பதினான்காவது அத்தியாயம் அந்தக் கிராமத்தில் மாணவர்களின் நடமாட்டம் இரகசிய போலீஸாரால் கூர்ந்து கவனிக்கப்பட்டது. வந்த முதல் நாள் மாணவர்களால் எதுவுமே தெரிந்து கொள்ள முடியவில்லை. மேரி தங்கத்தின் பெற்றோர்களைப் பற்றி முனைந்து விசாரித்த பின் அவர்கள் இரண்டு மூன்று நாட்களுக்கு முன் அந்த ஊர் எல்லையிலிருந்து ஜீப்பில் ஏற்றிக் கொண்டு போகப்பட்ட விவரத்தை மட்டுமே சிரமப்பட்டுத் தெரிந்து கொள்ள முடிந்தது. மேரி தங்கத்தின் பெற்றோர் வீட்டில் மட்டுமின்றி அவர்களுடைய நெருங்கிய உறவினர் வீடுகள் இருந்த தெருக்களிலும் இரகசிய போலீஸார் குவிக்கப்பட்டிருந்தார்கள். உண்மையின் சிறியதொரு கீற்றும் வெளியே தெரிந்து விடாமல் மறைக்கப்பட்டிருந்தது அங்கே. மாணவர்களும் நம்பிக்கை இழந்துவிடவில்லை. பூட்டப்பட்டிருந்த வீட்டுக்கு எதிர்த்த வீட்டுத் திண்ணையிலேயே கூட்டமாக அமர்ந்து கண்காணிக்கத் தொடங்கினார்கள் அவர்கள். எதற்கும் அஞ்சாதவர்களும், உடல் வலிமையும் மன வலிமையும் மிக்கவர்களுமாகிய பதினைந்து பேர் ஒரு குழுவாக வந்திருந்ததனால் அந்த மாணவர்கள் சிறிது கூட அயர்ந்து விடவில்லை. அந்தப் பதினைந்து மாணவர்களுக்கும் கதிரேசன் என்ற மாணவனைத் தலைவனாக நியமித்து அனுப்பியிருந்தார்கள் பாண்டியனும், மோகன்தாஸும். உணவு சிற்றுண்டி வேளைகளுக்கு ஆறு ஏழு பேர்களாகக் கடை வீதியிலுள்ள ஹோட்டலுக்குப் போய்ச் சாப்பிட்டுவிட்டுத் திரும்பி வந்து அந்த எதிர்வீட்டுத் திண்ணையிலேயே முகாம் இட்டிருந்தார்கள் அவர்கள். இரவைக் கூட அந்தத் திண்ணையிலேதான் கழிக்க நேர்ந்தது. படுக்க விரிப்போ, தலையணையோ கிடையாது. வந்திருக்கும் காரியத்தைப் பெரிதாக நினைத்த காரணத்தால் மாணவர்களில் எவருமே வசதிக்குறைவுகளைப் பற்றிக் கவலைப்படவுமில்லை. பொருட்படுத்தவுமில்லை. விடிந்ததும் வயல் வரப்புகளில் நடந்து போய் இறவைக் கிணறுகளில் பல் விளக்கி, நீராடிப் பழைய உடைகளையே மீண்டும் உடுத்திக் கொண்டு ஊருக்குள் வந்து அங்கே தெரிய வேண்டிய உண்மைகளுக்காகத் தவம் கிடந்தார்கள் கதிரேசன் முதலிய மாணவர்கள். இரண்டாம் நாள் விடிந்ததும் அவர்கள் எந்த வீட்டுத் திண்ணையில் தங்கியிருந்தார்களோ அந்த வீட்டுக்காரர் கருப்பசாமி சேர்வை அவர்களைக் கூப்பிட்டு, "தம்பீ! என்னைத் தப்பா நினைக்கப் பிடாது. பஞ்சாயத்து பிரசிடெண்டும் போலீசும் என்னைக் கூப்பிட்டுத் தொந்தரவு பண்ணறாங்க. 'நீங்க பதினைஞ்சு பேரும் அத்துமீறி 'டிரஸ்பாஸா' என் வீட்டுத் திண்ணையை ஆக்கிரமிச்சுக்கிட்டிருக்கீங்க'ன்னு நான் போலீஸ்லே 'கம்ப்ளெயிண்டு' எழுதிக் குடுக்கணுமாம். குடுத்தா உடனே உங்களைப் பிடிச்சு உள்ளே தள்ளிடலாமாம். எனக்கு அவங்க சொல்றதொண்ணும் பிடிக்கலே. அதே சமயத்திலே அவங்களை விரோதிச்சுக்கவும் முடியலே. கொஞ்சம் தயவு செஞ்சி நீங்க ஒரு காரியம் பண்ணணும். ரெண்டு வீடு தள்ளி 'படேல் தேசிய வாசக சாலை'ன்னு ஒரு வாசக சாலை இருக்கு. அந்த இடத்திலே இருந்துக்கிட்டும் நீங்க கவனிக்க வேண்டியதைக் கவனிக்கலாம். நானே அங்கே சொல்லி ஏற்பாடு பண்ணிடறேன். நீங்க அங்கே தங்கிடலாம்" என்றார். கதிரேசன் அவர் கூறியதை அப்படியே ஒப்புக் கொண்டான். காதும் காதும் வைத்தாற் போல் போலீஸும், பஞ்சாயத்துத் தலைவரும் சொல்லிக் கொடுத்தபடி புகார் செய்து தங்களை மாட்டி வைக்காமல் அந்த வீட்டுக்காரர் நல்லபடியாக நடந்து கொண்டதால் கதிரேசனுக்கு அவர் மேல் ஓரளவு மதிப்பு உண்டாகியிருந்தது. அதிகாரிகளும் பதவிகளில் இருக்கும் படித்தவர்களும் எப்படி எப்படி எந்தெந்தத் தவறுகளை யார் யாருக்குத் திட்டமிட்டுச் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் காலத்தில் ஒரு சாதாரணத் தவற்றைக் கூடச் செய்ய யோசித்துத் தயங்கும் கருப்பசாமி சேர்வை மிகவும் பெரிய மனிதராகத் தோன்றினார். கருப்பசாமி சேர்வை சொன்ன யோசனைப்படி அந்த வாசக சாலையில் போய்த் தங்கிக் கொண்டார்கள் மாணவர்கள். அந்த வாசகசாலை முகப்பிலிருந்தும் மேரி தங்கத்தின் பெற்றோர் வீட்டை நன்றாகக் கவனித்துக் கண்காணிக்க முடிந்தது. வாசக சாலைக்குச் சென்றதனால் சில புதிய நன்மைகளும் உண்டாயின. அங்கே படிக்க வருகிறவர்களிடம் பேச்சுக் கொடுத்துச் சில விபரங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. மல்லிகைப் பந்தல் நிலவரத்தைப் பற்றியும் பத்திரிகைகள் மூலம் தெரிந்து கொண்டார்கள் அவர்கள். பல்கலைக் கழகத்தை உடனே திறக்கக் கோரியும், மேரி தங்கத்தின் மரணத்தைப் பற்றிய பொது விசாரணையை வேண்டியும் பாண்டியன் முதலியவர்கள் தொடங்கியிருக்கும் உண்ணாவிரதம் மல்லிகைப் பந்தல் நகர மக்களின் ஆதரவையும் கவனத்தையும் கவர்ந்திருப்பதாகவும், தோட்டத் தொழிலாளர்கள் ஊர்வலமாக வந்து உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு மாலை சூட்டியதாகவும் ஆளும் கட்சியைத் தவிர நகரின் மற்ற எல்லாக் கட்சிப் பிரமுகர்களும் உண்ணாவிரதத்துக்கும், கோரிக்கைகளுக்கும் தங்கள் ஆதரவுகளைத் தெரிவித்து அறிக்கைகள் விட்டிருப்பதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்திருந்தன. கதிரேசனும் மற்ற மாணவ நண்பர்களும் அவற்றையெல்லாம் படித்து மகிழ்ந்தார்கள். நியாயங்களுக்காகத் தாங்கள் போராடும் போராட்டம் வெற்றி பெற்றே தீரும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உண்டாயிற்று. அந்தக் கிராமத்துக்கு வந்த இரண்டாம் நாள் மாலையில் அவர்கள் முயற்சி பலனளித்தது. மேரி தங்கத்தின் பெற்றோர் வேலை பார்த்த அதே பஞ்சாயத்து யூனியன் நடுத்தரப் பள்ளியில் டிரில் மாஸ்டராக வேலை பார்க்கும் பிச்சை முத்து என்பவர் வாசக சாலைக்குப் படிக்க வந்தார். தற்செயலாகக் கதிரேசனும் மற்ற மாணவர்களும் அவரைச் சந்திக்க நேர்ந்தது. அவராகவே அவர்களிடம் வந்து பேச்சுக் கொடுத்தார். எடுத்த எடுப்பிலேயே அவர் மேல் ஒரு நம்பிக்கை ஏற்பட்டு விட்ட காரணத்தால் மாணவர்கள் தாங்கள் வந்த காரியத்தை அவரிடம் சொன்னார்கள். அதற்கு அவர் உதவியையும் நாடினார்கள். "யாரு? மிஸ்டர் சற்குணத்தையும் அவருடைய மனைவியையுமா பார்க்க வந்தீர்கள்?... அவர்களிடமிருந்து நீங்கள் பெரிதாக எதைத் தெரிந்து கொண்டுவிடப் போகிறீர்கள்? எனக்குத் தெரிந்தவரை அவரும் அவர் மனைவியும் ரொம்பவும் பயந்த சுபாவம் உள்ளவர்கள்... இல்லாவிட்டால் வீட்டைப் பூட்டிப் போட்டுவிட்டுப் போலீசார் சொன்னார்கள் என்று வாழைத் தோட்டத்தில் போய் உட்காருவார்களா?" "என்னது? வாழைத் தோட்டத்திலா?" "ஆமாம்! பஞ்சாயத்து யூனியன் தலைவரின் வாழைத் தோட்டத்தில் கிணற்றிலிருந்து பம்ப் செட் மூலம் நீர் இறைப்பதற்காக 'மோட்டார் ரூம்' என்று கிணற்றை ஒட்டி ஒரு சிறிய அறை இருக்கிறது. இரண்டு மூன்று நாட்களாகச் சற்குணமும் அவர் மனைவியும் அங்கே தான் ஏறக்குறைய சிறையிடப்பட்டது போல் ஒளித்து வைக்கப் பட்டிருக்கிறார்கள். இது எனக்குத் தெரியும், மிஸ்டர் கதிரேசன்! எவ்வளவு கேவலமான நிலை பாருங்கள்! படித்தவர்களிடமும் அறிவாளிகளிடமும் பயமும் கோழைத்தனமும் இருக்கிறவரை இந்தச் சமூகத்தில் உண்மைகளையும், நியாயங்களையும் யாரும் கௌரவிக்க மாட்டார்கள். சுயநலத்தை அடிப்படையாகக் கொண்ட அச்சமும், பொதுநலத்திலிருந்து விலகி நிற்கும் தன்மையுமே இன்றுள்ள சமூகத்தின் சாபக் கேடுகள். சொந்த மகளைப் பறிகொடுத்துவிட்டு அதற்காக வாய்விட்டு அழவும் முடியாமல் அடங்கிப் போய்விட்ட சற்குணம் தம்பதிகளிடம் போய் நீங்கள் என்ன தெரிந்து கொண்டு விட முடியும் என்பதுதான் எனக்குப் புரியவில்லை? உங்களைப் போன்ற மாணவர்களின் நியாய உணர்வையும், போராட்ட மனப்பான்மையையும் நான் வரவேற்கிறேன். ஆனால் இப்படி மனப்பான்மைகளில் கூட நமக்கும், முந்தைய தலைமுறைக்கும் நடுவே ஒரு பெரிய இடைவெளி இருக்கிறது. அவர்கள் 'சத்தியம் வெல்லும்' என்று சொல்லிவிட்டுச் சத்தியம் எப்படியும் தானாகவே வென்று கொள்ளும் என்ற நம்பிக்கையோடு திண்ணையில் உட்கார்ந்து விடுகிறார்கள். 'சத்தியம் தானாக வெல்லாது. அதற்காகப் போராட வேண்டும். அதற்காகத் தீவிரமாகப் பாடுபட வேண்டும்' என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாம் மட்டும் தான் இதைப் புரிந்து கொண்டிருக்கிறோம்." இந்த டிரில் மாஸ்டர் பிச்சைமுத்து புரட்சிகரமான சிந்தனைகளை உடையவராக இருந்தார். அந்தக் கிராமத்தில் மற்றவர்களிடம் இருந்த பயம் அவரிடம் இல்லை. இளைஞராயிருந்தாலும் அவருடைய சிந்தனையில் முதிர்ச்சியும் வேகமும் இருந்தது. கதிரேசன் அவரைக் கேட்டான்! "சார்! நீங்கள் தான் எங்களுக்கு உதவ வேண்டும். இந்தக் கிராமத்தில் யாரைக் கேட்டாலும் மிஸ்டர் சற்குணம் விஷயமாகப் பேசுவதற்கே பயப்படுகிறார்கள். நீங்கள் தயவு செய்து எங்களை அந்த வாழைத் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றால் மிகவும் உபயோகமாக இருக்கும்." "வாழைத் தோட்டத்தைச் சுற்றிப் பலத்த காவல் இருந்தாலும் இருக்கலாம். எதற்கும் முயன்று பார்ப்போம். எல்லோரும் கூட்டமாக அங்கே போக முடியாது. உங்களை மட்டும் இன்றிரவு என்னோடு அங்கே அழைத்துப் போகிறேன். ஊரிலிருந்து நாலைந்து மைல் போக வேண்டும். உங்களுக்கு சைக்கிள் விடத் தெரியுமா?" "ஓ தெரியும் சார்... எத்தனை மணிக்கு நாம் புறப்பட வேண்டியிருக்கும்?" "இரவு பத்தரை மணிக்குப் புறப்படலாம். ஆனால், இருவரும் ஒன்றாகச் சேர்ந்து இங்கிருந்து புறப்படக் கூடாது. ஊர்க் கோடியிலுள்ள ஆலமரத்தடியில் நான் இரண்டு சைக்கிள்களோடு காத்திருப்பேன். நீங்கள் யாரும் சந்தேகப்படாதபடி எங்கோ சுபாவமாகப் புறப்பட்டு வருவது போல் அந்த ஆலமரத்தடிக்கு வரவேண்டும். புறப்படு முன் யாரும் உங்களைப் பின் தொடரவில்லை என்பதையும் நீங்களே உறுதி செய்து கொள்ள வேண்டும்." கதிரேசன், பிச்சைமுத்து சார் கூறிய யோசனைக்குச் சம்மதித்து அதன்படி செய்ய ஒப்புக் கொண்டான். "நீங்கள் வற்புறுத்துகிறீர்களே என்பதற்காகத்தான் உங்களை நான் மிஸ்டர் சற்குணத்திடம் அழைத்துக் கொண்டு போகிறேன். எனக்கு அவரைச் சந்திப்பதில் இனிமேல் நம்பிக்கை எதுவும் கிடையாது. நம் முயற்சி காலங்கடந்து விட்டது. மகளைக் கற்பழித்த இளம் விரிவுரையாளரின் உறவினரான மந்திரியின் சார்பில் எங்கள் ஊர்ப் பஞ்சாயத்துத் தலைவர் மூலம் ரூபாய் இருபத்தையாயிரம் சற்குணத்தின் கைக்கு மாறிவிட்டது. 'என் மகளுக்குத் தூக்கத்தில் நடக்கும் வியாதி உண்டு. அவள் தவறித் தண்ணீரில் விழுந்து மரணமடைந்திருப்பதை ஒப்புக் கொள்கிறேன்' என்று சற்குணமே எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுப்பதற்கு விலையாக இந்தத் தொகையைப் பேரம் பேசி அவரிடம் கொடுத்து விட்டார்கள்." "ஒரு தந்தை தன் மகளின் மேல் உள்ள பாசத்தை இருபத்தையாயிரம் ரூபாய்க்கு விற்று விட முடியுமா சார்?" "முடியுமா, முடியாதா என்பது எனக்குத் தெரியாவிட்டாலும் மிஸ்டர் சற்குணத்தால் அது முடிந்திருக்கிறது என்பதை நான் பிரத்தியட்சமாகக் காண்கிறேன். மல்லிகைப் பந்தலுக்குப் போய்ப் பெண்ணை அடக்கம் செய்த இடத்தில் ஒரு தடவை குய்யோ முறையோ என்று கதறி அழுதுவிட்டு, அப்படி அழுத இடத்திலேயே பெற்ற பாசத்தையும் சேர்த்துப் புதைத்து விட்டு வந்திருக்கிறார் அவர்." "மாணவர்களாகிய நாங்கள் உண்மையை எப்படியும் வெளிப்படுத்தியே தீருவோம். விசாரணை கோரியும், பல்கலைக் கழகத்தை உடனே திறக்க வேண்டியும், எங்கள் பிரதிநிதிகள் மல்லிகைப் பந்தலில் உண்ணாவிரதம் தொடங்கியிருக்கிறார்கள் சார்!" "உண்ணாவிரதத்தை எல்லாம் மிகவும் சுலபமாகச் சமாளித்து விடுவார்கள் அவர்கள். ஒழுக்கமும், நேர்மையும், மற்றவர்கள் மனச்சாட்சியை மதிக்கும் நல்லெண்ணமும் உள்ளவர்கள் கையில் அதிகாரம் இருந்தால் தான் உண்ணாவிரதம் போன்ற சாத்வீகப் போர் முறைகள் பயன்படும். குறுகிய நோக்கம் உள்ளவர்கள் உண்ணாவிரதத்தைக் கூட அவமானப்படுத்தி விட முடியும். ஐ.பி.ஸி. செக்ஷன் த்ரீ நாட் நயன் (309) படி தற்கொலை முயற்சி என்று உண்ணாவிரதத்தைத் தடுத்து மாணவர்களை உள்ளே தள்ளப் போகிறார்கள் பாருங்கள். நான் சொல்கிறபடி நடக்காவிட்டால் அப்புறம் என்னை ஏனென்று கேளுங்கள்." வாசக சாலையில் சந்தித்த சிறிது நேரத்திலேயே டிரில் மாஸ்டர் பிச்சைமுத்து கதிரேசனோடும் மற்ற மாணவர்களோடும் மனம் விட்டுப் பழகத் தொடங்கியிருந்தார். அவரிடமிருந்து பல செய்திகள் தெரிந்தன. "நேற்றைக்கு முன் தினம் குளத்தில் விழுந்து இறந்த மேரி தங்கத்தின் புகைப்படம் ஏதாவது கிடைக்குமா என்று தேடி மதுரையிலிருந்து பத்திரிகைக்காரர்கள் ரெண்டு பேர் வந்திருக்கிறார்கள். எங்கே அவர்களுக்குப் படம் கிடைத்து விடுமோ என்ற பயத்தில் மிஸ்டர் சற்குணத்தின் வீட்டிலிருந்த அவர் மகள் சம்பந்தப்பட்ட எல்லாப் புகைப்படங்களையும் போலீஸார் எடுத்துக் கொண்டு போய் விட்டார்கள். சற்குணத்தின் சொந்தக்காரர்கள் வீடுகளுக்கெல்லாம் சென்று 'உங்ககிட்டே மேரி தங்கத்தின் போட்டோ ஏதாவது இருந்தாலும் கூட அதை யாருக்கும் கொடுக்கக் கூடாது' என்று கண்டிப்பாக மிரட்டிப் பயமுறுத்தியிருக்கிறார்கள்." "போட்டோ வேணும்னா நாங்க தர முடியும் சார்! எங்க யுனிவர்சிடி மெடிகல் காலேஜ் 'குரூப்' போட்டோ எதிலேயாவது மேரி தங்கத்தின் படம் கிடைக்கும்" என்றான் கதிரேசன். "போட்டோ ஒன்று உடனே எனக்கு வேண்டும் என்பதற்காக மட்டும் இதை நான் உங்களிடம் சொல்லவில்லை. அதிகாரத்தின் கிளைகளால் நிஜத்தின் எல்லா ஊற்றுக் கண்களையும் எப்படி உடனுக்குடன் அடைத்துவிட முடிகிறது பாருங்கள் என்பதற்காகவே இதைச் சொன்னேன்" என்றார் பிச்சை முத்து. அன்றிரவு திட்டமிட்டபடி ஊர்க் கோடியிலிருந்த ஆலமரத்தடிக்குச் சென்று அங்கிருந்து நாலு மைல் தொலைவில் உள்ள பஞ்சாயத்துத் தலைவரின் வாழைத் தோட்டத்துக்குச் சைக்கிளில் போனார்கள் பிச்சைமுத்துவும் கதிரேசனும். வாழைத் தோட்டம் ஒரு சிறு குன்றின் சரிவில் இருந்தது. தோட்டத்தின் முகப்பில் ஆட்கள் காவல் இருந்தார்கள். சைக்கிள்களை ஒரு சோளக் காட்டில் கழுத்தளவு வளர்ந்து கதிர் வாங்கியிருந்த சோளப் பயிருக்கு நடுவே மறைத்து வைத்துவிட்டு முகப்பு வழியாக வாழைத் தோட்டத்தில் நுழையாமல் கதிரேசனும், பிச்சைமுத்துவும், ஒரு பர்லாங் தொலைவுக்கு மேல் சுற்றிப் போய்க் காடாரம்பமான ஒரு புதரிலிருந்து தோட்டத்துக்குள் பிரவேசித்தார்கள். அன்று மாலையில் தான் தண்ணீர் பாய்ச்சியிருந்ததால் வாழைத் தோட்டம் சேறும் சகதியுமாக வேகமாய் நடந்து போக முடியாதபடி இருந்தது. நரிகள் வேறு குறுக்கே ஓடின. ரேடியம் உருண்டைகள் போல் இருளில் மின்னும் நரிகளின் கண்கள் கதிரேசனுக்கு ஓரளவுக்குப் பய்ம் ஊட்டின. "பயப்படாமல் வரலாம் மிஸ்டர் கதிரேசன்! காட்டு நரிகளையெல்லாம் விட தந்திரமான குள்ளநரிகள் - மிகவும் அபாயகரமான நரிகள் - இன்று நாட்டில் தான் இருக்கின்றன. அந்த நாட்டு நரிகளுக்குப் பயப்படுவதை விட அதிகமாக நீங்கள் இந்தக் காட்டு நரிகளுக்குப் பயப்பட வேண்டியதில்லை" என்று பிச்சைமுத்து நகைத்துக் கொண்டே சொன்னார். அவர்கள் இருவரும் வாழைத் தோட்டத்தின் கிணற்றடியை அடைந்த போது வானில் மேகங்களிலிருந்து விலகி விடுபட்ட நிலா உச்சிக்கு வந்திருந்தது. பிச்சைமுத்துதான் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டுக் கிணற்றின் அருகே இருந்த 'மோட்டார் ரூம்' கதவை மெல்லத் தட்டினார். உள்ளேயிருந்து திருமதி சற்குணத்தின் அழுகுரல் கேட்டுக் கொண்டிருந்தது. அந்த அழுகுரலிலிருந்து அத்தனை அகாலத்திலும் சற்குணம் தம்பதிகள் தூங்கவில்லை என்று தெரிந்தது. கதவைத் திறந்த சற்குணம் பிச்சைமுத்துவை உடனே அடையாளம் புரிந்து கொண்டு, "யாரு? பிச்சைமுத்துவா? எப்படி வந்தே இங்கே? என் மகளைக் கொன்னுட்டாங்கப்பா... பாவிப் பயல்கள்" என்று குரல் தழுதழுக்க ஆரம்பித்தவர் பக்கத்தில் இன்னும் யாரோ நிற்பதைப் பார்த்துப் பேச்சை உடனே நிறுத்திக் கொண்டுவிட்டார். "இது யாரு உன் கூட...?" "எல்லாம் நமக்கு வேண்டியவர்கள் தான்... உள்ளே போய்ப் பேசலாம்" என்று கதிரேசனையும் உள்ளே அழைத்துக் கொண்டு தாமே கதவை உட்புறமாகத் தாழிட்டார் பிச்சை முத்து. தண்ணீர் இறைக்கும் மின்சார மோட்டாரும், கிரீஸ், மண்ணெண்ணெய் வாடையுமாக அந்த அறை தூசி மயமாய் இருந்தது. அறையின் ஒரு மூலையில் திருமதி சற்குணம் தலைவிரி கோலமாக விசும்பி விசும்பி அழுது கொண்டிருந்தாள். "டிரில் மாஸ்டர் பிச்சைமுத்து வந்திருக்காரு" என்று அவளருகே போய்க் குரல் கொடுத்தார் சற்குணம். ஒரு கணம் நிமிர்ந்து நோக்கிய அந்த அம்மாளின் முகத்தைப் பார்த்ததுமே மேரி தங்கத்தின் இலட்சணமான முகம் நினைவு வந்தது கதிரேசனுக்கு. "சர்ச்சுக்குப் போகக் கூட விட மாட்டேங்கிறாங்க... இங்கே கொண்டாந்து தள்ளிக் கழுத்தறுக்கிறாங்கப்பா..." என்று சற்குணம் தொடங்கியவுடனே, "உங்க மேலேயும் தப்பிருக்கு மிஸ்டர் சற்குணம்!" என்று ஆரம்பித்தார் பிச்சைமுத்து. "நீங்க இவ்வளவு பயந்து போய்த் 'தூக்கத்திலே நடக்கறப்பத் தவறி விழுந்து மரணம்'னு எழுதிக் கொடுத்துப்பிட்டு வந்திருக்கக் கூடாது. இதோ இந்தத் தம்பி கதிரேசன் யுனிவர்ஸிடியிலே இருந்து தான் வந்திருக்காரு. இவரும் மற்ற மாணவர்களும் உங்க பொண்ணைப் பற்றி விசாரணை வேணும்னு அங்கே யுனிவர்ஸிடி வாசலிலே உண்ணாவிரதம் தொடங்கியிருக்காங்க... நீங்க என்னடான்னா...?" மேலே சொல்ல இருந்ததைச் சொல்லாமலே பாதியில் பேச்சை முடித்து விட்டார் பிச்சைமுத்து. கதிரேசன், தானும் மற்ற மாணவர்களும் அங்கே வந்த விவரத்தைச் சற்குணத்திடம் சொல்லி அவரிடம் சில கேள்விகள் கேட்டான். பிச்சைமுத்து புறப்படும் முன்பே சொல்லியது சரியாக இருந்தது. சற்குணம் எதற்கும் பிடி கொடுக்கவில்லை. எதைக் கேட்டாலும், "என்னை எதுவும் கேட்காதீங்கப்பா! நான் ஏற்கனவே ரொம்ப மனசு நொந்து போயிருக்கேன். மல்லிகைப் பந்தலுக்குக் கூட்டிக்கிட்டுப் போய்த் திரும்பிக் கொண்டாந்து என் வீட்டுக்குக் கூடப் போக விடாமே ஜெயில்லே வச்ச மாதிரி இங்ஙனே கொண்டாந்து வச்சுப்பிட்டாங்க... எனக்கு ஒரு மகளே பிறந்திருக்க வேண்டாம்... அதனாலே நான் இப்படிச் சீரழியவும் வேண்டாம்" என்று நழுவினாற் போலத்தான் பதில் சொன்னார். ஆனால் பிச்சைமுத்து அவரை விடவில்லை. "நீங்க ஏன் சீரழியப் போறீங்க? மகள் போனதினாலே உங்களுக்கு வேறே புதிய சௌகரியங்கள் கூடக் கிடைச்சிருக்கலாம்... உங்க துக்கத்தைக் கூட பஞ்சாயத்து சேர்மன் விலை பேசி வாங்கியிருப்பாரு." "நீ என்ன சொல்றே பிச்சைமுத்து?" என்று பதறினார் சற்குணம். "சொல்றேன் சோத்துக்கு உப்பில்லேன்னு... உங்க மனசைத் தொட்டுப் பார்த்துக்குங்க. என்னன்னு உங்களுக்கே புரியும்." "மிஸ்டர் சற்குணம்! இப்போது கூட ஒன்றும் குடி முழுகிப் போய்விடவில்லை. 'மல்லிகைப் பந்தலிலே என்னைப் பயமுறுத்தி வற்புறுத்தல் செய்து எழுதி வாங்கினாங்க. நான் எழுதித் தந்தது உண்மையில்லேன்னு' நீங்க சாட்சி சொன்னால் போதும்... அதுக்கு நீங்க இணங்கினா மாணவர்கள் எல்லாரும் உங்களுக்கு நன்றியுடையவர்களாயிருப்போம்" என்று கதிரேசன் மீண்டும் வேண்டினான். சற்குணம் இதற்குப் பதிலே சொல்லவில்லை. "உங்கள் முயற்சி பயனளிக்காது மிஸ்டர் கதிரேசன்! எனக்குத் தெரியும்! நான் அப்போதே உங்களிடம் சொன்னேனே... அப்படி நடந்திருந்தால் நீங்கள் இவரிடம் எவ்வளவு கெஞ்சினாலும் பயன்படாது" என்றார் பிச்சைமுத்து. இவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருந்த போது 'மோட்டார் ரூமின்' கதவு வெளிப்புறம் பலமாகத் தட்டப்பட்டது. உடன் இங்கே உட்புறம் இவர்கள் பேச்சுக் குரல்கள் எல்லாம் அப்படி அப்படியே நின்றன. சத்திய வெள்ளம் : முன்னுரை, கதை முகம் 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
நிறைவுரை
|