இருபத்திரண்டாவது அத்தியாயம் கிராமத்தில் நாட்கள் மெல்ல மெல்ல நகர்ந்தன. ஒவ்வொரு நாளும் ஒரு வாரத்தின் சுமையோடும், கனத்தோடும் முக்கி முனகிக் கொண்டு மெதுவாக ஊர்வது போல் இருந்தது. வேறுவேறு கல்லூரிகளிலிருந்து விடுமுறைக்காக ஊர் வந்திருந்த மாணவர்களோடு சேர்ந்து ஒரு நாள் இரவு சைக்கிள் சவாரி செய்து விருதுநகருக்குப் போய் இரவு இரண்டாவது காட்சி திரைப்படம் பார்த்து விட்டு வந்தான் பாண்டியன். வாடகை சைக்கிள்களை எடுத்துக் கொண்டு ஏழெட்டுப் பேர் சேர்ந்து போய்விட்டுச் சிரித்துப் பேசிக் கொண்டே இரவில் சேர்ந்து திரும்பியது உற்சாகமான அநுபவமாக இருந்தது. பல்கலைக் கழக மாணவர் பேரவைத் தேர்தலை ஒட்டி நடந்திருந்த நிகழ்ச்சிகளும், சிறை சென்று மீண்டதும் பல பத்திரிகைகளில் பேர் குறிப்பிட்டு வந்திருந்த காரணத்தால் எங்கே படிக்கிற மாணவர்களாயிருந்தாலும் மாணவர்களிடையே அவனுக்கு ஒரு மதிப்பையும், புகழையும் உண்டாக்கியிருந்தன. பல்கலைக் கழக மாணவர் பேரவைத் தேர்தலில் அவன் எந்த ஒரு குறிப்பிட்ட கட்சிச் சார்புடைய மாணவர்களை எதிர்த்து வென்றிருந்தானோ, அந்தக் கட்சிச் சார்புடையவர்களாக இருந்த ஓரிருவர் அவனை வெறுக்கவும் செய்தனர். ஆனால், அந்த வெறுப்பு மிக மிகச் சிறுபான்மையாகவே இருந்தது. அழகுமுத்துவைப் போல் இன்னும் அடுக்கு மொழிப் பேச்சு யுகத்திலேயே பின் தங்கி இருந்த ஓரிருவர் அப்படி வெறுத்தாலும் ஒரு பெரிய பல்கலைக் கழக பேரவையின் செயலாளனாயிற்றே என்று அவனை நோக்கி வியக்கும் வியப்பையும் அந்த ஓரிருவரால் கூடத் தவிர்க்க முடியவில்லை. மல்லிகைப் பந்தலில் இருந்தாலும், மதுரைக்கு வந்தாலும், பாலவநத்தத்துக்குள் நுழைந்தாலும் மாணவர் இயக்கத்தில் ஈடுபட்டதன் காரணமாகத் தனக்கு ஏற்பட்டிருக்கும் புதிய மதிப்பையும், பெருமையையும் பாண்டியனே உணர முடிந்தது; புரிந்து கொள்ள முடிந்தது. அவன் கிராமத்துக்கு வந்த இரண்டாம் நாளோ, மூன்றாம் நாளோ அருப்புக் கோட்டையிலிருந்த உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் ஒருவர் பள்ளி இலக்கிய மன்ற விழாவுக்காக அவனைப் பேச வருமாறு கூறிவிட்டார். "வேறே யாராவது பெரிய தலைவராகப் பார்த்துக் கூப்பிடுங்க. நான் எதுக்கு?" என்று பாண்டியன் பணிவாக மறுத்தான். "உபசார வார்த்தையா நீ இப்படிப் பேசக்கூடாது தம்பீ! இனிமே உன்னைப் போல இருக்கிற இளைஞர்கள் தான் தலைவர்களாக வரணும். வயசானவங்க எல்லாம் போரடிக்கிறாங்க. சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கிட்டிருக்காங்க. என்ன பேசறோம்னு தங்களுக்கும் புரியாமே கேட்கிறவங்களுக்கும் புரியாமே மணிக்கணக்காப் பேசறாங்க..." என்று பதில் சொல்லிச் சிரித்தார் அந்த தலைமை ஆசிரியர். பாண்டியன் அவர் கூறியதை அப்படியே ஒப்புக் கொள்ள வில்லை. "நீங்க சொல்றதை அப்படியே ஒப்புக் கொண்டுவிட முடியாது! தங்களுக்கு வயதாகி மூப்பு வந்து விட்டாலும் நாட்டையும், நாட்டின் எதிர்காலத்தையும் நினைத்துக் கவலைப்படுகிற தங்களது பொறுப்புணர்ச்சியை இன்னும் இளமையாகவே வைத்துக் கொண்டிருக்கிற பெரியவர்கள் சிலரும் நம்மிடையே இருக்கிறார்கள். தாங்கள் இளமையாகவே இருந்தாலும் நாட்டைப் பற்றிக் கவலையே இல்லாமல் வெறும் ஃபாஷன்களின் காட்சிப் பொம்மைகள் போல் திரியும் இளைஞர்களும் இருக்கிறார்கள். 'டிஸ்கொதே' ரெஸ்டாரண்டுகளின் பொய் இருளைத் தேடி அலையும் பல இந்திய இளைஞர்களை எனக்குத் தெரியும். மூத்துத் தளர்ந்த பின்னும் இளமையாகச் சிந்திக்கும் சில வயதானவர்களும், இளமையாக இருக்கிறபோதே மூத்துத் தளர்ந்து விட்டாற் போல கிழட்டுத்தனமாகச் சிந்திக்கும் இளைஞர்கள் சிலருமாக இங்கே கலந்திருக்கிறார்கள். இந்தக் கலைப்பை நீங்கள் அருப்புக்கோட்டையிலோ, பாலவநத்தத்திலோ இருந்து புரிந்து கொள்ள முடியாது. இன்னும் பரபரப்பான நகரங்களில் வந்து பார்த்தால் தான் இது புரியும்..." அவன் எவ்வளவோ மறுத்தும் கேளாமல் இலக்கிய மன்றத்துக்குப் பேச வருமாறு வற்புறுத்தினார் அந்தத் தலைமை ஆசிரியர். அவனும் போய்ப் பேசிவிட்டு வந்தான். அன்றைய தினம் அவன் செய்த சொற்பொழிவை எல்லாருமே பாராட்டினார்கள். அவன் கிராமத்துக்கு வந்திருக்கும் மகிழ்ச்சியைக் கொண்டாடுவது போல் அவன் தாய் இன்று கேழ்வரகு அடை, நாளை காராச்சேவு, நாளன்றைக்கு முறுக்கு என்று வாய்க்கு ருசியாக அவனுக்குச் செய்து கொடுத்து உபசரித்துக் கொண்டிருந்தாள். அவன் வந்து சேர்ந்த முதல் நாளுக்குப் பின் அவன் தாயும் தங்கையும் வயல்காட்டு வேலைகளுக்குப் போவதை நிறுத்திவிட்டார்கள். தந்தை தாம் எப்போதும் போல் காலையில் போய் சூரியன் மலை வாயில் விழுகிற நேரத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். நடுவில் ஒரு நாள் இரவு அவனோடு பேச நேரம் வாய்த்த போது கிழக்கு வீட்டுச் சன்னாசித் தேவரையும் பக்கத்தில் வைத்துக் கொண்டு, "படிக்கிறதைவிட முக்காவாசி நாளு நீங்கள்ளாம் ஜெயிலிலே இருக்கீங்கன்னு தேவரு பேப்பரைப் படிச்சிட்டுச் சொல்றாரே; அது மெய்தானா?" என்று அவனைக் கேட்டார் தந்தை. "நாங்க எந்தத் தப்பும் பண்ணி, அதுக்காக ஜெயிலுக்குப் போகலை. பண்ணாத தப்புக்காக அவங்களா எங்களை ஜெயில்லே அநியாயமா அடைச்சாங்க" என்றான் பாண்டியன். அரசியல் ரீதியாக அவன் போக்குப் பிடிக்காத காரணத்தால் சன்னாசித் தேவர் தந்தையிடம் இல்லாததும் பொல்லாததுமாகக் கொள் சொல்லி வைத்திருப்பார் போலிருந்தது. அது புரிந்ததும் பாண்டியன் சன்னாசித் தேவரோடு அதிகமாக விவாதிக்க விரும்பவில்லை. ஊரில் இருந்த போது மதுரையிலிருந்தும், மல்லிகைப் பந்தலிலிருந்தும் அவனுக்குச் சில கடிதங்கள் வந்திருந்தன. பல்கலைக் கழகத்தைத் திறக்கும் நாளுக்கு ஒரு நாள் முன்னதாகவே புறப்பட்டு வரச் சொல்லிக் கதிரேசன் எழுதியிருந்தான். தான் கொடுத்திருந்த நவநீத கவியின் வசன கவிதைகளை அவன் படித்தாயிற்றா இல்லையா என்று விசாரித்துக் கண்ணுக்கினியாள் எழுதியிருந்தாள். திரும்பவும் மல்லிகைப் பந்தல் போவதற்கு முன் மதுரையில் இறங்கித் தம்மைப் பார்த்துவிட்டுப் போகுமாறு மணவாளன் எழுதிய கடிதத்தில் அவனை வேண்டியிருந்தார். அண்ணாச்சி சுகம் விசாரித்து ஒரு கார்டு போட்டிருந்தார். விடுமுறை அநேகமாக முடிந்து விட்டது. சில நாட்கள் தங்கியதிலேயே சில மாதங்கள் கழிந்து விட்டாற் போன்ற மனநிலையை அடைந்திருந்தான் அவன். புறப்படுவதற்கு முந்திய தினம் மாலையில் உலாவச் செல்லும் போது நவநீத கவியின் அந்த வசன கவிதைத் தொகுதியைக் கையில் எடுத்துக் கொண்டு சென்றிருந்த அவன் மிளகாய்த் தோட்டத்துக் கிணற்றடி வேப்ப மரத்தின் கீழே அமர்ந்து அதைப் படிக்கத் தொடங்கினான். கிராமத்துக்கு வருகிற சமயங்களில் எப்போதுமே வீட்டில் அமர்ந்து படிப்பது அவன் பழக்கமில்லை. அந்தக் கிணற்றடிதான் படிப்பதற்கு எப்போதுமே அவன் தேர்ந்தெடுக்கும் இடம். படிப்பதற்கு ஏற்ற சூழ்நிலையும் அமைதியுமுள்ள இடமாக அந்தக் கிணற்றடி அவனுக்குப் பழக்கமாயிருந்தது. 'வருங்காலக் காதலர்களுக்கு' என்ற அந்தக் கவிதைத் தொகுதியில் எல்லாமே காதல் கவிதைகளாக இருக்கும் என்று அவன் நினைத்திருந்தான். ஆனால் அப்படி இல்லை. 'வருங்காலத்தைக் காதலிப்பவர்களுக்கு' - என்ற அர்த்தமும் தொனிக்கும்படி அந்தத் தலைப்பைச் சூட்டியிருப்பதாக நவநீத கவியே தமது முன்னுரையில் எழுதியிருந்தார். தொகுதியில் சேர்ந்திருந்த 'இளம் நம்பிக்கைகள்' என்ற கவிதை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.
"இந்த நூற்றாண்டின் இந்திய இளைஞனே! இப்போது நீ எந்த இடத்தில் நிற்கிறாய்? ஆன்மீகத்துக்கும் விஞ்ஞானத்துக்கும் நடுவிலா? அறியாமைக்கும் அறிவுக்கும் நடுவிலா? நேற்றைய அவநம்பிக்கைகளுக்கும் இன்றைய சிரமங்களுக்கும் நடுவிலா? நீ நிற்கும் இடம் உனக்குப் புரிகிறதா? அவநம்பிக்கைகள் தான் உன் முன்னோர் உனக்கு அளித்த பிதுரார்ஜிதங்களா? சிரமங்கள் தான் நீ உனக்கென்றே தேடிக் கொண்ட புதுச் சொத்துக்களா? நீ நிற்கும் இடம் உனக்குப் புரிகிறதா? சாலை விதிகளைச் சரியாகப் புரிந்து கொள். சாலைகளின் நடுவே நிற்கக் கூடாது. நடுவே நிற்பவர்கள் எப்போதுமே விபத்துக்குள்ளாகிறார்கள் நடுவில் நிற்காதே; பின்னாலும் போகாதே முன்னேறி விடு! முன்னால் வழிகள் தெளிவாயுள்ளன நடுவில் நிற்காதே பின்னாலும் போகாதே நீ நிற்குமிடம் உனக்குப் புரிகிறதா நடுவில் நிற்பவர்கள் எப்போதுமே விபத்துக்குள்ளாகிறார்கள் முன்னேறி விடு! முன்னால் வழிகள் தெளிவாயுள்ளன..." இந்தக் கவிதையை இரண்டு மூன்று முறை திரும்பத் திரும்பப் படித்தான் பாண்டியன். அவனுடைய இதயத்தின் குரல்களையெல்லாம் எதிரொலிப்பது போலிருந்தது இது. பாரதிக்கும் பாரதிதாசனுக்கும் பிறகு இந்த நவநீத கவி தமிழ்நாட்டில் ஒரு பெரிய உணர்ச்சி வாயிலைத் திறந்து விட்டிருப்பது போல் தோன்றியது அவனுக்கு. அந்தக் கரிசல் காடு முழுவதும் எதிரொலிக்கும்படி இந்தச் சொற்களை உரத்த குரலில் கூவ வேண்டும் போலிருந்தது. 'சாலை விதிகளைச் சரியாகச் புரிந்து கொள் - சாலைகளில் நடுவே நிற்கக்கூடாது' என்று கூறியுள்ள வரிகளின் மூலம் 'மிடில் ஆஃப் தி ரோட்' என்னும் வழவழ மனப்பான்மை மிக மிக நாசூக்காகக் கிண்டல் செய்யப்பட்டிருக்கும் நயத்தை அவன் எண்ணி எண்ணி இரசித்தான். அன்றிரவு ஊர்ச் சாவடியில் வேறு சில மாணவர்களோடு அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது பாண்டியன் இந்த வசன கவிதையை அவர்களிடம் எடுத்துச் சொல்லிப் புகழ்ந்தான். எல்லாரும் அவனைப் போலவே அதை இரசித்தாலும் விருதுநகரில் படிக்கும் அழகுமுத்து மட்டும் அதைக் கிண்டல் செய்து விமர்சித்தன். "எதுகை இல்லை. மோனை இல்லை. அடி வரம்பு, சீர் வரம்பு எதுவுமே இல்லாமல் இது எப்படி கவிதையாகும்?" "எதுகை, மோனை, சீரு, தளை, அடி எல்லாம் சரியாயிருந்து உள்ளே சரக்கு எதுவுமில்லாமே நடைப்பிணம் போல் வர்ர கவிதைகளை என்னான்னு சொல்றது? எங்கே நீதான் ஒரு நல்ல கவிதையைச் சொல்லேன் அழகுமுத்து?" என்று அவனோடு விவாதிக்கத் தொடங்கினான் மற்றொரு மாணவன். "சொல்றேன் கேளு. சென்ற ஆண்டு எங்க கல்லூரி மேகஸீன்லே எழுதிய கவிதையைக் கேட்டால் நீங்க அத்தினி பேரும் அசந்து போயிடுவீங்க" என்று தொடங்கினான் அழகுமுத்து. "நாங்க அசந்து போறோமோ இல்லியோ நீ அசராமச் சொல்லிப் பாரு. அப்புறம் தெரியும்?" என்றான் பாண்டியன். அழகுமுத்து தன் கவிதையைச் சொல்ல ஆரம்பித்தான்.
"பருவப் பாவைதான் உருவக் கோவையில் திருகித் திருகிச் செருகினாள் மனதைச் செருகிய மனத்தை தருவதோ தவிர்வதோ அறிகிலன் யானுமே உருகினன் பருகினன்." ஒரு தமிழ் எம்.ஏ. மாணவன் இதைச் செவிமடுத்த உடனே ஆத்திரமாகக் கேட்டான்: "சும்மா அளக்காதே அப்பனே? 'முருகிற் சிவந்த கழுநீரு'னு ஆரம்பமாகிற பழைய கலிங்கத்துப் பரணிப் பாட்டை இமிடேட் பண்ணி அதிலே 'பருவப் பாவை' 'உருவக் கோவை' என்று உன் கண்டுபிடிப்பையும் நுழைச்சு எழுதியிருக்கே? இதிலே என்ன புதுசா இருக்கு?" "புதுசா என்ன இருக்கணும்? அதான் வரிக்கு வரி எதுகை மோனை எல்லாம் இருக்கே...?" "அதெல்லாம் இருந்து என்ன பிரயோசனம்? கவிதையல்லவா முக்கியமா அதுக்குள்ளார இருக்கணும்? அது இல்லியே?" "நம்ம அழகுமுத்துவுக்கும் வேறு சில ஆட்களுக்கும் இந்தப் 'பருவப் பாவை'ங்கிற தொடரையே 'டெலிகிராபிக் அட்ரஸா' - (தந்தி விலாசம்) கொடுத்திடலாம். சில பேருங்க கையிலே ரொம்ப வருசமா இந்தப் 'பருவப் பாவை' சிக்கிக்கிட்டுப் படாதபாடு பட்டுக்கிட்டிருக்கா..." "இத்தினி வருசத்துக்குப் பிறகும் அந்தப் பருவப் பாவை கிழவியாகாமே எப்பிடி ஒரே மாதிரி இன்னும் 'பருவப் பாவையா'கவே இருந்துக்கிட்டிருக்கான்னுதான் புரியலே..." "அதைப் பேசினவங்க, எழுதினவங்க எல்லாம் வயசாகிக் கிழவனாகி மூத்துப் போனப்புறமும் அந்த வார்த்தை இன்னும் அப்படியேதான் இருக்கு! வேடிக்கைதான்..." இதைக் கேட்டு அழகுமுத்து கோபித்துக் கொண்டு எழுந்திருந்து போய்விட்டான். எல்லா மாணவர்களும் சேர்ந்து கொண்டு தன்னைக் கிண்டல் செய்ததை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்த விவாதம் நடந்த மறுநாள் காலை பாண்டியன் கிராமத்திலிருந்து பல்கலைக் கழகத்துக்குப் புறப்பட வேண்டியிருந்தது. இம்முறை அருப்புக்கோட்டை பஸ்ஸில் போய் மாறிப் போகாமல், விருதுநகர் சென்று மதுரைக்கு இரயில் மூலம் போக நினைத்தான் அவன். அடுத்த விடுமுறைக்கு இவ்வளவு நாட்களை வீணாக்காமல் முன்கூட்டியே புறப்பட்டு வந்து விட வேண்டும் என்று அவன் தாயும் தங்கையும் வற்புறுத்திச் செல்லி அனுப்பினார்கள். அவன் புறப்படும் போது தந்தை எங்கோ காட்டுக்குப் போயிருந்தார். அவருக்கு எப்போதும் வெள்ளாமை வேலைதான். பாசம், பிரியம் எல்லாமே இல்லாத முரட்டு மனிதர் போலத் தோன்றினாலும் பாண்டியனிடம் அந்தரங்கமான பாசமும் பிரியமும் அவருக்கு உண்டு. மேற்படிப்புக்கு வெளியூர் போன பின் எந்த விடுமுறைக்கு ஊர் வந்து திரும்பும் எந்தத் தடவையிலும் அவன் புறப்படுகிற தினத்தன்று அவர் வீட்டில் இருந்து வழியனுப்ப நேர்ந்ததே இல்லை. "ஐயா கிட்டச் சொல்லிடு ஆத்தா" என்று அவருக்குமாகச் சேர்த்துத் தாயிடம் சொல்லிக் கொண்டு புறப்படுவது தான் எப்போதும் அவன் வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. அன்று பிற்பகல் விருதுநகருக்குப் பஸ்ஸில் போகும் போது அதே பஸ்ஸில் அழகுமுத்துவும் வருவதைப் பாதி தூரம் சென்ற பின்பே பாண்டியன் பார்த்தான். அழகுமுத்து முகத்தை 'உம்'மென்று வைத்துக் கொண்டு பேசாமல் இருந்தான். அபிப்பிராய பேதத்தைக் கோபமாக மாற்றி விரோதமாக ஆக்கிக் கொள்கிற அளவு அவன் இன்னும் சிறுபிள்ளைத் தனமாகவே இருந்தது பாண்டியனுக்குப் புரிந்தது. மாலையில் விருதுநகர் போய்த் திருவனந்தபுரத்திலிருந்து சென்னை செல்லும் மெயிலில் மதுரை போய்ச் சேர்ந்தான் அவன். முதலில் மணவாளன் வீட்டுக்குச் சென்று பார்த்த போது அவர் வீட்டில் இல்லை. இரவு ஒன்பது மணிக்குத்தான் அவரைப் பார்க்க முடியும் என்று தெரிந்தது. அதற்குள் சித்திரக்காரத் தெருவுக்குப் போய்க் கண்ணுக்கினியாளைச் சந்தித்துவிட்டுத் திரும்ப எண்ணி டவுன் ஹால் ரோடு வழியே போய்க் கொண்டிருக்கும் போது ஒரு படக்கடை வாயிலிலே எதிர்பாராத விதமாகத் தமிழ்த் துறைத்தலைவர் டாக்டர் பொழில் வளவனாரையும், வார்டன் பண்புச் செழியனையும் பாண்டியன் சந்திக்க நேர்ந்தது. அப்போதுதான் ஃபிரேம் செய்யப்பட்ட அமைச்சர் கரியமாணிக்கத்தின் மிகப் பெரிய படம் ஒன்றை இருவரும் சுமக்க முடியாமல் தூக்கிச் சுமந்து ஒரு டாக்ஸியில் வைத்துக் கொண்டிருந்தார்கள். மிக அருகே பார்த்துவிட்டதனால், "ஐயா, வணக்கம். எப்ப வந்தீங்க?" என்று தமிழ்த்துறைத் தலைவரை வணங்கினான் பாண்டியன். திடீரென்று பாண்டியனை அங்கே சந்திக்க நேர்ந்ததை எதிர்பார்க்காத அவர்கள் முகத்தில் அசடு வழியச் சிரித்தார்கள். "அமைச்சரின் உருவப் படத்தைப் பட்டமளிப்பு விழா முடிந்த மறுநாளே தமிழ் டிபார்ட்மெண்ட் அறையிலே திறந்து வைக்கப் போகிறோம். இந்தப் படத்துக்காகத் தான் வந்தோம்" என்று அவன் கேட்காமலே வந்த காரியத்தையும் சொன்னார் பொழில் வளவனார். அதற்கு எந்த மறுமொழியும் கூறாமல் தனக்குத் தானே சிரித்துக் கொண்டான் பாண்டியன். பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறையைச் சேர்ந்த கூடத்தில் திரு.வி.க., மறைமலையடிகள், தமிழ்த் தாத்தா உ.வே.சா., பரிதிமாற் கலைஞர் போன்றவர்களின் படங்களும், பாரதியார், பாரதிதாசன் போன்றவர்களின் படங்களுமே இதுவரை இருந்தன. இப்போது புது வழக்கமாக ஓர் அமைச்சரின் படத்தைத் திறப்பதற்காக இவர்கள் ஏன் இப்படி அலைகிறார்கள் என்று சிந்திக்கத் தொடங்கினான் அவன். பொழில் வளவனாரின் காக்கை பிடிக்கும் குணமும், வாழ்ந்தாருக்கு மாரடிக்கும் தன்மையும் பல்கலைக் கழக எல்லையில் எல்லாருக்கும் தெரியும் என்றாலும் இப்போது அவர் செய்யத் துணிந்திருந்த காரியம் வெறுப்பூட்டக் கூடியதாக இருந்தது. இதைச் செய்வதற்காக மல்லிகைப் பந்தலிலிருந்து அவர்கள் புறப்பட்டு வந்திருப்பது சற்றே மிகையாகப் பட்டது. பொழில் வளவனார் அவனிடம் பேசினார். "என்ன தம்பி சிந்தனை? நீயும் உன்னைச் சேர்ந்தவர்களும் தலைமை ஏற்றபின் பல்கலைக் கழக மாணவர்களிடையே தமிழுணர்வு குன்றிவிட்டதே என்பதுதான் என் வருத்தம். சொல்லப் போனால் இது போல படம் சட்டம் போட்டு எடுத்துவர முன்பெல்லாம் நாங்கள் வரமாட்டோம். எங்கள் கட்டளையை ஏற்று உங்களைப் போல் மாணவர்கள் வருவார்கள். என்ன செய்வது? இப்போது காலம் மாறிவிட்டது. இதற்கெல்லாம் நாங்களே வருவது தவிர வேறு வழி இல்லையே?" "நீங்களாக அப்படியெல்லாம் சொல்லக் கூடாது ஐயா! தமிழ் உணர்வு மட்டும் போதும் என்பது உங்கள் கட்சி. தமிழுணர்வோடு நியாய உணர்வும் வேண்டும் என்பது மாணவர்களாகிய எங்கள் கட்சி. அது தவறா ஐயா?" "தவறொன்றும் இல்லை! ஆனால் விரிவுரையாளர் மதனகோபாலை வெளியேற்ற நீங்கள் மேற்கொண்ட போராட்டம் எங்களுக்கு உடன்பாடில்லை. பிழை புரிவது மனித இயல்பு. அதைப் பெரிதுபடுத்தி ஒருவர் வாழ்வைக் கெடுத்து விடக் கூடாது! வேலையிலிருந்து துரத்தும்படி அவர் என்ன பெரிய தவறு செய்து விட்டார்?" "அதுதான் நீங்களே சொல்கிறீர்களே ஐயா! 'ஒருவர் வாழ்வைக் கெடுத்துவிடக் கூடாது' என்று. பிழை புரிவது மனித இயல்பானால் அதைக் கண்டிப்பதும் மனித இயல்புதானே?" "என்னவோ தம்பி, எனக்கு உங்கள் போக்கெல்லாம் பிடிக்கவில்லை. முன்பெல்லாம் பல்கலைக் கழகத்தில் துணை வேந்தருக்குக் கட்டுப்படாத மாணவர்கள் கூடத் தமிழ்த்துறைத் தலைவருக்குக் கட்டுப்படுவார்கள். இப்போது அந்தக் காலம் மாறிவிட்டது..." "நாங்களாக மாறவில்லை. நீங்கள் தான் எங்களை அப்படி மாற்றியிருக்கிறீர்கள் ஐயா!" - அவன் இவ்வாறு சுடச்சுட மறுமொழி கூறியதும் அவர் மேலே பேசுவதை நிறுத்திக் கொண்டுவிட்டார். பெரிய வணக்கமாகப் போட்டுவிட்டு அவர்களைக் கடந்து மேலே நடந்தான் பாண்டியன். அவன் போய்ச் சேர்ந்த போது வீட்டு வாயிலில் பூக்காரியிடம் பூ வாங்கிக் கொண்டிருந்தாள் கண்ணுக்கினியாள். பிச்சிப்பூ வாசனை கம்மென்று வந்து நாசியை நிறைத்தது. அவனைப் பார்த்ததும் அவள் வியப்போடு கேட்டாள்: "அடடே... ஏது இப்படித் திடீர்னு...? ஒரு நாள் முன்னாடியே வந்திருக்கீங்க?... நாளன்னிக்குக் காலையிலே தானே யுனிவர்ஸிடி திறக்கறாங்க?" "ஒருநாள் முன்னாலேயே வரச் சொல்லிக் கதிரேசன் எழுதியிருக்கிறான். நான் நாளைக்குக் காலையிலேயே போகிறேன்..." "வாங்க... உட்காருங்க... அம்மா, நாயினா ரெண்டு பேருமே இல்லே. வெளியிலே போயிருக்காங்க... ஆடி வீதியிலே வாரியாரு கதை கேட்கப் போறோம்னு போனாங்க..." "வாரியாருக்கு ரொம்ப நன்றிக் கடன் பட்டிருக்கேன்." "அப்படியானா உங்களை உள்ளார விடக் கூடாது." "பின்னே எப்படியானா உள்ளே விடச் சம்மதிப்பேன்னு தெரிஞ்சா நல்லது." "வர்ரீங்களா, நாமும் வாரியார் கதைக்குப் போகலாம்?" "நான் வரலை. எட்டரை மணிக்கு நான் மணவாளன் வீட்டுக்குப் புறப்பட்டாகணும். ஒன்பது மணிக்கு அவரை வீட்டில் வந்து பார்க்கறதாச் சொல்லியிருக்கேன். காத்திருப்பாரு." "சும்மா விளையாட்டுக்குக் கேட்டேன். நான் ஒண்ணும் கதைக்குப் போகப் போறதில்லே..." அவளையே இமையாமல் பார்த்தான் பாண்டியன். வாயிற்புறம் திரும்பிப் பார்த்து யாரும் வரவில்லை என்று உறுதியாகத் தெரிந்த பின் அவள் கையிலிருந்த பூவைப் பறித்துத் தானே அவள் கூந்தலில் சூட்ட முயன்றான் அவன். பூவை அவன் கைகளில் பறிகொடுத்து விட்டாலும் தான் அவன் பிடியில் சிக்காமல் சிரித்துக் கொண்டே உட்புறம் ஓடினாள் அவள். அவனும் விடவில்லை. அவன் துரத்த, அவள் ஓட, அந்த வீட்டின் உட்கூடத்தில் ஒரு சரஸமான ஓட்டப் பந்தயமே நடந்தது. முடிவில் கதவோரமாக அவளைப் பிடித்து நிறுத்திக் கதம்பமான இங்கித நறுமணங்கள் நிறைந்த அவள் கூந்தலை நாசியில் நுகர்ந்தபடி அந்தப் பூவைச் சூட்டினான் பாண்டியன். "திருப்திதானே! அகநானூற்றுக் காலத்துக் காதலன் போல் பூச்சூட்டியாச்சு இல்லையா?..." "இந்தக் காலத்துக் காதலன் மாதிரீன்னா எப்படி நடந்துக்கணும்? எனக்குத் தெரியாது... அதை நீதான் கொஞ்சம் சொல்லேன்." "தமிழ் வாரப் பத்திரிகைகளிலே தொடர் கதை படியுங்க, புரியும். இல்லாட்டி ரெண்டு தமிழ் சினிமாவாது பார்த்திட்டு வாங்க..." அவள் சிரித்தாள். குரலில் கேலி நிறைந்திருந்தது. "அப்பிடியா சேதி? புரியுது" என்று அவளைத் தாவிப் பிடிக்க முயன்றான் அவன். "இதிலேருந்து தமிழ்த் தொடர்கதைகளிலேயும் சினிமாவிலேயும் தாவறதும், பாயறதும் தான் இருக்குன்னு நிரூபிக்கிறீங்களாக்கும்." "மன்னிக்கணும்! நான் 'நியூவேவ்' கதைகள் படிக்கிறதில்லை..." "அப்படின்னா உட்காருங்க! ஒரு கதையும் படிக்க வேணாம்! அந்த நவநீத கவியின் கவிதைத் தொகுதி படிச்சீங்களா, இல்லையா?" அவன் அந்தத் தொகுதியைப் படித்ததையும், அதிலிருந்த 'இளம் நம்பிக்கைகள்' என்ற கவிதையைப் புகழ்ந்து வியந்ததனால் கிராமத்தில் ஒரு மாணவனுக்கும் தனக்கும் வந்த விரோதத்தையும் அவளிடம் விவரித்தான். "அந்தக் கவிதையில் உள்ள 'தொனி நயமும்' காலத் தன்மையும் இணையற்றவை. அவரைத் தவிர வேறு யாருக்கும் அப்படி எழுத வராது" என்றாள் அவள். "'நட்சத்திரங்களும் முழு நிலாவும்' தான் அந்தத் தொகுதியிலேயே உனக்குப் பிடிச்சக் கவிதையின்னு நீ எனக்கு எழுதின கடிதத்திலே சொல்லியிருந்தே, இல்லியா?" "அதுக்குக் காரணம் உங்களுக்கும் அது பிடிக்கணும்கிறதுதான்! 'நட்சத்திரமும் முழு நிலாவும்' எனக்குப் பிடிச்சா உங்களுக்குப் பிடிக்காமப் போயிடுமா என்ன?" "இப்பக்கூட வானத்திலே நட்சத்திரங்களும் சின்னப் பிறை நிலாவும் இருக்கு... வா மாடிக்குப் போகலாம்." "நீங்க ரொம்பத் தைரியக்காரர்தான்..." "யுனிவர்ஸிடி எலெக்ஷன் அப்ப ஒத்துக்காததை இப்பவாவது ஒத்துக்கிறியே? அப்பிடி வா வழிக்கு." வாயிற்புறம் யாரோ நடந்து வருகிற செருப்புச் சத்தம் கேட்டது. கண்ணுக்கினியாள்தான் முதலில் எழுந்து போய்ப் பார்த்தாள். "வாங்க... வாங்க" என்று வருகிற யாரையோ வரவேற்றுவிட்டு உட்புறமாகத் திரும்பி, "மணவாளன் அண்ணன் வராரு..." என்றாள் அவள். பாண்டியன் எழுந்து வந்து மணவாளனை எதிர் கொண்டான்; முகம் மலரக் கை கூப்பி வரவேற்றான். சத்திய வெள்ளம் : முன்னுரை, கதை முகம் 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
நிறைவுரை
|