நாற்பதாவது அத்தியாயம் பட்டமளிப்பு விழா தினத்தன்று அங்கே நடக்க இருப்பதைக் காணச் சூரியனுக்கும் அதிக ஆவலோ என்னவோ, அன்று மல்லிகைப் பந்தலில் மிகவும் விரைவாகவே பொழுது விடிந்து விட்டாற் போலிருந்தது. நகர் எங்கும் மந்திரியை வரவேற்கும் வளைவுகளை நிரப்பியிருந்தார் இராவணசாமி. 'இதயத்தின் இமயமே வருக, தமிழர் தானைத் தலைவனே வருக' என்றெல்லாம் அர்த்தமில்லாத வாசகங்கள் வளைவுகளை அலங்கரித்து எழுதப்பட்டிருந்தன. காலையில் வருவதாகப் பத்திரிகைகளில் செய்தி பிரசுரிக்கச் செய்துவிட்டுக் கறுப்புக் கொடி காட்டுகிறவர்களுக்குப் பயந்து முதல் நாள் இரவு ஒரு மணிக்கே இரகசியமாகப் பல்கலைக் கழக விருந்தினர் மாளிகையில் வந்து காதும் காதும் வைத்தாற் போல் தங்கிவிட்டார் அமைச்சர் கரியமாணிக்கம். ஊர் எல்லையில் காலையில் கறுப்புக்கொடி காட்டத் திரண்டு போய் நின்ற தொழிலாளர் கூட்டமும் மாணவர் கூட்டமும் மந்திரி தங்களை ஏமாற்றிவிட்டு இரவோடு இரவாகவே வந்து சேர்ந்திருக்கிறார் என்று அறிந்ததும் கோபம் அடைந்து வரவேற்பு வளைவுகளைச் சாய்த்துக் கொண்டும், மந்திரிக்கு எதிரான கோஷங்களை முழக்கிக் கொண்டும் பல்கலைக் கழக வாயிலை நோக்கிப் படையெடுத்தது. அந்தச் சமயம் பார்த்து அங்கே காரில் வந்த கவர்னரும், கல்வி அமைச்சரும், வேறு சில அமைச்சர்களும், துணைவேந்தரும் அந்தக் கூட்டத்தில் சிக்கிக் கொள்ள நேர்ந்தது. போலீஸார் அவர்களைச் சிரமப்பட்டுக் கூட்டத்திலிருந்து விலக்கி பல்கலைக் கழகத்துக்கு உள்ளே அனுப்ப வேண்டியதாயிற்று. முதல் நாள் இரவு வரை எதுவுமே நடக்காது என்று நினைத்ததற்கு நேர்மாறாகப் பல்கலைக் கழக எல்லை முழுவதும் பயங்கரமாக மாறி இருந்தது. 'தகுதியற்றவர்களுக்கு டாக்டர் பட்டம் ஒரு கேடா' என்று சுவர்களிலும் தார் ரோட்டிலும் எழுதியிருந்தது. ஓர் இடத்தில் இப்படிக் கூடப் பெரிதாக எழுதியிருந்தார்கள்: 'கீழ்க்கண்ட முகவரியில் ஞானசூன்யங்களுக்கும், கொடுங்கோன்மையாளர்களுக்கும் டாக்டர் பட்டம் மிக மிக மலிவாகக் கிடைக்கும். விவரங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி பின்வருமாறு' என்று எழுதிக் கீழே துணைவேந்தரின் விலாசம் வரையப்பட்டிருந்தது. 'படித்தவர்களுக்கு வேலையில்லை! வேலையற்றவர்களுக்கு எதற்குப் பட்டம்?" என்று ஓரிடத்தில் தார் ரோட்டில் பூதாகாரமான எழுத்துக்களில் எழுதியிருந்தது. பட்டமளிப்பு விழா மண்டபத்துக்குள் போக வேண்டுமானால் அந்தத் தார் ரோடு வழியாகத்தான் கடந்து போயாக வேண்டும். காலை ஏழு மணி முதலே அங்கே படித்துக் கொண்டிருந்த சகல பிரிவு மாணவர்களும் மாணவிகளும் எங்கிருந்தெல்லாமோ பல ஊர்களிலிருந்து பட்டம் பெற வந்திருந்த எல்லா வகை மாணவ, மாணவிகளும் கட்டுப்பாடாகப் பட்டமளிப்பு விழாக் கூடத்தைச் சுற்றி யாரும் உள்ளே நுழையாதபடி கோட்டைச் சுவர் எடுத்தது போல் அணிவகுத்துக் கை கோர்த்தபடி நின்றுவிட்டார்கள். மணவாளனும், பாண்டியனும், மோகன்தாஸும் பட்டமளிப்பு விழாக் கூடத்தின் பிரதான வாயிலருகே நின்று கொண்டிருந்தார்கள். லெனின் தங்கத்துரை குழுவினர் பல புது முறை எதிர்ப்புக்களைச் செய்திருந்தனர். பல்கலைக் கழக மைதானத்தில் இருந்த ஒவ்வொரு மரத்தடியிலும் ஒரு பிராணி தன் கழுத்தில் டாக்டர் என்று எழுதப்பட்ட அட்டையைத் தொங்கவிட்டுக் கொண்டு நிற்கும்படி கட்டப்பட்டிருந்தது. ஒரு மரத்தடியில் எருமை ஒன்று கழுத்தில் 'நான் ஒரு டாக்டர் பட்டம் பெறுகிறேன்' என்ற வாசக அட்டை கட்டப்பட்டு நின்றது. இன்னொரு மரத்தடியில் ஐந்தாறு சொறி நாய்கள் கழுத்தில் இதே வாசகத்துடன் குரைத்துக் கொண்டு நின்றன. வேறொரு மரத்தடியில் ஒரு கழுதை இதே கோலத்தில் நின்றது. அதற்குப் பட்டமளிப்பு விழா உடை கூடப் போர்த்தப்பட்டிருந்தது. எட்டேகால் மணிக்கு முன்பிருந்ததை விட மேலும் லாரி லாரியாக உள்ளே வந்த போலீஸார் இந்த நாய்களையும், கழுதைகளையும் அப்புறப்படுத்தவே அரை மணி நேரம் சிரமப்பட்டு முயல வேண்டியிருந்தது. ஒரு போலீஸ் அதிகாரி வந்து சாமர்த்தியமாக, "இவற்றை எல்லம் செய்தது யார்?" என்று எல்லா மாணவர்களிடமும் கேட்டுப் பார்த்தார். 'தெரியாது' என்று ஒரே பதில் தான் சொல்லி வைத்தாற் போல் எல்லோரிடமிருந்தும் அவருக்குக் கிடைத்தது. சில போலீஸ்காரர்கள் வாளி வாளியாகத் தண்ணீரும் துடைப்பமும் கொண்டு வந்து சுவர்களிலும், தரைகளிலும், மந்திரியைப் பற்றி எழுதியிருந்தவற்றை அழிக்க முயன்று பார்த்தார்கள். சிறிது நேரம் முயன்ற பின் ஒரு வாரம் அழித்தாலும் அழித்து முடிக்க இயலாத அத்தனை இடங்களில் அவை எழுதப்பட்டிருந்ததைக் கண்டு அந்த முயற்சியையும் அவர்கள் கை விட வேண்டியதாயிற்று. மாணவர்கள் பொறுமையாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சரியாக ஒன்பது மணிக்கு ஒரு ஜீப்பில் துணைவேந்தர், ஆனந்தவேலு, இராவணசாமி, ஒரு போலீஸ் அதிகாரி ஆகிய நால்வரும் வந்து பட்டமளிப்பு விழா மண்டப முகப்பை அடையும் சாலையிலே நிறுத்திக் கொண்டு மாணவர்களைக் கலைந்து போகுமாறு வேண்டினர். துணைவேந்தர் 'மெகாபோனை'க் கையில் வைத்துக் கொண்டு, "விரும்புகிறவர்கள் பட்டமளிப்பு விழா மண்டபத்துக்குள் போய் அமருங்கள். விரும்பாதவர்கள் ஹாஸ்டல் அறைகளிலேயே போய் அமைதியாக இருக்கலாம்! இது சந்தைக் கடை அல்ல. பல்கலைக் கழகம் என்பது ஞாபகம் இருக்கட்டும்" என்று கூப்பாடு போட்டவுடன், "இப்படி நீங்கள் கூறும் உவமை எங்களைவிட உங்களுக்குத்தான் நன்றாக ஞாபகம் இருக்க வேண்டும். நீங்கள் தான் இந்தப் பல்கலைக் கழகத்தைச் சந்தைக் கடை ஆக்கியிருக்கிறீர்கள். முதலில் காம்பஸில் குவித்திருக்கும் போலீஸை வெளியேற்றிவிட்டு அப்புறம் பேச வாருங்கள்" என்று மாணவர்கள் பதிலுக்குத் துணைவேந்தரை நோக்கிக் கூப்பாடு போட்டார்கள். "நீங்கள் இப்படி முரண்டு பிடித்தால் விளைவுகள் பயங்கரமாகி விடும்" என்று இராவணசாமி 'மெகாபோனை' வாங்கிப் பேச முற்பட்ட போது நாலைந்து அழுகின தக்காளிகளும், முட்டைகளும் ஜீப்பை நோக்கிப் பறந்ததோடு, "பேசாதே! இது உன் கட்சி அலுவலகமில்லை! பல்கலைக் கழகம். இங்கே வந்து பேச நீ யார்?" என்று கத்தினார்கள் மாணவர்கள். அதைப் பார்த்துத் தாமும் மெகாபோனில் ஏதாவது பேச எண்ணியிருந்த ஆனந்தவேலு பயந்து சும்மா இருந்து விட்டார். ஜீப் உடனே திரும்பி விட்டது. அந்த ஜீப் திரும்பிய பத்து நிமிஷங்களுக்கெல்லாம் நேர் எதிரே இருந்த போஸ்ட் கிராஜுவேட் ஹாஸ்டல் 'புது பிளாக்' மாடியிலிருந்து மாணவர்களை நோக்கிச் சோடா புட்டிகளும், கற்களும் பறந்து வந்தன. சிலருக்கு அடி பட்டது. சிலருக்கு மண்டை உடைந்தது. மணவாளன் போலீஸாரிடம் போய், "அந்த மாடியில் யாரோ கட்சி ஆட்கள் ஒளிந்திருந்து மாணவர்கள் மேல் சோடா பாட்டில்களையும், கற்களையும் எறிகிறார்கள். நீங்கள் உடனே போய் அவர்களைத் தடுக்காவிட்டால் மாணவர்கள் அங்கே பதிலுக்கு ஓடிப் போய்த் தாக்குவதை நான் கட்டுப்படுத்த முடியாமற் போய்விடும் தயவு செய்து..." என்று கெஞ்சினார். "நோ நோ... ஹௌ இஸ் இட் பாஸிபிள்...? அந்தப் 'பிளாக்'கில் கான்வகேஷனுக்கு வந்திருக்கிற வி.ஐ.பி.ஸ்லாம் 'கெஸ்டா' தங்கியிருக்காங்க. அங்கே நாங்க போக முடியாது" என்று போலீஸ் அதிகாரி மறுத்துவிட்டார். மணவாளனால் மாணவர்களைக் கட்டுப்படுத்த முடியாத அளவு பலர் சோடா பாட்டில் வீச்சிலும், கல்வீச்சிலும் காயமடைந்து விழவே, லெனின் தங்கத்துரை ஒரு நானூறு ஐந்நூறு மாணவர்களோடு அங்கே விரைய முற்பட்டார். உடனே போலீஸார் ஓடி வந்து அந்த 'ஹாஸ்டல் பிளாக்கில்' மாணவர்கள் நுழைய முடியாதபடி வியூகம் வகுத்துத் தடுத்துக் கொண்டு நின்றனர். மாணவர்களுக்கு ஆத்திரம் மூண்டது. கல்லையும் சோடா பாட்டில்களையும் எறிபவர்களைத் தாங்களே பிடிக்கவும் முயலாமல் மாணவர்களே தற்காப்புக்காக அவர்களை எதிர்த்துப் போரிட்டுப் பிடிக்கவும் விடாமல் போலீஸார் ரவுடிகளைப் பாதுகாக்கிறார்களோ என்று தோன்றியதும் மாணவர்களுக்கும் போலீஸாருக்கும் போர் மூண்டது. எச்சரிக்கை கூட இல்லாமல் உடனே லத்தி சார்ஜுக்கு ஆர்டர் கொடுத்தார் ஒரு போலீஸ் அதிகாரி. முழங்காலுக்குக் கீழே அடிக்க வேண்டும் என்ற வரையறை கூட இல்லாமல் காட்டு மிராண்டித் தனமாக மூக்கு முகம் பாராமல் அடிகள் விழவே மாணவர்கள் பொறுமை இழந்தனர். போலீஸாரோடு ஹாஸ்டல் புதுக் கட்டிடத்தில் வரவழைத்து வைக்கப்பட்டிருந்த கட்சி முரடர்களும் சேர்ந்து கொள்ளவே மாணவர்கள் விடுதி அறைகளை நோக்கி ஓடினர். போலீஸாரும் விடவில்லை. கட்சி முரடர்களும் விடவில்லை. விடுதி அறைகளிலும் நுழைந்து மாணவர்களைத் துரத்தித் துரத்தித் தாக்கத் தொடங்கினார்கள். சில அறைகளில் புகுந்த கட்சி முரடர்கள் மாணவர்களின் கடிகாரங்கள், ரேடியோக்கள், விலை உயர்ந்த உடைகள் துணிமணிகளைக் கூடச் சூறையாட ஆரம்பிக்கவே மாணவர்களும் பதிலுக்குத் தாக்க வேண்டியதாயிற்று. மாணவிகளைப் பத்திரமாகப் பட்டமளிப்பு விழா மண்டபத்தருகே சேர்ந்து இருக்கச் செய்து விட்டு மணவாளன், பாண்டியன் முதலியவர்கள் துணைவேந்தர் அறையை நோக்கி விரைந்தார்கள். அங்கே துணைவேந்தர், ஆர்.டி.ஓ., இராவணசாமி, ஆனந்தவேலு எல்லாரும் உட்கார்ந்து எந்தக் கவலையும் இல்லாதவர்கள் போல் பேசிக் கொண்டிருந்தார்கள். சோடா பாட்டில் வீச்சில் மண்டை உடைந்த ஒரு மாணவனைக் கூப்பிட்டுக் காட்டி, "நாங்கள் அமைதியாகத்தான் எங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க விரும்பினோம்! ஆனால் நீங்கள் போலீஸையும், கட்சி ஆட்களையும் விட்டு எங்களைக் கொடுமைப் படுத்துகிறீர்கள். எங்கள் மாணவத் தோழர்கள் இரத்தம் சிந்துவதை நாங்கள் இனியும் பொறுமையாகப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. போலீஸையும், கட்சிக் குண்டர்களையும் உடனே இங்கிருந்து வெளியே அனுப்புகிறீர்களா, இல்லையா?" என்று பாண்டியனும், மணவாளனும் கேட்டதற்குத் தான் உடனே பதில் சொல்லாமல் அருகருகே அமர்ந்திருந்த ஆர்.டி.ஓ.வையும், ஆனந்தவேலுவையும் மாறி மாறிப் பார்த்தார் துணைவேந்தர். "இந்த யுனிவர்ஸிடிக்கு நீங்க தானே சார் துணைவேந்தராயிருக்கீங்க? அவங்களை ஏன் பார்க்கிறீங்க? பதில் சொல்றீங்களா? அல்லது டாக்டர் பட்டத்துக்குக் காத்திருக்கும் மினிஸ்ட்ரையே இப்போது நாங்கள் போய்ச் சந்திக்கவா?" "நீங்கள் அங்கே போக முடியாது. போகக் கூடாது..." "போகிறோமா இல்லையா என்று தான் பாருங்களேன்..." என்று இரைந்து விட்டுத் திரும்பினார்கள் மாணவர்கள். உடனே ஆர்.டி.ஓ. ஃபோனைக் கையில் எடுப்பதைத் திரும்பும் போது மாணவர்கள் பார்த்தார்கள். அதிகார துஷ்பிரயோகம் கண் முன்னாலேயே தெரிந்தது. ஹாஸ்டல் அறைகளில் அடிபட்டுக் கொண்டிருந்த மாணவர்களின் அலறலும், கதறலும், ஓலங்களும் பல்கலைக் கழக எல்லை முழுவதும் எதிரொலித்தன. ஒரு போர்க்களம் போல் ஆகியிருந்தது பல்கலைக் கழகம். மைதானத்தில் இருந்த மாணவர்களும் துணைவேந்தர் அறைக்குப் போய்க் கேட்டு விட்டுத் திரும்பிய மாணவர்களும் சேர்ந்து நேரே பல்கலைக் கழக விருந்தினர் விடுதியை நோக்கிப் படையெடுத்தார்கள். விருந்தினர் விடுதி வாசலில் அடிக்கொரு போலீஸ்காரர் வீதம் துப்பாக்கி ஏந்தி நின்றார்கள். முன்னால் நின்ற ஒரு போலீஸ் அதிகாரி எச்சரித்தார்:- "நீங்கள் உள்ளே புக முயன்றால் சுடச்சொல்லி ஆர்.டி.ஓ.வின் உத்தரவு." மாணவர்களில் சிலர் ஆத்திரத்தோடு, 'என்னைச் சுடு' என்று சட்டையைக் கிழித்து நெஞ்சைத் திறந்து காட்டிக் கொண்டு முன்னேறிய போது மணவாளனும் பாண்டியனும் ஓடி வந்து தடுத்தனர். இல்லாவிட்டால் சில உயிர்கள் அப்போது அங்கே பறியோயிருக்கும். மாணவர்கள் உரத்த குரலில், "ஒரு பட்டத்துக்காக ஊரையே கொல்லும் மந்திரியே வெளியே வா" என்று கூப்பாடு போடவே - கூப்பாடு பொறுக்காமல் என்னவென்று பார்ப்பதற்காக அதே விருந்தினர் மாளிகையின் மற்றோர் அறையில் தங்கியிருந்த கவர்னர் வெளியே வந்தார். மாணவர்களை நோக்கி நடக்கத் தொடங்கிய அவரைப் போலீஸ் அதிகாரி தடுத்தும் கேளாமல் மாணவர்களை நெருங்கி வந்தார் அவர். மாணவர்களை அவருடைய அன்பான முகம் வசீகரித்தது. அருகே வ்ந்து மணவாளனோடு கைகுலுக்கிவிட்டு, "கேன் ஐ டூ எனிதிங் ஃபார் யூ? ஐ யாம் யுவர் ஃபிரண்ட்... பிலீவ் மீ... அண்ட் டெல் மி யுவர் க்ரீவன்ஸஸ்" என்று அவர் வினவிய அன்பான தோறணை மணவாளனுக்கு மிகவும் ஆறுதலளித்தது. மணவாளன் தங்கள் குறைகளையும், அமைச்சர் கரியமாணிக்கத்துக்கு டாக்டர் பட்டம் அளிப்பதில் உள்ள சூழ்ச்சிகளையும் அப்போது அங்கு மாணவர்கள் தாக்கப்படுவதையும் ஆங்கிலத்தில் விவரித்தார். கவர்னர் சிரித்துக் கொண்டே எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, "ஹௌ கேன் ஐ ப்ரிவெண்ட் திஸ்... ஐயாம் ஆல்ஸோ ஹெல்ப் லெஸ்... லைக் யூ... ஐயாம் ஒன்லி எ கவர்னர் ஆஃப் தி ஸ்டேட்" என்றார். "நாட் ஒன்லி தட்.. யூ ஆர் ஆல்ஸோ தி சான்ஸலர் ஆஃப் திஸ் யுனிவர்ஸிடி... சார்!" "யெஸ் பட்...!" என்று கூறியபடியே ஏதோ சிந்தித்துக் கொண்டே அவர்களிடம் விடைபெற்று உள்ளே சென்றார் கவர்னர். அவர் ஏதாவது செய்யக்கூடும் என்று மணவாளனுக்கு நம்பிக்கை இருந்தது. மாணவர்களை உடன் அழைத்துக் கொண்டு மீண்டும் பட்டமளிப்பு விழா மண்டபத்தின் அருகே வந்து மண்டபத்தை மறித்துக் கொண்டு நின்றார்கள் அவர்கள். அதற்குள் ஒரு மாணவன் ஓடி வந்து, "யுனிவர்ஸிடி மெடிகல் ஆபீஸர் டாக்டர் பிரசாத் வி.சி.யின் கையாளாக மாறிச் சதி செய்கிறார். இங்கே மைதானத்தில் சோடா புட்டி வீச்சிலும், அறைகளில் போலீஸாரிடமும் அடிபட்ட மாணவர்கள் எப்படி எப்போது எங்கே அடிபட்டு வந்தார்கள் என்று ஆஸ்பத்திரி ரிஜிஸ்தரில் பதிவு செய்யாமலே அவுட் பேஷண்டாகச் சிகிச்சை செய்து உடனுக்கு உடனே வெளியே துரத்துகிறார். பின்னால் நமக்குத்தான் அது கெடுதல். அண்ணன் வந்து உடனே அதைக் கவனிக்கணும்" என்றான். உடனே மணவாளனும் அவரோடு மோகன்தாஸும் அங்கே ஓடினார்கள். ஆஸ்பத்திரி ரிஜிஸ்தரில் சரியாகப் பதிவாகவில்லையானால் நாளைக்குக் கேஸ், நீதி விசாரணை என்று வரும் போது தங்கள் பக்கம் பலமில்லாமல் போகும் என்பதை அவர்கள் அறிந்திருந்த காரணத்தால் உடன் அதைக் கவனிக்க வேண்டியிருந்தது. யுனிவர்ஸிடி மெடிகல் ஆபீஸர் 'பிரசாத்' எப்போதுமே இப்படித்தான். துணைவேந்தருக்கு அடுத்தபடி அங்கே கெட்ட பெயர் எடுத்திருந்தார் அவர். பல சமயங்களில் மாணவர்கள் சிறிது தொலைவு தள்ளி இருந்த மருத்துவக் கல்லூரியோடு சேர்ந்த ஆஸ்பத்திரியை நம்பிப் போவார்களே ஒழியப் பிரசாத்தை நம்பி இங்கே போகமாட்டார்கள். இன்று அவசரத்தில் இங்கே தான் போயாக வேண்டியிருந்தது. பிரசாத் ஒரு முசுடு பிடித்த மனிதர். டாக்டர் பிரசாத்திடம் விவாதம் செய்து அவரை எச்சரித்து அதன் பின் அடிபட்ட மாணவர்களைக் கவனித்து ஆறுதல் கூறிவிட்டு மணவாளனும், மோகன்தாஸும் திரும்பிய போது பகல் பன்னிரண்டு மணி. அதுவரையில் பட்டமளிப்பு விழாவே தொடங்கவில்லை. பட்டமளிப்பு விழா உடையோடும், சாதாரண உடையிலுமாகச் சரிபாதி மாணவர்கள் மைதானத்தில் இருந்தார்கள். மற்றவர்கள் 'புது பிளாக்' ஹாஸ்டல் அறைகளில் வந்து தங்கி மாணவர்களைத் தாக்க முயன்ற கட்சி முரடர்களைத் துரத்திக் கொண்டிருந்தார்கள். 'கவர்னரின் ஆலோசனைப்படி விழாவுக்கு வந்திருந்த சிண்டிகேட் உறுப்பினர்களைக் கூட்டி அவசர முடிவெடுத்து அந்தப் பட்டமளிப்பு விழாவையே இரத்துச் செய்துவிட்டதாகவும் அந்தந்த மாணவர்களுக்குப் பதிவுத் தபால் மூலம் பட்டங்கள் அனுப்பப்படும்' என்றும் பகல் ஒரு மணிக்கு 'மெகாபோனில்' அறிவிக்கப்பட்ட போது மாணவர்கள் ஒரு தீமையைத் தடுத்துவிட்ட திருப்தியோடு கலைந்தனர். கவர்னரைச் சந்தித்து மணவாளன் நன்றி தெரிவிக்கப் போனார். கவர்னர் மறுக்காமல் மணவாளனை அறைக்கு வரச்சொல்லிச் சந்தித்தார். "உங்கள் கையால் பட்டம் பெறுவதையோ உங்கள் உரையைக் கேட்பதிலோ நான் மகிழ்வேன். என் சகாக்களும் மகிழ்வார்கள்! ஆனால் அமைச்சர் கையால் பட்டம் பெறுவதையோ, அவருக்கு டாக்டர் பட்டம் தருவதையோ அவர்கள் எங்களுக்குப் பட்டமளிப்பு உரையாற்றுவதையோ நாங்கள் விரும்பவில்லை" என்று தங்கள் கருத்தை மணவாளன் ஆங்கிலத்தில் கூறிய போது சிரித்துக் கொண்டே பதில் சொல்லாமல் கேட்டார் அவர். மந்திரி கரியமாணிக்கத்தையும் மற்ற அமைச்சர்களையும் கலந்து பேசி இந்தக் கொந்தளிப்பான நிலையில் பட்டமளிப்பு விழா வேண்டாம் என்று தானே அவர்களுக்குச் சொல்லிய பின்பே அதை இரத்துச் செய்ததாக கவர்னர் விவரம் தெரிவித்தார். மாலை மூன்று மணிக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அமைச்சர் கரியமாணிக்கமும், கல்வி அமைச்சரும், மற்ற அமைச்சர்களும் மல்லிகைப் பந்தல் நகரை விட்டே வெளியேறிப் போய் விட்டார்கள். புறப்படு முன் ஆர்.டி.ஓ.வையும், இராவணசாமியையும், துணைவேந்தரையும் கூப்பிட்டு ஏதோ கோபமாய் இரைந்து இரகசியமாகச் சொல்லிவிட்டுப் போனாராம் கரியமாணிக்கம். மாலை நான்கு மணிக்கு கவர்னர் புறப்பட்டுப் போனார். நான்கு மணியிலிருந்து ஆறு மணி வரை பல்கலைக் கழகம் ஓரளவு அமைதியாயிருந்தது. அண்ணாச்சி வந்து மருத்துவமனையில் அடிபட்டுக் கிடந்த மாணவர்களின் தேவைகளைக் கவனித்தார். மணவாளன் பத்திரிகை நிருபர்களுக்கு ஹாஸ்டல் அறைகளைக் காண்பித்து மாணவர்கள் தாக்கப்பட்டதை விவரித்து ரத்தக் கறைகளையும் பார்க்கச் செய்து புகைப்படம் எடுக்க உதவிக் கொண்டிருந்தார். மாணவர்கள் மேல் அதிக அனுதாபமுள்ள ஒரு நிருபர் மட்டும் மணவாளனைத் தனியே அழைத்து, "எல்லாம் இதோடு முடிந்து விட்டது என்று நினைக்காதீர்கள்! பட்டமளிப்பு விழாவைத் தடுத்து தன்னை அவமானப்படுத்தி விட்ட கோபத்தில் மந்திரி போலீஸையும் கட்சி ஆட்களையும் ஆத்திரமூட்டித் தூண்டிவிட்டுப் போயிருக்கிறார். மறுபடியும் அவர்கள் எந்த நிமிஷமும் உங்களைத் தாக்கக்கூடும். ஜாக்கிரதையாக இருங்கள்..." என்று எச்சரித்தார். "யுவசக்தியை வெள்ளமாகப் பெருக்கி நினைத்ததைச் சாதித்துவிட்டீர்கள்! அமைச்சர் கரியமாணிக்கம், இராவணசாமி, ஆனந்தவேலு, வி.சி. எல்லாத் தீயவர்கள் முகத்திலும் கரியைப் பூசி விட்டீர்கள். இதற்கெல்லாம் காரணமான உங்களைப் போன்ற நாலைந்து பேரை எப்படியும் பழிவாங்கத் துடிதுடித்துக் கொண்டிருப்பார்கள்" என்று அந்த நிருபரே மேலும் கூறிவிட்டுப் போனார். பஸ்களிலும், லாரிகளிலும் வந்திருந்த வெளியூர் மாணவர்களைத் திருப்பி அனுப்பிவிட்டு ஹாஸ்டலில் இருந்த மாணவர்களையும் எச்சரிக்கையாக இருக்கச் சொல்லிவிட்டு ஆறு ஆறரை மணி சுமாருக்கு மணவாளன், பாண்டியன், கண்ணுக்கினியாள், லெனின் தங்கத்துரை, மோகன்தாஸ் ஆகிய ஐந்து பேர்களும் அண்ணாச்சி கடைக்குப் போனார்கள். அண்ணாச்சி உடனே எல்லாருக்கும் காப்பி சிற்றுண்டி வரவழைத்துக் கொடுத்துச் சாப்பிடச் சொன்னார். "கடவுள் புண்ணியத்திலே யாருக்கும் உயிர்ச் சேதமில்லே... மாணவர்களைத் தான் கண் மூக்குத் தெரியாமல் அடிச்சுத் தள்ளியிருக்காங்க... அதைவிடக் கொடுமை ஆஸ்பத்திரியிலே டாக்டர் பிரசாத் - சரியாக் கவனிக்காம ஏமாத்தறான்... போய்ப் பார்த்தப்ப எனக்கே கண்ணிலே தண்ணி வந்திடிச்சு..." என்று வருத்தப்பட்டார் அண்ணாச்சி. அவர்கள் சிற்றுண்டி சாப்பிட்டு முடித்துக் காப்பி அருந்திக் கொண்டிருக்கும் போது மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்கக் கத்திக் கொண்டே ஹாஸ்டலிலிருந்து பொன்னையா ஓடி வந்தான். "அண்ணே! ஆபத்து... யுனிவர்ஸிடியிலே போலீஸும் கட்சி ஆட்களும் புகுந்து மாணவர்களை உதைக்கிறாங்க... மெயினை ஆஃப் பண்ணிக் காம்பஸ் பூரா லைட் இல்லாமச் செஞ்சிட்டாங்க... இருட்டிலே ஒண்ணுமே தெரியலே... போலீஸ் லாரி லாரியாப் பையன்களை ஏத்திக் கிட்டுப் போறாங்க... ரூம் கதவை உடைச்சுப் பாண்டியன் அண்ணனோட பெட்டிகிட்டி எல்லாம் தவிடு பொடி ஆக்கிட்டாங்க... நான் தப்பிச்சதே பெரும் பாடு..." என்று கிழிந்த சட்டையும் முழங்கை முழங்கால்களில் சிராய்ந்த இரத்தக் காயமுமாகப் பொன்னையா வந்து நின்ற காட்சியே பார்க்க வருத்தமூட்டுவதாக இருந்தது. பல்கலைக் கழக எல்லைக்குள் விடுதி அறைகளில் நடப்பதைப் பொன்னையா வந்து முறையிட்டதைக் கேட்டவுடன் மாலையில் தம்மிடம் அந்த நிருபர் எச்சரித்ததை நினைத்தார் மணவாளன். உடனே மணவாளனும், லெனின் தங்கத்துரையும், மோகன்தாஸும், பாண்டியனும் துள்ளி எழுந்தார்கள். "நீ எங்கே புறப்படுகிற தம்பீ! நீ உட்காரு... உன் உயிருக்கு உலை வைக்கத்தான் அவங்க ஹாஸ்டல் அறைக் கதவை உடைச்சிருக்காங்க. நீயும், தங்கச்சியும், இங்கேயிருந்து மறுபடியும் நான் சொல்கிறவரை நகரக் கூடாது. ரெண்டு பேரும் உட்காருங்க சொல்றேன்" என்று பாண்டியனையும், கண்ணுக்கினியாளையும் அண்ணாச்சி கண்டித்து உட்கார வைத்துவிட்டார். ஏதோ கூற வாயெடுத்த பாண்டியனை மணவாளனே, "அண்ணாச்சி சொல்றபடி கேளு! நீயும் தங்கச்சியும் வெளியே எங்கேயும் வரவேண்டாம் பாண்டியன்!" என்று தடுத்துவிட்டார். "மணவாளன்! நீங்க சும்மா போகறதுலே பிரயோசனமில்லே. யூனியன் வாசல்லே போயி கொஞ்சம் ஆளுங்களோட போங்க... இங்கேயும் கொஞ்சம் பேரை அனுப்பிட்டுப் போங்க..." என்றார் அண்ணாச்சி. "நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்க பாண்டியனையும் தங்கச்சியையும் கவனிச்சுக்குங்க" என்று கூறிவிட்டு உடன் இருந்தவர்களுடன் விரைந்தார் மணவாளன். "ஹாஸ்டல் மாணவர்கள் உடனே விடுதி அறைகளைக் காலி செய்யணும்'னு போலீஸ் வானிலிருந்து 'மெகாபோன்' மூலமா அறிவிச்சிக்கிட்டிருக்கறப்பவே லைட் எல்லாம் போயிடிச்சு. உடனே புகுந்து உதைக்க ஆரம்பிச்சிட்டாங்க. வந்த ஆட்கள் குடிவெறியிலே இருக்காங்க. அகப்பட்ட மாணவர்களை எல்லாம் போலீஸ் வேற அடிச்சு உதைச்சு லாரியிலே ஏத்திக்கிட்டிருக்காங்க...! யாரிட்டவாவது புகார் செய்யலாம்னா வி.சி.யை வீட்டிலேயும் காணலே, ஆபீஸிலேயும் காணலே. சீஃப் வார்டனை ஆளையே காணோம்" என்று போகும் போது மேலும் நண்பர்களிடம் விவரித்தான் பொன்னையா. அவர்கள் நால்வரும் நேரே பல்கலைக் கழகத்துக்குப் போகவில்லை. ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்குப் போனார்கள். ஆர்.டி.ஓ. அங்கே இல்லை. வீட்டில் இருப்பதாகச் சொன்னார்கள். வீட்டுக்குப் போனார்கள். ஆர்.டி.ஓ. இருந்தார். "பிரார்ப்பர்ட்டிக்குச் சேதம் வருமோ, நெருப்புக் கிருப்பு வைச்சிடுவாங்களோன்னு மாணவர்களை நினைச்சுப் பயந்து யுனிவர்ஸிடி காம்பஸை உடனே காலி பண்ணி மாணவர்களை வெளியேற்றும்படி மேலிடத்திலிருந்து ஆர்டர்ஸ் வந்திருக்கு. அதனாலே எங்க டூட்டியை நாங்க செய்றோம்..." என்றார் அவர். "அரிவால், கடப்பாரை, கம்புகளோட இராவணசாமி அனுப்பின முரடங்க புகுந்து பையன்களை மிரட்டிக்கிட்டிருக்காங்க சார்! நீங்களா அதை அடக்குங்க. இல்லாட்டி நாங்களாவது அடக்கணும்" என்று லெனின் தங்கத்துரை இரைந்த போது, "அப்படி எங்களுக்குத் தகவல் எதுவுமே இல்லியே!" என்றார் ஆர்.டி.ஓ. "இதோ சட்டை கிழிஞ்ச, கை கால்களிலே இரத்த காயத்தோடு வந்திருக்கிற இந்தப் பையனைப் பார்த்தாவது அந்தத் தகவலை தெரிஞ்சுக்குங்க..." என்று உடனிருந்த பொன்னையாவை இழுத்து அவர் முன் நிறுத்தினார் மணவாளன். "நான் கவனிக்கிறேன். நீங்க சொல்றதை அப்படியே நம்பிட முடியுமா?" என்று அவர்களைப் போகச் சொல்லாத குறையாக எழுந்து கை கூப்பிக் கொண்டே உள்ளே போய்விட்டார் ஆர்.டி.ஓ. நியாய உணர்ச்சியற்றவர்களின் கையில் அதிகாரம் இருப்பது என்பது மக்களுக்கு வழிப்பறிக் கொள்ளையை விடவும் கொடுமையான துயரங்களைத் தரக்கூடியதாக முடிந்து விடும் என்பதற்கு அந்த ஆர்.டி.ஓ. நிதர்சனமாயிருந்தார். அவரை நம்பிப் பயனில்லை என்பது புரிந்ததும் தொழிலாளர் யூனியன் அலுவலக வாயிலுக்குப் போனார்கள் அவர்கள். போலீஸ் லாரிகளிலும், வேன்களிலும் ஏற்றி மாணவர்களைத் தோன்றிய திசையில் வேறு வேறு பகுதிகளிலும் ஐந்து மைல் பத்து மைல் தள்ளிக் கொண்டு போய் இறக்கி விட்டு விட்டு வருவதாக அங்கே சொன்னார்கள். மாணவர்கள் ஒன்று சேர முடியாமல் செய்ய இந்த முறையைப் போலீஸார் கடைப்பிடிப்பதாகத் தெரிந்தது. தோட்டத் தொழிலாளர் யூனியனிலிருந்தும், விடுதியில் வசிக்காமல் நகரில் வசிக்கும் உள்ளூர் மாணவர்களிலிருந்தும் பலரைத் திரட்டி கொண்டு மணவாளனும் மற்றவர்களும் போன போது பல்கலைக் கழகம் இருண்டு கிடந்தது. ஸ்டாஃப் குவார்ட்டர்ஸ் பகுதியில் மட்டும் மெழுகு வர்த்திகள் 'மினுக் மினுக்' என்று எரிந்து கொண்டிருந்தன. அங்கே விசாரித்ததில் சுமார் நானூறு ஐந்நூறு பேர்கள் அடங்கிய ஒரு பெரிய முரட்டுக் கூட்டம் பயங்கர ஆயுதங்களோடு உள்ளே நுழைந்து மாணவர்களைத் தாக்க முயன்றதாகச் சொன்னார்கள். போலீஸார் வந்த பின்னும் அந்தக் கூட்டத்தை அவர்கள் தடுக்கவில்லை என்று சில மாணவர்கள் அறிவித்த தகவல்களிலிருந்து தெரிந்தது. காடு மேடுகளிலும், இருட்டிலும் இறக்கிவிடப்பட்ட மாணவர்களை மீட்டு அழைத்து வர யூனியன் அலுவலகம் மூலம் ஒரு லாரி பேசி ஏற்பாடு செய்து கொண்டு உடனிருந்தவர்களோடு புறப்பட்டார் மணவாளன். நல்ல வேளையாக மல்லிகைப் பந்தல் நகரிலிருந்து வெளியேறும் சாலைகள் இரண்டைத் தவிர வேறு இல்லை. அந்த இரண்டு சாலைகளிலும் தான் பல இடங்களில் மாணவர்கள் மாற்றி மாற்றி இறக்கி விடப்பட்டிருப்பார்கள் என்று அனுமானித்துக் கொண்டு அவர்களைத் தேடிக் கொண்டு சென்றார்கள் மணவாளன் முதலியவர்கள். சத்திய வெள்ளம் : முன்னுரை, கதை முகம் 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
நிறைவுரை
|