முப்பத்து ஏழாவது அத்தியாயம் பல்கலைக் கழக விடுமுறையில் மாணவர்கள் மகாநாடு நடந்து முடிந்த போதே பொறாமையும் கடுங் கோபமும் அடைந்திருந்த மல்லை இராவணசாமியின் கட்சியினர், பழிவாங்கிடத் துடித்துக் கொண்டிருந்தனர். மகாநாட்டுப் பந்தலுக்குத் தீ வைத்த பின்பும் அவர்கள் சினம் ஆறவில்லை. மகாநாடு பிரமாதமாக நடந்து முடிந்த பின்பு தானே பந்தலுக்குத் தீ வைக்க முடிந்தது என்ற மனத்தாங்கலுடனும் அதைவிட அதிகமாகப் பழிவாங்கும் சினத்துடனும் காத்திருந்தார்கள் அவர்கள். மல்லை இராவணசாமி கட்சியினரின் எல்லாக் கோபமும், ஆத்திரமும் அண்ணாச்சியின் மேல் திரும்பியிருந்தன. எப்படியாவது அண்ணாச்சியைப் போலீஸ் கேஸ் எதிலாவது மாட்டி வைத்து உள்ளே தள்ளிவிடத் துடித்தார்கள் அவர்கள். மகாநாடு முடிந்து இரண்டு மூன்று நாட்களுக்குப் பின் மணவாளனும், பாண்டியனும் கூட மதுரை சென்று விட்டவுடன் இராவணசாமியின் ஆட்கள் அண்ணாச்சியைப் பழிவாங்கச் சமயம் வாய்த்தது. மேலிடத்திலிருந்து ஏற்பாடு செய்து கதிரேசன் குழுவினரோடு தொடர்பு படுத்திப் பொய்யாக ஏதோ குற்றம் சாட்டிப் பொங்கல் பண்டிகை தினத்தன்று மாலை அண்ணாச்சியைக் கைது செய்து ரிமாண்டில் வைத்திருந்தார்கள் போலீஸார். அமைச்சர் கரியமாணிக்கம் டாக்டர் விருது பெறுகிற பட்டமளிப்பு விழா வருவதற்கு முன்னரே முக்கியமானவர்களை யெல்லாம் இப்படிக் கைது செய்து உள்ளே தள்ளிவிட ஏற்பாட்டின் முதற்படியாக அண்ணாச்சியை உள்ளே தள்ளியிருந்தார்கள். முதலில் பூதலிங்கத்துக்குத்தான் அண்ணாச்சி கைதான செய்தி தெரிந்தது. அவரே தந்தி கொடுத்து மணவாளனையும் பாண்டியனையும் வரவழைப்பதற்காக மல்லிகைப் பந்தல் தந்தி அலுவலகத்துக்குப் போன போது அங்கே தமக்கு முன்பாகவே தேசியத் தோட்டத் தொழிலாளர் யூனியன் செயலாளர் தந்தி கொடுக்க ஏற்பாடுகள் செய்து கொண்டிருப்பதைப் பார்த்து யாராவது ஒருவர் தந்தி கொடுத்தால் போதும் என்ற எண்ணத்தில் தாம் தந்தி கொடுப்பதை நிறுத்திக் கொண்டார். பூதலிங்கமும், தேசியத் தோட்டத் தொழிலாளர் யூனியன் செயலாளரும் தந்தி அலுவலகத்திலிருந்து திரும்பும் போது காரணமில்லாமல் சும்மா மிரட்டுவதையே நோக்கமாகக் கொண்டு அண்ணாச்சியைக் கைது செய்திருப்பது பற்றி வருத்தப்பட்டுப் பேசிக் கொண்டே ஒரு வக்கீல் வீட்டுக்குப் போய் அண்ணாச்சியை ஜாமீனில் விடுவிப்பது பற்றிக் கலந்தாலோசித்தார்கள். வக்கீல் விடிந்ததும் அந்த முயற்சியைச் செய்து பார்க்கலாம் என்றார். மறுநாள் காலையில் விடிந்ததும் எட்டு எட்டரை மணிக்கு மணவாளன் மல்லிகைப் பந்தலுக்கு வந்து சேர்ந்து விட்டார். அண்ணாச்சி கைதானது பற்றிய விவரத்தைத் தமக்குத் தந்தி மூலம் அறிவித்திருந்த தொழிலாளர் யூனியன் செயலாளரையே முதலில் தேடிச் சென்றார் மணவாளன். அவர் தேடிச் சென்ற போது யூனியன் செயலாளர் வக்கீல் வீட்டுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். மணவாளனும் அவரோடு சேர்ந்து பேசிக் கொண்டே போக வேண்டியதாயிற்று. இவர்கள் இருவரும் வக்கீல் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்த போது அங்கே ஏற்கனவே பூதலிங்கம் வந்து காத்துக் கொண்டிருந்தார். மணவாளனைச் சந்தித்ததும் பூதலிங்கம் நடந்ததைச் சொல்லி வருத்தப்பட்டார். "என்ன காரணத்துக்காக அரெஸ்ட் பண்ணினாங்க? 'கிரவுண்ட்ஸ்' என்னென்னே தெரிஞ்சிக்க முடியலே. சும்மா மிரட்டி வைக்கணும், அலைக்கழிக்கணும் என்கிறதுக்காகவே கூட அரெஸ்ட் பண்ணியிருப்பாங்க போல இருக்கு" என்றார் வக்கீல். போலீஸாரின் போக்கைப் பார்த்தால் 'பெயில்' கிடைக்குமா கிடைக்காதா என்பதே சந்தேகமாக இருந்தது. ரிமாண்டில் இருப்பவரைக் காணவும் பேசவும் கூட அனுமதி பெற முடியவில்லை. இதற்குள் அண்ணாச்சி கைதான செய்தி மெல்ல மெல்லப் பரவி உள்ளூர் மாணவர்களும், அக்கம் பக்கத்து ஊர் மாணவர்களும், விடுமுறைக்கு எங்கும் போகாமல் தங்கிவிட்ட மாணவர்களுமாக நானூறு, ஐந்நூறு பேர் கடை வாசலில் கூடிவிட்டார்கள். மாணவர்களைத் தவிர தேசியத் தொண்டர்களும் ஊழியர்களும் வேறு கூடியிருந்தார்கள். அண்ணாச்சி கைதான செய்தி அவர்கள் அனைவரையும் கொதிப்படையச் செய்திருந்தது. இப்படிக் கூட்டம் கூடும் என்பதை எதிர்பார்த்தே வந்து நிற்பது போல் அண்ணாச்சி கடை வாசலில் இரண்டு லாரி போலீஸும் வந்து நின்றது. கடைப் பையன்கள் கடையைத் திறந்து வியாபாரத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். காலை பதினொரு மணியளவில் சுமார் மூவாயிரம் பேருக்கு மேல் கூடி விடவே, போலீஸார் லாரிகளிலிருந்து இறங்கி வந்து கூட்டத்தைக் கலைந்து போகுமாறு வேண்டினார்கள். கூட்டம் அந்த வேண்டுகோளைப் பொருட்படுத்தாமல் மேலும் மேலும் அதிகமாகி அங்கேயே நின்று கொண்டிருந்தது. பதினொன்றே முக்கால் மணிக்கு மணவாளனும், தொழிலாளர் யூனியன் செயலாளரும் அங்கே வந்த போது அண்ணாச்சியை ஜாமீனில் விடப் போலீஸார் மறுத்து விட்டதாகவும் ரிமாண்டில் இருப்பவரைக் காணவும் அனுமதி கிடைக்கவில்லை என்பதாகவும் தெரிவித்த போது, கூட்டம் கட்டுக்கடங்காமல் கொதிப்படைந்து போலீஸாரின் அடக்குமுறையை எதிர்த்துக் கோஷங்களை முழங்க ஆரம்பித்தது. போலீஸார் தடியடிப் பிரயோகம் செய்து கூட்டத்தைக் கலைக்கும் முயற்சியில் இறங்கினார்கள். முன்னறிவிப்பின்றி இது நடக்கவே கூட்டத்தின் கோபம் அதிகமாகியது. அப்போது அந்தப் பாதையாகச் சென்ற மல்லை இராவணசாமியின் பஸ் ஒன்றைக் கல் எறிந்து நிறுத்தினார்கள் அவர்கள். யூனியன் செயலாளரும் மணவாளனும் கூட்டத்தினரை அமைதியாகக் கலைந்து போகச் சொல்லி வேண்டிக் கொண்டிருந்த போதே போலீஸார் கண்ணீர்ப்புகை பிரயோகத்தில் இறங்கினார்கள். மூன்று ரவுண்டுகள் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் முடிந்து கூட்டம் தறிகெட்டு ஓடத் தொடங்கியிருந்த போது கூட்டத்தின் நடுவே சிக்கியிருந்த மல்லை இராவணசாமியின் அந்த பஸ் தீப்பற்றி எரிவதைப் பார்த்தார் மணவாளன். ஆத்திரம் அடைந்த கூட்டத்தினரில் யார் அதைச் செய்தார்கள் என்பதைக் கண்டுபிடிக்க முடியாமலிருந்தது. கூட்டத்தை அப்படி வன்முறையில் ஈடுபடத் தூண்டும் அளவுக்குப் போலீஸார் எல்லை மீறிக் கொடுமை செய்து விட்டார்கள் என்பதுதான் காரணம் என்றாலும் அந்த பஸ் தீப்பிடித்து எரிவதைக் கண்டு மணவாளன் மனப்பூர்வமாக வருந்தினார். ஒரு வேளை அநாவசியமான தங்கள் தடியடிப் பிரயோகத்தையும் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தையும் நியாயப்படுத்துவதற்காகப் போலீஸாரே பஸ்ஸுக்கு நெருப்பு மூட்டியிருக்கலாமோ என்று கூட அவருக்குத் தோன்றியது அப்போது. இப்படி மணவாளனும், தொழிலாளர் யூனியன் செயலாளரும் நடந்துவிட்ட நிகழ்ச்சிகளுக்காக வருந்தியபடி அண்ணாச்சிக் கடை முகப்பில் நின்று கொண்டிருந்த போது முற்றிலும் எதிர்பாராத விதமாக ஓர் இன்ஸ்பெக்டரும் கான்ஸ்டேபிளுமாக வந்து பஸ்ஸுக்கு நெருப்பு மூட்ட தூண்டிய குற்றத்துக்காக அவர்கள் இருவரையும் அரெஸ்ட் செய்வதாகச் சொல்லி கைது செய்தார்கள். 'மக்களை அமைதியாகக் கலைந்து போகுமாறு வேண்டிக் கொண்டதைத் தவிரக் கடை வாயிலிலிருந்து தாங்கள் நகரக் கூட இல்லை' என்று அவர்கள் கூறிய விளக்கத்தைப் போலீஸார் கேட்டுக் கொள்ளக்கூடத் தயாராக இல்லை. கைதாகிப் போலீஸ் வேனில் ஏறுமுன், "பட்டமளிப்பு விழா வருவதற்குள் அநேகமாக எல்லாரையுமே இப்படி உள்ளே தள்ளி விடுவதுதான் அவர்கள் நோக்கம்! பிரிட்டிஷ் ஆட்சியில் கூட இவ்வளவு எதேச்சதிகாரம் இருந்திராது" என்றார் யூனியன் செயலாளர். "மக்களின் உரிமைகளை மதிக்கத் தெரிந்தவர்கள் இப்படி நடந்து கொள்ளமாட்டார்கள். பரிந்துணர்வும், புரிந்துணர்வும் உள்ளவர்களின் சர்வாதிகாரத்தையாவது எதிர்த்துப் போரிடலாம். முரட்டுச் சர்வாதிகாரத்தில் எதிர்ப்பதற்கும் போரிடுவதற்கும் கூட முடியாமற் போய்விடும். அப்படி ஒரு சர்வாதிகாரத்தின் கீழே தான் நாம் இன்று இருக்கிறோம்" என்றார் மணவாளன். பகல் உணவு நேரத்துக்குள் அவர்கள் இருவரும் சிறைச்சாலைக்குக் கொண்டு போகப்பட்டு விட்டார்கள். ***** பாலவநத்தத்தில் தந்தி கிடைத்து அவசரம் அவசரமாக மதுரை வந்து மணவாளனின் வீட்டில் போய் விசாரித்து அவர் இரவே வாடகைக் காரில் மல்லிகைப் பந்தலுக்கு விரைந்திருப்பதை அறிந்து கொண்டு கண்ணுக்கினியாளுக்குத் தகவல் தெரியுமோ தெரியாதோ என்ற சந்தேகத்துடனேயே பஸ் நிலையத்துக்கு வந்த பாண்டியன், அங்கு கண்ணுக்கினியாளே வழியனுப்ப தந்தை சகிதம் மல்லிகைப் பந்தல் பஸ் அருகே தயாராக நின்று கொண்டிருப்பதைக் கண்டு அவன் ஆச்சரியம் அடைந்தான். அவளும் எதிர்பாராத விதமாக அவனைக் கண்டு ஆச்சரியம் அடைந்தாள். "தெரியுமா? அண்ணாச்சியை..." என்று அவள் தொடங்கிய வாக்கியத்தை, "தெரியும், தந்தி வந்து தான் நான் உடனே புறப்பட்டேன்... உனக்கு எப்படித் தெரியும்?" என்று பதில் கேள்வியால் அவளை எதிர் கொண்டான் பாண்டியன். "எனக்கும் தந்தி வந்தது! உடனே மணவாளன் அண்ணன் வீட்டுக்கு நாயினா ஆள் அனுப்பி விசாரிச்சுக்கிட்டு வரச் சொன்னாரு. அவரு ராத்திரியே புறப்பட்டுப் போயிட்டாருன்னு தெரிஞ்சுது" என்றாள் அவள். "ஒரு தப்புத் தண்டாவுக்கும் போகமாட்டானே. அவனைப் போலீஸ் பிடிச்சிருக்குன்னா ஆச்சரியம்னு சொல்றதா, அக்கிரமம்னு சொல்றதா?" என்பதாகப் பாண்டியனிடம் அண்ணாச்சி கைதானது பற்றி வருத்தப்பட்டார் கந்தசாமி நாயுடு. "நானே கூடப் புறப்பட்டுப் போகலாம்னு இருந்தேன். நல்ல வேளையா நீ வந்திட்டே தம்பீ..." என்று கூறிக் கண்ணுக்கினியாளையும் அவனோடு பஸ் ஏற்றி அனுப்பினார் நாயுடு. அவர்கள் பஸ் மதுரையிலிருந்து புறப்படும் போதே பன்னிரண்டு மணி ஆகிவிட்டது. பஸ்ஸில் போகும் போது, தன்னை வழிப்படுத்தி மயக்க, ஊருக்கு வந்த மல்லை இராவணசாமி கட்சியைச் சேர்ந்த சென்னைப் பிரமுகர் பற்றி அவளிடம் கூறினான் பாண்டியன். "ஏன் இப்பிடி நாயா அலையிறாங்க...?" என்று கேட்டாள் அவள். "அதுதான் அவங்க குணம்! மலிவான விலைக்குத் தங்களை விற்று விற்றுப் பழகியவர்கள் பல வேளைகளில் பிறரையும் அப்படி மலிவான விலைகளில் வாங்க முயல்வது தான் இயல்பு. உன்னதமான மனித குணங்களையும் ரூபாய் அணாக் கணக்கில் பேச அவர்கள் கூசமாட்டார்கள். அவர்கள் அறிந்த கணக்கு அது ஒன்று மட்டும்தான்." "அவர்களுக்கு இல்லாமற் போய்விட்ட கூச்சம் மற்றவர்களுக்கு இல்லாமல் போய்விட்டதாக அவர்கள் எப்படி நினைக்க முடியும்? வெட்கமாக இராதோ?" "வெட்கமின்றி நினைத்துத்தானே இவ்வளவும் செய்கிறார்கள்? கூச்சம் இருந்தால் இதெல்லாம் செய்வார்களா?" நடுவில் நின்ற ஒரு பெரிய ஊரின் பஸ் நிலையத்தில் அவர்கள் கீழே இறங்கிச் சிற்றுண்டி காப்பி அருந்தினார்கள். பஸ் நிலக்கோட்டையைக் கடந்த போது கதிரேசன், பிச்சைமுத்துவைப் பற்றி அவனிடம் நினைவூட்டிப் பேசினாள் அவள். "இதே கொடுமை நீடித்தாள் நான் கூட ஒருநாள் கதிரேசன் ஆக வேண்டியிருக்கலாம். ஒரு படுமோசமான சர்வாதிகாரம் அதைவிடப் படுமோசமான பல விளைவுகளை உண்டாக்கிவிடும். அன்பினாலே காரியங்களைச் சாதிக்க முயல்கிறவர்கள் தோற்கத் தோற்க ஆத்திரத்தோடு காரியங்களைச் சாதிக்கிற வீரர்கள் தான் உருவாக முடியும். நமது நியாயங்களும், நீதிகளும் அறவே புறக்கணிக்கப்படும் போது நாம் பலாத்காரங்களுக்கு நிர்பந்திக்கப்பட்டு விடுகிறோம்." "போதும்! விளையாட்டுக்காகக் கூட இப்படிப் பேசாதீர்கள்" என்று தன் பூப்போன்ற வலது கரத்தினால் அவன் வாயைப் பொத்தினாள் அவள். அண்ணாச்சியைக் கைது செய்திருப்பதால் பாண்டியனின் உள்ளம் எவ்வளவுக்குக் குமுறிப் போயிருக்கிறது என்பதை அவள், அவன் பேச்சுக்களிலிருந்து அப்போது புரிந்து கொள்ள முடிந்தது. அவர்களுடைய பஸ் மல்லிகைப் பந்தலை அடையும் போது பிற்பகல் ஐந்தரை மணியாகிவிட்டது. பஸ் நிலையத்தில் இறங்கியதுமே காலையில் அண்ணாச்சிக் கடை முன்பு நடந்த நிகழ்ச்சிகளும், அவை தொடர்பாக மணவாளனும், தொழிலாளர் யூனியன் காரியதரிசியும் பஸ்ஸுக்கு நெருப்பு வைக்கக் கூட்டத்தினரைத் தூண்டியதாகப் பொய்க் குற்றம் சாட்டப்பட்டுக் கைதான விவரமும் அவர்களுக்குத் தெரிந்தன. பஸ் நிலையத்திலிருந்து வெளியேறும் முன்பே நிறைய மாணவர்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டு விட்டார்கள். "நீ உன் தோழி சிவகாமியின் வீட்டிலாவது பத்மாவின் வீட்டிலாவது போய்த் தங்கிக் கொள்! நேரே ஹாஸ்டலுக்குப் போக வேண்டாம். நான் நாளைக் காலையில் உன்னைச் சந்திக்கிறேன்" என்று சொல்லிக் கண்ணுக்கினியாளை ஒரு ரிக்ஷாவில் அனுப்பி விட்டு மாணவ நண்பர்களோடு தோட்டத் தொழிலாளர் யூனியன் மாடிக்குப் போய்க் கலந்தாலோசித்தான் பாண்டியன். யூனியன் கட்டிட வாயிலில் நாலைந்து சி.ஐ.டி.க்கள் இருந்தார்கள். "பஸ் ஸ்டாண்டிலிருந்தே உன்னை சி.ஐ.டி.க்கள் பின் தொடருகிறார்கள்" என்றான் ஒரு மாணவன். "நானோ நீங்களோ கொலை செய்து விட்டோ, அல்லது கொள்ளை அடித்துவிட்டோ இங்கே வந்து கூடிப் பேசவில்லையே? நமக்கு ஏன் இவ்வளவு பயப்படுகிறார்கள்?" "கொலை செய்பவர்கள், கொள்ளையடிப்பவர்களுக்குக் கூட அவர்கள் பயப்படவில்லை. நல்லவர்களுக்குத் தான் அவர்கள் பயப்படுகிறார்கள். ஒரு மந்தையை ஆள்வது போல் மக்களை ஆள நினைக்கிறார்கள் அவர்கள். மந்தையில் சேராதவர்களைத் துன்புறுத்த அவர்கள் தயங்கமாட்டார்கள்!" "அண்ணாச்சியும், மணவாளனும், யூனியன் செயலாளரும் என்ன பாவம் செய்தார்கள்?" "மந்தையில் சேர மறுத்தார்கள். மந்தைக்கு எதிராகச் செயல்பட்டார்கள். அதுவே போதுமானது." "மனிதர்கள் எப்படி வெறும் மந்தையைப் போல் இருக்க முடியும்?" "இருக்க முடியுமோ முடியாதோ. அவர்களுக்கு ஒரு மந்தை வேண்டும். மக்களை மக்களாக நடத்தி ஆள்வதை விட மந்தையாக நடத்தி ஆள்வது ஒருவேளை அவர்களுக்குச் சுலபமாக இருக்கும் போலிருக்கிறது..." கலந்து பேசிய போது எல்லா மாணவர்களுமே மிகவும் ஆத்திரமாக இருந்தார்கள். அன்றிரவு பாண்டியனும் வேறு நாலைந்து மாணவர்களும் பேராசிரியர் பூதலிங்கத்தைச் சந்திக்கச் சென்றார்கள். அவர் வீட்டு வாசலிலும் கூட சி.ஐ.டி. நடமாட்டம் இருந்தது. "நான் முன்பே உன்னிடம் எச்சரித்தது நினைவிருக்கிறதா பாண்டியன்? இப்படி எல்லாம் கொடுமைகள் நடக்கும் என்பதை முன்பே நான் அனுமானித்திருந்தேன். பட்டமளிப்பு விழா நெருங்க நெருங்க இது அதிகமாகுமே ஒழியக் குறையாது. உணர்ச்சி வசப்பட்டு நீயும் உள்ளே போய் மாட்டிக் கொள்ளாதே! கொஞ்சம் சாதுரியமாக நடந்து கொண்டு அண்ணாச்சியையும், மணவாளனையும், தொழிலாளர் யூனியன் காரியதரிசியையும் முதலில் விடுதலை செய்யப் பாடுபடலாம். அப்புறம் மற்றதைக் கவனிக்கலாம்" என்றார் அவர். பாண்டியனுக்கும் அவர் சொல்வது தான் சரி என்று பட்டது. அவரே, "வி.ஸி.யைப் போய்ச் சந்தித்துப் பேசு! ஆத்திரப்படாமல் நடந்து கொள். அவரைப் பார்க்காமல் புறக்கணித்தீர்களாயின் அவரது கோபம் இன்னும் அதிகமாகும். கைது செய்திருப்பவர்களைப் போலீஸார் விடுதலை செய்யாவிட்டால் பட்டமளிப்பு விழாவின் போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் மல்லிகைப் பந்தலுக்குப் புறப்பட்டு வந்து பெரிய அளவில் போராட நேரிடலாம் என்று அவரிடம் சொல்லிப் பார். வி.சி.யிடமிருந்து அந்த விஷயம் உடனே அமைச்சர் காது வரையில் போகும். 'இவர்களை வெளியே விட்டுவிட்டால் பெரிய போராட்டம் இராது' என்பது போல் நீ சாதுரியமாகப் பேசினால் மறுநாளே விட்டு விடுவார்கள் என்று நினைக்கிறேன். 'சார்ஜ் ஷீட்' கொடுக்கவோ ருசுப்பிக்கவோ ஒரு குற்றமும் இல்லாமல் இவர்களை அதிக நாட்கள் லாக்கப்பில் வைத்திருக்க முடியாது. தானாக விட்டு விடுவார்கள் என்று தான் நாங்கள் கலந்து பேசிய வக்கீல் எங்களிடம் கூறினார். சும்மா மிரட்டுகிறார்கள். இந்த மிரட்டலை மிகவும் கிளெவராகச் சமாளிக்க வேண்டும்" என்று மேலும் கூறினார் பூதலிங்கம். மாணவர்களுக்கு வெளிப்படையாக எந்த உதவியும் செய்ய முடியாமல் இரகசியப் போலீஸார் மூலம் தம்மைக் கண்காணிக்க ஏற்பாடு செய்து விட்ட வி.ஸி.யின் கொடுமை பற்றியும் அவர் மாணவர்களிடம் வருத்தப்பட்டார். மாணவர்களுக்கு அவர் நிலைமை புரிந்தது. 'பட்டமளிப்பு விழா நாளன்று எந்தப் போராட்டமும் நடக்காது' என்பதுபோல் துணைவேந்தரே நம்பும்படி ஒரு நாடகம் நடிக்க மனத்துக்குள்ளே ஒத்திகை பார்த்துக் கொண்டு பாண்டியன் நண்பர்களோடு அன்றிரவே துணைவேந்தர் மாளிகையில் போய் அவரைச் சந்தித்தான். "பீஸ்ஃபுல்லா இருந்து பட்டமளிப்பு விழா நல்லா நடக்க ஒத்துழைக்கணும்னு நீங்களே பல தடவை சொல்லியிருக்கீங்க சார்! இப்ப அதை மறந்து செயல்பட நாங்களும் தயாராயில்லை. நீங்களும் தயாராயிருக்க மாட்டிங்கன்னு எனக்குத் தெரியும். அண்ணாச்சியைக் கைது செய்தது, மணவாளனையும், தொழிலாளர் யூனியன் காரியதரிசியையும் சிறை வைத்திருப்பது எல்லாமாகச் சேர்ந்து மாணவர்கள் மனத்திலே கொதிப்பை உண்டாக்கியிருக்கிறது சார்! அவங்களையெல்லாம் நிபந்தனையின்றி ரிலீஸ் பண்ணாட்டி என்னாலே கூட நிலைமையைக் கண்ட்ரோல் பண்ண முடியாது." துணைவேந்தர் அவன் முகத்தைக் கூர்ந்து கவனித்தார். அப்புறம் கேட்டார்: "ரிலீஸ் பண்ணினால் மட்டும் என்ன ஆகிவிடப் போகுது? மறுபடியும் 'போராட்டம்'னு எல்லாருமாகச் சேர்ந்து என் பேரைச் சொல்லி ஒழிக கோஷம் போட்டுக்கிட்டு நடுரோட்டிலே ஊர்வலம் போவீங்க? அப்படித்தானே?" "அப்படியில்லே சார்! அவங்களை ரிலீஸ் பண்ணாட்டி இது நாடு தழுவிய பெரிய போராட்டமாகி விடுமோ என்று தான் நான் பயப்படுகிறேன்." "நான் எப்பிடி இதிலே தலையிட முடியும்ப்பா? போலீஸ், ஆர்.டி.ஓ. எல்லோருமே பையங்க மேலே ரொம்பக் கோபமாயிருக்காங்க. சும்மா இருக்காமே பசங்க அந்த இராவணசாமியோட பஸ்ஸுக்கு வேறே நெருப்பு வைச்சிருக்காங்களே, அதென்ன நியாயம்?" "பையன்கள் பேரைக் கெடுக்க விஷமிகள் யாராவது அப்படிச் செய்திருக்கலாம் சார்! உங்க ஸ்டூடண்ட் ஆன மிஸ்டர் மணவாளன் எப்படிப்பட்டவர்னு எங்களை விட உங்களுக்கு நன்றாகத் தெரியும் சார்! அவர் அப்படி வன்முறைகளைச் சகித்துக் கொள்கிறவர் இல்லை என்பதை நீங்களே மனசாரத் தெரிஞ்சுக்கிட்டிருந்தும் எங்களை கேட்கிறீங்களே சார்..." "இப்ப நான் என்ன பண்ணனும்கிறே நீ? அதைச் சொல்லு." அவன் மீண்டும் தன் வேண்டுகோளைச் சொன்னான். வி.சி. வேண்டா வெறுப்பாய் ஆர்.டி.ஓ.வுக்கு ஃபோன் செய்வதற்காக டெலிபோனை எடுத்தார். "...பட்டமளிப்பு விழாச் சமயத்திலே பீஸ்ஃபுல்லா இருக்கிறதா அஷ்யூர் பண்றாங்க..." என்றும், "கொஞ்சம் விட்டுப் பிடிக்கலாம்" என்றும் துணைவேந்தர் ஆர்.டி.ஓ.விடம் பேசிய தொனியைக் கேட்ட பின் அவரும் இதில் சர்க்காரின் ஏஜெண்டாக இருப்பது அவர்களுக்குப் பச்சையாகப் புரிந்தது. தங்கள் முன்பு வெளிப்படையாக அவர் ஆர்.டி.ஓ.வுடன் பேசிய பேச்சின் தொனி பாண்டியனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவனும் உடனிருந்த மற்ற மாணவர்களும் துணைவேந்தரின் சுயரூபத்தை அப்போது நன்றாகப் புரிந்து கொண்டார்கள். பூதலிங்கம் சார் செய்து வைத்திருந்த கணிப்பும் அனுமானமும் நூற்றுக்கு நூறு சதவிகிதம் சரியாயிருந்தது. ஆர்.டி.ஓ.விடம் வி.சி. குழைந்த குழைவைப் பார்த்தால் இருவருக்கும் உள்ள நெருக்கத்தை அவர்கள் புரிந்து கொள்ள முடிந்தது. பல்கலைக் கழகம் சம்பந்தமாகப் போலீஸ் எடுக்கும் எந்த நடவடிக்கையும், துணைவேந்தர் கூறும் இரகசிய யோசனையின் பேரில்தான் நடக்கிறது என்பது அப்போது அவர்கள் கண் முன்பே நிரூபணமாகியிருந்தது. பஸ் நிலையத்திலிருந்து தன்னைப் பின் தொடரும் சி.ஐ.டி.க்கள், பூதலிங்கம் சார் வீட்டு முன் உள்ள இரகசியப் போலீஸ் எல்லாமே துணைவேந்தர் யோசனையின் பேரில்தான் என்பது பாண்டியனுக்குப் புரிந்த போது அவன் கோபம் அதிகமாயிற்று. சத்திய வெள்ளம் : முன்னுரை, கதை முகம் 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
நிறைவுரை
|