நாற்பத்து ஒன்றாவது அத்தியாயம் இரவு எட்டு மணி சுமாருக்குப் பாண்டியனுக்கு வேண்டியவனான 'யுனிவர்ஸிடி ஹாஸ்டல் வாட்டர் பாய்' ஒருவன் வந்து அண்ணாச்சிக் கடையில் முன்னெச்சரிக்கை செய்துவிட்டுப் போனான். தமக்கு அங்கே டாக்டர் விருது தரப்படுவதற்கு இருந்த பட்டமளிப்பு விழா, மாணவர்கள் கலவரம் காரணமாக நடைபெற முடியாமற் போனதால் ஏமாற்ற மடைந்த அமைச்சர் கரியமாணிக்கம் போகிற போக்கில் தம்மைச் சந்திக்க வந்த பத்திரிகை நிருபர்களிடம், "மல்லிகைப் பந்தலில் என் உயிரைப் பறிக்கச் சதி நடந்தது. மயிரிழையில் உயிர் தப்பினேன்" என்பது போல் நாடகமாடிக் கதை கட்டி விட்டுப் போயிருந்தார். மல்லை இராவணசாமி, கோட்டம் குருசாமி போன்ற கட்சி ஆட்களிடம் ஆத்திரத்தோடு, "இந்தச் சுணைக்காய்ப் பசங்களை அடக்கி ஒடுக்கி வைக்க நாலு ஆட்களைத் தயார் பண்ணி உதைக்க முடியாத நீங்கள்ளாம் என்னய்யா மனுஷன்?" என்றும் அமைச்சர் கோபமாகக் கேட்டு விட்டுப் போனாராம். அதில் ரோஷம் பொத்துக் கொண்டு வந்த காரணத்தால் சாயங்காலத்துக்கு மேலே மீண்டும் நானூறு ஐந்நூறு முரடர்களை வாடகைக்குப் பிடித்துக் கள்ளச்சாராயமும் ஊற்றி வெறி ஏற்றி, "பட்டமளிப்பு விழா நடக்க விடாமல் கலவரம் செய்த மாணவர்களை எங்கே கண்டாலும் விடாதீர்கள். புகுந்து உதையுங்கள். போலீஸ் உங்களை ஒன்றும் செய்யாமல் நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று அரிவாளும், சூரிக் கத்தியும், கம்பும், கடப்பாறையும், சைக்கிள் செயினும், சவுக்குக் கட்டையுமாக அந்தத் தடியர் கூட்டத்தை விரட்டியிருந்தார் இராவணசாமி. "பாண்டியன் அண்ணனை அறையிலே காணாததால் ஏமாற்றம் அடைந்திருக்கும் அந்தக் கூட்டம் நேரே இங்கே உங்க கடைக்குத்தான் தேடி வரும். கவனமாக இருங்க அண்ணாச்சி! பாண்டியன் அண்ணனையும் கண்ணுக்கினியாளையும் வெளியே எங்கேயும் போக விட்டுடாதீங்க. முரடங்க வெறி பிடிச்சுத் தேடிக்கிட்டு அலையறாங்க..." என்று சொல்லி அந்த யுனிவர்ஸிடி வாட்டர்பாய் எச்சரித்துவிட்டுப் போயிருந்ததை நினைவு கூர்ந்தார் அண்ணாச்சி. எதற்கும் இருக்கட்டும் என்று எதிர் வரிசையிலிருந்த மருந்துக் கடைக்குப் போய், போலீசுக்கும் அண்ணாச்சி ஃபோன் செய்துவிட்டு வந்தார். ஃபோனில் எதிர்ப்புறம் கிடைத்த பதிலிலிருந்து போலீஸ் உதவி கிடைக்கும் என்று தோன்றவில்லை. அண்ணாச்சி அவசரம் அவசரமாக ஹோட்டலுக்குப் பையனை அனுப்பி இரவு உணவுக்கு இட்டிலி வாங்கி வரச் சொல்லி வைத்துக் கொண்டார். அப்புறம் முடியுமோ முடியாதோ என்னும் எண்ணத்தில் பாண்டியனுக்கும் கண்ணுக்கினியாளுக்கும் தமக்கும் பயன்படும் என்ற நோக்கத்தோடு முன் ஜாக்கிரதையாக இதைச் செய்திருந்தார் அவர். கடையடைக்கும் முன் சாமி படங்களுக்குச் சூட்டியது போக மீதமிருக்கும் மல்லிகைப் பூவை உட்புறமாக நீட்டி, "இந்தா தங்கச்சீ! தலைக்கு வைச்சுக்க" என்று கண்ணுக்கினியாளிடம் கொடுத்தார் அண்ணாச்சி. மெல்ல மெல்லக் கடை வீதி ஆளரவம் அடங்கி மேலும் இருளத் தொடங்கியது. பதற்றத்தினாலும், பயத்தினாலும் ஊர் இருந்த நிலைமைக்கு நடுங்கியும் கடை வீதியில் பலர் முன்னதாகவே கூடக் கடைகளை அடைத்துக் கொண்டு போயிருந்தார்கள். மணவாளனிடம் சொல்லி அனுப்பியிருந்ததனால் தொழிலாளர் யூனியனிலிருந்து ஐம்பது அறுபது பேரை அவர் அனுப்பிவிட்டுப் போவார் என்று எதிர்பார்த்தார் அண்ணாச்சி. ஆனால் அப்படி யாரும் உதவிக்கு வரவில்லை. லாரிகளிலும் வேன்களிலும் ஏற்றி மாணவர்களை ஊர் எல்லையில் ஐந்து மைல் தள்ளி இறக்கி விட்டு விட்டு வந்த போலீஸ் கொடுமையினால் மாணவர்கள் கடைப்பக்கம் வரவில்லை. அவசர அவசரமாகப் பாண்டியனையும் கண்ணுக்கினியாளையும் ஏதாவது ஒரு நண்பர் வீட்டுக்கு அனுப்பி அங்கே இரகசியமாக இருக்கும்படி செய்து பாதுகாக்கலாமோ என்று அண்ணாச்சிக்குத் தோன்றியது. ஆனால் அப்படிச் செய்வதிலும் ஓர் அபாயம் இருப்பது புரிந்தது. 'கடையிலிருந்து வெளியேறிப் போகும் போது நடுவழியில் அவர்கள் இருவரும் எதிரிகளால் தாக்கப்பட்டால் என்ன செய்வது?' என்ற தயக்கம் வந்த போது எங்கும் போவதை விட அவர்கள் தம் கடையிலிருப்பதே பாதுகாப்பானது என்று முடிவாகத் தோன்றியது அண்ணாச்சிக்கு. கடைப்பையன்களை அனுப்பிய பின் உட்புறமாகத் தாழிட்டு விட்டுக் கண்ணுக்கினியாளும் பாண்டியனும் உட்கார்ந்திருந்த இடத்துக்கு வந்து அவர்களோடு உடன் அமர்ந்து இட்டிலிப் பொட்டலங்களைப் பிரித்தார் அவர். எந்தப் பதற்றமும் இன்றி அவர் நிதானமாயிருந்தது பாண்டியனுக்கு வியப்பளித்தது. "மணவாளன் அண்ணன் ஏன் இன்னும் திரும்பலே? எல்லோரும் வந்தப்புறம் சேர்ந்து சாப்பிடலாமே?" என்றான் பாண்டியன். அவன் குரலில் பதற்றம் மிகுந்திருந்தது. "நாம சாப்பிடலாம்! அண்ணன் வர நேரமாகும்னு தோணுது! தங்கச்சீ! அந்தப் பானையிலேருந்து மூணு கிளாஸ்லே தண்ணி எடுத்து வை..." என்று அண்ணாச்சி சொல்லிக் கொண்டிருக்கும் போதே திடுதிப்பென்று மின்சாரம் போய் விளக்கு அணைந்துவிட்டது. இருட்டிலேயே துழாவி மெழுகு வத்தியும் தீப்பெட்டியும் எடுத்துப் பொருத்தி வைத்தார் அவர். மின்சாரம் தானாகப் போயிருக்காது என்று அண்ணாச்சி சந்தேகப்பட்டார். தெருக்கோடியில் அந்த வீதிக்கான ஃப்யூஸ் கேரியர்கள் அடங்கிய தகரப் பெட்டி இருக்கிறது. அதில் யாராவது விஷமிகள் ஃப்யூஸை எடுத்து விட்டிருக்க வேண்டும் என்று அனுமானிக்க முடிந்தது அண்ணாச்சியால். அப்போதும் அவர் பரபரப்படையவில்லை. இன்னும் அவர் இட்டிலி சாப்பிட்டு முடிக்கவில்லை. கண்ணுக்கினியாள், பாண்டியன் இருவரும் சாப்பிட்டுக் கைகழுவியிருந்தார்கள். அவ்வளவில் கடை முகப்பில் திமுதிமு வென்று கூச்சலும் வெறிக் கூப்பாடுமாக ஆட்கள் ஓடிவரும் ஓசைகள் கேட்டன. "அந்தப் பயல் பாண்டியன் வேறெங்கேயும் போயிருக்க மாட்டான்! இங்கே தான் ஒளிஞ்சிக்கிட்டிருப்பான். தெருவிலே இழுத்தெரிஞ்சு நாயை அடிக்கிற மாதிரி அடிக்கணும்" என்று ஒரு முரட்டுக் குரல் வெளிப்புறம் கத்துவது உள்ளே நன்றாகக் கேட்டது. சில வசைச் சொற்கள் காது கொடுத்துக் கேட்க முடியாதவையாக இருந்தன. "முதல்லே இந்தச் சைக்கிள் கடைக்காரனை உதைக்கணும்! இவன் தான் எல்லாத்துக்கும் காரணம்" என்றொரு வெறிப் பேச்சும் காதில் விழுந்தது. அதையடுத்துக் கடையின் மரக் கதவு உடைபடும் ஓசை கேட்கத் தொடங்கியது. அண்ணாச்சி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு இட்லிப் பொட்டலத்தை மீதத்தோடு அப்படியே ஒரு மூலையில் வைத்தார். உறுதியான குரலில் பாண்டியனை வேண்டினார். "தம்பீ! எது நடந்தாலும் நீயும் தங்கச்சியும் இந்த இடத்தை விட்டு வெளியே வரப்பிடாது. மத்ததை நான் பார்த்துக்கிறேன்" என்று கூறிவிட்டு இன்னொரு காரியமும் செய்தார். "வாங்க ரெண்டு பேரும். இப்படிச் சேர்ந்தே உட்காருங்க" என்று அவங்களை உட்கார வைத்து ஒரு மிகப்பெரிய காலி சாதிக்காய்ப் பெட்டியை எடுத்து அவர்கள் நன்றாக மறையும்படி மூடிக் கவிழ்த்தார். ஒருவர் மூச்சுக் காற்று இன்னொருவர் முகத்தில் உராயும்படி நெருக்கமாக அந்தப் பெட்டியின் உள்ளே கண்ணுக்கினியாளும் பாண்டியனும் அமர்ந்திருந்தனர். அண்ணாச்சி சற்று முன் அவளுக்குக் கொடுத்திருந்த கப்பலூர் மல்லிகைப் பூவின் வாசனை உள்ளே கமகமத்தது. ஆனால் அந்த வாசனையை உணரும் மனநிலையில் அவர்கள் அப்போது இல்லை. பெட்டியிலிருந்த இடுக்கு வழியே பார்த்த போது மெழுகுவர்த்தியைக் கையில் எடுத்துக் கொண்டு அண்ணாச்சி கடை முகப்புக்குப் போவது தெரிந்தது. "அண்ணாச்சி! வெறுங்கையோடு போகாதீர்கள். ஒரு சிலம்புக் கழியையும் எடுத்துக்கிட்டுப் போங்க" என்று பாண்டியன் உள்ளேயிருந்து போட்ட கூப்பாடு அவருக்குக் கேட்கவில்லை. இருளிலும் பயத்திலும் பெட்டிக்குள் கண்ணுக்கினியாள் அவனை ஒட்டினாற் போல் தழுவி உட்கார்ந்திருந்தாள். "பாவம்! நம்மாலே அண்ணாச்சிக்கு ரொம்பச் சிரமம். அவர் சங்கடப்படுகிறார்" என்று அவன் காதருகே கூறினாள் அவள். "நமக்குத்தான் வேதனையாயிருக்கிறது. அவருடைய சுபாவப்படி பிறருக்கு உதவுவதை ஒரு போதும் அவர் சங்கடமாக நினைப்பதில்லை" என்றான் பாண்டியன். "ரொம்பப் பாவமாயிருக்கு! பாதி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே எழுந்திருந்து போயிட்டாரு!" என்று கண்ணுக்கினியாள் துயரம் தோய்ந்த குரலில் அவன் காதருகே கூறினாள். சாதிக்காய்ப் பெட்டியிலிருந்த சிறு துளை வழியே இருளாயிருந்ததனால் அப்போது வெளியே நடப்பதைப் பார்க்கவும் முடியவில்லை. ஒரே கூச்சலும், குழப்பமும், பொருள்கள் உடைபடும் ஓசைகளுமாகக் கிணற்றுக்குள்ளிருந்து கேட்க முடிந்தது போல் கேட்டன. அங்கே முகப்பிலிருந்த மகாத்மா காந்தி படத்தை யாரோ உடைக்க முயல்வதும், "இந்தப் படம் உனக்கென்ன பாவம் செய்தது? இதை நீ உடைக்க விடமாட்டேன்!... என் பிணத்து மேலே ஏறித்தான் இதை நீ உடைக்க முடியும்" என்று அண்ணாச்சி இரைவதும் மெல்லிய குரல்களாக மழுங்கிக் கேட்டன. அப்போது பொறுமை இழந்த நிலையில் "அவரைத் தனியே விட்டு விட்டு நான் இங்கே ஒளிந்திருப்பது கோழைத்தனம். என்னை விடு... நான் போக வேண்டும்" என்று அவள் பிடியிலிருந்து திமிறினான். "கூடாது! கூடவே கூடாது. நீங்கள் போவது அவருக்கு மேலும் இடைஞ்சலாக முடியும். உங்களைப் பார்த்து விட்டால் வந்திருக்கிற குண்டர்களின் கோபம் இன்னும் அதிகமாகும். 'பாண்டியன் இங்கே இல்லை' என்று சத்திய சந்தரான அண்ணாச்சியே உங்களுக்காக உங்களைக் காப்பாற்ற ஒரு பொய் சொல்லியிருக்கிறார். இந்த நிலையில் நீங்கள் அங்கே போய் நிற்பது, அவரையே அவமானப் படுத்துவதற்குச் சமமானது" என்று கூறி அவனைப் போகவிடாமல் இறுகத் தழுவிக் கொண்டாள் கண்ணுக்கினியாள். அவளை மீற முடியாமல் அப்போது அவன் கட்டுப்பட்டான். வெளியே வெறிக் கூச்சல்களும், உடைபடும் ஓசைகளும், வசை மொழிகளும் விநாடிக்கு விநாடி அதிகமாகிக் கொண்டிருந்தன. உள்ளே இருக்கிற சிலம்பக் கழிகளில் ஒன்றை உருவிக் கொண்டு கதவைத் திறந்து வெளியேறி எதிரிகளைச் சூறையாட விரும்பிய பாண்டியனின் கைகளை செயற்பட முடியாமல் கண்ணுக்கினியாள் கட்டிப் போட்டிருந்தாள். ஒரு நிலைமைக்கு மேல் பொறுமை இழந்த பாண்டியன், "போர்க்களங்களில் வீரர்களின் அருகே அவர்கள் மேல் பேரன்பு கொண்ட பெண்கள் இருக்கக் கூடாது என்று முன்னோர்கள் சொல்லியதன் உண்மை அர்த்தம் இப்போது தான் எனக்குப் புரிகிறது" என்று அவளிடம் எரிச்சலுடன் சொன்னான். இங்கே அவன் இப்படிக் கூறிய சில விநாடிகளில் உட் கதவையும் உடைத்துக் கொண்டு குண்டர்கள் புகுந்து விட்டார்கள். அவர்கள் மறைந்திருந்த சாதிக்காய் பெட்டியைச் சுற்றிலும் நடக்கும் காலடி ஓசைகளும், குரல்களும் கேட்டன. சாதிக்காய் பெட்டியின் மேல் கடப்பாறையினால் ஓங்கி ஓர் அடி விழுந்தது. நல்ல வேளையாக அதை வந்தவர்கள் தூக்கிப் பார்க்கவில்லை. யார் செய்த புண்ணியமோ அவர்கள் பிழைத்தார்கள். காலடி ஓசைகள் திரும்பின. உட்புறமிருந்து அவர்கள் போய்விட்டார்கள். சில விநாடிகளுக்குப் பின் கடை முகப்பிலிருந்து, "முருகா! கடவுளே!" என்று அண்ணாச்சியின் குரல் பரிதாபமாக அலறி ஓய்ந்தது. அதையடுத்து ஆட்கள் கலைந்து ஓடுவதும் கூச்சலும் குழப்பமுமாகச் சிறிது நேரம் கழிந்தது. அண்ணாச்சியின் குரல் மறுபடியும் கேட்கவில்லை. அவரை அவர்கள் தங்களோடு இழுத்துக் கொண்டு போயிருப்பார்களோ என்று தோன்றியது பாண்டியனுக்கு. "எனக்குப் பயமாயிருக்கு! 'முருகா கடவுளே' என்று அண்ணாச்சி கதறிய போது என் ரத்தமே உறைஞ்சு போச்சு" என்றாள் கண்ணுக்கினியாள். "அண்ணாச்சி வெளியே போற போது கையிலே ஒரு சிலம்பக் கம்பு கூட எடுத்துக்கிட்டுப் போகலே. கம்பெல்லாம் இங்கே நம்ம சாதிக்காய்ப் பெட்டி ஓரமாத்தான் அடுக்கியிருக்கு. மறுபடியும் வந்து எடுத்தா நம்மைக் காட்டிக் கொடுத்த மாதிரி ஆகுமோன்னு நினைச்சோ என்னமோ அவர் அப்புறம் கூட வந்து இங்கேயிருந்து கம்பை எடுத்ததாகத் தெரியலே. கம்பு கையிலே இருந்தா எத்தினி நூறு பேரானாலும் அவர் பக்கத்திலே நெருங்க முடியாது. இப்ப என்ன ஆச்சுங்கிறதே தெரியலே. 'முருகா'ன்னு கத்தினப்புறம் அவர் குரலே கேட்கலைங்கிறது ஏன்னும் தெரியலே... என்ன ஆனாலும் ஆகட்டும், போய்ப் பார்ப்போம்" என்று சாதிக்காய்ப் பெட்டியைத் தூக்கித் தள்ளி விட்டு அவள் பின் தொடர இருளில் வெளியே விரைந்தான் பாண்டியன். வெளியே ஆளரவமே இல்லை. கடைக் கதவுகள் உடைக்கப்பட்டுச் சூறையாடப்பட்டுப் பண்டங்களும் பாட்டில்களும் தெருவில் சிதறிக் கிடந்தன. கடைக்குள்ளும் வெளியேயும் ஒரே இருளாயிருந்தது. பாண்டியன் மறுபடியும் தட்டுத் தடுமாறு உள்ளே ஓடி அண்ணாச்சியின் படுக்கையான கயிற்றுக் கட்டில் அருகே எப்போதும் ஒரு 'டார்ச்' இருப்பதை நினைவு கூர்ந்து அதைத் தேடித் துழாவி எடுத்து வந்தான். கடை முகப்பில் இருந்த காந்தி படத்தைக் காணவில்லை. மற்றப் படங்களில் சில உடைந்திருந்தன. கீழே அங்கங்கே குருதி சிந்தியிருந்தது. கடையில் ஒரு பொருள் விடாமல் சர்வ நாசமாக்கப்பட்டிருந்தது. அண்ணாச்சியை எங்குமே காணவில்லை. உட்புறமும், முகப்பிலும் 'டார்ச்' ஒளியில் நன்றாகத் தேடிய பின் தெருவுக்கு வந்தார்கள் அவர்கள். கண்ணுக்கினியாள் வாய்விட்டு அழத் தொடங்கியிருந்தாள். பாண்டியனின் விழிகளிலும் நீர் மல்கிவிட்டது. அவர்கள் இருவருக்கும் உடல் காரணம் தெரியாமலே பதறி நடுங்கியது. நெஞ்சு விரைந்து அடித்துக் கொண்டது. டார்ச் ஒளியைப் பாய்ச்சியபடி அவர்கள் தெருவின் நடுப்பகுதிக்குப் போன போது அங்கே கண்ட காட்சி பொறுத்துக் கொள்ள முடியாதபடி கோரமாக இருந்தது. "அண்ணாச்சி!" என்ற கதறல் ஒரே சமயத்தில் அவர்கள் இருவர் தொண்டையிலிருந்தும் எழுந்து வீதியில் எதிரொலித்தது. குருதி உறைந்து ஸ்தம்பித்துப் போய் நின்றார்கள் அவர்கள். அங்கே மகாத்மா காந்தியின் படத்தை நெஞ்சோடு இறுக அணைத்தபடி இரத்த வெள்ளத்தில் கிடந்தார் அண்ணாச்சி. கழுத்தின் முன்புறமும், பிடரியில், தோள்பட்டையில், அடிவயிற்றில், விலாவில் என்று அவர் உடலில் பல இடங்களில் கத்திக்குத்து விழுந்திருந்தது. வெறியேறிய முரடர்கள் அவர் உடலைக் கத்தியால் சல்லடைக் கண்களாகத் துளைத்திருந்தார்கள். கடையை அடைக்குமுன் சாமி படங்களுக்கு மாலை போட்டுக் கும்பிட்டு, திருநீறு பூசிக் குங்குமம் இட்டுக் கொண்ட அண்ணாச்சியின் முகம் அப்போதிருந்தது போலவே பளிச்சென்று இருந்தது. மரண வேதனையை அனுபவித்த ஒரு முகமாக அது தெரியவில்லை. பிறரைக் காப்பதற்காகத் தன்னை அழித்துக் கொண்டுவிட்ட ஒரு யோகி குருதி வெள்ளத்தில் காந்தியடிகளின் படத்தைத் தழுவியபடி படுத்து உறங்குவது போலிருந்தது அந்தக் காட்சி. பாண்டியனின் கையிலிருந்து நடுக்கத்தில் டார்ச் நழுவியது. அப்படியே அந்தப் புனித உடலின் தலைப் பக்கம் அமர்ந்து கைகூப்பிய வண்ணம் மாலை மாலையாகக் கண்ணீர் வடித்தான் அவன். கண்ணுக்கினியாள் கதறி அழத் தொடங்கிவிட்டாள். "ரெண்டு நாட்களுக்கு முன்னே தானே, 'என்னிக்காவது நான் போயிட்டாலும் தொண்டனாகத்தான் போய்ச் சேருவேன். 'தொண்டனாக ஆரம்பிச்சு அதிலே சம்பாதிச்ச புகழை முதலீடு பண்ணித் தலைவனா இறந்தான்னு' என்னைப் பத்தி நான் போனப்புறம் பேச்சு வரப்படாது. என் உயிரைக் காப்பாத்திக்கணும்னு போராடி அதுக்காக நான் சாகமாட்டேன். என்னைத் தவிர மத்தவங்களைக் காப்பாத்த நான் சாகவும் தயாராயிருப்பேன்'னு அச்சானியம் போலப் பேசினாரு. சொன்னபடியே ஆயிடிச்சே" என்று அழுகைக் கிடையே உடைந்த குரலில் கண்ணுக்கினியாள் புலம்பினாள். "அண்ணாச்சி சாகறப்பக் கூட 'ஐயோ! கொல்றானே'ன்னு கதறலே. காந்தி 'ஹே ராம்...' என்று சொல்லிவிட்டுப் போன மாதிரி 'முருகா! கடவுளே'ன்னு சொல்லிவிட்டு உயிரை விட்டிருக்காரு" என்றான் பாண்டியன். கண்ணுக்கினியாள் அவருடைய சாவைப் பொறுக்க முடியாமல் சொன்னாள்: "எங்க நாயினா அடிக்கடி சொல்வாரு, 'பெரிய முனிவர்கள், யோகிகள் எல்லாம் சாகறப்போ சாதாரண ஜனங்களைப் போல் 'ஐயோ அப்பா'ன்னெல்லாம் கதறி வேதனைப்பட்டுச் சாக மாட்டாங்களாம். எப்பவாவது ரொம்ப வேர்க்கறப்போ சட்டையைக் கழற்றிப் போடற மாதிரி உடம்பை விட்டு விட்டு நீங்கிப் போய் விடுவாங்களாம். நம்ம அண்ணாச்சியும் அப்படித் தான் நம்மை விட்டுப் போயிட்டாரு." இரவு பதினோரு மணிக்குப் போலீஸ் வந்தது. நடந்ததை அப்படியே சொல்லும்படி செய்து பாண்டியனிடமும் கண்ணுக்கினியாளிடமும் ஸ்டேட்மெண்ட் கேட்டு எழுதிக் கொண்டார்கள். "எல்லாமே இருட்டில் நடந்திருக்கிறது. யார் கொன்னாங்கன்னு கண்டுபிடிக்கிறது சிரமம்" என்று போலீஸ் அதிகாரிகள் தங்களுக்குள் பேசிக் கொண்டதைக் கேட்டு, "ஒரு கெட்டவரைக் கொன்ற கதிரேசனையும் பிச்சைமுத்துவையும் சுலபமாக இந்தப் போலீஸால் கண்டு பிடித்து விட முடிகிறது. ஆனால் ஒரு நல்லவரைக் கொன்றுவிட்ட பத்துக் கெட்டவர்களை மட்டும் இந்தப் போலீஸால் கண்டுபிடிக்க முடியாமற் போய்விடும்" என்று கண்ணுக்கினியாள் காதருகே கோபமாகச் சொன்னான் பாண்டியன். ஆம்புலன்ஸில் பிரேதத்தைப் பரிசோதனைக்குக் கொண்டு போய்விட்டு வந்தார்கள். பின்னிரவு இரண்டு மணிக்கு மேல் மணவாளனும், மோகன்தாஸும், லெனின் தங்கத்துரையும் மற்ற மாணவர்களும் எங்கிருந்தோ கூட்டமாகத் திரும்பி வந்தார்கள். மணவாளனால் அங்கே கால் தரித்து நிற்கவும் முடியாமல் அவர் உடம்பு நடுங்கியது. பேயறைந்தது போல் நின்றார் அவர். மாணவர்களில் பலர் கண்கலங்கி நின்றார்கள். நேரம் ஆக ஆகச் செய்தி தெரிந்து மாணவர்களும், தொழிலாளர்களும், நகரப் பொதுமக்களும் வரத் தொடங்கினார்கள். கடை வாசலில் ஒரு மேடை போட்டு அண்ணாச்சி உபயோகித்த கயிற்றுக் கட்டிலில் அவர் சடலத்தைக் கிடத்தினார்கள். எந்த நிலையில் காந்தி படத்தை அணைத்தவாறே அவர் இறந்தாரோ, அந்த நிலையிலேயே கட்டிலில் அவரைப் படுக்க வைத்திருந்தார்கள். நடுங்கும் கைகளால் ஒரு மூவர்ணக் கதர் நூல் மாலையை முதலில் அவர் கழுத்தில் சூட்டினார் மணவாளன். அடுத்துப் பாண்டியன், கண்ணுக்கினியாள், லெனின் தங்கத்துரை, பொன்னையா, மோகன்தாஸ் ஒவ்வொருவரும் மாலை சூட்டினார்கள். தோட்டத் தொழிலாளர் யூனியன் காரியதரிசி ஒரு பெரிய ரோஜாப் பூ மாலையைச் சூட்டினார். பேராசிரியர் பூதலிங்கம் ஒரு சந்தன மாலையை அணிவித்து விட்டு, "பாண்டியன்! அழாதே! நாம் கொடுத்து வைத்தது அவ்வளவு தான்" என்று கூறிவிட்டு நீர் மல்கும் தம்முடைய கண்களைத் துடைத்துக் கொண்டார். "இதற்கெல்லாம் இந்தக் கையாலாகாத வி.ஸி. தான் காரணம்! ஹியர் ஆஃப்டர் ஹி ஹாஸ் நோ ரைட் டு கன்டினியு அஸ் வி.ஸி. இமிடியட்லி ஹி ஷுட் ரிஸைன் அண்ட் கெட் எவே" என்று ஆத்திரமாக இரைந்தார் ஜுவாலஜி பேராசிரியர் தங்கராஜ். அப்போது அருங்காலை மூன்றரை மணி இருக்கும். குளிரைப் பொருட்படுத்தாமல் பெருங்கூட்டம் அங்கே காத்திருந்தது. விடிந்ததும் கூட்டம் இன்னும் அதிகமாகியது. "இந்தப் பல்கலைக் கழகத்தின் காவல் தெய்வம் போய்விட்டது. கோவில் தான் மீதம் இருக்கிறது" என்றார் உள்ளூர் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஒருவர். பல்கலைக் கழகத்தின் எல்லாப் பிரிவு மாணவர்களும் பிறருமாக அங்கே கூடியிருந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொதிப்படையாமல் அமைதியோடு இருக்கச் செய்ய மணவாளனும் பாண்டியனும் பெருமுயற்சி செய்ய வேண்டியிருந்தது. "சத்திய அவதாரமான மகாத்மா காந்தியின் படத்தை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு இறந்து போன ஒருவருக்கு நாம் மரியாதை செய்வதில் அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். பழி வாங்குவதோ, வன்மம் தீர்ப்பதோ இறந்தவருக்கு நன்றி செலுத்துவதாகாது" என்று துடிதுடிப்போடு ஆத்திரம் அடைந்திருந்த ஒவ்வொரு மாணவனையும் கைகளைப் பற்றிக் கொண்டு உருக்கமாக வேண்டிக் கெஞ்சினார் மணவாளன். இரவே கொடுத்திருந்த தந்தி கிடைத்து மணவாளனின் தந்தை, கண்ணுக்கினியாளின் தந்தை, வேறு சில தேசியத் தலைவர்கள் எல்லோருமாக ஒரு கார் ஏற்பாடு செய்து கொண்டு மதுரையிலிருந்து காலை எட்டு மணி சுமாருக்கு மல்லிகைப் பந்தலுக்கு வந்து சேர்ந்து விட்டார்கள். பத்து மணிக்கு அண்ணாச்சியின் அந்திம யாத்திரை தொடங்கியது. கறுப்புச் சின்னமணிந்த மாணவர்களும், ஆசிரியர்களும், தலைவர்களும், தொழிலாளர்களும், நகர மக்களும் பின் தொடர்ந்தனர். ஆறு பர்லாங் நீளம் சென்ற அமைதியான ஊர்வலம் மயானத்தை அடையப் பகல் ஒரு மணி ஆயிற்று. "அண்ணாச்சிக்குப் பிள்ளை குட்டிகள் இல்லை! நாங்கள் தான் அவருடைய சொந்தப் பிள்ளைகள்" என்று மணவாளன், பாண்டியன், லெனின் தங்கத்துரை, மோகன்தாஸ் பொன்னையா ஆகிய ஐவரும் அண்ணாச்சியின் சடலத்துக்குத் தீ மூட்டினார்கள். அப்போது கண்ணுக்கினியாள் மூர்ச்சையாகி விழுந்துவிட்டாள். தண்ணீரை முகத்தில் தெளித்து அவளை நினைவுக்குக் கொண்டு வந்தார்கள். சடலத்துக்கு எரியூட்டியதும் அங்கேயே கந்தசாமி நாயுடு தலைமையில் ஓர் அனுதாபக் கூட்டம் நடந்தது. முதலில் மணவாளன் பேசினார்: "மாணவ நண்பர்களே! இன்றோடு இங்கே ஒரு புனிதமான சகாப்தம் முடிந்து போய்விட்டது. தமது தொண்டின் ஆழமும் தியாகத்தின் பரப்பும் தமக்கே தெரியாமல் வாழ்ந்த ஓர் உத்தமத் தொண்டரை நாம் இழந்து விட்டோம். இனி இந்த நாட்டின் எல்லாவிதமான அழுக்குகளையும் கரைத்து அரித்துக் கொண்டு போகும் பரிசுத்தமான சத்திய வெள்ளமாக இளைஞர்கள் பெருக வேண்டும். அந்தச் சத்தியப் பிரவாகத்தில் தான் இங்குள்ள எல்லாக் குறைகளும் தீரும். மாணவ வாழ்க்கை உல்லாசத்துக்காக அல்ல. அண்ணாச்சியின் இலட்சியம் தொண்டு செய்வது. இனி உங்கள் இலட்சியமும் அதுவாக இருக்க வேண்டும். தொண்டனாகவே இறக்க ஆசைப்பட்டார் அவர். அவருடைய ஆசை நிறைவேறிவிட்டது. எதிர்காலத்தில் உங்களுக்கு ஆயிரம் பெரிய தலைவர்கள் கிடைக்கலாம். ஆனால் அண்ணாச்சியைப் போல் இப்படி ஒரு நல்ல தொண்டர் கிடைப்பாரா என்பது சந்தேகம் தான். என்னை மன்னியுங்கள். துயரம் தொண்டையை அடைக்கிறது. இதற்கு மேல் என்னால் எதுவும் இப்போது பேச முடியவில்லை." அடுத்துப் பாண்டியன் பேச எழுந்தான்: "மகாத்மா காந்தி சுடப்பட்டு இறந்த போது 'புதியவன் திரும்பிப் போய் விட்டான்' என்ற தலைப்பில் அன்று நவநீதக் கவி பாடிய கவிதையை இப்போது உங்களுக்குச் சொன்னால் போதும் என்று நினைக்கிறேன். அது இன்று நம்மிடையே இருந்து பிரிந்து விட்ட அண்ணாச்சிக்கும் பொருந்தும்.
காதுகள் இருந்தும் கேளாமல் கண்கள் இருந்தும் பாராமல் வீதிகள் இருந்தும் நடவாமல் விவேகம் இருந்தும் புரியாமல் பேதைகள் நிறைந்த பொதுவினிலே புதியவன் ஒருவன் வந்து நின்றான் சாதிகள் மறைந்த சமதர்மம் சத்தியம் மிகுந்த பொதுத் தொண்டு நீதிகள் அறிந்த பெரு நெஞ்சம் நேர்மைகள் தெரிந்த மரியாதை வேதியர் அறியா மெய்ஞ்ஞானம் மிகவும் மலர்ந்து சிரித்த முகம் யாவையும் இருந்தும் கொன்று விட்டார் யாதும் அறியா மந்தையிலே பூமியிலே வந்தது பிழை என்றே புதியவன் திரும்பிப் போய்விட்டான்." இந்தக் கவிதை மாணவர்களைக் கண்கலங்க வைத்து விட்டது. அடுத்துப் பேச வந்த கண்ணுக்கினியாள் பேச வார்த்தைகள் வராமல் கதறி அழுதபடி "நோ... ஐ காண்ட்..." என்று அப்படியே உட்கார்ந்து விட்டாள். "வீ ஹாவ் லாஸ்ட் ஏ கிரேட்மேன்" என்று தொடங்கிப் பூதலிங்கம் ஆங்கிலத்தில் ஐந்து நிமிஷம் பேசினார். "ஏசு பெருமானைப் பாவிகள் சிலுவையில் அறைந்தது போல் இந்தப் புண்ணிய புருஷனையும் பாவிகள் கொன்று விட்டார்கள்" என்றார் பேராசிரியர் தங்கராஜ். மேலும் பலர் அண்ணாச்சியைப் புகழ்ந்து பேசினார்கள். கடைசியாகப் பேராசிரியர் ஸ்ரீராமன் "கடமையைச் செய்! பலனை எதிர்பாராதே என்னும் கீதாசாரியனின் தத்துவப்படி வாழ்ந்தவர் அண்ணாச்சி" என்று பேசினார். மயானத்திலிருந்து எல்லாரும் திரும்பப் பிற்பகல் மூன்று மணிக்கு மேல் ஆகிவிட்டது. ***** மறுநாள் முதல் மாணவர்கள் பல்கலைக் கழக வகுப்புக்களைப் புறக்கணித்து துணைவேந்தர் பதவி விலகுகிறவரை வேலை நிறுத்தம் என்று அறிவித்தனர். மூன்றாம் நாள் துணைவேந்தர் ராஜிநாமாச் செய்தார். மாணவர்கள் சத்திய வெள்ளமாய்ப் பெருகவே அதற்கு அஞ்சிய அரசாங்கம் ஆர்.டி.ஓ.வையும் சஸ்பெண்ட் செய்தது. இராவணசாமியும், கோட்டம் குருசாமியும் ஊரிலேயே தென்படவில்லை. எங்கோ தலைமறைவாகி ஓடியிருந்தனர். மந்திரிகள் மல்லிகைப் பந்தலுக்கு வரவே பயப்பட்டார்கள். இரண்டு மாதங்கள் கழிந்து நடந்த மல்லிகைப் பந்தல் நகர சபைத் தேர்தலில் இராவணசாமியின் கட்சி ஆட்கள் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. அந்தக் கட்சியினர் சார்பில் நின்ற அனைவரும் டெபாசிட் இழந்தனர். அந்த ஆண்டு பரீட்சைகள் முடிந்து பல்கலைக் கழக விடுமுறைக்காக மூடுவதற்கு முன்பே புதிய துணைவேந்தர் பதவிக்கு வந்தார். விடுமுறை முடிந்து பல்கலைக் கழகம் திறந்த முதல் நாளன்று பழைய அண்ணாச்சி கடை இருந்த இடத்தில் 'அமரர் அண்ணாச்சி தேசீய வாசக சாலை' என்ற பெயரில் ஒரு புதிய நூல் நிலையம் திறக்கப் பட்டது. புதிய துணைவேந்தர் மாணவர்களின் வேண்டுகோளை ஏற்று அந்தத் திறப்பு விழாவுக்குத் தலைமை வகித்தார். புதிய நகரசபைத் தலைவர் அதைத் திறந்து வைத்தார். மணவாளன் நூல் நிலையத்தின் உள்ளே அண்ணாச்சி உருவப் படத்தைத் திறந்து வைத்தார். விழா முடிந்ததும் பாண்டியன், மணவாளன், கண்ணுக்கினியாள் மூவரும் முருகன் கோவிலுக்குப் போனார்கள். குருக்கள் தீபாராதனை செய்து மூவருக்கும் மாலை சூட்டினார். உடனே மணவாளன், "பாண்டியன்! உனக்கு நினைவிருக்கிறதா? பட்டமளிப்பு விழாப் போராட்டத்துக்கு முந்திய தினம் இரவு நீ, நான், தங்கச்சி, அண்ணாச்சி எல்லோருமாக இங்கே சாமி கும்பிட வந்த போது, 'மாலையைக் கழட்டாதீங்க! கொஞ்சம் அப்படியே நில்லுங்க! உங்களைக் கண்குளிர பார்க்கணும் போல் இருக்கு. உங்க கல்யாணத்துக்கு நான் வர முடியாட்டியும் இப்பவே கண் நிறையப் பார்த்துக்கிடுதேன்' என்று பழைய சம்பவத்தை நினைவுபடுத்திய போது பாண்டியனும், கண்ணுக்கினியாளும் கண் கலங்கினார்கள். அப்போது மணவாளன் சொன்னார்: "இங்கே இன்றும் நாளையும் இந்தப் பல்கலைக் கழகம் இருக்கும் நிறைய மாணவர்களும், மாணவிகளும் படிக்க வருவார்கள். ஆனால் நம் தலைமுறையில் நாம் படித்த போது நமக்கு இங்கே ஓர் அண்ணாச்சி கிடைத்தது போல் நாளைப் படிக்க வரப் போகிறவர்களுக்கு இங்கே ஒரு சத்தியமான காவல் தெய்வம் இருக்காது! அந்த வகையில் நாம் தான் பாக்கியசாலிகள் பாண்டியன்!" "அண்ணன் சொல்வது சரிதான்! ஆனால் அண்ணாச்சி ஒரு மனிதர் மட்டுமில்லை. அவர் ஒரு தத்துவம். அந்தத் தத்துவம் என்றும் இங்கே அழியாது. இந்த மலைகளும் அருவிகளும் வானமும் பூமியும் உள்ள வரை இங்கே அதுவும் இருக்கும்" என்று பாண்டியன் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவன் கண்களிலும் கண்ணுக்கினியாள் விழிகளிலும் ஈரம் பளபளத்தது. பேசிக் கொண்டே அவர்கள் கோவிலிலிருந்து திரும்பும் போது மல்லிகைப் பந்தலில் மெல்ல மெல்ல அஸ்தமித்து இரவு தொடங்கியிருந்தது. "இருட்டி விட்டது" என்றாள் கண்ணுக்கினியாள். "மறுபடியும் விடியும்! கவலைப்படாதே!" என்றான் பாண்டியன். சாலையில் அவர்கள் மூவரும் சேர்ந்து நடந்த போது சுகமான குளிர்க் காற்று வீசியது. மரங்கள் அசைந்தாடின. முருகன் கோயில் மணி கணீர் கணீர் என்று கம்பீரமாக ஒலித்தது. வீதி விளக்குகள் தவம் செய்தது போல் பனி மூட்டத்தில் மங்கலாக நின்றன. மலைக் குளிர் மெல்ல மெல்ல உறைக்கத் தொடங்கியது. மணவாளன் முன்னே வேகமாக நடந்து போய் விட்டதால் கண்ணுக்கினியாளும் பாண்டியனும் சற்றே பின் தங்கி நடந்தனர். "ரொம்பக் குளிராயிருக்கு!" "இந்தா இதை அணிந்து கொள்!" என்று தனது உல்லன் கோட்டைக் கழற்றிப் பரிவோடு அவளுக்கு அணிவித்தான் பாண்டியன். அவர்கள் தொடர்ந்து இணையாகப் பாதையில் முன் நோக்கி மேலே நடந்தார்கள். சத்திய வெள்ளம் : முன்னுரை, கதை முகம் 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
நிறைவுரை
|