் தலைவனாக மோகன்தாஸும், செயலாளனாகப் பாண்டியனும், துணைத் தலைவர், துணைச் செயலாளர்களாக இவர்களுக்கு வேண்டிய தரப்பு மாணவர்களுமே பெரும்பான்மை வாக்குகளால் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தார்கள். அன்பரசன் வகை மாணவர்களில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. அவர்கள் பெற்றிருந்த வாக்குகளும் மிக அற்பமாகவே இருந்தன. எதிர்பார்த்ததுதான் என்றாலும், மாணவர்களிடையே மகிழ்ச்சி பெருக்கெடுத்தது. கண்ணுக்கினியாளின் கையிலிருந்த சாக்லேட் டின்னிலிருந்து இரண்டு உள்ளங்கையும் நிறைய சாக்லேட்களை வாங்கி அப்படியே மேலிருந்து சாக்லேட் மழையே பொழிவது போல் உயர்த்தித் தூவினான் பொன்னையா. பாண்டியனுக்கு முகம் மறைப்பது போல், மாலைகளும், ஆடைகளும் அணிவிக்கப்பட்டன. மோகன்தாஸை அப்படியே தோளில் தூக்கி விட்டான் ஒரு பலசாலி மாணவன். படிகளில் ஏறி நூல் நிலைய முகப்புக்குப் போய் அங்கே நின்ற பேரசிரியர்களுக்கும், பிறருக்கும் இனிப்பு வழங்கினாள் கண்ணுக்கினியாள். "எனக்கு வேண்டாம், அம்மா! தோற்ற வேட்பாளர்கள் நாளைக்கே உங்களிடம் நான் சாக்லேட் லஞ்சம் வாங்கியதாகக் கதை விடுவார்கள்" என்று சிரித்துக் கொண்டே மறுத்தார் பூதலிங்கம். "பரவாயில்லை! 'சாக்லேட்டாக லஞ்சம் தர வேண்டும் என்று தோற்றவர்களாகிய நீங்கள் தயாராயிருந்தால் நான் உங்களிடம் கூட அதை வாங்கிக் கொள்வேன்' என்று அவர்களிடம் பதில் சொல்லுங்களேன் சார்." "இந்த காலத்தில் இப்படி வென்றவர் செலவில் சாக்லேட் சாப்பிடுவது கூட லஞ்சத்துக்குச் சமமானதுதான்" என்று சிரித்தபடி கூறினார் அறிவிப்புகளைச் செய்த உதவிப் பேராசிரியர். "இந்த நகைச்சுவைக்காகவே உங்களுக்கு இன்னும் இரண்டு சாக்லேட் பரிசு தரலாம் சார்" என்று கூறி, மறுத்தவர் கையிலும் சாக்லேட்டைத் திணித்து விட்டு வந்தாள் கண்ணுக்கினியாள். மாணவிகளில் ஒருத்தி பல்கலைக் கழகப் பூங்காவில் பறித்த பல நிறப் பூக்களாலேயே நூலில் மாலை போல கட்டிய ஓர் ஆரத்தைக் கொண்டு வந்து கண்ணுக்கினியாளிடம் கொடுத்து, "இதை உன் கையால் நம்முடைய புதிய பேரவைச் செயலாளருக்குச் சூட்டேன் பார்க்கலாம்..." என்று கண்களிலும் இதழ்களிலும் குறும்பு மலர வேண்டினாள். கண்ணுக்கினியாளும் அதை மறுக்கவில்லை. அந்த மாலையை வாங்கி அவள் பாண்டியனுக்குச் சூட்டுவதற்குச் சென்றபோது, "இந்த மாதிரி நீ எனக்கு ஒரு மாலையைச் சூட்ட வருவது போல் நான் சில நாட்களுக்கு முன்பே ஒரு கனவு கூடக் கண்டாயிற்று. நீயோ இவ்வளவு நாட்கள் கழித்து இத்தனை தாமதமாக வந்து அந்தக் காரியத்தைச் செய்கிறாய். தாமதமான அன்பளிப்புகளுக்கு 'லேட் ஃபீ' தர வேண்டும் தெரியுமா?" என்று சொல்லி நகைத்தான் அவன். "இதோ 'லேட் ஃபீ'யும் உண்டு! இந்தாருங்கள்" என்று அவன் வலது கை நிறைய மிட்டாய்களை அள்ளி வைத்தாள் அவள். அவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் போது 'புது பிளாக்' கட்டிடங்களின் வேலையைச் சுற்றிப் பார்ப்பது போல் ஓர் அரை மணி நேரத்தைக் கழித்திருந்த துணை வேந்தர், லாரிகள் பத்திரமாக வெளியேறியதை அறிந்த மகிழ்ச்சியுடன் நடந்தே நூல் நிலைய முகப்புப் பக்கமாக வந்தார். தேர்தல் முடிவுகளை அறிந்ததும் தன் உள்ளுணர்வுகளை வெளிப்படுத்திக் கொள்ளாமல் முகமே இன்றித் தனியே பல் ஸெட் மட்டும் சிரிப்பது போன்ற ஓர் இயல்பற்ற சிரிப்புடன் கங்ராஜுலேஷன்ஸ்' என்று பாண்டியனிடமும், வெற்றி பெற்ற மற்ற மாணவர்களிடமும் வந்து கைகுலுக்கினார் அவர். கண்ணுக்கினியாள் அதுதான் சமயமென்று அவரிடமும் ஒரு சாக்லேட்டைக் கொடுத்து விட்டு, "ஸார் கிவ் அஸ் பெர்மிஷன் டு அஸம்பிள் ஹியர் அண்ட் ஹேவ் ஏ மீட்டிங்" என்று வேண்டினாள். உடனே அவர் முகம் மாறியது. அதில் கடுமை தெரிந்தது. "நோ... யூ காண்ட் ஹேவ் ஏ மீட்டிங் இன் தி யுனிவர்ஸிடி காம்பஸ். யூ கேன் ஹேவ் இட் இன் ஸம் அதர் ப்ளேஸ்..." என்று சொல்லிக் கொண்டே பின்புறம் கைகோர்த்தபடி அவர் விரைந்து திரும்பி நடந்துவிட்டார். இப்படி மறுமொழி கூறியதற்காக அவர் மேல் எல்லாருக்குமே கோபம் வந்தாலும் அந்த மகிழ்ச்சியான வேளையில் அவரோடு வாதாடிச் சண்டை போடுவதன் மூலம் தங்கள் உற்சாகத்தை வீணடிக்க விரும்பவில்லை அவர்கள். அங்கிருந்து வெளியேறிப் போய்ப் பல்கலைக் கழகத்து எல்லைக்கு அப்பால் அண்ணாச்சி கடை வாசலில் பொதுக் கூட்டமாகப் போட்டு வெற்றி விழாவை நடத்திக் கொள்ளலாம் என்று எல்லா மாணவர்களும் முடிவு செய்தார்கள். உடனே பொன்னையா எல்லா மாணவர்களும் ஆறரை மணிக்குள் அண்ணாச்சி கடை முன்புறத்தில் வந்து கூட வேண்டும் என்று நூல் நிலைய முகப்பில் ஏறி உரத்த குரலில் அறிவித்து விட்டான். கூட்டம் நடத்த அனுமதி வாங்க இரு மாணவர்கள் போலீஸ் நிலையத்துக்குப் புறப்பட்டார்கள். மாலைகள் வாங்கவும் மேடை போடவும் சிலர் ஓடினர். அப்போது மாலை ஐந்து மணி கூட ஆகவில்லை என்றாலும் அண்ணாச்சிக்கும், மணவாளனுக்கும் நேரிலேயே வெற்றிச் செய்தியைத் தெரிவித்து அவர்கள் ஆசியைப் பெற வேண்டும் என்று கருதியதால் பாண்டியன், மோகன்தாஸ், பொன்னையா, கண்ணுக்கினியாள் முதலிய சிலர் முன் கூட்டியே அண்ணாச்சி கடைக்கு விரைந்தார்கள். அவர்கள் அண்ணாச்சி கடையை நெருங்குவதற்கு முன்பு சிறிது தூரத்திலிருந்து பார்த்த போது அங்கு ஏதோ பெரிய கூட்டம் சூழ்ந்து நிற்பது தெரிந்தது. அங்கும் இங்குமாகச் சில போலீஸ்காரர்களும் தெரிந்தனர். அருகே நெருங்க நெருங்க ஏதோ அசம்பாவிதம் நிகழ்ந்திருப்பதற்கான அடையாளங்கள் அங்கே புலப்பட்டன. சத்திய வெள்ளம் : முன்னுரை, கதை முகம் 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
நிறைவுரை
|