(தமிழ்நாடு அரசின் 1983ம் ஆண்டின் முதற் பரிசு பெற்ற நாவல்) 23
உரிமைகளைச் சலுகைகள் போல் பெறும் மௌட்டீகம் நிறைந்த மக்களும் கடமைகளை உதவிகள் போலச் செய்யும் திமிர் பிடித்த அதிகாரவர்க்கமும் உள்ள நாட்டில் சுதந்திரமாவது, ஜனநாயகமாவது? எந்த ஒரு சமூக விரோத சக்தியும் உடனே ஓய்ந்து விடுவதில்லை என்று தெரிந்தது. 'என் விருப்பத்துக்கு அடி பணிந்து விடு! இல்லையானால் உன்னை ஒடுக்கிவிடுவேன்' என்பதுபோல மிரட்டும் சக்தி ஒவ்வோர் கெட்டவனுக்கும் இருந்தது. லஞ்சமும், கலப்படமும் இரட்டைக் குழந்தைகளாயிருந்தன! வர்த்தகத்தில் இலஞ்சம் கொடுப்பதற்கும் சேர்த்து லாபம் சம்பாதிக்க வேண்டுமானால் கலப்படம் செய்தே ஆக வேண்டியிருந்தது. உணவு விடுதிகளும், உண்ணும் பொருள்களும் கூட இதற்கு விதிவிலக்காக இல்லை. அதே மைலாப்பூரில் சுகாதாரத் தேவைகளை நிறைவு செய்யாத எத்தனையோ உணவு விடுதிகள் மாநகராட்சியின் சுகாதார இலாகாவுக்கு மனக்குறை ஏற்படாமல் அவர்களை அவ்வப்போது 'கவனித்து' விட்டுப் பிரமாதமாக நடந்தன. இதுவரை முத்தக்காளும் அப்படித்தான் செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால், பூமியைப் போல் வளைந்து கொடுக்க மறுத்த மனிதன் வந்த பிறகுதான் அங்கே சிக்கல்கள் உண்டாயின. சிரமங்கள் கண்ணுக்குத் தென்பட்டன. ஒரு நாட்டின் சுதந்திரமும் ஜனநாயகமும் அதன் எல்லா மக்களுக்கும் நியாயமான சிவில் உரிமைகளைத் தரமுடியும் தரவேண்டும் என்ற பூமியின் வாதம் அங்கே செல்லுபடியாகவில்லை. பணமும் அதிகாரமும் உள்ளவர்களுக்குச் சிவில் உரிமைகள் மட்டுமல்லாமல் அதற்கும் அதிகமான உரிமைகள் காட்டப்பட்டன. பணமோ அதிகாரமோ இல்லாமல் நியாயமான பாத்தியதை மட்டும் உள்ளவர்களுக்கோ அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டன. சுதந்திர இந்தியா அப்படித்தான் இருந்தது. உரிமைகளுக்கும் மறைமுக விலை, வரி எல்லாம் இருந்தது. உரிமைகள் மறுக்கப்பட்ட போது பணமும் அதிகாரமும் உள்ளவர்கள் அவற்றைச் சலுகைகள் போல் பெற முற்பட்டு பின் அதுவே வழக்கமாகி விட்டிருந்தது. உரிமைகளைச் சலுகைகள் போல் பெறும் மௌட்டீகம் நிறைந்த மக்களும், கடமைகளை உதவிகள் போல் செய்யும் திமிர் பிடித்த அதிகார வர்க்கமும் ஏற்படுகிற நாட்டில் சுதந்திரமாவது, ஜனநாயகமாவது என்று தோன்றியது. கார்ப்பொரேஷன் உத்தரவு பூமிக்கு எரிச்சலூட்டியது. மாநகராட்சிச் சட்டப்படி என்னென்ன சுகாதார வசதிகள் தேவையோ அவை குறைவின்றிச் செய்யப்பட்டிருந்தும் காரணமே காட்டாமல் ஹோட்டலை உடனே மூட வேண்டும் என்று உத்தரவு இடப்பட்டிருந்தது. அந்தச் சவாலை ஏற்று எதிர் நின்று சமாளித்தாக வேண்டும் என்று பூமி உறுதி செய்து கொண்டான். முத்தக்காளிடம் இந்த விவரத்தைச் சொல்லி யோசனை கேட்டால் அவள் தான் கடைப்பிடித்த பழைய வழியைத்தான் விரும்புவாள் என்று பூமி எண்ணினான். சித்ராவும் அப்படித்தான் அபிப்பிராயப்பட்டாள். பாவ புண்ணியங்களையும் கடவுளையும் நம்பும் பழைய தலைமுறை மனிதர்கள் அவற்றின் உடனிகழ்ச்சியாகச் சத்தியத்தையும் நேர்மையையும் நம்பிச் செயல்பட மட்டுமே துணிவதில்லை. அப்படி நேரங்களில் சமயோசிதத்தை மட்டுமே நம்பி வளைந்து கொடுத்து வாழ்கிறார்கள். அதனால்தான் இந்நூற்றாண்டில் ஆஸ்தீகனாக இருக்கும் ஓர் அயோக்கியனை விட நாஸ்தீகனாக இருக்கும் ஒரு யோக்கியனை அதிகம் மதிக்க வேண்டியிருக்கிறது. நேர்மையை நம்பாமல் கடவுளை மட்டுமே நம்புகிற ஒருவனை விடக் கடவுளை நம்பாமல் நேர்மையை நம்பும் ஒருவனைப் பல மடங்கு உயர்ந்தவனாகக் கொள்ள வேண்டியிருக்கிறது. இதில் பூமி கடவுளை விட உண்மையையும் நேர்மையையும் மதிக்கவும் செயலாற்றவும் கற்றிருந்தான். சித்ரா அவனிடம் சொன்னாள்: "கார்ப்பொரேஷன் விவகாரமே இப்படித்தான். அந்தக் கட்டிடமே லஞ்ச மயமானது. சுவரோரமாக யாராவது சாய்ந்து நின்றால், அந்தக் கட்டிடத்துச் சுவர் கூடக் கை நீட்டி, 'ஏதாவது கொடு' என்று கேட்கும். ரிப்பன் கட்டிடத்தினது சுவருக்குக் கூட அந்த மகிமை உண்டு." "இருக்கலாம்! அது எனக்குத் தெரியாது. ஆனால், நான் இதை இப்படியே விட்டுவிடப் போவதில்லை. மடியில் கனமில்லாத போது வழியில் யாருக்காகப் பயப்பட வேண்டும்? எதற்காகப் பயப்பட வேண்டும்? சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போகிறேன். இந்த மாதிரி வழக்குகளில் பழக்கமுள்ள ஒரு வக்கீலைச் சந்திக்க வேண்டும்" என்றான் பூமி. "திரு. வி.க. லெண்டிங் லைப்ரரி பரமசிவம் அண்ணனுடைய கடையில் இப்படி ஒரு வக்கீலை நான் அடிக்கடி பார்த்திருக்கிறேன். கன்ஸ்யூமர் மூவ்மெண்ட், சிவில் லிபர்ட்டீஸ் இயக்கம் ஆகியவற்றோடு நெருங்கின தொடர்பு உள்ளவர். புத்தகங்கள் எடுப்பதற்காக அடிக்கடி அண்ணனுடைய லைப்ரரிக்கு வருவார்" என்று சித்ரா கூறியவுடன் இருவருமாகப் பரமசிவத்தின் நூல் வழங்கும் நிலையத்திற்குச் சென்றார்கள். அங்கே மாலை நேரத்தில் அலுவலகம் விட்டு வீடு திரும்புகிற வழியில் புத்தகங்களையும் எடுத்துச் செல்வதற்காகப் பலர் கூடியிருந்தார்கள். அந்தப் பரபரப்பிலும் பரமசிவம் பூமியையும் சித்ராவையும் முகமலர்ச்சியோடு வரவேற்றார். எங்கிருந்தோ அப்போது புரட்சிமித்திரன் அங்கு வந்து சேர்ந்தான். "ஹாய் சித்ரா! உன்னிடம் நான் எவ்வளவோ வற்புறுத்திச் சொல்லியிருந்தும் அந்தக் கவியரங்கத்துக்கு நீ ஏன் வரவில்லை? அடுத்த வாரம் எல்.எல்.ஏ. பில்டிங் ஹாலில் ஒரு பட்டிமன்றம் இருக்கிறது. அதற்காவது கட்டாயம் உன்னை எதிர்பார்க்கிறேன்" - என்று தயாராகச் சித்ராவிடம் இன்விடேஷன் கார்டை எடுத்து நீட்டினான் புரட்சிமித்திரன். சித்ரா புன்னகை புரிந்தாள். கார்டை வாங்கிக் கொண்டாள். "உங்கள் இன்விடேஷனுக்கு நன்றி! ஆனால் இதற்கெல்லாம் வரவும், பொழுதுபோக்கவும் எனக்கு நேரமில்லை. உங்களைப் போன்ற பிரபுத்துவக் குடும்ப இளைஞர்களுக்கு கவிதை, கலை, இலக்கியம், புரட்சி எல்லாமே இப்படிப் பொழுது போக்குகள்தான். பட்டிமன்றங்களும், கவியரங்கங்களும் நாட்டில் எதையுமே சாதிக்கப் போவதில்லை." "நீ இப்படியெல்லாம் பேசுவதற்கு மிஸ்டர் பூமிநாதன் தான் காரணம் என்று நினைக்கிறேன் சித்ரா!" "நீங்கள் சொல்கிறபடி இந்த மாறுதல்களுக்கு நான் தான் காரணம் என்றால், அதற்காக நான் வருந்தவில்லை, பெருமைப் படுகிறேன்" என்று உடனே புரட்சிமித்திரனுக்குச் சுடச்சுடப் பதில் கூறினான் பூமி. நூல் வழங்கு நிலையத்தில் கூட்டம் குறைந்ததும் பரமசிவமே பூமியையும், சித்ராவையும் லாயிட்ஸ் ரோட்டில் இருந்த அந்த வழக்கறிஞர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அந்த வழக்கறிஞர் உற்சாகமாக அவர்களை வரவேற்றார். பூமி எல்லா விவரங்களையும் தெரிவித்து விட்டு, மாநகராட்சியின் சுகாதார இலாகாவிலிருந்து வந்திருந்த நோட்டீஸையும் அவரிடம் கொடுத்தான். அதைப் படித்துப் பார்த்துவிட்டு அவர் அவனிடம் கேட்டார்: "சட்டப்படி இருக்க வேண்டிய சுகாதார வசதிகள் உங்கள் ஹோட்டலில் குறைவின்றி இருக்கின்றன அல்லவா?" "சொல்லப் போனால் சட்டத்தில் இருப்பதை விட அதிகமான சுகாதார வசதிகளை நாங்கள் எங்களுடைய ஹோட்டலில் செய்து கொடுத்திருக்கிறோம்." "பின் எதற்காக இத்தனை கடுமையான நடவடிக்கை? ஏதோ ஹோட்டலை உடனே இழுத்து மூடி விட வேண்டும் என்பது போல் ஆத்திரமாக உத்தரவு போட்டிருக்கிறார்கள்?" "நினைத்த போதெல்லாம் சானிடரி இன்ஸ்பெக்டரும், மேஸ்திரியும், பரிவாரங்களும் ஹோட்டலுக்குள் நுழைந்து நாற்பது ஐம்பது ரூபாய்க்குச் சாப்பிட்டுவிட்டு பில் கொடுக்காமல் போவதை நாங்கள் அனுமதிக்க மறுத்தோம். எண்ணெயும் பருப்பும் இப்போது விற்கிற விலையில் ஓசி கொடுத்துக் கட்டுப்படியாகுமா? நாங்கள் ஓசி டிபன் மறுத்ததற்குப் பழி வாங்கத்தான் இந்த நடவடிக்கை என்று நினைக்கிறேன்." "ஹோட்டலை மூடிவிட முடியும் என்ற அவர்களுடைய திமிரை ஒடுக்க வழி இருக்கிறது. கவலைப்படாதீர்கள். ஒரு ரிட் போடலாம். மாநகராட்சி உத்தரவிற்கு ஸ்டே வாங்கிவிடலாம். அது என்னால் முடியும். மற்ற வர்த்தகர்கள் சுலபமாக எதற்கெடுத்தாலும் லஞ்சம் கொடுத்து பழக்கப்படுத்தி விடுவதினால் லஞ்சம் கொடுக்காதவன் மோசமானவன் என்று நினைத்துப் பழிவாங்க முற்பட்டு விடுகிறார்கள். அதிகார வர்க்கத்தையும் சர்க்கார் அலுவலகங்களையும் பிடித்திருக்கும் நீண்டகாலத் தொற்று நோய் அது. புதிய விழிப்புள்ள இளைஞர் சமூகம் தான் இனி அதைப் போக்க வேண்டும். இப்போது நீங்கள் முன் வந்திருக்கிற மாதிரிப் பலர் துணிந்து முன் வந்து நீதி கோரினால் தான் பரிகாரம் கிடைக்கும்! கோர்ட் வேண்டாம். வழக்கு வேண்டாம். வம்பு வேண்டாம். குறுக்கு வழியில் பணத்தைக் கொடுத்துத் தன்னைக் கட்டிக் கொள்ளலாம் என்று மக்களே குறுக்கு வழிகளை நாடுகிற வரை இந்த நோய் தீரப் போவதில்லை." "எனக்குக் குறுக்கு வழியில் நம்பிக்கை இல்லை சார். வம்புக்கும் வழக்குக்கும் நான் தயார்?" என்றான் பூமி. "கார்ப்பொரேஷனை ஒரு கை பார்க்கலாம். எல்லாம் செய்து டைப் பண்ணி வைக்கிறேன். நாளைக் காலையில் வாருங்கள்! வக்காலத்தில் கையெழுத்துப் போட வேண்டியிருக்கும்" என்றார் அந்த வழக்கறிஞர். பூமி அதற்கு முழு மனத்தோடு சம்மதித்தான். சாயங்கால மேகங்கள் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
|