(தமிழ்நாடு அரசின் 1983ம் ஆண்டின் முதற் பரிசு பெற்ற நாவல்) 10
எந்த ஒரு விதமான இலட்சியமும் பிரக்ஞையும் இல்லாமல் வெறும் செலூலாய்ட் பொம்மைகளைப் போல் தியேட்டர்களையும், ரெஸ்டாரெண்டுகளையும் சுற்றிச் சுற்றி வருகிறார்கள் இன்றைய இளைஞர்கள். முத்தக்காளும் சித்ராவும் சற்றுத் தயக்கத்தோடும், பயத்தோடும் பூமியைத் தடுக்க முயன்று தோற்றனர். பூமி அவர்கள் தடையைப் பொருட்படுத்தவில்லை. "வாதங்களும், தர்க்க நியாயங்களும் காரணகாரிய விளக்கங்களும் கயவர்களுக்கு ஒரு போதும் புரியாது. அடி உதை மட்டும்தான் அவர்களுக்குப் புரியும். நான் தவறு எதுவும் செய்யப்போவதில்லை. அவர்களுக்குப் புரிகிற மொழியில் அவர்களிடம் பேசப் போகிறேன்." "வேண்டாம் தம்பீ! சமாதானமாக ஏதாச்சும் சொல்லி அவங்களைத் திருப்பி அனுப்பிடுங்க. போதும்." "சமாதானம் என்பது இரண்டு தரப்பிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுக் கௌரவப்படுத்தப் பெற வேண்டிய ஒன்று. 'சமாதானம்' என்பதே கோழைத்தனம் என்று நினைக்கிற முரடர்களிடம் அதைப் பேசிப் பயனில்லை முத்தக்கா!" "சண்டை கலவரம்னு கடைப்பேரு வீணாக் கெட்டுப் போகுமேன்னு நினைக்கிறேன்." "பயத்தினாலும் தாழ்வு மனப்பான்மையாலும் இன்றைக்கு முதல் தவற்றைச் செய்யத் தொடங்கினால் பிறகு தொடர்ந்து தவறுகளாகவே செய்து கொண்டிருக்க வேண்டியதுதான். அதற்கு நான் உங்களை அனுமதிக்கப் போவதில்லை." பூமி முத்தக்காளையும், சித்ராவையும் தடுத்து நிறுத்தி விட்டுச் சட்டைக் கைகளை மடக்கி விட்டுக் கொண்டு வாசல் பகுதிக்குப் பாய்ந்தான். அவனை வழிமறித்து அவசர அவசரமாகச் சித்ரா ஏதோ சொல்ல வந்தாள். அதைக் காதில் வாங்காமலே, "அன்றைக்குப் பாலாஜி நகர் ஸ்கூலில் பார்த்ததை விட உயிரோட்டமுள்ள நிஜமான கராத்தே டிமான்ஸ்ட்ரேஷனைப் பார்க்க ஆசையிருந்தால் வாசலுக்கு வரலாம்" என்று புன்னகையோடு திரும்பி அவளிடம் கூறி விட்டு விரைந்தான் பூமி. அந்த மெஸ் முகப்பில் எப்போதும் ஆட்டோ டாக்ஸி டிரைவர்களின் கூட்டம் இருக்கும். அப்படித் தன் கூட்டம் என்று ஆதரவுக்கு யாருமே இல்லா விட்டாலும் அப்போது தனியாக அவர்களைச் சமாளிக்க முடியும் என்ற தைரியமும் நம்பிக்கையும் பூமிக்கு இருந்தது. யாரோ ஓர் அரசியல்வாதியின் ஆணவத்தைத் தூபதீபம் காட்டி ஆராதிப்பதற்காக ஏழை முத்தக்காள் போன்றவர்களைத் துன்புறுத்துவதைப் பூமி வெறுத்தான். அரசியல் வசூல்கள் என்பவை எல்லாமே அவனுக்கு அருவருப்பூட்டின. அவன் வெளிப்பட்டு வாயிற்பக்கம் வந்த போது தொந்தியும், தொப்பையுமாக அந்த அரசியல் கட்சிக்காரர்கள் நாலைந்து பேர் கூடி நின்று அவனைக் கறுவிக் கொண்டிருந்தார்கள். பூமி எடுத்தவுடன் பேச்சில் தான் தொடங்கினான். "வசூல் என்கிற பேரில் ஏழை எளியவர்களையும், ஆதரவற்றவர்களையும் இப்படி வாட்டி வதைப்பது உங்களுக்கே நல்லாயிருக்கிறதா?" "அதைக் கேக்க நீ யாருடா? பெரிய ஏழைப் பங்காளனோ?" என்று கூட்டமாக அவர்கள் அவன் மேல் பாயவே தன் கைவரிசையைக் காட்ட அவன் தயாரானான். இதில் எதிரிகள் முதலில் பயப்படவில்லை. தனி ஆளாக நின்று அவன் கராத்தே முறையிலும், குங்ஃபூ முறையிலுமாக மாற்றி மாற்றி அவர்களைப் பந்தாட ஆரம்பித்த பின்புதான் அவர்கள் மிரண்டு பதறிப் போய்ச் சிதறி ஓட ஆரம்பித்தார்கள். பக்கத்து வெற்றிலைப் பாக்குக் கடையில் நின்றிருந்த சில டாக்ஸி, ஆட்டோ டிரைவர்களும் பூமிக்கு ஆதரவாக வந்து சேர்ந்து கொள்ளவே எதிரிகள் ஓட்டமெடுப்பதைத் தவிர வேறு வழியில்லாமல் போயிற்று. பூமி இதைப் பற்றி ஏற்கெனவே நிறையக் கேள்விப்பட்டிருந்தான். அவ்வப்போது யார் ஆட்சியிலிருக்கிறார்களோ அந்தக் கட்சியைச் சேர்ந்த பேட்டை ரவுடிகள் ஒன்று சேர்ந்து கொண்டு, நடைபாதைக் கடைக்காரர்கள் காய்கறி கடை வைத்திருப்பவர்கள், பிளாட்பாரம் வெண்டர்கள் ஆகியோரை துன்புறுத்திப் பணம் கேட்பது ஒரு நிரந்தர வழக்கமாக இருக்கிறது. கொள்ளைக் கூட்டத்தை விட மோசமான ஒரு கும்பல் இதில் ஈடுபட்டிருப்பதைத் தடுக்க முடியவில்லை என்று எல்லோருமே வருந்திக் கொண்டிருந்தார்கள். மிகப் பல தவறுகளைப் பொறுத்துச் சிரமப்பட்டுக் கொண்டே அவற்றை எதிர்க்கும் துணிவின்றி வாழும் மக்களைப் பூமி இயல்பாகவே வெறுக்கும் சுபாவமுள்ளவன். ஒரு சாதாரண புழு பூச்சியைச் சீண்டினால் கூட அவற்றுக்கு உடனே கோபம் வரும். மனிதர்கள் புழுப் பூச்சிகளை விட கேவலமாக வாழக் கூடாதென்று எண்ணுகிறவன் அவன். ஆனால் பெரிய நகரங்களில் மனிதர்கள் புழுப் பூச்சிகளைப் போல அடங்கி வாழும் கேவலத்தைக் கண்டு பல முறை அவன் தனக்குள் உள்ளம் குமுறியிருக்கிறான். சகிப்புத்தன்மை என்ற போர்வையில் வரும் கையாலாகாத தனத்தையும் வெறுத்தான் அவன். இளைய தலைமுறையினரிடமாவது இந்த எதிர்மறைக் குணங்களை ஒழிக்க எண்ணினான். கோழைத்தனத்தை சகிப்புத் தன்மையாகப் பாசாங்கு செய்வதும் கையாலாகாத்தனத்தைப் பொறுமையைப் போலச் சித்திரிக்க முயல்வதும் அந்த உயர் குணங்களை அவமானப் படுத்துவதாகும் என்பது அவன் கருத்து. வழக்கமாக இரவில் முத்தக்காள் மெஸ் முகப்பில் எப்போதும் நாலைந்து டாக்ஸி ஆட்டோக்கள் நிற்பதுண்டு. அவற்றின் டிரைவர்களும் அங்கேதான் படுத்திருப்பது வழக்கம். "மறுபடியும் அந்த நிதி வசூல்காரர்கள் வந்து ஏதாவது தொந்தரவு கொடுத்தாலும் கொடுப்பார்கள். கவனித்துக் கொள்ளுங்கள். பணிந்து போய்விடாதீர்கள்!" என்று அவர்களிடமும் முத்தக்காளிடமும் சொல்லி எச்சரித்துவிட்டுப் பூமி அங்கிருந்து சித்ராவுடன் புறப்பட்டான். சித்ராவை அவள் வீட்டில் கொண்டு போய் இறக்கி விடுவதாக அவன் ஆட்டோவில் புறப்பட்ட போது இரவு மணி ஒன்பதரைக்கு மேலே ஆகியிருந்தது. "எல்லாக் கட்சிகளிலும் ரௌடிகளை வைத்து மக்களை மிரட்டுவது என்பது ஒர் புதிய அரசியல் கலாசாரமாகவே உருவாகிவிட்டது! முத்தக்காளைப் போல் சொந்த முயற்சியால் கைவருந்தி உழைத்துச் சிரம ஜீவனம் பண்ணுபவர்களை கூட அவர்கள் விட்டு வைக்கத் தயாராயில்லை" என்றாள் சித்ரா. "சுரண்டல் என்பது நமது தேசிய கலாசாரங்களில் ஒன்றாகவே ஆகிவிட்டது." "இளைஞர்கள் மட்டும் சினிமாப் பைத்தியங்களாகவும் பெண் பித்தர்களாகவும் இல்லாமல் சமூகப் பிரக்ஞையோடும் துடிப்போடும் இருந்தால் இந்த நாட்டில் எல்லாவகைச் சுரண்டல்களையும் உடனே ஒழித்து விட முடியும். சுமார் ரக சினிமாக்களும் மயக்க மருந்து போல் காமவெறியைப் பரப்பும் பத்திரிகைகளும் இந்நாட்டு இளைஞர்களை இன்னும் அரை விழிப்பு நிலையிலேயே வைத்துள்ளன. பிற்போக்குச் சக்திகளின் கையில் சிக்கியிருக்கும் இந்த இரண்டு சாதனங்களும் திருந்தாத வரை நாட்டுக்குள் சுரண்டலை ஒழிப்பது மிகவும் சிரமமான காரியமாகத்தான் இருக்கும்." பூமியின் இந்தக் கருத்தில் இருந்த அடிப்படை உண்மை சித்ராவின் மனத்தைக் கவர்ந்தது. இளமை, புதுமை என்ற வார்த்தைகளையே கேவலப்படுத்திக் கொச்சையாக்குவது போல இளமைக் கதை, புதிய அலைக்கதை என்றெல்லாம் காமாந்தகார எழுத்துக்களுக்குப் பெயர் சூட்டுவதைக் கண்டு இந்நாட்டு இளைஞர்கள் எதிர்க்கவோ, எரிச்சலடையவோ செய்யாததிலிருந்து அவர்கள் இன்னும் அரைவிழிப்பு நிலையில்தான் இருக்கிறார்கள் என்பது உறுதியாகிறது. இந்நாட்டு இளைஞர் சக்தி திட்டமிடப்பட்ட முறையில் இன்று வீரியமற்றதாக்கப்படுகிறது என்பது பற்றிப் பூமியின் கருத்து மிகவும் சரியான கணிப்பு என்றே சித்ராவுக்குத் தோன்றியது. அவன் தன்னைப் பாலாஜி நகரில் இறக்கிவிட்டுப் போன பின்பு நெடுநேரம் வரை அவள் அவனைப் பற்றியும் முத்தக்காள் மெஸ் வாயிலில் சமூக விரோத சக்திகளை எதிர்த்து அவன் துணிந்து போராடிய தீரத்தைப் பற்றியுமே எண்ணிக் கொண்டிருந்தாள். பூமியின் மேல் அவளுக்கு அன்பும் பரிவும் பெருகின. அப்போது அவள் மனம் நிறைய அவன் ஒருவனே சிந்தனையானான். எந்த ஒருவிதமான இலட்சியமும், பிரக்ஞையும் பிடிப்பும் இல்லாமலே வெறும் செலூலாய்ட் பொம்மைகளைப் போல் தியேட்டர்களையும், ரெஸ்டாரெண்டுகளையும் சுற்றி வரும் இலக்கற்ற இளைஞர் கூட்டத்திலிருந்து பூமி தனியே விலகிக் கோபுரமாக உயர்ந்து காட்சியளித்தான். அவனுக்கு நல்லது கெட்டது தெரிந்தது. நல்லதை விரும்பினான். கெட்டதை வெறுத்தான்; எதிர்த்தான். நல்லதை விரும்பி ஆதரிக்கவும் துப்பில்லாமல் தீயதை எதிர்த்து வெறுக்கவும் துப்பில்லாமல் இன்றைய இளைஞர்களில் பலர் எதிலும் பிடிப்பின்றித் திரிசங்குகளாக அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள். பூமி அப்படி இல்லை என்பதாலேயே அவளைக் கவர்ந்தான். அவனுடைய உடல் வலிமையும், அவளுக்குப் பிடித்திருந்தது. மனவலிமையும் அவளுக்குப் பிடித்தது. அன்றிரவு அவனைப் பற்றிய வியப்புக் கலந்த நினைவுகளுடனேயே உறங்கிப் போனாள் அவள். மறுநாள் அதிகாலையில் தினசரியைப் பார்த்தபோது அவளுக்குத் திகைப்பும் பதற்றமும் ஏற்பட்டன. முதல் நாளிரவு சண்டையெல்லாம் முடிந்து பூமி தன்னை ஆட்டோவில் பாலாஜி நகரில் திரும்பக் கொண்டு வந்து விட்டுவிட்டுப் பின் வீடு திரும்பியதும் அவளுக்கு நன்றாக நினைவிருந்தது. ஆனால் அந்தக் காலை தினசரியில் வெளியாகியிருந்த செய்தியோ வேறுவிதமாகக் கூறியது. மைலாப்பூர் லஸ் பகுதியில் ஒரு ஹோட்டல் வாயிலில் ஆட்டோ - டாக்ஸி டிரைவர்களுக்கும் வசூலுக்காக வந்த ஓர் அரசியல் கட்சி ஆட்களுக்கும் ஏற்பட்ட கைகலப்பில் 'பூமிநாதன்' என்ற ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டதாகச் செய்தி கூறியது. ஒருவேளை பூமி தன்னை இறக்கி விட்டுவிட்டு வீடு திரும்பியதும் போலீஸார் தேடிச்சென்று அவனைக் கைது செய்து கொண்டு போயிருப்பார்களோ என்று எண்ணினாள் அவள். அரசியல் கட்சி ஆட்கள் வந்து புகார் செய்ததின் பேரில் போலீஸார் வீடு தேடிச் சென்று நள்ளிரவில் கதவைத் தட்டி எழுப்பிக் கூடப் பூமியைக் கைது செய்து அழைத்துக் கொண்டு போயிருக்க முடியும் என்று சித்ராவுக்குத் தோன்றியது. அவளுக்குப் பதற்றமும் துயரமும் மனத்தில் ஏற்பட்டன வேதனை கவ்வியது. தனக்கு மிகவும் வேண்டிய மிகவும் நெருங்கிய ஒருவர் பாதிக்கப்பட்டது போன்ற உணர்வை அவள் அடைந்தாள். அப்போது உடனே ஓடிப்போய்ப் பூமியைப் பார்க்க வேண்டும் போலிருந்தது அவளுக்கு. சாயங்கால மேகங்கள் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
|