பன்னிரண்டாவது அத்தியாயம் அண்ணாச்சி கடை வாசலில் நாலைந்து சைக்கிள்கள் நடுத்தெருவில் தூக்கி எறியப்பட்டு நொறுக்கப்பட்டிருந்தன. சோடா பாட்டில்கள், உடைந்த கண்ணாடித் துண்டுகள், எரிக்கப்பட்ட புத்தகங்கள், பத்திரிகைகளின் சாம்பற் குவியல் என்று கடை முகப்பு அலங்கோலமாயிருந்தது. கடை ஏறக்குறைய சூறையாடப்பட்டிருந்தது. வெற்றிப் பெருமிதத்தோடு அங்கே சென்றிருந்த பாண்டியன் முதலியவர்களுக்கு அங்கே என்ன நடந்திருக்க முடியும் என்பது புரியவும் புலப்படவுமே சிறிது நேரம் ஆயிற்று. கடையில் இருந்த சிறுவர்கள் இருவரையும் கூடச் சூறையாட வந்தவர்கள் அடித்துப் போட்டுவிட்டு போய்விட்டதாகவும், அவர்கள் ஆம்புலன்ஸில் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகப் பட்டிருப்பதாகவும் கூடியிருந்தவர்கள் சொன்னார்கள். சம்பவம் அப்போதுதான் நடந்து முடிந்திருந்தது. பக்கத்தில் விசாரித்ததிலிருந்து சில உண்மைகள் பாண்டியனுக்குத் தெரிந்தன. தெரிந்த உண்மைகளால் அவன் மனம் தளர்ந்து ஒடுங்கியது. மாலையில் பல்கலைக் கழகத்திலிருந்து லாரிகளைத் திரும்பிக் கொண்டு போகிற போக்கில் இராவணசாமியின் ஆட்கள் மாணவர்கள் மேல் காட்ட முடியாத கோபத்தை அண்ணாச்சியுடைய கடையின் மேல் காட்டிவிட்டுப் போயிருந்தார்கள். லாரிகளோடு ஆட்கள் வந்த போது அண்ணாச்சி கடையில் இல்லை. கடையைக் கவனித்துக் கொண்டு அண்ணாச்சியிடம் வேலை பார்க்கும் பையன்கள் இருவர் மட்டுமே இருந்தனர். தாக்கவும், சூறையாடவும், வந்திருந்தவர்களுக்கு இது மிகவும் வசதியாகப் போயிற்று. எதிர்ப்புறத்து மருந்துக் கடைக்காரர்கள் போலீஸுக்கு ஃபோன் செய்து போலீஸ் வந்தும் கூடக் கடையைச் சூறையாடிய இராவணசாமியின் ஆட்களை எதுவும் செய்யவில்லை என்பதையும், கண்டுகொள்ளாதது போல் இருந்து சூறையாடியவர்களை ஓட விட்டுவிட்டார்கள் என்பதையும், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தெரிவித்தார்கள். பாண்டியனுக்கு நெஞ்சம் கொதித்தது. "பாவிகள்! உருப்படவே மாட்டார்கள்" என்று கையைச் சொடுக்கி நெரித்தாள் கண்ணுக்கினியாள். அவளும் கோபம் அடைந்திருந்தாள். "இராவணசாமி நம்மிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு லாரிகளோடு வெளியேறியதும் நாமெல்லாம் தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து நூல் நிலைய முகப்பில் காத்திருந்த போது அண்ணாச்சியும் கடையில் இல்லாத வேளையில் இதைச் செய்திருக்கிறார்கள்" என்றான் மோகன்தாஸ். அப்போதுதான் அண்ணாச்சியும் மணவாளனும் கூட்டத்தை விலக்கிக் கொண்டு வந்து கொண்டிருந்தார்கள். மணவாளனின் முகத்தில் பதற்றமும் கவலையும் தெரிந்தது. அண்ணாச்சியின் முகம் சுபாவமாகவே தோன்றியது. எல்லாவற்றையும் பார்த்துவிட்டு முகத்தின் சுபாவமான நிலை மாறாமலே, வலது கையால் மீசையின் மேற்புறத்தை நீவியபடி, "சரிதான் எங்கிட்டவே, விளையாட ஆரம்பிச்சிருக்காங்க... அதையும் தான் பார்க்கலாம்" என்றார் அண்ணாச்சி. அவரிடம் நெருங்கி, "இன்னிக்குப் பார்த்து நீங்க எங்கே போனீங்க...? நடக்கக் கூடாதது நடந்திரிச்சே!" என்று பாண்டியன் துக்கம் பொங்கக் கூறியபோது, "இதை மறந்திடு தம்பி! நீங்களெல்லாம் ஜெயிச்ச சமாச்சாரத்தையும் இதையும் ஒரே சமயத்திலேதான் வந்து சொன்னாங்க... இதனாலே ஏற்பட்ட கவலையை விட அதனாலே ஏற்பட்ட சந்தோசம் தான் எனக்கு அதிகம்" என்றார் அவர். மேலும் அவரே கூறினார்: "பக்கத்து 'சந்தனச் சோலை' கிராமத்திலே அந்த நாளிலே எங்களோடு ஜெயிலிலே இருந்த தியாகி ஒருத்தரு சாகக் கிடக்கிறார்னு வந்து தகவல் சொன்னாங்க... உடனே ஒரு டாக்ஸி ஏற்பாடு பண்ணிக்கிட்டுத் தம்பி மணவாளனோடு நான் அங்கே போக வேண்டியதாயிடிச்சு. பகல் ஒரு மணியிலிருந்து அங்கேதான் இருந்தேன். இப்பத்தான் திரும்பி வந்து தம்பியும் நானும் லேக்வியூ ஓட்டல் வாசல்லே இறங்கினோம். உடனே இந்த ரெண்டு தகவல்களையுமே வந்து சொன்னாங்க... அதான் ஓடியாந்தோம்..." "எங்களாலே அண்ணாச்சிக்கு இவ்வளவு பெரிய பொருள் சேதம் வந்திட்டதேன்னு நினைச்சாத் தாங்க முடியாத கவலையா இருக்கு..." "கவலைப்படாதே பாண்டியன்! நான் ஒத்தைக் கட்டை. கடை வச்சு லாபம் சம்பாரிச்சு, சொத்துச் சேர்த்து நான் யாருக்கும் கொடுத்திட்டுப் போகப் போறதில்லை. ஏதோ இத்தினி வருசமா இந்த யூனிவர்ஸிடியிலே படிக்கிற பிள்ளைங்களையெல்லாம் என் சொந்த சகோதரர்மார்களாக எண்ணிப் பழகி உபகாரம் பண்ணியிருக்கேன். எனக்கு வர லாபம் நஷ்டம் எல்லாம் என்னோடது மட்டுமில்லை... இதனாலே நான் விழுந்து போயிட மாட்டேன். தம்பி இதை என்னாலே தாங்கிக்கிட முடியும்." அண்ணாச்சி இவ்வாறு கூறிய போது அவருடைய குரல் கரத்துத் தொண்டை கம்மிப் போயிருந்தது. "எல்லாப் போட்டிகளிலுமே நம்ம மாணவர்கள் அத்தனை பேரும் ஜெயிச்சாச்சு. உள்ளேயே விடுதி மைதானத்தில் வெற்றி விழா நடத்த அனுமதி கேட்டோம். வி.ஸி. மாட்டேன்னிட்டாரு. இங்கே நடத்தலாம்னு அபிப்பிராயப் பட்டு வந்தோம். இங்கே இப்படி ஆகியிருக்கு. வெற்றி விழாவே வேண்டாம். 'கான்ஸல்' பண்ணிடலாம்" என்று பாண்டியன் மனத் தளர்ச்சியோடு சொன்னான். ஆனால் அண்ணாச்சி அதற்கு இணங்கவில்லை. "இதுக்காக அதை நிறுத்திடப்பிடாது தம்பீ! இதோ... பத்தே நிமிசத்திலே இந்த இடத்தை ஒழுங்கு பண்ணி மேடை போட்டுத் தரேன்... எவ்வளவோ தொல்லைங்களுக்கு நடுவில் ஜெயிச்சிருக்கோம்... அதைக் கொண்டாடியே ஆகணும்." சொல்லிய வார்த்தைகளுக்குக் கொஞ்சமும் குறையாத உற்சாகத்தோடு உடன் வேலைகளைச் செய்தார் அண்ணாச்சி. நொறுக்கப்பட்ட சைக்கிள்களை ஒரு மூலையில் அள்ளிப் போட்டுவிட்டு மற்றவர்களின் உதவியோடு மேடை அமைத்துத் தோரணங்களும், கொடிகளும் கட்டி, 'மைக்' ஏற்பாடு செய்து 'மைக்' பையனிடம் 'சினிமாப் பாட்டுக் கீட்டுப் போட்டீன்னா கொன்னுப்புடுவேன்' என எச்சரித்து 'பாருக்குள்ளே நல்ல நாடு', 'காந்தியைப் போலொரு சாந்த ஸ்வரூபனை' என்று போட வேண்டிய ரிக்கார்டுகளையும் தேர்ந்தெடுத்துக் கொடுத்தார் அவர். கண் முன்னே தம்முடைய கடை சூறையாடப் பட்டுக் கிடக்கும் நிலையிலும் சிறிது கூடத் தளராமல் அண்ணாச்சி செய்த காரியங்களைப் பார்த்துப் பாண்டியனுக்கு மெய் சிலிர்த்தது. அவன் மோகன்தாஸிடம் கூறினான்: "கர்ம யோகிகள் என்று தனியாக எங்கெங்கோ இருப்பதாகப் பேசிக் கொள்கிறோமே, இதோ இங்கே ஒரு கர்ம யோகியைப் பார் மோகன்தாஸ்! இப்படி உண்மையான தொண்டர்களைப் பெற்றுள்ள இயக்கங்கள் தான் நாட்டுக்குக் கர்மயோகிகளை அளிக்கும் தவக்கூடங்கள் போன்றவை. கடந்த விநாடிகளில் ஏற்பட்டு விட்ட இழப்புக்காக முகம் சுளிக்காமல் இந்த விநாடியின் செயல்களில் முகம் மலர ஈடுபடும் தொண்டர்கள் எங்கேயெல்லாம் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் தான் இன்று தவம் இருக்கிறது. நேற்றைய தவங்களை முனிவர்கள் காடுகளிலும், மலைகளிலும் செய்ததாகச் சொல்லுகிறார்கள். இன்றைய தவங்களை நாம் காடுகளில் மலைகளில் செய்ய முடிவதில்லை. நாடுகளில், நகரங்களில், ஊர்களில், தெருக்களில் நாம் செய்ய வேண்டிய பல்லாயிரம் தவங்கள் நம்மை எதிர்பார்த்துக் காத்திருக்கும் காலம் இது. அப்படித் தவம் செய்யும் திராணியுள்ள ஓர் உண்மைத் தொண்டரை இதோ பார்!... இன்று நடைபெறும் இந்த வெற்றி விழாக் கூட்டத்திலேயே இவருடைய கடைக்கு ஏற்பட்டு விட்ட நஷ்டத்தை ஈடு செய்ய எந்தக் காரியத்தையாவது நாம் தொடங்க வேண்டும். என்ன சொல்கிறாய்?" "நிச்சயமாகச் செய்யலாம்! ஆனால் என்ன செய்யப் போகிறோம். எப்படிச் செய்யப் போகிறோம் என்பதையெல்லாம் இப்போதே அண்ணாச்சியிடம் சொல்லி விடாதே. அவர் வேண்டாம் என்று மறுத்தாலும் மறுத்து விடுவார். ஆனால் நாளைக் காலையில் பொழுது விடிவதற்குள் இங்கே இந்தக் கடை பழையபடி இருப்பதற்கான எல்லா உதவிகளையும் நாம் செய்ய வேண்டும்." இவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போதே கூட்டம் நடத்துவதற்காகப் போலீஸ் அநுமதி பெறச் சென்ற மாணவர்கள் திரும்பி வந்து "அனுமதி கிடைக்கவில்லை பாண்டியன்! தேர்தல் முடிவுகளையொட்டி ஏற்பட்டிருக்கும் கொந்தளிப்பான நிலைகளையும், அண்ணாச்சி கடைவாசலில் ஏற்பட்ட அசம்பாவிதங்களையும் கருதி இன்னும் ஒரு வார காலத்துக்கு மல்லிகைப் பந்தல் நகர எல்லையில் கூட்டங்கள் ஊர்வலங்கள் நடைபெறத் தடை விதித்திருக்கிறார்களாம். அதனால் நம் வெற்றி விழாக் கூட்டத்துக்கும் அநுமதி தர மறுக்கிறார்கள்" என்றனர். "சும்மா நாடகம் ஆடுகிறார்கள் போலீஸ் அதிகாரிகள். ஏதோ சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதாகச் சொல்லிக் கொண்டு வட்டங்களையும், கோட்டங்களையும் பாதுகாப்பதற்காக - நம்முடைய விழாக்களையெல்லாம் நடக்க விடாமல் செய்கிறார்கள். கொந்தளிப்பான நிலைமைகளுக்குக் காரணமானவர்களைப் பிடித்துக் கைது செய்து அமைதியைப் பாதுகாக்கத் துப்பில்லாமல் அமைதியாயிருப்பவர்களைத் துன்புறுத்துகிறார்கள். இதற்கு நாம் அடங்கக் கூடாது. தடை இருந்தால் தடையை மீறிக் கூட்டம் நடக்கும்... ஒழுங்காகக் கூட்டத்துக்கு அனுமதி உண்டா அல்லது அனுமதி பெறாமலே கூட்டம் நடக்க வேண்டுமா என்பதைப் போய்க் கேட்டு வா!" வந்த மாணவனும் அவனோடு திரும்பி வந்த மற்றவர்களும் மீண்டும் போலீஸ் நிலையத்துக்கு விரைந்தனர். இதற்குள் நன்றாக இருட்டிவிட்டது. குளிரும், அதிகரித்திருந்தது. மேடை அலங்காரம் முடிந்து 'மைக்' கட்டிக் கூட்டத்தைக் கூட்டுவதற்கான பாடல்களும் ஒலி பெருக்கிகளின் மூலம் ஒலிக்கத் தொடங்கிவிட்டன. சுமார் ஐயாயிரம், ஆறாயிரம் மாணவர்களும் கூடிவிட்டனர். மேலும், மாணவர்கள் கூட்டம் கூட்டமாக வந்த வண்ணம் இருந்தனர். அண்ணாச்சி கடை சூறையாடப்பட்ட செய்தி வேறு காட்டுத் தீயைப் போல் பரவியிருந்தது. மாணவர்கள் மட்டுமில்லாமல் பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் கூடிவிட்டார்கள். அந்த நிலையில் கூட்டத்துக்குத் தலைமை தாங்கி நடத்திக் கொடுக்க வேண்டும் என்று பாண்டியனும், மற்ற மாணவர்களும் மணவாளனை வேண்டினார்கள். மணவாளன் மறுத்தார். "நான் எதற்கு? உங்களிலேயே யாராவது ஒருவர் தலைமை தாங்குவதுதான் நல்லது. இல்லாவிட்டால் ஓர் உண்மை சமூக ஊழியரும் தேசபக்தரும் இன்றைய தினம் வன்முறைக் கும்பலால் பாதிக்கப்பட்டவருமாகிய அண்ணாச்சியையே தலைவராக வைத்துக் கூட்டத்தை நடத்தலாமே?" மணவாளன் கூறியது போலவே கூட்டத்துக்குத் தலைமை தாங்குவதற்கு அண்ணாச்சியும் மறுத்துவிட்டார். மீண்டும் மணவாளனிடம் போய் அவரையே தலைவராக இருக்கும்படி வற்புறுத்தினான் பாண்டியன். "நான் ஒரு காரணத்தோடு தான் சொல்கிறேன். இன்றைய கூட்டத்துக்கு நீங்கள் தான் தலைமை தாங்கணும். அதோடு ஒரு விஷயத்தையும் கூட்டத்துக்கு அறிவிக்கணும். அதை உங்க வார்த்தைகளாலே அறிவிச்சிங்கன்னா நல்லாயிருக்கும்" என்று கூறிக்கொண்டே மணவாளனின் அருகே சென்று காதோடு காதாக அந்த விஷயத்தையும் சொன்னான் பாண்டியன். அதைக் கேட்டதும் மணவாளன் மறுபேச்சுப் பேசாமல் கூட்டத்துக்குத் தலைமை தாங்குவதற்கு ஒப்புக் கொண்டுவிட்டார். அவர்கள் கூட்டத்தைத் தொடங்குவதற்கு ஒரு விநாடிக்கு முன்பாகத் தொலைவில் ஒரு போலீஸ் ஜீப் வந்து நின்றது. டி.எஸ்.பி.யும், இன்ஸ்பெக்டரும், இரண்டு கான்ஸ்டேபிள்களும் இறங்கி வந்தனர். மாணவர்களின் பெருங்கூட்டம் போலீஸைக் கண்டதும் உணர்ச்சி வசப்பட்டது. ஒரு மாணவன் கூட்டத்தினிடையே நடந்து சென்ற கான்ஸ்டேபிளின் தொப்பியைக் கூடத் தட்டி விட்டு விட்டான். ஆனால் அவ்வளவு பெரிய கூட்டத்தில் திரும்பிப் பார்த்துத் தொப்பியைத் தட்டி விட்டது யாராக இருக்கும் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. "இப்போது ஜபர்தஸ்துடன் இவ்வளவு வேகமாக வருகிறீர்களே சார்! கடையைச் சூறையாடிய ரௌடிக் கும்பலைப் பிடிக்காமல் ஓடவிட்ட போது இந்த வேகமும், இந்த ஜபர்தஸ்தும் எங்கே போயிருந்தன?" என்று டி.எஸ்.பி. காதில் கேட்கும்படியாகவே இரைந்து கத்தினார்கள் சில மாணவர்கள். எதையுமே காதில் போட்டுக் கொள்ளாமல் மேடையை நோக்கி முன்னேறினார் டி.எஸ்.பி. அப்போது தான் கூட்டம் தடையை மீறி நடக்கும் என்று மணவாளனைத் தலைவராக அமர்த்தி 'மைக்'கில் அறிவித்துக் கொண்டிருந்தான் பாண்டியன். அந்த மேடைக்கு இருபது கஜ தூரத்துக்கும் முன்னதாகவே மாணவர்கள் நெருக்கமாகச் சூழ்ந்து அடைத்துக் கொண்டு வழியை மறித்து விடவே, டி.எஸ்.பி.யோ அவரோடு வந்தவர்களோ மேலே செல்ல முடியாமல் அப்படியே நிற்க வேண்டியதாயிற்று. "கூட்டத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை. தடையை மீறி நடத்துகிறீர்கள். இதை நான் அனுமதிக்க மாட்டேன்" என்று கத்தியபடி ஆத்திரத்தோடு கான்ஸ்டேபிள்களின் பக்கமாகத் திரும்பி, 'மைக்' ஒலி பெருக்கிகளைப் பறிக்குமாறு டி.எஸ்.பி. கடுகடுப்போடு உத்தரவிட்டார். மாணவர்களும் பதிலுக்குச் சத்தம் போட்டார்கள். கான்ஸ்டேபிள்கள் மைக் ஒலிபெருக்கிகளைக் கழற்றுவதற்காக நின்ற இடத்திலிருந்து ஓர் அங்குலம் கூட மேலே நகர முடியவில்லை. டி.எஸ்.பி.க்கு ஓரளவு அச்சமாகவும் இருந்தது. பல்லாயிரக் கணக்கான மாணவர்களைக் கொதித்து எழச் செய்து, அதன் காரணமாகப் பெரிதாக ஏதாவது ஆகிவிடக் கூடாதே என்று மனத்தில் நடுக்கமும் வந்திருந்த காரணத்தால் அவர் தம் கருத்தை மாற்றி மறு பரிசீலனை செய்தார். மிரட்டுவது போல் மிரட்டி ஒரு நாடகம் ஆடிவிட்டு டி.எஸ்.பி. மோகன்தாஸை அருகில் அழைத்து, "ஆல்ரைட், பத்தரை மணிவரை இங்கே இந்தக் கூட்டத்தை நடத்திக் கொள்ள உங்களுக்கு அனுமதி தருகிறேன். அமைதியாக நடத்திக் கொள்ளுங்கள். ஒரு சம்பிரதாயமான வெற்றி விழாவாக இதை அனுமதிக்கிறேனேயன்றி, என் அனுமதியைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு மாணவர்களை வன்முறைக்குத் தூண்டி விடவோ, இங்கு ஒரு கடை சூறையாடப்பட்டது பற்றிப் பேசவோ கூடாது. உங்கள் பேச்சுக்களால் புதிய அசம்பாவிதங்கள் எதுவும் நேர்ந்து விட வழி கோலாதீர்கள் என்பதற்காகவே இவ்வளவும் சொல்கிறேன்" என்றார். "வன்முறைக்குத் தூபம் போட்டு வன்முறைகளை நடத்திவிட்டு ஓடிப்போனவர்களைச் சௌகரியமாக ஓடிப் போக விட்டுவிட்டு, இப்போது எங்களிடம் வந்து அமைதியைக் காக்கச் சொல்கிறீர்கள். அமைதியாக இருப்பவர்களிடம் தான் நீங்கள் அமைதியைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்" என்று அவருக்குச் சுடச்சுடப் பதில் சொன்னான் மோகன்தாஸ். தொடர்ந்து போலீஸையும் வன்முறையாளர்களையும் பற்றிக் கண்டனக் குரல்கள் விண்ணதிர ஒலித்தன. மாணவர் சக்தியின் ஒற்றுமை அக்குரல்களில் கேட்டது. போலீஸார் ஒதுங்கி நின்று கொண்டார்கள். கூட்டம் நடந்தது. மணவாளன், பாண்டியன், மோகன்தாஸ், கண்ணுக்கினியாள், வெற்றி பெற்ற மற்ற மாணவர்கள் எல்லோரும் மேடையில் அமர்ந்திருந்தனர். எவ்வளவோ வற்புறுத்தியும் கேட்காமல் அண்ணாச்சி மேடைமேல் அமர மறுத்து மேடைக்கு அருகே பக்கவாட்டில் கீழ்ப் புறமாக ஒரு மடக்கு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். "இதோ பாருங்க தம்பீ! நான் மேடைக்கெல்லாம் வந்து கண்ணைக் கூசற வெளிச்சத்தில் உட்கார மாட்டேன். ஒரு தேசத் தொண்டனாக என் அரசியல் வாழ்க்கை தொடங்கிச்சு. தொண்டனாகவே அது முடியும். தொண்டனாக வாழறதிலே உள்ள சுதந்திரமும், மானமும் தலைவனாகிறதிலே கிடையாது. என்னை வற்புறுத்தாதீங்க. நான் கீழேயே இருக்கேன். மேலே இருக்கிற பெருமையெல்லாம் எனக்கு வேண்டாம்" என்று அவர் கூறிய போது அந்த நெஞ்சுக்குள் உறைந்திருந்த கொள்கைக் கட்டிடத்துக்குத் தேக்கு உத்தரமிட்டது போன்ற தெளிவான எண்ணங்கள் தெரிந்தன. அந்தக் கொள்கைப் பிடிப்பு மிகவும் உறுதியாயிருந்ததைக் காண முடிந்தது. பேரவைத் தேர்தல் வெற்றி விழா மாலை அணிவித்தல், பாராட்டுக்கள் எல்லாம் இருந்தாலும் மேடையில் பேசியவர்கள் எல்லாரும் அண்ணாச்சி கடை சூறையாடப் பட்ட கொடுமையையும், அதன் உள்நோக்கத்தையும் விவரித்தே பேசினார்கள். கூட்டத்தில் மாணவர்களும், பொதுமக்களும் பிறருமாகப் பதினையாயிரம் பேருக்கு மேல் திரண்டிருந்தார்கள். கண்ணுக்கினியாள் பேசும் போது அண்ணாச்சியை அந்தப் பல்கலைக் கழகத்தருகே குடிகொண்ட 'காவல் தெய்வம்' என்றும், 'படிக்காத மேதை' என்றும் வருணித்துவிட்டு, "நம்மையெல்லாம் காக்கிற காவல் தெய்வத்தின் கோயிலே இன்று இடிக்கப்பட்டு விட்டது. இது கொடுமையினும் கொடுமை. காவல் தெய்வத்தின் கோயிலை முதலில் கட்டியாக வேண்டும்" என்று பலமான கைத்தட்டல்களுக்கிடையே கூறினாள். பாண்டியன் பேசுகையில் தேர்தலுக்கு அபேட்சை மனுவை கொடுத்த நாளிலிருந்து தனக்கும், சக மாணவர்களுக்கும் இழைக்கப்பட்ட கொடுமைகளை ஒவ்வொன்றாக விவரித்து விட்டு, தான் கடத்தப்பட்டு, தன்னிடம் பலாத்கார முறையில் கையெழுத்து வாங்கியது, உட்பட எல்லாவற்றையும் விவரித்தான். அந்த எல்லாக் கொடுமைகளையும் விடப் பெரிய கொடுமையாக அண்ணாச்சி கடை சூறையாடப்பட்டு விட்டதைச் சொல்லிக் குமுறினான். "எனக்கு முன்பு பேசிய கண்ணுக்கினியாள் அண்ணாச்சியைத் தெய்வமாக வருணித்தாள். நான் அவரைத் தெய்வம் என்று சொல்ல மாட்டேன். தெய்வங்கள் சோதனை செய்த பின்பே உதவிக்கு வரும். நம் அண்ணாச்சியோ சோதனையின்றி உதவிக்கு வரும் தூய தொண்டர். தொண்டு செய்வதையே வாழ்வின் தவமாகக் கொண்டவர். அவர் நம்முடைய இணையற்ற நண்பர்" என்று புகழ்ந்தான் பாண்டியன். இறுதியாக மணவாளன் பேசினார். "நண்பர்களே! இறுதியாக நான் பேசும் முன் உங்களுக்கு ஓர் அறிவிப்பைக் கூற விரும்புகிறேன். நம்முடைய மாபெரும் நண்பரான அண்ணாச்சிக்கு ஏற்பட்ட நஷ்டங்களை ஈடு செய்ய மாணவருலகம் கடமைப்பட்டிருக்கிறது. அதற்காக இப்போது உங்களிடையே சகோதரி கண்ணுக்கினியாள், பாண்டியன், மோகன்தாஸ், பொன்னையா, மாரியப்பன் ஆகியவர்கள் துண்டு ஏந்தி வசூலுக்கு வருகிறார்கள், தாராளமாக உதவுங்கள்" என்று அவர் அறிவித்ததும் கண்ணுக்கினியாள் முதலிய ஐவரும் வசூலுக்காகத் துண்டு ஏந்தி விரித்தபடி கூட்டத்தில் இறங்கினார்கள். மணவாளன் மேலே தொடர்ந்தார்: "இன்று நம்முடைய சமூக, அரசியல், பொருளாதார வானத்திலே கூடியுள்ள கருமேகங்களைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை. இந்த மேகங்களின் தற்காலிக இருட்டு நம்மைப் பயமுறுத்துகிறது. நாம் ஒரு மகத்தான மாறுதலுக்காகக் காத்து நிற்கிறோம். நமது நாடு லஞ்சமும், ஊழலும், பதவி ஆசையும், அதிகார வெறியும் இல்லாத ஒரு நற்காலத்தை எதிர்பார்த்துப் போராடி வருகிறது. இந்தப் போராட்டத்தில் அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் முன் நிற்கிறார்கள். நம்மால் வருங்காலத்தை மாற்ற முடியும் என்பதனால் தான் நிகழ் காலத்தை ஆள்கிறவர்களுக்கு நம்மேல் கோபம் வருகிறது. நம்மை அடக்குகிறார்கள்; ஒடுக்குகிறார்கள். நமக்கு மேலேயும் சுற்றிலும் இருளைப் படைக்கும் இந்த அதிகார மேகங்களால் ஒரு பெரிய மழை வரும். அந்த மழையால் ஒரு வெள்ளம், ஏன், ஒரு யுகப் பிரளயமே கூட வரலாம். அந்த மழையின் பின் அந்த யுகப் பிரளயத்தின் பின் ஏற்படவிருக்கும் சத்தியப் பிரவாகத்தில் நீந்தக் காத்திருக்கிறோம் நாம். அசத்தியங்களும், கொடுமைகளும் அதிகாரங்களும், அடக்குமுறைகளும், அதிகமாகி, இருள் கனத்து மூடும் போதெல்லாம் இப்படித்தான் நாம் ஒரு சத்தியப் பெருக்கை அவாவி நிற்போம்..." மணவாளனின் பேச்சு ஒரு கணம் தடைப்பட்டது. திடீரென்று மேடையை நோக்கிச் சரமாரியாகக் கற்கள் வந்து விழுந்தன. ஆனாலும் மணவாளன் மேடையிலேயே நின்று தீரனாகப் பேசிக் கொண்டிருந்தார். நெற்றிப் பொட்டில் ஒரு கல் விழுந்து குருதி சிந்தியது. அண்ணாச்சி மேடை மேல் தாவி ஏறி மணவாளனை மறைத்துக் கொண்டு முன் நின்றார். மாணவர்கள் கல்லெறிபவர்களைப் பிடிப்பதற்காக விரைந்தனர். போலீஸ் கைகட்டி நின்று கொண்டிருந்ததைக் கூட்டத்தினர் எல்லோருமே பார்த்தார்கள். ஒரே கூப்பாடும் குழப்பமுமாகி இருந்தாலும் அப்போது யாரும் அங்கிருந்து கலைந்து போகவில்லை. சத்திய வெள்ளம் : முன்னுரை, கதை முகம் 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
நிறைவுரை
|