இருபத்து மூன்றாவது அத்தியாயம் "நீ தேடி வந்தேன்னு எங்க வீட்டிலே சொன்னாங்க. நான் எதிர்பார்த்ததை விடச் சீக்கிரமாகவே திரும்பிட்டேன். நீ மறுபடியும் ஒன்பது மணிக்கு வருவேன்னும் வீட்டிலே தெரிஞ்சுக்கிட்டேன். உடனே நீ இங்கேதான் வந்திருக்கணும்னு புறப்பட்டு வந்தேன்" என்றார் மணவாளன். பாண்டியனுக்கு அவருடைய எதிர்பாராத வரவு கனவிலிருந்து அடித்து எழுப்பியது போல் இருந்தது. "என்ன உங்க ஊர்ப் பக்கம் எல்லாம் ஸ்டூடண்ட்ஸ் எப்படி இருக்காங்க?" என்று பாண்டியனைக் கேட்டார் மணவாளன். "எல்லா ஊர்லியும் 'மல்லிகைப் பந்தல் ஸ்பிரிட்' தான் இருக்கு. சுயநலமும் எதேச்சாதிகாரமும், பதவி வெறியும் எங்கும் எதிர்ப்பு உணர்ச்சியைத்தான் உண்டாக்கியிருக்கின்றன. மனமும் சிந்தனையும் வளராத சிலர் மட்டுமே இன்னும் துதி பாடிகளாக இருக்கிறார்கள். மேரி தங்கத்தின் தற்கொலை விஷயம் வெளியே பரவிப் பத்திரிகைகளில் சிரிப்பாய்ச் சிரித்த பிறகு எல்லா இடங்களிலும் எதிர்ப்பு உணர்ச்சிதான் வலுவாயிருக்கிறது" என்றான் பாண்டியன். "உனக்குத் தெரியுமோ பாண்டியன்? நேற்றுத்தான் நிலக்கோட்டையிலிருந்து வந்த ஒருத்தர் சொன்னார். மேரிதங்கத்தின் பெற்றோர்கள் வாழைத்தோட்டத்துச் சிறையிலிருந்து வெளிவந்து இப்போதுதான் சில நாட்களாக ஊரில் சகஜமாக நடமாடுகிறார்களாம். மிஸ்டர் சற்குணம் இன்னும் கூட மற்றவர்களிடம் எதைப் பற்றியும் பேசப் பயந்து நடுங்குகிறாராம்." "அவரைப் போல் பயந்து நடுங்குகிறவர்கள் இருக்கிற வரையில் இந்த நாட்டில் சுயநலமிகள் பாடு கொண்டாட்டம் தான்." இதற்குள் கண்ணுக்கினியாள் உள்ளே போய் அவர்கள் இருவருக்கும் காப்பி கலந்து கொண்டு வந்திருந்தாள். "எங்கேம்மா நாயினா இல்லியா?" என்று அவளிடமிருந்து காப்பியை வாங்கிக் கொண்டே விசாரித்தார் மணவாளன். நாயினாவும் அம்மாவும் ஆடி வீதிக்குக் கதை கேட்கப் போயிருப்பதாகச் சொன்னாள் அவள். "நீ தனியாகத்தான் இருக்கியா? அதான்..." என்று ஏதோ சொல்லத் தொடங்கிய மணவாளன், பாண்டியனைப் பார்த்து மெல்லச் சிரித்துக் கொண்டே மேலே பேசாமல் அப்படியே நிறுத்திவிட்டார். "பட்டமளிப்பு விழாவப்ப ஒரு பெரிய போராட்டம் நடத்தப் போகிறோம். யுனிவர்ஸிடியிலே படிக்கிற எல்லாப் பிரிவு மாணவர்களோட ஆதரவும் வேணும். உன்னாலே நிறையக் காரியம் ஆகவேண்டியிருக்கும்மா. நீ மனசு வைத்தால் முடியும்" என்றார் மணவாளன். "அண்ணனைப் போல் மாணவர் தலைவர்கள் இப்படி வேண்டக் கூடாது! உரிமையோடு எங்களுக்குக் கட்டளை இட வேண்டும்" என்றாள் அவள். மிகவும் தன்னடக்கமாக அவள் இப்படிப் பதில் பேசியது மணவாளனுக்கும் பாண்டியனுக்கும் பிடித்திருந்தது. "இந்தப் பட்டமளிப்பு விழா போராட்டம் முடிந்ததும் அதில் இந்தியத் தேசிய மாணவர் சம்மேளனத்தின் சார்பில் பல்கலைக்கழக மாணவர்களின் மகாநாடு ஒன்றையும் மல்லிகைப் பந்தலில் நடத்தப் போகிறோம்." "பிரமாதமா நடத்தலாம். மாணவிகளின் ஒத்துழைப்பு முழு அளவில் இருக்கும்." "நிதி வசூலுக்கு இரண்டு நாடகங்களாவது போட வேண்டியிருக்கும். செலவு நிறைய ஆகும்." சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பின் பாண்டியனையும் உடனழைத்துக் கொண்டு மணவாளன் புறப்பட்டார். இருவரையும் இரவு ஒன்பது ஒன்பதரை மணிக்குள் அங்கே சாப்பிட வருமாறு அழைத்தாள் அவள். "நாங்கள் நாலைந்து கல்லூரி விடுதிகளுக்குப் போய் மாணவர்களைச் சந்தித்துப் பேச வேண்டியிருக்கிறது அம்மா! போகிற இடங்களில் எங்கே எத்தனை மணிக்கு நாங்கள் சாப்பிட நேரிடும் என்பதைச் சொல்ல முடியாது. நீ வேறு எங்களுக்காக இங்கே சாப்பாட்டை வைத்துக் கொண்டு காத்திருக்க வேண்டாம்" என்று மணவாளன் மறுத்துவிட்டார். "காலையில் முதல் பஸ்ஸில் புறப்பட்டு நான் மல்லிகைப் பந்தலுக்குப் போய் விடுவேன். நீ நாளன்றைக்குப் புறப்பட்டு வருகிறாயாக்கும்?" என்று அவளிடம் விசாரிப்பது போல் தனக்கு ஏற்கனவே தெரிந்ததையே மறுபடியும் கேட்டுவிட்டு அவளிடம் விடைபெற்றான் பாண்டியன். "நாயினா வந்தா விசாரிப்பாங்க. மறுபடியும் வந்து அவரைப் பார்த்துச் சொல்லிவிட்டுப் போங்களேன்" என்றாள் அவள். பாண்டியன் சிரித்தான். தன்னை அவள் மறுபடியும் அங்கே வரவழைக்க முயல்வது அவனுக்குப் புரிந்தது. முதலில் நகரை விட்டுச் சற்றே ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு கல்லூரி விடுதிக்குச் சென்றார்கள் அவர்கள். விடுதியின் மாணவர்களைச் சந்தித்துப் பேசிய போது அந்த மாணவர்கள் மணவாளனிடமும் பாண்டியனிடமும் ஒரு குறையை முறையிட்டார்கள். அந்தக் கல்லூரியில் குறுகிய நோக்கமுள்ள ஒரு பேராசிரியர் வகுப்புக்கு வராமல் பாடத்தை விட்டுவிட்டுத் 'தமிழ்நாடு தனியே பிரிய வேண்டும்' என்று பிரச்சாரம் செய்வதாகவும், அவரே கல்லூரித் தமிழ் மன்ற விழாக்களிலோ, பேரவைக் கூட்டங்களிலோ முடிவில் தேசிய கீதம் பாடப்படுவதைத் தடுக்கிறார் என்பதாகவும், ஒருமுறை மாணவர் விழாவில் அந்தப் பேராசிரியரே ஆத்திரமாக எழுந்து ஓடி வந்து, ஒலி பெருக்கிக்காரன் கையிலிருந்த தேசிய கீத 'ரிக்கார்டை' வலியப் பிடுங்கி உடைத்து விட்டதாகவும் மாணவர்கள் வருத்தப்பட்டார்கள். இந்தச் சம்பவத்தைப் பற்றிக் கேள்விப்பட்டதுமே மணவாளனுக்குத் தாங்க முடியாத கோபம் வந்துவிட்டது. "தெய்வ பக்தி இல்லாதவர்களையாவது நாத்திகர்கள் என்று ஒதுக்கி விட முடியும். தேசபக்தி இல்லாதவர்களை மனிதர்களாகவே கருதக் கூடாது. அவர்களை மனித இனத்திலிருந்தே ஒதுக்கி வைக்க வேண்டும். தெய்வ பக்தியற்றவர்களை நாம் மன்னிக்க முடியும். ஆனால் தேச பக்தியற்றவர்களை ஒரு போதும் மன்னிக்க முடியாது; மன்னிக்கவும் கூடாது. இனிமேல் என்றைக்காவது வகுப்புக்குள்ளோ கல்லூரி எல்லையிலோ அந்தப் பேராசிரியர் தேசிய கீதத்தை எதிர்த்தோ, தேச ஒற்றுமையை எதிர்த்தோ பிரசாரம் செய்தால் அவரை வளைத்து மடக்கி 'கெரோ' செய்யுங்கள். மன்னிப்புக் கேட்கிறவரை விடாதீர்கள். அப்புறம் தான் அவருக்குப் புத்தி வரும்." கல்லூரி 'க்விஸ் புரோகிரா'மில் ஒரு விரிவுரையாளர், 'இன்ன அமைச்சரின் மனைவி பெயர் என்ன?' என்பது போல் ஒரு கேள்வி கேட்டதாகவும், 'அந்த அமைச்சரின் எத்தனையாவது மனைவியைப் பற்றிக் கேட்கிறீர்கள்?' என்று பதில் கூறிய மாணவன் திகைத்துப் போய் எதிர்க் கேள்வி போட்டதாகவும் ஒரு சம்பவத்தை மற்றொரு மாணவன் விவரித்தான். சிறிது நேரத்துக்குப் பின் தாங்கள் கொண்டு வந்திருந்த துண்டுப் பிரசுரங்களையும், நிதி வசூலுக்கான இரசீதுப் புத்தகங்களையும் அந்த விடுதி மாணவர்களில் சிலரிடம் ஒப்படைத்து விட்டுப் புறப்பட்டார்கள், மணவாளனும் பாண்டியனும். இரவு பத்து மணிக்குள் இப்படியே இன்னும் இரண்டு மூன்று கல்லூரிகளைப் பார்த்து முடித்த பின் அவர்கள் வீடு திரும்பினார்கள். நடுவில் ஒரு கல்லூரி விடுதியில் அவர்களுடைய இரவு உணவு முடிந்திருந்தது. சில இடங்களில் போலீஸ் சி.ஐ.டி. ஆட்கள் தங்களைப் பின் தொடர்வதை அவர்களே உணர முடிந்தது. அங்கங்கே பார்க்க வேண்டியவர்களைப் பார்த்துவிட்டு மணவாளனின் வீட்டுக்குத் திரும்பியதும் பட்டமளிப்பு விழாவுக்கு ஒருவாரம் முன்னதாகவே அவர் மல்லிகைப் பந்தலுக்கு வந்து சேர்ந்து விட வேண்டும் என்று அவரிடம் வற்புறுத்தினான் பாண்டியன். "ஒரு இண்டர்வ்யூவுக்குப் பம்பாய் போய் வரணும். போகலாமா விட்டு விடலாமா என்று யோசிச்சுக்கிட்டிருக்கேன். 'எங்கேயும் போய் நிற்க வேண்டாம். நீயே ஒரு 'கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி'ன்னு போர்டு மாட்டிக்கிட்டு இங்கேயே உட்காரு'ங்கிறாங்க வீட்டிலே. பம்பாய் போகலேன்னா ஒரு வாரத்துக்கு முனனடியே அங்க வந்திடலாம். எதுக்கும் நான் உனக்குக் கடிதம் எழுதறேன் பாண்டியன்!" என்றார் மணவாளன். பொழில் வளவனாரையும் பண்புச் செழியனையும் படக்கடை வாசலில் பார்த்ததைப் பற்றி மணவாளனிடம் சொன்னான் பாண்டியன். "அவங்க ரெண்டு பேருமாச் சேர்ந்து மல்லிகைப் பந்தலிலேயே ஒரு பெரிய படக் கடையாக வச்சு நடத்தலாம். ஏன்னா வருசம் முந்நூத்தி அறுபது நாளும் அவங்க எந்த மந்திரி படத்துக்காவது 'பிரேம்' போட்டுத் திறப்பு விழா நடத்திக்கிட்டுத்தான் இருக்காங்க. சொந்தப் படக்கடைதான் அதுக்குத் தோதாக இருக்கும்!" "அண்ணனை ஒரு சந்தேகம் கேட்கணும்! அது என்ன பொழில் வளவனாருன்னு கூட ஒரு பேர் இருக்க முடியுமா? அவரு சொந்தப் பேரு என்னண்ணே?" "சோலைராஜான்னு பேரு. அதைப் பொழில் வளவன்னு தமிழாக்கி வச்சுக்கிட்டிருக்காரு. பண்புச் செழியனோட பேரு இராஜகோபால்ங்கிறது. அவரும் 'கெஸட் நோட்டிஃபிகேஷ'னோட பேரை மாத்திக்கிட்டாரு..." "ஏன் இப்படியெல்லாம் மாத்திக்கிறாங்க, அண்ணே? இதுலே என்ன ஒரு 'மேனியா'வோ தெரியலியே...?" "இந்த மாதிரி 'மேனியா'வுக்கு எல்லாம் இங்கே ஒரு பெரிய சரித்திரமே இருக்குப் பாண்டியன்! பிரிட்டிஷ்காரனுக்கும் ஜஸ்டிஸ் கட்சிக்கும் பிறந்த திருட்டுக் குழந்தைகள் நம்மிடையே பல இயக்கங்களாக உருவாயின. அதில் ஒன்று தான் காரணமில்லாத பிறமொழி வெறுப்பு. தாய்மொழி மேல் பற்றோ ஞானமோ சிறிதும் இல்லாதவர்கள் கூட இந்தப் பிறமொழி வெறுப்பை வளர்த்துக் கொண்டாட முற்பட்ட காலம் ஒன்று இருந்தது. அதே காலத்தில் சமூகத்தில் உயர் வகுப்பார் என்று கருதப்பட்ட சிலர் தாய்மொழியை ஓரளவு கூட லட்சியம் செய்யாதிருக்கவே இந்தக் குறுகிய உணர்வு வளரவும் விளம்பரம் பெறவும் முடிந்தது. அந்தக் காலத்தின் பிரதிநிதிகள் தான் பொழில் வளவனாரும், பண்புச் செழியனும். இவர்களுக்கும் உண்மையான மொழிப்பற்று இல்லை. தமிழ் மட்டுமே தெரிந்தவர்களிடம் ஆங்கிலத்தில் பேசி மிரட்டுவதும், ஆங்கிலம் மட்டுமே தெரிந்தவர்களிடம் கடுந்தமிழ் பேசி மிரட்டுவதுமாக இவர்களிடம் ஒரு தந்திரம் நிரந்தரமாக உண்டு. அதனால் தமிழறியாதவர்களும் இவர்களைக் கண்டு பயந்து ஒதுங்குவார்கள். ஆங்கிலம் அறியாதவர்களும் மிரண்டு ஒதுங்கி விடுவார்கள்." தொடர்ந்து மணவாளன் பாண்டியனுக்கு வரலாற்று ரீதியாகத் தமிழ்நாட்டு அரசியல் இயக்கங்களைப் பற்றிய சில உண்மைகளை விளக்கினார். அந்த இயக்கங்களின் கடைசி வெற்றி 1967-இல் அவர்களால் அறுவடை செய்யப்பட்டதை காரண காரியங்களோடு விவரித்தார் அவர். இன்னோர் உண்மையையும் அவர் கூறத் தயங்கவில்லை. "நாடளாவிய பெருங் குறைகளையும், தேச விடுதலையையும், பற்றியே கவலைப்பட்ட மாபெரும் தேசபக்தர்கள் மொழி இலக்கியத் துறைகளைப் பற்றிய பிரதேச உணர்வுகளை மறந்ததால் அந்த மறதிக்கு ஒரு சிறிது இடைக்காலத் தோல்வியையே தண்டனையாகப் பெற நேர்ந்துவிட்டது! அந்தக் கொடுமையைத் தான் இப்போது நீயும் நானும் அனுபவிக்கிறோம். கிணற்றுத் தவளை மனப்பான்மை குறையக் குறையத்தான் இதிலிருந்து இனிமேல் நாம் விடுபட முடியும்." "கிணற்றுத் தவளை மனப்பான்மைகளே சில தத்துவங்களாகி, அந்தந்த தத்துவங்களே இங்கே சில கட்சிகளாகவும் வளர்ந்து விட்ட பின் இனி அது எப்படி உடனே சத்தியமாகும் அண்ணே?" "சாத்தியமாகிறாற் போல் நாம் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது பாண்டியன்! அதற்குத்தான் நாம் இடைவிடாமல் போராடி வருகிறோம். இனி அடுத்த தலைமுறை தெளிவாக இருக்கும். நிஜம் வெள்ளமாகப் பெருக்கு எடுக்கும் போது எல்லாப் பொய்களையும் அது இருந்த இடம் தெரியாமல் அடித்துக் கொண்டு போய் அழித்துவிடும். பல ஆண்டுகளுக்கு முன் இங்கே பெருகிய முதற் சத்தியப் பெருக்கைக் காந்தியடிகள் ஊற்றுக் கண்ணாயிருந்து பெருகச் செய்தார். அதில் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய குறுகிய மாநில உணர்வுகள் கரைந்து, ஹரிஜன், மேலோன் என்ற பேதங்கள் தவிர்த்து, ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத் தாழ்வுகள் தகர்ந்து, ஏக இந்தியாவும் விடுதலை பெற வேண்டும் என்ற வேகம் மட்டுமே நீரோட்டத்தின் இயக்கமாயிருந்தது. அது போல் மீண்டும் ஒரே திசையில் முனைந்து ஓடும் உண்மைப் பெருக்கு ஒன்றில் தான் இப்போதுள்ள பொய்களைக் கரைக்க முடியும்." மணவாளனின் தெளிவான கருத்து பாண்டியனை மெய் சிலிர்க்க வைத்தது, மறுநாள் அதிகாலையில் மல்லிகைப் பந்தலுக்குப் புறப்பட்ட போது மணவாளனே வந்து அவனை வழியனுப்பினார். பதினொன்றரை மணிக்கு அவன் மல்லிகைப் பந்தலை அடைந்த போது பகலே இருட்டி மூட்டம் போட்டாற் போல் கவிழ்ந்திருந்தது. அவன் அந்தப் பஸ்ஸில் தான் வர முடியும் என்று எதிர்பார்த்துக் கதிரேசனும் பத்திருபது மாணவ நண்பர்களும் அவனை வரவேற்கப் பஸ் நிலையத்துக்கு வந்திருந்தனர். மல்லிகைப் பந்தல் மண்ணில் இறங்கியதும் இறங்காததுமாக ஒரு போராட்டப் பிரச்னையோடு பாண்டியனை எதிர் கொண்டார்கள் அவர்கள். தங்களோடு பாலேஸ்வரி என்ற யாழ்பாணத்து மாணவியையும் அவர்கள் பஸ் நிலையத்துக்கு அழைத்து வந்திருந்தார்கள். பல்கலைக் கழகத்தில் படிக்கும் வெளிநாட்டு மாணவிகளில் அவள் குறிப்பிடத் தக்கவள் என்ற முறையில் அவளை இரண்டொருமுறை கண்ணுக்கினியாளுடன் பார்த்திருக்கிறான் பாண்டியன். அவள் சம்பந்தமாக ஏதோ பிரச்னை அன்று அங்கே காத்திருக்கிறது என்பது மட்டும் பாண்டியனுக்கு அப்போது உடனே புரிந்தது. கதிரேசன் பஸ் நிலையத்திலேயே அந்தப் பிரச்னையைச் சொல்லத் தொடங்கியதும், "இங்கே பேச வேண்டாம். அண்ணாச்சி கடையிலே போய்ப் பேசுவோம்" என்று பாண்டியன் அவர்களையும் உடனழைத்துக் கொண்டு அண்ணாச்சி கடைக்குப் போனான். அவன் போனபோது கடையில் அண்ணாச்சி இல்லை. எங்கோ வெளியே போயிருந்தார். கடையின் பின் அறையில் போய் அமர்ந்தார்கள் அவர்கள். கதிரேசனும், பிறரும் இடையிடையே அந்த யாழ்ப்பாணத்துப் பெண்ணும் சொல்லியதிலிருந்து பாண்டியனுக்கு என்ன நடந்திருக்க வேண்டும் என்று புரிந்தது. "இரண்டு மூன்று நாட்களுக்கு முன் ஒரு மாலை வேளையில் மல்லிகைப் பந்தல் ஏரியின் கரையில் பூங்காவில் இருந்த பெஞ்சு ஒன்றில் அந்தப் பெண் பாலேஸ்வரி அமர்ந்திருந்த போது மல்லை இராவணசாமியின் மூத்த மகனும் கோட்டச் செயலாளர் குருசாமியின் மூத்த மகனும் அந்தப் பக்கமாக வந்து அவளை வம்புக்கு இழுத்துக் கேலி செய்திருக்கிறார்கள். இருவருமே பல்கலைக் கழகத்தில் படிப்பவர்கள்தான் என்றாலும் திமிர் பிடித்தவர்கள். அவர்கள் பாலேஸ்வரியிடம் முறைகேடாக நடந்து கொள்ள முயலவே, அவள் கால் செருப்பைக் கழற்றி அடிக்க ஓங்கி கூப்பாடு போட்டுக் கூட்டம் சேர்த்துவிட்டாள். மல்லை இராவணசாமியின் மகனும், குருசாமியின் மகனும் கூட்டத்தைக் கண்டதும் பயந்து ஓடிவிட்டார்கள். ஆனால் வீட்டில் போய் இருவரும் தங்கள் தங்கள் தந்தையிடம், பார்க்கில் தனியாக அமர்ந்திருந்த அவள் தங்களைத் தவறான வழியில் அழைத்ததாக மாற்றிச் சொல்லி அதன் விளைவாக மல்லை இராவணசாமியும், கோட்டம் குருசாமியும் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடி இன்ஸ்பெக்டரிடம் வத்தி வைத்துவிட்டார்கள். போலீஸ் இன்ஸ்பெக்டரும் உடனே இந்தப் பெண்ணைக் கூப்பிட்டு அவராகப் பொய்க்குற்றம் சாட்டி எழுதிய எஃப்.ஐ.ஆரில் இவளைக் கையெழுத்துப் போடும்படி வற்புறுத்தியிருக்கிறார். இவள் பிடிவாதமாக மறுத்திருக்கிறாள். இவளைப் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துப் போனதைப் பார்த்த கெமிஸ்ட்ரி புரொபஸர் ஸ்ரீராமன் பின் தொடர்ந்து ஸ்டேஷனுக்குப் போய் என்னவென்று விசாரித்திருக்கிறார். 'விபச்சாரக் குற்ற வழக்கு' என்றவுடன் ஸ்ரீராமன் கடுங்கோபங் கொண்டு, 'நோ... நோ... யாரோ உங்களுக்குத் தப்பாகச் சொல்லியிருக்கிறார்கள். இவள் என் மாணவி. இவளை நான் நன்றாக அறிவேன். இது அபாண்டம் அடுக்காது' என்று கூறியிருக்கிறார். ஸ்ரீராமன் நரைத்த தலையும், முடிந்த குடுமியும், பழுப்பேறிய வேஷ்டியுமாக ஒரு பழைய காலத்துத் தோற்றம் உடையவராக இருக்கவே, போலீஸ் இன்ஸ்பெக்டர், 'பஞ்சாங்கக்காரப் பயலே! வெளியிலே போடா! நீ யாரடா இதை வந்து இங்கே சொல்றதுக்கு' என்று திடீரென்று அவர் மேல் பாய்ந்து அவரது கழுத்தின் பின்புறம் பிடரியில் கைகொடுத்து அழுத்தி நெட்டித் தள்ளியிருக்கிறார். இன்ஸ்பெக்டர் தள்ளியதும் தள்ளாடித் தலைகுப்புற விழுந்த ஸ்ரீராமன் முன் நெற்றியில் காயத்தோடு அவமானப்பட்டு வீட்டுக்குத் திரும்பி, அப்புறம் அது ஊர் முழுவதும் பரவி நானும் முந்நூறு நானூறு மாணவர்களும் ஸ்டேஷனுக்கு ஊர்வலமாகப் போன பிறகுதான் இந்தச் சகோதரியை மீட்க முடிஞ்சுது. ஒரு மாணவியின் மேல் அபாண்டமாக விபச்சாரக் குற்றச்சாட்டு வருகிறது. அதைக் கேட்கப் போன ஒரு புரொபஸரைப் போலீஸ் இன்ஸ்பெக்டர் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகிறார். இது நாடா அல்லது காடான்னு தான் புரியலே. மல்லை இராவணசாமிக்கும், கோட்டச் செயலாளர் குருசாமிக்கும் மட்டும் தானா போலீஸ்? நமக்கெல்லாம் இல்லியா அந்தப் போலீஸ்? இவ்வளவு பெரிய அக்கிரமம் நடந்தும் வி.ஸி. இன்னும் இதைக் கண்டித்து ஒரு வார்த்தை பேசலே. பேருக்குக் கூட வருத்தப்படலே. போலீஸ், வி.சி., ஆர்.டி.ஓ. எல்லாருமாகச் சேர்ந்து பேப்பர்லே இந்தச் செய்தி வரவிடாமல் பண்ணிப்பிட்டாங்க பாண்டியன்! நான் உனக்கு இதைப் பற்றி ஒரு தந்தி கூடக் கொடுக்கலாம்னு நினைச்சேன். ரொம்பக் கொடுமை இது. இதை இப்பிடியே விட்டுவிடக் கூடாது" என்று குமுறினான் கதிரேசன். "புரொபஸர் ஸ்ரீராமன் இப்ப வீட்டிலே இருக்காரா, ஆஸ்பத்திரியிலே இருக்காரா? அவரை முதல்லே போய்ப் பார்ப்போம். அப்புறம் மற்றவற்றை யோசிக்கலாம்" என்றான் பாண்டியன். கெமிஸ்ட்ரி புரொபஸர் வீட்டில் தான் இருக்கிறார் என்று கதிரேசன் கூறியதும் அவர்கள் உடனே அவரைப் பார்க்கப் புறப்பட்டார்கள். பேராசிரியர் ஸ்ரீராமன் பழைய காலத்து மனிதர். ஆனால் நல்ல படிப்பாளி. மாணவர்கள் மேல் கருணையும் அன்பும் உடையவர். அவருக்கு இப்படி ஒரு கொடிய அவமானம் இழைக்கப்பட்டு விட்டது என்பதை இப்போது மறுபடி நினைத்துப் பார்க்கவும் கூட வருத்தமாக இருந்தது பாண்டியனுக்கு. ஸ்ரீராமன் அவர்களைப் பார்த்ததும் அழாத குறையாக எல்லாவற்றையும் விவரித்தார். "நான் பண்ணின பாவம் அப்பா! ஒரு வெளிநாட்டு மாணவி - நம்ம தேசத்தை நம்பிப் படிக்க வந்தவளைப் பத்தி இப்படி ஒரு அபாண்டமான்னு கேட்கப் போனேன். இன்ஸ்பெக்டர் ஆளும் கட்சி எம்.எல்.ஏ. போட்ட தூபத்திலே அவனுக்குக் கட்டுப்பட்டுக் கிடக்கிறார். அந்தச் சமயம் பார்த்து நான் நியாயம் கேட்கப் போய்ச் சேர்ந்தேன். அதுக்குத்தான் இந்தத் தண்டனை. ரெண்டு எம்.எல்.ஏ.யும் பவர்லே இருக்கிற மினிஸ்டிரிக்கு வேண்டியவனும் எது சொன்னாலும் அதைத்தான் கேக்கறதுன்னு வந்துட்டா அப்புறம் போலீஸ் எதுக்கு? நியாயம், சட்டம்லாம் எதுக்கு?" என்று கொதித்துக் கேட்டார் அவர். பாண்டியனுக்கு உள்ளம் குமுறியது. பாலேஸ்வரி மீண்டும் புரொபஸருக்கு முன் கண் கலங்கி அழுதே விட்டாள். உடனடியாக ஒரு கண்டன ஊர்வலத்தை நடத்தி அந்த வெளிநாட்டு மாணவியையும், புரொபஸரையும் ஆதரித்ததற்காகக் கதிரேசனைப் பாராட்டினான் பாண்டியன். உடனே பத்திரிகைகளுக்கு அதைப் பற்றிச் செய்திகள் அனுப்ப ஏற்பாடு செய்தான். பிற்பகலில் அவனும் அந்த மாணவியும் வேறு சில மாணவர்களும் துணைவேந்தரை அவர் வீட்டில் போய்ப் பார்த்தார்கள். துணைவேந்தர் அழுத்தலாக இருந்தார். பாண்டியன் அந்தப் பேச்சை ஆரம்பித்ததுமே, "பாண்டியன், லெட் அஸ் ஃபர்கெட் வாட் ஹாப்பன்ட் இன் தி பாஸ்ட்..." என்று மெல்ல நழுவ முயன்றார் துணைவேந்தர். "புரொபஸர் ஸ்ரீராமனைத் தாக்கியதை நீங்கள் ஏன் இன்னும் கண்டித்து அறிக்கை விடவில்லை?" "அவரை யாரும் தாக்கியதாக எனக்குத் தகவல் இல்லையே?..." "ஓகோ! தாக்கியவர்களோ தக்கப்பட்டவர்களோ உங்களிடம் வந்து சொன்னாலொழிய நீங்கள் அதற்காகக் கவலைப்படவோ, வருந்தவோ மாட்டீர்கள் இல்லையா?" "ஆல்ரைட்! யூ ஸீம்ஸ் டு பீ ஆங்ரீ. எனிதிங் மோர் டு ஸே?..." "நத்திங் சார்! சொல்ல ஒன்றுமில்லை. செய்வதற்குத் தான் நிறைய இருக்கிறது" என்று பதில் சொல்லிவிட்டு விருட்டென்று எழுந்தான் பாண்டியன். "ஆர் யூ நாட் அஷேம்ட்..." என்று கோபமாகத் துணைவேந்தரை நோக்கி ஏதோ ஆரம்பித்த கதிரேசனின் வாயைப் பொத்தி அவனையும் வெளியே இழுத்துக் கொண்டு வந்தான் பாண்டியன். மாலையில் மாணவர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் ஒன்று மோகன்தாஸ் தலைமையில் அண்ணாச்சியுடைய கடையின் பின்புறம் நடந்தது. அதைத் தொடர்ந்து இரவில் அந்த நகரின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் சிலரை மாணவர்கள் சந்தித்தார்கள். கலந்து பேசினார்கள். யாழ்ப்பாணத்து மாணவியிடம் மல்லை இராவணசாமியின் மகனும், கோட்டம் குருசாமியின் மகனும் தவறாக நடந்து கொண்டதையும், புரொபஸர் ஸ்ரீராமன் போலீஸாரால் அவமானப் படுத்தப்பட்டதையும் கண்டித்து ஒரு பெரிய ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. வெளியூர் மாணவர்களோடும், மணவாளனோடும் ஃபோன் மூலம் தொடர்பு கொண்டு பேசினான் பாண்டியன். எதிர்ப்புக் கனல் எல்லா இடங்களிலும் பரவியது. பட்டமளிப்பு விழாவின் போது நடத்த வேண்டிய பெரிய போராட்டத்துக்கு முன் சக மாணவி ஒருத்திக்கும், வயது மூத்த பேராசிரியர் ஒருவருக்கும் இழைக்கப்பட்ட தீமைகளை எதிர்த்து முதலில் இந்தப் போராட்டத்தை அவர்கள் உடனே மேற்கொள்ள வேண்டியிருந்தது. சத்திய வெள்ளம் : முன்னுரை, கதை முகம் 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
நிறைவுரை
|