(தமிழ்நாடு அரசின் 1983ம் ஆண்டின் முதற் பரிசு பெற்ற நாவல்) 14
இன்றைய சினிமா என்பது யதார்த்த உலகின் கஷ்ட நஷ்டங்களை உணரவிடாமல் அவற்றிலிருந்து இளைஞர்களைப் பொய்யாகவும் கற்பனையாகவும் உயர்த்தி வைத்து வெற்றுக் கனவு காணச் செய்வதாக இருக்கிறது. வந்திருப்பவர் காட்டிய நாகரிகக் குறைவான அவசரம் சித்ராவுக்கு எரிச்சலூட்டுவதாக இருந்தது. 'நானே தேடி வந்திருக்கிற போது அவன் எப்படி இல்லாமற் போகலாம்?' என்கிற அவரது தொனியில் ஆணவம் இருந்தது. பொறுமையில்லாத மனிதராகத் தென்பட்டார் அவர். எங்கும் எதிலும் உலகமே தனக்கென்று தயாராகக் காத்திருக்கக் கடமைப்பட்டிருப்பது போன்ற அகங்காரத்தோடு பேசினார். அவசரத்தோடு பறந்தார். சற்று முன் அவரே கொடுத்த விசிட்டிங் கார்டிலிருந்து அவர் ஒரு சினிமாத் தயாரிப்பாளர் என்று சித்ராவுக்குத் தெரிந்திருந்தது. அவசரமும் பொறுமையின்மையும் தரத்துக்காகச் சிறிது நேரம் காத்திருக்கக் கூட நிதானமின்மையும் சினிமாவோடு கூடப் பிறந்த குணங்கள் என்பதை அவள் அறிவாள். அவசரமும் பரபரப்பும் இந்த நூற்றாண்டின் பொதுக் குணங்களாக இருந்தாலும் அவை திரை உலகத்தோடு அதிக நெருக்கம் கொண்டிருந்தன. இணைப்பும் இசைவும் பெற்றிருந்தன. பூமியோடு மனம்விட்டுப் பேச வேண்டும் என்று முத்தக்காளும், முத்தக்காளுடன் மனம் விட்டுப் பேச வேண்டும் என்று பூமியும் பல நாட்களுக்குப் பின் அன்று முதன் முதலாகச் சந்தித்துப் பேசுவதற்குப் போயிருந்தார்கள். தேடி வந்திருந்த ஆளோ தன்னைச் சந்திப்பதை விட உலகில் வேறெந்த வேலையுமே பூமிக்கு இருக்க முடியாது என்பது போல் அவசரப் படுத்திக் கொண்டிருந்தார். சித்ராவால் அவருக்கு உடனே எந்த உதவியும் செய்ய முடியவில்லை. மெஸ்ஸில் அது மிகவும் சுறுசுறுப்பான நேரமாக இருந்ததனால் கல்லாவில் உட்கார்ந்திருந்த சித்ராவுக்கு இடைவெளியே இன்றி பில்லுக்குப் பணம் வாங்கிப் போடுகிற வேலை இருந்தது. நிதானமாக மூச்சு விடக் கூட நேரமில்லை. கேஷ் டேபிளை வேறு யாரிடமும், விட்டு விட்டுப் போகவும் வழியில்லை. "உங்களால் முடியுமானால் சிறிது நேரம் காத்திருங்கள் இல்லாவிட்டால் நீங்கள் போகலாம். நீங்கள் தேடி வந்ததாகச் சொல்லி இந்த 'விஸிட்டிங் கார்டை' நான் அவரிடம் கொடுத்து விடுகிறேன்" என்று கத்தரித்தாற் போல் வந்தவருக்குப் பதில் சொன்னாள் அவள். ஆனால் அந்த ஆள் பெரிய விடாக் கண்டனாக இருந்தார். பணத்துக்காக எதுவும் காத்திருக்கும். எதுவும் கிடைக்கும். எதுவும் காத்திருந்தே ஆகவேண்டும். எதுவும் கிடைத்தே ஆக வேண்டும் என்ற சினிமா உலக முதலாளித்துவ மனப்பான்மை பச்சையாகத் தெரிந்தது. "நான் உடனே பார்த்தாகணும் அம்மா! அதிர்ஷ்டம் தேடி வர்ரப்ப இப்பிடிக் காக்கப் போட்ட எப்பிடி?" அவர் எதை அதிர்ஷ்டம் என்று சொல்லுகிறார் என்பது அவளுக்குப் புரியவில்லை. அந்த இடம், அந்தச் சூழ்நிலை அங்கிருந்த மனிதர் கூட்டம், ஹோட்டல் வாசனைகள், சமையல் நெடி, பரபரப்பு இவற்றுக்கிடையே தன்னைப் போன்ற ஒரு தேவ புருஷன் காத்திருப்பதா என்று கருதியது போல் அந்த மனிதர் காட்டிய வறட்டு ஜம்பம் அவளுக்கு ஆத்திர மூட்டியது. மெஸ்ஸை சேர்ந்த வேறு ஒரு வேலையாளிடம் அந்த விஸிட்டிங் கார்டை உள்ளே பூமிக்குக் கொடுத்து அனுப்பினாள் அவள். தான் பூமியைத் தேடி வந்திருப்பதே பூமிக்கு அதிர்ஷ்டம் என்பது போன்ற தொனியில் அந்த மனிதர் பேசியது வேறு அவளுக்குப் பிடிக்கவில்லை. இன்றைய சினிமா, யதார்த்த உலகின் கஷ்ட நஷ்டங்களிலிருந்து இளைஞர்களைப் பொய்யாகவும் கற்பனையாகவும் உயர்த்தி வைத்துக் கனவு காணச் செய்வது என்பதாலேயே அத்துறையின் மேலும் அதனோடு சம்பந்தப்பட்டவர்கள் மேலும் ஏற்கெனவே சித்ராவுக்குப் போதுமான ஆத்திரம் இருந்தது. இப்போது அந்த ஆத்திரம் அதிகரித்திருந்தது. சிறிது நேரத்தில் பூமி வந்தான். "கனகசுந்தரம் என்பது நீங்கள் தானா?" விசிட்டிங் கார்டைக் கையில் வைத்துக் கொண்டு அந்தக் கருப்புக் கண்ணாடி மனிதரை வினவினான். "ஆமாம்! நான் தான்! கனகா பிக்சர்ஸ்னு ஒரு படத் தயாரிப்புக் கம்பெனி வச்சிருக்கேன். இதுவரை ஏழெட்டுப் படம் ரிலீஸ் பண்ணியிருக்கோம். எங்க லேட்டஸ்ட் படம் 'நடுக்காட்டில் நளினி' நூறு நாள் ஓடிச்சு. கேள்விப்பட்டிருப்பீர்களே?" "அது சரி! இப்போது நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?" "நீங்கள் என்ன செய்யணும்னு சொல்றதுக்காகத் தானே இப்ப நானே இங்கே தேடி வந்திருக்கிறேன்." உழைத்து வருந்தாதபடி மேனி மினுக்கியே வளர்ந்திருக்கும் அந்த உருவத்தை நிமிர்ந்து பார்த்தான் பூமி. "நீங்கள் வீரப்பெருமாள் கோவில் தெரு சந்துலே இருக்கிறதாகச் சொன்னாங்க! முதல்லே அங்கே தேடிப் போனேன். அப்புறம் இங்கே பார்க்கச் சொன்னாங்க. இங்கே தேடி வந்தேன்." "அதெல்லாம் சரிதான்! என்னிடம் என்ன வேலையாக வந்தீர்கள்." "எங்க அடுத்த படத்திலே கராத்தே, குங்ஃபூ, ஜூடோ எல்லாத்தையும் கொண்டாரணும்னு ஆசை." "செய்யுங்களேன்." "அதாவது மெயின் சப்ஜெக்டே கராத்தேதான்! தீர்மானம் பண்ணியாச்சு." "கதையை முடிவு பண்ணி விட்டீர்களா?" "சப்ஜெக்டை முடிவு பண்ணிட்டா, அப்புறம் அதுக்குத் தகுந்த மாதிரி கதையை எழுதிக்கிடலாம்." "அப்படியா?" "ஆமாம். ஹீரோ நிறைய அடி, உதை எல்லாம் குடுக்கிற கதையா ஒண்ணை எழுதிக்கணும்! ஆனால் சிக்கல் அதிலே தான் இருக்கு." "என்ன?" பூமிக்கு வேலையின் அவசரமும் விரைவும் இருந்தாலும் அந்த வேடிக்கை மனிதரைக் கொஞ்சம் ஆழம் பார்க்க வேண்டுமென்று தோன்றியது. எதற்காக அந்த மனிதரை நிறுத்து வைத்து வீணுக்கு உரையாடி நேரத்தைக் கழிக்க வேண்டும் என்று சித்ராவுக்குத் தோன்றியது. ஆனால் பூமி அவரோடு தொடர்ந்து வேடிக்கை பண்ணிக் கொண்டிருந்தான். அவரே தொடர்ந்தார். "ஏரியா விற்பனை கணிசமாக ஆகிற மாதிரி டிஸ்ட்ரிபியூட்டர்ஸுக்குப் புடிச்ச ஹீரோவைப் போடாட்டியும் கஷ்டம். டிஸ்ட்ரிபியூட்டருக்குப் புடிச்ச ஹீரோவுக்கு கராத்தே தெரியாது... கராத்தே தெரியாத அந்த ஹீரோவை வச்சு இந்த சப்ஜெக்டை எடுக்கறது முடியாது... அதனால் ஹீரோவைக் காப்பாத்தி உதவி செய்யற அவனுடைய தோழனுக்குத் தான் கராத்தே, குங்ஃபூ எல்லாம் தெரியும்னு கதையையே மாத்திட்டா என்னன்னு பார்க்கிறோம்?" "கதை இன்னும் எழுதப்படாத போது எப்படி மாற்றுவீர்கள்?" "கதை என்ன பெரிய கதை? எழுதறதுக்கு முந்தியே மாத்திட்டாப் போச்சு!" "அடடே! பரவாயில்லையே! எத்தனை முன்யோசனை உங்களுக்கு?" "ஒண்ணா ரெண்டா, இந்த லயன்லே பத்து வருஷ செர்வீஸ் ஆச்சே?" "பெரிய அனுபவம் தான்!" "ஹீரோவோட தோழன் ரோலுக்கு உங்களை டிரை பண்ணினா என்னன்னு..." "என்னையா! எனக்கு நடித்தே பழக்கமில்லையே." "நடிப்பு என்ன, பெரிய நடிப்பு? ரெண்டு வாட்டி ஸ்டுடியோவுக்குள்ளார வந்து போனீங்கன்னா அதுவும் தானா வந்துட்டுப் போவுது..." "அவ்வளவு சுலபமா." "சுலபம் தான். இந்தக் கராத்தே சப்ஜெக்ட் விஷயமா இன்னிக்கு ராத்திரி ஒன்பது மணிக்கு ஹோட்டல் குபேராவில் ஸ்டோரி டிஸ்கஷன் வச்சுருக்கோம். ஒன்பதாம் நம்பர் ஏ.ஸி. சூட். நமக்கு ஒன்பதுதான் ராசியான நம்பருங்க. அதுக்கு நீங்களும் வந்தீங்கன்னா முடிவு பண்ண வசதியாயிருக்கும்." "எதை முடிவு பண்ண?" "எல்லாத்தையும் தான்! நீங்க கராத்தே பண்றது... நீங்க ஹீரோவா, தோழனாங்கறது... எல்லாமே முடிவு ஆயிடும்." "நான் முடிவு பண்ணுவதற்குள் நீங்களே முடிவு பண்ணி விடுவீர்கள் போலிருக்கிறதே..." "நீங்க மாட்டேன்னா சொல்லப் போறீங்க... வலிய வந்த சீதேவியை யாராவது காலாலே எட்டி உதைப்பாங்களா?" இதைக் கேட்டு பூமிக்கு உள்ளூரச் சிரிப்பாயிருந்தது. ஆனாலும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. வருவதாக ஒப்புக் கொண்டு அந்த மனிதருக்கு விடை கொடுத்தான். "கண்டிப்பா வந்துடுங்க... நான் கார் அனுப்பட்டுமா?" "வேண்டாம். பக்கத்தில் தானே? நானே வந்து விடுகிறேன்." அவர் போய்ச் சேர்ந்தார். மெஸ் வேலைகளையெல்லாம் முடித்துக் கொண்டு போய்ப் பார்க்கலாம் என்று தான் அவன் நினைத்தான். சித்ரா அவனைக் கேலி பண்ணினாள். அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டல் பக்கத்துச் சாலையிலேயே இருந்ததால் அவன் மிக எளிதாக நடந்தே போய்விட முடிந்தது. கனகசுந்தரம் ஸ்டோரி டிஸ்கஷனுக்குச் சரியாக ஒன்பது பேரைத்தான் அழைத்திருந்தார். ஜிகினாவாக மின்னிய இரண்டு மூன்று இளம் பெண்கள், சில வேறு ஆட்கள் எல்லாரும் வந்து இருந்தார்கள். பூமி உள்ளே நுழைந்ததும் கனகசுந்தரம் அவனை உற்சாகமாக வரவேற்று எல்லாருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தார். என்ன நிறம் என்று தெரியாமல் பூச்சு வேலையினால் மின்னிய இளம் எக்ஸ்ட்ரா ஒருத்தி திடீரென்று "உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே? எங்கேன்னு நினைவு வரல்லே" என்று பூமியிடம் கேட்டாள். "அப்படியா? நினைவு வரட்டும், ஏன் அவசரப்படுகிறீர்கள்?" "நீங்க தமிழ்ப் புலவருங்க மாதிரியே பேசறீங்க சார்..." "நல்லாத் தமிழ் பேசினா உடனே புலவர் மாதிரிங்கறாங்க! வேற எப்படித்தான் பேசறதாம்?" என்று கனகசுந்தரம் பதிலுக்கு அவளை மடக்கினார். பூமி அங்கிருந்தவர்கள் எல்லாரையும் ஒரு நோட்டம் விட்டான். தலையை ஆட்டுவதைத் தவிர அவர்களால் எதையும் விவாதிக்க முடியும் என்று அவனுக்குத் தோன்றவில்லை. சாயங்கால மேகங்கள் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
|