ஆறாவது அத்தியாயம் லேக்வியூ ஹோட்டல் முகப்பில் அந்தச் சுகமான குளிர்ந்த மருள் மாலை வேளையில் பாண்டியன் கூறிய இந்த ஒரு வாக்கியத்தினால் விளைந்த மகிழ்ச்சி மயக்கத்திலிருந்து விடுபட்டு மறக்க முடியாமல் அதை நினைத்தே ஏங்கினாள் கண்ணுக்கினியாள். பாண்டியன் உட்புறம் சென்ற பின் யார் யாரோ வந்தார்கள். ரோஜாப்பூவும், கல்கண்டும் எடுத்துக் கொண்டு போனார்கள். அவனோ தான் விளையாட்டாகப் புகழ்ந்து விட்டுப் போன ஒரு வாக்கியத்தினால் அவள் மனத்துக்குள் ரோஜாப்பூவின் மென்மையையும், கல்கண்டின் இனிமையையும் உணரச் செய்திருந்தான். முன்புறம் வரவேற்பு முடிந்து உள்ளே போய் விருந்தில் அமர்ந்த போதும், விருந்து முடிந்த பின்பும் கூட அதை அவளால் மறக்க முடியாமலிருந்தது. சக மாணவிகளிடம் பேசும் போது கூட அவள் இந்த ஞாபகத்திலேயே இருந்தாள். 'இதில் எது கை? எது ரோஜாப்பூ? இரண்டும் ஒரே நிறத்தில் இருப்பதால் புரியவில்லை.' - இந்தத் தொடர்கள் அவளுக்கு மனப்பாடமே ஆகிவிட்டன. பாண்டியன் புகழ்ந்த இந்தப் புகழ்ச்சி இதமான தென்றலைப் போல் அவளுக்குள்ளே புகுந்து வீசிக் கொண்டிருந்தது. முதலில் தேநீர் விருந்து முடிந்ததும் தொடங்கிய பாராட்டுரைக் கூட்டத்திற்குப் பாண்டியன் வரவேற்புரை கூறினான். மல்லிகைப் பந்தல் பல்கலைக் கழகத்தின் எல்லாப் பிரிவு மாணவர்களின் சார்பிலும் ஒவ்வொரு பிரதிநிதிகள் வீதம் மணவாளனைப் பாராட்டிப் பேசினார்கள். நாட்டில் அப்போதிருந்த எல்லா முக்கிய அரசியல் இயக்கங்களின் சாயல்களும் மாணவர்களிடமும் இருந்தன. ஆனால் இதில் அன்பரசன் குழுவினர் மட்டுமே தனி. அவர்கள் அங்கே தென்படவேயில்லை. எல்லாருடைய பாராட்டுரைகளும் முடிந்த பின் மல்லிகைப் பந்தல் நகரத் தேசீய இயக்கத்தின் சார்பில் அண்ணாச்சி மணவாளனுக்கு மாலை சூட்டினார். முடிவில் மணவாளனின் பதிலுரை மிகவும் உருக்கமாக இருந்தது. "இந்த அலாரம் கடிகாரம் உங்களை விழிப்பூட்டவோ நினைவூட்டவோ மணியடித்து ஒலிக்கும் போதெல்லாம் எங்கள் நினைவும் பல்கலைக் கழக நினைவும் உங்களுக்கு வர வேண்டும்" என்று மாணவர்கள் சார்பில் ஓர் அலாரம் கடிகாரத்தை மணவாளனுக்கு வழங்கினான் மோகன்தாஸ். விழா முடிந்ததும் மாணவிகள் அவசர அவசரமாக விடுதிக்குத் திரும்ப வேண்டியிருந்தது. அவர்கள் வழக்கமாகத் திரும்பும் நேரமாகிவிட்டது. எல்லா மாணவர்களும் கூட்டமாக மணவாளனைச் சூழ்ந்து நின்று பேசிக் கொண்டிருந்ததனால் பாண்டியனைக் கண்டுபிடித்துச் சொல்லிக் கொள்ள முடியாமலே சக மாணவிகளோடு விடுதிக்குத் திரும்பினாள் கண்ணுக்கினியாள். பல்கலைக் கழக மாணவர் பேரவைத் தேர்தலில் அவர்களுக்கு வழிகாட்டி உதவுவதற்காக மனவாளனை மேலும் ஓரிரு நாள் மல்லிகைப் பந்தலில் தங்கிவிட்டுப் போகுமாறு வற்புறுத்தினார்கள் மாணவர்கள். மணவாளனும் அதற்கு இணங்கினார். சில காரணங்களை முன்னிட்டுப் பல்கலைக் கழக எல்லைக்குள்ளேயோ விடுதியிலோ அவர் தங்க விரும்பவில்லை. மாணவர்களுக்குச் செலவு வைக்காமல் அண்ணாச்சி கடையிலேயே பின்புறத்து அறையில் தங்கிக் கொள்வதாக மணவாளன் கூறியும் கேட்காமல் அன்றே அப்போதே பிரிவுபசர விருந்து நடந்து முடிந்த லேக்வியூ ஹோட்டலில் மணவாளனுக்கு ஓர் அறை ஏற்பாடு செய்து கொடுத்தார்கள் மாணவர்கள். விருந்து முடிந்ததும் அண்ணாச்சியின் கடைக்குத் திரும்பாமல் அப்படியே ஹோட்டல் அறையில் தங்கினார் மணவாளன். ஒரு மாணவனை அனுப்பித் தம் கடையிலிருந்த மணவாளனின் சூட்கேஸை ஹோட்டலுக்கு எடுத்துவரச் செய்தார் அண்ணாச்சி. ஏற்கெனவே திட்டமிட்டபடி பேரவைத் தேர்தலை நடத்தத் துணைவேந்தர் இணங்கியிருந்ததனால் அதற்காக இன்னும் சில நாட்கள் அவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. 'வேட்பாளர்கள் நாளை மாலை ஏழு மணி வரை மனுக்களைத் திரும்பப் பெறலாம். அதற்கு அடுத்த நாள் வேட்பாளர்களின் முடிவான பெயர்ப் பட்டியல் அறிவிக்கப்படும். அதற்கு அடுத்த நாள் தேர்தல் நடந்து முடியும்.' இந்த நிலைமைகளை எல்லாம் மணவாளனிடம் கலந்து பேசினார்கள் அவர்கள். இரவு உணவையும் லேக்வியூ ஹோட்டலிலேயே முடித்துக் கொண்டு பாண்டியனும், மோகன்தாஸும் விடுதிக்குத் திரும்பும் போது பத்தரை மணிக்கு மேலாகியிருந்தது. நிறைய மாணவர்கள் உடனிருந்ததால் எல்லோருமாகச் சேர்ந்து திரும்பினார்கள். "பாண்டியன்! இந்தத் தேர்தல் முடிகிறவரை நீயும் மோகன்தாஸும், நண்பர்களும் மிகமிகக் கவனமாக இருக்க வேண்டும். எவ்வளவோ ஆபத்துக்கள் வரும். கடந்த சில ஆண்டுகளில் நம் பல்கலைக் கழகத் தேர்தல்கள் பொதுத் தேர்தல்களை விட அபாயகரமானதாயிருக்கிறது" என்று மறுபடியும் அவர்கள் புறப்படும் போதும் எச்சரித்து அனுப்பினார் மணவாளன். "அண்ணனுக்கு என்ன உதவி தேவையானாலும் உடனே எனக்குச் சொல்லி அனுப்பணும்" என்று வேண்டுதலோடு மணவாளனிடம் விடைபெற்றான் பாண்டியன். பல்கலைக் கழக எல்லைக்குள் வந்ததும் மாணவர்கள் அவரவர்கள் விடுதிகளுக்குப் பிரிந்தார்கள். பொன்னையா முன்பே திரும்பி வந்து நன்றாகத் தூங்கி விட்டதால் பாண்டியன் அதிக நேரம் தட்டிய பின்பே அவன் எழுந்து வந்து கதவைத் திறந்தான். குளிர் அடங்க முழுக்கை உல்லன் அங்கியை அணிந்து கொண்டுப் படுத்த சிறிது நேரத்துக்கெல்லாம் பாண்டியனும் நன்றாகத் தூங்கிவிட்டான். காலையிலிருந்து நிறைய அலைந்ததாலும் வெடவெடக்கும் குளிரில் நடந்து வந்து அறையின் உள்ளே கம்பளிப் போர்வைக்குள் உடலை நுழைத்த வெதுவெதுப்பினாலும் உறக்கம் கெஞ்சிக் கொண்டு வந்து அயரச் செய்திருந்தது. அந்தத் தன்னை மறந்த தூக்கத்தில் அவன் ஒரு கனவு கண்டான். நளினமான அந்தக் கனவில் நேரம் வளர்ந்ததே தெரியவில்லை. பேரவைத் தேர்தலில் அவன் வெற்றி பெற்றதைப் பாராட்டி மாணவர்கள் அளிக்கும் ஒரு பாராட்டுத் தேநீர் விருந்தில் மாணவிகள் சார்பில் அவனுக்கு அணிவிக்க ஒரு ரோஜாப்பூ மாலையோடு எதிரே வருகிறாள் கண்ணுக்கினியாள். அப்போது அவள் ஸ்லீவ்லெஸ் அணிந்திருந்ததால் செழுமையான பொன்னிறத் தோள்கள் பச்சை மூங்கிலாய்த் தளதளவென்று மின்னுகின்றன. அந்த வேளையில் அவன் அவளிடம், "கண்ணே! இதில் எது கை? எது ரோஜாப்பூ? இரண்டும் ஒரே நிறத்தில் இருப்பதால் புரியவில்லை!" என்று அதே பழைய வாக்கியத்தினால் வினவுகிறான். ரோஜாப்பூக் கைகள் என்று அவளே ஒரு ரோஜா மாலையாய், மற்றொரு ரோஜா மாலையை வீணே கையில் சுமந்து கொண்டு தன்னெதிரே நிற்பது போல் அவனுக்குத் தோன்றுகிறாள். "மணமும் நிறமும் கவர்ச்சியும் உள்ள ஒரு மாலை இப்படி மற்றொரு மாலையைச் சுமந்து கொண்டு வரலாமா?" "போதும் நிறுத்துங்கள்! உங்களைப் போல கவிகள் அபாயமானவர்கள். வசீகரமான வார்த்தைகளால் எதிரே வருகிறவர்களை நிச்சயமாகத் தங்களுக்கு அடிமைப் படுத்திவிடுகிறார்கள்." "இல்லை! நீ சொல்வது தவறு. ஒவ்வோர் அழகிய பெண்ணுமே ஒரு கவிதைதான். அவளை மீறிய மற்றொரு கவிதையை வெறும் வார்த்தைகளால் உண்டாக்கிவிடப் போவதில்லை." வெளியே அறைக் கதவு பலமாகத் தட்டப்படவே தூக்கமும் கனவும் கலைந்து போயின. இந்த அகாலத்தில் கதவைத் தட்டுவது யாராக இருக்கும் என்ற சந்தேகத்தோடு சுவரில் கையால் துழாவிச் சுவிட்சைப் போட்டான் பாண்டியன். பொன்னையாவும் அப்போதுதான் கட்டிலில் எழுந்து உட்கார்ந்திருந்தான். கைக்கடிகாரத்தை எடுத்துப் பார்த்ததில் மணி மூன்றரை ஆகியிருந்தது. பாண்டியன் உட்புறத் தாழ்ப்பாளை நீக்கி அறைக் கதவைத் திறந்ததும் சில்லென்று மலைக்காற்று ஈர வாடையோடு வந்து முகத்தில் மோதியது. ஹோட்டல் யூனிபாரத்தில் லேக்வியூ ஹோட்டலின் ரூம் பாய் ஒருவன் அறை வாசலில் நின்று கொண்டிருந்தான். "மணவாளன் சார், உங்களை உடனே கூட்டிக் கொண்டு வரச் சொன்னாரு. ஏதோ அவசரமா இன்னிக்குக் காலை அஞ்சு மணி பஸ்ஸுக்கே அவர் மதுரை போகணுமாம்." மல்லிகைப் பந்தலில் இரண்டு மூன்று நாட்கள் தங்கி விட்டுப் போவதாகச் சொல்லிய மணவாளன் உடனே திரும்பும்படி என்ன அவசரம் வந்திருக்க முடியும் என்று பாண்டியன் மனத்தில் சந்தேகம் எழுந்தது. அந்தச் சந்தேகத்தைத் தேடி வந்திருக்கும் ஹோட்டல் ஊழியனிடம் கேட்டுப் பயனில்லை என்பதால் மப்ளரை எடுத்துக் கழுத்தைச் சுற்றி அணிந்து கொண்டு காலில் செருப்பையும் மாட்டிக் கொண்டு பாண்டியன் புறப்பட்டான். "நானும் கூட வரட்டுமா?" என்று உடன் புறப்படத் தயாரான பொன்னையாவை, "வேண்டாம்! நீ தூங்கு பொன்னையா! நான் போய்ப் பார்த்துவிட்டு வந்து விடுகிறேன்" என்று பாண்டியனே தடுத்து விட்டான். பாண்டியனை அனுப்பிவிட்டு அறைக்கதவைத் தாழிட்டு விளக்கை அணைத்த பின் படுக்கையில் சாய்ந்த பொன்னையா விடிந்து ஏழு ஏழரை மணிக்குத்தான் மீண்டும் எழுந்திருந்தான். காலை எட்டு மணிக்குப் பல்கலைக் கழக எல்லையிலேயே வட பகுதியில் இருந்த மருத்துவக் கல்லூரி விடுதியில் ஒரு நண்பனைப் பார்க்கப் போக வேண்டியிருந்தது பொன்னையாவுக்கு. காலை மூன்றரை மணிக்கு மணவாளன் கூப்பிட்டனுப்பிப் புறப்பட்டுச் சென்ற பாண்டியன் இன்னும் அறைக்குத் திரும்பி வந்து சேரவில்லை. போகும்போது பாண்டியன் அறைச் சாவியை எடுத்துச் செல்லவில்லை என்பதை அவனுடைய சாவி படுக்கை மேல் கிடந்ததிலிருந்து புரிந்து கொள்ள முடிந்தது. எதற்கும் அவன் திரும்பி வந்தால் பக்கத்து அறையில் கேட்டு வாங்கிக் கொள்ளட்டும் என்ற எண்ணத்தில் ஒரு சாவியை அங்கே எடுத்துக் கொடுத்துவிட்டு, மற்றொரு சாவியால் அறையைப் பூட்டிக் கொண்டு வெளியே புறப்பட்டான் பொன்னையா. அந்த அதிகாலை வேளையில் மரங்கள் அடர்ந்த பல்கலைக் கழகச் சாலை வழியே மருத்துவக் கல்லூரி விடுதிக்கு நடந்து செல்வது மிகவும் சுகமான அநுபவமாக இருந்தது. வழி நெடுக இருபுறமும் பூங்காக்கள், அளவாகக் கத்தரித்து விடப்பட்ட செடிகள், பூக்கள் என்று கண் கொள்ளாக் காட்சியாயிருந்தது. அந்த வைகறை வேளையில் கட்டிடங்கள், விடுதிகள், மரங்கள், செடி கொடிகள், மலர்கள் எல்லாம் ஆடாமல் அசையாமல் யாரோ தயாராக எடுத்துக் காட்சிக்கு வைத்த வண்ணப் புகைப்படம் போலிருந்தன. ஃபைன் ஆர்ட்ஸ் பிரிவுக் கட்டிடங்களுக்கும், மருத்துவக் கல்லூரிக்கும் நடுவே இருந்த மிகப் பெரிய திறந்த வெளி அரங்கைக் கடந்து சென்ற போது அதே சாலையில் தனக்குச் சிறிது தொலைவு முன்னால் நாலைந்து மாணவர்களோடு மணவாளன் நடந்து போய்க் கொண்டிருப்பதையும் அந்த நாலைந்து பேரில் பாண்டியன் இல்லை என்பதையும் கவனித்தான் பொன்னையா. ஹோட்டல் ஊழியன் வந்து சொன்னது போல் மணவாளன் அவசரமாக மதுரைக்குப் புறப்பட்டுப் போகவில்லை என்று தெரிந்தது. ஒரு வேளை மணவாளனே தம் காரியமாகப் பாண்டியனை வேறெங்காவது அனுப்பியும் வைத்திருக்கக் கூடும் என்று எண்ணியபடி முன்னால் நடந்து போய்க் கொண்டிருந்த அவர்களை எட்டிப் பிடிக்க விரைந்து நடந்தான் பொன்னையா. ஐந்தே நிமிடங்களில் பொன்னையா அவர்களோடு போய்ச் சேர்ந்து கொள்ள முடிந்தது. மணவாளனுக்கும், நண்பர்களுக்கும், வணக்கம் தெரிவித்து விட்டு, அவன் அவர்களோடு சிறிது தொலைவு நடந்தான். திறந்த வெளி அரங்கின் வட கோடியிலிருந்து காவல் கூர்க்காவின் பூத் அருகிலே 'ஆடியோ - விஷுவல்' ஏற்பாட்டின் கீழ் இரண்டு மூன்று தினங்களில் மாணவர்களுக்குக் காட்டப்பட இருந்த ஒரு திரைப்படத்தைப் பற்றிக் கரும் பலகையில் அறிவிப்பு எழுதி வைக்கப்பட்டிருந்தது. அவர்கள் அதைப் படிக்க ஓரிரு கணம் தயங்கி நின்றார்கள். அப்போது பொன்னையா, "நீங்கள் அவசரமாக ஊருக்குப் புறப்படப் போவதாக லேக் வியூ ஹோட்டல் ஆள் வந்து பாண்டியன் அண்ணனை ராத்திரி மூன்றரை மணிக்கே கூப்பிட்டானே? அண்ணன் எங்கே?" என்று மணவாளனைக் கேட்டான். பொன்னையாவின் வார்த்தைகளைக் கேட்டு மணவாளனின் முகத்தில் திகைப்போடு சந்தேகமும் குழப்பமும் நிலவின. "நீ என்ன சொல்கிறாய் பொன்னையா? நான் பாண்டியனை நேற்றிரவு விடைகொடுத்து அனுப்பியதற்கு அப்புறம் பார்க்கவேயில்லையே? நான் அனுப்பியதாக யாரோ வந்து அதிகாலை மூணரை மணிக்குக் கூப்பிட்டதாகச் சொல்கிறாயே, அது யார்?" இதைக் கேட்டுப் பொன்னையா அப்படியே மலைத்துப் போய் நின்றுவிட்டான். உடனே மணவாளனும் மற்ற மாணவர்களும் பரபரப்படைந்து அவசரமாகப் பொன்னையாவிடம் நடந்ததையெல்லாம் விசாரித்தார்கள். அவனும் எல்லாவற்றையும் விவரமாகச் சொன்னான். "நேற்றிரவு நான் எவ்வளவோ எச்சரித்து அனுப்பினேன். அவ்வளவும் பயனற்றுப் போயிற்று. பாண்டியன் ஏமாந்து விட்டான். மோசம் போய்விட்டான். விரோதிகள் அவனுக்காக விரித்த வலையில் சரியாகப் போய் விழுந்து விட்டான்" என்றார் மணவாளன். உடனே தாங்கள் போய்க் கொண்டிருந்த காரியங்களையெல்லாம் விட்டுவிட்டுப் பாண்டியனைத் தேடுவதற்காக விரைந்தார்கள் அவர்கள். மோகன்தாஸின் அறை, அண்ணாச்சி கடை, லேக்வியூ ஹோட்டல், எல்லா இடங்களிலும் தேடியும் விசாரித்தும் ஒரு பயனும் விளையவில்லை. பாண்டியன் எங்கெங்கே போவான், யார் யாரோடு பழகுவான் என்று யோசித்து ஒவ்வோர் இடமாக விசாரித்தும் அவனைப் பற்றி அவ்வப்போது எதுவும் தெரிந்து கொள்ள முடியவில்லை. நண்பர்கள் துணுக்குற்றார்கள். மணவாளன் அதிர்ந்து போய் உட்கார்ந்து விட்டார். "பாண்டியன் எத்தனை பெரிய சாமர்த்தியசாலி என்று நான் நினைத்தேனோ, அத்தனை பெரிய ஏமாளியாக முன்யோசனையின்றிப் போய் மாட்டிக் கொண்டு விட்டான். இவ்வளவுக்கும் இந்தப் பல்கலைக் கழகத்தில், தேர்தலுக்குச் சில நாட்களுக்கு முன்பாக எப்படிப்பட்ட கொடுமைகள் எல்லாம் நடக்க முடியும் என்பது பாண்டியனுக்கு நன்றாகத் தெரியும். இரண்டு வருஷங்களுக்கு முன் முத்துராமலிங்கம் என்ற இருபது வயதுப் பையனை அவன் பேரவைக் கூட்டுச் செயலாளனாகப் போட்டியிட்டவனுக்காகத் தீவிரமாக வேலை செய்தான் என்பதற்காக இரவோடு இரவாக அவனுக்கு வேண்டிய யாரோ கூப்பிட்டு அனுப்புவது போல் அனுப்பி அடித்துக் கொன்று நீச்சல் குளத்தில் தூக்கிப் போட்டுவிட்டார்கள். அப்புறம் துணை வேந்தர், போலீஸ், ஆர்.டி.ஓ. எல்லாருமாகச் சேர்ந்து சதி செய்து, 'வயிற்று வலி பொறுக்க முடியாமல் தண்ணீரில் குதித்து மாணவன் தற்கொலை' என்று உண்மையை மறைத்துப் பத்திரிகைகளில் வேறு விதமாகச் செய்தி வரச் செய்திருந்தார்கள். அதற்கு முந்திய வருஷம் பேரவைத் தேர்தலில் தலைவனாகப் போட்டியிட்ட மாணவனையே கடத்திக் கொண்டு போய் எங்கோ வைத்து விட்டார்கள். அடர்ந்த காடுகளும், உயரமான மலைகளும் சூழ்ந்த மல்லிகைப் பந்தல் பல்கலைக் கழகத்தில் இப்படிக் குழப்பங்களைச் செய்கிறவர்களுக்கு இயற்கையான வசதிகளும் கூட இருக்கின்றன. எல்லாம் தெரிந்தும் பாண்டியன் அவசரப்பட்டு ஏமாந்து விட்டானே? இப்போது அவனை எங்கே என்று தேடுவது? எப்படிக் கண்டுபிடிப்பது?" என்று வருத்தப்பட்டார் மணவாளன். அண்ணாச்சி பொன்னையாவை உடன் அழைத்துக் கொண்டு லேக் வியூ ஹோட்டலுக்குப் போய், அறைப் பையன்கள், ஸர்வர்கள், கிளீனர்கள் எல்லாரையும் ஒவ்வொருவராகக் காட்டி முந்திய நாள் பின்னிரவில் பாண்டியனைக் கூப்பிட்டுக் கொண்டு போக விடுதி அறைக்குத் தேடி வந்த ஆளை அடையாளம் கண்டு பிடிக்க முடியுமா என்று பார்க்கச் சொன்னார். பயனில்லை. பாண்டியனைக் கூப்பிட்டுக் கொண்டு போக வந்த ஆள் மாதிரி அவர்களில் யாரையுமே காண முடியவில்லை. இந்தச் செய்தி அநாவசியமாக வெளியே பரவி விடாமல் காக்க முயன்றார்கள் அவர்கள். காலை பத்து மணி வரை பாண்டியனைப் பற்றி ஒரு தகவலும் தெரியாமலிருந்தது. பத்தரை மணிக்கு மோகன்தாஸும் இன்னும் இரண்டொரு மாணவர்களும் பொன்னையாவும் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய்ப் புகார் கொடுத்துவிட்டு வந்தார்கள். பிரதம தேர்தல் அதிகாரியான பேராசிரியர் பூதலிங்கத்துக்கும் இந்தச் செய்தி தெரிவிக்கப்பட்டது. அவர் இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு மிகவும் வருத்தப்பட்டார். பாண்டியனை எண்ணி மனம் நெகிழ்ந்தார். கண்கலங்கினார். "வாக்குரிமை, ஜனநாயகம் இவை எல்லாம் மன வலிமையும், சகிப்புத்தன்மையும், நிதானமும் உள்ளவர்களின் உயரிய சாதனங்கள். அவை இங்கே வெறும் உடல் வலிமையும், முரட்டுத்தனமும் உள்ளவர்களிடம் சிக்கிக் கொண்டிருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில் இந்த நாட்டில் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் தான் நடக்க முடியும் போலும்" என்று வேதனையோடு சொன்னார் பொருளாதாரப் பேராசிரியர். "போலீசாரை மட்டும் நம்பிச் சும்மா இருந்து விடாதீர்கள்! நீங்களும் ஓரளவு சிரமம் எடுத்துக் கொண்டாவது தேடவேண்டும்" என்று மாணவர்களிடம் சொல்லியனுப்பினார் அவர். "எங்களால் முடிந்த வரை முயன்று தேடிக் கொண்டு தான் இருக்கிறோம் சார்! விவரம் ஏதாவது தெரிந்தால் உடனே உங்களுக்கு தெரிவிக்கிறோம். உங்களுக்கு ஏதாவது தெரிந்தாலும் சொல்லியனுப்புங்கள்" என்று மோகன்தாஸும் மற்றவர்களும் அவரிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டார்கள். அப்போது காலை பதினொன்றே கால் மணி. கடையைப் பார்த்துக் கொள்ளும்படி அண்ணாச்சி வேலைக்காரப் பையன்களிடம் சொல்லி விட்டுப் பொன்னையாவோடு வெளியே புறப்பட்டுப் போனார். லேக்வியூ ஹோட்டல் துணிகளையெல்லாம் மொத்தமாகச் சலவை செய்பவர்கள் ஹில்டாப் டிரை கிளீனர்ஸ் தான் என்று அறிய நேர்ந்தவுடன், "தம்பீ! ஹில்டாப் தங்கப்பன் அந்த அன்பரசன் வகையறா ஆளுங்களுக்கு ரொம்ப வேண்டியவன். வெளுக்கிறதுக்கு வந்த லேக்வியூ ஹோட்டல் யூனிஃபார்மிலே ஒண்ணை எடுத்து எவனோ ஒருத்தனுக்கு மாட்டிவிட்டுப் பாண்டியனைக் கூட்டிக்கிட்டு வர்றதுக்கு அதைப் பயன்படுத்தியிருப்பாங்கன்னு நினைக்கிறேன். உங்களுக்கு என்ன தோணுது?" என்று பொன்னையாவைக் கேட்டார் அண்ணாச்சி. அவரது அநுமானம் சாத்தியமாயிருக்கும் என்றே அவனுக்கும் தோன்றியது. எப்படியோ சாதுரியமாக நினைத்து அந்தச் சிக்கலின் ஒரு நுனியை அவர் கண்டுபிடித்து விட்டதை அவன் வியந்தான். மல்லிகைப் பந்தல் நகரிலிருந்து வெளியேறுகிற இரு பெரிய சாலைகளில் ஒன்று கிழக்கே மல்லிகைப் பந்தல் ரோடு ரயில் நிலையம், மதுரை முதலிய சம நிலத்து ஊர்களுக்காகக் கீழே இறங்குவது. மற்றொன்று மேலே ஏலக்காய், தேயிலை, கோக்கோ எஸ்டேட்டுகள் அடங்கிய மேற்குத் தொடர் மலைகளில் மேற்செல்வது. இந்த இரண்டு சாலைகளிலுமே நகர எல்லைகளில் இருந்த பெட்ரோல் பங்குகள், காட்டிலாகா எக்ஸைஸ் இலாகா செக் போஸ்டுகள் எல்லாவற்றுக்கும் பொன்னையாவோடு போய்ச் சோம்பல் படாமல் தூண்டித் தூண்டி சில விவரங்களை விசாரித்தார் அண்ணாச்சி. மேற்கு மலைச் சாலையில் அதிகாலை நான்கு மணிக்கு அசுர வேகத்தில் வந்த ஒரு லாரியைப் பற்றியும் அதில் பல்கலைக் கழக மாணவர்கள் சிலர் தென்பட்டதைப் பற்றியும் காட்டிலாகா செக்போஸ்ட் ஆள் அண்ணாச்சியிடம் விவரித்த போது அவர் முகம் மலர்ந்தது. 'தென்மணி லாரி செர்வீஸ்' என்ற அந்த லாரியின் பெயரையும் அண்ணாச்சி இரண்டாவது தடவையாகக் கேட்டுக் கொண்டார். அதன் பின்பு, "தம்பீ! வாங்க... இனிமேல் எங்கே தேடணும்னு தெரிஞ்சு போச்சு" என்று பொன்னையாவிடம் கூறிவிட்டு, அவனையும் அழைத்துக் கொண்டு லேக்வியூ ஹோட்டலுக்குத் திரும்பினார் அண்ணாச்சி. மணவாளனின் அறைக்குப் போய்ச் சேர்ந்ததும் அண்ணாச்சியும், பொன்னையாவும் வேறு ஒரு புதிய செய்தியை அங்கே அறிய நேரிட்டது. மணவாளனோடு அங்கே அறையில் இருந்த மோகன்தாஸ் அந்தப் புதிய செய்தியை இவர்களுக்குச் சொன்னான். "அண்ணாச்சி! காலையில் நானும் நண்பர்களும் பாண்டியன் காணாமல் போனதைப் பற்றிப் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்து விட்டு எங்களுடைய பிரதம தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கும் பேராசிரியர் பூதலிங்கத்திடமும் போய் இதைத் தெரிவித்தோம். நாங்கள் அவரிடம் பேசிவிட்டு இங்கே வரும் போது பதினொன்றரை மணி. வந்து ஓர் அறை மணி நேரத்துக்கெல்லாம் மறுபடியும் பகல் பன்னிரண்டு மணி சுமாருக்கு எங்களை அவசரமாகக் கூப்பிட்டனுப்பினார் பேராசிரியர். நானும் நண்பர்களும் உடனே போய் அவரைச் சந்தித்தோம். இங்கேயே உள்ளூரில் தபாலில் போடப்பட்ட பாண்டியனின் கையெழுத்தோடு கூடிய இன்றைய தேதியிட்ட ஒரு கடிதத்தை அவர் எங்களிடம் காட்டினார். அதில் இடம் விலாசம், ஒன்றுமில்லை. மாணவர் பேரவைச் செயலாளர் பதவிக்குப் போட்டியிடுவதிலிருந்து சொந்தக் காரணங்களால் தான் விலகிக் கொள்வதாக எழுதிக் கையெழுத்திட்டிருந்தான் பாண்டியன். யாரோ நிர்ப்பந்தித்துப் பலாத்காரமாக எழுதி வாங்கி அனுப்பிய கடிதம் போலிருந்தது அது. நாங்கள் சந்தேகப்பட்டது போலவே பேராசிரியரும் அந்தக் கடிதத்தைப் பற்றிச் சந்தேகப்படுகிறார். 'எதிரிகளின் அத்தனை மிரட்டலுக்கு நடுவிலும் தந்திரமாக ஒரு காரியம் செய்திருக்கிறான் பாண்டியன். அபேட்சை மனுவிலுள்ள கையெழுத்து எப்படி இருக்க்றதோ அப்படியே கையெழுத்திட்டிருந்தால் தான் விலகல் மனு செல்லுபடியாகும். அபேட்சை மனுவில் எஸ்.சி.பாண்டியன் என்று டி.ஒய்.எ.என். என்னும் ஸ்பெல்லிங்கோடு கையெழுத்துப் போட்டிருந்தவன், இந்த விலகல் மனுக்கடிதத்தில் சி.பாண்டியன் என்று டி.ஐ.எ.என். என்னும் ஸ்பெல்லிங்குடன் கையெழுத்துப் போட்டு எதிரிகளின் சதியைச் சிதற அடித்திருக்கிறான். இந்தச் சாதுரியத்தினால் இன்றிரவுக்குள் அவனை வாபஸ் வாங்கச் செய்து வெற்றிச் செல்வனைப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்க நினைத்தவர்களது எண்ணத்தில் மண் விழுந்திருக்கிறது. ஆனாலும் நாளைக் காலை நோட்டீஸ் போர்டில் இறுதிப் பட்டியல் வெளி வருகிற வரை இது இரகசியமாவே இருக்கட்டும். அவர்கள் நிர்ப்பந்தமாக ஏற்பாடு செய்து அனுப்பிய விலகல் மனுவில் பாண்டியன் இப்படி ஒரு சாதுரியம் புரிந்து தப்பிய விவரம் அவர்களுக்குத் தெரிந்தால் அவனை மேலும் கொடுமைப் படுத்தக் கூடும். ஆகவே அபேட்சகர்கள் பட்டியல் வெளியாகிறவரை உங்களுக்குள்ள அவகாசத்தைப் பயன்படுத்தி எப்படியும் பாண்டியனைத் தேடி மீட்க முயலுங்கள். அவனை இப்படி நயவஞ்சமாகக் கடத்திக் கொண்டு போனவர்கள் இப்படிக் கடத்திக் கொண்டு போய் எதைச் சாதிக்க முயன்றார்களோ, அது பலிக்கவில்லை என்பது அவர்களுக்குத் தெரியும் போது கோபம் இன்னும் அதிகமாகும். அப்படிக் கோபம் அதிகமாகி அவர்கள் பாண்டியனைத் துன்புறுத்த முற்படுவதற்குள் அவனை அவர்களிடமிருந்து நீங்கள் மீட்டுவிட வேண்டும். அதுவரை பாண்டியனின் விலகல் மனுவை நான் ஏற்றுக் கொண்டு விட்டேன் என்று பொய்யாக ஒரு செய்தி பரவினால் கூட அவனுக்கு அது பாதுகாப்பாயிருக்கும். தனிப்பட்ட முறையில் இதை நான் உங்களுக்குக் கூறுகிறேன். உடனே அவனை மீட்க முயலுங்கள்' என்று பேராசிரியர் எங்களிடம் சொல்லி அனுப்பினார். இப்போது இனிமேல் என்ன செய்யலாம் என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும் அண்ணாச்சி!" என்றான் மோகன்தாஸ். "நமக்குத் தெரிந்த விவரங்களை எல்லாமே போலீஸாரிடம் கூறி அவர்கள் உதவியோடு பாண்டியனைத் தேடி மீட்கலாம்" என்றான் ஒரு மாணவன். அது சாத்தியமில்லை என்பதை அண்ணாச்சி, மோகன்தாஸ், மணவாளன் மூவருமே உணர்ந்திருந்ததனால் அவர்கள் அதற்கு இணங்கவில்லை. அவர்கள் இப்படிச் சிந்தித்துக் கொண்டிருந்த போதே எப்படியோ தகவல் தெரிந்து கண்ணுக்கினியாளும், வேறு சில மாணவிகளும் அங்கே வந்துவிட்டார்கள். கண்ணுக்கினியாள் கூறினாள்: "நான் வார்த்தைக்கு வார்த்தை படித்துப் படித்துச் சொல்லி எச்சரித்தேன் அண்ணாச்சி! அவர் கவனக் குறைவாக இருந்ததால் தான் எல்லாமே கெட்டுப் போய்விட்டது" இதைச் சொல்லும் போது அவள் கண்களில் நீர் நெகிழ்ந்து விட்டது. "ஒன்றுமே கெடவில்லை தங்கச்சீ! மணவாளன் கூப்பிடுகிறார்னு பொய் சொல்லித் தூக்கக் கலக்கத்திலே தம்பியை ஏமாத்திட்டாங்க... மணவாளன் மேலிருந்த பிரியத்திலே தம்பி ஏமாந்திடுச்சு. கவலைப்படாமே நீயும் மற்றத் தங்கச்சிகளும் திரும்பிப் போங்க. நாளைப் பொழுது விடியறப்போ தம்பி நம்மோட காப்பி குடிக்க இங்கே இருக்கும். அதுக்கு நானாச்சு" என்று அண்ணாச்சி உறுதி கூறி அவளையும் மற்ற மாணவிகளையும் விடுதிக்குத் திரும்பி அனுப்பினார். அப்புறம் உள்ளூரில் பிரபல வியாபாரிகளில் தேசப்பற்று நிறைந்த ஒருவருக்கு ஃபோன் பண்ணி ஒரு லாரியை வரவழைத்தார். லாரியில் சிலம்பக் கழிகள் பத்துப் பன்னிரண்டு, டார்சு லைட்டுகள் நாலைந்து எல்லாம் வைக்கப்பட்டன. அன்று மாலை ஆறு மணி சுமாருக்கு அண்ணாச்சியும், மோகன்தாஸ், மணவாளன், பொன்னையா முதலிய மாணவர்களும் அந்த லாரியில் மலைப்பகுதிக்குப் புறப்பட்டார்கள். நகர எல்லை கடந்ததும் லாரி டிரைவர் "எங்கே போக வேண்டும்?" என்று கேட்டான். "ப்ளூஹில் கார்டமம் எஸ்டேட்டுக்குப் போ! மெயின் ரோடிலிருந்து எஸ்டேட்டுக்குப் பிரிகிற மலை வழிக்குப் பக்கமாகப் போனதும் மறுபடியும் என்னைக் கேள்" என்று வழி சொன்னார் அண்ணாச்சி. நகர எல்லைக்குப் போய்ச் சேருவதற்குள்ளேயே நன்றாக இருட்டி விட்டது. இப்போதோ இன்னும் சில விநாடிகளிலோ மழை வந்து விடும் போல் மேகங்கள் வானை மூடிக் கருமை குவித்திருந்தன. சாலையின் இரு புறமும் அடர்ந்த காட்டின் பசுமையும் ஈர மணமும் சுகமாயிருந்தன. சிறிது தொலைவு போவதற்குள்ளேயே மழை கொட்டத் தொடங்கிவிட்டது. லாரியின் டிரைவர் ஸீட் அருகே அமர்ந்திருந்த இருவரைத் தவிர மற்ற மாணவர்கள் நனைய நேரிட்டது. நடுவே சாலையில் ஓரிடத்தில் இவர்கள் போய்க் கொண்டிருந்த திசைக்கு எதிர் திசையிலிருந்து 'தென்மணி லாரி செர்வீஸ்' - லாரி ஒன்று விரைந்து வந்தது. மேலே ஏறும் வண்டிகளுக்கு முதலில் வழி விலகி இடம் விட வேண்டும் என்ற முறையையும் மீறி, நிற்காமல் விரைந்து இறங்கிச் சென்றது அந்தத் தென்மணி லாரி. அதில் யார் இருக்கிறார்கள் என்பதை அந்த மழையில் அண்ணாச்சியினால் கவனிக்க முடியவில்லை. மேலும் பதினைந்து நிமிஷங்களுக்குப் பின், "எஸ்டேட்டுக்குப் பிரிகிற வழி வந்தாச்சுங்க. இங்கேயே நிறுத்திக்கிடட்டுமா?" என்றான் லாரி டிரைவர். அண்ணாச்சி, லாரியை அங்கேயே நிறுத்தச் சொல்லிவிட்டுத் தான் மட்டும் ஒரு கிளுவைக் கம்பு, டார்ச் லைட் சகிதம் கீழே இறங்கினார். "தம்பிங்களா! முதல்லேயே எல்லாரும் திமுதிமுன்னு உள்ளே நுழைய வேணாம். நான் போய் நோட்டம் பார்க்கிறேன். இங்கே இந்த எஸ்டேட்லே நம்ப வகைப் பையன் ஒருத்தன் வாட்ச்மேனாக இருக்கான். அவனைக் கேட்டால் தெரிந்து விடும். என் ஊகப்படி இந்த ஏலக்காய் எஸ்டேட்டு எல்லைக்குள்ளேதான் எங்காவது பாண்டியன் இருக்கணும். உங்க உதவி தேவைப்பட்டால் அதோ அந்த மேட்டிலிருந்து டார்ச் லைட்டை மூன்று தடவை ஏற்றி அணைத்துக் காண்பிக்கிறேன். அப்புறம் நீங்கள் வரலாம். அதுவரை லாரியிலேயே இருந்தால் போதும்" என்று அவர்களிடம் கூறிவிட்டு அந்த மழையில் நனைந்து கொண்டே பசுமை மின்னும் ஏலக்காய்ச் செடிகளின் இடையே புகுந்து மறைந்தார் அண்ணாச்சி. சிறிது நேரத்தில் மழை முன்னிலும் அதிகமாகியது. மலைச் சாலையின் இருபுறமும் தண்ணீர் வாய்க்காலாகப் பெருக்கெடுத்துப் பாய்ந்து கொண்டிருந்தது. மின்னல்கள் வானைக் கிழித்துச் சொடுக்கின. மின்னல் மின்னி மறையும் போது ஏலக்காய்ச் செடி மடல்கள் மரகத வார்ப்புகளாக பளபளத்தன. லாரியில் மீதமிருந்த கிளுவைக் கம்புகளை ஆளுக்கொன்றாக எடுத்து வைத்துக் கோண்டு மேட்டிலிருந்து அண்ணாச்சியின் சமிக்ஞையை எதிர்பார்த்து லாரியில் காத்திருந்தார்கள் மாணவர்கள். அரை மணி நேரத்துக்குப் பின் அவர்கள் எதிர்பார்த்த சமிக்ஞை கிடைத்தது. மேட்டில் டார்ச் லைட் மும்முறை மின்னி மறைந்தது. உடனே அவர்களும் மேட்டை நோக்கி விரைந்தார்கள். சத்திய வெள்ளம் : முன்னுரை, கதை முகம் 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
நிறைவுரை
|