ஒன்பதாவது அத்தியாயம் தொடக்கத்தில் தம்மோடு போட்டியிட்ட அதிகத் தகுதியுள்ள சிலரை வீழ்த்திவிட்டு இந்தப் பதவியைத் தாமே அடைய ஓரளவு அரசியல் செல்வாக்குள்ளவர்களை நாடித் துணைவேந்தர் தாயுமானவனார் போயிருந்தார். அதுதான் அவருக்கு வெற்றியைத் தேடித் தந்திருந்தது. பதவிக்கு வந்த பின் அதே அரசியல் செல்வாக்கு விநாடிக்கு விநாடி அவரைத் தேடி வந்து மிரட்டவும், நிர்ப்பந்தப்படுத்தவும் செய்த போது அவரால் அதிலிருந்து தப்ப முடியவில்லை. எது எப்படி இருந்த போதிலும் அன்று நண்பகலில் பூதலிங்கத்தை வரவழைத்துப் பேசிய பின்னர் 'மாணவர் பேரவைத் தேர்தல்' சம்பந்தமாக இனி எதிலும் தலையிடக் கூடாது என்ற முடிவுக்கு வந்திருந்தார் தாயுமானவனார். நாகரிகமே இல்லாத முரடர்களான கோட்டச் செயலாளர் குருசாமியும், இராவணசாமியும் சொல்வதைக் கேட்டுக் கொண்டு எதையாவது தாறுமாறாகச் செய்து பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் தம்மை முழுமூச்சோடு எதிர்க்கும் சூழ்நிலையைத் தூண்டி விட அவர் தயாராயில்லை. குருசாமியும், இராவணசாமியும் மாற்றி மாற்றி ஃபோன் செய்தும் ஏதேதோ சாக்குப் போக்குச் சொல்லி மெல்ல நழுவிவிட்டார் துணைவேந்தர். அதே சமயம் அவர்களைப் பகைத்துக் கொள்ளவும் அவர் தயாராக இல்லை. தந்திரமாகப் பேராசிரியர் பூதலிங்கத்தின் தலையில் எல்லாப் பழிகளையும் சுமத்தி விட்டுத் தப்பித்துக் கொண்டார் தாயுமானவனார். பாண்டியன் கடத்தப்பட்டு மீண்டதை ஒட்டி மாணவர்கள் மத்தியில் ஒரு விதமான கொந்தளிப்பும், கோபமும் இருந்ததால், குருசாமியும், இராவணசாமியும் வெளிப்படையாகப் பல்கலைக் கழக எல்லைக்குள் வந்து வேலை செய்யப் பயப்பட்டார்கள். கல்லெறி முதல் பாண்டியன் கடத்தப்பட்டது வரை சகலமும் பத்திரிகையில் வேறு வெளி வந்துவிட்டது. மாணவர்களை ஆதரித்து எழுதியிருந்த பத்திரிகைகள் கட்சிக்காரர்களின் தலையீட்டையும் வன்முறைகளையும், துணைவேந்தர் பல்கலைக் கழக எல்லையில் போலீஸைக் கூப்பிட்டதையும் கண்டித்து எழுதியிருந்தன. பாண்டியனின் அறையிலும் வெளியேயும் வராந்தாவிலுமாகக் காவலுக்கு இருப்பது போல நூற்றுக் கணக்கான மாணவர்கள் திரண்டிருக்க ஏற்பாடு செய்திருந்தார் மணவாளன். ஒரு பாதுகாப்புக்காக மோகன்தாஸையும் அதே அறையில் தங்கிக் கொள்ளச் சொல்லியிருந்தார். மறுநாள் காலையில் விடிந்தால் மாணவர் பேரவைத் தேர்தல்கள் நடக்க இருந்தன. அந்த இரவும் அதையடுத்து விடிவதற்கிருந்த வைகறையும் மாணவர்களால் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்டன. எங்கும் அமைதியாய் இருந்தாலும், எந்த விநாடியில் என்ன நடக்குமோ என்று எதிர்பார்க்கும் ஓர் ஊமைப் பரபரப்பும் பல்கலைக் கழக எல்லையில் உள்ளடங்கித் தெரிந்தது. குழப்பங்களை விளைவிக்கவோ, ஏதாவது கலவரம் செய்து தேர்தல்களைத் தள்ளிப் போடச் செய்யவோ, இனி இயலாது என்று கையாலாகாத்தனமும், அதனால் உண்டாகிய ஆற்றாமைக் கோபமுமாகத் துடித்துக் கொண்டிருந்தனர் அன்பரசன் குழுவினர். ஆற்றாமை - கையாலாகாத்தனம், பொறாமை இவை எல்லாம் உள்ளவர்களால் இனி இது இயலாது என்று எதிலும் அடங்கி விடவும் முடியாது. கடைசி விநாடி வரை அவர்கள் எதையாவது செய்து கொண்டே தான் இருப்பார்கள் கடைசி விநாடிக்கு குழப்பமாக எதைச் செய்யலாம் என்று சிந்தித்துத் தவித்து முடிவில் ஒரு குழப்பத்துக்குத் திட்டமும் போட்டார்கள் அவர்கள். அங்கே பாண்டியனின் விடுதி அறையைக் காப்பதற்காக வராந்தாவிலும், அறைவாசலிலுமாகப் கம்பளிப் போர்வை, உல்லன் அங்கி, படுக்கை சகிதம் நூற்றுக்கணக்கான மாணவர்கள் இரவிலும் தங்குவதற்கு நீடிக்கவே, அதே வரிசையைச் சேர்ந்த மற்ற அறைகளிலுள்ள மாணவர்கள் வெளியே வரவும், உள்ளே போகவும், நடமாடவும் அது இடையூறாக இருப்பதாகவும், பாண்டியனின் ஆதரவு மாணவர்கள் மற்ற அறை மாணவர்களை அடிப்பதாகவும், உதைப்பதாகவும், பயமுறுத்துவதாகவும் இரவு ஒன்பதரை மணிக்குமேல் ஹாஸ்டல் சீஃப் வார்டன் பேராசிரியர் பண்புச் செழியனிடம் போய்ப் பொய்யாக ஒரு புகார் செய்தார்கள் அன்பரசன் குழுவினர். பேராசிரியர் பண்புச் செழியன் அன்பரசன் குழுவினரிடம் அநுதாபம் உள்ளவர் தான். என்றாலும் அந்த நள்ளிரவில் பெரும்பான்மை மாணவர்களின் அன்புக்கும் பிரியத்துக்கும் பாத்திரர்களாயிருக்கும் பாண்டியனிடமும், மோகன்தாஸிடமும் போய் மோதிக் கொள்வதற்குத் தயங்கினார் அவர். அன்பரசன் குழுவினரின் வற்புறுத்தலை மீற முடியாமல்தான் அவர்களோடு பாண்டியன் தங்கியிருந்த விடுதிக்குப் புறப்பட்டார் அவர். புறப்படுவதற்கு முன் மனத்தில் ஏதோ தோன்றியதால், அன்பரசனையும் வெற்றிச்செல்வனையும் பார்த்து, "நீங்கள் இருவரும் என்னோடு அங்கே வரவேண்டாம் என்று நினைக்கிறேன். நானே போய் விசாரித்து அவர்களை எச்சரித்து விட்டு வருகிறேன்" என்றார். ஆனால், அவர்கள் கேட்கவில்லை. "நாங்களும் வருகிறோம். எங்களுக்கு யாரிடமும் எதற்காகவும் பயம் கிடையாது" என்றார்கள். "உங்களையும் என்னோடு சேர்த்துப் பார்த்தால் அவர்கள் ஆத்திரம் அதிகமாகும்" என்றார் பண்புச் செழியன். "நம்மவரான நீங்களே இப்படி எங்களை ஒதுக்கினால் எப்படி ஐயா?" என்று உரிமையை நினைவூட்டிக் குழைந்தார்கள் அவர்கள். வேறு வழியின்றி அவர்களோடு பாண்டியனின் விடுதிக்குப் போனார் பிரதம விடுதிக் காப்பாளார் பண்புச் செழியன். அங்கே விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. விடுதி வராந்தா கலகலப்பாயிருந்தது. சில மாணவர்கள் சீட்டாடிக் கொண்டிருந்தார்கள். குளிர் தாங்க முடியாமல் சிலர் புகை பிடித்துக் கொண்டிருந்தார்கள். கேரம் போர்டில் கவனமாக இருந்தனர் சிலர். அரட்டையடித்துச் சிரிப்பலைகளைக் கிளப்பிக் கொண்டிருந்தது ஒரு கூட்டம். திடீரென்று எதிர்பாராத விதமாகப் பிரதம வார்டனையும், அவரோடு அன்பரசன் குழுவினரையும் கண்டதும் பாண்டியனின் விடுதி முகப்பில் இருந்த எல்லா மாணவர்களும் வந்து அவர்களை எதிர் கொண்டனர். வார்டனின் வரவால் மெல்ல மெல்ல ஓரளவு அமைதி வந்திருந்தது அங்கே. பண்புச் செழியனின் முதுகுக்குப் பின்னே மறைந்தாற் போல் நின்றார்கள் அன்பரசன் முதலியவர்கள். "டேய், அன்பைப் பார்த்தாயா, பண்பின் முதுகுக்குப் பின்னால் ஒளிகிறது" என்று ஒரு மாணவன் கேட்டதும், "ஆமாண்டா! பண்புக்குப் பின்னால் அன்பு ஒளியும், பண்பு மாண்புக்குப் பின்னால் போய் ஒளியும்... வேறே வேலை இல்லையா உங்களுக்கு" என்று மற்றொரு மாணவன் இதற்குப் பதில் கூறியது மெல்லிய குரலில் இருந்தாலும் சீஃப் வார்டனின் காதில் விழுந்து விட்டது. இதைக் கேட்டு அவர் ஓரளவு ஆத்திரமடைந்து விட்டார். "ஒரே இடத்தில் கூடிக் கொண்டு இப்படி மற்ற அறை மாணவர்களின் தூக்கத்துக்கு இடையூறு செய்வது நல்லதல்ல. உடனே அவரவர்கள் அறைக்குக் கலைந்து சென்று விட வேண்டும் நீங்கள்" என்று நிதானமாகத்தான் ஆரம்பித்தார் அவர். ஆனால் வாக்கிலே சனி என்பார்களே, அது வந்து சேர்ந்தது அவருடைய பேச்சின் இறுதிப் பகுதியில். "இந்த மாநிலத்திலேயே வேறெந்த விடுதியிலும் இல்லாத அளவு இங்கே முதல் தரமான சாப்பாடாகச் சாப்பிடுகிறீர்கள்! உடம்பிலே கொழுப்பு ஏறினால் வாயும் கொழுத்துப் போகிறது... இல்லையா?" என்று சீறி விட்டார். அதன் விளைவு உடனே பெரும் எதிர்ப்பைச் சம்பாதிக்க நேரிட்டது. சாப்பாட்டைச் சொல்லிக் காட்டி அவர் பேசிய அந்த வார்க்கியத்தை வாபஸ் வாங்கினால் ஒழிய அங்கிருந்து அவரைப் போக விட முடியாது என்று மாணவர்கள் வளைத்துக் கொண்டு விட்டார்கள். பேராசிரியர் பண்புச் செழியன் திக்குமுக்காடிப் போனார். இரவு நேரம் வளர்ந்து கொண்டேயிருந்தது. மாணவர்களின் மனத்தைப் புண்படுத்தும் வகையில் பேசி விட்டதனால் விடுதிகளின் தலைமைக் காப்பாளர் பண்புச் செழியன் அந்த நள்ளிரவில் வகையாகச் சிக்கிக் கொண்டு விட்டார். அவர் அன்பரசன், வெற்றிச்செலவன் கோஷ்டியோடு வந்ததே அங்கிருந்த மாணவர்களுக்கு எரிச்சலூட்டியிருந்தது. ஏதோ கோபத்தில் உணர்ச்சி வசப்பட்டு, 'நீங்கள் உண்ணுகிற உணவின் கொழுப்பல்லவா உங்களை இப்படிப் பேச வைக்கிறது?' என்று வேறு கேட்டவுன் பண்புச் செழியன் மேல் உள்ள கோபம் இரண்டு மடங்காகி முற்றியிருந்தது. மணவாளன் அப்போது அங்கில்லை. மாலையிலேயே மாணவர்கள் எல்லாரிடமும் சொல்லிக் கொண்டு ஹோட்டல் அறைக்குப் போய்விட்டார். பேராசிரியர் பண்புச் செழியன் தான் கூறிய வார்த்தைகளுக்காக வருந்தி மன்னிப்புக் கேட்காவிட்டால் மாணவர்கள அவரை அங்கிருந்து விடுவதற்குத் தயாராயில்லை. பாண்டியனும், மோகன்தாஸும் கூடப் போனால் போகிறது, விட்டுவிடலாம் என்று கருதியும், மற்ற மாணவர்கள் பிடிவாதமாக இருந்தனர். ஒரு நிலைமைக்கு மேல் பொறுமையிழந்து வார்டன் சீறினார்: "இப்படிச் செய்வதற்காக நீங்கள் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் விடுதியின் தலைமைக் காப்பாளரை நீங்கள் 'கேரோ' செய்கிறீர்கள். இந்த விஷயம் துணைவேந்தர் காது வரை போகும்! நான் உங்களைச் சும்மா விடமாட்டேன்." "இந்த விஷயம் மட்டுமில்லை! ஏதோ வேலையில்லாத சோற்றுத் தடிராமன்களைப் பேசுவது போல் நீங்கள் எங்களைக் கேவலமாகப் பேசிய வாக்கியங்களும் சேர்த்தே துணைவேந்தர் காதுக்குப் போகும்" என்று மாணவர்கள் சுடச்சுட அவருக்குப் பதில்கள் கூறினார்கள். நேரம் இரவு பன்னிரண்டு மணி வரை ஆகிவிட்டது. பல நூறு மாணவர்கள் சூழ்ந்து வளைத்துக் கொண்டு விட்டதனால் தலைமை விடுதிக் காப்பாளர் பண்புச் செழியனோ அவரோடு வந்த அன்பரசன், வெற்றிச்செல்வன் முதலியவர்களோ இந்தப் பக்கம் அந்தப் பக்கம் அசையக் கூட முடியவில்லை. பன்னிரண்டே கால் மணிக்குப் பண்புச் செழியன் பணிந்து வழிக்கு வந்தார். "மாணவர்களே! நான் கூறியதில் தவறாக ஏதாவது இருந்தால் அதற்காக வருந்துகிறேன். உங்கள் அன்பான மன்னிப்பையும் கோருகிறேன்" என்று அவர் கூறிய பின்பே மாணவர்கள் அவரோடு வந்தவர்களையும் அவரையும் அங்கிருந்து செல்ல அனுமதித்தனர். இரவு ஒரு மணிக்கு விடுதிகளில் அரவம் அடங்கிவிட்டது. பாண்டியனுக்கும், மோகன்தாஸுக்கும் காவலாக அறைக்கு உள்ளேயும், வெளியேயும், வராந்தாவிலும் வரிசையாக மாணவர்கள் படுத்திருந்தனர். விடியற்காலை நாலு நாலரை மணிக்குப் பாண்டியன் முதலியவர்களுக்கு ஓரளவு வேண்டியவனும், அந்தப் பகுதி விடுதிகளுக்கு 'நைட் வாட்ச்மேனு'மாகிய காத்தபெருமாள் என்பவன் வந்து பல்கலைக் கழக வாயிலருகே சந்தேகத்துக்குரிய ஆட்களோடு இரண்டு மூன்று 'தென்மணி லாரி சர்வீஸ்' லாரிகள் நிறுத்தப்பட்டிருப்பதாக வராந்தாவில் படுத்திருந்த மாணவர்களில் சிலரை எழுப்பித் தகவல் சொன்னான். அடுத்த பதினைந்து நிமிஷங்களில் இந்தச் செய்தியை அறிவிக்க மாணவர்கள் எல்லோரும் அவசரம் அவசரமாக எழுப்பப்பட்டனர். அறைக்குள்ளிருந்த பாண்டியன், மோகன்தாஸ் ஆகியோரும் கூட எழுந்துவிட்டனர். லாரிகளில் தென்பட்டவர்கள், சரளைக் கற்கள், சோடா பாட்டில்கள், பாலாக் கம்பு, வெட்டரிவாள்கள், கடப்பாரைகளோடு வந்திருக்கக் கூடும் என்று காவல்காரன் காத்தபெருமாள் குறிப்பாக எச்சரித்துவிட்டுப் போயிருந்தான். விடிந்தால் மாணவர் பேரவைத் தேர்தல் ஏதாவது கலகம் நடத்தி நிலைமையை நெருக்கடியாக்கிக் காட்டினால் துணைவேந்தரை நிர்ப்பந்தப்படுத்தி மறுபடியும் தேர்தலைத் தள்ளிப் போட வைக்கலாம் என்பதற்காக இது ஒரு சூழ்ச்சியாயிருக்கக் கூடும் என்று பாண்டியன் சந்தேகப்பட்டான். குளிரும் பனியும் தூக்கச் சோர்வுமாக இருந்தாலும் எப்பாடு பட்டாவது எதிரிகளின் சூழ்ச்சியைச் சிதற அடிப்பதென்று துணிந்தார்கள் அவர்கள். அந்த அகாலத்திலும் தங்களோடு புறப்படுவதற்காக விழித்திருப்பவர்கள் நானூறு ஐநூறு பேர் தேற முடியும் என்று தெரிந்தது பாண்டியனுக்கு. இவ்வளவு பேர்களும் மொத்தமாக மேற்கு வாயிலை நோக்கிப் படையெடுத்தால் லாரிக்காரர்கள் பயந்து அவற்றை ஓட்டிக் கொண்டு திரும்பி ஓடிவிடுவார்கள் என்று தோன்றவே, மாணவர் கூட்டம் தெற்கு வாயில் வழியே வெளியேறி இரண்டு மூன்று குழுக்களாகப் பிரிந்து போய் லாரிகளை வளைத்துக் கொள்வது என்று முடிவாயிற்று. தாங்கள் வெற்றி பெற முடியாத தேர்தல்களை நடக்கவே விடக்கூடாது என்ற வெறியுடன் எதிர்த் தரப்பினர் கடைசி விநாடி வரை முனைந்து நிற்பது தெரிந்தது. பிரதம விடுதிக் காப்பாளர் பேராசிரியர் பண்புச் செழியனும் மற்றவர்களும் வந்து வம்புக்கிழுத்து அதனால் மாணவர்களிடம் சிக்கித் துன்பம் அடைந்து விடுபட்டுப் போன பின் அவர்கள் மூலம் ஊருக்குள் செய்தி பரவி அதன் விளைவாக இந்த லாரிகளும் இந்த அடியாட்களும் வந்திருக்கலாம் என்றும் ஊகிக்க முடிந்தது. எதற்கும் முறைப்படி போலீஸுக்குத் தகவல் தெரிவிக்கலாம் என்று பட்டமளிப்பு விழா மண்டபத்தை ஒட்டி இருந்த பொது டெலிபோன் 'பூத்'துக்குப்போய் ஃபோன் செய்தார்கள். போலீஸ் நிலையத்தில் யாரோ கான்ஸ்டபிள் ஃபோனை எடுத்துப் பேசினார். இன்ஸ்பெக்டருக்காவது, வட்டாரப் பெரிய போலீஸ் அதிகாரிக்காவது ஃபோன் செய்யச் சொல்லி யோசனை கூறினார் அவர். இன்ஸ்பெக்டருடைய வீட்டு நம்பருக்கு முயன்று தொடர்பு கொண்ட போது அவர் 'இவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதையே சரியாகக் காதில் வாங்கிக் கொள்ளாமல், 'யுனிவர்ஸிடி விவகாரமானால் வி.சி. ஃபோன் செய்யாமல் நாங்கள் தலையிட முடியாது' என்று வைத்துவிட்டார். துணைவேந்தருக்கு ஃபோன் செய்தபோது அவர் வீட்டில் ஃபோனே எடுக்கப்படவில்லை. நாலைந்து மாணவர்கள் ஸ்டாஃப் குவார்ட்டர்ஸுக்கு விரைந்து பேராசிரியர் பூதலிங்கத்தை எழுப்பி இந்த விவரங்களை எல்லாம் சொன்னார்கள். அவர் அநுதாபத்தோடு பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு பின்பு பதில் சொன்னார். "எதையாவது கலகம் செய்து பேரவைத் தேர்தல்களை நிறுத்தி விடுவதுதான் அவர்கள் திட்டமாயிருக்கும். எப்படியாவது முயன்று தேர்தல்கள் நடந்து முடியும்படியாகக் சுமுகமானச் சூழ்நிலையை நீடிக்கச் செய்யுங்கள். அது முக்கியம்" என்று அறிவுரை கூறியனுப்பினார் பூதலிங்கம். மாணவர்கள் ஏற்கெனவே முதலில் திட்டமிட்டபடி அந்த வெடவெடக்கும் குளிரில் தெற்கு வாசல் வழியாக வெளியேறி ஓரிடத்தில் தங்கிக் கொண்டு ஆளனுப்பி அண்ணாச்சியையும், மணவாளனையும் எழுப்பிக் கொண்டு வரச் செய்தனர். அவர்கள் எழுந்து வந்த பின் அவர்களையும் கலந்து பேசிக் கொண்டு அந்த லாரிகளை மடக்குவது என்ற முடிவுடன் புறப்பட்டனர். நூறு நூறு மாணவர்களாகப் பிரிந்து நான்கு பக்கமிருந்து வளைக்கவே மூன்று லாரிகளிலுமிருந்து அறுபதுக்கு மேற்பட்ட குண்டர்கள் மாணவர்களை நோக்கிச் சோடாபுட்டி வீச்சிலும் கல்லெறியிலும் இறங்கினர். சிறிது நேரத்தில் கல்லெறியையும் பொருட்படுத்தாமல் மாணவர்கள் லாரிகளை நெருங்கி வளைக்கவே, குணடர்களில் பெரும்பாலோர் இறங்கி ஓடிவிட்டார்கள். மாணவர்கள் கூட்டம் வெள்ளமாகப் பெருகி நிற்கவே, குண்டர்களால் - அவர்களிடம் பயங்கரமான ஆயுதங்கள் இருந்தும் கூட - மாணவர்களை எதிர்த்து நின்று தாக்குப் பிடிக்க முடியவில்லை. இதற்குள் நன்றாக டிரைவிங் தெரிந்த மாணவர்கள் அந்த மூன்று லாரிகளையும் ஓட்டிக் கொண்டு போய்ப் பல்கலைக் கழக எல்லைக்குள் விடுதிகளுக்கு அருகே நிறுத்திக் கொண்டு விட்டார்கள். போலீஸுக்கோ, வி.சி.க்கோ காட்டுவதற்குப் போதுமான கற்கள், அரிவாள், சோடா புட்டிகள், கடப்பாரை, இரும்புக் குழாய்கள், பழைய சைக்கிள் செயின்கள் எல்லாம் அந்த லாரியில் இருந்தன. இதற்குள் பொழுது நன்றாக விடிந்து விட்டது. வேறு பல விடுதிகளிலிருந்தும் மாணவர்கள் வந்து கூடிவிட்டார்கள். விடுதி மாணவர்கள் காப்பி - சிற்றுண்டிக்குச் சென்ற போது கூடக் கலகக்காரர்களை ஏற்றி வந்த லாரிகளுக்குக் காவலாக மாற்று ஏற்பாடு செய்து விட்டுத்தான் போனார்கள். ஏற்கெனவே அறிவித்திருந்தபடி பேரவைத் தேர்தலுக்காக அன்று பல்கலைக் கழகம் விடுமுறை. காலை பத்து மணியிலிருந்து இரண்டு மணி வரை மாணவர்கள் அனைவரும் வாக்குப் பதிவு செய்த பின் நான்கு மணிக்குள் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு தெரிவிக்கப்படும் என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டிருந்தது. பேராசிரியர் பூதலிங்கமும், அவருடைய பொருளாதாரப் பிரிவைச் சேர்ந்த விரிவுரையாளர்களும் பல்கலைக் கழக நூல் நிலையக் கூடத்தில் வாக்குப் பதிவுக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள். நூல் நிலைய முகப்பு சுறுசுறுப்பாகத் தென்பட்டது. பத்து மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியதும் முதல் ஒரு மணி நேரத்துக்கு விடுதியில் உள்ள மாணவிகள், வெளியிலிருந்து வந்து படிக்கிற மாணவிகள் எல்லோருமாக வாக்குப் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்ததனால் ஒன்பதரை மணிக்கே நூல் நிலைய வாசலில் பெண்களின் 'கியூ' நிற்கத் தொடங்கிவிட்டது. கண்ணுக்கினியாள் ஓடியாடி மாணவிகளை ஒன்று சேர்த்து நிறுத்திக் கொண்டிருந்தாள். அன்பரசன் வெற்றிச்செல்வன் தரப்பினருக்காகப் பாடுபட்டுக் கொண்டிருந்த பொற்செல்வி என்ற மற்றொரு மாணவி தனக்கு அதிக ஆதரவில்லாத ஏமாற்றத்திலும், விரக்தியிலும் வழிமுறைகளை எல்லாம் பொருட்படுத்தாமல் கியூவிலேயே வெளிப்படையாக அன்பரசனுக்காகப் பிரச்சாரத்தைத் தொடங்கினாள். கண்ணுக்கினியாள் அதை மறுத்தாள். "இதோ பாருங்கள், மிஸ் பொற்செல்வி! நீங்கள் செய்வது முறையில்லை. உங்களுக்கு வேண்டியவர்களை அழைத்து வாருங்கள் கியூவில் நிறுத்துங்கள். அவர்கள் வோட்டுப் போடட்டும். அது தவறில்லை. ஆனால் இந்த இடத்தில் வந்ததும் நீங்கள் இப்படி வெளிப்படையாகக் 'கான்வாஸ்' பண்ணுவதை நான் ஆட்சேபிக்கிறேன்." கண்ணுக்கினியாளின் ஆட்சேபணையைப் பொற்செல்வி பொருட்படுத்தவில்லை. பொற்செல்விக்குத் தேர்தல் பகைமைகளை விடக் கண்ணுக்கினியாளின் அழகிலும் தோற்றத்திலும் மயங்கி மலரைச் சுற்றி வட்டமிடும் வண்டுகள் போல் பல மாணவ மாணவிகள் அவளைச் சூழ நிற்பதிலும் அவளுக்குக் கட்டுப்படுவதிலும் பொறுத்துக் கொள்ள முடியாத காழ்ப்பு இருந்தது. ஆற்றாமையாலும், தாழ்வு மனப்பான்மையாலும் உள்ளேயே வெந்து கொண்டிருந்தாள் பொற்செல்வி. கண்ணுக்கினியாள் பற்றியும் பாண்டியன் பற்றியும் மட்டரகமான துண்டுப் பிரசுரம் வெளியிட்டது கூட இவள் தான் என்பது பின்னால் கண்ணுக்கினியாளுக்குத் தெரிய வந்திருந்தது. "அதுக்கென்ன செய்யறது? எல்லாருமே உன்னைப் போல் மினுக்கி மயக்கிக் கவர முடியுமா? நாங்கள் சொல்றதை வாய் திறந்து தான் சொல்ல முடியும். எங்களுக்கு மினுக்கத் தெரியாது" என்று பொற்செல்வி சீறியதும் கியூவில் நின்ற கண்ணுக்கினியாளின் சிநேகிதிகள் ஆத்திரத்தில் அந்த மட்டரகப் பேச்சுக்காகப் பொற்செல்வியை அடிப்பதற்குக் கையை ஓங்கிக் கொண்டு பாய்ந்து விட்டார்கள். ஆனால் அப்போதும் கண்ணுக்கினியாள் தான் குறுக்கிட்டு அவர்களைத் தடுத்தாள். "ஏதோ ஆத்திரத்தில் கத்துகிறாள். போனால் போகட்டும். இப்போது இவளோடு தகராறு வேண்டாம்." அப்போதும் கண்ணுக்கினியாளின் வார்த்தைகளுக்கு மாணவிகள் கட்டுப்பட்டனர். பொற்செல்வி கோபத்தோடு முணுமுணுத்தபடி கியூவில் பின்னால் போய் நின்று கொண்டாள். சரியாக ஒன்பது மணி ஐம்பத்தெட்டு நிமிஷங்களுக்குப் பேராசிரியர் பூதலிங்கம், வேறு ஒரு விரிவுரையாளரும், வெளியே வந்து நிலைமையைப் பார்த்துவிட்டு உள்ளே சென்றார்கள். பத்து மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. உள்ளே ஒரு சிறிதும் தாமதமின்றி எல்லாம் விரைந்து நடந்ததனால் கியூ வேகமாக நகரத் தொடங்கியது. எதிர்பார்த்ததற்கு முன்னதாகப் பத்தே முக்கால் மணிக்கே மாணவிகள் அனைவரும் வாக்களித்து முடித்து விட்டார்கள். நீராடி உடை மாற்றிக் கொண்டு விடுதிக் கட்டிடங்களின் நடுவே இருந்த பிள்ளையார் கோவிலுக்குப் போய்க் கும்பிட்டு விட்டு பாண்டியனும், போகன்தாஸும் கூடச் சென்று கியூவில் முன்னால் நின்று கொண்டார்கள். பின்னால் பெரிய கியூ விநாடிக்கு விநாடி அதிகமாகிக் கொண்டிருந்தது. சத்திய வெள்ளம் : முன்னுரை, கதை முகம் 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
நிறைவுரை
|