(தமிழ்நாடு அரசின் 1983ம் ஆண்டின் முதற் பரிசு பெற்ற நாவல்) 27
வாழ்வதற்குத்தான் பணம் வேண்டுமே ஒழியப் பணம் வேண்டும் என்பதற்காக மட்டுமே வாழ்ந்து விட முடியாது; கூடாது. அன்று முத்தக்காளின் கோபத்துக்கு ஆளானதில் சித்ராவின் மனம் பெரிதும் புண்பட்டு விட்டது. பூமியின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டுத்தான் அவள் மீண்டும் கேஷ் டேபிளில் அமர்ந்தாளே ஒழிய உண்மையில் அங்கே இருப்பது முள்ளின் மேல் உட்காருவது போல் இருந்தது அவளுக்கு. பழி சுமத்தப்பட்டு விட்டோம் என்ற உணர்ச்சியில் கூனிக் குறுகி மனம் நைந்து போயிருந்தாள் அவள். இத்தனை நாள் பழகியும் தன்னைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியாமல் யாரோ ஒரு கைச் சுத்தமில்லாத சர்வர் கூறிய கோள் வார்த்தைகளை நம்பி முத்தக்காள் ஒரே நொடியில் பொரிந்து தள்ளி விட்டாளே என்று மனம் குமுறியது. "இது நான் பள்ளியில் மாதம் பூராவும் உழைத்து வாங்கிய சம்பளப் பணம். என் மேல் நம்பிக்கை இல்லாமல் அப்படி உங்களுக்குச் சந்தேகமாயிருந்தால் இதையும் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். எனக்குப் பணம் பெரிதில்லை. மானம் தான் பெரிது" என்று உடனே முத்தக்காள் முன்னால் போய் ஆத்திரம் தீரக் கூறி அந்தப் பணத்தை வீசி எறிந்துவிட வேண்டும் போல் சித்ராவுக்குக் கை துறுதுறுத்தது. மத்திய தரக் குடும்பத்து மனப்பான்மையோடு கூடிய படிப்பறிவு இல்லாத ஒரு விதவை எப்படி நடந்து கொள்வாள் என்று எதிர்பார்க்க முடியுமோ அப்படித்தான் முத்தக்காள் நடந்து கொண்டிருந்தாள். அதற்குப் பின் உட்புறக் கூடத்தில் பூமி முத்தக்காளிடம் இந்த நிகழ்ச்சியைக் கூறி அவள் தன்னிடம் அப்படி நடந்து கொண்டது முறையில்லை என்று கண்டித்து இரைவதைச் சித்ராவே கேஷ் டேபிளில் அமர்ந்தபடி கேட்க முடிந்தது. அவன் தன் சார்பில் முத்தக்காளை கண்டித்துப் பேசியது அவளுக்கு ஆறுதலாயிருந்தது. வாடிக்கையாளர்களுக்குப் பில்லை குறைத்துப் போட்டு அதற்குப் பதிலாக 'டிப்ஸ்' வாங்கிப் பணம் பண்ணிக் கொண்டிருந்த அந்த சர்வரின் ஊழலைத் தான் கண்டுபிடித்து அம்பலமாக்கியதற்குப் பழி தீர்த்துக் கொள்வதற்கான முயற்சி தான் இது என்பது சித்ராவுக்கு நன்றாகப் புரிந்திருந்தாலும் கொஞ்சம் கூட யோசிக்காமல் முத்தக்காள் அதற்குப் பலியானது வருத்தத்தை அளித்தது. அவளால் அதை சிறிதும் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. வழக்கமாக ஏழு ஏழரை மணிக்குக் கூட்டம் குறையத் தொடங்கியதும் கேஷ் டேபிளை பூமியிடமோ முத்தக்காளிடமோ ஒப்படைத்துவிட்டு அவள் வீடு திரும்புவாள். அன்று உள்ளே பூமிக்கும் முத்தக்காளுக்கும் வாக்குவாதம் நடந்து கொண்டிருந்ததால் எட்டு - எட்டே கால் மணி வரை அவள் காத்திருக்க வேண்டியிருந்தது. மேஜையில் கம்பியில் வாங்கிக் குத்தியிருந்த பில் துணுக்குகளை எண்ணி அவற்றில் இருந்த தொகையை பொறுமையாக ஒரு தாளில் கூட்டிக் கணக்குப் பார்த்து அதே தொகை ரொக்கமாக கேஷ் டேபிளில் இருப்பதை உறுதி செய்து கொண்டாள் சித்ரா. அதைத் தாளில் எழுதி வைத்தாள். முதல் முறையாக இன்று அதெல்லாம் செய்தாள். எட்டரை மணிக்கு பூமி முத்தக்காளை அழைத்துக் கொண்டு கேஷ் டேபிளருகே வந்தான். மெஸ்ஸில் அப்போது வாடிக்கையாளர்களின் கூட்டம் குறைந்திருந்தது. "என்னை மன்னிச்சிடும்மா! நான் ஆத்திரத்தில் யோசிக்காமல் பேசினது தப்புதான்! அந்தப்பாவி எங்கிட்ட வந்து அப்படி வத்தி வச்சு கோள் மூட்டியிருக்காட்டி இது நடந்தே இருக்காது" என்று குனிந்த தலை நிமிராமல் சித்ராவிடம் மன்னிப்புக் கேட்டாள் முத்தக்காள். "டேபிளில் குத்தியிருக்கிற பில்களோட மொத்தத் தொகையும் உள்ளே இருக்கிற ரொக்கமும் சரியாயிருக்கு! கணக்கு விவரம் எழுதி வச்சிருக்கேன். பார்த்துக் கொள்ளலாம்!" என்று பூமி, முத்தக்காள் இருவருக்கும் பொதுவாகக் கூறிவிட்டுக் கேஷ் டேபிளிலிருந்து ஒதுங்கிக் கீழே இறங்கினாள் சித்ரா. "கொஞ்ச நேரம் நீங்கள் பார்த்துக் கொண்டிருந்தால் அதற்குள் நான் இவளை வழியனுப்பிவிட்டு வந்து விடுகிறேன்" என்று கூறி முத்தக்காளை கேஷ் டேபிளில் அமரச் செய்து விட்டுச் சித்ராவோடு வெளியே புறப்பட்டான் பூமி. மெஸ்ஸிலிருந்து வெளியேறித் தெருவைக் கடந்து எதிர் வரிசைப் பிளாட்பாரத்துக்கு வந்தவுடனே பூமி சித்ராவிடம் பேசினான்: "ஒன்றும் மனத்தில் வைத்துக் கொள்ள வேண்டாம்! விவரம் புரியாமல் அவசரப்பட்டுவிட்டாள். நான் எடுத்துச் சொல்லி விளக்கியதும் வருத்தப்படுகிறாள்." "உங்களுக்காகத்தான் நான் இங்கே இத்தனை உரிமை எடுத்துக் கொண்டு ஊடாடி வேலை செய்தேன். ஒரு தப்பும் செய்யாமலே இத்தனை பெரிய அபவாதத்துக்கு ஆளாக நேரும் என்று தெரிந்திருந்தால் இந்தப் பக்கமே தலைவைத்துப் படுக்கக் கூடப் பயந்திருப்பேன்." "அறியாமையின் அடையாளங்களில் முதன்மையானது சந்தேகம். அதை மறப்பதையும் மன்னிப்பதையும் தவிர வேறு வழியில்லை." "நாணயத்தைச் சந்தேகப்படுகிற இடங்களில் பழகுவதற்கே பயமாயிருக்கிறது." "பயப்படவோ ஒதுங்கி விடவோ கூடாது! எனக்காக எப்போதும் போல் வந்து போய்க் கொண்டிருக்க வேண்டும்." "இதுவரை வந்து போய்க் கொண்டிருந்ததே உங்களுக்காகத்தானே ஒழிய முத்தக்காளுக்காக இல்லை." "இனியும் அதில் மாறுதல் எதுவும் இருக்கக் கூடாது. என்னைப் பொறுத்தவரை இந்த 'மெஸ்ஸை'த் தொடர்ந்து நடத்திக் காட்டுவதை வாழ்க்கையின் சவாலாக ஏற்றிருக்கிறேன். சமூக விரோத சக்திகள் 'இதை இனிமேல் நடத்தவே முடியாது' என்கிற அளவு பயமுறுத்தினதை நாம் ஒரு போதும் மறந்து விட முடியாது!" "முத்தக்காளுக்காக நீங்கள் எவ்வளவோ தியாகம் செய்திருக்கிறீர்கள்! இதில் செலவிடும் நேரத்திற்குப் பதில் ஒரு கராத்தே பள்ளிக்கூடம் வைத்து நடத்தினால் கூட ஆயிரம் ஆயிரமாக நீங்கள் சம்பாதிக்கலாம்." "அவசர அவசரமாகப் பணம் சம்பாதிப்பது ஒன்று மட்டுமே வாழ்க்கையின் இலட்சியம் என்று நான் நினைக்கவில்லை. வாழ்வதற்குத்தான் பணம் வேண்டுமே ஒழியப் பணம் வேண்டுமென்பதற்காக வாழ்ந்து விட முடியாது." "முத்தக்காளும், மற்றவர்களும் பணத்துக்காகத்தான் வாழ்க்கை என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது." ஆமாம் என்றோ இல்லை என்றோ பூமி இதற்குப் பதில் கூறவில்லை. அவளோடு மேலும் சிறிது தொலைவு உடன் நடந்து சென்று வழியனுப்பி விட்டுத் திரும்பினான். அவனுடைய பெருந்தன்மையும் நிதானமும் அவளை மேலும் கவர்ந்தன. அத்தனை வலிமை வாய்ந்த மனிதன் மிகமிகச் சிறிய காரணங்களுக்காகத் தன் வலிமையைச் சிதற விடாமல் இருக்கும் நிதானம் அவளுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அறியாமைகளை உணர்ந்து புரிந்து பிறரை மன்னிக்கும் அளவு அறிவு உயர்ந்திருக்க வேண்டும் என்று பூமியே அடிக்கடி சொல்வதுண்டு. அதற்கும் அவனே உதாரணமாயிருந்தான். அவனே அதைக் கடைப்பிடித்தான். இந்த மனஸ்தாபத்திற்குப் பின் சித்ரா இரண்டு மூன்று நாள் மெஸ் பக்கம் போகவே இல்லை. அவளுடன் பணிபுரியும் சக ஆசிரியைகளின் பிரச்னை ஒன்று வந்து சேர்ந்தது. பூமியோடு பழகத் தொடங்கிய பின் சித்ரா பள்ளியில் மாலை நேர 'டியூஷன்களை' விட்டு விட்டாள். தேவகி முதலிய மற்ற ஆசிரியைகள் பள்ளி விட்ட பின் ஒரு மணி நேரத்துக்கு மாலை நேர டியூஷன் எடுத்தார்கள். திடீரென்று அந்த மாத முதல் தேதியிலிருந்து அவர்கள் பணி புரிந்த பள்ளியில் மாலை நேர டியூஷன்களுக்கான கட்டணம் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டும் அந்த அதிகப்படி வேலைக்காக ஆசிரியைகளுக்குக் குறைந்த தொகையே ஊதியமாகத் தரப்பட்டு வந்தது. "எங்களுக்கு அதிக டியூஷன் ஊதியம் தரா விட்டாலும் பரவாயில்லை. குழந்தைகளின் பெற்றோர்களிடம் கொள்ளையடிக்காமல் இருக்கட்டும். எங்களைச் சாக்குச் சொல்லி அவர்களிடம் கொள்ளையடிக்கக் கூடாது" என்று ஆசிரியைகள் அபிப்ராயப்பட்டார்கள். கல்வியின் பெயரைச் சொல்லிக் கற்பவர்களுக்குத் தொல்லை கொடுத்துக் கற்பிப்பவர்களுக்கும் பயன்படாமல் இடைத்தரகர்கள் கொள்ளையடிப்பதைத் தவிர்க்க வேண்டியிருந்தது. வேண்டி வருபவர்களுக்கு எல்லாம் 'வெள்ளத்தால் அழியாது, வெந்தழலால் வேகாது' என்று பெருமித உணர்வுடன் வித்யாதானமாகக் கல்வியை வாரி வழங்கிவிட்டு நிமிர்ந்து நின்ற ரிஷிகளின் காலமும் திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியர்களின் காலமும் முடிந்து போய் சம்பளம், அலவன்ஸ், வீட்டு வாடகைத் தொகை என்று கற்பிப்பதற்கும் கற்பதற்கும் விலைகள் வந்து விட்ட காலத்தில் தான் அவர்கள் இப்போது வாழ்ந்து கொண்டிருந்தார்கள். நகரங்களில் ஒவ்வொரு குடியிருப்புப் பகுதிக்கும் ஒரு காய்கறிக்கடை, ஒரு சலூன், ஒரு லாண்டிரி எல்லாமும் போல ஒரு பள்ளிக்கூடமும் தேவைப்பட்டது. சலூனும், காய்கறிக்கடையும், லாண்டிரியும் திறந்து கட்டணத்துக்கு வேலை செய்து தருவது போல் நர்ஸரி கான்வென்ட் பள்ளிகளைத் திறந்து வித்யா வியாபாரம் நடத்தப்பட்டு வந்தது. கல்வியின் சூப்பர் மார்க்கெட்டுகளான நகரப் பள்ளிகளில் கல்வி வியாபாரமும் எல்லா வியாபாரங்களையும் போலத்தான் நடந்தது. இதில் தாங்கள் பலி கடாக்களாகப் பயன்படுவதைத் தேவகியும் மற்ற ஆசிரியைகளும் விரும்பவில்லை. இதைப் பற்றி என்ன மேல் நடவடிக்கை எடுக்கலாம் என்று யோசிப்பதற்காக அந்த ஆசிரியைகளையும் உடனழைத்துக் கொண்டு லெண்டிங் லைப்ரரி பரமசிவம் அண்ணனையும் பூமியையும் சந்திக்க வந்தாள் சித்ரா. பரமசிவத்தை அவருடைய கடையில் பார்த்துப் பேசிவிட்டுப் பூமியைப் பார்க்க லஸ்ஸுக்குப் போனார்கள் அவர்கள். வந்தவர்கள் கூட்டமாக இருக்கவே அவர்களிடம் பேசுவதற்காகத் தனிமையை நாடி நாகேஸ்வரராவ் பூங்காவுக்கு அவர்களை அழைத்துச் சென்றான் பூமி. இரண்டு மூன்று நாட்களாக சித்ரா மெஸ்ஸுக்கு வராதது பற்றிப் பூமி அவளைக் கடிந்து கொண்டான். சின்ன மனஸ்தாபங்களைப் பெரிய விஷயமாக நீடிக்க விட்டுக் கொண்டு சிரமப்படக்கூடாது என்று அவளைக் கண்டித்தான். சித்ரா தான் வந்த காரியத்தைப் பற்றி அவனிடம் விவரித்துவிட்டு உடன் இருந்த ஆசிரியைகளை அறிமுகப்படுத்தி வைத்தாள். பிரச்னைகளை விவரித்துவிட்டு அவனுடைய யோசனையைக் கேட்டார்கள் அவர்கள். அவன் அவர்களைத் திருப்பிக் கேட்டான், "உங்களால் ஒரு தீமையை எதிர்த்துப் போரிட முடியுமா இல்லையா என்பதை முடிவு செய்யுமுன் நீங்கள் எவ்வளவிற்கு அதில் உறுதியும் தன்மானமும் உடையவர்கள் என்பது எனக்குத் தெரிய வேண்டும். பெரும்பாலான ஆசிரியர்கள் போராட்ட உணர்வும் தன்மானமும் அற்றவர்களாகவே இருப்பது எனக்கு வேதனையளிக்கிறது." "நீங்கள் முந்திய தலைமுறை ஆசிரியர்களைப் பற்றிச் சொல்கிறீர்கள். அவர்கள் அநாவசியமான தியாக உணர்வைச் சுமந்து கொண்டு சிரமப்பட்டார்கள்." "உங்களிடம் அந்த அநாவசியமான தியாக உணர்வு இல்லை என்று நீங்கள் உறுதியாகச் சொல்ல முடியுமா?" "தியாகத்துக்குப் பாத்திரமாக முடியாத பச்சை வியாபார நிறுவனங்களுக்காக எந்த தியாகத்தையும் செய்ய நாங்கள் தயாராயில்லை" என்றார்கள் அவர்கள். "அப்படியானால் உங்கள் தைரியத்தைப் பாராட்டுகிறேன்" என்று தொடங்கி அவர்களுக்கு யோசனைகள் கூற முன் வந்தான் அவன். சாயங்கால மேகங்கள் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
|