(தமிழ்நாடு அரசின் 1983ம் ஆண்டின் முதற் பரிசு பெற்ற நாவல்) 29
எட்டுத் திசைகளிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடைந்தெடுத்த கோழைகளே தெரிகிற தேசத்தில் சுதந்திரத்திற்குப் பிறகும் பச்சை அடிமைத்தனமே தொடரும். இராட்சத ராட்டினம் இரண்டாவது முறை நாலைந்து சுற்றுக்கள் வேகமாகச் சுற்றுவதற்குள்ளேயே சித்ராவுக்குத் தலைசுற்றத் தொடங்கிக் கண்களில் நீர் துளித்துவிட்டது. அவள் நழுவி விழுந்து விடாமல் பூமி தாங்கிக் கொள்ள வேண்டியதாகி விட்டது. மூன்றாவது முறை சுற்றத் தொடங்குவதற்கு முன்பே பூமி அவளோடு அவசரமாக கீழே இறங்கி விட்டான். சித்ரா குழந்தைத் தனமாக உடனே பூமியை ஒரு கேள்வி கேட்டாள்: "தலை சுற்றாமல் மயக்கமோ வாந்தியோ வராமல் உங்களால் இந்த வேகத்தை எப்படித்தான் பொறுத்துக் கொள்ள முடிகிறதோ?" "என்னைப் பொறுத்தவரை இந்த வேகம் என் இயல்பு. வேகமும் சுறுசுறுப்பும் இல்லாவிட்டால் குங்ஃபூ, கராத்தே, ஜூடோ எதிலுமே நான் தேர்ந்திருக்க முடியாது. என் போல் வேகமும் தீரமும் உள்ளவர்கள் குறைவாகவும் மந்த புத்தியும் பயமும் கோழைத்தனமும் உள்ளவர்கள் அதிகமாகவும் உள்ள தேசத்தில் அவர்களை விட இன்று என் போன்றவர்கள் தான் அதிகம் சிரமப்பட வேண்டியிருக்கிறது." பூமியின் கோபமும் குமுறலும் இன்னும் தணியவில்லை என்பதையே அவனுடைய சொற்கள் காட்டின. அவனே தொடர்ந்தான்: "வெறும் நொண்டிகளை வைத்து ஓட்டப் பந்தயம் நடத்திக் காட்டி வெற்றி பெற்றுவிடலாம் என்று நம்பிய நான் தான் முட்டாள்தனம் பண்ணிவிட்டேன்." "விட்டுத் தள்ளுங்கள். வேறு எதையாவது பேசலாம். திரும்பத் திரும்ப இப்படி நினைத்து வருந்துவதற்குக் கூட இவர்கள் தகுந்தவர்கள் இல்லை." "எட்டுத் திசைகளிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கோழைகளே தெரிகிற தேசத்தில் சுதந்திரத்திற்குப் பிறகும் பச்சை அடிமைத்தனமே தொடரும்." "நீங்கள் ரொம்பவும் கோபமாயிருக்கிறீர்கள் என்று தெரிகிறது." "நம்பியவர்கள் ஏமாற்றிவிட்டால் என்னால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியாது! நான் என்னை நம்பியவர்களை ஒரு போதும் ஏமாற்றியதில்லை." "இதில் உங்களுக்கு என்ன வந்தது? எங்கள் நன்மைக்காக நீங்கள் இதில் தலையிட்டீர்கள். அவர்கள் பெட்டிஷனில் கையெழுத்துப் போடவில்லை என்றால் நஷ்டம் அவர்களுக்குத் தானே?" "அப்படியில்லை! மண் குதிரைகளை நம்பி நான் ஆற்றில் இறங்காமலாவது இருந்திருக்கலாமே?" "உண்மைதான்! ஆனால் இப்போதும் ஒன்றும் குடி முழுகிப் போய்விடவில்லை. நானும் தேவகியும் கையெழுத்துப் போட்டிருக்கிறோமே. அந்த இரண்டு கையெழுத்துக்களுடனே நீங்கள் பெட்டிஷனை அனுப்பலாம்." "இந்த ஆட்டு மந்தைக் கூட்டம் நன்மையடைவதற்காக நீங்கள் இருவரும் பலியாகத்தான் வேண்டுமா?" "பலருக்குக் கிடைக்கிற பெரும்பாலான நன்மைகள் சிலர் பலியாவதனால் தான் கிடைக்க முடிகிறது." நீண்ட விவாதத்திற்குப் பின்னர் அவர்கள் இருவருடைய கையெழுத்தோடு மட்டும் அந்தக் கடிதத்தைச் சம்பந்தப்பட்ட மேலதிகாரிகளுக்கு அனுப்புவது என்று முடிவு செய்தார்கள். அவர்கள் தீவுத் திடலிலிருந்து லஸ் முனைக்குச் செல்வதற்காக பஸ் ஏறியபோது பஸ்ஸில் பொருட்காட்சிக்கு வந்து திரும்பும் கூட்டம் பயங்கரமாயிருந்தது. ஒரே நெரிசலும் நெருக்கடியுமாகப் பஸ் பிதுங்கி வழிந்தது. கூட்டம் குறையட்டும் என்று காத்திருந்தும் பயனில்லை. அலை ஓய்ந்து நீராட முடியாது. ஒவ்வொரு பஸ்ஸும் முந்தியதை விட அதிகக் கூட்டத்தோடு தான் சிரமப்படப் போகிறது. வந்த முதல் பஸ்ஸிலேயே அவர்களும் முண்டியடித்துக் கொண்டு ஏறினார்கள். எப்படியோ பெண்கள் உட்காரும் பகுதியில் சித்ராவுக்கு மட்டும் ஒண்டிக் கொண்டு உட்கார இடம் கிடைத்து விட்டது. பூமி கூட்டத்தோடு கூட்டமாக நின்றபடி பயணம் செய்தான். பஸ் சிறிது தொலைவு நகர்ந்ததும் அவன் நின்ற இடத்திலிருந்து தெரிந்த முந்திய பகுதியிலே நடந்த ஒரு சம்பவத்தைக் கண்டு திடுக்கிட்டான் பூமி. ஓரமாக உட்கார்ந்திருந்த பிரயாணியின் ஜிப்பாப் பையை அதற்கு நேர் பின்புறம் அமர்ந்திருந்த ஓர் ஆள் பிளேடால் மெல்ல அறுத்துக் கொண்டிருந்தான். கூட்டத்தில் யாரும் அதைக் கவனிக்கவில்லை. மணிபர்ஸை இழக்கப் போகிற அப்பாவியும் 'தான் எதையோ பறி கொடுக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்' என்ற உணர்வே இன்றி முன் பக்கம் பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தான். தற்செயலாகப் பூமி நின்ற இடத்திலிருந்து அது தெரிந்தது. பூமி உடனே பாய்ந்து அந்த ஆளைப் பிடித்து விட்டான். பிடிக்க முயல்கிறவனைப் பிளேடால் அகப்பட்ட இடத்தில் கீறிவிட்டு ஓடி விடுவதுதான் 'பிக்பாக்கெட்' ஆசாமிகளின் வழக்கம். ஆனால் பூமியின் பிடி இரும்புப் பிடியாக இருக்கவே அவனால் திமிறவே முடியவில்லை. பிடியைத் தளர்த்தாமல் இன்னும் முன்புறமாகப் பராக்குப் பார்த்துக் கொண்டிருந்த அந்த பிரயாணியைக் கூப்பிட்டு அவருடைய உடமைகள் சரியாயிருக்கிறதா என்று பார்க்கச் சொன்னான் பூமி. பெரிய ஆச்சரியம் என்னவென்றால் அந்தப் பிரயாணி மிக அலட்சியமாகவும், அசிரத்தையாகவும் நடந்து கொண்டது தான். பின்புறம் பார்த்துப் பூமிக்கு நன்றி சொல்லக் கூட அவர் தயாராயில்லை. திருடன் திமிறினான். "யோவ் நீ யாருய்யா என்னைப் பிடிச்சுக்கிட்டு..." "பின்னென்ன? பிக்பாக்கெட் அடிக்கிறவனைப் பிடிக்காமே மாலை போட்டுக் கும்பிடவா செய்வாங்க?" "சும்மாப் புளுகாதே! நான் யாரய்யா பிக்பாக்கெட் அடிச்சேன்?" "அதோ உட்கார்ந்திருக்கிறாரே அவரைத்தான்! அவர் ஜிப்பாப் பையைக் காட்டினால் நீ பிளேடாலே அறுத்திருக்கிறது தானே தெரியும்." "எங்கே அவரைச் சொல்ல சொல்லு பார்க்கலாம். நான் அவரு பையை அறுத்திருந்தா அவரு ஏன்யா சும்மா குந்திக்கினு இருக்கணும்?" உடனே பூமி முன்புறமிருந்த அந்தப் பிரயாணியைக் கூப்பிட்டு, "சார் உங்களைத்தானே... கொஞ்சம் எழுந்திருந்து உங்க ஜிப்பாப் பையைக் காட்டுங்க..." என்றான். "ஜிப்பாப் பை எல்லாம் சரியாகத்தான் இருக்கு சார்! அதெல்லாம் ஒண்ணும் காணாமற் போகலே" என்று திரும்பிப் பாராமலே பதில் சொன்னார் அந்தப் பிரயாணி. பூமிக்குத் திருடன் மேல் வந்த ஆத்திரத்தை விட இரண்டு மடங்கு ஆத்திரம் திருட்டுக் கொடுக்க இருந்த அந்த அப்பாவி மேல் வந்தது. 'பிக்பாக்கெட்டை'ப் பிடித்திருந்த பிடியைக் கொஞ்சம் தளர்த்திவிட்டு அந்தப் பிரயாணியை எழுப்பி நிறுத்தி அவரது ஜிப்பாவில் வலது பக்கப் பை அறுத்து எடுக்கப்பட்டிருப்பதை அவருக்கும் மற்றப் பிரயாணிகளுக்கும் பூமி காட்டினான். அப்போது ஒரு ஸிக்னலுக்காக பஸ் நின்றிருந்தது. அதைப் பயன்படுத்திக் கொண்டு திருடன் கூட்டத்தில் புகுந்து பஸ்ஸின் பின்புற வழியாக இறங்கி ஓடி மறைந்து விட்டான். பர்ஸ் திருட்டுப் போயிருந்தும் அதைப் பறி கொடுத்தவர் சும்மா இருந்தது பூமிக்கு ஆச்சரியத்தை அளித்தது. "அட ஏன்ய்யா நீ ஒண்ணு? அந்த ஆளே கண்டுக்காமே இருக்கறப்ப உனக்கென்னய்யா வந்திச்சு?" ஒரு பிரயாணி பூமியைக் கேட்டார். "உங்களுக்கென்ன வந்தது? நீங்க பேசாம இருங்க" என்று சித்ரா கூட அவனை உரிமையோடு கடிந்து கொண்டாள். பூமிக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அந்த ஆளை நோக்கிக் கத்தினான். "என்னய்யா நீர் மனிதன் தானா? இல்லை மரமா? உம் மணிபர்ஸை எடுத்துக் கொண்டு ஒருவன் ஓடுவதைப் பார்த்த பிறகும் இடிச்ச புளி மாதிரி உட்கார்ந்திருக்கிறீர்?" இதற்கும் அவர் பதில் சொல்லவில்லை. முன்பு போலவே பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தார். கையெழுத்துப் போடுவதாக வாக்களித்து விட்டு ஏமாற்றிய அந்த ஆசிரியைகளை விட இந்தப் பஸ் பிரயாணி தன்னை அதிகம் ஏமாற்றி விட்டதாகப் பூமி உணர்ந்தான். லஸ்ஸில்தான் அந்தப் பிரயாணியும் இறங்கினார். பூமியும் சித்ராவும் அவருக்குப் பின் இறங்கினார்கள். பஸ்ஸிலிருந்து கீழே இறங்கியதும் அக்கம்பக்கம் பார்த்துவிட்டுப் பூமியை நெருங்கி அந்த மனிதர், "தப்பா நினைச்சுக்காதீங்க சார்! அவன் என் சட்டைப் பையை பிளேடாலே அறுக்கிறது எனக்கே நல்லா தெரிஞ்சும் நான் வேணும்னு தான் சும்மா இருந்தான். இவங்கள்ளாம் பயங்கரமான ரௌடிங்க. கூப்பாடு போட்டு இவங்களை நாம காட்டிக் குடுத்தோம்னா நம்மை ஞாபகம் வச்சிருந்து நாளைக்கிக் கருக்கட்டிக்கிட்டு அலைவாங்க. என் பர்ஸிலே இருந்தது என்னமோ வெறும் அஞ்சு ரூபாய் தான். அவனை நான் கையும் களவுமாகப் பிடிச்சிருந்தேன்னா, அவன் என்னைப் பிளேடாலே கீறி, நான் டாக்டருக்கும் போலீஸுக்குமாகத் தொடர்ந்து செலவழிக்க வேண்டியிருக்கும். அதான் நான் கண்டுக்கவே இல்லே" - என்றார். கூறிவிட்டுப் பூமியின் பதிலை எதிர்பாராமலே புறப்பட்டுப் போய்விட்டார். "ஒரு பெரிய நகரம் படித்த நடுத்தர வர்க்கத்தை எவ்வளவிற்குப் படுகோழைகள் ஆக்கி வைத்திருக்கிறது பார்த்தாயா? பத்துப் பேர் வந்து கையில் பிளேடுகளுடன் மிரட்டினால் இங்கே பத்து லட்சம் பேர் பயந்து ஓடிவிடுவார்கள் போலிருக்கிறதே?" என்று சித்ராவின் பக்கம் திரும்பிக் கேட்டான் பூமி. சித்ரா அதற்கு மறுமொழி ஏதும் கூறவில்லை. சாயங்கால மேகங்கள் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
|