இரண்டாவது அத்தியாயம் பல்கலைக் கழகம் வந்த பின் மல்லிகைப் பந்தல் நகரமே ஓரளவு பெரிதாகியிருந்தது. பல ஆண்டுகளுக்கு முன் விமான விபத்தில் மறைந்த மல்லிகைப் பந்தல் கல்லூரி நிறுவனர் பூபதி அதை நிறுவிய போது அது என்றாவது ஒரு நாள் பல்கலைக் கழகமாக வேண்டும் என்ற இலட்சியத்தோடு தான் நிறுவியிருந்தார். அந்தக் கனவு இன்று நனவாகியிருந்தது. பூபதி மறைந்த பின் மஞ்சள்பட்டி ஜமீந்தார் அந்தக் கல்லூரி நிர்வாக போர்டின் தலைவராக வந்தார். ஜமீந்தார் ஒரு பெரிய கள்ளநோட்டு வழக்கில் சிக்கிச் சிறை செல்ல நேர்ந்த பின் அரசாங்கமே குறுக்கிட்டு நிர்வாக போர்டின் மீதுள்ள பல குற்றங்களை விசாரணை செய்து அதைக் கலைத்துவிட்டு மூவர் கொண்ட ஒரு குழ்வைக் கல்லூரி ஆட்சிப் பொறுப்புக்காக நியமித்தது. அந்த ஆண்டிலேயே மல்லிகைப் பந்தல் கல்லூரியைப் பார்வையிட வந்த 'யுனிவர்ஸிடி கிராண்ட்ஸ் கமிஷன்' அந்த ஊரும் கல்லூரியும் ஒரு பெரிய ரெஸிடென்ஷியல் யுனிவர்ஸிடிக்கு மிக மிகப் பொருத்தமாக இருக்கும் என்று சிபாரிசு செய்யவே மாநில அரசாங்கம் தாமதம் செய்யாமல் சட்டசபையில், 'மல்லிகைப் பந்தல் யுனிவர்ஸிடி ஆக்ட்' என்று ஒரு பில் கொண்டு வந்து நிறைவேற்றியது. யுனிவர்ஸிடி கிராண்ட்ஸ் கமிஷன் வழங்கிய ஒரு பெருந்தொகையோடு மாநில அரசாங்கமும் ஒரு பெருந்தொகை வழங்கிக் கல்லூரிக் கட்டடங்களையும், விடுதிகளையும், பட்டமளிப்பு விழா மண்டபம், செனட் ஹால் ஆகியவற்றையும் மெடிகல், என்ஜீனியரிங், விவசாயம் ஆகிய பிரிவுகளையும் கட்டி முடித்தது. அதன் முதல் நிறுவனர் பூபதியின் நினைவாகப் பட்டமளிப்பு விழா மண்டபம், அட்மினிஸ்டிரேடிவ் பில்டிங் ஆகியவை அமைந்திருந்த பிரதான மாளிகைக்கு பூபதி ஹால் என்ற பெயரும் சூட்டப்பட்டது. பூபதியின் சொத்துக்களில் பெரும் பகுதி ஏற்கெனவே அந்தக் கல்லூரி டிரஸ்டைச் சேர்ந்தவையாக இருந்தது. அவருடைய ஒரே மகள் பாரதி போஸ்ட் - கிராஜுவேட் படிப்பு முடிந்ததும் மேற்படிப்புக்காக அமெரிக்கா போனாள். நடுவே அவள் திரும்பியபோது வீடு உள்பட மீதமிருந்த சொத்துக்களையும் பல்கலைக் கழகத்துக்கே எழுதிக் கொடுத்துத் தந்தை பெயரில் ஒரு 'ஷேர்' ஏற்பாடு செய்து விட்டு மீண்டும் வெளிநாட்டுக்கே போய்விட்டாள். பூபதியின் அழகிய பங்களா பல்கலைக் கழக வைஸ்-சான்ஸலர் மாளிகை ஆகியது. மல்லிகைப் பந்தல் பல்கலைக் கழகத்தில் புதிய புதிய துறைகளை அமைப்பதில் அதன் முதல் வைஸ்-சான்ஸலரும், சிண்டிகேட்டும் பெரும் பணி புரிந்தார்கள். இரண்டு ஆண்டுகள் அந்தப் பல்கலைக் கழக வளர்ச்சியில் பொற்காலத்தைப் படைத்தனர். மொழிப் போராட்டம் வந்தது. அந்தப் பல்கலைக் கழகத்தையும் அது பாதித்தது. மொழிப் போராட்டத்தை அடுத்து வந்த பொதுத் தேர்தலில் அந்தப் போராட்டத்தை முன் நின்று நடத்திய கட்சிகள் வென்றன. ஆனால் மாறிய ஆட்சி மிகச் சில மாதங்களிலேயே மாணவர்களின் அதிருப்தியைச் சம்பாதித்துக் கொண்டது. பொருளாதாரத் திட்டங்கள் எதுவும் இல்லாமல் வெறும் உணர்ச்சியை மட்டும் பரவச் செய்து தங்களை ஏமாற்றி விட்டார்களோ என்ற சந்தேகம் இளைஞர்கள் உள்ளத்தில் வேரூன்றியது. அதன் விளைவாக மொழிப் போராட்டத்தை ஆதரித்த இளைஞர்களே அந்தப் போராட்டத்தின் தலைவர்கள் ஆளும் ஆட்சியை முழு மூச்சோடு எதிர்க்க நேரிட்டது. இந்தக் காலக்கட்டத்தில் தான் பாண்டியன் மல்லிகைப் பந்தல் பல்கலைக் கழகத்தில் மாணவனாகச் சேர்ந்திருந்தான். அந்தப் பல்கலைக் கழகத்தில் சேரும் போது அவன் இவற்றையெல்லாம் அறியாத ஒரு நாட்டுப்புறத்து மாணவனாகத்தான் சேர்ந்திருந்தான். இரண்டாண்டுப் படிப்பும், தன்னை ஒரு தேசிய நல நோக்கம் கொண்ட மாணவர்கள் பலரைச் சந்திக்க நேர்ந்ததும், அண்ணாச்சியின் நட்பும் அவனைப் பெரிதும் வளர்ச்சி அடையச் செய்திருந்தன. அவனும் சக மாணவர்களும் அந்த இரண்டாண்டில் அவ்வப்போது நடத்திய உரிமைப் போர்கள் எல்லாம் வெற்றியடைந்திருந்தன. போராட்டங்களும், பிரச்னைகளும் ஒருபுறம் இருந்தாலும் படிப்பைக் கோட்டை விடாமல் கவனித்துக் கொண்டான் அவன். 'முதல் ஆண்டு எப்படியிருந்தாலும் டிகிரி எக்ஸாமினேஷனுக்கு முந்திய ஆண்டிலிருந்தே பொதுக் காரியங்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும்' என்ற முடிவோடு தான் அந்த ஆண்டு ஊரிலிருந்து புறப்பட்டு வந்தான் பாண்டியன். ஆனால் அது பலிக்காமல் போயிற்று. அவனை மாணவர் பேரவைச் செயலாளன் ஆக்குவதற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளும் அங்கே நடைபெற்றுக் கொண்டிருந்தன. பிறபகல் மூன்று மணிக்கு மேலாகியிருந்தது. அறையில் உடன் தங்கும் மாணவர் பொன்னையா, சுதந்திர தின விடுமுறையையும், அடுத்து வந்த சனி, ஞாயிறு விடுமுறைகளையும் கழிக்க முந்திய தினமே வார்டனிடம் அனுமதி பெற்று ஊருக்குப் போயிருந்தான். அறையிலே கட்டிலில் தனியாகப் படுத்திருந்த பாண்டியன் எதிரே ஜன்னல் வழியே பல்கலைக் கழக மணிக்கூண்டு டவரின் உச்சியில் பறக்கும் புத்தம் புதிய மூவர்ணக் கொடியைப் பார்த்தான். உயர்நிலைப் பள்ளிப் படிப்பின் இறுதி ஆண்டுகளில் நடைபெற்ற மொழிப் போராட்டம் அவனுக்கு நினைவு வந்தது. சாலையில் போகிற கார்களை ஒன்று விடாமல் நிறுத்தி 'ஒழிக ஒழிக' என்று எழுதியதும், தபாலாபீஸ் போர்டில் இந்தி எழுத்துக்களின் மேல் தார் பூசியதும், இரயில்களை மறித்ததும் லாரிகளை நிறுத்திக் கூட்டம் கூட்டமாக ஏறிச் சென்று பக்கத்து ஊர்ப் பள்ளி மாணவர்களையும் மொழிப் போரில் குதிக்கச் செய்ததும், அந்தப் போரில் சிலர் மாண்டதும், சிலர் தீக்குளித்ததும், சில போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டதும் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்தன. கார்களை நிறுத்திப் பெட்ரோல் வாங்கியதும், உண்டியல் குலுக்கிப் பணம் வசூலித்ததும் இன்னும் மறந்துவிடவில்லை. இன்று அறிவும் மனமும் விசாலமடைந்த பின் அவற்றை விடப் பெரிய காரியங்களைப் பற்றிச் சிந்திக்கப் பழகியிருந்தான் அவன். கோடிக்கணக்கான மக்களின் வறுமையைப் போக்கவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பாடுபடவும், வேலையில்லாமலிருக்கும் பட்டதாரிகள் வேலை பெறவும், அகில இந்திய - அகில உலக மனப்பான்மைகள் வளரவும் சிந்திக்கத் தொடங்கியிருந்தார்கள், அவனைப் போன்ற மாணவர்கள். காலம் உணர்விலிருந்து அறிவுக்கு மாறியிருந்தது. பள்ளிக்கூட நாட்களில் தான் இருந்த நிலையை இன்று திரும்ப நினைத்தபோது சிரிப்பு வந்தது அவனுக்கு. ஒவ்வொரு புத்தகத்திலும் முதல் இரண்டாம் பக்கங்களிலும், 'தமிழ் வாழ்க' என்று எழுதுவது அந்த நாட்களில் அவன் வழக்கம். இப்போது அப்படி எழுதும் வழக்கம் விட்டுப் போயிற்று. தமிழை வளர்க்க வேண்டும், வளர்ச்சியின் மூலமாகவே அதை வாழச் செய்ய முடியும் என்ற புதிய மனப்பான்மை இப்போது அவனுள் வந்திருந்தது. வளராத எதுவும் வாழாது என்றும், ஒன்றை வாழ வைப்பதற்கு 'அது வாழ்க' என்று எழுதிவிடுவது மட்டும் போதாது என்றும், கல்லூரி வாழ்வு அவனுக்குக் கற்பித்திருந்தது. வாழ்க, ஒழிக கோஷங்கள் பற்றிய பள்ளிக்கூட நாட்களின் மனப் போக்கும் இப்போது அவனிடம் இல்லை. இந்தச் சில ஆண்டுகளில் நிறைய நூல்களையும், உலக அனுபவத்தையும் அவன் கற்றிருந்தான். புதிய அறிவுகளின் உயரத்தில் நின்று கீழே திரும்பிப் பார்த்த போது பழைய அறியாமைகளின் இருண்ட பள்ளம் தெளிவாகத் தெரிந்தது. பள்ளி இறுதி நாட்களிலும், அதை ஒட்டிய காலத்திலும் எதுகை மோனையோடு பேசுவது, எழுதுவதில் அவனுக்கு ஒரு வெறியே இருந்தது. அப்படிப் பேசிய சில தலைவர்களை அவன் இமிடேட் செய்து அப்படியே பேசப் பழகியும் இருந்தான். "தகுதியும் மிகுதியும் வாய்ந்த தலைமையாசிரியர் அவர்களே! கூட்டத்தின் ஒரு பகுதியாக அமர்ந்திருக்கும் ஆன்று அமைந்து அடங்கிய ஆசிரியப் பெருமக்களே!" என்றெல்லாம் தான் அப்போது பேசத் தொடங்குவான் அவன். கருத்துக்களை வற்புறுத்தும் பதங்களை விடப் பதங்களை வற்புறுத்திக் கருத்துக்களை அவற்றில் கரையவிடும் பழக்கமே அப்போது அவனிடமும் மற்றவர்களிடமும் இருந்தது. 'த'வை அடுத்து 'த' வரவும், 'ஆ'வை அடுத்து 'ஆ' வரவும் ஏற்ற பதங்களைத் தேடியே பேசிப் பழக்கமாயிருந்தது. கல்லத்தி மரத்தில் இலைகளிலும், கிளைகளிலும் காய்கள் அப்பிக் கொண்டிருக்கிற மாதிரி வேண்டிய இடங்களில் விவேகத்தோடு அமையாத சொற்களை இட்டு நிரப்பும் அந்த வெறி இப்போது தான் தணிந்திருந்தது. அந்த மாறுதல் தனக்கு மட்டுமல்லாமல் தன்னைச் சுற்றி உள்ள பல மாணவர்களிடமும் நேர்ந்திருப்பதைப் பாண்டியன் கவனித்திருந்தான். இது ஒரு 'டிரான்ஸிஷன் பீரியட்' என்பது அவனுக்குப் புரிந்திருந்தது. புதிய காலத்தில் மொழியின் மேல் இருந்த காமம் தணிந்து, அவர்கள் மொழியைக் காரண காரியங்களோடு நேசிக்கப் பழகி விட்டார்கள். சிலர் மட்டும் அன்று கண்ட மேனிக்கு மாறாமலே இன்னும் இருந்தார்கள். சி.அன்பரசனைப் போல எம்.ஏ. வகுப்புக்குப் போன பின்பும் அந்த எதுமை மோனைப் பேச்சு யுகத்திலேயே இன்னும் இருந்த சிலரையும் பாண்டியன் அங்கே கண்டான். விஞ்ஞானப் பொருளாதார வளர்ச்சியோடு மொழி வளர்ச்சியையும் சேர்த்து நினைத்த பலருக்கும், மொழிக்குத் தாலாட்டுப் பாடி, அதைத் தூங்கச் செய்வதே மொழி வளர்ச்சி என்று எண்ணும் சிலருக்கும் நடுவே ஓர் அமைதியான - சில சமயங்களில் ஆர்ப்பாட்டமான சிந்தனைப் போர் இருந்து வந்தது. பல்கலைக் கழக மாணவர்கள் பேரவைத் தேர்தலுக்கான துண்டுப் பிரசுரங்களிலும், சுவரொட்டிகளிலும் கூட இந்த இருவிதமான சிந்தனைப் போக்குகளைப் பிரதிபலிக்கும் வாசகங்கள் தென்பட்டன. அவன் படுக்கையிலிருந்து எழுந்து முகம் கழுவிக் கொண்டு வரக் குளியலறைக்குச் சென்றான். விடுதியின் கோடியிலிருந்த குளியலறைக்குச் சென்றுவிட்டு மீண்டும் அறைக்குத் திரும்பிய போது அங்கே சில மாணவ நண்பர்கள் அவனுக்காகக் காத்திருந்தனர். எல்லோருமாக மெஸ்ஸுக்குச் சென்று காபி குடித்துவிட்டு மீண்டும் அறைக்கே திரும்பி வந்தார்கள். "பேரவைச் செயலாளர் பதவிக்கு உன்னை எதிர்த்து யார் யார் போட்டியிடுகிறார்கள் என்று தெரியுமா பாண்டியன்?" "நான் இன்னும் விசாரிக்கவில்லை. நான் போட்டியிடுவதே இன்று காலையில் தானே உறுதியாயிற்று?" "உன்னை எதிர்த்து ஓரியண்ட்ஸ் ஸ்டடீஸ் பிரிவில் முதுநிலை முதலாண்டு மாணவன் வெற்றிச் செல்வன் போட்டியிடுகிறான். பேரவைத் தலைவர் பதவிக்கு நம் ஆளாக மோகன்தாசும், அவர்கள் ஆளாக சி.அன்பரசனும் போட்டியிடுகிறார்கள். செயலாளர், கூட்டுச் செயலாளர் பதவிக்கு மேலும் சிலர் உதிரிகளாக நிற்பார்கள் போலிருக்கிறது." "நிற்கட்டும்... அதனால் நமக்கு ஒன்றும் கவலை இல்லை... மோகன்தாசும், நானும் ஜெயிக்கப் போவது என்னவோ உறுதி..." என்றான் பாண்டியன். "வெற்றிச் செல்வனுக்கும், அன்பரசனுக்கும் அவர்கள் கட்சியின் கோட்டச் செயலாளர் மூலம் பண உதவி செய்யப்படுகிறது. மந்திரிகள் வாழ்த்துச் செய்தி அனுப்புகிறார்கள். போலீஸ், ஆர்.டி.ஓ., வைஸ்-சான்ஸலர் எல்லாரும் பயப்படுகிறார்கள்..." "நன்றாகப் பயப்படட்டும். எந்தக் கோட்டையைப் பிடித்தாலும் இனி இந்தக் கோட்டையை அவர்களால் பிடிக்கவே முடியாது." "எங்களுக்கும் நம்பிக்கை இருக்கிறது பாண்டியன்! ஆனாலும் நாம் நிறைய வேலை செய்யவேண்டும். நியூ ஹாஸ்டல், ஈஸ்டர்ன் ஹாஸ்டல், மெடிக்கல், என்ஜீனியரிங் ஹாஸ்டல்கள், வேளாண்மைக் கல்லூரி விடுதி எல்லாவற்றுக்கும் போய் நாமே மாணவர்களைப் பார்க்க வேண்டும். பெண்கள் ஹாஸ்டலுக்குத்தான் போக முடியாது. அங்கே நமக்காகப் பிரச்சாரம் செய்யும் வேலையை அண்ணாச்சி, கண்ணுக்கினியாளிடமும் அவள் சிநேகிதிகளிடமும் விட்டுவிட்டார். பழைய வழக்கப்படி இருந்தால் நாம் இவ்வளவு சிரமப்பட வேண்டியிருக்காது. பாடப் பிரிவுகளின் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் மட்டுமே வாக்களித்துப் பேரவைத் தலைவனையும், செயலாளனையும் மற்றவர்களையும் தேர்ந்தெடுக்கிற முறையையே சென்ற ஆண்டு வரையில் கடைப்பிடித்தார்கள். இந்த ஆண்டு ஆறாயிரம் விடுதி மாணவர்களுக்கும், ஐந்நூறு மாணவிகளுக்கும், வெளியே நகரிலிருந்தும், சுற்றுப்புற ஊர்களிலிருந்தும் வந்து படிக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும் நேரடியாகவே 'பாலட் பேப்பர்' கொடுத்து தேர்தல் நடத்தப் போகிறார்களாம். அன்பரசன், வெற்றிச் செல்வன் வகையறா ஆட்கள் வி.சி.யைப் பார்த்துப் பிரஷர் கொடுத்து, வி.சி. ரிஜிஸ்டிராரைக் கூப்பிட்டுச் சொல்லி அதன் பின் இந்தப் புது ஏற்பாடு திடீரென்று அறிவிக்கப்பட்டிருக்கிறது." "இந்த ஏற்பாட்டையே நாம் எதிர்த்துப் போராட முடியும். ஆனால் நாம் இதை எதிர்த்தால் இதை வைத்தே அன்பரசன் குழுவினர் நம்மைப் பற்றி துஷ்பிரச்சாரம் செய்வார்கள். எல்லா மாணவர்களுக்கும் வோட்டளிக்கும் வாய்ப்புக் கிடைப்பதை நாம் எதிர்க்கிறோம் என்று திரித்துப் பிரச்சாரம் செய்வார்கள். அதனால் இதை நாமோ, நம்மவர்களோ எதிர்க்கக் கூடாது." "நீ எப்போதுமே இப்படித்தான் பாண்டியன்! எதையும் எதிர்க்கக் கூடாதென்கிறாய். இதோ பார்! அவர்கள் வெளியிட்டிருக்கும் துண்டுப் பிரசுரத்தில் நம்மைப் பற்றி என்னவெல்லாம் எதிர்த்து எழுதியிருக்கிறார்கள்" என்று சட்டைப் பையிலிருந்து ஒரு துண்டுப் பிரசுரத்தை எடுத்து நீட்டினான் அந்த மாணவ நண்பன். பாண்டியன் அதை வாங்கிப் பார்த்தான். நோட்டீசின் மேற்பகுதியில் 'தமிழ் வெல்க' என்றும் அடுத்து 'மானம் மரியாதை மதிப்பு வாழ்க' என்றும் அச்சிட்டிருந்தது. அதன் கீழே, 'தமிழ்த் துரோகிகளை ஒழித்துக் கட்டத் தங்கத் தமிழகத்தின் சிங்கச் சிறுத்தைகளே ஒன்றுபடுங்கள்! இந்தப் பல்கலைக் கழகம் நமது சொந்தப் பல்கலைக் கழகமாக வேண்டுமாயின் அன்பரசனுக்கும், வெற்றிச் செல்வனுக்கும் வாக்களியுங்கள்' - என்றும் அச்சிடடிருந்ததோடு பெயர் குறிப்பிடாமல் பாண்டியனைப் பற்றியும், மோகன்தாசைப் பற்றியும் பழித்துக் கூறும் வாக்கியங்கள் சிலவும் அச்சிடப்பட்டிருந்தன. அதைப் படித்துவிட்டுப் பாண்டியன் சிரித்தான். பின்பு அந்தப் பிரசுரத்தைச் சுக்குநூறாகக் கிழித்துக் குப்பைக் கூடையில் எறிந்தான். "எனக்குத் தெரிந்த நாளிலிருந்து ஒவ்வொரு வருடமும் இதே வாக்கியம். இதே தங்கத் தமிழகம், இதே சிங்கச் சிறுத்தைகள்தான் அவர்கள் துண்டுப்பிரசுரங்களில் எழுதப்படுகின்றன. புதிதாக எதுவுமில்லை." "தங்கத்தைத்தான் மொரார்ஜி தேசாய் பதினாலுகாரட் ஆக்கி விட்டாரே. இங்கே கூட மல்லிகைப் பந்தலில் நகைப் பட்டறை வைத்திருந்த பத்தர் ஒருத்தர் 'மொரார்ஜி சுண்டல்' என்று மாலை வேளைகளில் பார்க்கில் சுண்டல் வியாபாரம் செய்கிறார்!" பாண்டியன் குறுக்கிட்டு இடைமறித்தான். "அவர்கள் தந்திரத்தைப் பார்த்தீர்களா? சோற்றுக்குத் திண்டாடுகிறவர்களுக்கு நடுவே அவர்கள் தங்கத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். வேலை வாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு நடுவே அவர்கள் மொழியின் பழம் பெருமைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்." இப்படியே சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பின் பாண்டியனும் நண்பர்களுடன் ஈஸ்டர்ன் ஹாஸ்டலில் அறை அறையாக நேரில் சென்று மாணவர்களைச் சந்தித்து வோட்டுக் கேட்கும் திட்டத்துடன் புறப்பட்டனர். போகிற வழியில் பெண்கள் விடுதிக்கு முன்னாலிருந்த பூங்காவில் தற்செயலாக அவன் கண்ணுக்கினியாளை அவள் தோழிகளோடு சந்திக்க நேர்ந்தது. "அண்ணாச்சி எல்லாம் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன். பெண்கள் விடுதியில் பிரச்சாரம் முழுவதும் உங்கள் பொறுப்பு" என்றான் பாண்டியனோடு வந்த மாணவர்களில் ஒருவன். அவள் புன்னகையோடு சம்மதத்துக்கு அறிகுறியாகத் தலையசைத்தாள். "நாங்கள் கிழக்கு விடுதியில் மணவர்களைப் பார்க்கப் போகிறோம்" என்று சொல்லிவிட்டுப் பாண்டியன் அவளிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட இருந்தபோது, "ஒரு நிமிஷம் இப்படி வாருங்கள்! உங்களிடம் தனியே கொஞ்சம் பேச வேண்டும்" என்றாள் அவள். பாண்டியனுக்குத் தர்ம சங்கடமாக இருந்தது. உடன் நிற்கும் மாணவர்களை விட்டு விட்டு அன்று காலையில் தான் புதிதாக அறிமுகமாகியிருந்த ஒரு மாணவியோடு தனியே பேசப் போவது அந்த மாணவர்களை எப்படி எப்படி உணர வைக்குமோ என்று ஒரு விநாடி கூசினான். அதற்குள் "ஐ திங் ஐயாம் நாட் டிஸ்டர்பிங் யூ" என்று மீண்டும் அவள் குரல் குழையவே, அவன் அவளைப் புறக்கணிக்க அஞ்சி அவளோடு சிறிது தொலைவு நடந்து சென்றான். இன்னும் அதிகம் பழகாத ஓர் இளம் பெண்ணோடு நடந்து செல்வதில் வார்த்தைகளால் சொல்ல முடியாத மகிழ்ச்சி உள்ளே நிறைந்து கொண்டிருந்தது. 'புன்னகையும் நாணமும் இங்கிதப் பேச்சுக்களுமாக எங்கெல்லாம் ஓர் அந்நியமான இளம் பெண் உன்னோடு நடந்து வருகிறாளோ அங்கெல்லாம் உனது உடனடியான சுவர்க்கங்கள் படைக்கப்படுகின்றன' என்று அர்த்தமுள்ள ஓர் ஆங்கிலக் கவிதையை நினைத்துக் கொண்டான் பாண்டியன். "காலையில் அண்ணாச்சி கடையில் நடந்ததை நீங்கள் தவறாக எடுத்துக் கொண்டிருந்தால் அதற்காக என்னை மன்னித்துவிட வேண்டும்..." "தவறாக எடுத்துக் கொண்டிருந்தால் தானே?" "நான் செய்தது அதிகப்பிரசங்கித்தனம் என்று நீங்கள் நினைத்ததாக என் மனதில் பட்டது. அதனால் தான் மன்னிப்புக் கேட்கிறேன்." "மன்னிப்புக் கேட்கவோ, மன்னிக்கவோ அவசியமில்லாத சின்ன விஷயம் இது..." "அப்படியில்லை! உங்களுக்கு ரோஷம் ஊட்டி உங்களை எப்படியாவது மாணவர் பேரவைச் செயலாளராகப் போட்டியிடச் செய்ய வேண்டுமென்ற ஆர்வத்தில்தான் அதைச் செய்ய நேர்ந்தது..." "அதிலே தவறில்லை! ஒரு பெண் காரணமாக ஏற்பட்ட ரோஷத்தில்தான் இராமாயணம், பாரதம், சிலப்பதிகாரம் எல்லாமே நடந்திருக்கின்றன. நீங்கள் வளையலைக் கழற்றி எறிந்த அந்த விநாடியில் எனக்கும் கோபம் வந்திருக்கலாம். ஆனால், இப்போது எனக்கு உங்கள் மேல் எந்தக் கோபமும் இல்லை." "அப்படியானால் நன்றி. அதோடு ஒரு சின்ன வேண்டுகோள்...?" "என்ன வேண்டுகோள்?" "இந்தப் பேரவைத் தேர்தல் முடிகிறவரை எங்கே போவதென்றாலும் நீங்கள் தனியே போகக்கூடாது. பத்துப் பன்னிரண்டு மாணவர்களோடு சேர்ந்துதான் போக வேண்டும்." "ஏன் அப்படி...?" "அப்படித்தான்! எங்கு பார்த்தாலும் நோட்டீஸ்களில், சுவர்களில், எல்லாம் ஒரே சிங்கமும் சிறுத்தையுமாக இருக்கிறதே?" "தவறு அவர்களுடையதில்லை! மனிதர்களைப் பற்றி அவர்களுக்கு அதிகம் தெரியாது." அவள் இதைக் கேட்டு அடக்கமுடியாமல் வாய்விட்டுச் சிரித்தள். அப்போது அவள் முகம் மிக மிக இரசிக்கக் கூடியதாயிருந்தது. மீண்டும் அவனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு விடை கொடுத்தாள் அவள். பாண்டியன் அவளிடம் சொல்லிக் கொண்டு நண்பர்களோடு போய்ச் சேர்ந்தான். நண்பர்கள் மெல்ல அவனைக் கிண்டினார்கள். "காதல், தேர்தல் இரண்டையும் ஒரே சமயத்தில் சமாளிப்பது கஷ்டம் அப்பனே!" "நீ சொல்வது தவறு! இந்தக் காதலே தேர்தலை ஒட்டித்தானே பிறந்திருக்கிறது!" என்றான் மற்றொரு நண்பன். "இந்தப் பெண்ணுக்கு இப்போதே 'டிப்ளோமா இன் டிராமா'வைக் கொடுத்துவிடலாம். மூன்று வருடப் படிப்பு அநாவசியம். சாதாரண விஷயங்களைக் கூட ஒரு 'டிரமடிக் எஃபெக்ட்' கொடுத்து நடத்தி விடுகிறாள் இவள். காலையில் அண்ணாச்சி கடையில் செய்ததும் சரி, இப்போது அண்ணனைத் தனியே கூப்பிட்டதும் சரி, எல்லாம் டிராமாவாகத்தான் இருக்குது." ஈஸ்டர்ன் ஹாஸ்டல் போகிறவரை அவர்கள் வம்பு ஓயாமல் தொடர்ந்தது. பாண்டியனும் அதற்கு மறுமொழி எதுவும் கூறாமல் சிரித்துக் கொண்டே கூடப் போனான். மாணவர்களை இரவு உணவுக்காக மெஸ்ஸுக்கு அழைக்கும் விடுதி மணி ஒலிக்கிற வரை பாண்டியனும் நண்பர்களும் அறை அறையாக ஏறி இறங்கினர். வரவேற்பு உற்சாகமாக இருந்தது. ஓர் அறையில் மாணவ நண்பர்கள் சிலர் டொயின் நூலில் 'சாக்லேட்'களை முடிந்து ஆரம்போல ஆக்கி அவனுக்கு மாலையாகப் போட்டார்கள். வேறொரு அறையில் இவர்களுக்கு வேண்டிய குறும்புக்கார மாணவன் ஒருவன் பாண்டியனுக்கு திருஷ்டி கழித்தான். தன்னுடைய விடுதி உணவு அறைக்குத் திரும்ப இருந்த பாண்டியனையும் அவனுடன் இருந்த மாணவர்களையும் கிழக்கு விடுதி உணவறையிலேயே தங்கள் விருந்தாளியாக வந்து உணவருந்துமாறு அழைத்துச் சென்றார்கள் அவர்கள். ஏதோ படையெடுத்துப் பெரிய ஊர்வலம் போவது போல் அவர்கள் கூட்டமாக உணவறைக்குச் சென்றார்கள். மெஸ்ஸில் பரிமாறிய பீன்ஸ் கறி விறகுபோல முற்றியிருந்ததனால் கடிக்கும் போது நார் நாராக வந்தது. "இந்த ஊரிலிருந்து கீழே உள்ள மூன்று ஜில்லாக்களுக்குத் தளதள என்று அருமையான பீன்ஸ், கேபேஜ், காலிஃப்ளவர் எல்லாம் லாரி லாரியாகப் போகிறது. ஆனால் இதே ஊரில் நம்முடைய ஹாஸ்டலுக்கு மட்டும் எப்படித்தான் இந்த விறகுக்கட்டை பீன்ஸ் கிடைக்கிறதோ, தெரியவில்லை." குழுவில் ஒரு மாணவன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த மெஸ் சூபர்வைஸர் காதில் விழும்படியே இதைச் சொன்னான். உடனே மற்றொரு மாணவன், "உனக்குத் தெரியாதா சமாசாரம்? நல்ல பீன்ஸ் கறி வேண்டுமானால் நீ சீஃப் வார்டன் வீட்டிலோ, வி.சி. வீட்டிலோ போய்ச் சாப்பிட வேண்டும். வெஜிடபிள்ஸ் வந்ததும் இளசாகப் பொறுக்கி வார்டனுக்கும் வி.சி.க்கும் அனுப்பி விட்டுத்தானே எல்லாம் நடக்கிறது?" என்றான். "ஆமாம் வி.சி.க்கு இளசாகப் பொறுக்கி அனுப்பினால்தான் பிடிக்கும்?" என்று ஒரு மாணவன் குறும்பாக ஆரபிக்கவே சிரிப்பலைகள் ஓயச் சில விநாடிகள் ஆயின. மெஸ் சூபர்வைஸர் வாயைத் திறக்கவில்லை. அவர்கள் பேசிய எதையும் காதில் போட்டுக் கொண்டதாகவே காண்பித்துக் கொள்ளவும் இல்லை. எப்படியாவது அவர்கள் சாப்பிட்டு முடித்து வெளியேறினால் போதும் என்று இருந்தது அவருக்கு. பல்கலைக் கழக நிர்வாகம், அவர்களுக்கு முன் அவரை நிமிர்ந்து பார்க்கும்படி வைத்திருக்கவில்லை. அவர்கள் பேசிய ஊழல்கள் அங்கே நடைபெறாமல் இருந்தாலல்லவா அவர் நிமிர்ந்து நின்று அவர்களுக்குப் பதில் கூற முடியும்? அப்படி எல்லாம் நடப்பது அவருக்கே தெரியும். அப்புறம் பதில் பேச என்ன இருக்கிறது? சமூக, தார்மீக, நிர்வாகத் துறைகளில் இளைஞர்களிடம் 'ஆண்டி - எஸ்டாபிளிஷ்மெண்ட்' மனப்பான்மை வளருவதற்குக் காரணமே 'எஸ்டாபிளிஷ்மெண்ட்'களில் மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் கூடத் தெரியும் ஊழல்கள் தான். மரக்கட்டையில் நெருப்புப் பற்றுவதை விடப் பஞ்சில் விரைந்து நெருப்புப் பற்றிவிடும். இளைய சமுதாயத்தினரும், மாணவர்களும் பஞ்சு போலிருக்கிறார்கள். வயதானவர்கள் எதிர்க்கத் தயங்கும் அநீதிகளை அவர்கள் உடனே எதிர்க்கிறார்கள். நியாய நெருப்பு உடனே அவர்களைப் பற்றிக் கொதிக்கச் செய்கிறது. வயதானவர்கள் 'நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம்' என ஒத்திப் போடுவதை இளைஞர்கள் இன்றே செய்துவிடத் துடிக்கிறார்கள். மூத்தவர்கள் சகித்துக் கொள்ளப் பழகிவிட்ட ஊழல்களை இளைஞர்கள் முழு வேகத்தோடு எதிர்க்கும் காலம் இது என்பது மெஸ் சூபர்வைசருக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. பல்கலைக் கழக எல்லையிலே அங்கங்கே நடக்கும் நிர்வாக ஊழல்களைச் சம்பந்தப்பட்ட பல முதியவர்கள் சகிப்புத் தன்மையோடு விட்டு விடுவதைப் பார்த்தபோது, 'சகிப்புத்தன்மை' என்பதே ஒரு பெரிய கோழைத்தனமாகி இருப்பதை அவர் கண்டிருந்தார். அந்த சூபர்வைஸரைப் பாண்டியனுக்கு நன்றாகத் தெரியும். உணவை முடித்துக் கொண்டு போகும் போது அவன் அவரை நோக்கிப் புன்னகை புரிந்தான். அவரும் அமைதியாகப் பதிலுக்கு முகம் மலர்ந்தார். இப்போது அவன் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் நண்பர்கள் அவனை அறை வரை கொண்டு வந்து விட்டுச் சென்றார்கள். "நமக்கு வேண்டாதவர்களில் விவேகம் உள்ளவர்கள் அதிகம் இல்லாவிட்டாலும் அடியாட்கள் நிறைய இருக்கிறார்கள். அதனால் நீ கவனமாக இருக்க வேண்டும்" என்று போகும்போது ஒரு நண்பன், பல்கலைக் கழகப் பூங்காவில் சந்தித்த சமயத்தில் அவள் எச்சரித்தது போலவே, இப்போது அவனை எச்சரித்துவிட்டுப் போனான். அந்த எச்சரிக்கை அவனுள் அவளை நினைவூட்டிவிட்டது. அன்றென்னவோ மாலையிலிருந்தே குளிர் அதிகமாக இருந்தது. அறைக் கதவைத் தாழிட்டுக் கொண்டு பாண்டியன் ஸ்வெட்டரை எடுப்பதற்காகப் பெட்டியைத் திறந்தான். இரண்டாண்டுகளுக்கு முன் அந்த ஸ்வெட்டரை வாங்கிய மாலை வேளையும், அன்றைக்குத் திரும்பியதும் அன்பரசன் கோஷ்டியிடம் சிக்கி அவஸ்தைப்பட்டதும் ஞாபகம் வந்தன. ஸ்வெட்டரைப் போட்டுக் கொண்டு ஜன்னல்களை அடைக்கப் போனபோது பின்புறம் தொலைவில் மலை உச்சியில் எங்கோ நெருப்பு எரிவது அழகாகத் தெரிந்தது. மலையின் கருநீல நெற்றியில் யாரோ தாறுமாறாகக் குங்குமம் வைத்துவிட்ட மாதிரி அந்தத் தீ எரிந்து கொண்டிருந்தது. மலையின் நெற்றியைப் பற்றிய கற்பனையை ஒட்டி அந்தப் பெண் கண்ணுக்கினியாளின் அழகிய நெற்றி ஞாபகம் வந்தது அவனுக்கு. பேரவைச் செயலாளர் பதவியை வெற்றி கொள்ளுமுன் ஓர் அழகிய பெண்ணின் இதயத்தைத் தான் வெற்றி கொண்டிருப்பது மெல்ல மெல்ல அவனுக்குப் புரிந்து கொண்டிருந்தது. தன்னைப் பற்றி நினைக்க, உருக, கவலைப்பட ஒரு பெண் இருக்கிறாள் என்ற எண்ணம் அவனைப் பூரிக்கச் செய்தது. 'தேர்தல் முடிகிற வரை தனியே போகாதீர்கள்' என்று அவள் அக்கறையாக எச்சரித்ததை எண்ணியபோது அவளோடு பல ஆண்டுகள் பழகிவிட்டது போல் ஒரு கனிவை அவன் அடைந்தான். 'புன்னகையும் நாணமும் இங்கிதப் பேச்சுக்களுமாக எங்கெல்லாம் ஓர் அந்நியமான இளம் பெண் உன்னோடு நடந்து வருகிறாளோ அங்கெல்லாம் உனது சொர்க்கங்கள்...' என்ற நினைவோடு தான் அன்று அவன் தூங்கப் போனான். சத்திய வெள்ளம் : முன்னுரை, கதை முகம் 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
நிறைவுரை
|