இருபத்து ஐந்தாவது அத்தியாயம் பின்னால் தங்களை அடுத்து வருகிற மாணவர்கள் அந்தக் கடை திறந்திருப்பதைப் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள் என்று புரிந்து கொண்டு அதை அடைக்கச் செய்யும் பணியை மாணவிகள் தாங்களே செய்யாமல் மாணவர்களுக்கு மீதம் விட்டுச் சென்றனர். அவ்வளவு பெரிய கடைவீதியில் அந்த 'அறிஞர் கலைஞர் சுவை நீர் அங்காடி'க்காரர் மட்டும் திமிராகவும் அலட்சியமாகவும் கடையைத் திறந்து வைத்து நடத்திக் கொண்டிருந்தது உள்ளம் குமுறச் செய்வதாக இருந்தது. முதலில் அணி வகுத்து வந்த மாணவிகளை அடுத்த மாணவர்கள் அந்த இடத்துக்கு வந்த போது கதிரேசனும் நாலைந்து நண்பர்களும் போய்க் கடையை அடைக்கும்படி மிகவும் மரியாதையான வார்த்தைகளாலேயே வேண்டினார்கள். கதிரேசனுடைய வேண்டுகோளுக்கு நேரடியாக மறுமொழி சொல்லாமல், "டேய்! டோப்பாத் தலையா! இந்தத் தலை மயிரையும் கிருதாவையும் காமிச்சு எங்களை மிரட்டலாம்னா பார்க்கிறே? மரியாதையா வெளியே போறியா, இல்லே...? வாலை ஒட்ட நறுக்கி அனுப்பி வைக்கட்டுமா?" என்று சண்டைக்கு இழுத்தான் கடையிலிருந்த முரடன் ஒருவன். அவ்வளவுதான்! ஏற்கனவே சூடு ஏறியிருந்த கதிரேசனுக்கு அதைக் கேட்டு இரத்தம் கொதித்தது. 'இன்று கடையை அடைப்பவர்கள் என்றுமே திறக்க முடியாமற் போகும்! ஜாக்கிரதை!' என்று மல்லை இராவணசாமி கட்சியினர் போட்டியாக அச்சிட்டு ஒட்டிய விஷமத்தனமான சுவரொட்டி ஒன்றும் அந்தக் கடை முகப்பில் ஒட்டப்பட்டிருப்பதைப் பார்த்ததும் மாணவர்களின் கோபம் இன்னும் அடக்க முடியாததாகி விட்டது. அதே நேரத்துக்கு ஏற்கனவே திட்டமிட்டு வைத்திருந்து தயாராகக் காத்திருந்து தாக்குவது போல் அந்த ஹோட்டல் மாடியிலிருந்து கீழே நின்ற மாணவர்கள் மேல் சோடாப்புட்டிகளும், கற்களும், திராவகப் பல்புகளும் வீசப்பட்டன. ஹோட்டல் மாடியிலிருந்து சோடாப் புட்டிகளும், திராவகப் பல்புகளும் வீசப்படுவதையும், மாணவர்களும் சிலர் அலறியபடி குருதி ஒழுக நிற்பதையும் பாண்டியன் போலீஸாருக்குச் சுட்டிக் காட்டியும் பயனில்லை. அந்த ஹோட்டல் எல்லைக்குள் நுழைந்து அங்கே மறைந்திருந்து வன்முறைகள் புரியும் சமூக விரோதிகளை விரட்டிப் பிடிக்காமல் போலீஸார் மரங்களாக நிற்பதைப் பார்த்து மாணவர்களுக்கு மேலும் ஆத்திரம் மூண்டது. தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லாத மாணவர்கள் பெருங்கூட்டமாக உடனே அந்த ஹோட்டலில் புகுந்து விட்டனர். உடனே பெருங் கலவரம் மூண்டது. ஹோட்டல் முகப்புக் கண்ணாடிகள், கிளாஸ்கள், மேஜை நாற்காலிகள் எல்லாம் தவிடு பொடியாயின. அப்போதும் டீக்கடை பாய்லர் கொதி நீரை டம்ளர்களில் வாரி மாணவர்கள் மேல் வீசினார்கள் கடையினுள்ளே இருந்த முரடர்கள். மாணவர்களும் விடவில்லை. மாடியில் ஏறி அங்கே ஒளிந்திருந்து சோடா பாட்டில்களையும் கற்களையும் திராவகப் பல்புகளையும் வீசிக் கொண்டிருந்தவர்களை மாணவர்கள் கையும் களவுமாகப் பிடித்துவிட்டார்கள். ஏராளமான சோடா பாட்டில்களையும், கற்குவியலையும், திராவகப் புட்டிகளையும் அங்கே பதுக்கி வைத்திருந்ததையும் மாணவர்கள் கண்டுபிடித்து விட்டார்கள். ஹோட்டல் மாடியில் தங்களிடம் பிடிபட்ட குண்டர்களைத் தரதரவென்று நடு வீதி வரை இழுத்து வந்து போலீஸாரைக் கூப்பிட்டு அவர்களிடம் ஒப்படைத்தார்கள் மாணவர்கள். ஹோட்டல் முள்கரண்டி(ஃபோர்க்)யால் முரடன் ஒருவன் கதிரேசனின் விலாவில் குத்தியிருந்தான். திராவகப் பல்பு, சோடாப்புட்டி வீச்சில் சில மாணவர்கள் காயமடைந்திருந்தார்கள். இரண்டொரு ஆசிரியர்களும் விரிவுரையாளர்களும் கூடக் காயமுற்றிருந்தனர். இதையெல்லாம் பார்த்துக் கொதிப்படைந்த பொதுமக்களும், தொழிலாளிகளும் அந்தக் கடையைத் தரைமட்டமாக்கும் வெறியோடு உள்ளே புகுந்து தாக்கத் தொடங்கினார்கள். அதுவரை சும்மா இருந்த போலீஸ் அப்போது வந்து கலைத்திராவிட்டால் அந்தக் கடை பிழைத்திருக்க முடியாது. இதற்குள் ஊர்வலத்தின் முன் பகுதியில் இருந்த மாணவிகளும் இரண்டு மூன்று வரிசை மாணவர்களும், போலீஸ் அலுவலக வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு நின்றார்கள். ஊர்வலத்தின் பிற்பகுதியில் ஹோட்டல் வாயிலில் மூண்ட கலவரம் இன்னும் இங்கே இவர்களுக்குத் தெரியாமலே இருந்தது. ஆகவே இவர்கள் அமைதியாக அட்டைகளைப் பிடித்தபடி எதிர்ப்புக் கோஷங்களை முழக்கிக் கொண்டு நின்றார்கள். ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு மகஜரை எடுத்துக் கொண்டு போய்க் கொடுக்க வேண்டிய பாண்டியன், மோகன்தாஸ், கதிரேசன் முதலியவர்கள் இன்னும் ஊர்வலத்தின் முன் பகுதிக்கு வந்து சேராததனால் காலங்கடந்து கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் ஹோட்டல் வாயிலில் நடந்த கலவரமும், அதனால் காயமும், அடி உதைகளும் பட்ட மாணவர்கள் ஆம்புலன்ஸில் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருப்பது ஊர்வலத்தின் முன் பகுதிக்கும் பரவியது. ஊர்வலத்தின் பிற்பகுதி இன்னும் வந்து சேராததன் காரணம் அப்போது இவர்களுக்கு மெல்ல மெல்லப் புரிந்தது. டீக்கடை பாய்லர் கொதி நீரை டம்ளர்களில் வாரி மாணவர்கள் மேலே வீசி ஊற்றிய போதும், கடை முரடன் ஒருவன் முள் கரண்டியால் கதிரேசனை விலாவில் குத்தியபோதும், சோடாப்புட்டி ஆஸிட் பல்பு வீச்சின் போதும், போலீஸ் சும்மா பார்த்துக் கொண்டு நின்றது என்ற செய்தி பரவியதும் மாணவிகளை அடுத்து நின்ற மாணவர்களில் சிலர் "மேரிதங்கம் மாண்டது போதாதா? இன்னும் எத்தனை பேரைக் கொல்லப் போகிறீர்கள்?" என்று கூப்பாடு போட்டபடி போலீஸ் அலுவலகத்தை நோக்கி முன்னேற முயன்றார்கள். அப்போது சாலையில் ஓரமாகக் குவித்திருந்த சரளைக் கற்கள் மாணவர்களின் பார்வையில் பட்டது. தங்களுக்குப் பாதுகாப்புத் தராத போலீஸின் மேல் ஆத்திரம் அடைந்த அவர்கள் கல் வீச்சில் இறங்கினார்கள். போலீஸ் அலுவலகத்தை நோக்கிச் சரமாரியாகக் கற்கள் பறந்தன. பஜார் ரோட்டில் ஹோட்டல் வாயிலில் நடந்த சோடாப் புட்டி வீச்சில் யாரோ ஒரு மாணவன் இறந்து போனதாகவும் அப்போது ஒரு செய்தி வந்து பரவவே முன் வரிசை மாணவர்கள் வெறி கொண்டனர். கால்மணி நேரத்துக்குப் பின் ஊர்வலத்தின் பின்பகுதியினர் வந்த பின்பு தான் கல்வீச்சு நின்றது. மாணவர்கள் யாரும் இறக்கவில்லை என்ற உண்மையைப் பாண்டியனே வந்து தெரிவித்த பின்பு தான் இவர்கள் நம்பினார்கள். எனினும் ஹோட்டல் முரடன் கதிரேசனைக் குத்திவிட்டான் என்பது அவர்கள் கோபத்தை கிளறுவதற்குப் போதுமானதாயிருந்தது. பாண்டியன் முதலிய மாணவர்கள் மகஜரை எடுத்துக் கொண்டு அதைக் கொடுப்பதற்காக ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்குள் சென்றிருந்த பொழுது போலீஸ் நிலையத்துக்குள்ளிருந்து அதே பழைய ஜீப்பில் மல்லை இராவணசாமியும், கோட்டம் குருசாமியும் வெளிவரவே வெளியே நின்றிருந்தவர்களிடம் தாங்க முடியாத ஆத்திரம் மூண்டது. ஜீப் மறிக்கப்பட்டது. கூட்டத்திலிருந்து யாரோ கழற்றி எறிந்த செருப்புக்களும், சரமாரியாகக் கற்களும் ஜீப்பின் மேல் விழவே நிலைமை தீவிரமாகியது. ஜீப்பில் இருந்த கட்சி ஆட்கள் இருவருடைய தலையீட்டால் தான் போலீஸே தவறாக நடக்கிறது என்ற எண்ணம் எல்லாருக்கும் இருந்ததனால் ஒரு தவிர்க்க முடியாத உணர்ச்சிக் கொந்தளிப்பு ஏற்பட்டது. ஜீப்பும் அதிலிருந்த ஆட்களும் கூட்டத்தின் நடுவே சிக்கிக் கொண்டதை அடுத்து முன் எச்சரிக்கையில்லாமல் யாரும் எதிர்பாராத விதமாகப் போலீஸார் கூட்டத்தில் தடியடிப் பிரயோகம் செய்யத் தொடங்கினர். ஆத்திரம் அடைந்த மாணவர்களில் சிலர் போலீஸார் மேலேயே கல்லெறியத் தொடங்கினார்கள். போலீஸாரின் திடீர்த் தாக்குதலால் மாணவிகள் நிலைகுலைந்து ஓடத் தொடங்கியதால் அவர்களிலும் சிலர் காயமடைய நேரிட்டது. தடியடிப் பிரயோகமும் வரம்பு மீறி நடந்தது. மூக்கு முகம் பாராமல் மாணவர்களை அடித்துத் தள்ளினார்கள் போலீஸார். தன்னுடைய ஹோட்டலுக்குப் பெருஞ்சேதம் விளைந்திருக்கிறது என்பதை அறிந்து கொண்ட சினத்தாலும், தானும் இராவணசாமியும் அமர்ந்திருந்த ஜீப்பின் மேல் செருப்பு வீச்சு, கல்வீச்சு நடைபெற்ற அவமானத்தினாலும் கோட்டச் செயலாளர் அருகே இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டரைக் கூப்பிட்டுத் தூண்டியதால் தான் தடியடிப் பிரயோகமே நடந்ததாக மாணவர்களிடையே செய்தி பரவிவிட்டது. ஹோட்டல் வாசலில் காயமுற்றிருந்த மாணவர்கள் ஏற்கெனவே ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகப்பட்டிருந்தது தவிர இப்போது தடியடிப் பிரயோகத்தினால் வேறு நாற்பது நாற்பத்தைந்து மாணவர்களுக்கு மேல் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போக வேண்டிய நிலையில் இருந்தனர். ஆனால் ஆம்புலன்ஸோ, போலீஸ் வேனோ உடன் கிடைக்கவில்லை. கண்ணுக்கினியாளும், மருத்துவக் கல்லூரி மாணவிகளும் எதிரே இருந்த தொழிற்சாலை ஒன்றிலிருந்து முதலுதவிப் பெட்டிகளை வரவழைத்துக் காயம்பட்ட மாணவர்களுக்குச் சிகிச்சை செய்யத் தொடங்கிவிட்டார்கள். மரத்தடிகளிலும், பிளாட்பாரத்து ஓரங்களிலும், அடிபட்ட மாணவர்களுக்குச் சிகிச்சை செய்து காயங்களுக்குக் கட்டுப் போட்டுக் கொண்டிருந்த போது மகஜர் கொடுப்பதற்காக ஆர்.டி.ஓ. அலுவலகம் சென்றிருந்த பாண்டியன் முதலியவர்கள் திரும்பி வந்தார்கள். நடந்தவற்றை அறிந்து சினத்தோடு போலீஸ் தலைமை அலுவலகத்தில் புகுந்த அவர்களைச் சந்திக்கவோ, பேசவோ மறுத்தார் அங்கிருந்த போலீஸ் அதிகாரி. மனிதாபிமான நோக்கமோ, கருணையோ, அன்புள்ளமோ இல்லாத அந்த வறட்டு அதிகார வர்க்கத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் இளம் உள்ளங்கள் குமுறின. அவர்கள் கண்முன்பாகவே அப்போது அங்கு இன்னொரு நாடகமும் நடந்தது. போலீஸ் அலுவலக காம்பவுண்டுக்குள் நின்று கொண்டிருந்த ஒரு ஜீப்பில் பெட்ரோல் ஊற்றி அங்கிருந்த போலீஸ்காரர்கள் சிலரே அதற்கு நெருப்பு வைத்தனர். "அவர்களே நெருப்பு வைத்துவிட்டு நம் தலையில் பழியைப் போடப் போகிறார்கள். 'நாங்களாக மாணவர்கள் மேல் தடியடிப் பிரயோகம் செய்யவில்லை. அவ்ர்கள் ஸ்டேஷனுக்குள் அத்துமீறிப் புகுந்து ஜீப்புக்கு நெருப்பு வைத்ததால் தான் நாங்கள் தடியடிப் பிரயோகம் செய்ய நேரிட்டது' என்று போலீஸ் தரப்பிலிருந்து வெளியிடப்படும் செய்தி நாளைக் காலைப் பத்திரிகைகளில் வரும். அதிகாரிகள் என்பவர்கள் இப்போதெல்லாம் தவறுகளைச் செய்யாமலிருக்க முயலுவதில்லை. பல சமயங்களில் செய்துவிட்ட தவறுகளை நியாயப்படுத்தவே அதிகமாக முயலுகிறார்கள் அவர்கள். பதவியில் உள்ளவர்களின் போக்கு அவர்களை அப்படிப் பழக்கப்படுத்தி வைத்துவிட்டது. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய போலீஸார் ஆளும் கட்சிப் பிரமுகர்களின் கைக்கூலிகள் ஆகிவிட்டிருக்கிறார்கள்" என்று மோகன்தாஸ் அதைச் சுட்டிக்காட்டிப் பாண்டியனிடமும் மற்ற மாணவர்களிடமும் சொன்னான். கையில் காமிராவோடு வந்திருந்த ஒரு மாணவன் போலீஸாரே ஜீப்புக்குத் தீ வைக்கும் காட்சியைப் படம் எடுக்க முற்பட்ட போது அந்தக் காமிரா போலீஸாரால் தட்டிப் பறிக்கப் பட்டது. அதிலிருந்து பிலிம் சுருளை எடுத்த பின்புதான் காமிராவையே திரும்பக் கொடுத்தார்கள். தடியடிப் பிரயோகம், காயமடைந்த மாணவர்களின் நிலை, ஆம்புலன்ஸோ, போலீஸ் வேனோ கிடைக்காததால் நடுத்தெருவிலேயே அவர்களுக்குச் சிகிச்சை செய்ய முயன்ற மாணவிகளின் சிரமம் எல்லாவற்றையும் பார்த்து ஊர்வலத்தில் வந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களும், ஆசிரியர்களும், தொழிலாளிகளும் உணர்ச்சி வசப்பட்டார்கள். அந்த மக்கள் வெள்ளம் அப்போது ஒன்றாயிருந்தால் என்னென்ன நேருமோ என்று பயந்து மெல்ல மெல்லக் கூட்டத்தைக் கலைத்தார்கள் போலீஸார். நெடு நேரத்துக்குப் பின்பே காயமுற்ற மாணவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போக ஆம்புலன்ஸ், வேன் எல்லாம் வந்தன. ஆஸ்பத்திரியிலும் ஒரு தந்திரம் கையாளப் பட்டது. நாற்பத்தைந்து மாணவர்களில் முப்பது பேருக்கு மேல் வார்டில் அனுமதித்துச் சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய நிலையில் இருந்தும் கூட அப்படிச் செய்யாமல் எல்லோரையும் உடனே, எதையோ சிகிச்சை என்ற பேரில் முடித்து வெளியே அனுப்பிவிட முயன்றார்கள். பத்திரிகை நிருபர்களோ, பொதுமக்களோ வந்து பார்க்கும்படியும், பிற மாணவர்கள் காணும்படியும், வார்டில் மாணவர்கள் யாருமே தங்கிச் சிகிச்சை பெறாமல் பார்த்துக் கொண்டார்கள். யாருக்கும் எதுவும் அதிகச் சேதமில்லை என்று சொல்லவும் இது பயன்படும் என்று நினைத்தார் ஆர்.டி.ஓ. ஆஸ்பத்திரி வார்டில் இருந்த டாக்டர்களுக்கும் கூடப் போலீஸாரும் ஆர்.டி.ஓ.வும் இப்படிக் கூத்தடித்தது பிடிக்கவில்லை. அவர்களுடைய அநுதாபமும் இரக்கமும் மாணவர்கள் மேலும் பேராசிரியர்கள் மேலுமே இருந்தன. இன்னும் பத்து நாட்கள் தங்கிச் சிகிச்சை பெற வேண்டிய அளவு ஸீரியஸான நிலையிலிருந்த மாணவன் கூடச் சிகிச்சைக்குப் பின் உடனே விடுதிக்குத் திருப்பி அனுப்பப் பட்டான். 'தடியடிப் பிரயோகத்தில் காயமுற்ற இத்தனை மாணவர்கள், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்' என்பதாக எந்தப் பத்திரிகையிலும் செய்தி வந்துவிடக் கூடாதே என்பதற்காகத்தான் இது நடந்தது என்பதை எல்லாருமே புரிந்து கொண்டனர். எதிர்க்கட்சி பத்திரிகைகளில் இப்படி மாணவர்கள் ஆஸ்பத்திரியில் தங்கிச் சிகிச்சை பெறாமல் துரத்தப்பட்டது பற்றியும் செய்தி வெளிவர ஏற்பாடு செய்தான் பாண்டியன். திராவக வீச்சிலும், பஜார் ரோடு ஹோட்டல் கலவரத்தின் போதும் காயமுற்ற கதிரேசன் முதலியவர்களுக்குத் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அண்ணாச்சி அருகேயிருந்து கதிரேசனையும் மற்ற மாணவர்களையும் கவனித்துக் கொண்டார். பாண்டியனும் அவ்வப்போது போய்க் கவனித்தான். காலாண்டு விடுமுறைக்குப் பின் பல்கலைக் கழகம் திறந்த முதல் தினத்தன்று அவர்கள் நடத்திய இந்த ஊர்வலமும் போராட்டமும் வெற்றி பெற்றன. மறுநாள் காலைப் பத்திரிகையிலேயே அவர்கள் எதிர்பார்த்தபடி நடந்திருந்தது. பாலேஸ்வரியிடமும் பேராசிரியர் ஸ்ரீராமனிடமும் முறை தவறி நடந்து கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். அரசாங்கம் விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது. பல்கலைக் கழகம் திறந்தவுடனே முதல் வாரத்துக்குள் இருக்கும் என்று எதிர்பார்த்த பட்டமளிப்பு விழாவை இன்னும் பதினைந்து நாட்களுக்குத் தள்ளிப் போட்டிருந்தார் துணைவேந்தர். கரியமாணிக்கம் டாக்டர் பட்டம் பெற இருப்பதனாலும், பட்டமளிப்பு விழாப் பேரை நிகழ்த்த இருப்பதாலும் மாணவர்கள் அதை எதிர்த்து ஏதாவது செய்யக் கூடும் என்ற சந்தேகம் துணைவேந்தருக்கு இருந்தது. சிண்டிகேட் உறுப்பினர் ஆனந்தவேலுவோ துணைவேந்தரை நெருக்கு நெருக்கென்று அவசரப்படுத்திக் கொண்டிருந்தார். பட்டமளிப்பு விழா தாமதமாகத் தாமதமாக அமைச்சரிடம் தமக்கு ஆகவேண்டிய காரியமும் தாமதமாகுமே என்று பயந்து பதறினார் எஸ்டேட் அதிபர் ஆனந்தவேலு. மாணவர்களின் கண்டன ஊர்வலமும், கடையடைப்பும் நடந்த தினத்துக்கு மறுநாள் பல்கலைக் கழக வகுப்புக்கள் எப்போதும் போல் நடைபெற்றன. மாணவர்கள் வகுப்புக்களுக்குச் சென்றனர். பல பத்திரிகைகள் தங்கள் கோரிக்கைகளின் நியாயங்களை எடுத்து எழுதியிருந்ததாலும், அரசாங்கம் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டிருந்ததாலும், மாணவியிடமும் பேராசிரியரிடமும் தவறாக நடந்து கொண்ட இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்ததாலும் இரண்டாம் நாள் வகுப்புக்களைப் புறக்கணிக்க விரும்பவில்லை அவர்கள். எனவே, அன்று பல்கலைக் கழகம் அமைதியாக நடந்தது. பிற்பகல் மூன்று மணிக்கு மோகன்தாஸையும், பாண்டியனையும் துணைவேந்தர் எதற்கோ கூப்பிட்டு அனுப்பினார். அவர்கள் இருவரும் அவரைக் காணச் சென்ற போது அவர் காப்பி பருகிக் கொண்டிருந்தார். பியூனைக் கூப்பிட்டு அவர்களுக்கும் பிளாஸ்கிலிருந்து காப்பி ஊற்றிக் கொடுக்கச் சொல்லி உபசரித்தார் அவர். அந்த உபசாரம் வழக்கமில்லாத புதுமையாக இருந்தது. "பட்டமளிப்பு விழா எல்லாம் வருகிறது. மாணவர்கள் எல்லாரும் ஒற்றுமையாயிருந்து யுனிவர்ஸிடியின் நற்பெயரைக் காப்பாற்றணும். பரஸ்பரம் நாம் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளணும். மிஸ்அண்டர்ஸ்டாண்டிங் எதுவும் கூடாது" என்று துணைவேந்தர் தொடங்கிய போது அதற்கு என்ன மறுமொழி கூறுவது என்பது புரியாமல் பாண்டியனும், மோகன்தாஸும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பட்டமளிப்பு விழாவின் போது மாணவர்கள் போராடுவார்களா இல்லையா என்பதை மிகவும் தந்திரமாகத் தங்களிடமிருந்து அவர் அறிந்து கொள்ள முயல்வது அவர்களுக்குப் புரிந்தது. 'எதையும் சொல்லி விடாதே' என்பது குறித்துப் பாண்டியன் மோகன்தாஸின் காலை மிதித்து நினைவூட்டினான். மோகன்தாஸ் உஷாரானான். அவர்களிடமிருந்து எதையும் அவரால் அறிந்து கொள்ள முடியவில்லை. பேச்சை வேறு திசைக்கு மாற்றி ஹாஸ்டல் வசதிகள், உணவு விடுதிகள் பற்றி அவர்களை மிகவும் அக்கறையாகக் கேட்டார் துணைவேந்தர். "ஏதாவது குறைகள் இருந்தால் என்னிடம் நீங்கள் உடனே தயங்காமல் சொல்ல வேண்டும்" என்றார். வழக்கத்தை மீறிய சுபாவத்தோடு அவர் பேசியது அவர்களுக்குப் புதுமையாயிருந்தது. ஜாடைமாடையாக எதை அவர் தங்களிடமிருந்து தெரிந்து கொள்ள முயன்றாரோ, அதைத் தவிர மற்ற எல்லாப் பதில்களையும் அவருக்குச் சொன்னார்கள் பாண்டியனும், மோகன்தாஸும். "முன் வருடங்களில் செய்தது போல் பட்டம் பெறும் மாணவர்களைத் தவிர நம் யுனிவர்ஸிடியில் இப்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கும் பட்டமளிப்பு விழாப் பேருரையைக் கேட்பதற்குப் பாஸ்கள் தருவதை நிறுத்திவிட நினைக்கிறேன். உங்கள் அபிப்பிராயம் என்ன? பட்டம் பெற வருகிற மாணவர்களின் கூட்டமே அதிகம். ஹாலில் இடமோ ரொம்பக் குறைவு. பட்டம் பெறாமல் இப்போது இங்கே படிக்கிற நீங்களெல்லாம் போய் அங்கே அடைத்துக் கொள்ளாது இருந்தால் பட்டம் பெற வருகிறவர்களாவது தாராளமாக உட்கார முடியும் அல்லவா?" "சௌகரியம் போல் செய்யுங்கள், சார்! இட வசதி எப்படியோ அப்படித்தானே நீங்கள் ஏற்பாடு செய்யலாம்?" என்று இதற்கு மறுமொழி கூறும் போதும் பட்டுக் கொள்ளாமல் மறுமொழி கூறினார்கள் அவர்கள். பட்டமளிப்பு விழாவின் போது மாணவர்கள் பட்டமளிப்பு விழா மண்டபத்துக்குள் வருவதற்குப் பாஸ் வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார்களானால் அந்தப் பிடிவாதத்தை வைத்தே அவர்களுடைய உள்நோக்கத்தைக் கண்டு பிடித்து விடலாம் என்று முயன்ற போதும் துணைவேந்தர் தோற்றார். அதன் மூலமும் தங்கள் நோக்கம் அவருக்குத் தெரிய விடாமல் காத்துக் கொண்டு விட்டார்கள் மாணவர்கள். சி.ஐ.டி. ரிப்போர்ட் மூலம் மந்திரிக்குத் தெரிந்து, மந்திரி துணைவேந்தரைக் குடைந்தும் துணைவேந்தரால் மாணவர்கள் பட்டமளிப்பு விழாவின் போது தகராறு செய்வார்களா இல்லையா என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. அரை மணி நேரம் அவர் முன்னிலையில் நடித்துவிட்டுப் பின்பு மெல்ல விடை பெற்று எழுந்து வந்தார்கள் பாண்டியனும் மோகன்தாஸும். இது நடந்த மறுநாள் காலை பத்தரை மணிக்கு வகுப்புக்காகப் போய்க் கொண்டிருந்த பாண்டியனைப் பல்கலைக் கழக மைதானத்தில் உள்ளூர் மாணவி ஒருத்தியையும் உடன் அழைத்துக் கொண்டு வந்து பாதி வழியில் சந்தித்தாள் கண்ணுக்கினியாள். எதிரே அவர்களைக் கண்டதும் பாண்டியன் தயங்கி நின்றான். கண்ணுக்கினியாள் சொன்னாள்: "இவள் பி.எஸ்.ஸி. முதல் வருடம் படிக்கிறாள். பெயர் பத்மா. ஊருக்குள்ளிருந்து தினம் டவுன் பஸ்ஸில் இங்கே வருகிறாள். ஊருக்குள்ளிருந்து யுனிவர்ஸிடிக்கு வரும் டவுன் பஸ்களின் ரூட் உரிமையாளர் இராவணசாமி என்பது உங்களுக்குத் தெரியும். பத்து நாட்களாக இவள் வருகிற காலை 9.45 பஸ்ஸில் யாரோ ஒரு புதுக் கண்டக்டர் இவளோடு தகராறு செய்கிறானாம். தோள்பட்டையில் இடிப்பது, டிக்கட் கொடுக்கும் போது கையில் தொட்டு அழுத்திக் கொடுப்பது, மேலே இடிப்பது, சாய்வது போல் என்னென்னமோ வம்பெல்லாம் பண்ணுகிறானாம். இவள் பயத்தினாலும் கூச்சத்தினாலும் பொறுத்துக் கொண்டிருக்கிறாள். இன்றைக்குத்தான் என்னிடம் சொன்னாள். அந்தக் கண்டக்டருக்கு நாம் எப்படிப் புத்தி புகட்டுவது?" "ஒரு காரியம் செய்யேன்! நாளைக் காலையில் எட்டரை மணிக்கு வார்டனிடம் அனுமதி வாங்கிக் கொண்டு நீ இவள் புறப்படுகிற இடத்துக்குப் போய் இவளுடனேயே பஸ்ஸில் அங்கிருந்து புறப்பட்டு வா. பத்து மணிக்கு அந்த பஸ் இங்கே யுனிவர்ஸிடி டெர்மினஸ்ஸில் வந்து நிற்கிற இடத்திலே நானும் நாலைந்து மாணவர்களும் தயாராகக் காத்திருக்கிறோம். கோளாறாக ஏதாவது நடந்திருந்தால் எங்ககிட்டச் சொல்லு. அப்பவே அங்கேயே அந்தக் கண்டக்டரிடம் விசாரிக்கிறோம். அவன் தன்னோட தப்பை ஒப்புக் கொண்டு 'இனிமே அப்பிடி நடக்கலே'ன்னு மன்னிப்புக் கேட்டா விட்டுவிடலாம். இல்லேன்னா அவனைக் கவனிக்கிற விதமாகக் கவனிப்போம். நாளைக் காலையிலே நீ அங்கே போகணும். போறியா?" என்றான் பாண்டியன். கண்ணுக்கினியாளும் அவன் கூறியபடியே செய்ய இணங்கினாள். கண்ணுக்கினியாளை நோக்கிக் கூச்சத்தோடும் பயத்தோடும், "இதெல்லாம் வேண்டாம். என்னாலே உனக்கெதுக்கு வீண் சிரமம்?" என்று ஒதுங்க முயன்றாள் அந்தப் பெண் பத்மா. "இப்பிடிக் கூசி ஒதுங்கினால் பயனில்லை. ஒதுங்குகிறவர்கள் எதிலும் ஒதுக்கப்படும் காலம் இது. பொறுத்துக் கொள்கிறவர்களின் பொறுமையே மேலும் மேலும் சோதிக்கப்படுகிற காலத்தில் பொறுமையைக் கடைப்பிடிப்பது தவிரப் பொறுமையைக் கைவிடவும் நமக்குத் தெரிய வேண்டும்" என்று உடனே பாண்டியன் முன்னிலையில் அவளைக் கண்டித்தாள் கண்ணுக்கினியாள். சத்திய வெள்ளம் : முன்னுரை, கதை முகம் 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
நிறைவுரை
|